TENET – சென்ஷியின் சிறு விமர்சனம்

’படம் எப்படி?’ என்று தம்பி சிவா ஃபேஸ்புக்கில் கேட்டதற்கு ‘புரியலே, ஆனா நல்லா இருந்தது!’ என்று நேர்மையாக பதில் சொல்லியிருந்தேன். அமர்க்களம்.. அமர்க்களம்.. என்று சொல்லியபடி கைதட்டிக்கொண்டே தூங்கிக்கொண்டிருந்த சென்ஷியின் குறிப்பு பிடித்திருக்கிறது. பகிர்கிறேன். – AB

*

TENET – சென்ஷி

மிக எளிமையான நாயக மனப்பான்மை கதைதான். அதை நோலன் கொடுத்திருக்கும் விதம்தான் இன்செப்சனை விட அதிக சிக்கலானதாக மாற்றுகிறது. காரணம் கால பயணம் குறித்த பல திரைப்படங்களை ரசிகர்கள் விமர்சனம் என்ற பெயரில் கிழித்து தொங்கவிட்டிருப்பதால், நோலனின் காலபயணம் எப்படி இருக்குமோ என்ற ஆர்வம்தான் என்னை அவசியம் படம் பார்க்க வேண்டும் என்ற ஆவலில் தள்ளியிருந்தது. (Interstellar-ல் புதிய கிரகத்தினை தேடி பயணப்படும் கதை என்பதில் கிடைத்த அதே ஆவல்) நோலன் காட்டியிருக்கும் திரைப்படம் ஒரு காட்சிப்பதிவில் அட்டகாச முன்முயற்சி. காலபயணத்தில் நம் கண்முன் இரண்டு(!) விதமான சாத்தியத்தையும் எடுத்திருப்பதும், முன்பகுதியில் கொடுக்கப்பட்டிருக்கும் குழப்பங்களுக்கெல்லாம் கடைசி முப்பது நிமிடங்களில் பிரம்மாண்டமான சண்டைப்பதிவுடன் முடிவு சொல்லுவது அற்புதம்.

முக்காலே மூணுவீசம் இயற்பியல் கோட்பாடுகளும் அரைவீசம் கணிதச்சமன்பாடுகளும் மற்றும் காலபயண திரைப்படங்களின் ரசிகர்களிடையே படாதபாடுபடும் பாரடாக்ஸ் (முரண்பாட்டின்) சாத்தியத்தையும் வசனங்களாய்க்கொண்ட திரைப்படத்தில் இவற்றைக் காட்சிப்படுத்தலில் நோலன் எடுத்திருக்கும் முயற்சிதான் பிரமிப்பு. அவர்கள் பேசும் வசனங்களை புரிந்துகொள்ளும் முன்பே காட்சியின் பிரம்மாண்டத்தில் ரசிகர்களை சிக்க வைத்துவிடுவதால், முதன்முறை பார்த்துவிட்டு படம் புரிந்தது என்பவர்கள் பிஸ்தாக்கள்தான். எனக்கு சில இடங்களில் விடுபடல்களும் குழப்பங்களும் இருந்தன. முக்கியமாய் முதல் காட்சியில் வரும் தொடர்பு பின்னால் எங்கேனும் கிடைக்கும் என்று எதிர்பார்த்து ஏமாந்தேன். ஆனால் இறுதிக்காட்சிவரை சினிமாப்பிரியர்களை நோலன் ஏமாற்றவில்லை.

நிச்சயம் நான் இங்கு திரைப்படத்தின் கதையை எழுதவில்லை. அப்படியே எழுதினாலும், உலகை அழிக்கத் துடிக்கும் கெட்டவனிடமிருந்து உலகைக் காப்பாற்ற புறப்பட்டு(!) வரும் நாயகன் என்பதாக ஓரிரு வரியில் முடிந்துவிடும். ஆகவே எதையும் எதிர்பார்க்காது, நோலனின் கால யந்திர உலகத்தை காட்சிப்பதிவாக அனுபவித்து ரசிக்க எண்ணினால் திரைப்படத்தை தவறவிடாதீர்கள்.

அநேகமாக நமது இயக்குந கஜினிகள் யாரேனும் சில வருடங்கள் கழித்து இது தோல்வியடைந்த குழப்பமான கதை. நான் இதை மக்களுக்கு புரியும்படி எடுத்தேன் என்று உடான்ஸ் விடவும் சாத்தியம் அதிகம் உண்டு.

(திரைப்படத்தின் கதை அவசியம் தெரியவேண்டும் என்பவர்களுக்காக ஸ்பாய்லர் அலர்ட்களுடன் தனிப்பதிவு நட்பு வட்டத்தினருக்காக மாத்திரம் இடப்படும். இதில் எனது சந்தேகங்களும் இடம் பெறும் படம் பார்த்து தெளிவு பெற்றோர் விளக்கமளித்தால் தன்யனாவேன்!)
*


Thanks to : SenShe
https://www.facebook.com/me.senshe/posts/10220942135195691

Related Link :
TENET – Trailer
Thanks to : Warner Bros. Pictures
https://www.youtube.com/watch?v=AZGcmvrTX9M

சென்ஷிக்குப் பிடித்த 25 சிறுகதைகள்

பத்து வருடங்களுக்கு முன்பு ’பண்புடன்’ குழுமத்தில்  தம்பி சென்ஷி  பகிர்ந்த 25 சிறுகதைகளை சில சுட்டிகளுடன் இங்கே தந்திருக்கிறேன். இவற்றை ஒரு PDF ஆக மாற்றி வெளியிடலாமென்று… பார்ப்போம்! – AB

*
1. பொய் : எழில் வரதன்

2. ஊமைச் செந்நாய் – ஜெயமோகன்

3. அவ்வா – சாரு நிவேதிதா

4. உத்தரவிடு.. பணிகிறேன் – ஆல்பர்ட்டோ மொராவியா (தமிழில்- நாகூர் ரூமி)

5. சுவர்ப்பேய் – யுவன் சந்திரசேகர்

6. பழைய ஒரு சிறிய காதல் கதை – வைக்கம் முகமது பஷீர், தமிழில் சுரா

7. மாஷ்கா – மாக்ஸிம் கார்க்கி (தமிழில் சுரா)

8. சிறுமியும் வண்ணத்துப்பூச்சிகளும் – சுரேஷ்குமார இந்திரஜித்

9. கல்லூரி முதல்வர் மிஸ் நிர்மலா – ஜி. நாகராஜன்

10. பரிசுச்சீட்டு – ஆண்டன் செகாவ்.  தமிழில் – எஸ். ஷங்கரநாராயணன்)

11. நம்பிக்கையாளன் – ஜெயமோகன்

12. தினம் ஒரு பூண்டு – ஆபிதீன்

13. காமரூபிணி – ஜெயமோகன்

14. பி.விஜயலெட்சுமியின் சிகிட்சை குறிப்புகள் – எஸ் ராமகிருஷ்ணன்

15. புவியீர்ப்புக் கட்டணம் – அ. முத்துலிங்கம்

16. ஆப்பிரிக்கப் புல்வெளி – ரே ப்ராட்பரி (தமிழில்: விஸ்வநாத் சங்கர்)

17. அக்ரகாரத்தில் பூனை – திலீப்குமார்

18. வஞ்சம் – ஆதவன் தீட்சண்யா

19. சொல்லவே முடியாத கதைகளின் கதை – ஆதவன் தீட்சண்யா

20. சிதைவு – பவா செல்லதுரை

21. பிரார்த்தனைகளும் பிரசாதங்களும் – இராசேந்திர சோழன்

22. ஏழுமலை ஜமா – பவா செல்லதுரை

23. கடிகாரம் – ஜீ.முருகன்

24. குரங்குகளின் வருகை – ஜீ.முருகன்

25. ஈரம் – சுப்ரபாரதிமணியன்

*

நன்றி : சென்ஷி

The Cave of the Yellow Dog – சென்ஷி விமர்சனம்

”அப்பா.. வாலினை என்ன செய்வீர்கள்?”

“புதைக்கையில் அதை நாயின் தலைப்பகுதியின் அடியில் வைத்துவிடுவோம். அப்போதுதான் வால் கொண்ட நாயாக அல்லாமல் இதன் மறுபிறப்பில் குதிரைவால் சிகை கொண்ட குழந்தையாக பிறக்கும்”

***

ஒரு பெரிய பணக்கார குடும்ப வாரிசான அழகான பெண் ஒருத்திக்கு திடீரென உடல் நலம் சரியில்லாமல் போய்விட்டதாம். எந்தவித சிகிச்சைகளும் பலனளிக்காததால், அவளது தந்தை ஒரு அறிவிற் சிறந்த பெரியவரிடம் சென்று அறிவுரை கேட்கிறார். அதற்கு அந்த பெரியவர், “உங்கள் வீட்டில் உள்ள மஞ்சள் நிற நாயின் கோபமே இந்நோய்க்கு காரணம். அதை அகற்றிவிட்டால் நோய் குணமாகிவிடும்” என்று பதில் தருகிறார்.

ஆனால் அந்த நாய் தங்கள் குடும்பத்தினரையும் மந்தை கூட்டத்தையும் காப்பாற்றுகிறது என்ற தந்தையின் கேள்விக்கு பதிலாக பெரியவர் ’உனக்கு தேவையான பதிலை தந்துவிட்டேன்’ என்று சொல்கிறார்.

இவ்வளவு காலமாக தங்களின் பாதுகாப்பிற்காக உழைத்த நாயைக் கொல்ல செல்வந்தர்க்கு மனம் வரவில்லை. ஆனால் தன் மகளின் நோய் தீர வேறு எந்த வழியும் தெரியாததால், அந்த நாயை அதனால் வெளியேற இயலாத ஒரு குகையினுள் விட்டு விடுகிறார். தினமும் குகைக்குச் சென்று நாய்க்கு உணவும் கொடுத்து வருகிறார். ஒரு நாள் அந்த நாய் அங்கிருந்து காணாமல் போய்விடுகிறது.

ஆனால் பிறகு அந்த பெண் குணமாகிவிட்டாள். காரணம் அவள் ஒரு இளைஞன் மேல் கொண்டிருந்த காதல். காதலர்களின் சந்திப்பிற்கு அந்த நாய் மிகுந்த இடைஞ்சலாக இருந்ததால் ஏற்பட்ட நோய் அது. நாய் தொலைந்ததால் காதலர்கள் சந்திப்பிற்கு இந்த இடையூறுமில்லை.

“பாட்டி! அந்த மஞ்சள் நிற நாய்க்கு என்ன ஆனது?”

”அந்த காதலர்கள் திருமணம் செய்து கொண்டார்கள். அந்த நாய் குதிரைவால் முடி கொண்ட குழந்தையாக மறுபிறப்பு கொண்டது.”

– மங்கோலிய நாடோடி பழங்கதை

நன்சால் தனது முதல் பள்ளிக்கூட விடுப்பில் இருப்பிடம் வந்து சேரும் தினத்திலிருந்து கதை தொடங்குகிறது. மங்கோலியாவில் சமவெளியில் ஆட்டு மந்தைகளை நாடோடிகளாய் மேய்த்து வாழ்ந்து வரும் இரண்டு பெரியவர்கள்மூன்று குழந்தைகள் அடங்கிய குடும்பம் அது. மேய்ச்சலுக்கு உகந்த நிலங்களில் நிகழும் ஆபத்துகளில் ஒன்றான ஓநாய்களின் தாக்குதலில் பலியான ஆட்டின் தோலை உரித்து தொலைவில் இருக்கும் நகரத்தில் விற்கத் தயாராகின்றார் தந்தை. அங்கங்கு பலியான விலங்கின் மிச்சங்களுக்காக அலையும் பிணந்தின்னிக்கழுகுகளின் கூட்டம். வறட்டி அள்ளச் செல்லும் நான்சல் மலைக்குகையினுள் சிக்கிக் கொண்ட நாயினைக் காப்பாற்றி ஜோகோர் என்று பெயரிட்டு வளர்க்க வீட்டிற்கு கொண்டு வருகிறாள். குகையில் வெளியேற இயலாமல் சிக்கிய நாய் என்பது கெட்ட சகுனத்திற்கான அறிகுறி என்பதால் தந்தை அதை விட்டுவிடும்படி சொல்கிறார். ஆனால் தந்தைக்கு தெரியாமல் வளர்க்க சிறுமி ஆசைப்படுகிறாள். நகரம் சென்று திரும்பும் தந்தை நகரத்தில் தனக்கு ஒரு வேலை கிடைத்திருப்பதையும் குடும்பத்தினருடன் அங்கு வீடு மாறிவிடலாமென்றும் கூறுகிறார். நாயை அழைத்துச் செல்ல மனமின்றி அதை அங்கேயே கட்டிப்போட்டுவிட்டு பொருட்களை வண்டியிலேற்றி குடும்பத்தினருடன் சற்று தூரம் வந்தபின்னே சிறிய தம்பியைக் காணாமல் விட்டதால் மீண்டும் குழந்தையைத் தேடி பழைய இடத்திற்கு தந்தை விரைய அங்கு ஒரு இயல்பான முடிவு நிகழ்கிறது.

திரைப்படத்தில் அனைத்துமே பிடித்தமான விசயங்களாய் இருந்தாலும் முதலிடத்தை எளிதாய்ப் பெற்றுக்கொள்கின்றன குழந்தைகள். ஒரே குடும்ப நாயகரின் குழந்தைகள் என்பதால் வெகு இயல்பாக நடிப்பென்ற அச்சு இன்றி பொருந்திக்கொள்கிறார்கள். குழந்தைகளுக்கு இடையிலான இயல்பான விளையாட்டு அன்னியோன்யம் பாசம் கண்ணை விட்டு நீங்குவதில்லை.

இரண்டாவதாய் வசனங்கள் மற்றும் காட்சிகள். நாயைத் தேடி வழி தப்பிப்போன சிறுமி நான்சல்-ஐ நாயுடன் புயல் மழையிலிருந்து காப்பாற்றும் பாட்டி ஒருவர் சொன்ன பழங்கதையை கேட்டபின்பு, தாயிடம், “உங்களின் பழைய வாழ்வு நினைவில் உள்ளதா?” என்று கேள்வியும் அதற்கான பதிலும் நமக்கு இந்த மங்கோலிய திரைப்படத்தைக் குறித்த சித்திரத்தை பதிய வைத்துவிடும். அதிலும் அந்த கிழவியின் முகத்தை நமக்கு பதிய வைக்கும் அந்த ஒளி. நிச்சயம் மறக்கவியலாதது.

காட்சிகளில் மழலையைத் தொலைத்துவிடாது பத்திரப்படுத்தி வைத்துக்கொள்ளும் சிறுமி, இளமையில் அந்த மஞ்சள் நிறங்கொண்ட வண்ணக்கனவுகள் சுமக்கும் மழலைத்தன்மையை வெளியேறிவிடாத குகைக்குள் போட்டு தன்னிடமிருந்து விடுதலை பெற்றுக்கொள்ளுதலை அந்த மங்கோலிய நாடோடிக்கதை சொல்கிறதா! சகுனங்களின் மீது அபரிமிதமான அச்சங்கொண்ட எளிய குடும்பத்தினர் பரிசாய்க் கிடைத்த பொருள் சூட்டில் உருகிவிடுதலையும், புத்தருடன் விளையாடும் தம்பியை எச்சரிக்கும் இன்னொரு குழந்தையுமாய் இருத்தலை உணர்த்தும். நாகரீகத்திற்கும் பழங்காலத்திற்கும் இடையிலான மரப்பாலமாய் உணர்வுகள். பெருமலையின் அடிவாரத்தில் பசுஞ்சமவெளியில் வாழும் வாழ்வு நிச்சயம் நகரின் மையத்தில் கிடைத்துவிடாது. ஆனால் ஓநாய்கள் என்ற ஒற்றைச் சொல்லைக் கைக்கொண்டு நகர்கிறது குடும்பம். குறிப்பாய் தாங்கள் தங்கி இருந்த இருப்பிடத்தை கழற்றி எடுக்கும் இடம்.

நான்சலிடம் இரண்டு கேள்விகள் முன்வைக்கப்படுகின்றன. முதலாவது தாயிடமிருந்து, உனது விரித்துப் பிடித்து பின்னால் மடித்த உள்ளங்கையை உன்னால் கடிக்க இயலுமா? இரண்டாவது கிழவியிடமிருந்து, கோணிஊசியின் கூர் முனையின் மேலே ஏதும் ஒரு அரிசிமணியை நிறுத்தி வைக்க முடியுமா? இரண்டு செயல்களையும் நான்சலால் செய்ய முடிவதில்லை. பருவம் தொலைக்கப்படாத மழலைத்தன்மைக்கு காரணம் தேட இடம் இல்லை.

நாய் தன்னை குகையில் விட்டுப்போனவர்களைத் தேடிப்போகும் இடமும், இடிபாடுகள் கூடிய காலி செய்யப்பட்ட இருப்பிடத்தின் மத்தியில் படுத்துக்கொண்டு வருந்துவதுமாய் எப்படி பயிற்சியளித்தார்களோ!

முதல் காட்சியில் இறந்துபோகும் நாயைப் புதைக்க கொண்டு செல்லும் தந்தை மகளுடன் ஆரம்பமாகும் திரைப்படம், இறுதிக்காட்சியில் முதல் காட்சியின் நினைவைக் கொண்டு வந்து பதறவைத்து, பின் நீண்ட வரிசை கொண்ட மாட்டு வண்டியின் கடைசியில் அமர்ந்திருக்கும் நாயுடன் முடிவது மகிழ்வு.

என்னதான் மசாலா ஆக்சன் மொக்கை படங்களை நேரங்கடத்துதலுக்காக பார்த்தாலும் மிகச் சிறந்த திரைப்படத்தை பார்த்து முடித்தபின் கிடைக்கும் மன நெகிழ்வும் ஆசுவாசமும் வேறு எவையும் தருவதில்லை. The Cave of the Yellow Dog. 2005ம் வருடத்திற்கான சிறந்த வெளிநாட்டு திரைப்படத்திற்கான ஆஸ்கர் விருதைப் பெற்ற மங்கோலியன் திரைப்படம்.

*

நன்றி : சிந்தனையாளர் சென்ஷி

தடங்காட்டி மரம் – சென்ஷி சிறுகதை

’மோனம் புனைந்த கவிதையின் தன்மையும் வேளையும் யாரால் முன்கூட்டிச் சொல்ல முடியும்?’ என்பார் லா.ச.ரா, ‘அர்ச்சனை’ கட்டுரையில். அப்படித்தான் சென்ஷியிடமிருந்து ஒரு புதிய கதை வருவதும். பிரியத்துடன் பகிர்கிறேன். – AB

*

தடங்காட்டி மரம் – சென்ஷி

சபீருக்கு முப்பத்தொன்பது வயதை அடைய சரியாக இன்னமும் நாற்பது நாட்கள் மிச்சமிருக்கிறது. சபீருக்கான வரலாறென்பதை, பெயர்களாய் அவனுடைய தந்தையிலிருந்து ஆரம்பிக்கலாம் அல்லது இன்னும் கொஞ்சம் நினைவை கவனமாய் நெய்தால் அவரது தந்தையையும் கொண்டு வர முடியும்.

தாய்வழியில் அவர்களது குடும்ப பெருமைகளை அப்பாவை நொடிக்கும்போதெல்லாம் அம்மா சொல்லிக் காட்டுவதால் பெருமைகள் சபீருக்கு அத்துப்படி. ஆனால் பெருமைகளை மாத்திரம் வரலாறாய் மாற்றிக் கொள்வதில் உடன்பாடு இருந்ததில்லை. வரலாறுக்கான சூத்திரத்தில் உண்மையின் பங்கின் சதவீதம் அதிகமாய் இருக்கவேண்டுமென்பது எண்ணம். ஏன் அப்பா தன் உறவு வழி பெருமைகளை சொல்லிக் காட்டியதில்லை என்று தெரியவில்லை. புனைவாய்க்கூட எந்த கதைகளையும் அவனுக்கு நகர்த்தியதில்லை.

பாடவகுப்பில் ஒரு பாடமாக மகனுக்கு தன்னைக் குறித்த வரலாறை கடத்துதலின் பாகமாய்த்தான் இந்த பாடு. வெறுமனே பெயர்களை எழுதி வைத்து குடும்ப மரத்தை வரைந்து வைத்துவிடலாம்தான். இணையவழி சிக்கல்களை புதிர்களை கண்டு விடை கண்டுபிடித்தலில் ஆர்வங்கொண்டவனுக்கு தன்னுடைய வரலாறை அறிந்துகொள்ளுதலில் உள்ள ஈடுபாட்டை எப்படி சுருக்கி எடுத்துக் கொள்ளுவது. தனக்கான வரலாறு தன்னிடமிருந்து தொடங்கட்டுமென்ற அதிநவீனத்துவ எண்ணம் எழாமல் இல்லை. ஆனால் பிள்ளையின் பாடத்தில் ஓரிரு மதிப்பெண்களை குறைத்துவிடும் சாத்தியம் இருப்பதால் எண்ணம் தள்ளி வைத்தாயிற்று.

எந்த தகப்பன்தான் குழந்தைக்கு தன்னால் மதிப்பெண் குறைந்து போனதை ஒத்துக் கொள்ளுவான். இந்த வேதனை வந்துவிடக்கூடாதென்பதற்காகத்தான் கவனமாக வீட்டுப் பாடம் செய்யும் வேளைகளில் தப்பித்தவறிக்கூட ஹால்பக்கம் எட்டிப் பார்ப்பதில்லை அது அவசியம் டீ தேவைப்படும் நேரமாயிருந்தாலும் கூட. தலைவலிக்கு டீ நல்ல மருந்துதான். ஆனால் டீ தேவைப்படும் நினைவு வரும்போதெல்லாம் தலைவலியையும் உடன் அழைத்து வருவதைத்தான் தடுக்க முடிவதில்லை.

அப்பாவின் நினைவில் டீயை எந்த வகையில் சேர்ப்பது. மணிக்கொரு தடவை தேத்தண்ணி குடிப்பதை பழக்கமாகக் கொண்டிருந்தார். அவருக்கு தேத்தண்ணி வைக்கும்போதெல்லாம் கொஞ்சத்தை தனக்கும் ஊற்றிக் கொண்டு குடிப்பது அம்மாவின் வழக்கம். மீண்டும் அப்பாவைப் பற்றி நினைக்கையில் அம்மாவின் நினைவு.

யோசனைகளால் மாத்திரம் எதையும் நிரூபித்து சாதித்துவிட முடியாதென்பதால், சோம்பலாக எழுந்து குறிப்புகள் கணக்குகள் போட பயன்படுத்தும் கறுப்பு நிற டைரியை எடுத்து படுக்கையில் போட்டான். கடைசியாய் எழுதிய கணக்கின் பக்கத்தில் பேனா அடையாளத்திற்கு வைத்து மூடி வைத்திருந்ததால், விழுந்த வேகத்திற்கு பேனா இருந்த பக்கம் திறந்து கொண்டது.

கடைசியாக எழுதி இருந்த பக்கத்தில் ’நாவை மீனாக்கி சொல் தாகத்தில் தவிக்கும்’ குறிப்பை எழுதி வைத்திருந்தான். கவிதையாக மாற்ற வேண்டும். மெல்ல தன் நாவால் உதடுகளை ஈரப்படுத்த வெளிக்கொணராமல் உதட்டை மடித்து, மடித்தமேனிக்கே உதட்டை ஈரமாக்கிக்கொண்டான். நாவாய் என்றால் மரக்கல கப்பலை குறிக்கும் சொல் ஒன்றும் நினைவில் வந்துவிட, எழுதிய குறிப்பு மேலும் அர்த்தஞ் செறிவுள்ளதாக அவனுக்குத் தோன்றியது. தோன்றுவதையெல்லாம் எழுதுவதும், எழுதுவதையெல்லாம் வாசிப்பதுமாக காலம் நகர்வதே தனக்கு தன் மீதான ஒரே ஈடுபாடு என்பதை சபீர் நம்பினான். சேர மன்னன் நாவாயில் பயணம் செய்யும்போது வேறு எவரும் செய்யக்கூடாது என்று படித்த நினைவு வந்தது. அது போல தனக்கும் ஒரு சிந்தனை வரும்போது இன்னொன்று எட்டிப் பார்க்கக்கூடாது என்ற சட்டமிருந்தால் எத்தனை நன்றாக இருக்குமென்று எண்ணினான்.

சொந்த ஊரை விட்டு வந்து, கோவையில் பெரிய தொழிற்பேட்டையில் வாடகைக்கு லாரிகளை அனுப்பும், மேற்பார்வை செய்யும் பணியில் இருக்கிறான். லாரிகள் மூலம் இந்தியா முழுமையும் அனுப்ப வேண்டிய சரக்குகளை சரிபார்த்து தேவையான காகிதங்களை பெற்றுத் தருதல், லாரிகள் செல்லுமிடம் சரியானதுதானா என்று பரிசோதித்தல், செல்லும் ஓட்டுநரின் விவரங்கள் அடங்கிய குறிப்புகளை தனது மேலதிகாரிகளின் பார்வைக்கும், வண்டியை வாடகைக்கு எடுப்பவரின் பார்வைக்கும் மின் மடலாய் தட்டிவிடுதல் போன்ற வேலைகளைத் தாண்டி இன்னொரு முக்கிய வேலையையும் சபீர் பார்த்துக்கொண்டிருந்தான்.

லாரிகளில் பொருத்தப்பட்டிருக்கும் ஜிபிஎஸ் எனப்படும் புவியின் தடங்காட்டி மூலமாய் லாரிகளின் நகர்வை பரிசோதித்தல். சிவப்பு புள்ளிகள் வரைந்துவைத்த கோடுகளின் மேல் மெல்ல மெல்ல நகர்தலை உறுதிப்படுத்திக் கொள்ளுதல் சபீருக்கு பிடித்தமான வேலை. நீல வண்ணக்கோடு பாதையைக் காட்டுவது. கணிணியில் இன்னொரு விசையை அழுத்தினால் பாதை சிவப்பு வண்ணமாக மாறி மீதம் செல்லவேண்டிய தொலைவைக் காட்டும். பாதைகள், மாற்றுப்பாதைகள், தொலைவு, நேரம், வேகம் இப்படி எல்லாவற்றையும் தனக்கு ஒதுக்கப்பட்ட கணிணியின் முன் அமர்ந்து படமாய் பார்த்துக் கொண்டிருத்தலில் வேறு சிந்தனை தோன்றுவதில்லை. ஒருவேளை ஒரே நேரத்தில் இதிலேயே பல விசயங்கள் முன் தோன்றி நிற்பதால் இருக்கலாம் என்று நினைத்தான். இப்படி குடும்பத்திற்கும் ஒரு அளவீடு இருப்பின் எத்தனை வசதிப்படும். எளிதாய் எங்கிருந்து வந்தோம், எங்கு செல்வோம் என்ற அடிப்படையில் எல்லா இயக்கங்களையும் நிரூபித்துவிடலாமே என்று தோன்றியது. தடங்காட்டி மரம். அவனுக்கு மெல்ல சிரிப்பு வந்தது.

தடங்காட்டியை உபயோகப்படுத்தலுக்கும் இவனுக்கு சில விதிகள் உள்ளன. அதில் முக்கியமான விதி அதிக நேரம் ஒரே இடத்தில் வாகனம் நிலை கொள்ளல் ஆகாது. உணவு, சாலை நெருக்கடி போன்ற சில விதிபாடுகள் இருப்பினும், தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம். ஏனெனில் பெரும்பாலும் விபத்துக்குரிய அச்சமாகவே அவனுக்கு எடுத்துக் கொள்ள வேண்டியிருக்கும். ஆகவே ஓட்டுநருக்கான ஓய்வு நேரம், உணவு இடைவேளை இல்லாத நேரத்தில், வாகனம் பத்து நிமிடங்களுக்கு மேல் நிலைகொண்டால், உடனே அந்த ஓட்டுநரை தொடர்பு கொண்டு நிலையை அறிய வேண்டும். விபத்து அல்லது அசம்பாவிதங்கள் ஏதும் நேர்ந்துவிட்டால் அதற்குரிய தற்காப்பு ஓட்டுநரைச் சேர்ந்தது. சரக்காய் ஏற்றுகிற பொருட்கள் திருடு போகாமல் காப்பது இன்னொரு விதி. இவ்விதமாய் நிர்ணயிக்கப்பட்ட விதிகளை தன் கண்காணிப்பின் கீழ் கொண்டிருத்தலாலேயே தடங்காட்டி வசம் பிரியங் கொண்டிருந்தான். விதிகளை மீறுபவர்களை இவனால் ஏதும் செய்துவிட முடியாது. ஆனால் இயக்கங்கள் கண்காணிக்கப்படுகின்றன என்ற ஒற்றை அச்சத்தை விதைப்பதன் மூலம் விதிகள் சரியாக பயன்படுத்தப்படுமென்று இவனது மேலாளர் நம்பினார்.

விபத்து ஏற்படுதல் மாத்திரமே இவனது தூக்கத்தை விரட்டி அடிப்பது. இதுவரை எந்த ஓட்டுநரும், உயிர் ஆபத்தில் சிக்கவில்லை என்றாலும், விபத்துக்குள்ளான வாகனத்தில் இருக்கும் பொருட்களை அதிக சேதாரமின்றி, இன்னொரு வாகனத்தை பயன்படுத்தி உடனடியாக அனுப்பி வைப்பதும், விபத்துக்கான காப்பீடு கோரலை முறைப்படுத்தலும், விபத்துக்குள்ளான வாகனத்தை திரும்ப தலைமை அலுவலகத்திற்கு கொண்டு செல்லுவதற்கான ஏற்பாடுகளை முன்னெடுத்தலுமாய் இவனது முதுகில் வலி சேரும். விலை உயர்ந்த பொருட்களை அனுப்பி வைப்பவர்கள் பொருட்களுக்கான இயக்க காப்பீட்டை முன்னரே செய்துவிடுவதால், அதைக் குறித்த அதிக பட்ச அக்கறை கொள்ளுவதில்லை. ஆனால் மறுமுறை தன்னுடைய நிறுவனம் வழியே அவர்களின் சரக்குகள் கொள்முதலுக்கோ விற்பனைக்கோ செல்லும் வாய்ப்பு கிடைக்காது என்பதால், இந்த விசயத்தில் மிகவும் கடுமையாக நடந்து கொள்ள வேண்டியிருந்தது. விபத்து வழக்குகளை கண்காணிக்க தனி வழக்கறிஞர் இருந்தாலும், அவருக்குத் தேவையான தகவல்களை பகிர்வது சபீரின் தலைக்கு வரும் பணிகளில் ஒன்று.

வட இந்தியாவிலிருந்து வரும் ஓட்டுநர் ஒருவர், சபீரை ”சாப், சாப்” என்றுதான் விளிப்பார். அது சாரென்ற விளியா அல்லது பாம்பென்ற விளியா என்று இவனுக்கு புரிந்ததில்லை. குறிப்பிட்டு சொல்லக்கூடியவர்களும் யாரும் இவனுக்கு அருகில் இல்லை.

சபீர், பேனாவை எடுத்து டைரியில் ஒரு முக்கோணத்தை வரைந்தான். மேல் குடுமியில் இடத்தை காலியாக வைத்துவிட்டு, கீழே உள்ள இரண்டு கோணங்களின் வெளியில் இடப்புறம் அப்பா பேரையும், வலப்புறம் அம்மா பேரையும் எழுதினான். அப்பா பெயரை எது எதற்கு உபயோகப்படுத்தி இருக்கிறோம் என்ற யோசனை மேலோங்கவே, அதிகபட்சம் விண்ணப்பங்களில் தந்தை பெயர் என்ற இடத்தில் இட்டிருப்பது மாத்திரமே நினைவில் தேங்கி நின்றது. விடாப்பிடியான யோசனை பலன் அளிக்கவில்லை.

”யாரு புள்ள நீ” என்ற கேள்வி இதுவரை சபீரிடம் யாரும் கேட்டது இல்லை. எப்பொழுதுமே வெளியூரென்றால், உறவினர்களின் வீட்டிற்கு அப்பா அல்லது அம்மாவின் துணையுடன் தான் பயணம். திருமண விழாவென்றாலும் கூட தன்னை தனியே கூட்டத்தில் அனுப்பியது இல்லை. பத்திரமாய் பொத்தி பொத்தி வைத்து வளர்த்த பிள்ளை.

அப்பா அம்மா பெயரின் கீழே ஒரு கோடு வரைந்து இணைத்து அதன் கீழே தனது பெயரை எழுதினான். கொஞ்சம் தள்ளி மனைவியின் பெயர். மனைவி பெயருக்கும் தனது பெயருக்கும் இடையே வரைந்த கோடு நேராக இல்லாமல், இரவின் சிலுமிஷங்களுக்கான பாதையை நோக்கி கைகள் நகர்வது போல தோன்றியது சபீருக்கு.

வாரிசு மரத்தில் மனைவியின் குடும்பத்திற்கும் இடம் வேண்டுமென்ற முக்கியத்துவம் மனதில் தோன்ற, இன்னொரு முக்கோணம் சற்றே கோணலாக தள்ளி விழுந்தது. மாமனார், மாமியார் பெயரை மனதிற்குள் சொல்லி சரிபார்த்துக்கொண்டு சரியாக எழுதினான். மனைவி பெயருக்கு மேலே ஒரு கோடு அவளது குடும்ப முக்கோணத்திற்கு இழுத்துச் சென்றது. தடங்காட்டியில் நெடுஞ்சாண்கிடையாக கிடக்கும் பாதையாக சற்று நெளிந்து வளைந்துதான் சென்றது.

கவனமாக படுக்கையில் கிடக்கும் வசமாய் மனைவி பெயருக்கும் தனது பெயருக்கும் போதுமான இடைவெளி கிடைத்த நம்பிக்கை வந்தபின் இரண்டு பெயர்களையும் இணைத்து தலைகீழ் முக்கோணம் ஒன்றை வரைந்தான்.

”குடும்ப பாதுகாப்பு முக்கியம். இன்னொரு பிள்ளை இப்போது வேண்டாம்” என்று சொல்லியே ஏழு வருடங்களையும் சொச்ச மாசங்களையும் கடத்திவிட்டபின் முக்கோணம் இடாமல் நாற்கரமா இட முடியும். வாங்கும் சம்பளத்திற்கு விட்டேற்றியாய் செலவு இழுத்துவிடாத மனைவி அமைதல் வரம். செலவே இல்லாவிட்டாலும் சம்பளமாய் வந்த பணம் இருபத்தைந்து தேதிக்குள் தேவைகளை அறிந்து தன்னுடைய இருப்பை சுருக்கிக் கொள்கிறது. சேமிப்பு மூன்று சதவீதமென்று கணக்கு போட்டு சேமித்தால் அத்தியாவசியம் நாலரையாக மாறி வருகிறது. இதில் முக்கோணமே பெரிதுதான். முக்கோண முடிவில் பையன் பெயர்.

டெல்லி மன்னர்கள் அனைவருக்கும் வரலாறு இருக்கிறது. அக்பருக்கு முன்னால் ஹூமாயூன், பாபர். அக்பருக்கு பின்னால் ஜஹாங்கீர் வழியாக பகதூர் ஷா வரை கொஞ்சம் நினைவு இருக்கிறது. சரித்திரத்தில் எழுதப்பட்டவர்கள். நல்லதோ கெட்டதோ பெயரை நினைவில் வைத்துக்கொள்ளும் அளவுக்கு வாழ்ந்திருக்கிறார்கள். தன்னுடைய பேரனுக்கு அல்லது பேத்திக்கு வகுப்பில் குடும்ப மரம் கேட்டால், நான்கு தலைமுறைக்கு தரவுகள் கைவசம் இருப்பதை எண்ணி பெருமிதம் கொண்டான். ஆனால் மனம் விடாப்பிடியாய் அப்பாவிடமும் அப்பாவின் அப்பாவிடமும் சென்று அமர்ந்து கொண்டது.

அப்பாவின் சின்ன வயதிலேயே தாத்தா இறந்துவிட்டாராம். பெரிதாக சொத்து சுகமில்லாத அந்த வயதில் வேலைக்கு சென்று சம்பாதித்து தன்னை நிலை நிறுத்தி, குடும்பத்தை நிமிர வைத்தவர். தொழிற்சங்கத்தில் தன்னை இணைத்து இரவும் பகலும் போராட்ட களத்தில் தன்னை ஒப்புக்கொடுத்தவர். தந்தை இல்லாத பையன் என்ற எந்த பச்சாதாபத்தையும் தன்னை சூழ்ந்து கொள்ள அனுமதிக்காதவர். இதெல்லாம் தந்தையின் இறப்புக்கு வந்த விட்டுப்போன சொந்தமொன்று, பிலாக்கணமாக சொன்னதை வைத்து தெரிந்து கொண்டது. உரையாடிக்கொண்டே விளையாடும் பொழுதுகளில் கூட, தன்னுடைய தந்தையைப் பற்றி சொல்லாமல் இருந்தது சபீருக்கு இப்போது ஆச்சரியம் தந்தது. சபீருக்கும் தன் தந்தையைப் பற்றி மகனிடம் எதுவும் சொன்னதில்லை என்பதும் உறைத்தது.

இவனது பதினேழாவது வயதில் அப்பா இறக்கும்போது நோயுற்றிருந்தார். தினமும் ஒரு குறிப்பிட்ட மருந்தை அறுபது மில்லி அளவிற்கு ஊசி மூலம் ஏற்றிக்கொள்ள வேண்டும். அதிக விலை கொண்ட அந்த மருந்திற்கு தினமும் காசு கொடுத்து கட்டுப்படியாகாது என்று மருந்து கடைகாரரிடம் ஒரு ஒப்பந்தம் செய்து கொண்டார். அதன்படி மொத்த கொள்முதல் விலையில் ஒரு மாதத்திற்கான பெட்டியை வாங்கி வைத்துவிட்டால், அவருக்கு தினமும் ஊசி போட்டுக்கொள்ள எந்த சிரமமும் இருக்காது. முன்பணமாகவே மருந்துபெட்டிக்கான காசை கடைகாரருக்கு கொடுத்துவிட்டதால், அவருக்கும் சிரமம் இல்லை.

தடங்காட்டி வழியே பயணம் செல்லும் வாகனத்தின் நேர விகிதாச்சாரம் சபீருக்கு அத்துப்படி. இத்தனை கிலோமீட்டர் வேகத்தில் பயணம் நகரும்போது, மிகுதி பயண தூர அளவைகள் கணிணி பக்கத்திலேயே காட்டிவிட்டாலும், தனக்கான ஒரு அளவீட்டை பொருத்தி வைத்து வண்டி இயக்கத்தின் ஓய்வு அடிப்படையில் பொருத்திப் பார்ப்பான். பெரும்பாலும் இவனது கணக்கு பொய்த்துப்போனதில்லை. மனித ஆயுளுக்கும் இப்படித்தான் போல. இயக்கத்தின் கணக்கு பொய்த்துப்போனதில்லை. பொழுதுக்கும் இரட்டை ஆயுளுக்கும் வாழ்ந்திருப்பார் போலும். தடங்காட்டியில் இயக்கம் நகரும் புள்ளியின் விதிகள் மீது ஓட்டுநர் கொண்ட நம்பிக்கை இன்னொரு பாகமாய் இது இருக்கக்கூடும்.

அப்பா அந்த அரிவாள் வெட்டை கழுத்தில் வாங்கி இறந்தபோது, மருந்துகடைகாரரிடம் முந்நூறு ரூபாய்க்கான மருந்து மீதம் இருந்தது. மறுநாள் தினப்பத்திரிக்கையில் இறந்த மூவரின் பெயர்களில் இரண்டாவதாக கொலையான சபீரின் அப்பா பெயர் மற்றும் வயதுடன் த/பெ என குறிப்பிடப்பட்டு அவனது தாத்தா பெயரும் வந்திருந்தது.

அன்றுதான் முதன் முறையாக அப்பாவின் அப்பா பெயரை சபீர் தெரிந்து கொண்டான்.

*

நன்றி : சென்ஷி

« Older entries