பாவம் மிஸ்கீன் அலி ஷாஹ்! – ஜீலானி பானுவின் நாவலிலிருந்து…

உருது எழுத்தாளர் ஜிலானி பானுவின் ‘கவிதாலயம்’ (Aiwan-E-Gazal) நாவலிலிருந்து கொஞ்சம் கிண்டலைக் கிண்டித் தருகிறேன். காலத்தைப் புதுமையாக இணைத்திருந்த குர்அதுல்ஐன் ஹைதரின் ‘அக்னி நதி’ (ஆக்-கா-தரியா) மாதிரி இவர் எழுத்து பிரமாண்டமாக இல்லை. ஆனால் இரண்டாம் அத்தியாயத்தின் இறுதியில் வரும் இந்தக் குத்தல் பிடித்திருந்தது (அதுதான் ரொம்ப பிடிக்குமே!). நாவலின் வேறு சில அத்தியாயங்களிலும் சின்னச் சின்ன வெடைகள் இருக்கின்றன. உதாரணமாக ஐந்தாம் அத்தியாயத்திலிருந்து ஒன்று – தன் சமூகத்தை விட்டுக்கொடுக்காமல்:

வடக்கிலிருந்து வந்த ஒரு கவிஞர் வாஹித் ஹூசனை சீண்டுவார் :அன்பரே! ஜாகீர்தாரர்களாக நீங்கள் ஹைதராபாத்தில் மூன்று வேலைகளைத்தான் செய்து கொண்டு இருக்கிறீர்கள் – பிரியாணி சாப்பிடுவது, மாளிகைகள் கட்டுவது; மனித குலத்தை விருத்தி செய்வது” கொதித்தெழுந்த வாஹித் ஹூசென் பதிலளிக்கிறார் இப்படி : “இல்லை; நாம் இன்னுமொரு வேலையும் செய்கிறோம்; வெளிவாயிலில் நின்று பிச்சை கேட்பவர்களுக்குப் பிச்சையும் போடுகிறோம்!”.

நேஷனல் புக் டிரஸ்ட்டுக்கும் PDF சுட்டி கொடுக்கப்போகிற சென்ஷி சாருக்கும் நன்றி சொல்லுங்கள். இல்லையேல் ஏதாவதொரு தர்ஹாவில் உங்களை கட்டிவைத்துவிடுவேன், என் சங்கிலியை அவிழ்த்து! – ஆபிதீன்

***

JEELANI_BHANU_897471f

கவிதாலயம் – ஜீலானி பானு

தமிழாக்கம் : முக்தார்

… …. ….

அல்ஹாஜ் மிஸ்கீன் அலி ஷாஹ்வின் கரங்களில் அபூர்வ சக்தி இருப்பதாக எல்லாருமே எண்ணினார்கள். ஆனால் ஏனோ இப்போது அந்தச் சக்தியின் சிறப்பு குறைந்துகொண்டே போய்விட்டது. (ஹஜ்ரத் ரஹ்மாத் ஷா) தர்காவிலிருந்து மக்கள் வெறுங்கையுடன் திரும்பிக் கொண்டிருந்தார்கள். மிஸ்கீன் அலிஷாஹ் தோதா சஷ்மியும் இதையே சிந்தித்துக் குழப்பத்தில் ஆழ்ந்திருந்தார். இந்தப் பழக்க வழக்கங்களில் சாயும் தூண்களை எப்படி நிலை நிறுத்துவது? நான்கு திக்குகளிலும் சம்பிரதாயங்கள், பல நடை முறைகளில் அமைப்புகள் கலைந்த வண்ணம் இருக்கின்றன.

இன்று நிலை யாதெனில் தனது நான்கு மனைவிகளை அவர்களுடைய பதினெட்டுக் குழந்தைகளுடன் ‘அலீப் லைலா’வில் அடைத்துவிட்டார். கண்களை மூடியவாறு, மாரடைப்புகளுக்குத் தாக்குப் பிடித்துத் தர்காவின் ஓர் அறையில் காலம் கழித்தார். தர்காவும் அலீப் லைலாவின் வட்டத்திற்குள்தான் இருந்தது. உலகின் கேளிக்கைகளிலிருந்து தர்காவைத் தனிப்படுத்துவதற்காக அரசாங்கம் அளித்த பூமியில் மிஸ்கீன் அலி ஷாஹ்வின் பாட்டனார் பிரம்மாண்டமான மாளிகை ஒன்றைக் கட்டி முடித்து, அதற்கு ‘அலீப் லைலா’ என்று பெயரும் சூட்டிவிட்டார். தனது சந்ததியினர் தர்காவை எல்லா ஆபத்துகளிலிருந்தும் காப்பாற்றுவதற்காக இதே மாளிகையில் வசிக்க வேண்டும் என்று அவர் விரும்பினார். ஒருமுறை ஒரு பெரியார் மிஸ்கீன் அலி ஷாஹ்வின் பாட்டனாரை ஒரு குடிசையில் சந்தித்தாராம். அப்போது “போ. உனக்காக அலீப்லைலா கதையில் வரும் மாளிகையைப் போன்றதொரு சிறந்த கட்டிடத்தை உண்டாக்கி விடுவோம்” என்று மொழிந்தாராம். எனவே தனது மாளிகையின் பெயரை ’அலீப்லைலா’ என்றே வைத்துவிட்டதாகச் சொல்கிறார்கள்.

இப்போது மிஸ்கீன் அலி ஷாஹ் தோதா சஷ்மி தர்காவிலேயே கிடந்தார். நகரில் என்ன நடந்தாலும் – உறவினர் வீட்டுத் திருமணம், மரணம் எதுவாக இருப்பினும் – அவர் வெளியே செல்வதில்லை.

இந்தத் தர்காவைப் பற்றிய நிகழ்ச்சி ஒன்றை எல்லாரும் அறிவார்கள். ரஹ்மத் அலிஷாஹ் ஒருமுறை மிஸ்கீன் அலி ஷாஹ்வின் பாட்டனாருடைய கனவில் தோன்றி, ‘நான் குறிப்பிடும் இடத்தில் எனது கல்லறையைத் தோண்டி, அங்கு தர்கா கட்டினால் உனது சந்ததியினர் பசி, பிணியிலிருந்து நிரந்தரமாக விடுதலை பெறுவார்கள்’ என்றாராம். எனவே அந்தத் தர்காவில் வேண்டுதல்கள் செய்ய பெரிய பெரிய மனிதர்களும் வந்து தலை குனிகிறார்கள்.

யாரேனும், மிஸ்கீன் அலிஷாஹ்விடம், வெளியே செல்லாததற்கான காரணத்தைக் கேட்டால், அவர் தனது கைகளை உயர்த்தி ‘எனக்குக் கிடைக்கும் ஆணைப்படி நடந்து கொள்கிறேன்’ என்பார். இதனால்தான் வழக்குரைஞர்களும் தரகர்களும் சாதிக்க முடியாத காரியங்களை மிஸ்கீன் அலி ஷாஹ்வின் தாயத்துகளும் மந்திரங்களும் செய்துவிடுகின்றன என்று எல்லாரும் சொல்லிக் கொள்கிறார்கள்.

அலீப்லைலாவின் பகட்டு ஆராவரத்தைப் பற்றியும் பல கருத்துகள் இருந்தன. ரஹ்மத் அலிஷாஹ் ஒவ்வொரு இரவும் மிஸ்கீன் அலிஷாஹ்வின் தலையணை அருகில் ஆயிரம் ரூபாய் கொண்ட பையை வைத்துவிடுகிறார் என்று மக்கள் பேசிக் கொண்டார்கள். மிஸ்கீன் அலிஷாஹ் ‘ஜின்’ எனும் ஆவிகளுக்குப் பாடம் சொல்லித் தருவதால் அவர்கள் ஒரு மூட்டை நிலக்கரியை அவருக்குக் கொடுக்கிறார்கள். அது காலையில் தங்கமாக மாறி விடுகிறது என்று சிலர் நினைத்தார்கள். ஆனால் இந்தக் கூற்றுகளை எவராலும் மறுக்க முடியவில்லை. ஏனெனில் அலீப்லைலாவின் பெண்களும் ஆண்களும் செய்த ஆடம்பரமும் பகட்டும் பெரிய பண்ணையார் வீட்டினரும் செய்யவில்லை.

இதனால் மிஸ்கீன் அலிஷாஹ் தோதா சஷ்மியின் அருட்செயல்கள் பெண்கள் மத்தியில் பிரபலமாகி இருந்தன. உயர்குடி மக்களும் ஏழைகள் வட்டாரமும் தனித்தனியாக இருப்பதுபோல், தர்காக்களும் ஆலயங்களும் வேறுபட்டு நிற்கின்றன.

ரஹ்மத் அலி ஷாஹ்வுடைய கல்லறையின் தங்கத்தாலான பின்னல் தடுப்பு, முத்துக்களால் செய்யப்பட்ட நிழற்குடை, மாளிகையின் ஒவ்வொரு செங்கல் எல்லாமே ஆஸிபியா அரசாட்சியை நிறுவிய அந்த வல்லாளர்களின் காணிக்கையாகும். அதனால் உயர்குடி பேகம்கள் அனைவரும் இங்கு வந்து தலை வணங்கினார்கள். தங்கள் சக்களத்தியரின் மரண ஓலையையும் இங்கு பெற்றுத் திரும்பினார்கள்.

பெரிய பெரிய நிலக்கிழார்கள் இங்கு வந்தார்கள். தங்கள் எதிரிகளின் தோல்விச் செய்தியைப் பெற்றுச் சென்றார்கள். இங்கு மங்கையரின் மடிகளும், ஆடவர்களின் கருவூலங்களும் நிரம்பினர். ‘உரூஸ்’ என்ற சந்தனக்க்கூடு நடக்கும் நாளில் ஆயிரம் ஏழைகளுக்கு அன்னதானம் செய்யப்பட்டது.

மிஸ்கீன் அலிஷாஹ் பணிவான நடையில் கூறுவார்: “இந்த ஏழை தனக்காகவே ஒவ்வொரு தானிய மணிக்கும் ஏங்குகிறான். இத்தனை மக்களுக்கும் உணவு வழங்கும் திறன் அடியேனுக்கு ஏது? எல்லாம் பெரியவரின் அருள்; அன்னாருடைய அன்புச் செயலே!’

மிஸ்கீன் அலிஷாஹ்வின் வெண்மையான முகம், சாயம் பூசப்பட்ட கருந்தாடி கொண்டு தலைமுடிகளுக்கு இடையே மதியைப்போல் பிரகாசித்தது. சரிகை போட்ட கறுப்பு மேல் அங்கியை அவர் அணிந்து தலையில் கைக்குட்டையைக் கட்டி, கையில் தொழுகை மணிமாலையை எடுத்து, தனது செந்நிறமான பெரிய பெரிய கண்களைச் சற்றே விரித்து ஏதேனுமொரு மங்கையை ஆசீர்வதிக்கும்போது நான்கு புறங்களிலும் விசித்திரமான ஒளி பரவி விடுகிறது. வானுலகத்தினர் தங்கள் நீலநிற ஆடைகளில், பட்டு இறக்கைகளுடன் சுற்றி வருகின்றனர். வானவில்லின் பாதை மிஸ்கீன் அலிஷாஹ்வின் கால்களிலிருந்து ஏழாவது வானம்வரை ஒளிர்ந்து மின்னுகிறது!

பிறகு அவள் தன்னை மறந்துவிடுவாள். பாவங்கள் பதிந்த உடல் சிதறி விடுகிறது. நிர்வாணமான ஆன்மா மிக்க நாணத்துடன் மிஸ்கீன் அலிஷாஹ்வினுள் இணைந்து விடவே விருப்பம் கொள்ளும்.

பெண்களின் அளவிலா பக்தியே மிஸ்கீன் அலிஷாஹ்வைக் கலவரப்படுத்தியது. முராத் அலியின் வாலிபமான பெண்ணுக்குப் பைத்தியமே பிடித்துவிட்டது என்கிறார்கள். இரவுகளில் எழுந்து மிஸ்கீன் அலி ஷாஹ்வுக்கு அவள் குரல் கொடுத்தாள். அவளை வெகு நாளாக வருத்திய நோயைக் கண்ட முராத் அலி ஒருநாள் தனது மகளை அழைத்து வந்து மிஸ்கீன் அலிஷாஹ்வின் காலடியில் கிடத்தினார்.

ஓர் அந்நிய வாலிபமான மங்கையைத் தனது அறையில் எப்படி வைத்திருப்பது என்று மிஸ்கீன் அலிஷாஹ் குழம்பினார். பிறகு அவருடைய தாராள மனப்பான்மை உதவியது. வேறு வழியின்றி அந்தப் பெண்ணை அவர் நிக்காஹ் செய்து கொண்டார்.

அலீப்லைலாவின் ஓர் அறை அவருக்காக ஒதுக்கப்பட்டது. பிறகு என்ன? மிஸ்கீன் அலி ஷாஹ்வின் இந்த அன்புச் செயலின் புகழ் பரவி விட்டது. எல்லாப் பண்ணையார்களின் பேகம்களுக்கும் ஒரு வழி தென்பட்டு விட்டது.

இந்த இள மங்கையரும் வாலிப எழுச்சியின் மயக்கத்தில் மிஸ்கீன் அலி ஷாஹ்வின் முகத்தைப் பார்த்ததுமே ‘புறா’க்களாகத் துடித்தார்கள். அதனால் ‘அலீப் லைலா’வின் எல்லைக்குள் புதிய புதிய அறைகள் தோன்றின. பாவம் மிஸ்கீன் அலி ஷாஹ்! வேறு வழியின்றி நன்றியுள்ள பழைய மனைவியருக்கு விவாகரத்து வழங்கினார். ஏனென்றால் இறைவன் ஒரு சமயத்தில் நான்கு மனைவியரை விட அதிகமாக வைத்துக் கொள்வதை தடை செய்து விட்டானே!

ஆனால் ‘குற்ற மீட்பின்’ தேடுதலில் அலையும் இந்த ஆன்மாக்கள் அந்த அறைகளிலும், வலையில் சிக்கிய மீன்களைப் போல் தடுமாற்றம் கண்டன. சுவர்களுடன் தலைகள் மோதிக் கொண்டன; ஆனால் மிஸ்கீன் அலி ஷாஹ்வின் முகத்தைக் கண்டதும் மயக்கத்தில் ஆழ்ந்து விடுகின்றன.

மிஸ்கீன் அலி ஷாஹ்விடம் நிறைய வைரங்கள் இருக்கின்றன. ஒவ்வொரு பெண்ணும் வைரத்தை விழுங்கி விட்டுச் செத்துவிடுகிறாள் என்று மக்கள் சொல்கிறார்கள்.

…… …… ……

மிஸ்கீன் அலி ஷாஹ் தனது மகனான ஹூமாயூன் அலிஷாஹ்வுக்காகப் பதூல் பேகத்தைக் கேட்டபோது, கவிதாலயத்தில் தீபங்கள் ஒளி சிந்தின.

இப்போது பதூல் பேகம் பிறந்தகத்திற்கு வரும்போதெல்லாம் இரண்டு காவலர்களும் ஒரு வேலைக்காரியும் அவருடன் வந்தனர். தாய்வீடு தவிர வேறெங்கும் போவதற்கு அவருக்கு அனுமதி இல்லை; மக்கள் ஆன்ம குருக்களைத் தேடித்தான் வரவேண்டுமே தவிர அவர்கள் தங்களுடைய படிக்கட்டுகளைத் தாண்டக்கூடாது! தாய்வீடு செல்லவேண்டுமென்றால் ஒரு மனுவை பதூல் பேகம். மிஸ்கீன் அலி ஷாஹ்வின் அவையில் சமர்ப்பிக்க வேண்டும்; அப்போதுதான் அது பரிசீலிக்கப்பட்டு ஆணைகள் பிறப்பிக்கப்படும். இதற்கான அவசியம் ஏற்படுவதற்கு ஒரு காரணமும் இருந்தது. மிஸ்கீன் அலி ஷாஹ்வின் பல மனைவியர் தங்கள் தாய்வீடுகளுக்குச் செல்வதாகச் சொல்லி தப்பியோடிவிட்டார்கள்! இதனால் பல நாட்கள் அரசாங்க அலுவலங்களின் ஏடுகளில் அதைப் பதிவு செய்வதில் செலவழிந்தன. அலீப் லைலாவில் ஒவ்வொரு விஷயத்திற்கும் நேரம் குறிக்கப்பட்டிருந்தது.

இது பக்கிரியின் குடில் அல்லவா. இங்கு இறைவனின் விருப்பப்படியே ஒவ்வொரு அடியும் எடுத்து வைக்க வேண்டும் என்பார் மிஸ்கீன் அலி ஷாஹ். தன்னிசையாகச் செயல் படுவதற்கு இது ஒரு நிலக்கிழாரின் மாளிகை அல்லவே!

பதூல் பேகமும் ஹூமாயூன் அலி ஷாஹ்வும் வாஹித் ஹூசைனின் வீட்டிற்கு வரும்போது, பல நாட்களுக்கு முன்பே கடிதப் பரிமாற்றம் நடைபெறும். குறிப்பிட்ட நேரத்தில் ஹூமாயும் அலி ஷாஹ் தென்படுவார். சரிகைத் தலைப்பாகையுடன் நறுமணம் வீச, பளபளக்கும் வைர மோதிரம் அணிந்த கைகளால் முகத்தை கைக்குட்டையால் துடைத்தவாறு காரிலிருந்து இறங்கி வருவார். அந்தக் காரில் ‘அலீப் லைலா’ பெயர்ப் பலையும் பளிச்சிடும். அவர்களுடன் வரும் பழங்கள், இனிப்புகள் மீதும் அலீப் லைலாவின் பெயர் குறித்த சீட்டு இருக்கும். இவை எல்லாம் தர்காவின் பொருள்களே. ஏனென்றால் இது பெரியார் ரஹ்மத் அலி ஷாவின் கொடை, இதில் என்னுடையது எதுவும் இல்லை என்று பணிவுடன் மிஸ்கீன் அலி ஷாஹ் கூறுவார்.

பதூல் பேகத்தின் திருமணம் முடிந்து இது ஐந்தாவது ஆண்டு ஆகும். இப்போது அவள் மிஸ்கீன் அலி ஷாஹ்வுக்காக மூன்றாவது வாரிசை உருவாக்கிக் கொண்டிருக்கிறாள்.

***

நன்றி : ஜீலானி பானு ,  முக்தார் , நேஷனல் புக் டிரஸ்ட் , சென்ஷி