நண்பர் கநாசு. தாஜ் அனுப்பிய கட்டுரை. நாளையிலிருந்து அவர் ஜிநா.தாஜ் என்று அழைக்கப்படுவார். இன்றைய கணக்கு முடிஞ்சு போச்…!
***
அன்புடன்….
வாசகர்களுக்கு…..
“நவீன தமிழ் இலக்கியப் பரப்பின் எல்லைகளைப் புதிய திசைகளில் விஸ்தரித்தவர் ஜி. நாகராஜன். அதுவரையான, தமிழ் எழுத்து அறிந்திராத பிரதேசம் அவருடைய உலகம்! வேசிகளும், பொறுக்கிகளும், உதிரிகளும் தங்கள் வாழ்வுக்கும் இருப்புக்குமான சகல நியாயங்களோடும் கௌரவங்களோடும் வாழும் உலகமது” – சி. மோகன்
‘நாளை மற்றுமொரு நாளே’-ஐ முன் வைத்து ஜி. நாகராஜனின் படைப்பைப் பற்றிய தனது மதிப்பீடாக சி. மோகன் தன் பேச்சில் குறிப்பிட்டு இருக்கும் மேற்கண்ட கணிப்பு 100க்கு 100- சரி! ஜி. நாகராஜனின் அறிவார்ந்த தளங்கள் குறித்து பலரும் எழுதியதைப் படித்து இருக்கிறேன். தவிர, அவரது கட்டுரைகள்/ கதைகள்/ நாவல்கள் வழியாகவும் நிரம்ப அறிந்திருக்கிறேன். நிஜமாலுமே அறிவார்ந்த கலைமனம் கொண்ட படைப்பாளிதான் அவர்.
‘நாளை மற்றுமொரு நாளே’ நாவலை, தொண்ணூறுகளில் நான் வாசித்திருக்கிறேன். அதை வாசித்திருக்கிறேன் என்று இப்போது சொல்லிக்கொள்வது சந்தோஷமாக இருக்கிறது. வேசிகளைப் பற்றி, பொறுக்கிகளைப் பற்றி சில படைப்பாளிகள் எழுதி நான் படித்திருக்கிறேன். அந்தவகையில் சி. மோகன் குறிப்பிட்டிருப்பது போல், ஜி.நாகராஜனின் எழுத்து ஒன்றுதான் நினைவில் இன்னும் நிற்கிறது. மோகன் கூறியிக்கிற மாதிரி, அதிர்ச்சிக்காகவோ, கிளர்ச்சிக்காகவோ, பரபரப்புக்காகவோ, எழுத்தில் காட்ட நேரும் துணிச்சலுக்காகவோ…. என்றில்லாமல் எழுதப்பட்ட ஒன்றாகவும் அது இருந்தது.
அந்நாவல் மையமிடும் உலகில், அவர் கண்ட, கொண்ட மக்களின் தினப்படியான சம்பவங்களை பெரிய மாற்றமேதுமில்லாமல் அவர் தன் படைப்பில் இறக்கி வைத்திருந்தார். நிஜத்தில் நிறைவு தந்த யதார்த்தப் பதிவு அது. அந்நாவலை வாசித்த நாளில், அதனாலானத் தாக்கம் என்னில் தணிய பல நாட்கள் ஆனது! இங்கே, அந்தத் தாக்கத்தை அடிக்கோடிடுகிறேன்.
வாய்ப்பு கிடைத்தால், இந்நாவலை நண்பர்கள் ஒரு முறையாவது வாசிக்கவேண்டும். நம்மைச்சுற்றி, நாம் காணும் மக்களிடையே நமக்கு சிக்காத இப்படியான வாழ்வுகொண்ட மக்களும் வாழ்வதை நீங்கள் உணரவரும்போது எனக்கு ஏற்பட்ட அதே பேரதிர்வும், தாக்கமும் உங்களுக்கும் நிகழலாம். அப்படி நிகழும்பட்சம் அதுவோர் அபூர்வ நிகழ்வாகவே நீங்களும் சிலாகிக்கக்கூடும்.
இங்கே, சில முன் குறிப்புகளை இடுகிறேன்.
இந்த முன் குறிப்புகள்
உங்களது தடங்களில்லா வாசிப்புக்கு…
உதவக்கூடும்.
*
1. எஸ். சம்பத்:
அமரராகிப்போன சில தேர்ந்த படைப்பாளிகளில் இவரும் ஒருவர். இத்தனைக்கும் இவர் ‘இடைவெளி’ என்கிற ஒரே ஒருநாவலைத்தான் எழுதியிருக்கிறார்! என்றாலும் அவரை பிற படைப்பாளிகள் மெச்சுகிறார்கள். ‘இடைவெளி வெளிவந்து சுமார் இருபத்தி ஐந்து வருடத்திற்கு மேலாகியும் இன்னும் அவர் அதற்காகவே நினைவுக்கூறப்படுகிறார்! ‘விருட்சம்’ சிற்றிதழின் ஆசிரியரும் என் நண்பருமான அழகிய சிங்கர், இன்றைக்கும் தனது இதழ்களில் சம்பத் குறித்தும் அவரது படைப்புகள் குறித்தும் தொடர்ந்து எழுதிக்கொண்டிருக்கிறார். பல படைப்பாளிகள் இந்நாவலை அன்றைக்குப் போற்றி புகழ்ந்ததை அறிவேன். வாசித்தும் இருக்கிறேன்.
வாழ்வுக்கும் சாவுக்குமான இடைவெளியைப் பற்றி தீரப்பேசும் நாவல் அது. இந்நாவலுக்காக சம்பத் அவர்கள் பெரிய அளவில் மனோரீதியான ஆய்வை நிகழ்தினார் என்றும், அந்நாவல் எழுதவென்று அதிகக் காலம் எடுத்தார் என்றும் எங்கள் நண்பரான திலீப்குமார், சிரித்தபடி சொன்னது மறக்க முடியாது. தூக்குக் கயிற்றுக்குள் தலையைவிட்ட நிலையில்… முடிச்சுக்கும் -கழுத்துக்குமான இடைவெளிதான் உயிர் ஜனிப்பின் யதார்த்த நிலை என்பதாக, நாவலில் அவர் பேசியிருப்பது மறக்கமுடியாது.
ஆர்வம் கொண்ட தனது நாவல் புத்தகமாக வெளிவந்து பார்ப்பதற்கு முன்பாகவே சம்பத் இறந்துபோனார் என்பது இங்கே கூடுதல் தகவல். இன்னொரு கூடுதல் தகவல் , மத்திய அரசு சார்ந்த பெரிய பதவி ஒன்றை பம்பாயில் அவர் வகித்தார் என்பது.
என்னைப் பொருத்தவரை, சம்பத்தின் ‘இடைவெளி’… தமிழில் இன்னொரு நாவல் மட்டுமே. பெரும்பாலும் சாவைப்பற்றிய ஆய்வுகளை என் மனம் ஏற்பதில்லை. ‘சாவு, மரணத்தால் மனிதன் எழுதும் அழகிய கவிதை!’ அப்படியோர் கவிதை எழுதவே ஒருவன் வாழ்நாளெல்லாம் வாழ்கிறான். கிளையிலிருந்து இலை விழும் நேர்த்தி கொண்ட கவிதையது!
2. ப. சிங்காரம்:
திருநெல்வேலி பக்கத்து கிராமத்திலிருந்து, தனது சிறுவயதில் மலேசியா போய், பின்னர் இந்தோனேசியா சென்று, தரையிலும் கடலிலும்(கப்பலில்) பணி செய்து தனது மூப்பு பருவத்தில் நாடு திரும்பியவர். திறமான இரண்டு நாவல்கள் எழுதியிருக்கிறார். நாவலின் மையம் அவர் பணிபுரிந்த கிழக்காசிய கடல் பரப்பும், அதன் கரையில் வாழும் மக்களும்தான். நான் மேலே குறிப்பிட்ட ‘திறனான’ என்றது… நம் படைப்பாளி பெருமக்களின் ஏகோபித்த கணிப்பு! சம்பத் பற்றி நாலு நல்ல வார்த்தைகள் பேசிய நம்ம ஆபிதீன், ப.சிங்காரத்தின் நாவல் குறித்தும் பேசியதும் என் நினனவிருக்கிறது. எனக்கும் ஆபிதீனை வழிமொழிய ஆசை. என்னசெய்ய… நான் இன்னும் அதை படிக்கலையே!
இங்கேயுள்ள நவீன இலக்கிய வட்டத்த்தின் எந்த ஒரு படைப்பாளியோடும் சிங்காரத்திற்கு தொடர்பும் கிடையாது. தமிழில் எந்த ஒரு படைப்பாளியின் படைப்புகளையும்கூட அவர் வாசித்தவரில்லை! சிறுவயதில் பிழைக்கப் போன இடத்தில் ஆங்கிலம் பயின்று, ஆங்கில நவீனங்களைப் படித்து, இலக்கிய காதலாகி, கசிந்துருகி , தமிழில் அதுபோல் எழுதிப் பார்க்கவேண்டும் என்கிற கரிசனையில்/ சூழ்கொண்ட முயற்சியில் அவர் எழுதியதுதான் ‘புயலிலே ஒரு தோணி’! தற்சமயம், ‘மாலை முரசு’ திருநெல்வேலி பதிவில் பணிபுரிகிறார்.
3. ஜி. நாகராஜன்:
மதுரை மாவட்டத்துக்கார். உயர் ஜாதி பிறப்பு. காலத்திற்கும் அதை அவர் எதிரொலித்ததில்லை. மாஸ்டர் டிகிரி. அனேகமாக கணக்கு. வேதமும் பயின்றவர். இவைகளும் அவர் எழுத்தில் மினுக்கியதுகூட இல்லை. அவரது ஆங்கிலப் புலமை அசாத்தியமானது என்பார்கள். உலக இலக்கியம் பல கற்றவர். திருமணம் குழந்தை உண்டு. குடும்பமும் பெரிய குடும்பம்! ஆனாலும், குடும்பத்துக்கு ஆகாதவர். அவர் வீட்டில் அவரது எழுத்துக்கள் குறித்து படுமட்டமான மட்டமான அபிப்ராயம்.
அவர் ஈடுபாடுகொண்ட இடது சாரி சிந்தனைகளும் கீழ்த்தட்டு மக்களோடு அவர் கொண்ட நெருக்கமும் தோழமையும்தான் பிற்காலத்தில் அவரது வாழ்வை நிர்ணயித்தது. அது அவரை ‘ஒன்றுமில்லாதவராக’ அலையவிட்டும்… அந்த அலைச்சல்கள் குறித்து வருந்தி ஒரு நாளும் எழுதியவர் இல்லை. மாறாய், ‘நாளை மற்றுமொறு நாளை’த்தான் தந்தார்!
ஒரு சில நண்பர்கள் மட்டுமான சூழலில், கிட்டத்தட்ட அனாதையாக அவர் இறந்து போனார் என்கிற செய்தி, வாசிப்பவனுக்கு கஷ்டம் தருவது. பாரதியின் இறப்பு செய்தியினை பிற்காலத்தில் படிக்க நேர்ந்தபோது உறுத்திய அதே மனக்கஷ்டம்! உங்களுக்குத் தெரியுமா, மகாகவியை சுடுகாட்டுக்கு சுமந்துசென்று தீயிடப்போனபோது கூடியிருந்தவர்கள் வெறும் பதினாறு பேர்கள்!!.
ஜி. நாகராஜன், தனது இறப்பதற்கு முந்தைய நாளில், மனித இனம் போரில் மாண்டு கொண்டிருப்பது பற்றிப் பெரும் துக்கத்துடன் பேசியதாக சி.மோகன் எழுதியிருப்பதை வாசித்த நாழியில் சற்றுநேரம் சகலமும் உறைந்துவிட்டது. சிவனேயென அமர்ந்துவிட்டேன்.
4. க்ரியா ராமகிருஷ்ணன்:
‘க்ரியா‘ என்கிற பதிப்பக உரிமையாளர். மேதமை கொண்டவர். தமிழில், நவீன இலக்கியப் படைப்புகளை வாசிக்க பரவலான வாசகர்கள் இல்லாத காலத்தில் (சுமார் நாற்பது வருடங்களுக்கு முன்) மிக உன்னதமான படைப்புகளை/ உன்னதமான படைப்பாளிகளைக் கொண்டு புத்தகங்களைப் பதிப்பித்தவர். இதே அளவிலான அல்லது இன்னும் தீவிர சிரத்தையோடு பதிப்பகங்களை நடத்தியவர்களும் அன்றைக்கு இருந்தனர். அவர்களில் ஒருவர் ‘வாசகர் வட்டம்’ என்கிறப் பதிப்பகத்தை நடத்திய லெட்சிமி கிருஷ்ணமூர்த்தி. இவர் பெருந்தலைவர் காமராஜ் அவர்களின் அரசியல் குருவான ‘தியாகி’ சத்திய மூர்த்தியின் மகள்.
‘க்ரியா’, தமிழின் நவீன இலக்கியப் படைப்புகளை மட்டுமல்லாது, ஆங்கிலம்/ ஜெர்மன்/ பிரான்ஸ் ஆகிய பொழிகளில் வந்த சிறந்த படைப்புகளை தமிழில் மொழிமாற்றம் செய்து வாசகர்களின் தேடலை எளிதாக்கிய பதிப்பகம். பிரான்ஸ் எழுத்தாளர் ஒருவரின் ‘குட்டி இளவரசன்’ மற்றும் காஃப்காவின் ‘விசாரனை’ போன்றவை க்ரியாவின் முயற்சியால் தமிழில் வெளிவந்ததை சிறப்பித்தே சொல்லவேண்டும். ‘மௌனி கதைகள்’, சுந்தர ராமசாமியின் ‘ஜே.ஜே:சில குறிப்புகள் / அவரது கவிதைத் தொகுப்பான ‘நடுநிசி நாய்கள்’, சார்வாகனின் ‘எதுக்குச் சொல்றேன்னா…’ சிறுகதைத் தொகுப்பு, தலித் எழுத்தாளரான இமயத்தின் நாவல்கள், க்ரியாவின் ‘தற்காலத் தமிழ் அகராதி’ முதலியனவும் ‘க்ரியா’ பதிப்பகத்தின் கொடைகள்.
5. டேவிட் கல்மன்:
வெளிநாட்டுப் பதிப்பகமான ‘பெங்குவின் பதிப்பகத்தின்’ இந்திய மேலாளர்.
6. அபிசிப் ராமன்:
இவரைப்பற்றி பெரிதாக எதுவும் தெரியாது. எனக்குத் தெரிந்தவரை… இலக்கியத்தின் மீது ‘மௌன ஆர்வம்’ கொண்டவர். இவரையொத்த, மௌன ஆர்வம் கொண்ட பலர் நவீன இலக்கிய வட்டத்தில் இருக்கிறார்கள். அவர்களில் சிலரை சந்தித்தும் இருக்கிறேன். அபிசிப் ராமன், தமிழின் சில பல ஆக்கங்களை ஆங்கிலத்தில் கொண்டு சேர்க்க விரும்புபவராக செயல்படுபவர் என அறிகிறேன். பத்து வருடங்களுக்கு முன்னால், தமிழில் சில நல்ல கவிதைகளை தேர்ந்தெடுத்து இவர் அதனை ஆங்கில மொழிப்பெயர்ப்பாக கொண்டுவர முயன்றபோது, அவரின் தேர்வுக்கு உள்ளான கவிதைகளில் ஒன்றாக என்னுடைய ‘மேடை’ என்கிற கவிதையும் இருக்க, எனக்கு கடிதம் எழுதி தெரிவித்த பின்னரே மொழிமாற்றம் செய்தார். பின் அந்த ஆங்கிலத் தொகுப்பு வந்தபோது அதில் என் கவிதையும் இருந்தது. மேடை… நம் அரசியல் அவலங்களைச் சாடும் கவிதை. ரொம்பவும் சாதாரண, சராசரியான கவிதை!
7. சி.மோகன்:
இடதுசாரி சிந்தனையுடையவர். இவர் எழுதி, குமுதத்தில் வந்த தொடர்கதை ஒன்று, பிரபலமானது. சிறைச்சாலை/ கெடுபிடி/ தண்டனையின் வலி/ தூக்குமேடை/ போன்ற விஷயதானங்களை உள்ளடக்கிய தொடர் அது. தலைப்பு மறந்துவிட்டது. ஜி. நாகராஜனுடன் இவருக்கு நட்புரீதியான இப்படியொரு தொடர்பு என்பது என்னளவில் புதிய செய்தி.
*
அவ்வளவுதான்.
அடுத்து
சி.மோகனின் பேச்சை வாசிக்கலாம்.
– கநாசு.தாஜ்
***
ஜி. நாகராஜன் – கடைசி தினம்!
-சி.மோகன்
அனைவருக்கும் வணக்கம்.
என் நெடுநாள் ஆசைகளில் ஒன்று நிறைவேறியிருக்கும் நாள் இது.
எஸ் சம்பத்தின் ‘இடைவெளி”, ப.சிங்காரத்தின் ‘புயலிலே ஒரு தோணி’, ஜி. நாகராஜனின் ”நாளை மற்றுமொரு நாளே’ ஆகிய மூன்று நாவல்களும் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்படுவது உலக இலக்கியத்திற்கு நம்முடைய பெறுமதியான கொடையாக இருக்குமென்ற என் நம்பிக்கையை எழுத்திலும் உரையாடல்களிலும் வெளிப்படுத்தி வந்திருக்கிறேன்.
இன்று ஜி.நாகராஜனின் பிரதான படைப்பான ‘நாளை மற்றுமொரு நாளே’, அபிசிப்ராமனின் மொழிபெயர்ப்பில் பெங்குவின் வெளியீடாக வந்திருப்பது ஒரு விசேஷமான நிகழ்வு. மொழி மற்றும் கலை இலக்கிய கலாச்சர தளங்களில் தீவிரப் பற்றுதலோடு ஆழ்ந்த அறிவோடும் தீரா தாகத்தோடும் செயலாற்றிவரும் கல்மனும் க்ரியா ராமகிருஷ்ணனும் இணைந்து இம்மொழிபெயர்ப்பை ‘எடிட்’ செய்து இந்நூல் வெளிவந்திருப்பது நம்முடைய பெருமிதங்களில் ஒன்றாக அமையுமென்பதில் சந்தேகமில்லை.
க்ரியா ராமகிருஷ்ணனின் கைமந்திரம் இதில் சேர்ந்து கொண்டிருப்பது மகிழ்ச்சியாகிறது. ஒருசெயல் அதன் நிகழ்த்தும் மாயம் ஓர் அபூர்வவிந்தை. நவீனதமிழ் இலக்கிய முகத்தில் பொலிவு கூடியிருக்கும் இந்நாளில் அதை சாத்தியமாக்கிய அபிக்கும், டேவிட்கல்மனுக்கும், ‘க்ரியா’ ராமகிருஷ்ணனுக்கும், பெங்குவின் நிறுவனத்தாருக்கும் நம் அனைவர் சார்பாகவும் என் நன்றியையும் வணக்கத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஜி. நாகராஜனைப் பற்றிப் பேசுவதும் அவருடைய எழுத்தைப் பற்றிப் பேசுவதும் வேறு வேறானவை அல்ல. நவீன தமிழ் இலக்கியப் பரப்பின் எல்லைகளைப் புதிய திசைகளில் விஸ்தரித் தவர் ஜி. நாகராஜன். அதுவரையான தமிழ் எழுத்து அறிந்திராத பிரதேசம் அவருடைய உலகம். வேசிகளும், பொறுக்கிகளும், உதிரிகளும் தங்கள் வாழ்வுக்கும் இருப்புக்குமான சகல நியாயங்களோடும் கௌரவங்களோடும் வாழும் உலகமது.
தனிமனித இயல்புணர்ச்சிகளின் வெளிப்பாடுகளில் வாழ்வின் அழகு பூரணமாக விரிவடைவதைக் கொண்டாடும் முதல் தீர்க்கமான குரல் ஜி. நாகராஜனுடையது. சமூகக் கட்டுப்பாடுகளும் அழுத்தங்களும் அதன் சம்பிராதய ஒழுக்க நியதிகளும் பாலியல் கட்டுப்பாடுகளும் வாழ்வின் சிறகுகளைக் கத்தரித்து யந்திரரீதியான இயக்கத்தைக் கட்டமைத்திருக்கின்றன. இந்நிலையில், வாழ்வின் மீதான சகல பூச்சுகளையும் வழித்துக் துடைத்து, வாழ்வை நிர்வாணமாக நிறுத்தி அதன் இயல்பான அழகுகளிலிருந்து தனதான தார்மீக அறங்களைப் படைத்திருக்கும் கலை மனம் ஜி. நாகராஜனுடையது.
பூக்களில் சவ விகாரங்களையும் நிர்வாணத்தில் உயிர்ப்பின் அழகையும் கண்ட படைப்பு மனம் இவருடையது. விளிம்புநிலை மனிதர்களிடம் சுபாவமாக இயல்புணர்வுகள் மொக்கவிழ்வதைக் கண்டதும் அவ்வுலகை அற்புதமாகப் படைப்பித்ததும்தான் ஜி. நாகராஜனின் தனித்துவம். இதன் அம்சமாகவே விலைப்பெண்கள், அத்தான்கள், உதிரிகள் இவருடைய படைப்புலகை வடிவமைத்தனர்.
நவீன தமிழ் இலக்கியப் பரப்பில் ஜி. நாகராஜனின் வருகை துணிச்சலான எழுத்து என்பதிலேயே மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது. இந்தத் துணிச்சல் மனிதன் குறித்தும் சமூகம் குறித்தும் காலம் குறித்துமான அவருடைய அவதானங்களிலிருந்தும் பார்வையிலிருந்தும் வெளிப்பட்டிருக்கிறது. அதிர்ச்சிக்காகவோ கிளர்ச்சிக்காகவோ பரபரப்புக்காகவோ எழுத்தில்காட்டிய துணிச்சல் இல்லை இது. வாழ்வையும் எழுத்தையும் வெகு சுபாவமாக, மனத்தடைகளோ, இறுக்கங்களோ, ஒழுக்க நியதிகள் சார்ந்த பதற்றங்களோ இன்றி அணுகியிருப்பதில் விளைந்திருக்கும் கலைத் துணிச்சல்.
ஒவ்வொரு காலமும் வாழும் நெறிகளை விதிகளாக வலியுறுத்திக்கொண்டே இருக்கிறது. அதேசமயம் மீறல்களும் முரண்டுகளும் போராட்டங்களும் அவ்விதிகளுக்கெதிராக நிகழ்ந்து கொண்டே இருக்கின்றன. இந்த மோதல்களின் தொடர்ச்சியாகத்தான் பழையதை மேவிப் புதிய காலமும் புதிய விதிகளும் உருக்கொள்கின்றன. 50 ஆண்டுகளுக்கு முன் வெளிவந்த இந்தி திரைக்காவியமான ‘மொஹல் ஏ ஆஸம்’ படத்திலிருந்து ஒரு காட்சி:
அனார்கலி மீது கொண்ட எல்லையற்ற காதலுக்காக அவளை மீட்கும் பொருட்டும் அடையும் பொருட்டும் அரச பதவியை உதறிவிட்டு, தன் தந்தை அக்பருக்கு எதிராக யுத்தம் மேற்கொள்கிறான் சலீம். அக்பரின் தூதுவராக சலீமிடம் வருகிறார் ஓர் அமைச்சர். அவர் சலீமிடம் ‘அரச பதவியைத் துறந்துவிட்டு எனக்கும் நாட்டுக்கும் எதிராக யுத்தம் தொடங்குமளவுக்கு சலீமை ஆட்டுவிக்கும் அனார்கலி அப்படியொன்றும் அழகாகவும் இல்லையே’ என்று அக்பர் வருத்தப்பட்டதாகத் தெரிவிக்கிறார். அதற்கு சலீம் சொல்கிறான்; ‘சலீமின் கண்களால் பார்க்கச் சொல்.’
ஜி.நாகராஜனின் அருமையை உணர சமூக மதிப்பீடுகளின் கண்கள் கொஞ்சமும் உதவாது. அவை சமூக நெறிகளைக் காக்க வேண்டிய பொறுப்பிலிருக்கும் அதிகாரத்தின் கண்கள். அதாவது, அக்பரின் கண்கள். இயல்புணர்ச்சிகளை நேசிக்கும் கண்களுக்கு மட்டுமே ஜி. நாகராஜனுடைய வாழ்வும் எழுத்தும், வசீகரமும் அழகும் கொண்டதாக வெளிப்படும்.
என் 17ஆவது வயதில் ஜி. நாகராஜனை ஓர் லட்சிய ஆண்மகன் தோற்றத்தில் நான் அறிந்திருக்கிறேன். உடற்கட்டும் வனப்பும் மிடுக்கும் கூடிய பேரழகன். அப்போது நான் மாணவன். அவர் கணித ஆசிரியர். தூய வெள்ளை வேட்டி, வெள்ளை ஜிப்பா, நடுவிரலுக்கும் சுட்டு விரலுக்குமிடையே சதா கனலும் சார்மினார் சிகரெட், சில வருடங்களுக்குப் பின்னர், மீண்டும் அவருடைய கடைசி சில ஆண்டுகளில் அவரோடு நெருங்கிப் பழக நேர்ந்தது. உடல் நலிந்து, கசங்கிய அழுக்கு வேட்டி ஜிப்பாவோடும், கடைசி நாட்களில் கைகளில் சொறியோடும் அவர் அலைந்து திரிந்த காலம் பொழுதை கஞ்சா போதையில் கடத்திய காலம். இக்காலத்தில் அவரை ஓர் எழுத்தாளராக அறிந்து அவர்மீது மதிப்பு கொண்டிருந்தத நானும் எழுதத் தொடங்கியிருந்தேன். அவருடைய வாழ்வின் கடைசி நாள் பற்றி மட்டும் சில விஷயங்களைக் குறிப்பிட்டு இப்பேச்சை முடிக்கிறேன்.
ஒருமுறை ‘சாவும், அதை எதிர்கொள்ள மனிதன் தன்னைத் தயார்படுத்திக் கொள்ளும்போதே வரும்’ என்றார் ஜி. நாகராஜன். சாவை எதிர்கொள்ள அவர், தன்னைத் தயார்படுத்திக் கொண்ட தருணமும் வந்தது. எவ்வளவோ முறை மருத்துவமனையில் சேரும்படி வற்புறுத்திய போதெல்லாம் மறுத்த அவர், மரணத்திற்கு இரண்டு நாள் முன்பு, அவராகவே முன்வந்து தன்னை மருத்துவமனையில் சேர்க்கும்படி கேட்டுக்கொண்டார்.
1981 பிப்ரவரி-18ம் தேதி காலை அவரை மதுரை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று எல்லா பரிசோதனைகளும் முடித்து வார்டில் சேர்த்துவிட்டு மதியம் 2 மணிபோல் பிரிந்தபோது, ‘கஞ்சா ஏதும் உபயோகிக்க வேண்டாம். வெளியில் கறுப்புப்படியும்படி ஆகிவிடக் கூடாது’ என்று கேட்டுக்கொண்டேன். தன்னிடம் சிறு பொட்டலம் இருப்பதாகவும் டாய்லெட்டில் வைத்து ரகசியமாக உபயோகித்துக் கொள்வதாகவும் கூறினார். ‘சாயந்தரம் வரும்போது போட்டுக்கொண்டு வந்து தருகிறேன் இரவு டாய்லெட்டில் உபயோகித்துக் கொள்ளுங்கள்’ என்றதும் என்னிடம் அதைக் கொடுத்துவிட்டார்.
மீண்டும் சாயந்தரம் 5 மணி போல் நண்பர் சிவராமகிருஷ்ணனும் நாணும் அவரைப் போய்ப் பார்த்தோம். நான் சிகரெட்டில் கஞ்சாவைப் போட்டுக்கொண்டு போயிருக்கவில்லை. ‘போடத் தெரியவில்லை’ என்று சிகரெட் பாக்கெட்டையும் கஞ்சா பொட்டலத்தையும் அவரிடம் கொடுத்தேன். பேசிக் கொண்டேயிருந்தார். மனித இனம் போரில் மாண்டுகொண்டிருப்பது பற்றிப் பெரும் துக்கத்துடன் பேசினார். இடையில் டாய்லெட் போக வேண்டுமென்றார். எழுந்து நடக்க வெகுவாக சிரமப்பட்டார். டாய்லெட்டில் அவரால் உட்காரக்கூட முடியவில்லை. தாளமுடியாத அவஸ்தை. கழிவிரக்க வசப்பட்டவராக, ‘கடவுளே, என்னை சீக்கிரம் அழைத்துக்கொள்’ என்று வாய் விட்டுக் கதறி அழுதார். திரும்ப வந்து படுக்கையில் படுத்துக் கொண்டதும் குளிர் அவரை மிகவும் உலுக்கியது. “குளிருது, ரொம்பக் குளிருது” என்றவர் “சிதையில் போய் படுத்துக் கொண்டால்தான் இந்தக் குளிர் அடங்கும்” என்றார்.
மறுநாள் காலை , பிளாஸ்கில் காப்பியோடு போனபோது அவர் உறங்கிக் கொண்டிருப்பதாக நினைத்தேன். ஆனால் அவர் இறந்து விட்டிருந்தார். அவர் ஜிப்பா பாக்கெட்டில் சிகரெட் பாக்கெட்டும் சிறு பொட்டலமும் உபயோகிக்கப்படாமல் அப்படியே இருந்தன. என் குற்றவுணர்வுகளில் ஒன்றாக அந்தப் பொட்டலம் இன்னமும் நினைவில் இருந்துகொண்டிருக்கிறது.
* ஜி. நாகராஜனின்
‘நாளை மற்றொரு நாளே’ நாவலின் ஆங்கில மொழிபெயர்ப்பான
‘Tomorrow One more Day’ நூல் வெளியீட்டில், சி.மோகன் பேசியது.
பென்குயின் பதிப்பகம் இந்நூலை வெளியிட்டுள்ளது.
***
நன்றி: குமுதம் தீராநதி/ அக்டோபர்-2010
தட்டச்சும்-வடிவமும்: கநாசு.தாஜ்
7:38 PM 10/10/10
***
நன்றி : தீராநதி, சி.மோகன், கநாசு.தாஜ்
***
மேலும் பார்க்க : பொன்மொழிகள் – ஜி. நாகராஜன்