சாதிகள் கொல்லுமடி பாப்பா (சிறுகதை) – சுலைமான்

அமீரக தமிழிணையத்தின் 2001 மலரில் வெளியான சிறுகதை இது. இரண்டு வருடங்களுக்கு முன்பு கையில் கிடைத்தும் (இங்கேயுள்ள இலக்கியவாதிகளுடன் அவ்வளவு நெருக்கம்!) தட்டச்சு செய்ய இயலாமல் தவித்துக்கொண்டிருந்தேன். இலக்கியத்தை வளர்க்கவே அவதாரமெடுத்த இளைஞர் சென்ஷிதான் இம்முறையும் உதவினார். அட்டகாசமான ராஜன் மகளையே அரைமணிநேரத்தில் பத்தி பிரிக்காமல் அடித்து ‘முடித்த’ அபூர்வ அவதாரமாயிற்றே… அதற்கு என் ஸ்பெஷல் நன்றி. சும்மா இருக்கும் முயற்சியை சூப்பராக நாங்கள் செய்தும் சுலைமானின் புகைப்படம் கிடைக்கவில்லை. தங்களுடைய புகைப்படத்தை இணைக்கச் சொல்லி பலரும் அணுகினார்கள். மறுத்துவிட்டேன். அறியவும். – ஆபிதீன்
***

சாதிகள் கொல்லுமடி பாப்பா

சுலைமான்

தைர்யம் மனசுல வரவும்… அடுத்த நிமிசமே சந்தைவிட்டு வெளியே வந்து ‘அவள்’ முன்னாலப் போயி நின்னேன். என்னை திடீர்னு பார்த்ததும், அதுவும் அவளோட வீட்டுத் திண்ணையிலேயே பார்த்ததும் ‘அவள்’ ஒரு நிமிசம் ஒண்ணுமேப் புரியாம திகைச்சுப் போயி நின்னுட்டா. “நீ…நீ…நீன்னு” அவள் சொல்லவந்த வார்த்தையெல்லாம் பயத்துல வாய்க்குள்ளயே தேங்கிப் போச்சு. “எனக்கு வேற வழியேத் தெரியல.. எனக்கு உன்கிட்ட மனம்விட்டுப் பேசியே ஆகணும்கற எண்ணம் என்னைய பைத்தியக்காரனாவே ஆக்கிடும் போலருக்கு.. அதான், உங்க அப்பனையும் – ஆத்தாவையும் கடைவீதியிலப் பார்த்ததும் உன்னைய எப்படியாவது உன் வீட்டுலயாவது சந்திச்சுப் பேசணும்னு வந்துட்டேன்னு” நான் சொன்னதும், “பைத்தியக்காரனாவே நீ ஆயாச்சுங்கறதுக்கு நீ இப்ப செஞ்ச காரியத்தைப் பார்த்தாலேப் புரியும்! நீ, மனம் விட்டுப் பேசணும்னு நினைக்கற விசயம் எதுவாயிருந்தாலும், அதைப் பேசறதுக்கு நீ தேர்ந்தெடுத்திருக்கற இடம் இதுதானா? எவ்வளவு சீக்கிரம் போகமுடியுமோ அவ்வளவு சீக்கிரம் நீ இங்கேயிருந்து போயிடறதுதான் நமக்கு நல்லது. உள்ளே போயிருக்கற பாட்டி திரும்ப இங்கே வர்ரதுக்குள்ள போயிடுன்னு” அவள் என்னை விரட்டுறதுலயே குறியா இருந்தாள். எனக்கு என் மேலயே வெறுப்பாயிடுச்சு. சை, ஏன் இந்த மாதிரி ஒரு இழிநிலை எனக்கு வந்துச்சுன்னு எனக்கு என் மேலயே கோவமும் வந்துச்சு. ‘இவள்’ ஒரு பிச்சைக்காரனை விரட்டற மாதிரியில்லே விரட்டறா! நான் என்ன தாழ்ந்தா போயிட்டேன். வீண் கற்பனையெல்லாம் மனசுல வளர்த்துக்கிட்டு ஏமாந்துப் போயிட்டோமோன்னு.. தோணுச்சு. என்ன இருந்தாலும் நான் தாழ்ந்த சாதிக்காரன் தானேங்குறதால, ‘அவள்’ அவளோட ‘உயர்ந்த சாதி’ புத்தியக் காட்டறாளோன்னு, பழகிப் போன என்னோட தாழ்வு மனப்பான்மை என்னைய உசுப்பி விட்டுருச்சு. “இந்த பாரு! சும்மா கிடந்த என்னைய பைத்தியக்காரன் மாதிரி, திருடன் மாதிரி இப்படி நிக்க வெச்சது நீதான். அன்னைக்கு நான் குடிச்சு வெச்ச இளநீரை நீயும் எடுத்துக் குடிச்சுட்டுப் போகாம இருந்தா இந்த நிலை எனக்கு வந்திருக்காது. நான் என் வழியிலப் போயிருந்திருப்பேன்… நீதான் என்னோட வழிய மறிச்சு இந்த நிலைக்கு என்னை ஆளாக்குனேன்னு” அவளைக் குற்றப்படுத்திப் பேசியது அவளை உறுத்திடுச்சுப் போலருக்கு.. வீட்டுக்குள்ளயும் – வீதியிலயும் திரும்பித் திரும்பிப் பார்த்துட்டு யாருமில்லன்னு தெரிஞ்சிக்கிட்டதும் என் கையைப் பிடிச்சு இழுத்து, சந்து வழியில இருட்டுலக் கொண்டு நிறுத்தி.. “நான் அப்படி செஞ்சது சரியா தப்பான்னு எனக்குத் தெரியலை. ஆனா, என்னமோ அப்படி செய்யணும்னு தோணுச்சு செய்துட்டேன்.. . உன்னோட முகமோ, உன்னோட உருவமோ,  உன்னோட வார்த்தையோ.. என்னை அப்படி செய்ய வெச்சுடுச்சு. முப்பது வயசாகியும் எனக்குன்னு ஒரு வாழ்க்கை அமையலியேங்குற என்னோட ஏக்கமும்-உணர்ச்சியும் கூட அதுக்கு தூண்டுகோலா இருந்திருக்கும்…! அது எதுவானாலும், இனி என்ன செய்யறதுன்னு ஒண்ணும் தீர்மானிக்க முடியாத இரண்டுங்கெட்ட நிலையிலத்தான் நானிருக்கேன்.  பைத்தியக்காரனானது நீ மட்டுமில்ல.. நானும் இப்பொ ஒரு பைத்தியக்காரியோட நிலையிலத்தான் இருக்கேன். நீ, ஆம்பளைங்கறதால என்னைத் தேடி துணிச்சலா வந்துட்டே; நான் பொண்ணுங்கறதால என்னால அப்படி செய்ய முடியாமப் போயிருச்சு.. இப்போதைக்கு இவ்வளவுதான் என்னால சொல்ல முடியும்.. தயவு செஞ்சு இப்போ நீ போயிடணும்னு…” அவள் சொல்லிக்கிட்டு இருக்கும்போதே வீட்டுக்குள்ள இருந்து அவளோட பாட்டி, ‘அவள்’ பெயர் சொல்லி அழைப்பது சந்துக்குள் இருந்த எங்க ரெண்டு பேருக்குமேக் கேட்டது. “பாட்டிக் கூப்பிடுது.. அது என்னைத் தேடி இங்கே வர்ரதுக்குள்ள நான் போறேன்.. மறுபடியும் எங்கேயாவது பார்க்கும்போது பாக்கியப் பேசலாம்னு” சொல்லிட்டு அவள் அங்கேயிருந்து நகர்ந்தா.. ஆனா, நான் அவளை இழுத்து நெஞ்சோட நெருக்கி அணைச்சேன். அணைச்ச உடனே ஆரம்பத்தில திணறிப்போன அவள், என்னோட நெருக்கத்துக்குக் கட்டுப்பட்டு, இறுக்கமா இணைஞ்சு முகத்தோட முகம் வெச்சி இழைஞ்சா..! எங்களுக்குள்ள இருந்த தீண்டாமை நெருப்பு அங்கேதான் முதன் முதலா அணைஞ்சி நீராச்சு! தரையில படர்ந்து கிடந்த கொடிக்கு, ஒரு கொம்பு கிடைச்சா எப்படி ஆர்வமாத் தாவி ஏறுமோ.. அந்த மாதிரியான ஒரு ஆர்வமும் ஏக்கமும் அவளோடத் தழுவல்ல இருந்துச்சு. அடுத்த நிமிசமே எங்கிட்ட இருந்து விலகி ஓடி, வீட்டுக்குள்ள நுழைஞ்சு “ஏன் பாட்டி” ந்னு அவள் கேட்ட குரல் என் காதுல விழுந்துச்சு. அந்தக் குரலோட ஒரு நிம்மதிப் பெருமூச்சும் வெளியாச்சுங்கறதை என்னால புரிஞ்சுக்க முடிஞ்சுது. யாருக்கும் தெரியாம எப்படி அங்கே போனேனோ, அது மாதிரியே யாருக்கும் தெரியாம வீடு வந்து சேர்ந்துட்டேன். ஒருமுறை சந்திச்சு, மனசும் – உடம்பும் நெருக்கமாத் தொட்டுக்கிட்டதாலயோ என்னவோ… எங்களுக்கு பயம் விட்டுப்போயி கொஞ்சம் தைர்யம் வந்திடுச்சு.. சந்தர்ப்பம் கிடைக்கும்போது மாத்திரமில்லாமே, சந்தர்ப்பங்களையும் நாங்களே உண்டாக்கி அடிக்கடி சந்திச்சோம். சந்திப்பு அதிகமாக அதிகமாக மனசைவிட, எங்க ரெண்டு பேருக்குமே உடம்புதான் அதிகமா கிடந்து துடிச்சுது. அந்த விசயத்துல என்னையவிட அவள்தான் சாக்கிரதையாகவும் – கவனமாகவும் இருந்தா. “நாம வாழ்க்கையில ஒண்ணு சேர்ந்தா, கண்ணியமாத்தான் சேரணும்.. மானங்கெட்டு ஊர் சிரிச்சு ஒண்ணு சேரக்கூடாதுன்னு” சொல்லி எத்தனையோ முறை உணர்ச்சியோட உச்சநிலைக்குப் போயி, நிலை தடுமாறும்போதெல்லாம் என்னைய எச்சரிச்சு விலகி நின்னுருக்கா! “சரி, எத்தனை நாளைக்குத்தான் இப்படியே இருக்கறது? முறைப்படி நமக்கு ஒரு கல்யாணம் நடக்கப் போறதில்லே. விசயம் வெளியேத் தெரிஞ்சாலே, உன்னோட உயர்சாதிக்காரங்கள்லாம் என்னைய கொன்னுப் போட்டுடத் துடிப்பாங்க… எங்க சாதிக்காரங்கள்லே உள்ள என்னைய மாதிரி ஆளுங்க அதுக்கு எதிரா வரிஞ்சுக் கட்டி நிப்பாங்க.. அப்புறம் இந்த ஊரே சாதிச்சண்டையில அங்கேயும் இங்கேயுமா மண்டையத்தான் உடைச்சிக்கும்னு..” நான் ஒரு தடவை சொன்னப்போ.. “இன்னொரு தடவை ‘உன்னோட உயர்சாதின்னு’ என்னைய அதுல சேர்த்து சொல்லாத! வரதட்சணை, சீருன்னு எதையுமே எதிர்பார்க்க முடியாத, ஏழ்மையான குடும்பம் எங்கக் குடும்பம்கறதால, சாதகப் பொருத்தம் சரியில்லேன்னு பொய் சொல்லியே, என்னைய கல்யாணம் பண்ணிக்க விருப்பமில்லாமப் போன உறவுக்காரங்களும்.. உயர்சாதின்னு நீ சொல்ற எங்க சாதிக்காரங்களும்; என்னையப் பொருத்தவரையில என்னையச் சேர்ந்தவங்க கிடையாது. இந்த சாதிக்காரங்க மேல எனக்கு வந்த கோவத்துல, ‘காதல்’கிற பேர்ல  யார்கூடயாவது ஓடிப் போயிடலாமான்னு எனக்குத் தோணுனது உண்டு. ஆனா, அது கோழைத்தனம்.. கையாலாகாத்தனம்னு என் மனசுக்குப் பட்டதாலத்தான்.. இதுவரையிலும் நான் அந்த மாதிரி காரியத்தைச் செய்யல. செய்யவும் மாட்டேன்..!” இதுதான் அவளோட பதிலா இருந்துச்சு. களவு போனாலும், காதல் வந்தாலும் ஊருக்குத் தெரியாமப் போகாது. உடனே தெரியலன்னாலும் மெல்ல மெல்லத் தெரிஞ்சுப் போயிரும்..! எங்க விவகாரமும் அரசல்புரசலா, முதல்ல இளவட்டங்களுக்கு இடையிலத்தான் பேச்சாயிருக்கணும்… அப்படியே மெதுவா ஒரு சில பெருசுங்க காதுலயும் சாதி வித்தியாசம் இல்லாம செய்தி பரவ ஆரம்பிச்சிருச்சு! “எலேய் மாரிமுத்தான் உன் பையனை எங்கியாச்சும் வெளியூர் பக்கம் அனுப்பி, ஏதாவது சோலியப் பார்க்க சொல்லுடே… இல்லேன்னா வம்பாப் போயிரும்னு..” ஏதோ ஒரு பெருசு எங்கப்பன் காதுல ’விசயத்தை’ ஊத்தி வெச்சுருச்சு. எங்கப்பன் வந்து என்கிட்ட குதிச்சாரு. “பாம்புப் புத்துல கையை விடாதடே குலமே அழிஞ்சுப் போயிரும். நீயி என்ன மனசுல நினைச்சுக்கிட்டு இருக்கே.. அந்த பொட்ட புள்ளைக்குத்தான் விவரமில்லேன்னா, உன் புத்தி எங்கப் போச்சுன்னு” வாய்க்கு வந்தபடியெல்லாம் பேச ஆரம்பிச்சரு. “ஏம்பா, நான் என்ன செய்யட்டும்; ஆகறதெல்ல்லாம் ஆயிப்போச்சு.. இனி நடக்க வேண்டியதைப் பார்க்க வேண்டியதுதான்னு.” அவரை அடக்க நினைச்சேன். “ஓ… பார்த்துருவோம்! வெத்தலை பாக்கும் தாம்பாளத்தட்டுமா இனிமேப் போயி பொண்ணு பார்த்து நிச்சயம் பண்ணிற வேண்டியதுதான்.. எலேய்.. போயி சோலியப் பாருடேய்.. அந்த புள்ளையோட அப்பன் காதுக்கு இன்னும் சேதிப் போகல… போயிருந்தா, இங்கே வெட்டு குத்துன்னு இந்நேரம் கொலை விழுந்திருக்கும்.. உன்னால, ஒரு ரகளை உண்டாவறாதுக்கு நானு விடமாட்டேன்.. நீயி, முதல்ல இடத்தைக் காலி பண்ணு. திருச்சியில உங்க மாமன் வீட்டுலப் போயி நின்னு, அங்கேயே உன் படிப்புக்குத் தகுந்த மாதிரி ஒரு சோலி கிடைக்குமான்னு பாரு. அதுதான் உனக்கும் நல்லடு.. ஊருக்கும் நல்லதுன்னு..” எங்கப்பா எனக்குத் தீர்ப்பே சொல்லிட்டாரு. நான் ஒண்ணும் சொல்லாம, இனி என்ன செய்யலாம்கிற யோசனையில அங்கேயிருந்து நகர்ந்தேன்.. ஆனா, எங்கப்பாரு என்னைய விடல. “இந்தப் பாரு, இன்னைக்கு ஒரு பொழுது இங்கே நின்னுக்க. நான் உனக்கு வழி செலவுக்கு பணம் தயார் பண்ணிக்கிட்டு வந்திடுறேன். நாளக்கி காலையில முதல் வண்டிக்கு நீ இந்த ஊரைவிட்டேப் போயிறணும்னு” சொல்லிட்டு எங்கப்பன் பாட்டுக்குப் போயிக்கிட்டே இருந்தாரு. எனக்கு என்ன செய்யறதுன்னு ஒரு முடிவுக்கும் வர முடியல. எங்கப்பனை எதிர்த்து – வேறு ஒரு இடத்துல தங்கிக்கிட்டு இந்த ‘காதல்’ விவகாரத்தை வளர்த்துக் கொண்டு போகவும் முடியாது. இப்போ இருக்கறதே இந்த பகல் பொழுதும், ராத்திரியும்தான்..! பொழுது விடிஞ்சதும் எங்கப்பன் என்னைய வண்டியேத்திட்டுத்தான் உட்காருவாரு. அதற்குள்ள என்ன செய்துட முடியும்!? இன்னைய பொழுதுக்குள்ள ‘அவளை’ எப்படியாவது சந்திச்சே ஆகணும்.. அதுவும் முடியாமப் போச்சுன்னா, ஒருவேளை வாழ்க்கையில எப்பவுமே அவளை சந்திக்க முடியாமப் போனாலும் போயிடும்கற பயம் எனக்கு வந்துடுச்சு. வழக்கமா சந்திக்கிற இடம்னோ, நேரமின்னோ எங்களுக்கு கிடையாது. சூழ்நிலைக்குத் தகுந்த மாதிரிதான் எங்களோட சந்திப்பை நாங்க வெச்சுக்கறது.. இன்னைக்கு அப்படி ஒரு சூழ்நிலை உருவாகவோ – உருவாக்கவோ முடியாமப் போயிடுமோன்னு நான் தவிச்சுப் போயி நின்னேன். ‘அவளை எப்படி சந்திக்கறதுங்கற திவீரமான யோசனையோட நான் எங்க வீட்டுக்குப் பின்னால நின்னுகிட்டு இருக்கும்போது, அந்த அழியா ‘அவள்’ வயல்காட்டுப் பக்கம் போறதைப் பார்க்க முடிஞ்சுது.. பொழுது சாய இன்னும் கொஞ்ச நேரம்தான் இருக்கும்… நான், அவள் போன வழியிலேயேப் போகாம, வேற வழியா சுத்திக்கிட்டு… ஓட்டமும் நடையுமா வேகமாப் போயி; சந்தர்ப்பம் கிடைச்சா வயல்காட்டில வழக்கமா சந்திக்கிற – மரம் அதிகமா நிக்கற – ஒரு மறைவானப் பகுதியில நின்னுக்கிட்டு, அவளுக்கு மட்டும் கேட்கற மாதிரி சப்தம் காட்டவும்; புரிஞ்சிக்கிட்டு – சுற்றிப் பார்த்துக்கிட்டே வேகமா அங்கே வந்து சேர்ந்தாள். “யேய், கழுகுக்கு வேர்க்கும்னு சொல்லுவாங்களே அந்த மாதிரி உனக்கு மூக்கு வேர்க்குமா? நான் இந்த நேரத்துல இங்கே வருவேன்னு உனக்கு எப்படித் தெரியும்னு” கேட்டபடி என்னருகில் வந்தாள். “இல்லை, இல்லை நீதான் என் மனசு தெரிஞ்சு – என் சூழ்நிலை தெரிஞ்சு இந்த நேரத்துல இங்கே வந்திருக்கேன்னு நினைக்கிறேன்.. சரி, இந்த நேரத்துல வயல்காட்டுப் பக்கம் வரமாட்டியே.. இப்ப எதுக்கு வந்தே?” ”அது.. மாடு கயத்தை அறுத்துக்கிட்டு ஓடிடுச்சு. தெருப்பக்கம் தேடிப் பார்த்துட்டேன்.. ஒரு வேளை வயல்காட்டுப் பக்கம் வந்திருக்குமோன்னு பார்க்க வந்தேன். அது சரி, அது என்னா.. உன்னோட மனசு, சூழ்நிலைன்னெல்லாம் சொல்றே..!?” ”உங்க மாட்டுக்கு நாம ரெண்டு பேருமே நன்றி சொல்லணும்! அது மட்டும் அறுத்துக்கிட்டு ஓடாமப் போயிருந்தா.. நீயும், நானும் இந்த கடைசி சந்திப்பைக் கூட சந்திச்சிருக்க முடியாதுன்னு..” நான் சொன்னதுமே அவளோட முகத்துல ஏற்பட்ட திகைப்பை என்னால உணர முடிஞ்சுது. “என்ன சொல்றே!? யாருக்காவது நம்ம விசயமெல்லாம் தெரிஞ்சுப் போச்சா? ஏதாவது பிரச்சனையா?ன்னு அவசரமாக் கேட்டாள். “ஓரளவு ஊருல ஒரு சிலபேருக்குத் தெரிஞ்சிருக்கும்னு நினைக்கிறேன்.. எங்கப்பன் காலையில வானத்துக்கும் பூமிக்குமா துள்ளிக் குதிச்சாரு. நான் இனிமே இந்த ஊர்லயே இருக்கக் கூடாதுன்னும் சொல்லிட்டாரு… எதிர்த்து எதையுமே என்னால சொல்ல முடியல… நான் இப்பவும் எங்க அப்பன்  உழைப்புலதானே சாப்பிட்டுக்கிட்டு இருக்கேன்; அதனால, எதிர்த்து எதையும் என்னால சொல்ல முடியல! சொல்லியும் பிரயோசனமில்லே; எங்கப்பனே நமக்கு எதிர்ப்பாத்தான் செயல்படுவாரு.. அவருக்கு உயர்ந்த சாதிக்காரங்களோட இருக்குற விசுவாசத்தைவிட, தான் தாழ்ந்த சாதிக்காரன்குறதுல நம்பிக்கை அதிகம்! நான் திருச்சியில இருக்குற எங்க மாமன் வீட்டுக்குப் போயிறணுமாம்; அங்கே இருந்துக்கிட்டே வேலையைத் தேடிக்கவும் சொல்லிட்டாரு. நானு பலவிதமாவும் யோசிச்சுப் பார்த்துட்டேன்… எனக்கு ஒரு வழியும் புலப்படல. நாளைக்கு விடிஞ்சது வர முதல் வண்டி வரையிலும்தான் நான் இந்த ஊருல இருக்க முடியும். அதுக்குள்ள உன்னைய சந்திக்க முடியாமப் போயிடுமோன்னு பயந்து கிடந்தேன்… எப்படியோ உன்னைய பார்க்க முடிஞ்சுதே அது போதும் எனக்குன்னு” சொல்லும்போதே எனக்கு கண்ணு கலங்கிப் போச்சு.. அவளுக்கும்தான்…! ‘அவள்’ மௌனமா நின்னுக்கிட்டே இருந்தாள்! அவளோட அந்த மௌனம் எனக்கு இம்சையா இருந்துச்சு.. “நேரம் ஆயிக்கிட்டே இருக்கு.. இருட்டப் போவுது.. நாம ரெண்டுப் பேருமே சும்மா நின்னுக்கிட்டே இருக்கறதுல அர்த்தமில்ல.. எனக்கு என்ன செய்யறதுன்னு தெரியல. ஆனா, நீ என்னா செய்யணும்னு சொல்றியோ.. அதை நான் செய்யத் தயாராத்தான் இருக்கேன்.. என்ன செய்யலாம் சொல்லுன்னு..” நான் கேட்டப்புறம்தான் அவள் மௌனம் கலைஞ்சி என்னையப் பார்த்தாள். அவளோட கண் கலங்கிப் போயிருந்தாலும்.. அதுல ஒரு உறுதியும் தீர்மானமும் தெரிஞ்சுது! இந்த நிலையில நாம எதுவுமே செய்யமுடியாது… இப்படி ஒரு பிரிவு நம்ம ரெண்டு பேருக்குமே நல்லதுன்னுதான் நான் நினைக்கிறேன். நமக்கு மட்டுமில்லே; இந்த ஊருக்கே நல்லதுதான்!” இப்படி ஒரு பதிலை அவள் சொல்வான்னு நான் எதிர்பார்க்கல. என்னைக் கட்டிப் புடிச்சுக்கிட்டு ஓன்னு.. அழுவாள்னு நினைச்சேன்… அப்படி அழுதிருந்தா.. அந்த அழுகையையே அளவுகோலா வெச்சு அவளுக்கு என் மேல உள்ள காதலோட வேகத்தை அளந்து என் மனசு சுகப்பட காத்திருந்துச்சு! ஏமாந்துபோன மனசுல ஏற்பட்ட வெறுப்போட, “நீ இந்த மாதிரி உறுதியாப் பேசுவேன்னு நான் நினைக்கல. நீ உண்மையிலேயே என்னைக் காதலிச்சியான்னே எனக்கு சந்தேகமா இருக்குன்னு…” நான் சொல்லி முடிச்சதுமே.. ”சீய்..! காதலா..? உன்னைப் பொருத்தவரையில எப்படியோ..! ஆனால், என்னைப் பொருத்தவரையில நான் உன்மேல வெச்சிருக்கற அன்புக்கோ, உறவுக்கோ ‘காதல்’னு பேர் வெச்சு கொச்சைப் படுத்திடாதே! ‘காதல்’ங்கிற வார்த்தைக்கு இப்பல்லாம் அர்த்தமும் – அகராதியும் மாறிப்போச்சு. காதல்ங்கிற பேர்ல வசப்பட்டுப் போயிட்டாலே, அடுத்த கட்டமா உடலுறவை எப்போ வெச்சுக்கலாம்கிறதுதான் இப்பல்லாம் நோக்கமாப் போச்சு.. உணர்ச்சி வசப்பட்டு தன்னை இழக்கறது வேற; தன்னை இழக்கறதுக்காகவே உணர்ச்சியோட காத்திருக்கறது வேற! கர்ப்பமானவுடனே, காதலனைத் தேடி அலையற காதலியையும்; காதலிய கர்ப்பத்தோட விட்டுட்டு ஓடிப்போன காதலனையும்; நாம இப்பல்லாம் நிறையவே பார்க்கலாம்… ஊரையும் – உறவையும் எதிர்த்து காதல் கல்யாணம்னு பண்னிட்டு, கொஞ்ச நாள் கழிச்சு வரதட்சணைக் கேட்டு உதைக்கிற, கொடுமைப்படுத்துற, கொலை பண்ணுற காதலனையும்; காதல் கணவனையும் – அவனுக்குப் பிறந்த குழந்தைகளையும் விட்டுட்டு, வேறொரு காதலனோட ஓடிப்போற காதலிகளையும் பார்க்கலாம். இதுலயே இரண்டு விதமான காதல் இருக்கு.. ஒண்ணு நல்ல காதல், இன்னொண்ணு கள்ளக் காதல்..!” சொல்லிட்டு சிரிச்சாள்.. எனக்கு கொஞ்சம் வெட்கமாவேப் போயிடுச்சு. மறுபடியும் சொன்னாள்.. “இந்த மாதிரி காதல் வியாதி எனக்கு இருந்திருந்தா, இப்படி முப்பது வயசு வரையில காத்துக்கிட்டு இருந்திருக்க மாட்டேன். மாரிமுத்தான் மகனுக்கு.. அதாவது உனக்கு -உன்னோட பாசையில – காதலியாவும் இருந்திருக்கவும் மாட்டேன்னு..” சொல்லிட்டு மருபடியும் சிரிச்சாள். எனக்கு எதிர்ல நிக்கற இவள் என்னைவிடவும் உலகம் தெரிஞ்சவள்ங்கிறது அப்பத்தான் எனக்கு முழுசா புரிஞுது..! ஒரு யோகிக்கிட்ட உபதேசம் கேட்கற மாணவன் மாதிரி, நான் அவள்கிட்ட.. “இப்போ என்ன செய்யலாம்னு சொல்றே.. நிச்சயமா, என்னைவிட உன்னாலத்தான் நம்ம விசயத்துல ஒரு தீர்மானத்துக்கு வரமுடியும்னு நினைக்கிறேன்னு..” சொன்னேன். “இன்னைக்குன்னு இல்லே; இப்போ நமக்குள்ள உறவுன்னு ஏற்பட்டுப் போச்சோ… அப்பவே நான் தீர்மானிச்சு வெச்சிருந்த விசயத்தைத்தான் இப்பவும் நான் சொல்லப் போறேன்… சில கதையிலல்லாம் வரமாதிரி, சில படங்கள்ல வரமாதிரி, ஒரு ஆவேசத்தோட நாம ஓடிப்போகவும் கூடாது.. தற்கொலைப் பண்ணிக்கவும் கூடாது. வாழ்ந்தா பகிரங்கமா ஊரறிய சேர்ந்து வாழணும்.. அது இந்த ஊர்லத்தான்னு இல்லே, அது எந்த ஊர்லயா இருந்தாலும் பரவாயில்லே.. ஆனா, நாம வாழணும்கறதுக்காக; ஊருக்குள்ள ஒரு கலவரம் உண்டாகவோ… வெட்டும் குத்தும் ஏற்படவோ நாம காரணமாயிடக்கூடாது. அப்படி பல பேருடைய நிம்மதியை பலி கொடுத்துட்டு நாம சேரத்தான் வேணுமா? சாதியைத் தூக்கி எறிஞ்சிட்டு ஒண்ணு சேரணும்னு நினைக்கிற நாமளே, சாதிவெறியோட நடக்குற சண்டைக்கு காரணமாகலாமா? ஒரு உதாரணத்துக்கு நானும், நீயும் இந்த ஊரைவிட்டு ஓடிப்போறோம்னே வெச்சுக்குவோம்.. அடுத்தது என்ன நடக்கும்னு கொஞ்சம் யோசிச்சுப் பாரு.. எங்க சாதிக்காரன் அத்தனைப் பேரும் எங்க வீட்டுக்கும் முன்னாலக் கூடி, எங்கப்பனுக்கு ஆதரவா ஆயுதமெடுக்கவும் தயங்க மாட்டாங்க. என்ன காரணம்…!? எங்கப்பனோட மானம் போயிடுச்சேங்குற கரிசனமா…!? எங்க குடும்பத்துல இப்படி ஒரு சம்பவம் நடந்துப் போச்சேங்குற பரிதாப உணர்ச்சியா…? அந்த கரிசனமும், பரிதாபமும் அவங்களுக்கு இருந்திருந்தா… ஏழ்மை நிலையில இருக்குற எங்கப்பன் கையில பணத்தைக் கொடுத்து, என்னைக்கோ என்னைக் கட்டிக் கொடுத்து, என் கையில இப்ப ஒண்ணோ, ரெண்டோ பிள்ளைங்க இருந்திருக்கும். பின்னே, என்னத்துக்காக அவங்கள்லாம் எங்கப்பனோடக் கூடிக்கிட்டு கலவரத்துக்கு தயாராவாங்கன்னு நினைக்கிறே…! அதுதான் சாதிவெறி..! தன் கண் எதிர்ல கஷ்டப்படுறவன் தன் சாதிக்காரனாவே இருந்தாலும், ஒரு சக மனிதனோட துயரத்துல பங்கெடுத்துக்காத இந்த மனுசனுங்க ‘சாதிவெறி’ வந்தா மட்டும் ஒண்ணு சேர்ந்துடுவானுங்க. இந்த வியாதி இப்போ எல்லா சாதியிலயும் – எல்லா மதத்திலயும் உண்டாயிருச்சு! மனிதாபிமானத்தோட ஒண்ணு சேர்ந்து வாழ வேண்டிய மனுசக்கூட்டம்.. மதவெறியோடயும் – சாதிவெறியோடயும் மட்டும்தான் ஒண்ணு சேருதுன்னு..” அவள் ஏதோ பிரசங்கம் மாதிரிப் பேசிக்கிட்டே இருந்தப்ப நான் குறுக்கிட்டு, “இதெல்லாம் மாறணும்னா, நம்மளை மாதிரியுள்ளவங்க.. கலப்புத் திருமணம் செய்யறதால நாளடைவில இந்த சாதி அழிஞ்சுப் போயிறாதான்னு?” கேட்டேன். “ஹூம்.. நீ சொல்ற கலப்புத் திருமணம் பெரிய, பெரிய டவுன் பக்கத்துல வேணுமானா சுலபமா இருக்கலாம்; ஆனா, நம்ம கிராமம் மாதிரி பல ஊர்கள்ல அது இன்னும் எட்டாத கனவுதான்.. வேணுமான ஏதாவது டனைப் பார்க்க ஓடி ஒளியலாம். அது என்ன சுலபமான விசயமா? நடைமுறையில எவ்வளவு சிரமம்னு நீ யோசிச்சுப் பார்த்தியா? நானே இப்போ உன்கூட வரேன்னு வெச்சிக்க.. அடுத்ததா நாம எங்கே போகலாம்.. என்ன செய்யலாம்கற திட்டம் ஏதாவது உன் கைவசம் இப்போ இருக்கா?” அவளோட இந்த கேள்விக்கு என்கிட்ட எந்த பதிலும் இல்லாம நான் பேசாம நின்னப்ப.. “எந்த ஒரு காரியத்தையுமே செய்யணும்னு தோணுச்சுன்னா, அந்த காரியத்தை செய்யக்கூடிய சூழ்நிலையில நாம் இருக்கமான்னு பார்க்கணும். ஒரு திட்டமும் இல்லாம, வெறும் ஆவேசத்தோட தொடங்குற எந்தக் காரியமும் ஆரம்பத்துலயேக்கூட தோத்துப் போயிரும்.. அப்படி எவ்வித முன்யோசனையும் இல்லாம, ஒரு வெறியோட பாய்ந்து ஓடற ‘காதல்’லாம் ரொம்பவும் கேவலமான நிலையில பாதியிலயே அறுந்துப் போயிறுது. நாம அப்படி ஆயிடக்கூடாது! கோழைத்தனமா ஓடி ஒளிஞ்சு வாழத்துடிக்கற ஆவேசம் நமக்கு இப்போ வேணாம்.. நீ இப்போதைக்கு திருச்சிக்கேப் போயிடு! இப்போ ஊருல ஒண்ணு ரெண்டு பேருக்குத் தெரிஞ்சுருக்கற நம்ம விசயம் நாளைக்கே எங்கப்பாவுக்குத் தெரிஞ்சாக்கூட, நீ ஊர்ல இல்லைங்கறதால விவகாரமில்லாமப் போயிரும். நீ, முதல்ல உனக்குன்னு ஒரு வேலையைத் தேடிக்க. எந்த விசயத்திலயும் சுயமா ஒருத்தன் ஒரு முடிவெடுக்கணும்னா, முதல்ல அவன் சுயமா சம்பாதிக்க வேணும். முதல்ல உன் காலை ஊன்றி நில்லு. காலமும் – நேரமும் நமக்கு சாதகமா மாறுச்சுன்னா.. நானே உன் நிழல் தேடி வருவேன்.. அப்படி ஒரு காலம் வரும்னு நாம நம்புவோம். நம்பிக்கைதான் வாழ்க்கையோட சந்தோசங்களுக்கெல்லாம் அடிவேரா இருக்க முடியும்னு…” சொல்லி முடித்தவள்.. என்கிட்ட நெருங்கி வந்து என் கைகளைப் பிடிச்சுக்கிட்டு, குரல் நடுங்க.. “நீ இப்போதைக்கு இந்த ஊரைவிட்டுப் போனாலும், என் மனசுப் பூரா உன்கிட்டத்தான் இருக்கும்கறதை மட்டும் நீ நம்பணும்..! எனக்கும் மனம் விட்டு அழணும்போல இருக்கு.. ஆனால், இப்போ இல்லே.. வீட்டுக்குப் போனதும், யாரும் பார்க்காம – யாருடைய தொந்தரவும் இல்லாம எல்லாத்தையும் நினைச்சு தனிமையில எனக்குப் போதும்.. போதும்கற அளவுக்கு அழணும்னு” அவள் சொல்லி முடிச்சப்போ.. என்னோட இயலாமையை எண்ணி வெட்கத்தோட அவளை இழுத்து அணைத்துக் கொண்டேன்..! “நாம பிரிய வேண்டிய நேரம் வந்தாச்சு.. இனி சந்திச்சா பிரியக்கூடாது…! அந்த தீர்மானத்தோடத்தான் நீ போகணும்.. அப்படி ஒரு சூழ்நிலையை நாம உண்டாக்கிக்கணும். அடிதடி சண்டை கலவரம்னு நம்மாள ஏற்படாம – நாம ஒண்ணு சேர என்ன வழின்னு நீ யோசிக்கணும்.. அதுவரையில நான் காத்திருப்பேன்.. ’முப்பது  வயசுக்கு அப்புறம் எனக்கு எதுக்குப்பா கல்யாணம்னு?’ எங்கப்பன்கிட்ட சொல்லிட்டா அவரும் ‘சரிதான்’னு பேசாம இருந்திடுவாரு. அதனால, நான் காத்திருப்பேன்னு சொன்னதை நீ முழுசா நம்பலாம்னு..” சொல்லிட்டு, விலகி நின்னு “நீ காலையில முதல் வண்டிக்குத்தானே போறேன்னு” கேட்டாள். “இல்லை, அதுவரையிலயும் கூட இந்த ஊர்ல நிக்க எனக்கு இப்போ விருப்பமில்ல.. நான் ராத்திரி வண்டிக்கேப் போயிறலாம்னு நினைக்கிறேன். பிரியப்போறோம்கிற வேதனையோட இந்த மண்ணுலே நின்னுக்கிட்டு இருக்கற ஒவ்வொரு வினாடியும் எனக்கு நரகமாயிருக்கு! உன்னையப் போல உறுதியான மனசு எனக்கு இல்லே..”பேசிக்கிட்டே இருந்ததுல இருட்ட ஆரம்பிச்சிடுச்சுங்கறதை நாங்க மறந்து நின்னுட்டோம்.. பிரிவோட துயரத்துல நேரம் – காலத்தை யாரு கணக்குப் போட்டுக்கிட்டு இருந்தா…! தூரத்துல ‘அவள்’ அப்பனோட குரல் இவளோட பெயரைச் சொல்லிக் கூப்பிடறது காதில விழுந்துச்சு.. அவள் என்னை இறுக்கமா அணைச்சு முத்தமிட்டு.. அதே வேகத்தோடயே என்கிட்ட இருந்து விலகி வரப்புல இறங்கி ஓடிக்கிட்டு இருந்தாள்.. அவள் ஓடி மறையற வரையில அங்கேயே நின்னுக்கிட்டு இருந்தேன்.. ‘அவள்’ ஓடி மறைஞ்ச மாதிரியே இந்த ‘சாதிவெறி’யும் ஓடி ஒளியற காலம் வருமாங்கற ஏக்கத்தோட வீட்டுக்கு வந்து சேர்ந்தேன். எங்கப்பன் காத்துக்கிட்டு இருந்தாரு.. “எலேய் பணம் சரி பண்ணி கொண்டாந்துருக்கேன். காலை வண்டிக்குப் புறப்பட்டுருவீயில்லேன்னு” கேட்டாரு. “இல்லப்பா, ராத்திரி கடைசி வண்டிக்கே நான் போறேன்னு..” சொல்லிட்டு வீட்டுக்குள்ள நுழைஞ்சு என் துணி, சாமான்களையெல்லாம் எடுத்து வெக்க ஆரம்பிச்சேன். எங்கப்பன் ஆச்சர்யத்தோட என்னைய பார்த்துக்கிட்டே நிக்கறாரு.. அவருக்கு என்னோட அவசரம் புரியல.. புரிஞ்சுக்கிட்டு என்னதான் செய்யப்போறாரு!? இப்போ சொல்லுங்க..! ஊரு கலவரப்பட்டு போறதுக்கு நான் காரணமாயிடுவேன்னு எங்கப்பன் சொல்றது நியாயமா? கலவரத்துக்கெல்லாம் காரணம் சாதிதான்னு நீங்க வெளியில சொல்லலேன்னாலும் பரவாயில்லீங்கய்யா..! உணர்ந்தீங்கன்னா அது போதும்! அதனாலத்தான், ஆரம்பத்துலயே நான் சொன்னேன்… படிச்சு பட்டம் வாங்கியாச்சு! என்ன பிரயோசனம்? தன்னை ‘தாழ்த்தப்பட்டவன்’னு தானே சொல்லி, அதற்கும்கூட ஆதாரத்தோட போனா – சிரமப்பட்டு அலைஞ்சா, அரசாங்கத்துல வேலையும்கூட வாங்கிக்கலாம்; என்ன பிரயோசனம்? மனுசனா – சுதந்திரமா வாழ வேணாமா!?

***

சகோதரர் சுலைமான் இப்போது சென்னை விழுப்புரம் அருகே உணவகம் நடத்தி வருவதாக ஆசிப் மீரான்  தெரிவித்தார். மலரில் வந்த பழைய குறிப்பு இது : 1954 ஆம் ஆண்டு சீர்காழி வட்டத்தில் ‘கொள்ளிடம் – தைக்காள்” கிராமத்தில் பிறந்து கடந்த 20 வருட காலமாக வளைகுடாவில் வாழ்க்கை நடத்திவரும் சுலைமான், தமிழ் இணையத்தின் மூத்த உறுப்பினர்களில் ஒருவர். நகைச்சுவை எழுத்துக்காக இணையத்தில் அதிகமாகப் பேசப்படுபவர். தமிழ் மேல் ஆர்வமும், கதை, கட்டுரைகள் புனைவதில் தேர்ச்சியும் பெற்றவர்.

***

நன்றி: சுலைமான்,  சென்ஷி, அமீரகத் தமிழ் இணைய இதழ்