வளர்ப்பு மிருகம் – சுகுமாரன் கவிதை (ஒவியம் : ஆதிமூலம்)

கவிஞர் ஞானக்கூத்தன் நடத்திய ’கவனம்’ சிற்றிதழில் வெளியான சுகுமாரனின் கவிதையையும் அதற்கு ஆதிமூலம் வரைந்த ஓவியத்தையும் நண்பர் விமலாதித்த மாமல்லன் முகநூலில் பகிர்ந்திருந்தார். (’கவனம்’ இதழ்கள் முழுத்தொகுப்பையும் தற்போது அமேஜான் தளத்திலும் வெளியிட்டிருக்கிறார். இங்கே க்ளிக் செய்து வாங்கலாம்).

எனக்குப் பிடித்த ஒவியர்களில் ஒருவரான ஆதிமூலம் பற்றி சுகுமாரன் எழுதிய  ’வாழும் கோடுகள்’ என்ற சிறு கட்டுரையை ஏற்கனவே டைப் செய்து வைத்திருந்தேன்.  எல்லாவற்றையும் சேர்த்துப் போட இப்போது ஒரு வாய்ப்பு.

சுகுமாரனுக்கும், மாமல்லனுக்கும், எப்போதும் எடுத்துக் கெடுக்கும் (!) என் சென்ஷிக்கும் நன்றிகள். – AB

*

வளர்ப்பு மிருகம் – சுகுமாரன்

தளர்ந்து
உயிர் பிரியத் தவிக்கும் உடம்பாய்க் குறுகி
எங்கோ பார்த்துக் கொண்டிருந்த
என் கால்களை முகர்ந்தது, அது.
அதன் கண்களில் நிராதரவு.
இரங்கி சில சொற்களை எறிந்தேன்
பசி நீங்கியும் போகாமல்
என் நிழலைத் தொடர்ந்தது.
நாளடைவில் கால் முகம் ரோமம் என
உறுப்புகள் மீண்டன அதற்கு
பற்கள் நீண்டன
நகங்கள் வளர்ந்தன
கண்களில் குரோதம் அடர்ந்தது
அதற்குப் பயந்து
நண்பர்கள் வராமல் போனார்கள்
குழந்தைகள் ஒளிந்து கொண்டார்கள்,
அது வளர்ந்து
என்னை விடப் பெரிதாயிற்று
அதன் பற்களில் வெறி துடித்தது
எனினும் என்னை ஒன்றும் செய்யாது என்றிருந்தேன்
அதன் முனகலும் உறுமலும்
என் அமைதியைக் கலைத்தன.
அதன் ரோமங்கள் உதிர்ந்தும்
மூத்திரம் தேங்கியும்
மலம் குவிந்தும்
அறை நாற்றமடிக்கத் தொடங்கியது.
தொல்லை தாளாமல் நம்பிக்கைகளைக் கோர்த்துச் சங்கிலியாக்கிக்
கட்டி வைத்தேன்,
உலாவப் போகையில் சங்கிலி புரளக்
கூடவந்தது. பிறகு
இழுத்துப் போக வலுவற்ற என்னை
இழுத்துப் போகத் தொடங்கியது.
சங்கிலிச் சுருளில் மூச்சுத் திணற
சிக்கிக் கொண்டேன் நான்.
விடுபடத் தவிப்பதே விதியாச்சு
ஒரு நாள் விசை குறைந்த சங்கிலியைக் கை உணர
அது தொலைந்ததென்று மகிழ்ந்தேன்.
எனினும்
புலனாகாத எங்கோ
அகற்ற முடியாத சங்கிலியின் மறுமுனையில்
இருக்கக் கூடும் அதுவென்ற
பயம் பின்பு நிரந்தரமாச்சு.

(கவனம் / 13)

*

வாழும் கோடுகள் – சுகுமாரன்

சில ஆண்டுகள் முன்பு வரை வெகுஜன வாசகர்களுக்கு தயக்கம் இருந்தது. நவீன ஓவியமெல்லாம் நமக்குப் புரியாது என்பது அந்தத் தயக்கம். பெரும் பத்திரிகைகளுக்கும் நவீன ஓவியங்களிடம் தீண்டாமை இருந்தது. அதுவெல்லாம் நமது பத்திரிகைகளில் பொருந்தி வராது.

இந்தத் தயக்கத்தையும் தீண்டாமையையும் உடைத்த ஓவியர் கே.எம். ஆதிமூலம். எழுபதுகளில் வெளிவந்த சிற்றேடுகளில் ஆதிமூலத்தின் கோட்டோவியங்கள் இடம்பெறாத இதழ்கள் மிகக் குறைவாகவே இருக்கும். புதிய கவிதைபோல நவீன ஓவியமும் துடிப்புள்ள ஒரு சின்ன வட்டத்தின் விவாதப் பொருளாக இருந்தது.

பெரும் பத்திரிகைகளின் உலகுக்கு குங்குமம் மூலம் அறிமுகமானவர் ஆதிமூலம். தனித்துவமும், உயிர்ப்பும் உள்ள கோடுகளால் உருவான அவரது ஓவியங்கள் வெகுஜன வாசகர்களை முதலில் பிரமிக்க வைத்தன. பிறகு கவனிக்க வைத்தன. அதன் பிறகு புரிந்து கொள்ள அழைத்தன. இன்று நவீன ஓவியங்களை வெளியிட எந்தப் பெரிய பத்திரிகையும் முகம் சுளிப்பதில்லை. மாறாக கொஞ்சம் சீரியஸான கதை, கவிதைகளுக்கு அவரையோ, அவரைப் போன்ற நவீன ஓவியர்களையோ தேடுவது வழக்கமாகிவிட்டது.

நவீன ஓவியர்களில் பல முதன்மைகளைக் கொண்டிருப்பவர் ஆதிமூலம். பெரும் பத்திரிகைளில் பரவலாக நவீன ஓவியங்களை முதன் முதலில் இடம்பெறச் செய்தவர். தமிழ் எழுத்துக்களின் வடிவமைப்பில் மாற்றம் செய்து புத்தக முகப்புகளிலும், தலைப்புகளிலும் குடியமர்த்தியவர். நவீன ஓவியங்களில் தொடர்கதைக்குப் படம் வரைந்தவர் என்று பல முதல்கள் அவரிடமிருந்து தொடர்கின்றன.

ஆதி மூலம் உருவாக்கிய தலைப்பு எழுத்துக்கள் ஆரம்பத்தில் மிகவும் நையாண்டிக்குரியனவாகப் பேசப்பட்டன. அது அறியாமை . ஏனெனில் அந்த எழுத்துக்களின் வடிவம் அச்செழுத்துக்களின் வடிவமல்ல; கல்வெட்டுகளிலும், ஓலைச் சுவடிகளிலும் பயன்படுத்தப்பட்ட அசலான தமிழ் எழுத்துக்கள் அவை .

மகாத்மா காந்தியின் நூற்றாண்டு விழாவையொட்டி ஆதிமூலம் தீட்டிய நூறு காந்தி படங்கள் ஓவிய உலகில் மிகவும் பிரசித்தம். மிகக் குறைச்சலான கோடுகளால் வரையப்பட்ட கருப்பு வெள்ளைப் படங்கள் அவை. புகைப்பட காந்தியில் இயல்பான தோற்றத்தைப் பார்க்க முடியும். ஆனால் ஆதியின் கோடுகளில் காந்தியின் உயிர்ப்பைப் பார்க்க முடிந்தது. கிராமியக் கலைஞர்களின் கைவண்ணத்தில் உருவான கடவுள் படங்களில் தெரியுமே அதுபோன்ற எளிமையின் உயிரோட்டம்.

சுதந்திரப் பொன்விழாவையொட்டி சென்னை வேல்யூஸ் ஆர்ட் ஃபவுண்டேஷன் ஆதி மூலத்தின் கோட்டோவியங்களை காட்சியாக வைத்திருந்தது. 1962 முதல் நேற்று வரை ஆதிமூலம் வரைந்த கோட்டோவியங்களின் கண்காட்சி அது. ஆதிமூலம் இதுவரை வரைந்த கோட்டோவியங்களின் தொகுப்பு (கோடுகளுக்கிடையே Between the Lines) ஒன்றும் புத்தகமாக வெளியிடப்பட்டிருக்கிறது . இந்த முயற்சியிலும் தமிழ் ஓவியர்களில் முதல் பெருமை ஆதிக்குத்தான்.

ஆதிமூலம் அகில இந்திய ஓவியர்கள் வரிசையில் குறிப்பிடப் படுபவர். தமிழ்நாட்டில் ஒதுங்கிவிட்ட காரணத்தினால் உலகப்பிரசித்தி பெறவில்லையோ என்னவோ?

சர்வதேசத் தரம் உள்ளவர் ஆதிமூலம். ஆனால், அவரது வேர்கள் தமிழ் நிலத்தில் ஊன்றியவை. காந்தி, மகாராஜா ஓவியத் தொடர்கள் அனைத்தும் இயல்பான கோடுகளால் உருவானவை. கிராமிய தேவதைகளின் சிலைகளில் தெரியும் அதே கம்பீரம், அதே ஜீவன் ஆதிமூலத்தின் படைப்புகளிலும் தென்படுபவை.

“ஓவியம் என்பது அறிவிலிருந்து வரும் விஷயமல்ல. உங்கள் பார்வையிலிருந்து வருவது. உங்கள் அனுபவத்திலிருந்து வருவது. நம் ஊர்க் கலைஞர்கள் ஆளுயர அய்யனார் சிலைகளைச் செய்து வைக்கிறார்களே. அவர்கள் ஓவியமோ சிற்பமோ கற்றுக் கொண்டா செய்கிறார்கள். பார்க்கிறார்கள். அனுபவிக்கிறார்கள். படைக்கிறார்கள்’‘ – என்கிறார் ஆதிமூலம்.

நிஜம். நமது பார்வை திரைபோடப்படாததாக இருக்குமெனில் ஆதிமூலத்தின் படைப்புகள் நிச்சயம் ஓர் அனுபவமாக இருக்கும்.

*

(குங்குமம் இதழில் வெளியான கட்டுரை.  சுகுமாரனின் ‘திசைகளும் தடங்களும்’ நூலிலிருந்து.. (பக் 130-132)
*

நன்றி : சுகுமாரன் , விமலாதித்த மாமல்லன்

*

தொடர்புடையவை :
‘நம் திறமையை நாம் உணர வேண்டும்..!’ – ஓவியர் ஆதிமூலம்

நவீன ஓவியம் : சில விளக்கங்கள் – ஜோசப் ஜேம்ஸ்

மோக முள் – (மலையாள மொழியாக்கத்திற்கான) தி.ஜானகிராமன் முன்னுரை

 ஃபேஸ்புக்கில் – இமேஜ் ஃபைல்களாக – இதைப் பகிர்ந்த நண்பர் விமலாதித்தமாமல்லனுக்கு நன்றிகளுடன் பதிவிடுகிறேன். இந்த முன்னுரைக்காகவே மீண்டும் இப்போது ’மோக முள்’ளை வாங்கியிருக்கும்  அவரிடம்  அனுமதியெல்லாம் வாங்க மாட்டேன்.  டைப் செய்து உடனே இங்கே போடலேன்னா தி.ஜா பிரியனான எனக்கு தூக்கமும் வராது..! சி.ஏ.பாலன் மொழிபெயர்ப்பில் கேரள சாகித்திய அக்காதெமி வெளியீடாக மலையாளத்தில் வெளியான ’மோக முள்’ நாவலுக்குத் தி.ஜானகிராமன் எழுதிய முன்னுரை இதுவென்றும்  மலையாளத்திலிருந்து தமிழாக்கியவர் சுகுமாரன் என்றும் குறிப்பு சொல்கிறது.  ’தராசில் நிறுத்துப் பார்ப்பதற்காக நான் எதையும் எழுதுவதில்லை’ என்று சொல்லும் தி.ஜா சொல்வதைக் கேளுங்கள். நன்றி. – ஆபிதீன்

***

thi-ja

மோக முள் – மலையாள மொழியாக்கத்தின் முன்னுரை

1956-56 வருஷங்களில்தான் ‘மோகமுள்’ளை எழுதினேன். அப்போது எனக்கு வயது முப்பத்து நாலு.

எனக்குச் சங்கீதம் சொல்லிக்கொடுத்த ஒரு மகா வியக்தியும் எனக்கு நன்கு தெரிந்த பலரும் இந்த நாவலில் இருக்கிறார்கள். உருவத்திலும் பெயரிலும் மாத்திரமே வேறுபாடு.

இந்த நாவலின் பாதி பாகமும் என் சொந்தக் கதை என்று எண்ணுபவர்கள் உண்டு. அது சரியல்ல, சில சம்பவங்கள், மனிதர்கள், விகார விசாரங்களை வாழ்க்கையிலிருந்து எடுத்திருப்பதாகத் தெரியலாம். அப்படி எடுப்பதுதான் இலக்கியப் படைப்பு என்று சொல்வதற்கில்லை.

நான் பல சந்தர்ப்பங்களில் சொல்லியிருக்கிறேன். வாழ்க்கை, இலக்கியம் இரண்டும் இரண்டுதான். இரண்டும் ஒன்றாகத் தெரியலாமென்றாலும் அது வெறும் தோற்றம் மட்டும்தான். வாழ்க்கைப் பிரச்சனைகளுக்குச் சில சமயங்களில் இலக்கியம் பரிகாரங்களை வைக்கலாம். ஆனால் இலக்கியம் அந்தப் பரிகாரங்களைக் கொடுத்தே தீர வேண்டும் என்ற அபிப்பிராயம் எனக்கு இல்லை. சுருக்கமாகச் சொன்னால் ஒரு மனிதனின் அக உலகம், அதிலிருக்கும் சிக்கல்கள், அதன் கடினமான துக்கங்கள், சித்ரவதைகள், அதன் மகிழ்ச்சி இவை எல்லாவற்றின் மொத்தமான அனுபூதிநிலைதான் இலக்கியப் படைப்பின் உந்துசக்தி. எதற்காக, எந்த நோக்கத்துக்காக எழுதுகிறேன் என்று கேட்டால் அந்தக் கேள்வி அநாவசியமானது என்றுதான் சொல்வேன். அது நீங்கள் ஏன் காதலிக்கிறீர்கள் என்று கேட்பதைப் போலத்தான் இருக்கும்.

’மோகமுள்’ளில் சங்கீதம், காதல், கல்வி, தமிழ்நாட்டின் கிராமங்களிலும் சிறிய நகரங்களிலும் பார்த்த மனிதர்களின் வாழ்க்கை முறையும் மோகங்களும் மோக பங்கங்களும் இப்படி என்னவெல்லாமோ இருக்கின்றன. இவையெல்லாம் நாவலாசிரியனின் திடமும் தீர்மானமுமான முடிவுகளென்றோ அபிப்பிராயங்கள் என்றோ எடுத்துக் கொள்ள வேண்டாம். தராசில் நிறுத்துப் பார்ப்பதற்காக நான் எதையும் எழுதுவதில்லை.

இந்த நாவலில் கட்டுக்கோப்பான கதை இல்லையென்று பலரும் சொல்லியிருக்கிறார்கள். ஒரு சாமான்யன் ஒரு குழந்தையையோ ஒரு பூவையோ ஒரு நாய்க்குட்டியையோ தன் நெஞ்சோடு வாரியணைத்துக்கொள்வது போல விதவிதமான அனுபூதிகளை – உணர்ச்சிகளை, எண்ணங்களை, கதாபாத்திரங்களை கட்டித் தழுவிக் கொள்வதில் ஏற்படும் ஒரு பிரத்தியேக அனுபூதிதான் எனக்கு இருக்கிறது.

இந்த நாவலில் நாவலின் உத்திகள் இல்லை. பரிணாமம் இல்லை. இத்தியாதி விமர்சனங்களுமிருக்கின்றன, அந்த விமர்சனங்களைப் பணிவோடு ஏற்றுக்கொள்கிறேன். ஆனால் முன்னால் உந்திய வயிறும் ஒட்டிய பிருஷ்டமும் சூம்பிப்போன கால்களுமாகப் பிறந்துவிட்டது என்பதற்காக தன் குழந்தையை ஒரு பிச்சைக்காரிகூடக் குப்பைத் தொட்டியில் வீசி எறிவாளா?

தி. ஜானகிராமன்

புது தில்லை

7.6.1970

***

தொடர்புடைய இரு சுட்டிகள் :

மோகப் பெருமயக்கு – சுகுமாரன்

திகட்டவே திகட்டாத தி. ஜானகிராமன்

அரவானின் மனைவிகள் – சுகுமாரன்

சுகுமாரனின் ‘திசைகளும் தடங்களும்’ நூலிலிருந்து ..

குங்குமம் இதழில் (மே,1994) வெளியான கட்டுரையின் பிற்பகுதியைப் பகிர்கிறேன், இந்தியாவில் மட்டுமா கூவாகம் இருக்கிறது என்ற கேள்வியுடன்…

**

……..

‘நீங்க பிறவியிலேயே இப்படியா?’

‘இல்ல சார். நான் ஆம்பளை மாதிரிதான் இருக்கேன். ஆபீஸ் போகும்போது பேண்ட் ஷர்ட் போடறேன். மீசை வெச்சுக்குறேன். இங்க (கூவாகம்) வர்றதுக்காகத்தான் இப்படி. எனக்கு சின்னக் குழந்தையிலிருந்தே பொட்டு வெச்சுக்குறது, பூ வெச்சுக்கிறது, மை போட்டுக்குறது எல்லாம் பிடிக்கும். அது அப்படியே தொடருது. இப்பவும் எங்க வீட்ல நான் பொம்பள மாதிரி நடந்துக்குறேன்னு தெரியுமே தவிர அலியாயிட்டேன்னு தெரியாது. இது ஒரு கலை சார். என்னை அலங்காரம் பண்ணிக்கிறேன். அழகாக் காட்டிக்கிறேன். பொம்பளைதான் அழகு. அதனால் நானும் அப்படியே ஆயிட்டேன். இங்க வர்றதுக்கு ரொம்ப செலவு சார். மேக்கப், அலங்காரம், பஸ்ஸுன்னு செலவாயிடுது.’

பிளஸ் டூ வரை படித்திருக்கும் முரளியின் சகோதரி ஒருவர் எம்.பி.ஏ படித்து ஊட்டியில் பதவியில் இருக்கிறார். தம்பி பி.ஈ. படித்துக் கொண்டிருக்கிறார்.

‘நீங்க இப்படி இருக்குறதுல என்ன அசௌகரியம்?’

‘எனக்கொண்ணும் இல்லை. மத்தவங்கதான் என்னமோ அருவருப்பா பாக்கறாங்க. சில பேரு மேல வந்து ஒரசறாங்க. மார்பு மேல, இடுப்புல கை போட்டுக் கிள்ளுறாங்க. இதெல்லாம் எங்களுக்கே அருவருப்பா இருக்கு.’

‘அலிகளை செக்ஸுக்கு பயன்படுத்தறதாச் சொல்றாங்களே. நீங்க அந்த மாதிரி மாட்டியிருக்கீங்களா?’

‘சில பேரு அப்படியும் இருக்கலாம். நாங்க அப்படி இல்லே. நாங்க பத்து பேரு ஒரு குரூப். எங்களுக்கு ஒரு குரு இருக்காங்க. நாங்க ‘அம்மா’ன்னு கூப்புடுவோம். எங்க நல்லது கெட்டது எல்லாம் அவங்க பாத்துக்குவாங்க. இங்க வந்துருக்கமே அவங்கதான் எங்களை கவனமா பாத்துக்குவாங்க. அதனால தப்பா நடக்க முடியாது.’

‘பசி மாதிரி செக்ஸும் எல்லோருக்கும் வர்ற உணர்ச்சி. நீங்க என்ன செய்வீங்க?’

இந்தக் கேள்விக்குக் பதில் சொல்ல முரளி முதலில் தயங்கினார். அவர் முகத்தில் வெட்கம் குடிகொண்டது. பிறகு மெதுவாகச் சொன்னார்.

‘எங்களுக்குள்ள செக்ஸ் வெச்சுக்குவோம்.’

முரளியை படம் எடுக்க முடியவில்லை. ‘எங்க வீட்ல தெரிஞ்சிடும் சார். எனக்கு வருத்தமில்ல. ஆனால் அவங்க வருத்தப் படுவாங்க, வேண்டாம்.’

முரளியிடம் விடைபெற்று நகர்ந்தோம்.

திடலில் அரவான் வைக்கோல் புஷ்டியுடன் உருவாகிக் கொண்டிருந்தார்.

கூவாகம் திருவிழாவின் முக்கிய விருந்தாளிகள் அலிகள்தான். விழாவுக்கு நாள் குறிக்கப்பட்டதும் கோவில் சார்பாக அலிகளுக்கு கடிதம் அனுப்பப்படும். விழாவுக்கு வந்து சேர்ந்துவிடுவார்கள்.

‘முந்தியெல்லாம் ரொம்ப பொட்டைங்க வருவாங்க. இரண்டு மூணு வருஷமாக் கொறஞ்சிடுச்சு. நம்ப ஆளுங்க அட்டகாசம் பண்ணி வெரட்டறதுல பயந்துடுச்சுங்க’ என்றார் கூத்தாண்டவர் கோவில் அறங்காவலர்களில் ஒருவரான வீரக் கவுண்டர்.

ஜன நெரிசலில் பிழியப்பட்ட களைப்பில் வயல்வெளியில் அயர்ந்துவிட்டோம். அதிகாலை மூன்று மணி.

திடீரென்று அதிர்வேட்டும், உயிரூட்டும் மேளமும் முழங்கின. அரவான் புறப்பட ஆயத்தமாகிவிட்டார். கோவிலை நெருங்கினோம்.

கூத்தாண்டவரின் சிரசை ஒருவர் தலை மேல் தூக்கிக்கொண்டு ஆடியபடி தேரை நெருங்கினார். ஜனக் கூட்டத்திலிருந்து பூக்கள் வீசியெறியப்பட்டன. பத்தடி உயரத் தேரின் மீது பதினைந்து ஆட்கள் நின்று சிரசை வாங்கிப் பொருத்தினார்கள். பிறகு மார்பதக்கம், புஜங்கள் என்று மெதுவாக வந்து ஒன்று சேர்ந்தன.

தேரின் முன்னால் பாறை மாதிரிக் கற்பூரக் கட்டிகள் எரிந்து கொண்டிருந்தன. அரவானின் தேர் அங்கிருந்து புறப்பட்டு ‘அழுதகளம்’ என்ற இடத்துக்கு வந்து சேரும். பிறகு ஒன்றரை மைல் தூரத்திலுள்ள நத்தம் (பந்தலடி) என்ற இடத்தில் அரவானின் சிரசு பலியிடப்படும். அப்போது அலிகள் தங்கள் தாலிகளை அறுத்தெறிவார்கள். தலையில் சூடிய பூக்களைப் பிய்த்து வீசுவார்கள். பலியான கணவனுக்காக மார்பில் அறைந்து கொண்டு அழுவார்கள். விழாவின் ஆரவாரம் அத்துடன் முடிந்துவிடும்.

அலிகளில் சிலரைத் தவிர பலர் அடிமை வாழ்வு நடத்துபவர்கள். அவர்களுக்கு கூட்டைவிட்டு வெளியே வர அகப்படும் வாய்ப்பு இந்தக் திருவிழா. இந்தியாவின் பல இடங்களிலிருந்தும் வந்து கூடுகிறார்கள். தமது கற்பனைக் கணவனுக்ககக் கண்ணீர் சிந்திவிட்டு திரும்பக் கூண்டுக்குள் போய்விடுகிறார்கள்.

கூவாகத்தில் விநியோகப்பட்ட துண்டு அறிக்கை ஒன்று நம்மைக் கவனிக்கச் செய்தது. அலிகள் மோசமாக நடத்த்ப்படுவதை எதிர்த்து சங்கம் தொடங்க்ப்பட வேண்டிய தேவையை வற்புறுத்தியது அந்த நோட்டீஸ். நம்மிடையே சரியும் தவறும் இருப்பதுபோல அவர்களிடையிலும் இருக்கிறது. அவர்கள் நம்மிடம் அனுதாபத்தையோ ஆதரவையோ எதிர்பார்க்கவில்லை. அவர்கள் வாழ்க்கையை சுதந்திரமாக வாழ அனுமதிக்கும்படி சொல்கிறார்கள்.

***

நன்றி : சுகுமாரன், குங்குமம், அன்னம் பதிப்பகம்.
****

தொடர்புடைய பதிவு :

கூத்தாண்டவர் திருவிழா : அரவாணிகள் வாழ்வும்.. தாழ்வும்.. – பொன்.வாசுதேவன்

எனது பஷீர் – சுகுமாரன்

கேரளத்தின் பருவ மழைக் கடைசியில் ஒருநாள். கோழிக்கோட்டிலிருந்து பேப்பூர் செல்வதற்காகப் பேருந்து நிலையத்தில் காத்திருந்தேன். காலையிலிருந்தே மழை விட்டு விட்டுப் பெய்து கொண்டிருந்தது. இந்த மழையில் பேப்பூர் போக வேண்டுமா என்ற குழப்பத்தில் நின்றிருந்தேன். பேப்பூர் போகும் பஸ் வந்து நிற்கும் வரையில்தான் அந்தக் குழப்பம் நீடித்தது. பஸ்ஸைக் கண்டதும் கால்கள் முடுக்கிவிட்டவை போல ஓடின. ஜன்னலோரமாக சீட்டைப் பிடித்து அமர்ந்து கொண்டேன். பஸ் நகர்ந்தது. பேப்பூரில் வைக்கம் முகம்மது பஷீரைப் பார்க்கப் போகிறேன் என்ற உற்சாகம் மனதில் ததும்பியது.

மலையாள மொழியைக் கற்று இலக்கியங்களைப் படிக்கத் தொடங்கிய ஆரம்பக் கட்டத்திலேயே சில எழுத்தாளர்கள் என்னை மிகவும் கவர்ந்தார்கள். அவர்களில் பஷீர் முக்கியமானவர். ‘இந்த மொழியில் எனக்குப் பிரியமான எழுத்தாளர் பஷீர்தான் என்று உறுதி செய்து கொண்டேன்.

பஷீருடன் புத்தகங்கள் மூலம் அறிமுகமான பிற எழுத்தாளர்கள் எனது ருசியும், கருத்துகளும் மாறியபோது தங்கள் நாற்காலிகளைக் காலி செய்து கொண்டார்கள். ஆனால் பஷீரும் அவரது சிம்மாசனமும் அப்படியே இருக்கின்றன.

பஷீரின் வைலாலில் வீடு எல்லா கேரள வீடுகளையும் போல சுமாராகப் பெரியது. தெருவிலிருந்து வாசலை அடைவதற்குள் இருபுறமும் மரங்கள், பூச்செடிகள். முற்றத்தில் திண்ணை வெளியே பார்த்தபடி சாய்வு நாற்காலியில் உட்கார்ந்திருந்தார் பஷீர். படிகளுக்கு அருகே நின்று சிறிது தயங்கினேன். தியானத்தில் இருப்பவர் போலக் கண்களை மூடியிருந்த பஷீர் விழி திறந்து பார்த்தார்.

“வா கயறி இரிக்கு”

படியேறினேன்.

பஷீர் தலையைத் திருப்பி உள்ளே குரல் கொடுத்தார்.

‘ஃபாபி சாய எடுக்கு. ஒரு ஆள் வந்நிட்டுண்டு.”

“நான் தமிழ்நாட்டிலிருந்து வருகிறேன். உங்கள் வாசகன். உங்களைச் சந்திக்க வேண்டும் என்று நீண்டகாலமாக விரும்பி இருந்தேன். அதற்காகவே வந்தேன்” என்றேன்.

“எல்லாரும் சேர்ந்து என்னை மிருகக் காட்சிச் சாலையில் இருக்கிற ஜந்து மாதிரி ஆக்கிவிட்டீர்கள்.”

பஷீரின் பதில் கொஞ்சம் அதிர்ச்சியளித்தது.

“அட, பயப்படாதே. சும்மா விளையாட்டுக்குச் சொன்னேன். ஒரு பொடிப் பையன் என்னைப் பார்க்க இவ்வளவு தூரம் வந்திருக்கிறான் என்பது எவ்வளவு சந்தோஷமான காரியம்”

சொல்லிவிட்டுக் கண் சிமிட்டினார் பஷீர்.

“இதா சாயா ” பஷீரின் மனைவி தேநீர் டம்ளர்களுடன் வந்தார்.

“இதாணு மாஹானாய பஷீரின்டெ பத்னி. ஃபாபி பஷீர்.”

“தெரியும்” என்று சொல்லிவிட்டு வணங்கினேன்.

“தமிழ்நாட்டிலிருந்து வருகிறான்” என்றார் பஷீர்.

“நல்லது, சாப்பிட்டுவிட்டுப் போகலாம்.” பஷீரின் மனைவி சொன்னார்.

நான் போயிருந்தது பஷீருக்கு மோசமான காலகட்டம் அல்லது மலையாள இலக்கிய உலகுக்கு கிரணகாலம்.

பஷீரின் சொந்த வாழ்க்கையில் இழப்புகள் ஏற்பட்டிருந்தன. இலக்கிய வாழ்க்கையிலும் பொய்ப்படலம் கவிந்திருந்தது.

பஷீரின் சொந்த அனுபவம் ‘மதில்கள்’ என்ற நாவல். அது ஆர்தர் கோஸ்லர் எழுதிய ‘நடுப்பகல் இருட்டு’ நாவலின் திருட்டு என்ற பிரச்சாரம் நிலவியிருந்தது.

பஷீர் ஒரு முஸ்லிம் மதவாதி என்றும் அவதூறு சொல்லப்பட்டிருந்தது. இந்தப் பொய்க்கருத்துக்கள் பஷீரை மௌனியாக்கி இருந்தன. வேதனையின் மௌனம் அது.

‘சொல்லிவிட்டுப் போகட்டுமே. மனிதர்கள் என்றால் நாலு நல்லதும் சொல்வார்கள். கெட்டதும் சொல்வார்கள். நாம் நல்லதை மட்டுமே எடுத்துக்கொண்டால் போகிறது’ என்றார் பஷீர்.

இந்திய மொழிகளின் மிகச் சிறந்த இலக்கியவாதிகள் என்று பட்டியல் தயாரித்தால் வைக்கம் முகம்மது பஷீரின் பெயர் நிச்சயம் இடம்பெற வேண்டும்.

பஷீரின் இலக்கியத்தில் அவரே முக்கிய கதாபாத்திரம். அவருடைய அனுபவங்களே கதையின் சம்பவங்கள். பஷீரின் எல்லாப் படைப்புகளையும் படித்து முடித்தால் ஏறத்தாழ அறுபது வருட கேரள வரலாற்றை சுவாரசியமான முறையில் தெரிந்து கொண்டு விடலாம்.

“இப்படி ஒரு பாணியை வேண்டுமென்றே  தேர்ந்தெடுத்தீர்களா?” என்று கேட்டேன்.

“எனக்கு அனுபவப்பட்டதை எழுதுகிறேன். அவ்வளவுதான். அதில் நடை, உத்தி என்று மெனக்கெடுவது இல்லை.”

எண்பதுகளில் பஷீர் அதிகம் எழுதவில்லை. அவ்வப்போது பத்திரிக்கைகளில் கட்டுரைகள் எழுதுவதைத் தவிர. படைப்பிலக்கியமாக எதுவும் வெளிவரவில்லை. ஏன்?

“எனக்குச் சொல்ல இருப்பதைச் சொல்லி விட்டேன் என்று தோன்றியது. நிறுத்தி விட்டேன். வாழ்க்கையை எழுதி எழுதிப் பார்த்தது போதும். கடவுளின் கஜானாவில் மிச்சமிருக்கிற நாளை வாழ்ந்து பார்க்கறதுதானே சரி. என்ன சொல்கிறாய்?” என்றார் பஷீர்.

நான் பேச வந்தவன் அல்ல. பஷீர் பேசுவதைக் கேட்க வந்தவன். நான் என்ன சொல்ல?

பிற்பகல். பஷீரிடமிருந்து விடைபெற்றுக் கொண்டேன்.

“இனி வரும்போது இங்கே வா. பேசிக் கொண்டிருக்கலாம். பேச்சும் எழுத்தைப் போலத்தான் குஷாலான காரியம்.”

கை கூப்பினேன். சாய்வு நாற்காலியிலிருந்து எழுந்து நின்றார் பஷீர். நீண்ட கைகள். இரண்டு கைகளும் என் தோள் மீது பதிந்தன. மெல்ல இழுத்து அவரோடு சேர்த்துக் கொண்டார்.

“மங்களம். நல்லது வரட்டே” என்று தலைமீது கை வைத்து ஆசீர்வதித்தார்.

நெகிழ்ந்து போனேன். என் தகப்பனார் கூட என்னை அவ்வளவு ஆதரவாக அணைத்து வாழ்த்தியதாக நினைவில்லை.

மறுபடியும் பெய்யத் தொடங்கியிருந்தது மழை. வலுவாக இல்லை. இதமாகப் பெயது கொண்டிருந்தது.

***

குங்குமம் – ஜூலை, 1994-ல் வெளியான கட்டுரை – ‘திசைகளும் தடங்களும்‘ நூலிலிருந்து..

***

நன்றி : சுகுமாரன், குங்குமம், அன்னம் பதிப்பகம்.

***

மேலும் பார்க்க : பஷீர்: பூமியின் உரிமையாளர் – சுகுமாரன்

« Older entries