இரண்டு நாட்களாக தொடர்ந்து ‘மவுத்’ செய்திகளை கேட்டுக் கொண்டிருப்பதால் மனசு சங்கடமாக இருக்கிறது. ‘ஏன் இப்படி?’ என்று ஒரு ஆலிம்ஷாவைக் கேட்டால் ‘அதெல்லாம் அல்லாஹ்ட நாட்டம் தம்பி’ என்கிறார் தாடியை உருவிக்கொண்டே! அவரிடமிருந்து தப்பித்த எனக்கு ஜீ.முருகனின் ‘கடவுளின் கழுதை’ கவிதை ஞாபகம் வந்ததும் வலம்புரி ஜான் அவர்களின் ‘ஒன்றும் ஒன்றும் ஒன்று’ கட்டுரை கிடைத்ததும்கூட இறைவனின் நாட்டம்தான் என்று நினைக்கிறேன். முருகன்ஜீயின் கவிதை பதிவின் அடியில் இருக்கிறது. ‘எல்லோரையும் எல்லாவற்றையும் படிக்கவிட்டால், எல்லாம் ஒன்றுதான் என்று அறிந்து கொள்ளுவார்கள்.. அவ்வாறு அறிந்து கொண்டால் நிறுவனங்களாகிவிட்ட மதங்கள் தங்கள் தனித்தன்மைகளை இழக்க நேரிடும். எல்லாம் ஒன்றுதான் என்று சொல்லி எந்த மதவாதியாவது தனது தனி ஆட்சிக்குத் தானே உலை வைப்பாரா?” என்று கேட்கும் வலம்புரி ஜானை முதலில் பார்ப்போம். அவர் மேலும் சொல்கிறார்…
இயேசு பெருமான் எருசலேம் பட்டணத்தில் உள்ள சாலமோனின் தேவாலயத்தைப் பார்த்தார். “இந்த தேவாலாயத்தை இடித்துப் போடுங்கள்; மூன்று நாட்களில் அதை நான் மீண்டும் கட்டுவேன்” என்றார். அவர் தமது உடலாகிய ஆலயத்தைக் குறித்து அவ்வாறு பேசினார் என்று பைபிளிலே வருகிறது.
‘உள்ளம் பெருங்கோயில்; ஊன் உடம்பு ஆலயம்’ என்கிற திருமூலரின் வரிகள் அப்படியே விவிலியத்தில் காணப்படுகின்றன. இந்த அழகின் ஆழத்தில் ஏன் அமிழ்ந்து எழ வேண்டும் என்பதற்கான காரணத்தைக் கண்டு பிடித்தா சொல்ல வேண்டும். தாயுமான சுவாமிகளின் பாடல்களைப் படித்தால் ‘சென் புத்தம்’ அப்படியே ஒவ்வொரு சொல்லுக்குள்ளும் குடியேறியிருப்பதை அறிந்து கொள்ளலாம். வள்ளலார் பாடல்களில் இயேசுவின் குரலையே கேட்கலாம். “ஆண்டவரே நான் உமது அடிமை; உமது வார்த்தையின் படியே எனக்கு ஆகட்டும்” என்கிற மரியாளின் (இயேசுவின் தாயார்) வேண்டுதலில் அருள்மிகு ராமானுஜரின் ‘பிரபத்தி’ தத்துவத்தைப் பார்க்கலாம்.
ஏன் உலகத்தில் இறைவன் ஒரே ஒரு சமயம் மாத்திரம் இருக்கிற படியாகப் பார்த்துக் கொள்ளக்கூடாது என்றால் ஒரே ஒரு மதமாக இருப்பதில் இறைவனுக்கே நாட்டமில்லை என்று திருக்குரான் கூறுகிறது.
***
நன்றி : ஆஸாத் பதிப்பகம் (இந்த நாள் இனிய நாள் – ஒன்றாம் தொகுதி)
***
கடவுளின் கழுதை
ஜீ.முருகன்
பரிதாபமாக நடந்து போகிறது
ஒரு கழுதை
ரத்தமும் சீழும் வடிகிற
கால்களை ஊன்றி
எல்லோருடைய பாவங்களையும்
சுமந்தபடி
நான் என் மனைவிக்கும்
நீ உன் கணவனுக்கும்
நான் என் காதலிக்கும்
நீ உன் காதலனுக்கும்
நான் உனக்கும்
நீ எனக்கும் இழைக்கும்
துரோகங்கள் அதன் முதுகில்
மூட்டையாக கனத்துச் செல்கின்றன
ரட்சிப்பற்ற காலவெளியில்
கழுதை மெல்ல நடக்கிறது
அதன் பின்னால் நடந்து போகிறான்
ஒரு நொண்டி வண்ணான்
***
நன்றி : ஜீ.முருகன், பன்முகம்