அப்துல் வஹ்ஹாப் பாகவி – ஜே.எம்.சாலி

பொங்கட்டும் ஆன்மீகம், பொங்கலோடு. அப்படியே ஒரு ‘போர்ட்ரைட்’டோடும்…!

எங்கள் ஹஜ்ரத் பற்றிய ஜே.எம்.சாலியின் கட்டுரை – நான் வரைந்த ஓவியத்துடன் – சமநிலைச் சமுதாயம் இதழில் வந்திருக்கிறது. மகிழ்ச்சி. ‘ச.ச’வுக்கு தேங்க்ஸ். அந்த ஆறு பக்க கட்டுரையில் கடைசியாக ஒரே ஒரு சின்ன வரி – ‘ஓவியம் : ஆபிதீன்’ அல்லது, ‘ஆபிதீன் பக்கங்களிலிருந்து எடுத்தது’ என்று இருந்தால் இன்னும் மகிழ்ந்திருப்பேன். வராது; அது எனது நஸீபு.  அவர்களைக் குறைசொல்லவும் கூடாதுதான். ஆபிதீன் பக்கங்களில் நுழைப்பதற்காக ஜெராக்ஸை ஸ்கேன் செய்தபோது என் பெயர் தேவையில்லை என்று அப்போது முடிவெடுத்தது நான்தான். இதனால் , ஓவியத்தின் கீழுள்ள ஹஜ்ரத்தின் கையெழுத்தும் இடம்பெறாது போய்விட்டது. இந்த ஓவியத்தைத்தான் ஹஜ்ரத்தின் சீடர்கள் அத்தனைபேரும் சிறு அட்டையாக வைத்திருப்பார்கள். ஹஜ்ரத்திற்கு பிடித்த ஓவியமும் இதுதான். சில சீடர்கள் , இங்கே இடம்பெற்றுள்ள ஓவியத்தை பிரிண்ட் செய்து அவர்களின் வீடுகளில் வைத்திருப்பதை அறிவேன். அவர்களுக்காக ஒரிஜினல் ஜெராக்ஸை முழுதாக – 600 dpi-ல் – விரைவில் இடுகிறேன், இன்ஷா அல்லாஹ். அதென்ன ‘ஒரிஜினல் ஜெராக்ஸ் என்றால்… ஒரிஜினல் ஓவியம் ஹஜ்ரத்தின் வீட்டில்தான் இருக்கிறது என்று அர்த்தம் (இப்போது யார்கையில் மாட்டியிருக்கிறது என்று தெரியவில்லை). எனது ஒவிய குரு ஆழி.ராமசாமி சார் ஸ்டைலில் ஒன்று புள்ளிகளாகவும், மற்றொன்று குறுக்குக்கோடுகள் கொண்டதாகவும் இரண்டு போர்ட்ரைட்கள் வரைந்து ஹஜ்ரத்திடம் கொடுத்து, கையெழுத்து வாங்கி, உடனே ஜெராக்ஸ் எடுத்துவிட்டு (எச்சரிக்கை!) திருப்பிக் கொடுத்துவிட்டேன் , 1990-ம் வருடம் . அந்த ஜெராக்ஸ்-ல் இருந்து எடுத்த காப்பிகள்தான் எல்லா சீடர்களிடமும் இப்போது உள்ளது. ஒரிஜினல் ஓவியத்தை ஒரு ‘ப்ரோமைட்’ பிரிண்ட் போட்டு நெகடிவ்வும் எடுத்துவைத்தால் நன்றாக இருக்குமே என்று ஹஜ்ரத்திடம்  கேட்டேன் ஒருநாள்.

‘ஆஹா, அந்த வேலையெல்லாம் வாணாம். இன்னோனு வரைஞ்சிக்குங்க!’ என்று சிரித்துக்கொண்டே சொல்லிவிட்டார்கள்!

ஹஜ்ரத் அவர்களை இதுவரை ஏழெட்டு முறை வரைந்திருக்கிறேன். நாகூர் ரூமி போன்ற முக்கிய சீடர்கள் சிலரிடம் வண்ணத்தில் வரைந்தது இருக்கிறது. அவர்களைக் கெஞ்சி, ஸ்கேன் செய்து இங்கே இட வேண்டும். இதில் ஒரு தமாஷ் உண்டு. கலர்பென்சில் கொண்டு வெளிர்நிறத்தில் வரைந்த ஹஜ்ரத்தின் ஓவியம் நண்பன் நாகூர்ரூமி வீட்டில் – ஹாலில் – இருக்கிறது. பெருமையாக ஒருநாள் ‘இத கிட்ட போய் பார்த்தா நல்ல டீடய்ல் தெரியும்’ என்றேன் ரூமியிடம். ‘அதயும் ட்ராயிங் கீழேயே எழுதிவச்சிடுமேங்!’ என்றார் வாத்தியார். இவருடைய புகழ்பெற்ற  ‘அடுத்தவினாடி’ நூலுக்காக தனியாக வேறொன்று வரைந்து கொடுத்தேன். வாத்தியாருக்கு பிடித்துதான் இருந்தது. ஆனால் வாத்தியாரின் வாத்தியார் ஜபருல்லா நானாவுக்கு பிடிக்கவில்லை. நிராகரித்து விட்டார் (காஃபிர்!). எனவே அங்கேயும் இதே ஓவியம்தான்.

ஹஜ்ரத்தின் ஆசை அது!

‘கூட்டாளிவளோடு மியாந்தெரு பக்கம் போவும்போது பாப்பேன். நீங்க சின்னப்புள்ள. உங்கவூட்டு வாசல் திண்ணையில உக்காந்து – வரைஞ்சிக்கிட்டிருப்பீங்க என்னமோ.. இந்த புள்ளைங்க எல்லாம் நம்மட்ட வந்தா நல்லாயிக்கிமேண்டு ஆசைப்பட்டேன். இப்ப வந்துட்டீங்க!’ என்றார்கள் ஹஜ்ரத் – நான் அவர்களின் சீடர்கள் குழுவில் இணைந்தபோது.

சொந்தக் கதை போகட்டும், ஜே.எம். சாலி அவர்களின் கட்டுரை , ‘நாகூர் இல்லாமல் இஸ்லாமியத் தமிழ் இலக்கிய வரலாறு இல்லை‘ என்ற வரியுடன் அழுத்தந் திருத்தமாக ஆரம்பிக்கிறது. எனி அப்ஜெக்சன்? அநேகமாக , எதிர்ப்புக்குரல் தமிழகத்தின் தக்கலையிலிருந்தும் இலங்கை ஓட்டமாவடியிலிருந்தும் சீக்கிரம் வரக்கூடும். எதிர்பார்க்கிறேன்!

ஆபிதீன்

***

ஆன்மீக எழுத்தாளர் நாகூர் அப்துல் வஹ்ஹாப் பாகவி

இலக்கிய இதழ் முன்னோடிகள் (64) – ஜே.எம். சாலி
சமநிலைச் சமுதாயம் (அக்டோபர் 2010 இதழ்) / பக்.38 – 43

*

நாகூர் தந்த எழுத்தாளர்களில் மிக முக்கியமானவர் எஸ். அப்துல் வஹ்ஹாப் பாகவி. உலக மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பபட்ட பேரறிஞர் கஸ்ஸாலியின் அறிவுக் கருவூலகமாகப் போற்றப்படும் ‘இஹ்யா உலூமித்தீன்’ வாழ்வியல் நூலை, அரபு மொழியிலிருந்து தமிழ் கூறும் நல்லுலகுக்கு வழங்கும் முயற்சியை 1957-இல் தொடங்கினார்.

*

நாகூர் இல்லாமல் இஸ்லாமியத் தமிழ் இலக்கிய வரலாறு இல்லை. அந்த நன்னகர் தந்த முன்னோடிகளின் பேரணியை நாடறியும். ‘நக்கீரர்’ குலாம் காதிறு நாவலர், ஆரிஃப் நாவலர், சித்தி ஜூனைதா பேகம், புலவர் ஆபிதீன்,  நீதிபதி மு.மு. இஸ்மாயில் முதலானோர் நாகூர் தந்த மூத்த தலைமுறை முன்னோடிகள்.

நமது தலைமுறையைச் சேர்ந்த முன்னணி படைப்பாளிகளின் பட்டியலும் பரவலானது. அவர்களுள் ஆன்மீக மெஞ்ஞானத்துறை எழுத்தாளராக, மொழிபெயர்ப்பாளராகத் தடம் பதித்தவர் மௌலவி எஸ். அப்துல் வஹ்ஹாப் பாகவி காதிரி.

எஸ். அப்துல் வஹ்ஹாப், நாகூரில் 8.10.1933இல் பிறந்தார். பெற்றோர் கே. எஸ். முஹம்மது கவுஸ் – செல்ல நாச்சியார் தம்பதியர். உள்ளூரில் பள்ளிக்கல்வி பயின்ற அவர், வேலூர் பாக்கியாத்துஸ் சாலிஹாத் கல்லூரியில் சேர்ந்து அரபுமொழி கற்றார். அங்கு மாணவராக இருந்த காலத்தில் எழுத்துத்துறையில் அடியெடுத்து வைத்தார்.

சில புனைப்பெயர்களையும் சூட்டிக்கொண்டார். விந்தியன். எஸ்.யே.பி முதலான பெயர்களில் அன்றைய தமிழ் வார மாத இதழ்களில் சிறுகதைகளையும் கட்டுரைகளையும் எழுதி வந்தார். குறிப்பாக மணிவிளக்கு மாத இதழில் தொடர்ந்து அவருடைய கட்டுரைகள் இடம்பெற்று வந்தன.

‘பாகவி’ பட்டம் பெற்ற பிறகு எஸ்.அப்துல் வஹ்ஹாப் அரபு நூல்களை மொழிபெயர்க்கும் பணியில் முனைப்பாக ஈடுபடத் தொடங்கினார். ஞானமேதை அறிவுலகச் செம்மல் இமாம் கஸ்ஸாலி அவர்களின் மெய்ஞ்ஞானப் படைப்புகளில் ஏற்பட்ட ஈர்ப்பினால் அந்த மேதையின் அரபிமொழி நூல்களைத் தமிழ் கூறும் நல்லுலகுக்கு வழங்கும் முயற்சியை 1957இல் தொடங்கினார்.

இமாம் கஸ்ஸாலி அவர்களின் வரலாற்றை உலகறியும். ஹிஜ்ரி 450ஆம் ஆண்டு தூஸ் நகரில் பிறந்து கல்வியாளராக விளங்கி, பின்னர் ஆன்மீக வித்தகரானார். 55 ஆம் வயதில் ஹிஜ்ரி 505-இல் உலகைத் துறந்த அவர்களின் சாதனை அரிய சரித்திரம்.

இமாம் அவர்களின் ‘பிதாயதுல்ஹிதாயா’ நூலை ‘நேர்வழியின் ஆரம்பம்’ எனும் தலைப்பில் தமிழாக்கம் செய்து வெளியிட்டார் மதுரைத் தமிழ்ச் சங்க வித்வான் கீழக்கரை ச.மு. செய்யிது முகம்மது ஆலிம் புலவர். 1913 இல் வெளிவந்த அந்த நூல், தமிழ்நாட்டிலும் இலங்கையிலும் பரவலான வரவேற்பைப் பெற்றது.

இமாம் கஸ்ஸாலி அவர்களின் ஒட்டுமொத்த நூல்களையும் படித்துப் பயன்பெறும் ஆர்வம் வாசகர்களிடையே மேலோங்கியது. பல எழுத்தாளர்கள் கட்டுரைகளை அவ்வப்போது எழுதிவந்தார்கள். ஆயினும், இமாம் அவர்களின் படைப்புகள் பரவலாக நமது தலைமுறை வாசகர்களுக்கு எட்டவும் கிட்டவும் பாலம் அமைத்தவர் நாகூர் எஸ். அப்துல் வஹ்ஹாப் பாகவி அவர்களே ஆவார்.

கஸ்ஸாலி (ரஹ்) அவர்களின் பேரறிவுப் பெட்டகமாகப் போற்றப்படும் ‘இஹ்யா உலூமித்தீன்’ தமிழ் மொழிப்பெயர்ப்பு வரிசையில் முதல் வெளியீடாக ‘பாவமன்னிப்பு’ நூலை 1957இல் வழங்கினார் அப்துல் வஹ்ஹாப் பாகவி.

நாயகத்தின் நற்பண்புகள்

அடுத்து வந்த நூல்களில் ஒன்று, ‘நாயகத்தின் நற்பண்புகள்’. “இமாம் கஸ்ஸாலி அவர்களின் ‘அக்லாகுன் நபி’ என்ற நூலின் விரிவான தமிழாக்கம் ‘நாயகத்தின் நற்பண்புகள்’ என்ற பெயர் தாங்கியிருக்கிறது. இந்நூலில் இமாம் கஸ்ஸாலி அவர்கள் பெருமானாரைப் பற்றிய விபரங்கள் அனைத்தையும் கொடுக்கிறார். சமுதாயத்திற்கு இது பெரிதும் பயன்படும் என்று நம்புகிறேன். இதை வெளியிடும் பதிப்பகத்தாருக்கு என் ஆழ்ந்த நன்றி. – இஸ்லாமிய ஊழியன் எஸ். அப்துல் வஹ்ஹாப் , நாகூர்'”

நான்கே வரிகளின் முன்னுரை எழுதப்பட்ட இந்த 75 பக்க நூலை 1959 நவம்பர் மாதம் ஒரு ரூபாய் விலையில் வெளியிட்டது எம்.ஆர். எம். அப்துற்-றஹீம் அவர்களின் யுனிவர்ஸல் பப்ளிஷர்ஸ் பதிப்பகம். எஸ். அப்துல் வஹ்ஹாப் அவர்களின் இனிய எளிய தமிழ்நடை வாசகர்களை வெகுவாகக் கவர்ந்தது.

அண்ணல் நபிகாளின் அரிய பண்புகளையும் பழக்க வழக்கங்களையும் அவர் எடுத்துரைக்கும் முறை இயல்பானது. ஒரு சில வரிகள்:

‘உணவுக்காக அவர்கள அதிக நேரத்தை வீணாக்குவதில்லை. சில சமயங்களில் மற்றவர்கள் சாப்பிட்டு முடிப்பதற்கு முன்னால் அவரகள் சாப்பிட்டு முடித்து விடுவார்கள். செருப்பைக் கழற்றி வைத்துவிட்டு வரிந்துக்கட்டிக்கொண்டு அவர்கள் மனைவியருக்கு ஒத்தாசை புரிவதும் உண்டு. சில சமயங்களின் இறைச்சியைத் துண்டுபோட்டுக் கொடுப்பார்கள். திருத்தூதர் அவர்களுக்கு இயற்கையிலே வெட்க மனப்பான்மை அதிகமாக இருந்தது. அவர்கள் யாரையும் நேர்ப்பட ஊடுருவிப் பார்த்தது கிடையாது. ஏழை-பணக்கரன் என்ற பாகுபாடு இல்லாமல் எல்லோருடைய விருந்தையும் ஏற்றுக்கொள்வார்கள். அன்பளிப்பை நிராகரிக்க மாட்டார்கள். சிறிதளவு அமுதமானாலும் முயலின் தொடைக்கறியானாலும் ஏற்றுக்கொண்டு விடுவார்கள். ஆனால் ஒரு நிபந்தனை, அது அன்பளிப்பாக இருக்க வேண்டும். தர்மமாக கொடுக்கப்படும் எதையும் அவர்கள் பெற்றுக்கொள்ள மாட்டார்கள். ஏழை எளியோரைப் பெரிதும் விரும்பினார்கள். அவர்களின் அழைப்புக்குச் செவிமடுத்தார்கள்”.

நூல் பட்டியல்

மௌலவி எஸ்.அப்துல் வஹாப் பாகவி பற்பல பகுதிகளாக மொழிபெயர்த்த அறிவுலகப் பேரொளி இமாம் கஸ்ஸாலி (ரஹ்) அவர்களின் ‘இஹ்யா உலூமித்தீன்’ தமிழ்ப் பிரதிகளை, யுனிவர்சல் பப்ளிஷர்ஸ் பதிப்புப் பரப்பியது. அந்த நூல்களின் பட்டியல் வெகுநீளமானது. பாவ மன்னிப்பு, நாயகத்தின் நற்பண்புகள், நாவின் விபரீதங்கள், விதிக்கப்பட்டதும் விலக்கப்பட்டதும், இம்மையும் மறுமையும், இறைச் சிந்தனை, இறையச்சம், இறைதிருப்தி, இறையாதரவு, இறை நம்பிக்கை, இறைவணக்கம், சிந்தனையின் சிறப்பு, பொறுமையாயிரு, கோபம் வேண்டாம், உளத் தூய்மை, பொருளீட்டும் முறை, அறிவு எனும் அருள், அறிவோ அருட்பேறோ, அறிவும் தெளிவும், பொறாமை கொள்ளாதே, புறம் பேசாதே, திருமணம், திருந்துங்கள் திருத்துங்கள், நல்லெண்ணம், உள்ளத்தின் விந்தைகள், ஏகத்துவம், பயணத்தின் பயன், செல்வமும் வாழ்வும், நோன்பின் மாண்பு, இமாம் கஸ்ஸாலியின் கடிதங்கள் ஆகியவை அவற்றுள் அடங்கும்.

இவற்றுள் 1962 இல் முதல் பதிப்பாக வெளிவந்த ‘இறைநம்பிக்கை’ அடுத்தடுத்து பல பதிப்புகளைக் கண்டது. அந்த நூலுக்கு 12.7.1962 இல் எஸ். அப்துல் வஹ்ஹாப் அவர்கள் எழுதிய முன்னுரை வரிகள் வருமாறு:

“இமாம் கஸ்ஸாலி அவர்கள் எழுதிய அத்தவக்குல் என்னும் நூல் இறைநம்பிக்கை என்னும் பெயரைத் தாங்கித் தமிழுக்கு வந்திருக்கிறது.

இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கைகளின் ஒன்று இறை நம்பிக்கை. இது ஆழம் காணமுடியாத பெருங்கடல் என்பது இமாமவர்களின் கருத்து. இது குறித்து அவர்கள் கொடுக்கும் விளக்கம் வாசகர்களின் உள்ளத்தில் குழப்பத்தைத் தூவிவிடுமோ என்ற அச்சத்தில் அவர்கள் ஒரு முன்னுரை எழுதியிருக்கிறார்கள். அத்தௌஹீத் என்பது அதன் பெயர். இது தனிப்பட்டதொரு நூலாக இருந்தாலும், இமாமவர்களின் கருத்தோட்டத்தை வைத்துப் பார்க்கும்போது இறைநம்பிக்கை என்னும் நூலுக்கு அது ஒரு முன்னுரை என்றே தீர்மானிக்க வேண்டியிருக்கிறது. இந்த நூலின் விரிவான தமிழாக்கம் ஏகத்துவம் என்ற பெயரில் வந்திருக்கிறது.

இமாமவர்களின் ஏகத்துவத்தைத் தொடர்ந்து தவக்குல் பற்றி எழுதியிருக்கிறார்கள். எனவே அத்தவக்குல் என்ற மூலநூலின் கருத்துக்களை இப்படியொரு நூலாகத் தயாரித்து உங்களுக்குக் கொடுப்பது குறித்து நான் பெருமகிழ்வு அடைகிறேன்.

பக்தர்களின் பாதை

இறைவணக்கம், பக்தர்களின் பாதை, தர்க்கத்துக்கு அப்பால் ஆகிய நூல்களும் பரவலான வாசகர் வட்டத்தைப் பெற்றவை. பக்தர்களின்  பாதை 1970 இல் முதற்பதிப்பாக வந்தது. 266 பக்கங்களைக் கொண்ட நூலுக்கு யுனிவர்ஸல் பப்ளிஷர்ஸ் வரைந்த பதிப்புரை மறக்க முடியாதது; அந்த வாசகங்கள்:

“இஸ்லாம் ஈன்றெடுத்த மாபெரும் சிந்தனையாளர்களில் ஒருவராக, நாற்பெரும் இமாம்களுக்கு நிகரான மிகப்பெரும் அறிஞர்களில் ஒருவராகக் கருதப்படும் இமாம் கஸ்ஸாலி (ரஹ்) அவர்கள், உண்மையில் ஒரு மத்ஹபையே தோற்றுவிக்க எண்ணியவர்களாவார். ஒரு கட்டிடத்திற்கு நான்கு மூலைகளில் நான்கு தூண்களும் நடுவே ஒரு தூணும் இருப்பதைப் போன்று கனவு கண்டு நடுவே உள்ள தூண் வீண்தானே என்று கனவிலே நினைத்து விழித்தெழுந்ததும் தாம் ஐந்தாவது மத்ஹபை ஏற்படுத்த எண்ணியதும் வீண் என்பதை இறைவன் அக்கனவின் மூலம் தமக்கு உணர்த்தியிருப்பதாக உணர்ந்து அம்முயற்சிகளை அவர்கள் கைவிட்டனர். அவர்கள் திருக்குர்ஆனுக்கு விளக்கவுரை 40 வால்யூம்களில் எழுதியிருப்பதாக கூறப்பட்டிருப்பினும் அவற்றில் ஒன்றேனும் தற்போது காணக்கிடைக்காதன் காரணமாக அது ஐயுறப்படுகிறது. எனினும் அவர்கள் குர்-ஆன், ஹதீஸ் ஆகியவற்றையெல்லாம் ஒன்றுசேர்த்து, தித்திக்கும் தேன்பாகாக நமக்கு ஆக்கித்தந்திருக்கும் ‘இஹ்யா உலூமித்தீன்’ என்ற அவர்களின் இணணயில் பெருநூல் அவர்களை இறவா வரம்பெற்ற புகழுயருவினராக ஆக்கியுள்ளது. உலகிலுள்ள எல்லா அறிவியல் நூல்களும் அழிந்து போய்விடினும் அவற்றை ‘இஹ்யா’விலிருந்து உண்டுபண்ணிவிடலாம் என்ற ஒரு பழமொழியே ஏற்படும் வண்ணம் சிறப்புற்றும் விளங்கும் அச்சீரிய நூலின் சாற்றைப் பிழிந்தெடுத்து அதிலே வகைவகையான இன்னும் பல ருசிகளையும் சேர்த்து தந்தாற்போன்று ‘மின்ஹாஜுல் ஆபிதீன்’ என்ற இந்த ‘பக்தர்களின் பாதை’ அமைந்துள்ளது. இமாம் அவர்களின் இறுதி நூலாகிய இது , இமாம் அவர்கள் இவ்வுலக மக்களுக்கு இறுதியாக விட்டுச்சென்ற ‘வஸிய்யத்’ போன்று விளங்குகிறது.

இறையண்மையைப் பெறுவதற்கு எவ்வாறு பக்திப்பாதையில் அடியெடுத்து வைப்பது என்பதை அழகாக இந்நூலில் எடுத்துரைக்கும் இமாம் அவர்கள், நம் கைப்பிடித்து  வாழ்வின் இணையற்ற இறுதி லட்சியமாகிய அம்மகோன்னத உச்சத்தை நோக்கி நம்மை அழைத்துச் செல்வது போன்று அமைந்துள்ளது இந்நூல். ஒன்பது உள்தலைப்புகளில் வரையப்பட்ட பக்தர்களின் பாதையில் இடம் பெற்ற ‘இடையிலே ஓர் எச்சரிக்கை’ வழங்கும் சிந்தனை :

“உங்கள் உறுப்புகளின் தக்வா மலர வேண்டும் என்று நான் குறிப்பிட்டேன். அதனை அவற்றில் எப்படி மலர்த்த வேண்டும் என்றும் குறிப்பிட்டேன். அவற்றில் அடுத்துவரும் இந்தப் பயிற்சிக்குரிய முக்கியத்துவத்தை நீங்கள் ஆழமாக உணரவேண்டும் என்பதற்காக அவற்றை இங்கே மற்றொரு கோணத்திலிருந்து விளக்கப் போகிறேன். மேலே இடம்பெற்ற உறுப்புகளில் உங்களுக்குப் பயிற்சியும் கட்டுப்பாடும் ஏற்படவேண்டும், அவற்றை முறைப்படி பண்படுத்தாத எவருக்கும் ஆத்மீகத்துறையில் வெற்றி கிடைக்க முடியாது.

கண்களை முதலில் கட்டுப்படுத்துங்கள். அந்தக் கட்டுப்பாட்டுக்குள் காதுகள் அடங்கிவிடும். கண்ணுக்கும் காதுக்கும் நெருங்கிய பிணைப்பு உண்டு. இந்த இரண்டும் சேர்ந்து உள்ளத்துக்குச் செய்தியனுப்புகின்றன. மனிதனின் உள்ளத்திற்குச் செல்கிற செய்திகளில் பெரும்பாலானவை கண்ணையோ காதையோ வழியாகக்கொண்டுதான் பிரயாணம் செய்கின்றன.

ஆத்மீகம் என்பது உள்ளத்தை அடிப்படையாகக் கொண்ட ஒன்று. அது தெளிவாக இருக்க வேண்டும் என்றால் வெளியிலிருந்து அதற்குச் செல்லும் செய்திகள் தெளிவாக இருக்க வேண்டும். பெரும்பான்மையாக உள்ளத்தில் தோன்றும் கோளாறுகள் அனைத்தும் கண்களாலேயே உருவாகின்றன.

“ஒரு மனிதனால் தன் பார்வையைக் கட்டுப்படுத்த முடியவில்லை என்றால் அவனுடைய உள்ளத்திற்கு மதிப்பு கிடையாது’ என்று அலி (ரலி) அவர்கள் குறிப்பிட்டிருக்கிறார்கள்.

மனிதனின் புலன்கள் அத்தனையும் அவனது உள்ளத்துக்குத்தான் செய்தியனுப்புகின்றன. என்றாலும் பார்வையின் விழியில் உள்ளத்துக்குச் செல்லும் செய்திகள் வலிமையும் வேகமும் கொண்டவை’ . இதுபோன்ற ஆழ்ந்த சிந்தனைக் களஞ்சியமாக அமைந்துள்ளது ‘பக்தர்களின் பாதை’ நூல்.

தர்க்கத்துக்கு அப்பால்

எஸ். அப்துல் வஹ்ஹாப் பாகவி எழுதிய ‘தர்க்கத்துக்கு அப்பால்’ நூலை 1984 மார்ச் மாதம் நாகப்பட்டினம் ஹுசைன் ஹோல்டிங்ஸ் நிலையம் வெளியிட்டது. பேரறிஞர் இம்மாம் கஸ்ஸாலி (ரஹ்) அவர்களின் ஞானக் கருவூலத்திலிருந்து கிடைத்திருக்கும் இந்த நூல், அறிவுப்பசி கொண்டவர்களுக்கு நல்லதொரு நம்பிக்கை எனும் பதிப்புரையுடன் வெளியிடப்பட்ட இந்த நூலுக்கு, இரண்டு பத்திகளில் பாகவி வரைந்த முன்னுரை:

“ஹுஜ்ஜத்துல் இஸ்லாம், இமாம் கஸ்ஸாலி (ரஹ்) அவர்களின் ‘இல்ஜாமுல் அவாம் அன் இல்மில் கலாம்’ என்ற நூலிலிருந்து விரிந்து வந்திருக்கும் இந்நூல், திருக்குர்ஆனிலும், நபிமொழியிலும் காணப்படுகிற மூலத்தத்துவக் கருத்துக்களைப் பாமரர்கள் எப்படியும் புரிந்துகொள்ள வேண்டும் என்பதற்கு விளக்கம் கொடுக்கிறது.

இந்த மூல நூலில் ஒரு சிறு பகுதி இறைவனைப் பற்றிச் சில வினாக்கள் என்ற பெயரில் ஏற்கெனவே வெளிவந்துவிட்டது. என்றாலும், தர்க்கத்துக்கு அப்பால் எனும் இந்நூல், மூலநூல் முழுவதையும் அடிப்படையாகக் கொண்டு ஞானத்துறையில் ஈடுபாடுகொண்ட அறிஞர்கள் பலரது நூல்களை ஆதாரங்களாக வைத்து எழுதப்பட்டிருக்கிறது. வாசகர்களுக்கு சிறிதும் குழப்பம் ஏற்பட்டுவிடக்கூடாது என்ற எண்ணத்தில் பெரிதும் விரிவுபடுத்தப்பட்டிருந்தாலும் இந்த நூல் முழுவதும் இமாம் கஸ்ஸாலி பேசுவதுபோலவே அமைந்திருக்கிறது. தர்க்கத்துக்கு அப்பாற் பட்ட அறிவுகளில் ஆர்வம் கொண்டவர்களுக்கு இந்த நூல் நல்வழி காட்டும் என்று எண்ணுகிறேன்.

உள்ளத்தையும் நாவையும் படைத்து முன்னதன் மூலத்துக்குப் பின்னதை மொழிபெயர்ப்பாக்கிய இறைவனே அனைத்துப் புகழுக்கும் உரியவன். தன் பெயர்களாலும் குணங்களாலும் அடியார்களுக்குத் தோற்றமளிக்கும் அவன் அங்கிங்கெனாதபடி எங்கும் நிறைந்தவன். மூலத்தத்துவ தர்க்கத்துக்கு கட்டுப்படாதவன். மூலத்தத்துவத் தர்க்கத்துக்கு அப்பாற்பட்டவன்.

மனித இதயங்களைத் தன் இரண்டு விரல்களுக்கிடையில் நிறுத்திவைத்து, தான் விரும்பியபடி எல்லாம் ஆட்டிப் படைத்துக்கொண்டிருக்கும் அவன், அருகிலிருப்பவர் அனைவரிலும் மிக அருகில் இருப்பவன். தெளிவு படைத்தவர்களுக்கு பிடரி நரம்பைவிட நெருங்கியிருக்கும் அவன் மார்க்கத்தின் ரகசியங்களைத் தெரிந்துகொள்ளாத பாமரர்களுக்கு மிகமிகத் தூரத்தில் இருக்கிறான்.

கற்பனைக்கும் கட்டுப்பாட்டுக்கும் அப்பாற்பட்ட இறைவன் தன்னைப் பற்றி திருக்குர்ஆனில் கூறியிருக்கிறான். அவன் கூற்றுக்குப் பெருமானார் விளக்கம் கொடுத்திருக்கிறார்கள். நபித்தோழர்களும் அவர்களை அடுத்து வந்த அறிஞர்களும் விரிவுரை அளித்திருக்கிறார்கள். இறைவனைப் பற்றிய சிந்தனை இஸ்லாத்தில் பெரிதும் முக்கியத்துவம் வாய்ந்தவை”

வழிகாட்டும் நன்னூலான ‘தர்க்கத்துக்கு அப்பால்’, இவ்வாறு தொடங்கி பரந்து விரிந்து செல்கிறது.

தனி நூல்கள்

மௌலவி எஸ். அப்துல் வஹாப் பாகவி அவர்கள், இமாம் கஸ்ஸாலி (ரஹ்) அவர்களின் படைப்புகளின் மொழிபெயர்ப்பு நூல்களுடன் பல தனி நூல்களையும் எழுதியுள்ளார்.

மகனுக்கு, மௌலானா ரூமியின் தத்துவம், அரேபியாவில் சிலநாள், இறைவனைப் பற்றிய சில வினாக்கள், ஏகத்துவமும் எதிர்வாதமும், தனிமை ஒரு விளக்கம் ஆகியவை அவற்றுள் அடங்கும்.

‘இமாம் ஜாபர்சாதிக்’ அவர் வரைந்த வரலாற்று நூல். முதல் பதிப்பாக 209 பக்கங்களுடன் 165இல் இந்த நூலை வெளியிட்டு விற்பனை செய்வதில் சிரமங்களள எதிர்நோக்கியதாக எழுதியுள்ளார் அப்துல் வஹாப் பாகவி.

‘மகனுக்கு’ குறிப்பிடத்தக்க நூல். அலி (ரலி) அவர்கள் தமது புதல்வருக்கு எழுதிய கடிதங்களையும் கருத்துகளையும் ஆதாரமாகக் கொண்டு தமிழுக்கு தந்திருக்கும் முதல் அறிவு நூல் எனும் முகப்பு வரிகளுடன் 1963 ஆகஸ்ட் மாதம் முதல் பதிப்பாக வெளிவந்தது.

நெகிழ்ச்சியூட்டும் உணர்வுகளை இரண்டு பக்க முன்னுரையில் பகிர்ந்து கொண்டிருக்கிறார் நாகூர் பாகவியார். அதன் ஒரு பகுதி :

“மனிதனை நான்கு வகைகளாகப் பிரிக்கலாம். உண்மை தனக்குத் தெரிந்திருக்கிறது என்பதைத் தெரிந்து கொண்டவன் ஒருவன். உண்மை தனக்கு தெரிந்திருக்கிறது என்பதைத் தெரிந்து கொள்ளாதவன் மற்றொருவன். உண்மை தனக்கு தெரியவில்லை என்பதைத் தெரிந்துகொண்டவன் மூன்றாமவன். உண்மை தனக்கு தெரியவில்லை என்பதையே தெரிந்து கொள்ளாதவன் நான்காமவன்”

“காலுக்குச் செருப்பு இல்லையே என்று நான் கவலைப்பட்டேன், காலே இல்லாத மனிதனைப் பார்க்கும்வரை”

இப்படி வாழ்க்கைத் தத்துவங்களை அள்ளி இறைத்த அலியார் கஅபா எனும் தேவாலயத்தினுள் பிறந்தார்கள். ஏறத்தாழ பத்துவயதில் இஸ்லாத்தைத் தழுவிய அவர்கள் முதன்முதலில் இஸ்லாத்திற்கு வந்த சிறுவர் என்று பாராட்டப்பட்டிருக்கிறார்கள். பெருமானர் மீது பேரன்பு கொண்டிருந்த அலியார் இஸ்லாத்தின் முன்னேற்றத்துக்குத் தமது வாழ்வையே அர்ப்பணித்தார்கள். பெருமானார் மக்காவை விட்டு மதினாவுக்குப் புறப்பட்ட நேரத்தில் அலியார் செய்த தியாகம் வரலாற்று முக்கியத்துவம் பெற்றது.

தமது இறுதிக் காலத்தில் இஸ்லாமிய ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக்கொண்டபோதுதான் அவர்களின் சிந்தனைத்திறனும் செயல்திறனும் தெளிவாக வெளிப்பட்டன. ஏறக்குறைய 5 ஆண்டுகள்தான் அவர்கள் ஆட்சி புரிந்தார்கள் என்றாலும், அந்த இடைக்காலத்தில் இஸ்லாமிய உலகத்திற்கு அவர்கள் செய்த அறிவுப்பணி அளவிடற்கரியது. அவர்கள் எழுதிய கடிதங்களும், பேசிய பேச்சுக்களும் பொன்னெழுத்துகளால் பொறிக்கப்படவேண்டியவை. உங்கள் கரத்திலிருக்கும் இந்நூல் மூன்று பகுதிகளைக் கொண்டது”

இந்நூல் அலி(ரலி) தமது புதல்வருக்கு மட்டுமின்றி, உலக மக்கள் அனைவருக்கும் வரைந்த அரிய அனுபவ உபதேச நல்லுரையாக அமைந்துள்ளது.

கட்டுரைகள்

மௌலவி எஸ். அப்துல் வஹாப் பாகவி மணிவிளக்கு இதழில் கட்டுரைகள் எழுதிவந்தார். மக்கா யாத்திரை என்ற தலைப்பில் ஐரோப்பியப் பயனியின் அனுபவ வடிவில் அவர் எழுதிய கட்டுரைத் தொடர் , வாசகர்களின் வரவேற்பை பெற்றது. அதுவே பின்னர் நூலாக வெளியிடப்பட்டது.

‘அரேபியாவில் சில நாள்’ கட்டுரைகளிலும் வாசகர் கடிதங்களிலும் கருத்து முரண்பாடுகள் இருந்ததால் உடனுக்குடன் உரிய விளக்கங்களுடன் பதில் எழுதி வந்தார் அப்துல் வஹ்ஹாப் பாகவி.

மணிவிளக்கு இதழில் 1987 ஜனவரி-பிப்ரவரி இதழ்களில் கடிதமும் கருத்தும் பகுதியில் -14 பக்கங்களில் – ‘அல்லாஹ் எங்கே இருக்கிறான்?’ எனும் தலைப்பில் அவர் எழுதிய விளக்கம் வாசகர்களைக் கவர்ந்ததது. மறக்க முடியாத அந்த விளக்கக் கடிதத்தின் ஒரு பகுதி :

‘இறைவன் எங்கும் நிறைந்தவன் அல்லன்’ என்ற கருத்தை அடிப்படையாக வைத்து இந்தக் கடிதம் எழுதப்பட்டிருக்கிறது. கடிதம் எழுதிய வாசகர் தம் கருத்துக்குத் தர்க்க ரீதியாக ஆதாரமும் காட்டியிருக்கிறார். அவர் எடுத்த எடுப்பிலேயே தம் கருத்தை இப்படிச் சொல்கிறார்.

இறைவன் எங்கும் நிறைந்தவன் என்பது இஸ்லாத்திற்கு எதிரான கருத்து. இதனை ஏற்றுக்கொண்டால் ஒவ்வோர் இரவிலும் இறைவன் கீழ்வானத்திற்கு இறங்கிவருகிறான் என்று நபிக்கருத்துக்கு அர்த்தமே கிடையாது.

அதாவது இறைவன் எங்கும் நிறைந்தவன் என்பது உண்மையானால் அவன் உலகத்தில் எல்லா இடங்களிலும் இருப்பதோடு, மேல்வானத்திலும் கீழ்வானத்திலும் இருக்க வேண்டும். அப்படி மேல்வானத்திலும் கீழ்வானத்திலும் இருக்கிற இறைவனைப் பற்றி கீழ்வானத்திற்கு இறங்கி வருகிறான் என்று பெருமானார் கூறியிருப்பதில் அர்த்தம் இருக்க முடியும். எனவே இந்த நபி கருத்துக்கு அர்த்தம் தரவேண்டும் என்றால் இறைவன் எங்கும் நிறைந்தவன் என்ற கருத்து மறுக்கப்பட வேண்டும். இதுதான் நம் வாசகரின் கருத்து.

உண்மையில், இந்தக் கருத்து முற்றிலும் தர்க்க ரீதியானதுதான். ஆனால், அவர் ஏன் இந்த முடிவுக்கு வந்திருக்கிறார் என்று சிந்தித்துப் பார்க்கும்போது எனக்கு ஓர் உண்மை தெளிவாகத் தெரிகிறது. அக்டோபர் இதழில் அல்-கலாம் எழுதிய ‘இறை நெருக்கம்’ என்ற அந்தக் கட்டுரையை அவர் முழுமையாக படிக்கவில்லை; அல்லது படித்ததைப் புரிந்துகொள்ளவில்லை. எனவே, மேற்குறிப்பிட்ட நபிமொழிக்கு அவர் இப்படி பொருள் கொடுத்திருக்கிறார்:

சூரியின் மேற்கு திசையில் மறைந்ததும் இறைவன் ஏழாவது வானத்தில் அமைக்கப்பட்டிருக்கிற ‘அர்ஷ்’ எனும் சிம்மாசனத்திலிருந்து புறப்பட்டு தன் கல்யாண குணங்களையும் , மலக்குகளையும் தன்னுடன் அழைத்துக்கொண்டு அல்லது அவற்றையும் அவர்களையும் ஏழாவது வானத்திலேயே விட்டுவிட்டு கீழ்வானத்துக்கு இறங்கி வருகிறான். பொழுது விடிந்ததும் ஏழாம் வானத்தை நோக்கி ஏறிச்சென்று, அர்ஷ் என்ற சிம்மாசனத்தில் அமர்ந்து கொள்கிறான்.

என் மதிப்பிற்குரிய வாசகர்களாகிய உங்களைப் பார்த்து நான் கேட்கிறேன். பெருமானாரின் கருத்தை இப்படித் தவறாகப் புரிந்துகொண்டிருக்கும் அவர் இறைவன் எங்கும் நிறைந்தவன் என்ற அறிவை ஏற்க மறுப்பதில் எப்படி வியப்பு இருக்க முடியும்?

இந்தக் கட்டத்தில் நான் எழுதிய ‘தர்க்கத்துக்கு அப்பால்’ என்ற நூலிலிருந்து ஒரு சிறிய பகுதியை உங்களுக்கு முன்னால் எடுத்து வைப்பது நல்லது என்று எண்ணுகிறேன்.

இந்த நூல் இல்ஜாமுல் அவாம் என்ற பெயரில் இமாம் கஸ்ஸாலி(ரஹ்)  அவர்கள் எழுதிய அரபி நூலை அடிப்படையாகக் கொண்டது.

மேலிருந்து கீழே இறங்குவதும் , கீழிருந்து மேலே ஏறுவதும் இறைத்தன்மைக்குக் கொஞ்சமும் பொருந்தாதவை. மேலே கீழே என்று குறிப்பிட்டு கூற முடியாதவாறு எங்கும் நிறைந்த இறைவன் எப்படி கீழே இறங்க முடியும்?”

இவ்வாறு அந்த நெடிய கடிதம் தொடர்கிறது…

அங்கீகாரம்

ஐம்பதுக்கு மேற்பட்ட நூல்களை வழங்கிய அப்துல் வஹ்ஹாப், அறுபது வயதை எட்டிய நிலையில் எழுத்துப் பணியை நிறுத்திக்கொண்டு ஞான, ஆன்மீகப் பணியில் இறங்கினார்.

5-ஏ, தலைமாட்டுத் தெரு, நாகூர் முகவரியை உறைவிடமாகக் கொண்டு தம்மை நாடி வருவோர்க்கு ஆன்மீக ஆலோசனை சிகிச்சைகளை வழங்கி வந்தார்.

மௌலவி அப்துல் வஹாப் பாகவி அவர்கள் இறைநாட்டப்படி 9.9.2002 அன்று இவ்வுலகைத் துறந்தார்.

அவருடைய மொழிபெயர்ப்பு நூல்களும், சுய சிந்தனைப் பதிவுகளான மற்ற நூல்களும் தொடர்ந்து வெளியிடப்பட்டு விரிவான பன்னாட்டு வாசகர் வட்டத்தைப் பெற்றுள்ளது அவருக்கு சிறப்பு அங்கீகாரம்.

அரிய எழுத்துச் செல்வராகத் தடம்பதித்த நமது தலைமுறை முன்னோடிகளில் ஒருவராக விளங்குகிறார் மௌலவி எஸ். அப்துல் வஹ்ஹாப் பாகவி.

பிறந்து வளர்ந்த நாகூருக்கு மட்டுமின்றி, பரந்த தமிழ்கூறும் நல்லுலகுக்கும் புகழ் சேர்த்தவர் நமது பாகவியார் என்பதை யாரால் மறுக்க முடியும்?

**

நன்றி : ஜே.எம். சாலி , சமநிலைச் சமுதாயம், நண்பன் ஹமீது (துரை)

சீனாவில் இஸ்லாம் – (சீர்காழி முஸ்லிமுடன்) ஜே.எம்.சாலி

அன்புடன் வாசகர்களுக்கு….

மூன்று மாதங்களுக்கு முன் நான் எழுதி – ஆபிதீன் பக்கங்களில் பிரசுரமான – ‘இறை – இறை நம்பிக்கை – இறை வணக்கம்’ என்ற கட்டுரையில், உலகப்பெரும் மதங்களைப் பற்றி குறிப்பு செய்திருந்தேன். அந்த வரிசையில் சீனாவில் உள்ள ஓர் ஆதி மதத்தை குறிப்பிட முனைந்து, தெளிவில்லாமல் தோற்றுப் போனேன். சீனாவில் உள்ள மதங்களைப் பற்றி ஓரளவிற்கேனும் விபமறியாதிருப்பதை அப்போது நான் உணரவந்தேன்!

சீன மதங்களைக் குறித்து பின்னர் தேடிப் படித்தேன். விரிவான அந்த வாசிப்பில், கூடுதலான பல தகவல்கள் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. ஆட்சிக் கட்டிலில் கம்யூனிச அரசு அமர்வதற்கு முன்னும் பின்னும் அங்கே இஸ்லாமியர்கள் எதிர்கொண்ட இடர்ப்பாடுகள் வேதனைக்குரியது.

சுமார் 132 கோடி மக்கள் தொகை கொண்ட சீனாவில், 90 சதவிகித மக்கள் பவுத்தம் மற்றும் தாவோ மதங்களை பின்பற்றி வருகின்றார்கள். அதில், 60% மக்கள் பவுத்த மதத்தையும், 30% மக்கள் தாவோ மதத்தையும், 4% மக்கள் கிறிஸ்தவத்தையும், 2% மக்கள் இஸ்லாம் மதத்தையும் தழுவியவர்கள். மீதமுள்ள 4% மக்கள் இந்து, டொங்பாயிசம் (Dongboism), பான் (Bon), சையாண்டியநிசம் (Xiantianism), மற்றும் ஃபலூன்காங் (Falum Gong) மதங்களை தழுவியவர்களாக இருக்கிறார்கள்.

உலக மக்களின் பார்வையில், கடவுள் மறுப்புக் கொள்கையை மிகத் தீவிரமாகக் கடைப்பிடித்த முதல் நாடு, சீனா என கருதப்படுகிறது! அங்கே, 90 சதவிகித மக்களை உள்ளடக்கிய பெரிய மதங்களான பவுத்தமும், தாவோவும் கடவுளைப் பற்றிப் பேசாத, அது குறித்து அழுத்தம் தராத மதங்களாகிப் போனதினால் இந்த நிலை!

*

நபிகள் நாயகம் (கி.பி.570 – 632) மறைந்து பதினெட்டு ஆண்டுகளுக்குப் பிறகு, கி.பி. 651-ல் சீனாவிற்குள் இஸ்லாம் நுழைந்தது, சில மாநிலங்களில் ஆட்சி புரிந்த குறுநில மன்னர்களால் வரவேற்பும் பெற்றது. அந்தக் குறுநில மன்னர்களின் ஆட்சிக்கட்டிலில் இஸ்லாமியர்கள் பங்கெடுத்து திறம்பட நிவாகமும் செய்தனர். சில குறுநில மன்னர்களது படைகளுக்கு தலைமை தாங்கி, வெற்றிகளையும் ஈட்டித் தந்தனர். என்றாலும், இஸ்லாமியர்களின் இந்தப் புகழும் கீர்த்தியும் சீனாவின் ஒரு சில மாகாணங்களோடு முடிந்த கதையாகிவிட்டது..

கடவுள் நம்பிக்கையற்ற அந்த மண்ணில் இஸ்லாமியர்கள் பெரிதாக தழைக்க முடியவில்லை. சிறுபான்மை மதங்களில் ஒன்றாகவே தேங்கியும் போனது. தவிர, அந்தச் சில மாகாணங்களில் வசித்த அந்த இஸ்லாமியர்கள் கூட தங்களது மதக் கடமைகளை பூரணமாக நிறைவேற்ற முடியாதவர்களாக, காலம் காலமாக சிரமமும் கொண்டார்கள்.

சரியாகச் சொன்னால், மதரீதியான இத்தகைய இறுக்கம் அங்கே அப்போது இஸ்லாமியர்களுக்கு மட்டும் என்றும் சொல்லிவிட முடியாது. இறைவனை நம்பும் / இறைவணக்கம் செய்ய ஆவல் கொள்ளும் எல்லா மதத்துக்காரர்களுக்கும் கூட அத்தகையதோர் இறுக்கம் இருந்தது. பூர்வீகமான சில சீன மதங்களும்கூட இதில் அடக்கம்.

*

1949-ம் ஆண்டு சீனா, குடியரசாக உருவான போதும், மதச் சார்பற்ற நாடாக தன்னை பிரகடனப் படுத்திக் கொள்ளவில்லை. ஆதி நிலையைப் போற்றும் வகையில், கடவுள் மீது நம்பிக்கையற்ற நாடாகவே தொடர்ந்து அது தோற்றம் கொண்டது. அப்படி விளங்கவும் செய்தது.

சீன கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவராகவும் பிரதமராகவும் இருந்த மாசேதுங் மற்றும் பல கம்யூனிஸ்ட் மூத்தத் தலைவர்களும் கடவுளை வணங்குவது மூட நம்பிக்கை என்ற எண்ணம் கொண்டவர்களாகவே இருந்தனர். எனவே, சீன குடியரசு உருவாகிய பின்னரும் பழைய நிலை நீடித்ததால், இஸ்லாமியர்களுக்கும் இன்னும் சில மதத்துக்காரர்களுக்கும் சங்கடமான பழைய நிலையே தொடர்ந்ததில் சொல்ல முடியாத வேதனையே கொண்டார்கள்.. 

1970-களின் இறுதி மற்றும் 1980-களின் தொடக்கத்தில் மதங்களின் மீதிருந்த கட்டுப்பாடுகள் கொஞ்சம் கொஞ்சமாகத் தளர்த்தப்பட்டது. இந்தக் கட்டுப்பாடு தளர்த்தலுக்கு பல அரசியல் காரணங்கள். சோவித் யூனியனின் தென்மேற்கு மாகாணங்களில் வாழ்ந்துவந்த அதிகத்திற்கு அதிகமான முஸ்லிம்களிடம், அந்த சோவியத் அரசு, சீனா மாதிரியே மதங்களை ஒடுக்கும் அரசாகவே இருந்துவந்தது. அதையொட்டிய பிரச்சனைகளினாலேயே ஆப்கானிஸ்தானோடு சோவித் யூனியன் போர் புரியவேண்டி வந்தது. அந்தப் பிரச்சனைகளின் முடிவில், ஓர் தீர்வாய் சோவியத் யூனியனே சிதறியதுதான் மிச்சம்! 

அரசியல் ரீதியாக, முன்கூட்டியே யூகித்ததாலோ என்னவோ 1970-களின் இறுதி மற்றும் 1980-களின் தொடக்கத்தில் சீன அரசு மதங்களின் மீதிருந்த கட்டுப்பாடுகளை கொஞ்சம் கொஞ்சமாகத் தளர்த்த முற்பட்டது என கணிக்கவும் வாய்ப்பிருக்கிறது. மதரீதியான அனுஷ்டானங்களுக்கு தடையாக இருந்துவந்த சோவியத்துக்கு எதிராக இஸ்லாமியர்கள் வெகுண்டெழுந்ததையும், அவர்களது மறைமுக எதிர்ப்பலைகளின் எழுச்சியையும் பற்றி, நான் எழுதிய ‘இறந்தவன் குறிப்புகள்’ என்கிற குறுநாவலில் ஓரளவுக்கு தொட்டுச் சுட்டிக் காண்பித்து இருக்கிறேன். 

மதங்களின் மீதான கட்டுப்பாடுகளை சீனா தளர்த்தியதில் அதன் முதிர்ந்த அரசியல் சாணக்கியத்தை காணமுடிகிறது. சீன அரசின் இந்தத் தளர்த்தல் நிலைக்குப் பின்னரும்கூட இஸ்லாமியர்கள் மீது அந்த அரசு கண்கொத்திப்பாம்பாய் அதீத கவனத்தோடு இன்றுவரை கண்காணித்தும் வருகிறது என்பது இன்னொரு மாதிரியான வேதனை. இந்த  கண்காணிப்பிற்கான காரணம் என்னவென்றுப் பார்த்தால்… அங்கே வாழும் சியா முஸ்லிம்களும் அவர்களின் தீவிர போக்குமே பெரியதோர் காரணமாக அறியவர முடிகிறது!

சீனாவில் வாழ்கிற இஸ்லாமியர்களில் 10 பிரிவுகள் இருப்பதாக ஓர் தகவல் கூறுகிறது. 3 கோடி சீன முஸ்லிம்களில் ‘சுன்னத்’ ஜமா பிரிவைச் சேர்ந்தவர்களே அதிகம். அதற்கு அடுத்த அதிகமாக ‘சியா’ முஸ்லிம்கள் வருகிறார்கள். எண்பதுகளின் ஆரம்பத்தில் ‘இரானின் புரட்சித் தலைவரான’ அயாத்துல்லா கொமெனியின் புகழ், உலக சியா முஸ்லிம் மக்களிடையே பரவ. அதன் அதிர்வுகள் சீன சியா முஸ்லிம்களிடமும் எதிரொலித்திருக்கிறது. சீனாவில் ‘கொமெனிக்கு ஜே!’ போட்டு, தீவிரமும் காட்டி இருக்கிறார்கள்.  அதையொட்டியே சீன அரசு ஜரூராகி, தங்கள் நாட்டு முஸ்லிம் மக்ககள் அனைவரையும் தொடர்ந்து மறைமுக கண்காணிப்பு வட்டத்திற்குள் கொண்டு வந்திருக்கிறது.

ஆக, 1970-களின் இறுதியில் கிட்டிய, மதங்களின் மீதான தடையினை நீக்கி, அரசு வழங்கிய சுதந்திரத்தை இஸ்லாமியர்கள் இன்றுவரை முழுமையாக அனுபவிக்க முடியவில்லை. அரசின் கண்காணிப்பிற்குள்தான் எல்லாம் என்பது, எத்தனைப் பெரிய சோகம்!

*

சீனா மதங்களைப் பற்றிய என் தேடலில் கிட்டிய இந்தக் கட்டுரை இது! ஜே. எம். சாலி எழுதியது.

ஜே. எம். சாலி, தேர்ந்த பத்திரிக்கையாளர். மலேசியாவிலும், தமிழகத்திலும் பத்திரிகைகளில் பணிப்புரிந்தவர். தற்போது சிங்கப்பூர் டி.வி. ஒன்றில் பணி. அங்கேயே வசித்தும் வருகிறார். நாகை மாவட்டம் ‘எரவாஞ்சேரி’காரர். என் நண்பர் ஒருவரின் மச்சான். மணியனோடு ஆனந்தவிகடனில் உதவி ஆசிரியராக பணியாற்றியபோது அவரை நான் அறிவேன். அருமையாக பழகக் கூடிய மனிதர். பழகி இருக்கிறேன். நான் எழுதுகிற ஜாதி என்பதை அவர் அறிந்தாரோ என்னவோ, ‘புனைபெயரில் எழுதாதீர்கள். சொந்தப் பெயரிலேயே எழுதுங்கள், நம் மக்கள் எத்தனை பேர்கள் எழுதுகிறார்கள் என்பதை இந்தச் சமூகம் அறியனும்’ என – சகோதர பாவனையில் –  குறிப்புணர்த்தினார்! சரியென்றேபட்டது. 

சீன முஸ்லிம்களின் ஆரம்ப சங்கடங்களையும், இன்றைய சங்கடங்களையும் இன்னும் பிற செய்திகளையும் எழுதினேன் என்றால்… 1970 -களின் இறுதி மற்றும் 1980-களின் தொடக்கத்தில் மதங்களின் மீதிருந்த கட்டுப்பாடுகளை சீன அரசு தளர்த்திய காலக்கட்டத்தில், இஸ்லாமியர்களின் யதார்த்த நிலையினை இந்தக் கட்டுரையை ஜே.எம்.சாலி எழுதி இருக்கிறார். எங்கள் இருவரது அதிர்வலைகளும் கிட்டத்தட்ட ஒன்றே!

அது, பாவப்பட்டவர்கள் மீதான ஆதங்கம்.

கநாசு.தாஜ்

***   

 

சீனாவில் இஸ்லாம்
ஜே. எம். சாலி. M.A.

ஈத்கா பள்ளிவாசல் மினாராவிலுள்ள ஒலிபெருக்கியிலிருந்து ‘பாங்கு’ ஓசை காற்றில் மிதந்து வருகிறது. மாலைத் தொழுகை நேரம். பள்ளிவாசலில் தொழுகை ஆரம்பமாகிறது. தொழுகையில் கலந்து கொள்ள முடியாத ஒரு வியாபாரி தெருவிலேயே மரத்தடியில் தொழுகையை நிறைவேற்றுகிறார்.

உலகின் மிகப் பெரிய கம்யூனிச நாடான சீனாவில் ‘சிஞ்ஜியாங்’ மாநிலத்தில் அன்றாடம் நிகழும் காட்சி இது. மாவோயிஸ சக்திகள் மிகத் தீவிரமாக ஒடுக்க முயன்றும் புத்தெழுச்சியுடன் இஸ்லாம் இந்தப் பகுதியில் இன்று பின்பற்றப்பட்டு வருகிறது.

சீனாவில் ஒரு கோடி 30 லட்சம் முஸ்லிம்கள் இருப்பதாக சென்ற ஆண்டு எடுக்கப்பட்ட மக்கள் தொகை கணிப்புகள் கூறின. சவூதி அரேபியா, குவைத் மற்றும் ஐக்கிய அரபு சிற்றரசு நாடுகளின் மொத்த மக்கள் தொகையைவிட சீன முஸ்லிம்களின் தொகை மிகுதி.

சீனாவில் இரண்டு கோடி முஸ்லிம்கள் இருந்து வருவதாக அதிகாரப் பூர்வமற்ற மதிப்பீடுகளிலிருந்து தெரியவருகின்றன..

‘சிஞ்ஜியாங்’ மாநிலத்தில் 12 ஆயிரம் பள்ளிவாசல்களும் 16 ஆயிரம் சமய அமைப்புகளும் இருப்பதாக சமய விவகாரப் பிரிவின் அதிகாரியான மெஹுத் அமீன் கூறுகிறார்.

கடந்த சில ஆண்டுகளாக சீன அரசாங்கம் மத சுதந்திரத்தில் தலையிடாமல் இருந்து வருகிறது. குறிப்பாக இஸ்லாமிய விவகாரங்களில் அது குறுக்கிடாமல் இருப்பதற்குக் காரணம் இல்லாமற் போகவில்லை.

‘சிஞ்ஜியாங்’ மாநிலம் மங்கோலியா, சோவியத் யூனியன், ஆப்கானிஸ்தான், பாக்கிஸ்தான் இந்தியா ஆகிய நாடுகளின் எல்லையை யொட்டி அமைந்திருக்கிறது. இந்தப் பகுதிகளில் சீன மொழி பேசும் முஸ்லிம்கள் மட்டுமின்றி கஜக், உஸ்பெக், கிர்கிஸ், உகர்ஸ், தாஜிக், ஆகிய மக்களும் வாழ்ந்து வருகின்றனர். சிறுபான்மையினரான இவர்களின் விவகாரத்தில் அரசு தலையிட்டால் எல்லைப் பாதுகாப்புக்கு பாதகம் ஏற்படுமென கருதப்படுகிறது.

மேலும் ஆசியா, மத்திய கிழக்கு மற்றும் ஆப்ரிக்காவிலுள்ள முஸ்லிம் நாடுகளின் நட்புறவையும் பெறுவதற்கு மத சகிப்புத் தன்மையை சீனா பலப்படுத்த வேண்டிய அவசியமும் இருக்கிறது.

“சீன முஸ்லிம்கள், வெளிநாடுகளிலுள்ள முஸ்லிம்களுடன் சமய கலாச்சாரத் தொடர்புகளைப் பெருக்கிக் கொள்ள வேண்டும்” என சென்ற மாதம் முக்கியகட்சி அதிகாரிகளில் ஒருவரான ஸி. ஜோங்ஸன், வலியுறுத்தியிருக்கிறார். அத்தகைய தொடர்புகள் சீனாவின் செல்வாக்கை உலகின் மற்ற நாடுகளில் உயர்த்திக் கொள்வதற்கு உறுதுணையாக அமையும் என்று சீனக் கொள்கை விளக்க இதழான ‘செங்கொடி’ (Red Flag) விவரித்தது.

ஆனால், “அன்னிய நாடுகளைச் சேர்ந்த சமய நிறுவனங்களும், தலைவர்களும் தங்கள் விவகாரங்களில் தலையிடாதவாறு சீன முஸ்லிம்கள் பார்த்துக் கொள்ள வேண்டும்” என்று திரு. ஜோங்ஸன் எச்சரித்திருந்தார். ஈரான் தலைவர் ஆயத்துல்லா கொமெய்னியின் கொள்கைகள் சீனாவில் பரவுவதை அரசு விரும்பவில்லை.

“கொமெய்னி பிற்போக்குவாதி ; நாம் முற்போக்காளர்கள்” என்று சிஞ்ஜியாங் வெளிவிவகார அலுவலகத்தைச் சேர்ந்த அப்துல்லா ரியீம் கூறுகிறார். சீன முஸ்லிம்கள் சுன்னத் ஜமா அத்தைச் சேர்ந்தவர்கள். ‘தாஜிக்’ இனத்தைச் சேர்ந்த சிறுபான்மையினர் மட்டுமே ‘ஷீயா’ பிரிவினர். எனவே ‘ஷீயா’ பிரிவைச் சேர்ந்த கொமெய்னியின் கொள்கைகள் கலப்பதை சீனா விரும்பவில்லை.

சீனாவில் மாசேதுங்கின் காலத்தில் கலாச்சாரப்புரட்சி நடந்தபோது முஸ்லிம் தலைவர்களுக்கு அநீதி இழைகப்பட்டது. முஸ்லிம் தலைவர்களின் கழுத்தில் பன்றித் தலைகளைக் கட்டி, கலாச்சாரப் புரட்சிகாரர்கள் தெருவில் இழுத்துச் சென்றனர். ஆனால் அந்தப் புரட்சிக்குப் பிறகு நிலைமை முற்றாக மாறி விட்டது.

“சீன மக்கள் மதநம்பிக்கையுள்ளவர்களாக இருக்கலாம், சமயச் சார்பற்றவர்களாகவும் இருக்கலாம், அது அவரவர் விருப்பம்.” என்று சிங்ஜியாங் அதிகாரி கருத்துத் தெரிவித்திருக்கிறார்.

மதத்தின் பெயரால் சட்டத்தை மீறி நடப்பது, குற்றச்செயல்கள் புரிவது, கீழறுப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுவது போன்றவற்றைக் கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக மாநில அரசின் தலைவரான இஸ்மாயில் அஹ்மது கூறியிருக்கிறார். ஆனால் அவர் விவரங்களை வெளியிடவில்லை.

‘முஸ்லிம் சமயத்தலைவர்கள் முஸ்லிம்களின் ஒழுங்குக் கட்டுப்பாட்டில் கவனம் செலுத்திவர வேண்டும்’ என்று சீன அரசாங்கம் விரும்புகிறது.

காஷ்கார் பகுதியில் 1981 நவம்பரில் நடந்த ஒரு கைக்கலப்பில் உகர் முஸ்லிம் ஒருவரை சீனர் கொலைசெய்து விட்டார். அந்தச் சமயத்தில் ஈத்கா பள்ளியின் இமாம் காசிம் கராஜி, சம்பவம் நடந்த இடத்திற்கும் மற்ற பல பள்ளி வாசல்களுக்கும் சென்று நெருக்கடி நிலைமையைத் தணிக்க ஆவண செய்தார்.

சீன அரசு 1980 ஆம் ஆண்டிலிருந்து முஸ்லிம்கள் ஹஜ் பயணம் மேற்கொள்வதற்கு அனுமதித்து வருகிறது. இதன் விளைவாக முஸ்லிம் நாடுகளுடன் சீனாவின் உறவுகள் மேம்பட்டு வருவதாகக் கருதப்படுகிறது.

1981ல் காஷ்கார் பகுதியைச் சேர்ந்த முஸ்லிம் சமயத் தலைவர் ஒருவரும் மற்றும் நான்குபேரும் ஹஜ் யாத்திரையை முடித்துக் கொண்டு தாயகம் திரும்பிக் கொண்டிருந்தபோது பாகிஸ்தானிலும் வங்காள தேசத்திலும் தங்கிச் செல்லும்படி கேட்டுக் கொள்ளப்பட்டார்கள். அவர்களுக்கு இவ்விரு நாடுகளிலும் வரவேற்பளிக்கப்பட்டது.

கலாச்சாரப் புரட்சியின் போது மறைக்கப்பட்டுவிட்ட திருக்குர் ஆன் பிரதிகளுக்குப் பதிலாக தற்போது எழுபதினாயிரம் பிரதிகள் அச்சிடப்பட்டுள்ளன. அடுத்த ஆண்டு ‘உகர்’ மொழியில் 30 ஆயிரம் திருக்குர் ஆன் பிரதிகளை வெளியிடத் திட்டமிட்ப்பட்டிருக்கிறது.

தெற்கு சின்ஜியாங் வட்டாரத்தில் இஸ்லாம் மிக வலுவான மார்க்கமாகத் திகழ்ந்து வருகிறது. சீனாவின் மேற்குக்கோடி நகரமான காஷ்கரில்தான் நெடுங்காலத்திற்கு முன்பே இஸ்லாம் பரவியது. பிறகு அங்கு புத்த மதமும், கிறிஸ்துவமும் பரவின. எல்லைப்புற மக்கள் தொடக்க காலத்திலிருந்தே முஸ்லிம்களாக இருந்ததால் இஸ்லாம் தங்களது நாட்டில் பரப்பப்பட்ட ஒரு மார்க்கமாக சீனர்களால் கருதப்படவில்லை. ஆனால் கிறிஸ்துவம் வெளிநாட்டு மிஷனரிகளால் புகுத்தப்பட்ட சமயம் என அவர்கள் கருதுகிறார்கள்.

18 வயதுக்கு உட்பட்டவர்களை மார்க்கக் கல்வி கற்பதற்கு அரசு அனுமதிக்கவில்லை., ஆனால் வீட்டிலேயே முஸ்லீம் குழந்தைகள் மார்க்கக் கல்வியைக் கற்றுவிடுகின்றனர். ‘சின் ஜியாங்கில் மார்க்கக் கல்வி கற்கும்படி குழந்தைகளைப் பொற்றோர்கள் கட்டாயப் படுத்துகின்றனர்’ என்று சீன இளைஞர் பத்திரிகை ஒன்று குறை கூறியது. இதனாலெல்லாம் மார்க்கக் கல்வியின் ஆர்வத்தைக் குறைத்துவிட முடியவில்லை.

இளைஞர்கள் பெரும் எண்ணிக்கையில் பள்ளிவாசல்களுக்கு வருவதாக இமாம் காசிம்காஜி கூறுகிறார்.

காஷ்கருக்கு அப்பால் உள்ள பஹாடெகிலி என்ற கம்யூனில் மட்டும் 43 பள்ளிவாசல்கள் உள்ளன.

இப்பகுதியில் நூற்றுக்கு நூறு முஸ்லிம்களே வாழ்கின்றனர். இதே கம்யூனைச் சேர்ந்த 240 கம்யூனிஸ்டுக் கட்சி உறுப்பினர்கள் நாத்திகர்களாக இருக்கின்றனர். கட்சி அதிகாரிகள், மக்களின் மதநம்பிக்கைகளை மதித்து நடப்பதாகக் கூறப்படுகிறது.

சீனா, போதிய அளவுக்கு விஞ்ஞான மேம்பாடு அடைந்து விட்டால் மதநம்பிக்கைகள் தானாகவே மக்களிடமிருந்து அகன்றுவிடும் என்று ‘செங்கொடி’ இதழ், கட்சி உறுப்பினர்களுக்கு அண்மையில் ஒரு கட்டுரையின் மூலம் எடுத்துக் கூறியது. ஆனால் ஏராளமான கஜக் மற்றும் உகர் பிரிவு இளைஞர்கள் இஸ்லாமே தங்கள் மேம்பாட்டுக்கான சிறந்தவழி எனக் கருதுகின்றனர்.

“சீனாவில் சமயங்களை ஒடுக்கும் மற்றொரு சந்தர்ப்பம் தலைதூக்காது” என்று இமாம் காசிம் கராஜி கூறுகிறார். “இஸ்லாமிய நெறிமுறைகளை விட்டுக் கொடுக்கும் பேச்சுக்கே இனி இடம் இல்லை” என்று திட்டவட்டமாகச் சொல்கிறார் அவர்.

“ஒருவருக்கு ஒரு நம்பிக்கைதான் இருக்க முடியும். ஒன்று நீங்கள் இஸ்லாத்தை நம்பவேண்டும், அல்லது கம்யூனிஸத்தை நம்பவேண்டும். இரண்டையும் ஒருவர் எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்? ஒரே வழியைப் பின்பற்றவேண்டும் என்பதுதானே நபி பெருமானாரின் போதனை?” என்று வினவுகிரார் இமாம் காசிம் கராஜி. [ஆதாரம்: சிங்கப்பூர், ஸ்ட்ரெயிட்ஸ் டைம்ஸ்.]

***

நன்றி: ஜே.எம்.சாலி , முஸ்லிம் முரசு ( பெருநாள் மலர் – ஜுலை, 1983) , ‘சீன மதங்கள்’ ஜனனி ( நியூ ஹோரிஸன் மீடியா) 

நன்றி : ‘சீர்காழி முஸ்லிம்’ தாஜ் ! | E-Mail : satajdeen@gmail.com