செங்கை ஆழியானின் யானைகள் :)

senkaiazhiyanசெங்கை ஆழியான் அவர்கள் எழுதிய ‘ஆச்சி பயணம் போகிறாள்’ நாவலைப் படித்துச் சிரித்ததிலிருந்து அவர்மேல் ஒரு இஷ்க். அவர் எழுதிய / தொகுத்த நூல்களின் லிங்க் சமீபத்தில் கிடைத்து, ‘குந்தியிருக்க ஒரு குடிநிலம்’ என்ற தொகுதியைப் பதிவிறக்கம் செய்து படிக்கவும் ஆரம்பித்தேன். அதில் ஒரு கதை : ஊர்பார்க்க வந்த யானைகள். சிரித்திரன் இதழில் 1987-ம் ஆண்டு வெளியாகியிருக்கிறது. காடு அலுத்துப்போய் எங்கேயாவது போவம் என்ற (குட்டியானை) குஞ்சுக்கறுப்பி தன் அப்பா பெரியகறுப்பனுடன் ஓர் ஊருக்குள் நுழைந்து முதன்முதலாக ஒரு மனிதனைப் பார்க்கிறது. அவனோ இவர்களைப் பார்த்து பயந்து ஓடுகிறான். செம ஜாலியாக விவரித்திருக்கிறார் இப்படி:

“ஆர் அப்படி எங்களைக் கண்டதும் ஓடுறது? குரங்கு மாதிரி இருக்குது.. ஆனா எங்கட பூநகரிக் காட்டுக் குரங்குகளிலும் பார்க்கப் பெரிசாத் தெரியுது.. வாலையும் காணவில்லை.” என்றது குஞ்சுக்கறுப்பி.

குஞ்சுக்கறுப்பியை பெரிய கறுப்பன் கவலையோடு பார்த்தது.

“உவயளைத்தான் மனிசன் என்கிறது. நம்ப முடியாத இனம். பொல்லாத சாதி.”

“எங்களைக் கண்டிட்டுப் பயந்து ஓடுது. பொல்லாதது என்கிறியள்?”

“உது பயந்துதான் முதலில் ஓடும். பிறகு திரும்பி வரும். தனிய வராது. கூட்டமா வரும். நீ கெதியாகக் கரையேறு குஞ்சு. எங்கயாவது போய் ஒதுங்கிக் கொள்வம்.”

இன்றுதான் மனிதனைக் குஞ்சுக்கறுப்பி பார்த்தது. இரண்டு கால்களால் இது எப்படி நடக்கிறது? மூக்கு நீளமாக இல்லாமல் இப்படிச் சின்னதாக இருக்கிறதே? இது எப்படி மூக்கால் தண்ணி உறிஞ்சும்? பாவம் வாலுமில்லை. உடம்பில் ஈ மொய்த்தால் எப்படிக் கலைக்குமோ?|

குஞ்சுக்கறுப்பிக்கு மனிதனைப் பார்க்க பரிதாபமாகவிருந்தது.

…….

தூரத்தில் பெரிதாக ஏதோ சத்தம் எழுந்தது. அதைக்கேட்ட பெரிய கறுப்பனும் குஞ்சுக்கறுப்பியும் வீதியில் ஏறாது தயங்கி நின்றன. தூரத்தில் மனிதர் பலர் நடமாடுவது தெரிந்தது. கண்ணுக்கெட்டிய தூரத்தில் சயிக்கிலில் ஒரு மனிதன் வருவது தெரிந்தது.

“உவர் என்னத்தில வாறார்?”

“உவரால் நடக்க முடியாது. அதுதான் சயிக்கிலில வாறார்.” என்றது பெரியகறுப்பன்.

கார் ஒன்று விரைந்து வந்தது. அதில் பலர் இருந்தனர்.

“ஐந்தாறுபேர் நடக்க முடியாவிட்டால் இதில வருவினம்.”

“பாவங்கள்..”

தூரத்தில் பெரும் இரைச்சலோடு புகையைக் கக்கியபடி கேரதீவு பஸ் வந்தது. அதை வியப்போடு குஞ்சுக்கறுப்பி பார்த்தது.

“உது என்ன மிருகம்? எங்களிலும் பெரிதாக இருக்குது?”

“பயப்படாதை உது பசு…”

“அப்ப நாங்கன் எங்கை?”

“விசரி உது பசுவடி.. ஐம்பது அறுபது பேர் நடக்க முடியாவிட்டால் இதில்தான் போவினம்.”

“ஐயோ பாவங்கள். நான் நினைச்சன் ஏதோ பெரிய மிருகம் ஐம்பது அறுபது பேரை விழுங்கிவிட்டு ஓடுதாக்கும் என்று. உதுகள் இரண்டு காலில நடக்கத் தொடங்கியதால்தான் இந்தக் கதி. நாலாலையும் நடந்தால் என்ன?”

“உதுகளில சில தலையாலயும் நடக்குமாம்.” என்றது பெரியகறுப்பன்.


நன்றி : நூலகம்

நம்ம தமிழ் எழுத்தாளர்களைத்தான் சொல்கிறார் என்று நினைக்கிறேன்!

மேலும் வாசிக்க :
செங்கைஆழியான் அவர்களுடன் ஒரு நேர்காணல்:

‘குந்தியிருக்க ஒரு குடிநிலம்’ சிறுகதை