வரலாற்றின் வெளிச்சத்தில் ஔரங்கஜேப் – செ.திவான் முன்னுரை

முதலில் அனைவருக்கும் இனிய ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துகள் !

வரலாற்றின் வெளிச்சத்தில் ஒளரங்கஜேப்… தனிப்பட்டவரின் வரலாற்று ஆய்வு மட்டுமல்ல. அகண்ட வரலாறு. பாரதத்தின் ஐம்பதாண்டுகால சமூக படித்துப்பாருங்கள்; அதிசயித்துப் போவீர்கள் என்று சொல்லி வெளியிட்ட விகடன் பிரசுரத்தாருக்கு நன்றி (அப்படியே ‘ஏடகம்’ pdf சகோதரர்களுக்கும்!) சொல்லிப் பகிர்கிறேன்.- AB

*

எண்ண அலைகள் – செ.திவான்

‘ஒளரங்க’ என்ற சொல்லுக்கு ‘அரசு சிம்மாசனம்’ என்றும், ‘ஜேப்’ என்ற சொல்லுக்கு ‘அழகு’ என்றும் பொருள். இந்த இரு பாரசீகச் சொற்களுக்கும் ‘அழகிய அரசு சிம்மாசனம்’ என்று பொருள்*. ஆனால், ‘ஒளரங்கஜேப்’ என்று அழைப்பதற்குப் பதிலாக ‘ஒளரங்கஜீப்’ என்றே பலரும் கூறி வருகின்றனர். பள்ளிக்கூடங்களிலும் கலாசாலைகளிலும் அப்படியே சொல்லிக்கொடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு ஒளரங்கஜேப்பின் பெயரையே மாற்றி அழைத்தவர்கள், அவரது வரலாற்றை எப்படி எப்படியெல்லாமோ மாற்றியும் திரித்தும் இருக்கிறார்கள்.

தந்திரங்களும் சூழ்ச்சிகளும் நிறைந்த இந்தப் பூமியில், தெரிந்தவற்றையும் மக்கள் மறந்துபோய்விடுகின்றனர். தெரியாமலேயே போகுமாறு பல உண்மைகள் இங்குச் சிதைக்கப்பட்டு இருக்கின்றன. எனவே, எல்லாவற்றையும், எல்லாக் காலத்திலும், பல வடிவங்களில், பல தளங்களில் மீண்டும் மீண்டும் சொல்ல வேண்டியிருக்கிறது.*

ஒளரங்கஜேப்பின் உண்மை வரலாற்றை எழுதத் துவங்கிடும் வேளையில், ‘மரங்களை எழுத்தாணியாகவும் கடல் நீரை மையாகவும், வானத்தை ஏடாகவும் கொண்டு எழுதினாலும் தனது ஆசிரியரின் பெருமையை எழுதி முடித்திட இயலாது’ என்று தெலுங்குக் கவிஞர் வேங்கண்ணா , தனது குருவைப் பற்றி எழுதிய வைர வரிகள் எனது நினைவுக்கு வந்தது. மாமன்னர் ஒளரங்கஜேப் மீது சுமத்தப்பட்டுவரும் குற்றச்சாட்டுகள் அனைத்தும் உண்மைக்கு மாறானவை என்பதை, சரித்திரப்பூர்வமான ஆதாரங்களுடன் இறைவனின் கருணையோடு உங்கள் முன் வைக்கிறேன்.

முஸ்லிம் மன்னர்கள் மீது மாபெரும் பழி!

இந்தியாவை ஆண்ட முஸ்லிம் மன்னர்கள் ஆட்சியில், ‘ஹிந்து கோயில்களை இடித்தார்கள். பள்ளிவாசல்களைக் கட்டினார்கள்’ என்று திரும்பத் திரும்பச் சொல்லிக்கொடுக்கப்பட்டு நாள்தோறும் நச்சு விதையை, மதத் துவேஷத்தை வளர்த்துவரும் இந்த வேளையில், ‘இந்திய நாட்டு முஸ்லிம் மன்னர்கள், பிற சமயங்கள்பால் வெறுப்புக் கொண்டதில்லை; குடிமக்களை அச்சுறுத்தி கட்டாயமாக மதமாற்றம் செய்ததில்லை என்றும் சொல்லும்போது, இந்த உண்மைகளுக்கு மாறான உதிரி நிகழ்ச்சிகள் அங்கொன்றும் இங்கொன்றுமாக நடந்திருக்கக்கூடும் என்பதை மறுப்பதற்கில்லை’* என்றாலும், முஸ்லிம் மன்னர்கள் ஆட்சியில் அப்படித் தவறுகளே நடந்திடவில்லையென்று சொல்லிடும் தற்குறியல்ல நான். ஆனால், வரலாற்று உண்மைகளை மறைத்திடும்போது, மறைத்திட முயலும்போது, திட்டமிட்டே மறைந்து வருகிறபோது, அதுகுறித்த உண்மைகளை வரலாற்றின் வெளிச்சத்துக்கு கொண்டுவர வேண்டிய அவசியம் ஏற்படுகிறது.

ஒளரங்கஜேப் மசூதி அருகே விஷ்ணு ஆலயம் |

தமிழ்நாட்டில், ஆற்காட்டில் முஸ்லிம் ஆட்சி. திருவலம் ஆலயம், வள்ளிமலை, திருத்தணி, காஞ்சிபுரம் அனைத்துமே ஆற்காட்டுக்கு அருகில்தான் உள்ளன. மதுரையிலே முஸ்லிம் ஆட்சி, அங்குதான் மீனாட்சியம்மன் கோயில் இருக்கிறது; திருச்சியிலே முஸ்லிம் ஆட்சி, அங்குதான் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் ஆலயம் இருக்கிறது**. காசியில் ஒளரங்கஜேப் மசூதிக்கு வட பக்கம் 50 அடி தூரத்தில் பிந்துமாதவர் விஷ்ணு சந்நிதி ஆலயம் இருக்கிறது***. இப்படி சொல்லிக்கொண்டே செல்லலாம். இவை எல்லாம் இன்றும் நம்முன் கம்பீரமாக இருப்பதை எவர் மறைத்திட முடியும்? முஸ்லிம் மன்னர்கள், ஹிந்து ஆலயங்களை எல்லாம் இடித்துத் தகர்த்தார்கள் என்று சொல்பவர்கள் இதற்கு என்ன விளக்கம் தருவார்கள்? இடிக்கப்பட்ட பள்ளிவாசல்கள் தமிழ்நாட்டில் சென்னை ஆவடி பட்டாபிராம், அண்ணாநகர் பள்ளிவாசல், 14.3.1985 வியாழக்கிழமை அன்று இடிக்கப்பட்டது.* *** அ.இ.அ.தி.மு.க. ஆட்சியில் ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது, ‘தாம்பரம் குரோம்பேட்டைப் பகுதியில் சானடோரியத்தில் 47 ஆண்டுகளாக இருந்து வந்த ஸ்ரீராம ஆஞ்சநேயர் திருக்கோயில் எந்த முன்னறிவிப்புமின்றி இடிக்கப்பட்டது. அதன் அருகிலிருந்த முஸ்லிம்கள் தொழுகை நடத்தும் பள்ளிவாசலும் போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த காரணத்தால் இடிக்கப்பட்டது** ***. 16.3.1994 அன்று ஆயுதம் தாங்கிய போலீசார் புல்டோசர் கொண்டு இவற்றை இடித்துத் தரைமட்டமாக்கினார்கள். ஜெயலலிதா ஆட்சியின்போது ஆஞ்சநேயர் கோயிலும், பள்ளிவாசலும் இடிக்கப்பட்டது மதக்காரணங்களினாலா? இல்லையே!

பஞ்சாப் அமிர்தசரஸ் பொற்கோயிலில் ஜார் நைல்சிங் பிந்தரன்வாலேயின் தீவிரவாதத்துக்கு எதிராக பாரதத்தின் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி 1984 ஜூன் 15-ல் எடுத்த, ‘நீல நட்சத்திர நடவடிக்கை ‘ (Operation Blue Star) ** இந்திரா காந்தி, சீக்கியர்கள் மீது கொண்ட குரோதத்தால் எடுத்த நடவடிக்கை என்று யாராவது கூற முடியுமா?

இவைபோலவே, மாமன்னர் ஒளரங்கஜேப் ஆட்சியிலும் சம்பவங்கள் சில நடைபெற்றுள்ளன. ஆனால், அன்றைய காலகட்டத்தில், இந்தியாவில் மட்டுமல்லாது உலகமெங்கும் கோயில்களும் மடங்களும், மத்திய காலத்தில் அந்தஸ்தும் கெளரவமும் பெற்ற அரசியல் அதிகார சூட்சமத்தின் மையமாகக் கருதப்பட்டன என்ற வரலாற்று உண்மையையும் நாம் மறந்துவிட முடியாது.*** தர்மதாஸின் புதல்வரான லாகூர், இந்துக் கவிஞர் சந்திரபான் பிராமின் வேதங்களிலும் உபநிடதங்களிலும் பாரசீக மொழியிலும் நல்ல புலமைப் பெற்ற தெய்வபக்தி உள்ளவர். ‘இவருடைய கொள்கைகளுக்குக் காரணம் இவருடைய ஹிந்து சமயமே!’ என்பதை உணர்ந்த ஒளரங்கஜேப், தம்முடைய தர்பாரில் இவரைப் பாராட்டியும் பேசியுள்ளார்.* * * *

ஒளரங்கஜேப்பின் உலக வாழ்வுக்குப் பின்னரும் செய்நன்றி மறவாது வீரசிவாஜியின் மகன் ஸாஹு, ஒளரங்கஜேப்பின் அடக்க இடத்துக்குச் சென்று மரியாதை செலுத்தி வந்ததை வரலாற்றில் காண முடிகிறது. இவை போன்ற பல்வேறு உண்மைகளை ‘வரலாற்றின் வெளிச்சத்தில் ஒளரங்கஜேப் நூலில் காண இருக்கிறீர்கள்.

கி.பி.8-ம் நூற்றாண்டு முதல் இந்தியாவின் மீது பல்வேறு இஸ்லாமிய வம்சத்தினரின் ஆக்ரமிப்புகள், ஹிந்து – முஸ்லிம் மக்கள் இணைந்து நின்றே வெள்ளையரை எதிர்த்தனர். 1857-ல் நடைபெற்ற படைவீரர்களின் புரட்சியில் மன்னர் பஹதூர்ஷா ஜஃபரையேத் தலைவராக ஹிந்து – முஸ்லிம் என்ற இருசாராரும் தேர்ந்தெடுத்தனர்.

ஹிந்து – முஸ்லிம் உறவை ‘வாள்’ கொண்டு பிரிக்க முடியவில்லை . எனவே, வெள்ளையர் ‘தாள்’ தூக்கினர். ரத்தக்கறையை நச்சுக்கறையாக மாற்றி, வரலாறுகளை எழுதத் துவங்கினர். அவர்களின் அடிவருடிகளையும் அவ்வாறே எழுதிடப் பணித்தனர்.

“பிரித்தாளும் சூழ்ச்சிக்கொண்ட வெள்ளையர்கள், இந்திய வரலாற்றைக் காலப் பாகுபாடு செய்யும்போது, ‘இந்து இந்தியா’, ‘முஸ்லிம் இந்தியா’, ‘பிரிட்டிஷ் இந்தியா’ எனப் பகுத்தனர். எனவே, ‘இந்து இந்தியா’ படையெடுப்பால் ‘முஸ்லிம் இந்தியா’ வாக்கப்பட்டது என்பதும், வெள்ளையர் ஆட்சியில் இது நவீன வளர்ச்சிகளைப் பெற்றன என்பதும் இதன் மூலம் பொருளாகிறது.

வெள்ளையர் எழுதிய வரலாற்றுக்கு எதிராக இந்திய தேசியவாதிகள் வரலாறு எழுதுகிறபோது, பழம்பெருமையைத் தூக்கிப் பிடித்தனர். உணர்வுரீதியில் இந்திய தேசியத்தைக் கட்டமைக்க முயன்ற உயர் சாதி இந்துக்கள் பண்டைய ‘இந்து’ இந்தியாவை லட்சியமாக முன்வைத்தனர். இந்தச் செயற்பாடுதான் இஸ்லாமியர் பற்றிய பல்வேறுவிதமான வரலாற்றுப் பொய்களுக்குக் காரணமாகி உள்ளன.

பெரும்பாலும், உயர் சாதியினரே ஆதிக்கம் செலுத்தும் கல்வித் துறை, பத்திரிகை, தொலைக்காட்சி முதலியவற்றில் இந்த நிலை தொடர்கின்றன. இதனால் சாதாரண மக்கள் மத்தியிலும் முஸ்லிம்கள்  குறித்த, முஸ்லிம் மன்னர்களைப் பற்றியப் பொய்கள் ஆழமாகப் பதிந்துள்ளன. ஜனநாயக, இடதுசாரி சிந்தனையுடைய வரலாற்று ஆசிரியர்கள், இத்தகைய வரலாற்றுப் பொய்களைத் தோலுரிக்கும் முயற்சிகளையும் செய்தே வந்திருக்கின்றனர்”* என்பர் அ.மார்க்ஸ் .

ஆரியர் வருகை… முஸ்லிம் படையெடுப்பு!

சம்பவங்கள் ஒன்றாக இருந்தபோதிலும் சொல்பவரின் விருப்பு -வெறுப்புக்கு ஏற்ப அவற்றில் ஒருசில தேர்ந்தெடுக்கப்பட்டு, ஒரு குறிப்பிட்ட அரசியல் நோக்குடன் தொகுக்கப்படும்போது வெவ்வேறு வரலாறுகள் தோன்றிவிடுகின்றன.

இந்த நாட்டின் எல்லைக்குள் ஆரியர்களும் வந்தார்கள்; முஸ்லிம்களும் வந்தார்கள். இது, ஒரே மாதிரியான நிகழ்ச்சி. ஆனால், வரலாற்றுச் சம்பவங்களை வரைகிறபோது ‘ஆரியர் வருகை’ (குடிபெயர்ந்த து – Aryan immigration) என்றும், ‘முஸ்லிம் படையெடுப்பு’ (Arabs Invasion) என்றும் எழுதினர். அப்போதே பேதங்காட்டி வரலாற்றை எழுதத் துணிந்துவிட்டதற்கு இதுபோன்ற எண்ணற்ற சான்றுகளைக் காட்டிட முடியும்.

இவ்வாறு வரலாறு திரித்து எழுதப்பட்டும், பொய்யாக போதிக்கப்பட்டும் வருவதின் விளைவாகத் தொடரும் தீமைகளைத் துளியேனும் தடுத்து நிறுத்திட முயலும் எண்ணத்தில் பிறந்ததே இந்த நூல்.

ஸ்ரீநிவாஸ பிள்ளை

‘நான் தமிழ்ப் புலவன் அல்லேன். ஆயினும் தமிழின்பால் உள்ள மட்டற்ற அன்பு தூண்ட, தமிழ் அறிஞர்கள் பலரையும் அவ்வப்போது ஆராய்ச்சி செய்து வெளியிட்டு இருப்பவை நான் அறிந்த அளவையில் தொகுத்தும், எனது ஆராய்ச்சியின் பயனாக உள்ளவற்றைக் கூட்டியும் இந்தப் புத்தகத்தை எழுதுகிறேன்’ என்று தனது நூலின் முன்னுரையில் ஸ்ரீநிவாஸன் குறிப்பிடுவார்.*

அதுபோல நானும் வரலாற்று ஆசிரியன் அல்லன். ஆயினும், வரலாற்று ஆய்வு உணர்வில் ஆர்வமுற்று, ஒளரங்கஜேப் குறித்து வரலாற்று ஆசிரியர்கள் பலர் அவ்வப்போது வெளியிட்டுள்ள ஆராய்ச்சிக் குறிப்புகளின் அடிப்படையில், எனது ஆய்வின் பயனாக கிடைத்தவற்றைச் சேர்த்தும் இறைவனின் அருளால் எழுதப்பட்டதே இந்த நூல்.

சுந்தரவரதாசாரியார்

“சரித்திரத்தை உள்ளவாறு கற்க விரும்பும் ஒருவன், அது சம்பந்தமான பல புத்தகங்களையும் படித்து உண்மையைக் கற்பனைகளினின்றும் வேறுபடுத்தி அறிந்துகொள்ளல் வேண்டும். சரித்திர ஆசிரியரும் நடுநிலைமையுடன் விஷயங்களை எடுத்துதெழுதினால், சரித்திர அறிவு பெருகிப் பல நன்மைகளையும் எய்துதல் கூடும்”** என்ற கருத்தின் அடிப்படையில் பிறந்தது இந்த நூல்.

கதே

“இதுவரை யாரும் கூறாததைக் கூறுவதன்றே சிறப்பு என்று எண்ணற்க. இதற்குமுன் இதுவரை யாரும் கூறவில்லை என்று எண்ணுமாறு அதைக் கூறுவதும் சிறப்பேயாகும்”*** என்ற ஜெர்மன் நாடகாசிரியர் ‘கதே’யின் கருத்திற்கேற்ப உருவாக்கப்பட்டது இந்த நூல்.

காஜீ மஹ்மூத் தரம்பால்

மெளலானா மௌலவீ காஜீ மஹ்மூத் தரம்பால் எழுதிய ‘குப்ருதோ’ என்ற உருது நூலின் முன்னுரையில், ‘இந்தப் புத்தகம் இஸ்லாத்தின் தற்காப்பு நிமித்தமாகவே எழுதப்பட்டிருக்கிறது. எனவே, எதிர்மதவாதிகளை ஏசவேண்டும் என்பதும், அவர்களைத் தூஷணை செய்ய வேண்டும் என்பதும் இதன் கருத்தல்ல’ என்று குறிப்பிடுவார். அதுபோன்றே ஒளரங்கஜேப் குறித்த உண்மை விவரங்களை வரலாற்றின் வெளிச்சத்துக்கு கொண்டுவர வேண்டுமென்ற தற்காப்பின் நிமித்தமாக எழுதப்பட்டதே இந்த நூல். யாரையும் தாக்குவதற்காக எழுதப்பட்டதல்ல.

ஜோசப் கோயபல்ஸ்

சர்வாதிகாரி ஹிட்லரின் பிரசார மந்திரியும் ரைன் லாந்தைச் சேர்ந்தவருமான ஜோசப் கோயபல்ஸின், ‘ஒரு பொய்யை திரும்பத் திரும்பச் சொன்னால் அது மெய்யாகிவிடுகிறது’ என்ற தத்துவப்படி, இந்த நாட்டை ஆண்ட வெள்ளையர்கள் வரலாற்றை எழுதினர். தங்களின் தயவை எதிர்பார்க்கும் இந்திய வரலாற்று ஆசிரியர்களைக்கொண்டு வரலாற்றை எழுதப் பணித்தனர். அதில் வெற்றியும் கண்டனர்.

‘பிற மத சுதந்திரத்தைப் பாதுகாத்தலே மன்னராகிய தமது கடமை’ என வாழ்ந்த ஒளரங்கஜேப் மாமன்னரை, ‘ஹிந்துக்களின் பரம் விரோதி’ என எழுதிட வைத்தனர். இத்தகைய தவறான வரலாற்றுச் செய்திகளை ஆய்வு செய்து, உண்மையை உரைக்கிறது இந்த நூல்.

பிரேம்நாத் பஜாஜ்

“ஒளரங்கஜேப் முஸ்லிம் அல்லாதவர்களைத் துன்புறுத்தினார் என்றும், அவர்களுடைய மத நிறுவனங்களை அழித்தார் என்றும் பல ஹிந்து எழுத்தாளர்கள் கூறவது ஒருதலைப்பட்சமானது. அவர்கள், பேரரசின் மேன்மையைப் புறக்கணிக்கவும், அவருடைய தோல்வியை ஊதி விரிவடையவும் செய்தனர்” என்ற பிரேம்நாத் பஜாஜின் கூற்றை மெய்ப்பிக்கப் பிறந்தது இந்த நூல்.

ஆச்சாரியா பிரபுல்லா சந்திரபாய்

“இந்த நாளில், ஒளரங்கஜேப் கசப்பான முறையில் விமர்சிக்கப்படுகிறார். ஆங்கில வரலாற்று ஆசிரியர்கள், அவர்மீது ‘இந்துக்களின் பகைவர்’ எனும் முத்திரையைப் பதித்துவிட்டனர். ஆனால், அது உண்மைக்குப் புறம்பானது” (இல்லஸ்ட்ரேட் வீக்லி 5.10.1975) ஆச்சாரியா பிரபுல்லா சந்திரபாயின் இந்தக் கூற்றை உறுதிப்படுத்த உதயமானது இந்த நூல்.

ஒளரங்கஜேப், ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியபோது, அரசியல் காரணங்களுக்காக தனது தந்தை ஷாஜஹானை அரண்மனைக் காவலில் வைத்திருந்ததைப் பெரிதும் குறை கூறி வருகின்றனர்.

துவக்கம் முதல் முடிவு வரையில் ஷாஜஹானுக்கும் ஒளரங்கஜேப்புக்கும் இடையில் நிலவிய கருத்துவேறுபாடுகளை விளக்கி, அதற்குப் பிறகும் ஒளரங்கஜேப்பால் ஷாஜஹானுக்கு வழங்கப்பட்ட மரியாதைகள், வசதிகள் குறித்து ‘தந்தையைச் சிறையில் தள்ளியவரா?’ எனும் தலைப்பில் விளக்குகிறது இந்த நூல்.

‘ஒளரங்கஜேப், தனது அண்ணன் தாராஷக்கோ , சகோதரர்கள் ஷஜா, முராத்பசஷ் ஆகியோரைக் கொன்றுவிட்டு சக்கரவர்த்தியானார்’ என்பது, அவர் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டு. ஒளரங்கஜேப்பின் அண்ணனும், சகோதரர்களும் எவ்வாறு மடிந்தார்கள்? அதற்கு ஒளரங்கஜேப் பொறுப்பாளியா… இல்லையா? பின் அவர்களது மரணம் எவ்வாறுதான் நிகழ்ந்தது? இவற்றை, ‘சகோதரர்களைக் கொன்றுவிட்டுச் சக்கரவர்த்தியா?’ எனும் தலைப்பில் விளக்குகிறது இந்த நூல்.

வீரசிவாஜி

ஒளரங்கஜேப் தனது ஆட்சியில் ‘ஜிசியா’ வரி விதித்து இந்துக்களைத் துன்புறுத்தியதாகச் சொல்லப்பட்டுவரும் விஷயங்களை, ‘ஜிசியா வரியால் இந்துக்களைத் துன்புறுத்தியவரா?’ எனும் தலைப்பில் ஆய்வு செய்து அதுகுறித்த உண்மை விவரங்களைத் தருகிறது இந்த நூல்.

ஒளரங்கஜேப்பின் ஆட்சியில், தம்மிடம் பணிபுரிந்த இதர மதத்தினரை, குறிப்பாக இந்துக்களை அரசாங்கத்தின் வேலைகளிலிருந்து விலக்கியதாகச் சொல்லப்பட்டுவரும் கருத்தின் உண்மை நிலை குறித்து, ‘இந்துக்களை வேலைநீக்கம் செய்தவரா?’ எனும் தலைப்பில் தருகிறது இந்த நூல்.

‘மராட்டிய வீரசிவாஜியை, ‘அப்ஸல்கான்’ என்ற தனது படைத்தளபதியை அனுப்பி அழிக்க முயன்றவர் ஒளரங்கஜேப்’ என்ற குற்றச்சாட்டை விரிவாக ஆராய்ந்து, நடைபெற்ற வரலாற்றுச் செய்திகளை ‘அப்ஸல்கானை அனுப்பி சிவாஜியை அழிக்க முயன்றவரா?’ எனும் தலைப்பில் விவரிக்கிறது இந்த நூல்.

குற்றச்சாட்டுகளும் பதில்களும்!

ஒளரங்கஜேப்பின் மீது சுமத்தப்படுகின்ற பல்வேறு குற்றச்சாட்டுகளை ஆராய்ந்து, ஒளரங்கஜேப், ‘இராஜபுத்திரர்களின் விரோதியா?’, ‘சீக்கியர்களின் விரோதியா?’, ‘இசைக் கலைஞர்களை இம்சித்தவரா?’, ‘செருப்புக்கு சிறப்புச் செய்திடச் சொன்னவரா?’, ‘இந்துக்களை இம்சித்தவரா?’, ‘மதவெறியரா?’ ஆகிய தலைப்புகளில் விளக்கம் தருகிறது இந்த நூல்.

இந்து-முஸ்லிம்-கிறிஸ்துவ ஒற்றுமை வளர வேண்டும் என்றும், அதனைத் தடுத்திட முயலும் தீயசக்திகளின் நாச நர்த்தனங்களை நாட்டுக்குப் படம்பிடித்துக் காட்டிட வேண்டும் என்ற அவாவிலும் பிறந்தது இந்த நூல்.

செ.திவான்
18-07-2013
ரெகான் சுலைமான் இல்லம்,
பாளையங்கோட்டை,

*

அடிக்குறிப்புகள் :

* வேலூர் மௌலானா அப்துல்பாரி அவர்கள், ஆசிரியருக்கு 8.3.1995-ல் எழுதிய கடிதம்.
* * *வீர சுதந்திரம் வேண்டி’ நூல் முன்னுரையில், சாத்தூர், 1997. * மு.அப்துல் கறீம், இஸ்லாமும் சமய நல்லிணக்கமும், திண்டுக்கல், 1996, பக்.149.
* * கா.மு.ஷெரீப், இஸ்லாம், இந்து மதத்துக்கு விரோதமானதா?, சென்னை 1989, பக்.65-66.
*** கே.எஸ்.முத்தையா, நமது புண்ணியபூமி அல்லது காசி, சென்னை . 1917, பக்.47-48.
**** மறுமலர்ச்சி , திருச்சி, 22.03.85, 29.03.85 இதழ்கள்.
** *** தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை நடவடிக்கைகள் செயலக வெளியீடு, 1994, தொகுதி 60, எண் 3, பக். 696-699.
*அல்ஷரீஅத்துல் இஸ்லாமியா, ஏப்ரல் 1994, பக்.32-37; ஆனந்த விகடன் 27-03-94. | +1+ The Best of India Today 1995 – 1990, P.134-136, மனோரமா இயர் புக் 1991, பக்.506.
*** டி.ஞானையா, மதவாத அரசியல் இந்தியாவின் எதிர்காலம், சென்னை , 1993, பக்.20,
**** கலைக்களஞ்சியம், இணைப்புத் தொகுதி 10, சென்னை , 1948, பக்.237-238. *அ.மார்க்ஸ், இஸ்லாமியருக்கு எதிரான கட்டுக்கதைகள், புதுவை, 1994, பக்.17-18.
* K.S. ஸ்ரீநிவாஸ பிள்ளை , தமிழ் வரலாறு, பிற்பாகம் – முற்பகுதி. கும்பகோணம், 1924, முன்னுரையில்.
* M.K. சுந்தரவரதாசாரியார், ‘சரித்திரக் கல்வி’ கட்டுரையில், மா.இராசமாணிக்கம், பா.பக்கிரி சுவாமி தொகுப்பு, செந்தமிழ்ச் செல்வம், இரண்டாம் புதையல், 1931, பக்.130.
**** பொ. திருகூடசுந்தரம், அறிவுக்கனிகள், சென்னை , 1952, பக்.165.

*

 

*

தொடர்புடைய பதிவுகள் :

SDPI விருதுகள் 2018 | கவிக்கோ விருது | செ. திவான்

இந்திய சுதந்திர போரில் மத்ரஸாக்கள், மௌலவிகள் – செ. திவான்