இந்தக் குறும்படத்திற்கு நண்பர் சுரேஷ் கண்ணன் முகநூலில் எழுதிய சிறு விமர்சனம் இது. படத்தையும் கீழே இணைத்திருக்கிறேன். நன்றி.
*
நான் எவ்வித மனநிலையில் இருந்தாலும் சரி, கால்சென்ட்டர் அல்லது அரிய வகை ஆஃபர்.. போன்ற மார்க்கெட்டிங் அழைப்புகள் வந்தால் என் எரிச்சலையோ கோபத்தையோ காட்டவே மாட்டேன்.
‘சாரிங்க.. வேண்டாம். ப்ளீஸ்” என்று சொல்லி விட்டு சில நொடிகள் கழித்து கட் பண்ணி விடுவேன்.
ஏனெனில் நானும் ஏறத்தாழ அவ்வாறான தொழிலில் இருப்பதால் அவர்களின் கஷ்டம் தெரியும். என் அலுவலகத்திற்கு வரும் எந்தவொரு மார்க்கெட்டிங் நபரையும் அமர வைத்து தண்ணீர் தரச்சொல்லி, புன்னகையுடன் அவர்கள் சொல்வதை கேட்டுக் கொள்வேன்.
வேண்டாம் என்பதை இதமாக சொல்லி அனுப்புவேன். ஏனெனில் பல அலுவலகங்களில் அப்படி அமர்ந்து காத்திருந்த அனுபவம் உண்டு என்பதால்.
சாலையில் பிட் நோட்டீஸ் தருபவர்களிடமிருந்து வாங்காமல் இருப்பதே என் வழக்கம். எதற்கு வீணாக வாங்கி அதைக் கசக்கிப் போட வேண்டும் என்பதற்காக. ஆனால் என் தோழி ஒரு முறை சொன்னார். “இதைச் செய்வது அவர்களின் பணி. வாங்கி ஒரு பார்வை பார்த்து விட்டு சற்று தூரம் கடந்து தூக்கி எறியேன். அல்லது பையில் கூட வைத்துக் கொள். வேறு எதற்காவது உதவும்.” என்பது போல் சொன்னார். அதிலிருந்து அதையும் பின்பற்ற முயற்சிக்கிறேன்.
**
எதற்கு இப்போது இந்த வியாக்கியானம் என்றால் நண்பர் அருண் பகத், இந்தக் குறும்படத்தை அனுப்பியிருந்தார். (Sir 2 mins).
சிறு வணிகர்கள் முதல் அரசியல்வாதிகள் வரை ஒருவரையொருவர் சார்ந்தே நாம் வாழ வேண்டியிருக்கிறது. எல்லாமே ஒருவகை பிழைப்புதான். சிலருக்கு நாய் பிழைப்பு. சிலருக்கு பேய்.
இது போன்ற மார்க்கெட்டிங் தொந்தரவுகளால் தனிநபர் சுதந்திரத்தில் இடையூறு ஏற்படுகிறதுதான்.. மறுப்பேயில்லை. ஆனால் ஒரே ஒரு நிமிடம் நம் பதிலை இதமாகச் சொல்லி மறுத்து விடுவதால் நமக்கொன்றும் நஷ்டமில்லை. அல்லது அது அவசியமானது என்றால் நமக்கும் நேரமிருந்தால் விவரங்களைக் கேட்டு வைத்துக் கொள்ளலாம். என்றாவது உதவக்கூடும்.
அப்படியொன்றும் விழித்திருக்கும் நேரம் முழுக்க நாம் வெட்டி முறிக்கப் போவதில்லை.
‘அவர்களும் மனிதர்கள்தான்’ என்கிற அடிப்படையான உணர்வு இருந்தால் போதும்.
சிலர் எந்தவொரு மார்க்கெட்டிங் அழைப்புகளையும் தன்னிச்சையான, வரவழைத்துக் கொண்ட எரிச்சலில், எகத்தாளத்தில்தான் கையாள்வார்கள். அதைப் பெருமையாகவும் பகிர்ந்து கொள்வார்கள்.
ஒருவகையில் நம் வாழ்க்கை முறையும் நம்மை சிடுமூஞ்சிகளாக மாற்றி வைத்திருக்கிறது எனலாம்.
தொடர்ந்து தொல்லை செய்யும் நபர்களிடம் எரிந்து விழுவது கூட சரி. ஆனால் முதன்முறையிலேயே எரிந்து விழுவது மிகை. ஒருவர் அவரின் தொழில் சார்ந்து ஒன்றை சொல்ல உங்களை அணுகுகிறார். அவ்வளவே. அவர் பிச்சையெடுக்கவில்லை. வேண்டும் அல்லது வேண்டாம் என்று ஒற்றை வார்த்தையில் இதைக் கடந்து விடலாம். நாமும் டென்ஷன் ஆகி அவரையும் டென்ஷன் ஆக்க வேண்டாம்.
எதிர்முனையில் ஆண்கள் என்றால் எரிந்து விழும் சிலர், பெண்கள் என்றால் தொடர்ந்து பேசி கடலை போட முயல்வார்கள். இதில் ஒரு அற்ப சந்தோஷம் அவர்களுக்கு. பாவம் அந்தப் பெண்கள் இதையெல்லாம் சகித்துக் கொள்ள வேண்டும்.
**
இந்தக் குறும்படம் இவ்வாறான மனிதர்களைப் பற்றி ஒரு வட்டப்பாதையில் சுழன்று காண்பிக்கிறது. ஒரு சமூகத்தில் எப்படி சங்கிலித்தொடர் போல ஒருவரையொருவர் சார்ந்திருக்கிறோம் என்பதை சில நிமிடங்களில் மிகச் சுருக்கமாக சொல்லி விடுகிறது.
மேலே குறிப்பிட்ட அத்தனை விஷயங்களையும் சில நிமிடங்களில் எனக்கு நினைவுப்படுத்தி விட்டது.
என்னளவில், அரசியல்வாதி வந்து கையெடுத்து கும்பிடும் காட்சியிலேயே இந்தக் குறும்படம் முடிந்து விடுகிறது. பிறகு வரும் நிமிடங்கள் தேவையில்லை என்று தோன்றுகிறது. ஆனால் இயக்கியவருக்கு வேறு நோக்கங்கள் இருக்கலாம்.
“ரெண்டு நிமிஷம் பேசலாமா?’ என்று ஆரம்பிப்பது மட்டும் சற்று செயற்கையாக இருக்கிறது. (தலைப்பை அப்படி வைத்து விட்டதால் அந்த வசனமோ?!)
சிறப்பான முயற்சி. இயன்றவர்கள் பாருங்கள்.
*
*
Thanks to : Suresh Kannan , Arun Bhagath & Pocket Films – Indian Short Films