சுந்தரராமசாமிக்கு ஒரு கடிதம் – தாஜ்

சு.ரா.வுக்கு இறப்பே இல்லை!‘ எனும் முதலாம் ஆண்டு அஞ்சலியை ’திண்ணை’யில் வாசித்துவிட்டு தொடருங்கள். ’ஏதாவது குறிப்பு முதலில் எழுதுய்யா’ என்றார் கத்திரிக்காவோடு வெண்டைக்காயும் வாங்கச்சொல்லும் கவிஞர் தாஜ் ஐயா. என்ன எழுதுவது? ஓயாமல் சண்டையிடும் ஓர் இலக்கியக் குழு பற்றி நம் ஹனீபாக்காவிடம் கேட்டபோது , ‘தம்பி ஆப்தீன்…, துணிக்கடை வச்சவனெல்லாம் சுந்தரராமசாமி ஆயிடமுடியுமா?’ என்று அட்டகாசமாகக் கிண்டல் செய்ததுதான் உடனே ஞாபகம் வருகிறது (அஸ்மா, இதை டைப் செய்யும்போதுகூட சிரிப்பு வருதுடீ!).

***

சுந்தரராமசாமிக்கு ஒரு கடிதம் (அஞ்சலி – 6)

தாஜ்

அன்புடன் சு.ரா.வுக்கு

நலம்.
நலமறிய நாட்டம்.

ஆறு வருடங்களுக்கு முன்
இதே அக்டோபர்-15ல்தான்
அடைமழையில் நீங்கள்
எங்களை விட்டும் பிரிந்தீர்கள். அது
ஓர் நிரந்தரப் பிரிவாகிப் போனதில்
பல இலக்கிய அன்பர்களைப் போல்
நானும் மனதால் அலைக்கழிக்கப் பட்டேன்.
துக்கமும் துயரமும் அழுத்த
அதிகத்திற்கும் கையிழந்த நிலையில்
செய்வதறியாது திரிந்தேன்
ஒத்த நண்பர்களிடம் புலம்பினேன்.
ஆனாலும் பாருங்கள்…
அழவில்லை.

இறப்பு அழுவதற்குரிய நிகழ்வா?
ஒருவரின் தலையாய விடுதலை
அடுத்தவர்களுக்கு
எப்படி அழுவதற்குரிய நிகழ்வாகும்?
அதுவும் ஓர் இலக்கியவாதியால்
அதற்காக அழ முடியுமா?
அழுதிருந்தால்
நீங்களே கூட ஒப்புக்கொள்ள மாட்டீர்கள்.

‘சாவின் நிதர்சனத்தை
கூடுதலாக அறிந்த அவனால்
எப்படி அழ முடியும்?’
சாவுக்கு அழுவது சரியா? என
நீங்கள் ஜீவித்திருந்த நாளில்
எவரேனும்
உங்களை கேட்டிருக்கும் பட்சம்
இவ்விதமோ… அல்லது
இன்னும் அழுத்தம் தந்தோ..
கருத்தை முன் வைத்திருப்பீர்கள்.
அறிவேன்.

இலக்கியக்காரன்
கொண்ட தாகத்திற்காகவே
இறந்திருப்பான்…
பிறப்பான்…
திரும்பவும் இறப்பான்.
அவனது இந்தப் பிறப்பிற்கும் இறப்பிற்கும்
எண்ணிக்கையே இல்லை!

தெரியவில்லை.
நான் இதனை
உயிரோடுதான் எழுதுகிறேனா?
என்ன சொல்கின்றீர்கள்…
வேகமாகச் சொல்லுங்கள்…
ஆமாவா..?.
பேஷ்.
சந்தோஷம்.

சு.ரா. அவர்களே
நீங்கள் உங்களது இருப்பை
படைப்பின் பக்கங்களில்
திறமாய் நிறுவிவிட்டுதான்
மறைந்திருக்கின்றீர்கள்.
மறுக்க முடியாது.
இறந்தும் வாழ்வதென்பது இதுதானா?
கவிதையாக அல்லவா இருக்கிறது!

அப்போ…
உங்களுக்கு சாவே கிடையாதா?
சாத்தியமா அது?
எப்படி இல்லாமல் போகும்?
இயற்கைச் சித்தாந்தமே தடுமாறி விடாதா?
இத்துப் பொட்டாய் அழிதல்தானே
ஒன்றின் பரிபூர்ண நிலை.
முற்றில்தானே பிறப்பின் மோட்சம்!
நீங்கள் எப்படி விதிவிலக்காக முடியும்?
முடியாது.
முடியவே முடியாது.

நீங்கள் இருப்பை மட்டும்
விட்டுவிட்டுப் போகவில்லை.
வேரறுக்கும் விஷஜந்துக்களை
தேடிப் பிடித்து
உயிர்பேணி
வளர போசாக்கு இட்டல்லவா
போய் இருக்கின்றீர்கள்?
இது ஒன்று போதாதா
நீங்கள் ஒரு நாள் முற்றுப் பெற.

பசிகூடிய நேரமெல்லாம்
கண் பார்க்க
உங்களின் மீது
ஊர்ந்த அதுகளின்
மேதமைக் கொட்டமும்
விஷக்கொடுக்கின் கடியுமாய்
சொல்ல முடியாத அருவருப்பில்
நெளிந்தீர்களா இல்லையா?
சுவைகண்ட அதுகளின் மீதப் பசிக்கு
இருக்கவே இருக்கிறது
உங்களது கவிதையான இருப்பு!
இன்றைக்கோ நாளைக்கோ
மகத்தான அந்த இருப்பு
என்னையொத்தவர்கள் மலைக்கிற
அந்த இருப்பு
முழுமையாய் செல்லரிக்கப்பட்டு விடும்.
அதுகளின் திறமை சாதாரணமானதல்ல.
நீங்களே மெச்சியத் திறமை!

நம்பலாம்.
அது நடக்கும்.
கஷ்டமாகத்தான் இருக்கிறது.
என்ன செய்ய?
நியதிபடியும் கூட
ஜீவன்களின் முழுமரணம்
தவிர்க்க முடியாததுதான்.

*
உங்களுக்குத் தெரியுமா…?
இந்த ஆறு வருடமாய்
கர்மசிரத்தையாக
உங்களுக்கு நான்…
அஞ்சலி எழுதிக் கொண்டிருக்கிறேன்!
யோசிக்கிற போது
அதிகமாகத்தான்
உணர்ச்சிவசப்படுகிறேன் என்றும் தோன்றுகிறது.

நீங்கள் இறந்த நாட்களில்
உடனே நான் அஞ்சலி எழுதவில்லை.
பதிலாய்…
இக்கவிதையைத்தான் எழுதினேன்:.

**
கதவை மூடு.
—————-
(சுந்தர ராமசாமி நினைவாக)

கதவை மூடு
காற்று வருகிறது
குப்பைக் கூளமாக
சாக்கடை நாற்றமும்
சுவாசத்தை அறுக்கிறது.

கதவை மூடு
ஏதேதோ அலைகிறது
பனிமூட்ட விடியலில்
குளிர் காயும் வெறியோடு
ஒழுங்குகளைத் துவைக்கிறது.

கதவை மூடு
ஊர்வன மேவும் நேரமிது
விஷக் கொடுக்குகளின்
வலியற்ற தீண்டலில்
மெய்யுடல் தடிக்கிறது.

கதவை மூடு
இரைச்சல் எழுகிறது
தலையெடுப்பவர்களது
காலடிப் பதிவின் அதிர்வில்
நினைவுகளும் சிதைகிறது.

கதவைத் திற
காற்று வரட்டுமென்ற
காலம் போய்விட்டது.
திசைகளற்ற பேரோசைப்
பெருவெளிக் காட்டி.

**

‘கதவைத் திற காற்று வரட்டும்’ -என்கிற
உங்களது பிரபலமான
கவிதையை மையப்படுத்தி
எழுதியக் கவிதையிது.
உங்களுக்குப் பிறகு
நல்ல இலக்கியம் நசிவுறும்
என்கிற தடுமாற்றத்தால்
எழுதிய கவிதையிது.
இன்றைக்கு வாசித்துப் பார்க்கிற போது
கொஞ்சம் அநியாயத்திற்கு நான்
உணர்ச்சிவசப்பட்டிருப்பது
ஊர்ஜிதப் படுகிறது.

போகட்டும்.
இத்தனைக்கு
உங்களின்பால்
உணர்ச்சிப் பூர்வமான ஈடுபாடு கொள்ள
காரணங்களும்தான் என்ன?

நான்
இலக்கிய ஈடுபாடு கொண்ட பருவத்தில்
நீங்கள் எனக்கு இன்னொரு படைப்பாளி.
என் உணர்வுகளில் தைத்த எழுத்தை எழுதிய
இன்னும் சில படைப்பாளிகள் மாதிரிதான்
நீங்களும் எனக்கு.
இலக்கிய நுட்பங்களை
உங்களிடம் கற்ற மாதிரி
அவர்களிடமும் கற்றிருக்கிறேன்.
நீங்களே மதித்து வியந்த
மூத்த படைப்பாளிகளின்
எழுத்துக்களையும் படித்துக் கற்றிருக்கிறேன்.
பிறகு எப்படி உங்களின்பால்
இத்தனைக்கு
தனித்துவமான ஈடுபாடு?
இழைபிரித்து சொல்வது கஷ்டம்தான்.

உங்களைத் தவிர்த்து
நான் குறிப்பிடுகிற படைப்பாளிகள் எல்லாம்
இலக்கியம் சார்ந்து மட்டும்தான்
உச்சம் தொட்டவர்கள்.
நீங்கள் அப்படியல்ல
இலக்கியம் தாண்டி வெளிவட்டச் சங்கதிகளில்
இலக்கியக்காரனின் பார்வையை
அச்சமின்றி..
எந்தவோர் ஆளுமையோடும்
சமரசம் செய்துக் கொள்ளாமல்
கருத்துக்களை பதிவேற்றியவர்.
கொண்ட கருத்திலிருந்து முரண்படும் போதும்
தக்க காரணங்களை முன் வைத்து
நிஜத்தைப் பேசியவர்.

எல்லா முற்போக்குக் கருத்துக்களுடனும்
உங்கள் அளவில் பரிச்சியம் கொண்ட
படைப்பாளிகள் நம்மில் உண்டென்றாலும்
அது குறித்தெல்லாம்
நீங்கள் தீர்க்கமாய் பேசியதை மாதிரி
இன்னொரு படைப்பாளி பேசியதில்லை.

குறிப்பாய்…
பிறப்பால்
உங்களையொத்து
உயர்ந்தக் குலத்தில் பிறந்த
படைப்பாளிகளிகள் எவரும்
உடைக்கப் பயந்த
பழமையான
கர்ண கொடூரமான
மூர்க்கமான
சமூகக் கட்டுக்களை
மிகச் சுளுவாய்…
அச்சமின்றி உடைத்து
அதனை எழுத்தில் பதிவு கண்டவர் நீங்கள்.

உங்களைத் தொடர்ந்து நான்
கவனித்தும் வந்திருக்கிறேன்.
என்றைக்குமே நீங்கள்
சொன்ன ஒன்றை மறந்தும்
மறைத்துப் பேசியதில்லை.
இந் நிலை
உங்களைத் தவிர
நம் படைப்பாளிகள் வேறு எவரிடமும்
நான் காணாத ஒன்று.

சிந்தனைப் பரப்பில்
தீர்க்கமான தெளிவு இருந்தாலே
இப்பேறு கிட்டும்.
என் கணிப்பு சரியாக இருக்குமானால்
உங்களிடம்
பெரியதோர் மரியாதையோடு
நான் ஒடுங்கிக் கவிழ்ந்தது இங்கேதான்.
உன்னதங்களின் முன்
விழுந்து தரிசிப்பதில்
தவறேதுமில்லை என்றே நினைக்கிறேன்.

சு.ரா. அவர்களே
தொடர்ந்து
உங்களைக் கொண்டாடுவதில்
பிறர் எவரையும்விட
சந்தோசம் கொள்கிறேன்.
முடிந்தால் பதில் எழுதுங்கள்.
இல்லாது போனாலும் வருத்தமில்லை.

வாய்ப்பென்று ஒன்று கிட்டுமானால்…
மற்றவைகளை
நேரில் பேசிக் கொள்ளலாம்.

வணக்கத்துடன்

தாஜ்  | satajdeen@gmail.com

1:29 PM 26/10/2011

***

மேலும் பார்க்க :

சுந்தர ராமசாமி [1931-2005] ஐந்தாம் ஆண்டு நினைவு – தாஜ்

சுந்தர ராமசாமி என்கிற மாமனிதர்! – கி.ராஜ நாராயணன் /

உமாமகேஸ்வரிக்கு ஒரு கடிதம் : சு.ரா.

சுந்தர ராமசாமி [1931-2005] ஐந்தாம் ஆண்டு நினைவு
கநாசு.தாஜ்

ஐந்து ஆண்டுகளுக்கு முன்
இதே அக்டோபரில்தான்
சுந்தர ராமசாமி மறைந்தார்.
அவரது துயரச் செய்தியை
அறியவந்த நேரம்,
தமிழகம் தழுவ பெருமழை!
மனதை நெருடியது சஞ்சலம்
பார்வை கொண்ட இடமெல்லாம்
பெருக்கெடுத்தது நீர்!
நாடு பூராவும்
என்னை ஒத்த/ என்னை விஞ்சிய
எத்தனை எத்தனையோ வாசகர்கள்

பல இடங்களில் வெள்ள அறிவிப்பு!

கலை இலக்கியத்தோடு
ஆத்மார்த்தமாய் ஈடுபாடுகொண்ட
இலக்கியப் பெருசுகளின்
பட்டியலில் சு.ரா.வும் உண்டு.

அத்தனை இலக்கியப் பெருசுகளும்
எழுதுவதோடு தங்களது பணியை
முடித்துக் கொண்டபோது…
கலை இலக்கியம் பரவலாக்கப்படவும்/
நுட்பம் கொள்ளவும்
ஓர் இயக்கம் காணவும் முயன்று
வித்தியாசப்பட்டவராக தெரிந்தவர் சு.ரா.!

தமிழில்….
நவீன இலக்கியம் வளம்பெற வேண்டும்/
அதைத் தோடி வாசிப்போர் பெருகவேண்டுமென
நிஜமாகவே அவர் விரும்பினார்.
இருபது, அல்லது முப்பது வருடங்களில்
அது சாத்தியமாகும் எனவும்
தீர்க்கமாக நம்பினார்.
தனது, ‘ஜே.ஜே: சில குறிப்புகள்’ நாவலில்
அதனைக் குறிப்பிட்டு எழுதவும் செய்தார்.
(ஜே.ஜே: சில குறிப்புகள்/ பக்கம்:2)

”மாயக் காம உறுப்புகளை மாட்டிக்கொண்டு,
அவ்வுறுப்புகளை ஓயாமல் நம்மேல்
உரசிக் கொண்டிருக்கும் அற்பங்கள்
தமிழில் எழுதுகின்றன என்பதால் நமதாகிவிடுமா?
சீதபேதியில் தமிழ்ச் சீதபேதி என்றும்,
வேசைத்தனத்தில் தமிழ் வேசைத்தனம் என்றும் உண்டா?
இப்போது 1978இல்
இதுபற்றிய நம் சிந்தனைகள் தெளிவாக இல்லை.
ஒப்புக்கொள்கிறேன்.
குழம்பியும் மயக்கங்கள் நிறைந்தவையாகவும் இருக்கின்றன.
வாஸ்தவம்தான்.
ஆனால் இந்த நூற்றாண்டின் இறுதியில்,
அல்லது அடுத்த நூற்றாண்டின் முதல் பத்துக்குள்
நடக்கப்போவது வேறு.
அன்று ஒரு தவளைகூட கிணற்றுக்குள் இருக்க முடியாது.
இது எனக்கு வெகு நிச்சயமாகத் தெரிகிறது.
அன்று பிடிவாதமாக வெளியே வராதவை
உயிர் மூச்சற்று அழிந்துபோகும்.
இது இயற்கையின் நிர்தாட்சண்யமான விதி.”

இன்றைக்கு அவரது இந்தப் பதிவையும்
அவர் குறிப்பிட்ட கால நிர்ணயத்தையும் பார்க்கிறபோது,
இந்த மக்களை நம்பி… அல்லது
வீச்சாக கிளம்பிய
நவீன இளம் எழுத்தாளர்களை நம்பி…
அவர் கொண்ட தூரநோக்கு கணிப்பு/ அந்தத் தீர்க்கம்
ரொம்ப அதிக/ அவரது பேராசையாகப் படுகிறது.

இலக்கியப் பரவல் சார்ந்த
அவரது இந்த ஆசை
அடுத்தப் பத்தாண்டுகளில் நடக்கும் என்பதற்கும் கூட
எந்த முகாந்திரமும் இல்லை.

அவர் சீராட்டிப் பாராட்டி
வித்தைகள் கற்றுத்தந்த
சிஷ்ய எழுத்தாளர்கள் சிலர்
அவருக்கே பாடம் கற்றுத்தர முயன்றதும்-
எதிர் முகாம் தேடிப் போனதும்
இங்கே சொல்லத் தகுந்த
அவர் சார்ந்த சோகம்.

சு.ரா.வின் காலத்தை கணக்கில் கொண்டால்…
அன்றைய காலக்கட்டத்தில்
இலக்கியத்தை இன்னும் இன்னுமென
பட்டைத் தீட்டிய கர்த்தாக்களான
க.நா.சு./ தி.ஜா./ வெங்கட்ராம்/ நகுலன்/
அசோகமித்திரன்/ கி.ரா./ ஆதவன் போன்று
நிஜத்தில் இயங்குபவர்கள் இன்றைக்கு இல்லை.

இது உலகமயமாக்கலின் காலம்!
அந்த நிஜம் சார்ந்த
இலக்கியத் தொப்புள்கொடி வம்சமே
இன்று அறுப்பட்டுக்கிடக்கிறது.

நவீன இலக்கிய வட்டத்திற்குள்
இன்றைக்கு
தீர எழுதுகிறவர்கள்
இருக்கிறார்களோ இல்லையோ
‘நானே இலக்கியம்’ என்று
தண்டோரா போட்டுக்கொள்பவர்கள் இருக்கிறார்கள்.

நிஜத்தில்….
இன்றைய நவீன இலக்கியப் படைப்பாளிகள்
சினிமா என்கிற சின்ன வீட்டை
ஏற்படுத்திக் கொண்டவர்களாகவும், அல்லது
அப்படியோர் சுகம் தேடுபவர்களாகவுமே
தெரிய வருகிறார்கள்.
ஆசை அவர்களை அலைக்கழிக்கிறபோது
அவர்களும்தான் என்ன செய்வார்கள்?

ஆசை குறித்து புத்தன் சொன்னது நிஜமென்றால்…
இவர்களது இன்றைய இலக்கிய ஆக்கங்கள்
நமக்கென்ன பெரிய சிலாகிப்பைத் தந்துவிடப் போகிறது.

ஆனால்,
கவிதைத் தளத்தில் தொடர்ந்து
புரட்சி நிகழ்ந்து கொண்டிருக்கிறது.
புதுக்கவிதை வாசிப்போரைவிட
அதனை எழுதுபவர்கள் அதிகம்!
கணவனிடம் முரண்படும் அத்தனைப் பெண்களும்
கவிதையெழுத உட்கார்ந்துவிடுவதாகவும் படுகிறது.
கவிதையெழுத என்ன கஷ்டம்?
பேப்பரும் பேனாவும்
எல்லோர் வீட்டிலும் கிட்டத்தானே செய்கிறது!

என்றாலும்….
சு.ரா.வும்/ காலச்சுவடும்
நம் பெண் கவிஞர்களுக்கு தந்த
தார்மீக ஊக்கம்
இன்றைக்கு எதிரொலித்துக்கொண்டிருப்பது நிஜம்.
அந்தப் பெண் கவிஞர்கள்
நிறைவாக சாதிப்பவர்களாகவும் இருக்கிறார்கள்.
என்பதும் வியப்பே!
சு.ரா.வின் ஆவி ஆறுதல் கொள்ளும் இடமிது.

*

இலக்கியம் சார்ந்தவர்களுக்கு
சு.ரா. எழுதிய கடிதங்கள் சிலவற்றை பிரசுத்து,
இந்த மாத காலச்சுவடு(Oct-2010)
சு.ரா.வுக்கு
ஐந்தாம் ஆண்டு நினைவு அஞ்சலி செய்திருக்கிறது.

அந்தக் கடிதங்களில் ஒன்றை தேர்வு செய்து,
இங்கே பதிந்து
அவரது நுட்பம் கூடிய எழுத்தை
வாசகர்கள் நுகரத் தந்திருப்பதே… என் அஞ்சலி!

இந்தக் கடிதம்…
புதுக் கவிதைக்காக
பல பாராட்டுகளையும்/ பரிசுகளையும் பெற்ற
கவிஞர் உமா மகேஸ்வரிக்கு அவர் எழுதியது.
வளரும் படைப்பாளியை சந்தோஷப்படுத்தும்
அன்பின் வரிகளாகவே இருக்கிறது.

உமாவுக்கான செய்திகளையும் தாண்டி
கடிதத்தில் நிறையப் பேசி இருக்கிறார் சு.ரா.
தன்னைச் சார்ந்து அவர் பேசியிருப்பது
நம் கவனத்திற்குரியதாக இருக்கிறது.

மேலும்…
கடிதவரிகளில் பெருக்கோடும்
கிண்டலுக்கும் கேலிக்கும் இனிக்கவும் செய்கிறது.
உமாவிடம்,
உரிமையோடு கேலி பேசியிருப்பதும்
கேரள பெண் சினேகிதகளைப் பற்றி
அவர் சிணுங்குவதும் கூடுதல் இனிப்பென்றாலும்
யோசிக்கவைக்கிறது.

தவிர,
ஹமீது என்கிற மனுஷ்யபுத்திரனும்
ராஜாத்தி என்கிற சல்மாவும் கூட
அவரது கிண்டல் கேலிக்கு தப்பவில்லை.

குறிப்பாய்…
அவரது கேலியில் ராஜாத்தி அதிகமாவே மிண்ணுகிறார்!

பொதுவில் ஒரு சொல்
ஆபிதீன்…

இந்த ஆண் படைப்பாளிகளுக்கு
நோபலோ, சாகித்திய அகாடமியோ தரும்
மகிழ்வைவிட
பெண் தோழிகளே
பெரும் மகிழ்வு தருபவர்களாக இருப்பார்கள் எனப்படுகிறது!
இதுவும் இன்னொரு இயற்கை சார்ந்த நியதியோ?

அவ்வளவுதான்.
இனி…
சு.ரா.

***

சுந்தர ராமசாமி
27.12.01

அன்புள்ள உமா,

அடிக்கடி உங்களுடன் போனில் பேச வேண்டுமென்றும்
அதற்கு வசதிப்படாதவரை
கடிதமேனும் எழுத வேண்டும் என்றும் நினைத்துக் கொள்கிறேன்.
கடந்த இரணடு மூன்று வாரங்களாக
என் திட்டப்படி
எதுவும் செய்ய முடியாதபடி வேலை நெருக்கடி.
புதுவருஷத்தில் சிறிது ஓய்வாக இருக்க வேண்டும் என்று
நினைத்துக் கொள்கிறேன்.

இரண்டொரு முறை ராஜாத்தி போனில் பேசினார்.
நன்றாகவும் உற்சாகமாவும் இருக்கிறார்.
தேர்தலில் வெற்றி பெற்ற பின்பும்
ஆட்சி
தன் கைக்கு வரவில்லையே என்ற வருத்தம் இருக்கிறது.
அது நியாயமான வருத்தம்தான்.
பெண்களின் ஆதங்கங்கள்
ஏனோ ஆண்களுக்கு தெரிவதில்லை.

உங்கள் மகளைப் பற்றி ராஜாத்தியிடம் சொன்னேன்.
எனக்கு என்ன அபிப்ராயமோ
அதே அபிப்பிராயம்தான் அவருக்கும்.
அந்தப் பெண்ணிடம் பேசும் போது
நீங்கள் பெரிய அதிர்ஷ்டசாலி என்ற எண்ணம் வருகிறது.
இப்படி ஒரு பெண் குழந்தை இருக்கும் போது
எதைப்பற்றியும் நீங்கள் கவலைப்பட வேண்டியதில்லை.
பின்னால் எந்தப் பாடமெடுத்து
அவளுக்குப் படிக்க விருப்பம் என்பதை அறிந்து
அவளுடையப் போக்குக்கு விட்டுவிட வேண்டும்.
இது என் வேண்டுகோள்.

சி.சு. செல்லப்பாவுக்கு
சாகித்திய அக்காடெமி பரிசு கிடைத்ததைப் பற்றி
ஒரு சிறு கட்டுரை எழுதி
‘தினமணி’க்கு அனுப்பியிருக்கிறேன்.
அது வெளிவந்தால் நீங்கள் படித்துப் பாருங்கள்.

சமீப காலங்களில் நிறைய பேருடன்
அக்கப்போர் மூண்டுவிட்டது.
குமுதம் இதழ்,
கவிஞர் நகுலன்,
கவிஞர் சிற்பி,
இந்தியா டுடே ஆசிரியர்
மாலன் போன்ற பலரிடமும்.
எல்லோருக்கும் சரமாரியாக
கடிதங்கள் எழுதியிருக்கிறேன்.

காலச்சுவட்டில் என்னுடைய எழுத்து
வெளிவர நான் விரும்பும் போது
ஹமீதுக்குத்தான் அவற்றை அனுப்பி வைப்பேன்.
அவருக்கு இந்தக் கடிதங்களையும் அனுப்பி வைக்க வேண்டும்.
பெரிய மனது பண்ணி அவர் இவற்றை வெளியிட்டால்
காலச்சுவடு வாசகர்களுக்கு அவை படிக்கக் கிடைக்கும்.
அண்ணனும் தங்கையும்(ஹமீதும், ராஜாத்தியும்)
தமிழகத்திலேயே
முக்கியமான இரு வி.வி.ஐ.பி.க்களாகிவிட்டார்கள்.
முதுகில் மரு இருந்தால்தான்
இது போன்ற அதிர்ஷ்டங்கள் எல்லாம் நடக்கும்.
எனக்குக் கிடைத்துக் கொண்டிருப்பது வசை.
கண்ணனுக்குக் கிடைத்துக் கொண்டிருப்பது
என்னைப் போல் பல மடங்கு வசைகள்.
எங்களுடைய ஜாதகங்கள் அப்படி.

நான் உங்களை என் சிநேகிதி என்று அழைத்தால்
நீங்கள் எதற்காக அழவேண்டும் என்பது தெரியவில்லை.
கண்ணீர் விழியோயோரத்தில்
எப்போதும் காத்துக் கொண்டு நிற்குமா என்ன!
வாய்விட்டுச் சிரியுங்கள்.
எவரைப் பற்றியும் கவலைப்படாமல்,
உலகம் உய்யும்.

ஸ்வரூபராணி என்ற பெயரில்தான் தனித்துவம் இருக்கிறது.
உமா தமிழ்நாட்டில் தெருவுக்கு இரண்டு பேர் இருக்கிறார்களே.
வயதைக் கேட்டால்…
சொல்ல மாட்டேன் என்கிறீர்கள்.(இது அவ்வளவு
கேள்வியாக இல்லாமல் இருக்கலாம்.)
ஆனால் ஒரு மனித ஜென்மத்திற்கு
எழுபது வயது ஆகிவிட்டால்
அது எந்தக் கேள்வியை வேண்டுமென்றாலும் கேட்கும்
சுதந்திரம் இந்திய மரபில் இருக்கிறது.
உங்கள் மகளிடம் என்னைப் பற்றிப்
புகார் சொன்னீர்கள் என்றால்,
‘தாத்தா அப்படிக் கேட்டதில் என்ன தப்பு?’ என்று சொல்வாள்.
சிறுவயதிலேயே அவள் என் கட்சியில் சேர்ந்தாகிவிட்டது.

குழந்தைகள் எவ்வளவு என்று கேட்டால்
40 பெயரை அடுக்கியிருக்கிறீர்கள்.
எப்போதாவது நீங்கள் இல்லாத போது
உங்கள் மகளுடன் பேசி
விஷயத்தைத் தெரிந்து கொள்வேன்.
அவளுக்கு உண்மை பேசுவதில் நம்பிக்கை இருக்கிறது.
உங்கள் பெண் என்றாலும்கூட
எந்தக் கோணலும் இல்லாத குழந்தை.

நன்றாக உழைக்கும் கணவரை
உத்தம ஸ்திரீகள்
பொதுவாகப் பாராட்டுவதுதான் வழக்கம்.
கணவர் கைநிறையச் சாம்பாதித்தால்
தனக்கும் குழந்தைகளுக்கும்
பொன்னும் பட்டும்
வாங்கிக் கொள்ளலாம் என்று நினைப்பார்கள்.
கலிகாலத்தில் எல்லாம் தலைகீழாக இருக்கிறது.

எனக்கு வயதாவதைப் பற்றி
நீங்கள் துளியும் கவலைப்பட வேண்டாம்.
ஜாதகப்படி 95 வயது வரையிலும் போகும்.
அதற்கு மேலும் போகலாம்.
அதற்குள் சுமார் பத்து பத்துப் பதினைந்து
புத்தகங்களேனும் எழுதிவிடுவேன்.
சி.சு. செல்லப்பா 70 வயதுக்கு மேல் 85 வயதுக்குள்
தோராயமாக ஐயாயிரம் பக்கங்கள் வரையிலும்
எழுதியிருப்பதாகச் சொல்கிறார்கள்.
அவரைத் தோற்கடிக்க வேண்டும் என்று
நினைத்துக் கொண்டிருக்கிறேன்.

சங்குக்கோலம் இருப்பது எங்கள் வீட்டின் வாசலில்தான்.
பண்டிகை நாளென்றால்
மைதிலி கணினியில் பணியாற்றும்
அரை டஜன் பெண்களையும் சேர்த்துக்கொண்டு
முன் திண்ணையிலிருந்து தார் ரோடு வரையிலும்
கோலம் போட்டு விடுவார்கள்.
அதை மிதிக்காமல் வரவேண்டுமென்றால்
ஹெலிகாப்டரில் மொட்டை மாடியில் வந்து இறங்கலாம்.
இல்லை பின்பக்கமாக வந்து
சமையலறை வழியாக வீட்டுக்குள் வந்து விடலாம்.

நான் புகைப்படத்திற்காக நிற்கும் எல்லா இடங்களும்,
தென்னை மரங்களும், வாழையும், புல்பூண்டுகளும்
எங்கள் வீட்டின் பகுதியே.
நான் ஒரே மகன் என்பதால்
என் அப்பா எனக்குத் தந்துவிட்டுப் போயிருக்கும்
அருமையான வீடு இது.
நீங்கள் பார்த்தாள் ரொம்பவும் சந்தோஷப்படுவீர்கள்.
95 வயதில் புறப்பட்டுப் போவதில் வருத்தம் ஒன்றுமில்லை.
என்றாவது ஒரு நாள் போகவேண்டியதுதான்.
ஆனால்…
இந்த வீட்டையும், மண்ணையும், மரங்களையும்,
மட்டைகளையும், அழகான என் நாற்காலியையும்
விட்டுவிட்டுப் போகவேண்டியிருக்குமே என்று
நினைக்கும்போது நெஞ்சை அடைத்துக்கொள்கிறது.

நீங்கள் ஆத்மார்த்தமாக ஸ்வாமி கும்பிட வேண்டும் என்று
அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
ஸ்வாமியிடம் உங்களை ரட்சிக்கக் கேட்டுக்கொள்வதுடன்
என்னையும் ரட்சிக்கக் கேட்டுக்கொள்ளுங்கள்.
என் நண்பர்கள் பேராசிரியர் ஜேசுதாசன் அவர்களும்,
ஹெப்சிபா ஜேசுதாசன் அவர்களும்
உடல், பொருள், ஆவி மூன்றையும்
இயேசு நாதருக்குத் தத்தம் செய்திருப்பவர்கள்.
அவர்கள் காலையிலும் மாலையிலும் ஜெபம் செய்கிறபோது
ஒருநாள் கூட என்னைப்பற்றி யேசுநாதரிடம் சொல்ல
மறந்து போனதே கிடையாது.
இது நூற்றுக்கு நூறு உண்மை.
இதே முறையில் எனக்காக
அல்லாவிடமும் விண்ணப்பித்து வருகிறார்
கவிஞர் சல்மா அவர்கள்.
நீங்களும் உதவ வேண்டும்.

என் எழுபதுகளில் பல வரிகள்
உங்கள் மூளையில் ஒட்டிக்கொண்டிருப்பது
எனக்குப் பெருமையாக இருக்கிறது.
போகப்போக இவர்களுடைய எண்ணிக்கை
கூடிக்கொண்டே போகும் என்பதில்
எந்தச் சந்தேகமும் இல்லை

இப்பொழுது தமிழ் மண்ணில்
ஐந்து சிநேகிதிகள்தான் எனக்கு இருக்கிறார்கள்.
(அம்பை, லல்லி, சல்மா, பிரசன்னா,
ஆண்டிப்பட்டி அம்மையார் ஆகியோர்.)
கேரளாவில்
இதற்கு மூன்று மடங்கு அதிகமாக இருக்கிறார்கள்.
அவர்கள் கடிதம் எழுதும் போது
சகோதரர் என்ற வார்த்தையைப் பயன்படுத்தாமல்
சுந்தர ராமசாமிக்கு என்று மட்டுமே எழுதுவார்கள்.
தங்கள் கடிதங்கள்
ஏதோ ஒரு கற்பனையான இடத்தில்
மாட்டிக்கொள்ளும்போது உருவாகிற விசாரணையிலிருந்து
எந்தக் களங்கமும் இல்லாமல் தப்பித்துக்கொள்ள வேண்டுமென்ற
முன் ஜாக்கிரதை அவர்களிடம் இல்லை.
எல்லாம் வடிகட்டின அசடுகள்.

இந்த சிநேகிதிகளின் எண்ணிக்கை
ஒரு சில வருடங்களில் ஐயாயிரத்தை எட்டிவிடும்.
எதிர்காலம் பெண்களுடையது.
ஆண்கள் இப்போதே
சமையல் படித்து வைத்துக்கொள்வது நல்லது.
அப்படி ஏற்பட்டால்
பெண்களுக்கே உரிய பொறாமைக் காய்ச்சல்
உங்களுக்கு வராமல் அடிக்கடி கண்ணீர் சிந்திவிட்டு
அதைப் பற்றி எனக்கும் எழுதுங்கள்.
அப்போது எனக்கு மிகவும் சந்தோஷமாக இருக்கும்.

ஜனவரி ஆறாம் தேதி சென்னையில் வைத்து
காலச்சுவடு பிரசுரத்தின் பத்துப் புத்தகங்கள்
ஒருசேர வெளியிடப்படுகிறது.
அழைப்பிதழ் அச்சேறி வந்ததும்
உங்களுக்கு அனுப்பி வைக்கிறேன்.
கணவருடன் போய்விட்டு வாருங்களேன்.
சென்னையில்தான் நல்லி, குமரன், போத்தீஸ், லலிதா ஜுவல்லரி,
தங்கமாளிகை, உம்மிடி எல்லாம் இருக்கின்றன.
ஒரு ஐந்து லட்சம் எடுத்துக்கொண்டுப் போனால் போதுமானது.
பணத்தை வீணாக்குவது எனக்குப் பிடிக்காது.

ஆண்டிப்பட்டியில் மழையுண்டா? இங்கு நல்ல மழை.
பனிகாலத்தில் இவ்வளவு மழை பெய்ததே இல்லை.
சில இடங்களில் மட்டும் மழை ஏன் பெய்கிறது என்பது
உங்களுக்குத் தெரியுமா?

உங்கள் படைப்புகளை தொட்டுக்கூடப் பார்க்கவில்லை.
நீங்கள் கோபப்பட்டுக் கொள்ளவோ கண்ணீர் சிந்தவோ கூடாது.
இங்கு எனக்கு வேலை பிடுங்கிக்கொண்டிருக்கிறது.
இனி கொஞ்சம் கொஞ்சமாகப் படிப்பேன்.
சாதகமான விஷயங்களை வெளிப்படையாகவும்
பாதகமான விஷயங்களைக் கொஞ்சம் தளுக்காகவும்
நிச்சயம் சொல்வேன்.

உங்களுக்கும் உங்கள் மகளுக்கும்
மற்றபடி எல்லோருக்கும்
எங்கள் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

மிக்க அன்புடன்,
சுரா.

***
நன்றி: காலச்சுவடு, கநாசு.தாஜ் , உமா மகேஸ்வரி

ஸ்… ஆ… ஓ…! – ‘கநாசு’ தாஜ் கவிதைகள்

அன்புடன்….

நவீன இலக்கியத்தின் ஆதர்ச புருஷர்களில் ஒருவரான மறைந்த க.நா.சு.வைப் பற்றியும்/ அவரது கவிதை திறனைப் பற்றியும் சென்ற வாரத்தில் ‘ஆபிதீன் பக்கங்களில்’ கட்டுரை ஒன்றை எழுதி இருந்தேன். அதில், அவரது ‘உயில்’ கவிதையை பிரசுரித்து அது எனக்கு இஷ்டமான கவிதை என்றும் குறிப்பிட்டு இருந்தேன். அந்த ‘உயில்’  கவிதையின் முடிவில் ‘என் பெயரை யாருக்கு இஷ்டமோ அவர்கள் எடுத்துக் கொள்ளட்டும்.’ என்று க.நா.சு.எழுதியிருந்ததை  சுட்டி, ‘நான் ரெடி! அவரது பெயரை எடுத்துக் கொள்வதில்  எனக்கு  இரட்டை  சந்தோஷம்!  அவரது உறவுகளும் சம்மதித்தால் அந்த மஹா கலைஞனின் பெயரை எடுத்துக் கொள்ள கசக்குமா என்ன?’ என்று என் பேராவலையும் வெளிப்படுத்தி இருந்தேன்.

க.நா.சு.வின் மருமகனும்/ மஹா நாடக கலைஞனும்/ தற்போது தமிழ்த் திரைப்படத்தில் தோன்றும் நடிகருமான/ ப்ரியத்திற்குரிய திரு.பாரதி மணி அவர்கள், அந்தக் கட்டுரையை வாசித்த நாழிக்கு என்னை டெலிபோனில் அழைத்து ‘க.நா.சு.வின் பெயரை நீங்கள் எடுத்துக் கொள்வதில் எனக்கோ/ என குடும்பத்தில் வேறு யாருக்கோ எந்த  ஒரு தடையுமில்லை’யென  முழு சம்மதம் சொன்னார்.

எனக்கு எல்லையில்லா மகிழ்ச்சி. என்னால் அப்போதைக்கு முடிந்தது, அந்த மகிழ்ச்சியை அப்படியே வெளிக்காட்டவும்/ நன்றி சொல்ல மட்டும்தான். அவர்  நெகிழ, அதை அழுந்தமாகவே செய்தேன்.

இன்று தொட்டு நான் எழுதும் கவிதைகள்/ பிற்காலத்தில் வர இருக்கிற என் கவிதைத் தொகுப்புகள்/ என் கட்டுரைகள்/ விமர்சனக் கட்டுரைகள் முதலானவற்றில்  என்  பெயரை  ‘கநாசு’ தாஜ்  என்றே குறிப்பிடுவேன். இங்கே அதை பிரகடனமாகவே செய்கிறேன்.

க.நா.சு.வின் குடும்பத்தார்களுக்கு மீண்டும் என் நன்றி உரித்தாகட்டும்.

*

சென்ற பதிவில் க.நா.சு.வின் கவிதைகளைத் தந்திருந்தபோது, கவிதை வாசிப்பை, ரசனைக்கொண்டதாக மாற்றிக்கொள்ள குறிப்புகள் வைத்திருந்தேன். இந்தக் கவிதை பதிவில், ஓர் ஆங்கில கவிதை ஒன்றை திரு.சுந்தரராமசாமி வாசித்து ரசித்ததைப் பற்றிய குறிப்பை வைக்கிறேன். ஜெயமோகன் தனது பதிவொன்றில்  அது குறித்து குறிப்பிட்டிருந்ததை அவருக்கான  நன்றியோடு இங்கே எடுத்து ஆள்கிறேன். ஜெ.மோ….. நன்றி.

கீழே உள்ள ஆங்கில கவிதை ‘ராபர்ட் ஃப்ராஸ்ட்’டுக்கு சொந்தமானது!  கீழே….  இன்னும் கீழே…  உள்ள தமிழ்க் கவிதைகள் ‘ராபர்ட் ஃப்ராஸ்ட்’ கவிதைகளோ/ சுந்தர ராமசாமி படித்து ரசித்தக் கவிதைகளோ கிடையாது. அந்தக் கவிதைகள் என்னுடையது. உங்களுக்காக…  உங்களது  கவிதை  ரசனைக்காக உங்கள் முன் வைக்க விரும்பி எழுதிய புத்தம் புதிய புதுக் கவிதைகள்!

//

Nature’s first green is gold,
Her hardest hue to hold.
Her early leaf’s a flower;
But only so an hour.
Then leaf subsides to leaf.
So Eden sank to grief,
So dawn goes down to day.
Nothing gold can stay.

Robert Frost

– நான் படித்து முடித்தேன்.  மீண்டும் படிக்கச் சொன்னார்.  அவருக்கு கவிதையைக் காதால் கேட்டால் ஏறாது. தானே வாங்கிக் கண்ணாடி போட்டு மீண்டும் படித்தார். கவிதை படிக்கும் சுந்தர ராமசாமி ஒரு அபூர்வமான ஓவியம் போல, முதன் முதலாக ஆனா ஆவன்னா எழுதும் குழந்தையின் அதிதீவிரம், கண்டடைதலின் பரவசம், மூடிவைத்து என்னைப் பார்த்து மென்மையாகப் புன்னகை செய்தார். காற்றில் வரைந்தார். உதட்டை அழுத்தியபடி ‘ஆமாம் அது சரிதான்’ என்பதுபோல தலையாட்டினார். பெருமூச்சுடன் ‘என்னமா எழுதியிருக்கார்…. இல்லையா?’ என்றார். ‘பார்த்தா ரொம்ப சாதாரணமான கருத்து. சாதாரணம்னா மதிப்பில்லாததுன்னு அர்த்தமில்லை. பெரிய மகத்தான விஷயங்களுக்கெல்லாம் ஒருமாதிரி freshness இருக்குமே… அது மாதிரி….. ஆத்துத் தண்ணி மாதிரி, காத்து மாதிரி அவ்வளவு நேச்சுரலான ஒரு உண்மை…. ஆனா அதை எவ்ளவு அழகான வார்த்தைகளில் சொல்றார் பாருங்க…..  Nature’s first green is gold. அவ்வளவே போதும். அருமையான கவிதை ஆயிடுது. ஒரு மந்திரம் மாதிரி ஆயிடுது. கூடவே கடைசி வரியையும் சேத்துண்டா போறும்.  Nothing  gold  can stay…. பெரிய வேதமந்திரங்களுக்குச் சமம். குரு சிஷ்யனுக்கு வாழ்நாள் முழுக்க சொல்ல வேண்டிய மந்திரமா உபதேசம் பண்ணிடலாம்…..’ அவ்வரிகள் வழியாக அவர் நகர்ந்து நகர்ந்து எங்கோ செல்வது தெரிந்தது. // 

– ஜெயமோகன் (நினைவின் நதியில்/ Page: 196 & 197)

மீண்டும் நன்றி…. ஜெ.மோ! 

தாஜ் / 05th Sep – 2010   

***

‘கநாசு’ தாஜ் கவிதைகள் :

ஸ்… …

பார்த்துப் பார்த்து பாய்ச்சலாய்
எனக்கு நான் கட்டிய கட்டிடம்
வடிவம் கொண்ட நுழைவாயில்
பார்வை படுமிடமெல்லாமும்
கண்கள் மலரும் நேர்த்திகள்
அடியெடுத்து வைக்குமிடமோ
பாதம் நோகாத பளிங்குத் தரை!
வெவ்வேறு புழக்கத்திற்கு
அடுத்தடுத்து அறைகள்!
அமர்ந்து பேச கூடி உண்ண
விசாலமான கூடம்!
அங்கே தவழ்ந்த தென்றலில்
கால நதி பிரிந்தோடிய
கவனம் விட்டு சாகச 
இயற்கை எழுத்தை
படிக்கவும் மறந்தேன்.

காற்று வரும்
சன்னல் கம்பிகளில் தொடங்கி
அழகாண்ட அத்தனையிலும் துரு!
நுழைவாய் வண்ணம் சிதைய
நேர்த்திகள் சிதில மயம்!
கால் வைக்குமிடமெல்லாம்
வழுக்கின அழுக்கு!
சமையல் அறை கரிப்புகை
படுக்கை அறை வெட்கை
பிற அறைகளில் கருகிய நெடி!
கூடம் மாற்றமற வீட்டுக்
குரலில் சுருதியில்லை!
தேடி ரசித்து வாங்கிய
கட்டிலும் சோபாவும்
சோபித்த கணத்தின் கனவில்
பின்னல் தொட்டில்
அந்தரத்தில் தொங்குகிறது!
பளிச்சிட்ட விளக்குகள் தடுமாற
இசை கொப்பளித்த சாதனம்
இடம் விட்டு மாதங்கள் ஆகிறது.
தோட்டம் கொள்ளாப் பூச்செடிகள்
இருந்ததும் பூத்ததும்
நினைவில் அசைகிறது.
கொல்லைப்புற பெருத்த மரங்கள்
காய்த்து நிழல் காத்ததை 
ஒரு போதும் மறக்க இயலாது
கடந்த திங்கள்தான் காசானது!

***

அ…… !

கருத்த மேகங்கள் கிழிபட
ஒளி பரவும் கவிதை வானைக்
கண்டுகொள்ள
இறக்கை நோகப்
பறந்த போதும்
சில சிட்டுக்கள்
இன்னும் உயரத்தில்
சாகசப் பறவைகளாய்
களிக் கூச்சலிட விரைகின்றன!

***

ஆ….

வலியின் அலறல் நம் செவிக்குள்
குத்துயிரும் குலையுயிருமாக
கிடக்கிறது நிலமும் மொழியும்!
எல்லா அரசியல்வாதிகளின் கையிலும்
இரத்தம் சொட்ட கட்டாரிகள்!
ஒருவரை ஒருவர் வீசியெறிந்துக் கொல்ல
கைகளில் எடுத்த ஆயுதம்தான் அது!

***

ஓ….

கூர்மையான நகங்கள்
வெட்ட வெட்ட முளைக்கிறது
கோரைப்பல் விழுந்த இடத்தில்
பொய்ப்பல் பொருந்தி கொண்டது
நாக்கின் கூர்மை
எதிராளியின் முகத்தில் பார்க்கிறேன்
வேகம் காட்டிய விபத்தில்
முறிந்த எலும்பும் ஒட்டிக் கொள்ள
மங்கிய முகக்கோரம் ஜொலிக்கிறது.
ஓயாத மிருகம் மூளையில் மேய
விட்டு விடுதலையேது!

***


காந்தி தேசத்தில்
பீறிட்ட மஹாத்மா குருதியோடு
ஜனநாயக வரிகள்
உறைந்துவிட இன்றும்
ஆயுத எழுத்தால்
தீர்ப்பு எழுதுகிறார்கள்
எல்லோரும்.

***

நன்றி : ‘கநாசு’ தாஜ் | satajdeen@gmail.com

புதையல் ஒன்று கிடைத்திருக்கிறது

‘அன்றிலிருந்து இன்றுவரை மாறாமல் இருப்பது புட்டுக்குழாய் ஒன்றுதான்’  என்று அட்டகாசமாகச் சொல்வார் அ.முத்துலிங்கம். ஏன், இறைவனைப் பற்றிய இம்மாதிரி வெட்டி விவாதங்களும்தான். யா அல்லாஹ், இலக்கியத்திற்குள் என்னைப் போகவிடு!

புதையல் விசயத்திற்கு வருகிறேன்.’மாயமானை’த் தேடி சீர்காழியில் கடுமையாக அலைந்துகொண்டிருக்கும் நண்பர் தாஜ்தான் அந்தப் புதையலைக் கண்டுபிடித்தது.

சுந்தரராமசாமியின் ‘உடல்’ (நாடகம்).

என்னுடைய நீண்ட கடிதம் ஒன்று – ‘குழந்தை‘ என்ற தலைப்போடு – ‘யாத்ரா’ இதழில் (1981) வெளியானதற்குக் காரணமான மதிப்பிற்குரியவர்களுள் ஒருவர் சுந்தரராமசாமி. என்னையும் நண்பன் நாகூர்ரூமியையும் அப்போதே ஊக்கப்படுத்தியவர். நாந்தான் தேறலே! அது போகட்டும், ‘புளியமரத்தின்’ நிழலில் கொஞ்சநாள் இளைப்பாறிய எனக்கு சு.ராவின் அலட்டிக்கொள்ளாத நகைச்சுவை பிடிக்கும். ‘(எண்கணித வித்தகரான) ப்ருமிள் , நாங்கள் தொடங்க நினைத்த பத்திரிக்கைக்கு ‘சுபசூசகம்’ என்று பெயர்வைக்க இருந்தார்’ என்றும் ‘ஜி.நாகராஜன் ஷேக்ஸ்பியர் பற்றி கூட்டத்தில் பேசும்போது ஏதோ ஷேக்ஸ்பியரும் அவரும் நெருங்கிய நண்பர்கள்; நாகராஜனுக்கு பெர்ஸனலாகவே அவரை ரொம்பவே நன்றாகத் தெரியும்; சமீபகாலத்தில்தான் அவன் மண்டையை போட்டுவிட்டிருக்கான், இல்லையென்றால் இந்தக் கூட்டத்துக்கூட நாகராஜன் அவரை அழைத்துக்கொண்டு வந்திருப்பார் என்பதுபோன்ற தோரணையில் அவர் பேசுவார்’ என்றும் நினைவோடைகளில் சிரிக்காமல் அவர் சொன்னது உதாரணம். ‘சுபசூசகம்’ சரியா? நினைவிலிருந்து எழுதுகிறேன். அப்புறம் தி.ஜானகிராமன் பற்றிய நினைவோடையில்,  ‘தி.ஜாவின் பாத்திரங்கள் ஹோமியோபதி மருத்துவர் மாதிரி எல்லா இடத்துக்கும் போவார்கள்’ என்று அடித்தது!

தத்துவங்கள் பற்றிப் பேச எனக்கு தகுதி பத்தாது.

சு.ராவின் பெரிய விசிறி என் பிரிய நண்பர் தாஜ் – ‘வருஷப் பாத்திஹா தவறாம ‘திண்ணை’யில ஓதிடுறீங்களே..’ என்று ஹமீதுஜாஃபர் நானா வெடைக்கும் அளவு.

சு.ராவின் ‘உடல்’ஐ சென்றமாதம் தட்டச்சு செய்து எனக்கு அனுப்பி வைத்திருந்தார் தாஜ் – ‘எதிலும் வெளிவராத கதை’ என்ற தலைப்போடு (அதுதான் கொல்லிப்பாவையில் வந்துடுச்சே தாஜ்).. மார்ச் 1978ல் -வெளிவந்திருக்கிறது இந்த நாடகம். ஆமாம், நாடகம்தான். இப்போதுதான் படித்தேன்; பிடித்திருந்தது (என்ன ஒரு ஆழமான விமர்சனம்!) . இதில் சு.ராவின் நடை இல்லையென்று தாஜ் சொல்வதை மட்டும் ஏற்கமுடியவில்லை. வடிவம் அப்படி. தவிர, தாஜ் ஐயப்படுவதுபோல் மொழிபெயர்ப்பாகவும் எனக்குத் தெரியவில்லை. அப்படியிருந்தால் சு.ரா சொல்லியிருப்பார் என்றே படுகிறது.

இங்கே, நண்பர்களின் ‘ மேட்டிமைத்தன…’ விவாதத்திற்குள் புகுவது நாகரீகமாக இராது.  சு.ரா சம்பந்தமான தங்களின் எந்தத் தொகுப்பிலும் காலச்சுவடு பதிப்பகம் ஏன் இதை சேர்க்கவில்லை?’ என்ற கேள்வியுடன் மட்டும் இதைப் பதிகிறேன். கிடைக்காததுதான் காரணமோ? ‘காரணம் வெளங்குற’வர்கள் சொன்னால் நல்லது.

தாஜ் என்ன சொல்கிறார்?

‘சமீபத்தில், பழைய ‘கொல்லிப்பாவை’ தொகுப்பொன்று கைக்கு கிட்டப் புரட்டிய போது, வாசிக்கக் கிடைத்த கதை இது! 

சு.ரா. வின் சிறுகதைகள், சிறிதும் பெரிதுமான தொகுதிகளாக வெளிவந்திருக்கிறது. அப்படி வெளிவந்தவற்றில் மேற்குறிப்பிட்ட கதை இல்லை! இந்தக்  கதையை, நவீன வித்தைக்  கொண்டது என்றோ, அல்லது நவீன நாடகம் சார்ந்த வடிவம் என்றோ சொல்லலாம். இரண்டு கணிப்புகளுமே தகும்.  சு.ரா. படைப்புகளில்,  சிறப்புக் கொண்டவைகள்  பல உண்டு.  அவற்றின் அருகே  இந்த ‘உடலை’-யும் வைக்கலாம்.

1978-மார்ச் மாத ‘கொல்லிப்பாவையில் வெளிவந்திருக்கும் இந்தக் கதை, ஏன் அவரது சிறுகதைத் தொகுப்பில் இடம்பெறவில்லை? நிஜமாகப் புரியவில்லை. சு.ரா. வாழ்ந்தபோது, அவரது பார்வையில் வெளிவந்த அவரது சிறுகதைத் தொகுப்பிலும் இல்லை என்பது புதிராகத்தான் இருக்கிறது.

இது, நாடக வடிவம் என்பதற்காக சிறுகதைத் தொகுப்பில் சேரவிடாமல் செய்திருக்கலாம்;  இன்னும் சில நாடக வடிவப் படைப்புகளை எழுதி அதனோடு இதனையும்  இணைக்கலாமென கருதி யிருக்கலாம்; மதம் சார்ந்த, அதன் நம்பிக்கைகள் சார்ந்த, தலைமைச் சார்ந்த, ஜனங்களின் மேதாவிலாசம் சார்ந்த மறைமுகமான விமர்சனங்கள் இதில் தூக்கலாக இருப்பதால்  இந்தச் சிறு கதையை தொகுப்பில் ஏற்றாது தவிர்த்திருக்கலாம்; அல்லது, கதைச் சார்ந்த வடிவமே அவருக்குப் பிடிக்காமல் போய் இருக்கலாம்; அது,  அவர் எழுதிப் பார்த்த மொழிமாற்றச் சங்கதியாக இருக்கலாம்.  கடைசியாக அனுமானித்திருக்கும் காரணமே என்னளவில் சரியெனப் படுகிறது.  அந்தக் கதை வெளியான  ‘கொல்லிப்பாவை’யில்  மொழிமாற்றம் குறித்த அவரது குறிப்பெதுவும் இல்லாது போனாலும், அப்படியேயென கணிக்க, போதுமான சான்றுகள் அந்தக் கதையில் காணக்கிடைக்கிறது. பிரசுரமாகியிருக்கும் அந்தக் கதையின் மொழிநடை, நமக்குப் பழக்கமான சு.ரா. வின் நடை இல்லை. தவிர, இன்னும் பல சான்றுகளும் காண உண்டு. இதன் பொருட்டுத்தான் இந்தக் கதையை அவர், அவரது தொகுப்பில் சேர்க்கவில்லை என்பது நிஜமானால், அவரது நேர்மை போற்றுதலுக்குரியது.   

இந்தக் கதையின் அழகு, அதன் போக்கிலும் வார்த்தையாடல்களின் சிடுக்கிலும் மிளிர குவிந்துக்கிடக்கிறது. தேர்ந்த மனமும்- தெளிந்த ஞானமும் கொண்டவர்கள் இந்த ஆக்கத்தை கூடுதலாக ரசிக்கலாம்.

மொத்தத்தில், புதையல் ஒன்று கிடைத்திருக்கிறது!’ என்கிறார்.

நன்றி தாஜ், புதைவோம்! அப்புறம்… அந்த ‘மாயமான்’ பாண்டிச்சேரியில் ஒடுகிறது!

*

உடல்

சுந்தரராமசாமி

கடலோரம் ஒரு க்ஷேத்திராடன ஸ்தலம். பஸ் நிலையத்திற்குள், தேவஸ்தானத்தைச் சார்ந்த, யாத்திரீகர்களுக்கான இலவச சத்திரம். இலவச சத்திரத்தின் அழுக்கையும் புறகணிப்பையும் வெளிப்படுத்தும் பஸ் ஸடாண்டைப் பார்க்க இருக்கும் அறைகளின் வரிசை. முழு நீளத்திற்கு ஓடும் முன் திண்ணை, மூன்று படிகள், திண்ணையின் அகலம் ஐந்து வயது குழந்தை படுத்துக் கொள்ள கூடியது. இதில் ஒரு அறையின் முன் பக்கம், அறைக் கதவும் பக்கவாட்டிற்கு ஒன்றான இரு ஜன்னல்களும் நிறுத்தியபின் எவ்வித பேணலுக்கும் ஆளாகாதது. காலமும், வெயிலும், ஈரக்கற்றும் அவற்றை ரொம்பப்படுத்தி இருக்கின்றன. கதவும், கதவின் இடது பக்க ஜன்னலும், முழுமையாக சாத்தி இருக்கிறது. வலது பக்க ஜன்னலில், ஜன்னல் கதவின் நாலு துண்டுகளில், ஒன்று மட்டும் திறந்திருக்கிறது. சத்திரத்துவாசிகள் சூரியோதயம் தரிசித்து விட்டு திரும்பிக் கொண்டிருக்கும் நேரம்.

காட்சி ஆரம்பமாகிற போது இருவர் ஜன்னல் வழியாக அறைக்குள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.  அவர்களில், குட்டையானவன் பாதங்களைத் தூக்கி,  ஜன்னல் கம்பிகளை இறுக்கப் பிடித்து, உடலை மேலே தூக்கி, தன் உயரத்தை முடிந்த வரை அதிகமாக்கிக் கொண்டு, அறைக்குள் உற்றுப் பார்த்துக் கொண்டிருக்கிறான். அவன் பின்னால் நெட்டை உருவம், குள்ளனின் தோள் பட்டைகளில் தன் கைகளை வைத்து, அறைக்குள்ளும் அக்கம் பக்கங்களிலும் மாறிமாறி பார்க்கிறான். குட்டை மிகையான, கோமாளித்தனமான ஆச்சரியங்களை முகத்தில் வெளிப்படுத்தி, கழுத்தை ஒடித்துத் திருப்பி,  நெட்டையின் முகத்தையும், அறைக்குள்ளும் மாறி மாறிப் பார்த்து விழிக்கிறான்.

இருவரும் ஜன்னலிலிருந்து விலகி, சபையோரைப் பார்க்க, அறைக் கதவின் எதிராக வராண்டா படிகளில் உட்கார்ந்து கொள்கிறார்கள்.

குட்டை: அந்த சந்நியாசி இறந்து போய் விட்டான்.
நெட்டை: அப்படித்தான் எனக்கும் தோன்றுகிறது.
குட்டை: எதையோ மறைக்கப் பார்க்கிறார்கள்.
நெட்டை: அப்படித்தான் எனக்கும் தோன்றுகிறது.
குட்டை: பிணத்தை எரிக்க வேண்டியதுதானே, மறைத்துவைத்து என்ன பிரயோஜனம்.
நெட்டை: பிணத்தைப் போட்டுக் கொண்டிருந்தால் அழுகும். துர்நாற்றம் எங்கும் பரவும்.
குட்டை: அந்த சிஷ்யர்கள் ‘கம்’ என்று இருப்பது ஏன்?
நெட்டை: கால்மாட்டில் ஒருவன்; தலைமாட்டில் ஒருவன்.
குட்டை: சரியாகப் படவில்லை.
நெட்டை: கொஞ்சமும் சரியாகப் படவில்லை.
குட்டை: ஏதோ விஷமத்துக்கு அச்சாரம் கூட்டுகிறார்கள்.
நெட்டை: அப்படித்தான் எனக்கும் படுகிறது.
குட்டை: நாம் அதற்கு விடக்கூடாது.
நெட்டை: அவர்கள் சதித் திட்டத்தை முறியடிக்க வேண்டும்.
குட்டை: அநீதிகளை, சிறு வயதில் இருந்தே நான் வெறுத்து வந்திருக்கிறேன்.
நெட்டை: நானும் அப்படித்தான், தப்பு எனக்குப் பிடிக்காது.
குட்டை: விஷயத்தை அம்பலப்படுத்தி விடவேண்டும் என்று எனக்குத் தோன்றுகிறது.
நெட்டை: அம்பலப்படுத்தி விட வேண்டியது தான்.
குட்டை: நாம் பார்த்திருக்கவில்லை என்றால் அந்த சிஷ்யர்கள் அவர்களுடைய ரகசியத் திட்டத்தை வெகு அழகாக நிறைவேற்றி விடுவார்கள்.
நெட்டை: நாம் இருக்கும் போது இது நடவாது.
குட்டை: நடக்க விடமாட்டோம்.
நெட்டை: சந்நியாசியின் சாவில் ஏதோ மர்மம் இருக்கிறது.
குட்டை: எனக்கும் அப்படித்தான் படுகிறது.
நெட்டை: சில சிஷ்யர்கள் ,குருக்களைக் கொல்வார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.
குட்டை: கொல்வார்கள்; குரு கையில் பணம் இருந்தால்; குரு கையில் பதவி இருந்தால்.
நெட்டை: சில அநீதிகளை சிலர் இல்லாத போது தான் நடத்த முடியும்.
குட்டை: (அறைப் பக்கம் கையைக் காட்டி) இந்த சாதாரண உண்மைகூட இவர்களுக்குத் தெரியவில்லை. (தனக்குத் தானே சிரித்துக் கொள்கிறான் )
நெட்டை: கதவைத் தட்டட்டுமா?
குட்டை: ‘நீ யார் எங்கள் விஷயத்தில் குறுக்கிட?’ என்று அவர்கள் கேட்டால்?
நெட்டை: சந்நியாசி உயிரோடு இருந்தால் கேட்கலாம். செத்துப் போயிருந்தால் கேட்க முடியாது.
குட்டை: அது ஏன்?
நெட்டை: உயிர்கள் சொந்தக்காரர்களுக்கு சொந்தம். பிணங்கள் பொது சொத்து.
குட்டை: பிணங்கள் பொது சொத்தா?
நெட்டை: ஆமாம். பிணங்கள் மீது நமக்குச் சில உரிமைகள் உண்டு. ஒன்று: செத்த பிணமா? கொன்ற பிணமா? இரண்டு: செத்த பிணம் என்றால் ஏன் அதை வைத்துக் கொண்டிருக்கிறார்கள்? மூன்று: கொன்ற பிணம் என்றால் யார் கொன்றார்கள்? எதற்குக் கொன்றார்கள்? எப்படிக் கொன்றார்கள்? கொலை முயற்சி பூரண வெற்றி அடைந்து விட்டதா? அல்லது,  அரைகுறையாக இழுத்துக் கொண்டிருக்கிறதா? அரைகுறையாக இழுத்துக் கொண்டிருக்கிறதென்றால், மேற்கொண்டு கொல்ல வேண்டுமா? காப்பாற்ற வேண்டுமா?
குட்டை: அந்த சந்நியாசி ஒரு பிணமாக இருக்க வேண்டும் என்று நான் ஆசைப்படுகிறேன்.
நெட்டை: அப்பொழுதுதான் அவர்கள் தட்டிக்கேட்காமல் இருக்க முடியும்.
குட்டை: வெகு கூர்மையாகப் பார்த்து விட்டேன், சந்நியாசி இறந்து போய் விட்டான். இதில் எனக்குச் சந்தேகம் இல்லை.
நெட்டை: எனக்கும் சந்தேகம் இல்லை. சந்நியாசியை எறும்புகள் மொய்ப்பது போல் எனக்குத் தோன்றுகிறது.
குட்டை: எறும்புகள் மொய்க்க விடாமல் சந்நியாசியைச் சுற்றி ஈரத்துணிகளை போட்டிருப்பது போல் எனக்குத் தோன்றுகிறது.
நெட்டை: கதவைத் தட்டட்டுமா?
குட்டை: நாம் எதையும் யோசித்துச் செய்ய வேண்டும். எதற்கும் ஒரு திட்டம் அவசியம். வழி முறை அவசியம்.
நெட்டை: எனக்குக் கதவைத் தட்ட அவசரமாகி விட்டது. என் கை குறுகுறுக்கிறது.
குட்டை: அவசரப்படாதே, ‘ஏன் கதவைத் தட்டினாய்?’ என்று கேட்டால் என்ன பதில் சொல்வாய்?
நெட்டை: ‘பிணத்தைச் சத்திரத்தில் போட்டுக் கொண்டிருக்க உங்களுக்கு உரிமை இல்லை என்பேன்.
குட்டை: ‘நீ சத்திரத்து நிர்வாகியா?’
நெட்டை: ‘இல்லை.’
குட்டை: ‘ஊழியனா?’
நெட்டை: ‘இல்லை.’
குட்டை: ‘பின் இந்த அறைக் கதவைத் தட்ட உனக்கு என்ன உரிமை இருக்கிறது?’
நெட்டை: ‘பிணத்தை உடனே அகற்று.’
குட்டை: ‘எங்கள் குரு காரியத்தை நாங்கள் பார்த்துக் கொள்வோம்.’
நெட்டை: (எழுந்து நின்றவாறு) ‘சத்திரத்தில் பிணத்தைப் போட்டு வைக்கக் கூடாது.’
குட்டை: (எழுந்து நின்றவாறு) ‘அதை சத்திரத்து நிர்வாகியிடம் போய்ச் சொல்லு.’
நெட்டை: (உரக்க) ‘கொலை என்று குற்றம் சாட்டுகிறேன்.’
குட்டை: (உரக்க) ‘போலீசிடம் புகார் செய்.’
நெட்டை: (உரக்க) ‘அநீதியை அம்பலப் படுத்துவேன்.’
குட்டை: ‘அறையை விட்டு வெளியேறு.’
நெட்டை: ‘எனக்கு ரத்தம் கொதிக்கிறது.’
குட்டை: ‘ரத்தம் வராண்டாவில் கொதிக்கட்டும்.’

(குட்டை நெட்டையைப் பிடித்துத் தள்ளுகிறான். கதவைச் சாத்தி தாழ்கள் போடுவது போல் பாவனை காட்டுகிறான். நெட்டை தடுமாறி சமாளித்துக் கொள்கிறான். நெட்டையும்  குட்டையும் மேற்கொண்டு என்ன செய்வதென்று தெரியாமல் வராண்டாவில் உட்கார்ந்து கொள்கிறார்கள். யோசிப்பது போல பாவனை செய்கிறார்கள். பரஸ்பரம் பார்த்து விழிக்கிறார்கள். ஒருவன் ஓடிப்போய் ஜன்னல் வழியாக அறைக்குள் பார்த்து விட்டு, ஆச்சரியத்தை முகத்தில் வழிய விட்டுக் கொண்டு திரும்பி வர, அடுத்தவனும் அதை நகல் செய்கிறான்.) 

நெட்டை: எனக்கு ஒரு யோசனை தோன்றுகிறது.
குட்டை: என்ன?
நெட்டை: கும்பலைத் திரட்டுகிறோம்.
குட்டை: எதற்கு?
நெட்டை: கும்பல் கூடி நிற்கும் போது அதன் மகிமையே தனி. சிஷ்யர்கள் தட்டிக் கேட்க முடியாது.
குட்டை: பிரச்சனையை மக்கள் முன்னால் வைக்க வேண்டும் என்கிறாய். அதுதானே நீ சொல்வதின் அர்த்தம்?
நெட்டை: ஒரு விதத்தில் ஆமாம்; ஒரு விதத்தில் அல்ல.
குட்டை: எந்த விதத்தில் ஆமாம்? எந்த விதத்தில் அல்ல?
நெட்டை: மக்கள் முன் பிரச்சனையை வைப்பது ஒரு பாவனை; சுவாமிக்கு நைவேத்தியம் பண்ணுகிற மாதிரி. நைவேத்தியம் நம் கையில் இருப்பது போல, பிரச்சனையும் நம் கையில்தான் இருக்க வேண்டும்.
குட்டை: நான் கூட்டத்தைத் திரட்டப் போகிறேன். பிரச்சனையை முரசடிப்பேன். ஒரு சில கணங்களில் மக்கள் மன்றம் இங்கு நிறுவப்படும்.

(குட்டை மேடையில் அங்கும் இங்கும் ஓடி, ஒரு அநீதியைக் கத்திச் சொல்வது போல் நடித்து, கைகளை வீசி, முகச்சேஷ்டைகள் காட்டி, சிலரைக் கையைப் பிடித்து இழுத்து வருவது போல் பாவனை காட்டி, பின் பெருமிதத்துடன் படியேலேறி நிற்கிறான்.)

நெட்டை: (சபையோரை நோக்கி கை காட்டி) இவ்வளவு பேரை உன்னால் திரட்ட முடியும் என்று நான் நம்பவே இல்லை.

குட்டை: சில தலைவர்கள் தோன்றுகிறார்கள்; சிலர் தலைவராகத் தூக்கி வைக்கப்படுகிறார்கள்; சிலர் – வெகு அபூர்வமாக – தலைவராகப் பிறக்கிறார்கள். (கூட்டத்தைப் பார்த்து உட்கார கை அமர்த்துவது போல் பாவனை காட்டி) தயவு செய்து எல்லோரும் அப்படி அப்படியே உட்காருங்கள். தயவு செய்து, தயவு செய்து, தயவு செய்து.

நெட்டை: (போலி இருமல் வரவழைத்து தொண்டையைக் கனைத்துக் கொண்டு) ஒரு முக்கியமான விசயத்தை உங்களிடம் கூறி, நீங்கள் பிறப்பிக்கும் ஆணைகளைச் சிரமேற்கொள்ள உங்களை அழைக்கிறோம். (பெருமையுடன் குட்டையைப் பார்க்கிறான்.)

குட்டை: சத்திரம் ஒரு பொது இடம் என்பதை நீங்கள் அறீவீர்கள்.
சபையோர்: (ஒலிபெருக்கியில் குரல்) அறிவோம்; அறிவோம்.
குட்டை: சத்திரம் உங்கள் சொத்து.
சபையோர்: சத்திரம் எங்கள் சொத்து.
நெட்டை: (கையைத் தட்டுகிறான்)
குட்டை: உங்களுடைய சொத்தில், உங்களுக்குத் தெரியாமல் ஒரு பிணத்தை வைத்துக் கொண்டிருக்க நீங்கள் அனுமதிப்பீர்களா?
நெட்டை: ஆணித்தரமான கேள்வி.
சபையோர்: ஒரு நாளும் அனுமதிக்க மாட்டோம்.
குட்டை: அவ்வாறு வைத்துக் கொண்டிருந்தால், நீங்கள் என்ன செய்வீர்கள்?
சபையோர்: பிடுங்கி எரிப்போம்.
நெட்டை: (கையைத் தட்டுகிறான்) நியாயமான தீர்ப்பு.

(குட்டை தன்னம்பிக்கையுடன் நடந்துபோய் சாத்தியிருக்கும் கதவை வெகு நாகரீகமாகத் தட்டுகிறான். கதவு திறக்காததால் ஓங்கிக் குத்த ஆரம்பிக்கிறான். நெட்டை ஓடி வந்து கதவைக் காலால் உதைக்கிறான். ஜன்னல் வழி எட்டிப் பார்த்துக் கத்துகிறான்; ‘கதவைத்திற’ என்று சமிக்ஞை காட்டுகிறான்.)
 
சபையோர்: கதவைத்திற, கதவைத்திற.

(நெட்டையும் குட்டையும் ஆவேசமாகக் கதவைத் தட்டி, காலால் உதைகிறார்கள். கதவு திறக்கிறது.)

சபையோர்: உள்ளே போங்க; உள்ளே போங்க.

(நெட்டையும் குட்டையும் உள்ளே போகிறார்கள். சந்நியாசி படுத்திருக்கும் ஒற்றை பெஞ்சை தூக்கிக் கொண்டு வெளியே வருகிறார்கள். அவர்கள் பின்னால் இரண்டு சிஷ்யர்களும் வருகிறார்கள். சந்நியாசியின் உடல் விறைப்பாக இருக்கிறது. நீட்டிய கைகள் உடலோடு சேர்ந்திருக்கின்றன. கால்கட்டை விரல்கள் இணைந்திருக்கின்றன. முகம் நேராக மேலே பார்த்துக் கொண்டிருக்கின்றது. விழிகள் மூடிக் கொண்டிருக்கின்றன. சிகப்பு பார்டர் கொண்ட மடித்த கறுப்புப் போர்வையால் மார்புப் பகுதி மூடப் பட்டிருக்கிறது.)

குட்டை: (சிஷ்யர்களைப் பார்த்து) எதற்காக இங்கு பிணத்தைப் போட்டு வைத்துக் கொண்டிருக்கிறீர்கள்?

முதல் சிஷ்யன்: பிணம் அல்ல; குரு. 

இரண்டாவது சிஷ்யன்: எங்கள் குரு.
நெட்டை: இறப்பதற்கு முன் குரு அல்லது செல்வந்தன் அல்லது மேதாவி அல்லது பெருந்தலைவன். இப்போது இறந்த பின் கிடைக்கும் ஒரே பெயர்: பிணம்.
மு.சிஷ்யன்: குருவைப் பிணம் என்று கூற வேண்டாம்.
இ.சிஷ்யன்: குரு பிணம் என்று அழைக்கப்படுவது, எனக்கு அதிருப்தியைத் தந்திருக்கிறது.
மு.சிஷ்யன்: எங்கள் குரு பிணம் என அழைக்கப்படுதலை நாங்கள் சிறிதும் பொறுக்க மாட்டோம்.
இ.சிஷ்யன்: இதில் எங்களுக்கு கருத்து வேற்றுமை இல்லை.
மு.சிஷ்யன்: (இ.சிஷ்யனைப் பார்த்து) ஏன் குருவைப் பிணம் என்று அழைக்கிறார்கள்?

(குட்டை முன் வந்து சந்நியாசியின் வலது கண்ணை இழுத்துப் பார்த்துவிட்டு உதட்டைப் பிதுக்குகிறான். இடது கண்ணையும் இழுத்துப் பார்க்கிறான். பின் விரல்களை மூக்கில் வைத்து மூச்சு நின்றுவிட்டது என்ற அர்த்தத்தில் சபையோரைப் பார்த்து கை அசைக்கிறான். குனிந்து காதை இதயத்தின் மேல் அழுத்தி கவனிக்கிறான்.)

நெட்டை: சோதனை பகிரங்கமாக நடந்து வருகிறது.
குட்டை: (சந்நியாசியின் நாடியைப் பிடித்தபடி) நாடியில் துடிப்பு இல்லை.
நெட்டை: விழிகள் சொருகி விட்டன.
குட்டை: சில்லிட்டுக் கிடக்கிறது உடம்பும், கைகளும், பாதங்களும்.
மு.சிஷ்யன்: ஆடைகள், உடல் மீது காட்டும் உருவம் வேறு; கொடியில் தொங்கும் போது காட்டும் உருவம் வேறு.

(எல்லோரும் சிஷ்யன் கூறுவது விளங்காது விழிக்கிறார்கள்.) 

மு.சிஷ்யன்: எனக்குச் சிரிப்பு பொத்துக்கொண்டு வருகிறது.
இ.சிஷ்யன்: பொத்துக்கொண்டு வரும் சிரிப்பை என்னால் அடக்கமுடியவில்லை.
மு.சிஷ்யன்: குரு ‘ஜனங்கள்’ என்று சொல்லும்போது அவர் உதட்டோரம், புன்னகையின் சிறு குமிழி சுழிப்பதை நீ பார்த்திருக்கிறாயா?
இ.சிஷ்யன்: பார்த்திருப்பது மட்டுமல்ல; அதை வெகுவாக ரசித்தும் இருக்கிறேன்.
மு.சிஷ்யன்: இப்பொழுது தெரிகிறது அந்தக் குமிழ்ச் சிரிப்பின் பொருள்.
இ.சிஷ்யன்: ‘இன்றைய என் பேச்சுக்கு, நாளை நீங்கள் எதிர்கொள்ளும் அனுபவங்கள் விளக்கந்தரும்’ என்று நம் குரு சொன்னது உனக்கு நினைவிருக்கிறதா?
மு.சிஷ்யன்: நன்றாக நினைவிருக்கிறது. பலமுறை அவர் கூறியுள்ள வாக்கியம் அது.
இ.சிஷ்யன்: இன்று, நமக்கு விளங்காத ஒரு பகுதியை விளக்கக் கூடி இருக்கிறது இந்த மந்தை.
மு.சிஷ்யன்: (பெரிதாகச் சிரிக்கிறான்.)
குட்டை: (சபையோரை நோக்கி) கேட்டீர்களா, உங்களைப் பார்த்து மந்தை என்கிறான்.
இ.சிஷ்யன்: (குட்டையைப் பார்த்து) உன்னையும் சேர்த்துத்தான்.

(குட்டை திடுக்கிட்டு விழிக்கிறான்)

மு.சிஷ்யன்: (நெட்டையைப் பார்த்து) உன்னையும் சேர்த்துத்தான்.
குட்டை: (சபையோரை நோக்கி) என் அருமை நண்பர்களே, கொலைகாரர்கள் தத்துவ வார்த்தைகளில் பிரச்சனையைக் குழப்பும் தந்திரத்திற்கு நீங்கள் பலியாகிவிடக் கூடாது.       
நெட்டை: சுருக்கு இறுகுகிறபோது, தத்துவப் புலம்பல் சில தொண்டைகளில் கிளம்பும்.
குட்டை: அந்தத் தத்துவ புலம்பல் தொண்டைக் குழியிலேயே மரிக்கும்படி சுருக்கை இறுக்குவது மக்கள் மன்றத்தின் கடமை. நானோ உங்கள் தாசன்.

(குட்டை முதுகை வளைத்து சபையோருக்குஒ பவ்வியமாக வணக்கம் தெரிவிக்கிறான். இதைக்கண்டு, நெட்டையும் அதேபோல் வணங்குகிறான்)

குட்டையும் நெட்டையும்: (சேர்ந்து பவ்வியமாகக் குனிந்து) உங்கள் ஆணைகளைச் சிரமேற்கொள்ளக் காத்திருக்கிறோம்.

(சபையிலிருந்து பல குரல்கள்)

குரல் ஒன்று: தூக்கு அந்தப் பிணத்தை.
குரல் இரண்டு: அகற்று அதை உடனடியாக.
குரல் மூன்று: எரிப்போம் அதை இப்போதே.

(சிஷ்யர்கள் இருவரும் குருவின் மீது கவிழ்ந்து அவர் உடலைப் பொத்திக் கொள்கிறார்கள்.)
 
குரல் ஒன்று: பிடித்துத் தள்ளு அவர்களை.
குரல் இரண்டு: பிடுங்கு அந்தப் பிணத்தை.

(இரு சிஷ்யர்களும் சபையோரை நோக்கி முன்னால் வருகிறார்கள். ‘அமருங்கள்’ என்ற அர்த்தத்தில் கை அசைக்கிறார்கள். சபையோரை நோக்கிக் கும்பிடுகிறார்கள்.)

மு.சிஷ்யன்: தெய்வத்தின் குழந்தைகளே, ஒரு போதும் தவறு செய்யாதவர்கள் நீங்கள். உங்கள் செய்கைகளில் எப்போதும் ஒரு உட்கருத்து இருக்கும். எப்போதும் அதைப் புரிந்து கொண்டவர்கள் என்று நாங்கள் எங்களைக் கூறிக் கொள்ள முடியாது. எதற்காக குருவை, எங்கள் இருதயத்தின் துடிப்பை, எங்களிடமிருந்து அகற்ற வேண்டும் என்று ஆசைப்படுகிறீர்கள்?

சபையோர் குரல்: சந்நியாசி இறந்து விட்டார்.

குட்டை: (சபையோரைப் பார்த்து) மிகச் சரியாகச் சொன்னீர்கள். சோதனையின் மூலம் நான் அதை நிரூபித்துக் காட்டினேன்.

இ.சிஷ்யன்: தவறான எண்ணத்திற்கு ஆளாகி விட்டீர்கள். எண்ணியது தவறாகி விடுமோ என்ற பயத்தில், தவறை வற்புறுத்திக் கொண்டிருக்காதீர்கள். குருவைப் பற்றிய உங்கள் எண்ணங்கள் கற்பனையானவை. குரு வெளியே சென்றிருக்கிறார்.

மு.சிஷ்யன்: ஒரு அவசரம் நிமித்தம் அவர் வெளியே போயிருக்கிறார்.

(நெட்டையும் குட்டையும் ஓவென்று கேலிச் சிரிப்புச் சிரிக்கிறார்கள்.)

நெட்டை: எவ்வளவு அற்பமாக நினைத்து நம்மை முட்டாள் ஆக்குகிறார்கள் பார்த்தீர்களா?
குட்டை: (சிஷ்யர்களை நெருங்கி) தத்துவ ஞானிகளே, குரு நடந்து சென்றிருக்கிறாரா, அல்லது ஆகாய விமானத்தில் பறந்திருக்கிறாரா?
நெட்டை: (சிஷ்யர்களை நெருங்கி) வானம் கறுத்திருக்கிறது. குளிர்காற்று வீசுகிறது. குடை எடுத்துச் சென்றிருக்கிறாரோ, உங்கள் குரு.
குட்டை: இரவு உணவுக்கு, குருவுக்கு என்ன தயார் செய்யப் போகிறீர்கள்?
நெட்டை: பால் சோறா?
குட்டை: நெய்ச்சோறா? 

(குட்டையும் நெட்டையும் சிரிக்கிறார்கள்)

சபையோர்: வீண் பேச்சுக்கு இனி இடம் இல்லை. பாடை கட்ட ஏற்பாடு செய்யுங்கள்.
நெட்டை: பாடை தயாராகி விட்டது.
சபையோர்: சவத்தூக்கிகளுக்கு ஆள் அனுப்பு.
குட்டை: சவந்தூக்கிகள் ஆயத்தமாக இருக்கிறார்கள்.
நெட்டை: இங்கு முடித்துக் கொண்டு அடுத்த இடம் போக அவசர பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
சபையோர்: சவந்தூக்கிகளே, பிணத்தைப் பாடையில் வைத்துக் கட்டுங்கள்.
மு.சிஷ்யன்: ஒரு நிமிஷம் பொறுங்கள். சவந்தூக்கிகளே, மாக்களே, என் அருமை நண்பர்களே…….
இ.சிஷ்யன்: என் அருமை சவந்தூக்கிகளே…….
சிஷ்யர்கள்: (சேர்ந்து) ஒரு நிமிஷம் பொறுங்கள்.
மு.சிஷ்யன்: எதற்காக இந்தப் பாடை? எதற்காக இங்கும் சவந்தூக்கிகள்?

(உரக்கக் கத்துகிறான். நெட்டையும் குட்டையும் ஸ்தம்பிக்கிறார்கள்)

இ.சிஷ்யன்: தூக்கிச் செல்ல ஒரு பாடை. சுமக்கச் சில சவந்தூக்கிகள். நல்ல கூத்து.(குரலை திடீரென உயர்த்தி குருவை நோக்கிக் கை காட்டியபடி) பாடையைச் சதா எரித்துக் கொண்டிருப்பவர் இவர். சவந்தூக்கிகளைத் தலைவாசலில் சதா நெரித்துக் கொண்டிருப்பவர் இவர். எந்தச் சவந்தூக்கியால் இவரைத் தூக்க முடியும்? எந்தப் பாடை இவரை  எரிக்கும்?  அக்கினியை மடியில் கட்டிக் கொள்ளலாம் என்று மனப்பால் குடிக்கிறீர்களா?  பொசுங்கிப் போவீர்கள்  பொசுங்கி. ஞாபகமிருக்கட்டும்  மூட ஜென்மங்களே. உங்கள் வழிகளைப்  பார்த்துக் கொண்டு போங்கள். கிளித்தட்டுக்கு யாககுண்டத்திலா கோடு கிழிக்க வந்திருக்கிறீர்கள்?

(குட்டையும் நெட்டையும் பயந்து ஒதுங்குகிறார்கள். சாபையைப் பார்க்கிறார்கள். சபையிலிருந்து குரல் இல்லை. சில வினாடிகள் மௌனம்.)

நெட்டை: (சிஷ்யர்களை நோக்கி தயங்கி முன்னேறி) ஒரு வார்த்தை சொல்லலாமா?

மு.சிஷ்யன்: தயவு செய்து எங்கள் அமைதியைக் கெடுக்காதீர்கள். குருவின் வருகைக்காகக் காத்திருக்கிறோம். வந்த பின் செய்ய எங்களுக்கு வேலைகள் அநேகம் உண்டு. தொந்தரவு செய்யாதீர்கள்…. தயவுசெய்து…..

இ.சிஷ்யன்: தயவு செய்து….
மு.சிஷ்யன்: தயவு செய்து….

நெட்டை: தெரிந்துக் கொள்ள மிக ஆவலாக இருக்கிறது. உங்கள் அமைதியைக் கெடுக்க மிக அச்சமாகவும் இருக்கிறது. குரு எங்கே போயிருக்கிறார்?

மு.சிஷ்யன்: அடடா என்ன தொந்தரவு.
இ.சிஷ்யன்: எதற்கு இப்படிச் சளசளத்துக்கொண்டே இருக்கின்றீர்கள்?
மு.சிஷ்யன்: சளசளப்பு அவர்களுக்குப் பிராணவாயு மாதிரி. சளசளக்காவிட்டால் அவர்கள் செத்துப் போய் விடுவார்கள்.
இ.சிஷ்யன்: செத்துத்தான் போகட்டுமே. யாருக்கு என்ன நஷ்டம்?

மு.சிஷ்யன்: யாருக்கும் நஷ்டம் இல்லை. ஆனால் தாங்கள் செத்துப்போனால் யாருக்கும் நஷ்டமில்லை என்பது இவர்களுக்குத் தெரியாது. யாருக்கோ நஷ்டம் என்று கற்பனை  செய்து கொண்டிருக்கிறார்கள் இவர்கள்.

இ.சிஷ்யன்: (யோசிக்கும் பாவனையுடன்) நீ சொல்வதை நான் ஏற்றுக் கொள்ளவில்லை. இவர்கள் ஏற்கனவே செத்துப்போய் விட்டார்கள். ஆனால், இவர்கள் செத்துப் போனது இவர்களுக்குத் தெரியவில்லை.

மு.சிஷ்யன்: நீ சொல்வது உண்மையென்றால், செத்துப்போனது ஏன் இவர்களுக்குத் தெரியவில்லை?
இ.சிஷ்யன்: இந்தப் பிணங்கள் செத்துப்போன பின்பும் சளசளத்துக்கொண்டிருக்கின்றன. சளசளத்துக்கொண்டிருப்பது காதில் விழுந்து கொண்டிருப்பதால் செத்துப் போனது கூட  அதுகளுக்குத் தெரியாமல் போய்விட்டது.
மு.சிஷ்யன்: மிக விசித்திரமான பிணங்கள் இதுகள்.
இ.சிஷ்யன்: எப்படியும் தொலையட்டும். நம்மை ஏன் வந்து கழுத்தை அறுக்கிறார்கள்?
மு.சிஷ்யன்: தாங்கள் பிணங்கள் அல்ல என்று காட்டிக் கொள்ளத்தான். தாங்கள் பிணங்கள் என்பது தங்களுக்கே உறுத்தாமல் இருக்கத்தான்.
இ.சிஷ்யன்: இந்த விரிந்த கடலைத்தேடி எவ்வளவு பெரிய கனவோடு குரு நம்மை அழைத்து வந்திருக்கிறார்.
மு.சிஷ்யன்: இந்தக் கடலோரத்திலும் வந்து விட்டதே அந்தப் பிணங்கள்.
இ.சிஷ்யன்: பிணங்கள் சவந்தூக்கிகளைத் தேடிப்போகாமல் நம்மைத்தேடி ஏன் வருகின்றன? பாடையில் ஏறி படுத்துக் கொள்ள அவைகள் எப்போதும் ஏன் மறுக்கின்றன?
மு.சிஷ்யன்: குருவுக்கே விடை தெரியாத கேள்வி இது. இந்தக் கேள்வியைக் கேட்டதும் குரு பெரிதாகச் சிரித்தது உனக்கு நினைவில்லையா?
இ.சிஷ்யன்: ஆமாம், அவர் பெரிதாகச் சிரித்தார். குழந்தைபோல் அவர் சிரித்தார். அந்தச் சத்தம் இப்போதும் என் காதில் ஒலிக்கிறது.
மு.சிஷ்யன்: (குட்டையையும் நெட்டையையும் பார்த்து) எழுந்து போங்களேன். இடத்தைக் காலி பண்ணுங்களேன். அடடா என்ன தொந்தரவு.

நெட்டை: மன்னிக்க வேண்டும். ஆவலை அடக்க முடியவில்லை. எங்கே போயிருக்கிறார் குரு?
குட்டை: எங்களுக்கும் குருவைப் பார்க்க கிடைக்குமா?

மு.சிஷ்யன்: குரு வெளியே போயிருக்கிறார். போனவர் எங்கள் குரு. நாங்கள் அவரிடம் என்ன கேட்க முடியும்?
இ.சிஷ்யன்: அப்படியே கேட்டோம். அவரும் சொல்கிறார். சொல்லி விட்டார் என்ற காரணத்தினால் மட்டும் புரிந்து விடுமா? மனதில் வெயில் இருந்தால்தானே வார்த்தைகள் காயும். காதின் சின்ன முரசில் விழுந்து விட்டால் மட்டும் போதுமா.

மு.சிஷ்யன்: ஒன்று மட்டும் நிச்சயம். போயிருப்பவர் குரு. அதனால் முக்கியமான காரியத்துக்குத்தான் போயிருப்பார்.
இ.சிஷ்யன்: இந்த அனுமானம் தவற சாத்தியமில்லை.

நெட்டை: எனக்கு ஒரே குழப்பமாக இருக்கிறது.
குட்டை: எனக்குத் தலை சுற்றுகிறது. பைத்தியம் பிடித்து விடுமோ என்று பயமாக இருக்கிறது.

மு.சிஷ்யன்: குழப்பம், பைத்தியம்.
இ.சிஷ்யன்: பைத்தியம், குழப்பம்.
மு.சிஷ்யன்: உங்களுக்கும் குழப்பமா? உங்களுக்கும் பைத்தியமா? நம்ப கஷ்டமாக இருக்கிறதே.
 
(குட்டையும் நெட்டையும் சேர்ந்து உட்கார்ந்து கொள்கிறார்கள்)

இ.சிஷ்யன்: ஞானச்சுடர்கள், அறிவுவிளக்குகள் ஏன் ஆயாசம் கொள்கின்றனர்?

நெட்டை: ஒரே ஒரு கேள்விக்கு மட்டும் விடை தெரிந்துகொண்டு ஓடிப்போய்விடுகிறோம்.
குட்டை: ஒரே ஒரு கேள்விக்கு.
நெட்டை: இந்தப் பெரியவர் ஏன் இங்கு படித்துக்கொண்டு இருக்கிறார்?
குட்டை: எங்கோ போயிருக்கிறார் என்றும் சொல்கிறீர்களே.

மு.சிஷ்யன்: போயிருப்பது குரு; இங்கு கிடப்பது குருவின் உடல்.
இ.சிஷ்யன்: வெறும் உடல்.
மு.சிஷ்யன்: வெறும் உடல்.
இ.சிஷ்யன்: இவ்வளவுதான் விஷயம். சரி, விடை பெற்றுக்கொள்வோமா.

(நெட்டையும் குட்டையும் மனமின்றிப் புறப்படுகிறார்கள்)
 
மு.சிஷ்யன்: (குருவை திடீரென்று கவனித்து) குரு நெருங்கும் நேரம் நெருங்கி விட்டது.

(இடுப்புத் துண்டை அவிழ்த்து வீசுகிறான். இரண்டாவது சிஷ்யன் துண்டால் குருவின் முகத்தைத் துடைத்து விடுகிறான். குருவின் கை கால்களை நீவி விட்டு, அவர் பாதங்களைப் பிடித்து விடுகிறான்)

இ.சிஷ்யன்: குரு மிக அருகில் வந்துவிட்டார். என்னால் அதை உணரமுடிகிறது.

(நெட்டையும் குட்டையும் திரும்பி வந்து குருவை மிக உன்னிப்பாகக் கவனிக்கிறார்கள்)

நெட்டை: குழப்பமாகவும் இருக்கிறது, அதை வெளியே காட்டிக்கொள்ள வெட்கமாகவும் இருக்கிறது.
குட்டை: எனக்கும் அப்படித்தான்.
நெட்டை: தெரியாத்தனமாக இங்கு வந்து மாட்டிக்கொண்டோம்.
குட்டை: எந்தப் பாவி முகத்தில் விழித்தோமோ தெரியவில்லை.

மு.சிஷ்யன்: (மிகுந்த அலுப்புடன்) என்னால் இவர்கள் சத்தத்தைப் பொறுத்துக் கொள்ள முடியவில்லையே. பெருமானே, எங்களை வந்து காப்பாற்றுங்களேன்.
இ.சிஷ்யன்: (வானத்தை நோக்கிக் கைகளை உயர்த்திக்கொண்டு) பெருமானே, ‘எனக்குத் தெரியாத உண்மையில்லை, நான் புரிந்து கொள்ளாத பிரச்சனை இல்லை, நான் பங்கெடுத்துக்கொள்ளாத நெருக்கடியும் இல்லை’ என்று அடிக்கடி கூறுவீர்களே. பெருமானே, எங்கள் தவிப்பு இப்பொழுது உங்களுக்குத் தெரியவில்லையா.  
 
மு.சிஷ்யன்: எலிகளைக் கொல்லக்கூட எங்களுக்குத் தெரியவில்லையே. எப்படித் திமிங்கல வேட்டை ஆடப்போகிறோம்.
இ.சிஷ்யன்: எந்தச் சங்கெடுத்து ஊதினால் இந்தச் செவிடுகள் காதில் விழும்.

குட்டை: இனிமேல் வாயைத் திறக்கமாட்டோம். (கையால் வாயைப் பொத்திக்கொள்கிறான்.)
நெட்டை: ஒரே ஒரு சின்ன சந்தேகம். இப்பொழுது யார் வருவார்? எப்படி வருவார் அவர்? பார்க்க எப்படி இருப்பார் அவர்?

மு.சிஷ்யன்: வருவது, போவது, நிற்பது, சிரிப்பது, சொல்வது, கேட்பது, அறிவிப்பது, அறிந்து கொள்வது அனைத்தும் பிரக்ஞை. (குருவைத் தொட்டு) இது வெறும் உடல்.
இ.சிஷ்யன்: உடல்களை வெளிப்படுத்துவது அம்மாக்கள் காரியம்.
மு.சிஷ்யன்: உடல்களில் கறி ஏற்றுவது நம்ம காரியம்.
இ.சிஷ்யன்: (குருவின் காதோரம் சென்று உரக்க) இவர்களுக்குப் புரியும் பாஷையில் எங்களுக்கு விளக்கத் தெரியவில்லையே, பெருமானே, உங்களுக்குத் தெரியுமே இவர்களுக்கு எது புரியும் என்று.

மு.சிஷ்யன்: பெருமானே, ஒரு சின்ன உபாயம், உங்கள் கறியைக் கொஞ்சம் அசைத்துக் காட்டுங்கள். இவர்கள் போய் விடுவார்கள்.
இ.சிஷ்யன்: மிகஎளிய உபாயம் இது. உங்கள் சதையின் அசைவுகளை இவர்கள் கண்களில் படும்படி செய்யுங்கள்.
மு.சிஷ்யன்: அல்லது, பெருமானே, உங்கள் குரல்வளையிலிருந்து சில சத்தங்களையாவது எழுப்பிக்காட்டுங்கள்.
இ.சிஷ்யன்: சத்தம் இவர்களுக்குப் பிடிக்கும்.     
மு.சிஷ்யன்: சத்தத்தின் எச்சிலைத் துப்பவும், சத்தத்தின் எச்சிலைக் காதில் விட்டுக்கொள்ளவும் இவர்களுக்குப் பிடிக்கும்
இ.சிஷ்யன்: பெருமானே, என்னென்ன தமாஷ் எல்லாம் காட்டி எங்களை மகிழ்விப்பீர்கள்? ஒரு சின்ன ஜாலம் காட்டி எங்களைக் காப்பாற்ற மாட்டீர்களா?
மு.சிஷ்யன்: இனிமேலும் எங்களால் பொறுத்துக் கொள்ள முடியாது. பெருமானே.
இ.சிஷ்யன்: உங்கள் வருகைக்குக் காத்திருப்பது ஒரு பேரானந்த நிலை. அதைப் பிடுங்கிக் குலைக்கிறார்கள் இவர்கள்.

(குரு படீரென்று எழுந்து திரும்பி உட்காருகிறார். தன் முகச்சதைகளை அசைத்து பல்வேறு கோணாங்கிகள் செய்து காட்டுகிறார். தன்  தொண்டைக் குழியிலிருந்து விசித்திரமான சப்தங்களை அடுக்கடுக்காக எழுப்பிக் காட்டுகிறார்.)

நெட்டையும் குட்டையும்: (சேர்ந்து) அய்யோ உயிர்! அய்யோ உயிர்!

(கத்தியபடி ஓடுகிறார்கள். பலர் எழுந்து ஓடும் காலடி அதிர்வுகள் ஒலி பெருக்கி வழியாகக் கேட்கிறது.)  

***

நன்றி: கொல்லிப்பாவை, தாஜ்