கவிஞர் அபி – விஷ்ணுபுரம் விருது

ஜெயமோகனின் இணையதளத்திலிருந்து, நன்றியுடன்..

அன்புள்ள நண்பர்களுக்கு

கவிஞர் அபி அவர்களுக்கு விஷ்ணுபுரம் விருது வழங்கும் விழா இவ்வாண்டு டிசம்பர் 27, 28 ஆம் தேதிகளில் கோவையில் நிகழ்கிறது. வழக்கம்போல முதல் நாள், 27-12-2019 வெள்ளிக்கிழமை காலைமுதல் எழுத்தாளர் சந்திப்புகள் நிகழும். மறுநாள் மாலையில் விருதுவிழா

இவ்வாண்டு மலையாளக்கவிஞர் கே.ஜி.சங்கரப்பிள்ளை அஸாமியக் கவிஞர் ஜான்னவி பருவா ஆகியோர் விருந்தினர்களாக விருதுவிழாவில் கலந்துகொள்கிறார்கள்.கே.என்.செந்தில், இசை,அமிதம் சூரியா, வெண்பா கீதாயன், சுரேஷ்குமார இந்திரஜித், யுவன் சந்திரசேகர், பெருந்தேவி ரவி சுப்ரமணியன் ஆகியோரின் படைப்புலகு குறித்த விவாதங்கள் நிகழவிருக்கின்றன.

இவ்வாண்டும் இலக்கியநண்பர்கள் கலந்துகொண்டு விழாவையும் கருத்தரங்கையும் சிறப்பிக்கவேண்டும் என விரும்புகிறேன்

ஜெயமோகன்

*
தொடர்புடைய பதிவுகள் :
லா.ச.ரா. : ‘என்னைப் பற்றி என்னைவிட அதிகம் அறிந்தவர் அபி’

நேர்காணல்:- “கவிஞர் அபி”

நாஞ்சில்நாடன், ஜெயமோகன் உரை @ துபாய் (2012)

நன்றி : அமீரகத் தமிழ் மன்றம் , ஆசிப் மீரான், சென்ஷி


*

***

தொடர்புடைய பதிவுகள்:
துபாயில் அமீரகத் தமிழ் மன்றத்தின் இலக்கியக் கூடல் 2012

ஜெமோ & நாஞ்சில்நாடன் சந்திப்பு புகைப்படங்கள் (சகோதரர் குசும்பன் எடுத்தது)

2012-ன் சிறந்த சிரிப்பு!

ஏன் இப்படி சிரிக்கிறார்கள் இவர்கள்? அடுத்த இரண்டு மணி நேரத்தில் நடந்த அந்த சம்பவம் குறித்தா? எதுவோ, ’என்னட ஆபிமா சிரிப்புதான் அளகு’ என்றாள் அஸ்மா , முதன்முறையாக! Click here to enlarge the Photo.

jeyan-abedeen-nanjil2b

நன்றி : அமீரகத் தமிழ் மன்றம், சிரிக்க வைத்த ஆசிப்மீரான், ’எல்லாத்துக்கும்’ காரணமான எங்கள் சென்ஷி, ஃபோட்டோ எடுத்த பொல்லா குசும்பன்

அதிர்ச்சியில் இருக்கிறேன்…

தப்பாக அர்த்தப்படுத்திக்கொள்ளக்கூடாது , தம்பி சென்ஷி ஆசைப்பட்டபடி சென்ற வியாழன் இரவு (12/4/2012)  மேடையில் ஏறினேன். ஒட்டாமல் ஒதுங்கி இருந்தவனை ஒருவழியாக – 22 வருடம் கழித்து கண்டுபிடித்து – உட்கார வைத்த அமீரகத் தமிழ் மன்றத்துக்கு என் அதிர்ச்சி உரித்தாகுக!

குத்தாட்டம் கோலாட்டம் இல்லாமல் துபாயில் நடந்த இலக்கிய நிகழ்ச்சி அநேகமாக இதுவாகத்தான் இருக்கும். சகோதரர் ஆசிப்மீரானின் திறமையால் ’இலக்கியக்கூடல்’ மிகச் சிறப்பாக நடந்து முடிந்தது. ஆபிதீன் எதுவும் பேசாததுதான் நிகழ்ச்சி சிறக்க உண்மையான காரணம் என்று எல்லாரும் உண்மை பேசினார்கள். மணிமேகலை பற்றிய உரையில் தமிழின் மிக முக்கிய ஆளுமையான ப்ரேமை குறிப்பிட்டுப் பேசிய நண்பர் ஜெயமோகன் கவர்ந்தார். அழுத்தமாகப் பேசுகிறார் மனுசன்.  மூத்த அண்ணன் போல என்னிடம் பேசிய நாஞ்சில்நாடன் அன்பும் நெகிழ வைத்தது. அவரிடம் கொடுப்பதற்காக வாங்கிய உஸ்தாத் ரஷீத்கானின் லேட்டஸ்ட் சி.டியை வேண்டுமென்றே மறந்துவிட்டு வந்திருந்தேன்! 

நேரமாகிவிட்ட காரணத்தால் டிரெயின்/ பஸ் பிடித்து என் இடத்திற்கு போக எத்தனித்தேன், (‘இன்னும் டிரைவிங் லைசன்ஸ் எடுக்காம எலக்கியவாதியாவே இக்கீறீங்களே’ என்று முபாரக் வெடைத்தது இங்கே ஞாபகம் வருகிறது). ஹமீதுஜாஃபர் நானாவும் நண்பர் மஜீதும்  ஊர் போயிருப்பதால் எனக்கு கொஞ்சம் சிரமம். எங்கே நின்று கூப்பிட்டாலும் உடனே வரும் சாதிக்கின் இப்போதைய டூட்டி டைமும் ஒத்துவராது. கம்பெனி டிரைவர்களை கண்டநேரத்தில் கூப்பிட்டு தொந்தரவு செய்வதோ கட்டோடு எனக்குப் பிடிக்காது. நான்தான் நல்லவனாக ரொம்பநாளாக நடித்துக் கொண்டிருக்கிறேனே..

சென்ஷி , ‘நான் அரேஞ்ச் பண்றேன்னே. கொஞ்சம் வெயிட் பண்ணுங்க; நாளைக்கே பொய்டலாம்’ என்றார்!

உலக சினிமாக்களை எனக்கு அறிமுகப்படுத்தும் உத்தமர் (1000 டிவிடிக்களை காப்பி பண்ணி தருவதாக சொல்லியிருப்பதால் இந்த அடைமொழி ) அய்யனார் தன் காரில் உடனே கொண்டுபோய் விடுவதாகச் சொய்யனார்.

’ஒரு அழுத்துல பொய்டலாம் அண்ணே’

‘எங்கே, மேலேயா? அதெல்லாம் வாணாம்’

அழுத்தினால் போகாமலா இருக்கும்?! அதிகபட்சம் அரைமணி நேரத்திற்குள் அல்கூஸ் போய்விடலாம் – காரில். ஆனால் , குடும்பஸ்தர்களை நான் சிரமப்படுத்துவதில்லை (அதற்குத்தான் மனைவி இருக்கிறார்களே!).  வந்ததுபோலவே போய்க்கொள்கிறேன் என்று மறுத்தேன். கஷ்டப்படும் சுதந்திரத்தைக்கூட எனக்குத் தரமாட்டீர்களா? என்று வேடிக்கையாவும் சொன்னேன். கராமா மெட்ரோ வரையாவது விடுகிறேன் என்று அன்போடு உதவினார் – காரைத் தள்ளிக்கொண்டே.

பத்து ரோல்ஸ்ராய்ஸுக்கு இணையானது துபாய் மெட்ரோ. பயமெதற்கு?

மெட்ரோ /  பஸ் என்று என் வழியில் இருப்பிடம் போக ஒன்றரை மணி நேரம் ஆகும். அதனால் என்ன, இசை கேட்கலாம். அபுதாபி கிளாஸிக் எஃப்.எம் (87.90 MHz) 24 மணிநேரமும் இருக்கிறது. சூர்யானா மஹ்மூத் வருவாள் சுந்தரக் குரலோடு. இடம் நெருங்க நள்ளிரவு ஆகிவிட்டது. என்ன இழவு யோசனையோ , F25 feeder பஸ்ஸை விட்டு அல் அஹ்லி டிரைவிங் ஸ்கூல் ஸ்டாப்பில் இறங்கி – அடுத்தநாள் சமைப்பதற்கு சாமான்கள் வேண்டுமே என்ற நினைவு வர திரும்பவும் அருகே இருந்த அல்கூஸ் மால் சென்று பொருட்கள் வாங்கிவிட்டு, பசி வயிற்றைக் கிள்ளியதால் பக்கத்து ரெஸ்டாரண்ட்டில் சாப்பிட்டுவிட்டு (இலக்கியக்கூடல் முடிந்தபிறகு அருமையான ஓசி டிஃபன் இருந்தது. பதிவர்கள் வந்திருந்ததால் நமக்கு ஒன்றும் கிடைக்காது என்பதாலும் மேலும் தாமதமாகிவிடும் என்றும் சாப்பிடவில்லை.) தனியாக நடக்க ஆரம்பித்தேன். காடு நாவலில் எனக்குப் பிடித்த ஓரிரு பக்கத்தை நாளை பதிவிடலாம் என்று யோசனை. இல்லை, வெள்ளிக்கிழமை (13/4/2012) என் சீதேவி வாப்பாவின் நினைவு நாள். என் பிள்ளைகளோடு அவர்கள் இருக்கும் அபூர்வமான ஒரே ஒரு புகைப்படம் இருக்கிறது. அதை முகநூலில் பதிவிடவேண்டும். அதுதான் முக்கியம். வாப்பா ஹயாத்தோடு (உயிரோடு) இருந்திருந்தால் இன்று  நடந்த விசயத்திற்கு மகிழ்ந்திருப்பார்கள். பிரபல எழுத்தாளர்களோடு சேர்ந்து உட்காரும் அளவுக்கு மகன் வளர்ந்து விட்டானே… நம் பிள்ளை மக்கு இல்லை.

எமிரேட்ஸ் கிளாஸை கடக்கும்போது ஒரு போலீஸ் வேன் ரோந்து போனது. பாதுகாப்புக்கு துபாய்தான். ஆள் நடமாட்டமில்லை. இன்னும் ஒரு சந்து திரும்பினால் உம்-அல்-ஸுகீம் ரோடுக்கு வந்து என் இருப்பிடத்திற்கு போய்விடலாம். சந்திலிருந்த RGB அலுவலகம் அருகே ஓரமாக வந்தபோது மடேரென்று என் பின் தலையிலும் சூத்தாமட்டையிலும் (பேண்ட்டில்) என்னவோ வேகமாக அடிக்கப்பட்டது. மரக்கிளை ஏதும் விழுந்ததோ? அதிர்ச்சியில் கிறுகிறுவென்று மயக்கம் வந்தாற்போல இருந்தது. அப்படியே உட்கார்ந்து விட்டேன்.

நாயையோ பன்றியையோ அடிப்பதுபோல் இன்னும் நாலைந்து வருடத்தில் ரிடையராகப் போகிற கிழவன் ஆபிதீன் மேல் அடித்துவிட்டு ’ஹிந்தி ஹிந்தி..’ என்று கேலிச்சிரிப்போடு கத்தியபடி கருப்புநிற வேனில் பறந்தார்கள் மண்ணின் மைந்தர்கள். அல்-பர்ஷா ஏரியா பயல்களாக இருக்க வேண்டும். கார் நம்பரைக் கவனிக்க இயலவில்லை.  கவனித்தால் மட்டும் – அல் அமீன் சர்வீஸை கூப்பிட்டு – புடுங்கவா முடியும்? அரபி முதலாளியை ’அந்த’நேரத்தில் கூப்பிடுவதும் ஆபத்து.

ஏதோ விபரீதமாக நடந்திருக்கிறது என்று தடவினால் கொழகொழவென்று… சட்டை பேண்ட் எல்லாம் நனைந்து தொடையில் ஒட்ட ஆரம்பித்துவிட்டது. யாராவது பார்த்தால் நான் கழிந்திருப்பதாகத்தான் சொல்வார்கள். அல்லது வழக்கம்போலவே இருப்பதாகச் சொல்வார்கள்.

அவமானப்படும் சுதந்திரத்தை ஆபிதீனுக்கு மேலும் அளித்த அரபி கூழ் முட்டைகளே , அஸ்ஸலாமு அலைக்கும்.

நல்லவேளையாக , முணேமுக்கா திர்ஹம் மதிப்புள்ள என் மொபைலையும், பத்தேகால் திர்ஹம் உள்ள பர்ஸையும் விட்டு விட்டீர்கள். சுக்ரன்.

சவுதியில் இருந்தபோது பலமுறை பட்டிருக்கிறேன். துபாயில் இதுதான் முதன்முறை. ’உள்ளூர்லேயே பொழைச்சி புள்ளகுட்டியோட இருக்கனும் வாப்பா.’ என்று என் வாப்பா அடிக்கடி சொல்வார்கள்.  அவர்களை உதாசீனப்படுத்தி அரபுநாடு வந்ததற்கு எனக்கு இன்னும் வேண்டும்.

மனம் கசங்கும்போதெல்லாம் யூசுப்தாதா பற்றி சலீம்மாமா எழுதிய பாடல் வரிகளை எனக்குள் சொல்லிக்கொள்வது வழக்கம்.

‘சேய் எந்தன் கண்களில் நீரோடலாமா..
கண் பாரும் கண் பாரும்…’

மேலும் கசங்கியதுதான் மிச்சம். இரண்டுநாளாக மனதே சரியில்லை. அலுவலகம் போய்வரும்போது போகிற வருகிற கார்களின் எண்களையெல்லாம் தன்னிச்சையாக பரபரவென்று மனம் பதிவு செய்கிறது. ‘கண்கள் முழுக்க எண்கள் ; எண்கள் ’ என்பார்கள் கவிஞர்கள். (தாஜைச் சொல்லவில்லை; கவிஞர்களைச் சொன்னேன்!).

முந்தாநாள் , மனைவி அஸ்மாவிடம் லேசாக விசயத்தைச் சொன்னபோது,  ‘பைத்தியம் புடிச்சிக்கிது போலக்கிது. முட்டையாலயா அடிப்பானுவ , ஹராமிளுவ?’ என்று திட்டினாள். விட்டால் பாதாள சாக்கடைக்காக ஊரில் தோண்டப்பட்டிருக்கும் கல், மண்ணையெல்லாம் அரபிகளுக்கு அனுப்பிவிடுவாள் போலிருக்கிறதே! நொந்தபடி நேற்று இரவு  ஜபருல்லா நானாவை தொடர்புகொண்டு என் மனப்புழுக்கத்தைச் சொன்னேன். குரு போன்றவர் அவர். ஊஹூம், குருவேதான்.

’ம், எழுதிக்கும்ங்கனி…

நல்லவர் கெட்டவர் என இல்லை.
எல்லோரும் ஒண்ணேதான்.
இறைவனும்…!

எப்படி? ஷைத்தான படைச்சதனால அல்லாவும் கெட்டவனாயிட்டான், ஹா..ஹா..’ என்றார்.

இந்த அதிர்ச்சிதான் இன்னும் நீங்கவில்லை!

***

நன்றி : ஆசிப்மீரான், சென்ஷி, அமீரகத் தமிழ் மன்றம், இஜட். ஜபருல்லா

***

பார்க்க : ஜெமோ & நாஞ்சில்நாடன் சந்திப்பு புகைப்படங்கள் (சகோதரர் குசும்பன் எடுத்தது)

« Older entries