பகுத்தறிவும் பெருமானாரும் (ஸல்)

இஸ்லாத்தைப் பரப்புவதற்காக நளினமும் , நல்ல பழக்க வழக்கங்களையும் பண்பாடுகளையும் கொண்ட முஆதிலை (Muadz) ஏமனுக்கு அனுப்பியபோது அழகிய அறிவுரைகள் சொல்லி,  சில அதிகாரங்களையும் அவருக்கு வழங்கிவிட்டு, “ஓ! முஆதில்!! ஒரு வழக்கு என்று வந்தால் நீங்கள் எவ்வாறு தீர்ப்புச் சொல்வீர்கள்?” என்று பெருமானார் (ஸல்) கேட்டார்கள்.

“திருமறையில் உள்ளபடி!” என்று முஆதில் பதில் சொன்னார். “அதிலும் வழிகாட்டுதல் இல்லையென்றால்..?” இது பெருமானாரின் அடுத்த கேள்வி. “முந்தைய சம்பவங்களின் முன்மாதிரி அடிப்படையில்!” என்றார் முஆதில். “அங்கும் எதுவும் இல்லையென்றால்..? என்ற பெருமானாரின் கேள்விக்கு, “எனது பகுத்தறிவைப் பயன்படுத்தி!” என்று பதில் சொன்னார்.

இந்த அறிவார்ந்த தெளிவான பதில் பெருமானாரை மிகவும் மகிழ்வித்தது. அவரை அப்படியே கட்டிப்பிடித்து உணர்ச்சி வசப்பட்ட குரலில், “அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும். அவன் மு ஆதிலின் உள்ளத்தில் இறைத்தூதரை மகிழ்விக்கத்தக்க எண்ணங்களை ஊன்றியுள்ளான்!” என்றார்கள்.

—————-
எம்.ஆர்.எம். அப்துற்-றஹீம் அவர்கள் எழுதிய ‘இறைத்தூதர் முஹம்மத்’ நூலிலிருந்து… (பக் : 764)
ஆங்கிலத்திலிருந்து தமிழில் : சாத்தான்குளம் அப்துல் ஜப்பார் அவர்கள்
நன்றி : யுனிவர்ஸல் பப்ளிஷர்ஸ்

வரம்பு (சிறுகதை) – சாத்தான்குளம் அப்துல் ஜப்பார்

யா அல்லாஹ், ’குமர்’ஐ  வைத்துக்கொண்டு கலங்கும்  வாப்பாக்களுக்குத்தான் குமுறல் புரியும். ‘இஸ்லாமியச் சிறுகதைகள்’ தொகுப்பிலிருந்து நன்றியுடன் பதிவிடுகிறேன்… – ஆபிதீன்

***

ajaabbar-f1

வரம்பு – சாத்தான்குளம் அப்துல் ஜப்பார்

அவருடைய கல்யாணம் பதிமூன்று வயதில்.

பன்னிரண்டு வயதில் ஐந்தாம் வகுப்பு பாஸ் செய்தார். மேலே படிக்க வேண்டுமென்றால் வெளியூருக்குத்தான் போக வேண்டும்.

அவருடைய உம்மா, “ஓதியாச்சி, படிச்சாச்சி, இனி பொழய்க்கிற காட்டைப் பார்த்துப் போக வேண்டியதுதான்” என்றாள்.

வாப்பாவோ, ‘கையெழுத்து போடவும், கணக்கு வழக்குகளைப் பார்க்கவும் தெரிந்தால் போதும். மற்ற அனுபவப் படிப்புகளையெல்லாம் கொழும்பில் பார்த்துக் கொள்ளலாம்’ என்று அங்கிருந்து வரும்போதே கையுடனேயே மகனுக்கும் சேர்த்து ‘கொரண்டைன்’ பாஸ் கொண்டு வந்து விட்டார்.

இடையில் தக்கடி பெத்தாதான் பேரனுக்கு தண்ணியிலே தத்து இருக்குது. ஆகையினாலே கல்யாணத்துக்கு முன்னாலே கடல் கடந்து போவது நல்லதல்ல என்று ஒரே பிடி பிடித்தாள். தத்து பித்தை விட தன் வயதான காலத்தில் பேரன் இன்னும் ஒரு ஐந்தாறு ஆண்டு காலம் தன்னுடன் இருப்பானே என்கிற பாச உணர்வே முக்கியம்.

தாய் சொல்லத் தட்டவும் முடியாமல் மகனை விட்டுவிட்டுப் போகவும் இஷ்டமில்லாமல் கச்சி வாவா மரிக்கார் ஓர் உபாயம் செய்தார். தன் தங்கை மகள் ஏழு வயது ஐசாவை தன் மகனுக்குக் கல்யாணம் செய்து வைத்தார்.

அந்தச் செல்லக் கல்யாணம் நடந்த சின்னாட்களில் வாப்பாவும், மொவனும் கப்பலேறி கொழும்புக்குப் போய்விட்டார்கள்.

ஆறு வருடங்களுக்குப் பிறகு பெண் புத்தி அறிஞ்சி பெரிய மனுஷியாகி கோலாகலச் சடங்குகள் எல்லாம் முடிந்த பிற்பாடு அவர் ஊர் திரும்பினார்.

நிக்கா(ஹ்) ஏற்கனவே முடிந்திருந்ததால் இனி கையழைத்துக் கொடுக்கும் சடங்கு ஒன்றே பாக்கி. ஓ… அதைத்தான் எவ்வளவு விமரிசையாகச் செய்தார்கள்.

முதல் நாள் பெண் வீட்டில் ஊர்ச்சாப்பாடு. மறுநாளும் ஊரையெல்லாம் கூட்டி மாப்பிள்ளை வீட்டில் தாவத்து , தொடர்ந்து ஏழு நாட்களுக்கு தண்ணி குடிச்சோறு என்கிற பெயரில் சொந்தத் தாய் பிள்ளைகளுக்கெல்லாம் விருந்து. மரவணை நாற்பது நாட்கள் மீன் மரக்கறி கிட்டே வந்துடப்படாது. கிடாய் கோழி… கிடாய் கோழி…

தக்கடிப்பெத்தா கிழவி மூன்று நாட்கள் இராப்பகல் பொண்ணு மாப்பிள்ளை கூடவே இருந்தாள். முதியவளா, நீங்க கிழவன் கிழவியவளா என்பாள். “புருஷன் பொண்டாட்டின்னு ஆனப்புறம் அதென்ன மேக்கப் பாத்துக்கிட்டும் கெழக்கே பாத்துக்கிட்டும் பேச்சி” என்பாள். இப்படி தனக்குத் தெரிந்த எல்லா வழிமுறைகள் மூலமாகவும் அவர்கள் கூச்சத்தை விட்டு விலக கொஞ்சம் கொஞ்சமாக முயன்று முயன்று.. அதன் மூலம் அவர்களது வெட்கம் கொஞ்சம் கொஞ்சமாக அறுந்து அறுந்து அறுந்து…

அந்த சாயபு வந்துட்டானா? அறைக்கு உள்ளேயிருந்து வெளி வந்த அந்த அதிகாரியின் அதட்டலான குரல் கேட்டு சிந்தை அறுந்தது.

துணித் தொப்பியை சுருட்டி மடக்கி ஜிப்பா பைக்குள் வைத்துக்கொண்டு, தோளில் கிடந்த துண்டை எடுத்து முழங்கையில் போட்டுக்கொண்டு பவ்யமாக தாடி மீசையுடன் வாழ்க்கையில் இனியும் அடிபட ஏதும் இல்லை என்னுமளவுக்கு நைந்துபோன அந்தக் கிழ உருவம் உள்ளே நுழைந்தபோது, அதைப் பார்த்த அந்த அதிகாரிக்கு தன் கேள்வியின் கடைசி இரண்டு எழுத்துக்கள் ‘டானா’ கொஞ்சம் நெஞ்சை உறுத்த அது தொண்டையில் ஏதோ செய்தது.

சற்று குரலை சரிசெய்துகொண்டே கேட்டார் “பேரென்ன..?”

“செல்லமரிக்கார்”

“நல்ல பேர்தான்.. மகளுக்குக் கல்யாணம் செய்து வச்சீரா? பெரியவர் ஆம் என்பது போல் தலை குலுக்க.. எத்தனை வயசாச்சி?” என்று கேள்வியை நீட்டினார்.

“எனக்கா?”

“இல்ல உம்ம பொண்ணுக்கு.. பெரியவர் பதில் சொல்லத் துவங்கு முன்பு அதிகாரி தொடர்ந்தார். உள்ளது உள்ளபடி சொல்லனும்; பொய் சொல்லிச் சமாளிக்கனும்னு நெனய்க்காதீர்.”

“இல்லேசமான்… அது எஸ்.எஸ்.எல்.ஸி. படிச்சிருக்கு.”

“பாஸ் பண்ணிட்டுதா?”

“இல்ல, ரிஸல்ட் இன்னமேத்தான்.”

“அப்ப வயது ரொம்பக் கொஞ்சமாத்தான் இருக்கும். பதினெட்டு வயசுக்கு முந்தி கல்யாணம் செஞ்சி வைக்கிறது சட்டப்படி குத்தம். தெரியுமா.”

“தெரியும்.”

“தெரியுமா.. தெரிஞ்சேதான் செஞ்சீரா.. அப்ப உம்ம சும்ம விடப்படாது. சட்டத்தை விடும்வே. இருபத்தியோரு வயசிலெதான் ஒரு பெண்ணோட உடல் பூரண வளர்ச்சி பெறுது. இரிபத்தஞ்சு வயசிலேதான் அவ ஒரு கருவச் சுமக்கத் தயாராவுறா.. இதெல்லாம் ஏன் உங்களுக்குப் புரிய மாட்டேங்கறது.. பதினைஞ்சு வயசுலே புள்ள பெத்து, முப்பது வயசுலே சம்பந்தம் கண்டு முப்பத்தொன்னுலே பாட்டியாகி.. ச்சே..”

“இல்லேசமான்.. நல்லாத் தெரியும். அதன் கொடுமையை நேரடியா அனுபவிச்சவன் நான். என் கல்யாணம் முடிஞ்சப்போ என் பொண்டாட்டிக்கு வயசு ஏழு. வாழ்க்கையைத் தொடங்கினப்போ வயசு பதிமூணு.. பதினைஞ்சி வயசிலே கையிலே கொழந்த.. அது நடக்கிறதுக்கு முன்னேயே இடுப்புலே ஒண்ணு. வயத்துலே ஒண்ணு. பெத்துப் போட்டு.. செத்தது போக… மிச்சம் நாலு.. அத்தனையும் பொட்டை… மிஞ்சுனதுலே கடைசிலே அவளும் ஒருத்தி. என் பொண்டாட்டி.”

“வேற கல்யாணம் செஞ்சுக்கலையா?”

பெரியவர், பதிலான விரக்தியுடன் தலையை ஆட்டினார். சூழ்நிலையின் இறுக்கத்தை சற்று தளர்த்தும் எண்ணத்திலோ என்னவோ, “ஏன் உங்கள்ல இருக்கும்போது கூட நாலு கட்டலாமே?”

“எங்கேசமான், ஒன்னுக்கே தாளம், அதனாலேதான் ஒருத்தி போனப்புறமும் கூட இன்னொன்னை கட்டிக்கல. அது மட்டுமல்ல. அத்தனையும் பொட்டப் புள்ளைய்ங்க, காக்காக் கூட்டுல கலேடுத்து எறிஞ்ச மாதிரி ஆயிடும், சரிவராது.”

“என்னவே உம்ம பாடு அவ்வளவு கஷ்டமா.”

“இல்லேசமான், கொழும்பு போக்குவரத்து இருந்த வரைக்கும் ஓஹோன்னுதான் இருந்தோம். அது நின்னதோட எல்லாம் போச்சி. இங்குள்ள கொடுக்கல் வாங்கல் முறைகள் தெரியாம, ஆட்களைப் புரிஞ்சிக்காமா ஒழுங்கான ஒரு வேலையைத் தேடிக்குறதுக்குண்டான படிப்பும் இல்லாம.. யார் யார் பேச்சையெல்லாமோ கேட்டு யார் யாரையெல்லாமோ நம்பி, இருக்கிற வூட்டைத் தவிர எல்லாமே காலி. அடகு வச்சா வட்டியிலேயே முங்கிடும்னுட்டு வித்துச்சுட்டே திண்ணுப்புட்டோம். எங்க வெவசாயி, சத்தியத்துக்கும் கட்டுப்பட்டு, பாட்டத்துக்கு நெல் தந்துகிட்டு இருந்தாரு.. அவர் மக்க தலை எடுத்ததோட அதுவும் நின்னுபோயி அரை வயித்துக் கஞ்சிலேயும் பல்லி விழுந்த கதை…”

“அழகா கதை சொல்தீர்வே.. ஆனா மக கல்யாணத்தை தடபுடலா நடத்தி இருக்கீறே..?”

“இல்லேசமான், என் புள்ளைக்களுக்கு மத்தியிலேன்னுட்டு இல்லே பொதுவாகவே அந்தப் பொண்ணு பார்க்க அழகா லட்சணமா இருக்கும். படிச்சி வேற இருக்கு. எங்கள்லே அரேயியாவிலேர்ந்து வந்த ஒரு பையன் எங்கே எப்படிப் பார்த்தானோ, அல்லது கேள்விப்பட்டானோ தெரியாது. கட்டுனா அதத்தான் கட்டுவேன்னு ஒத்தக் கால்லயே நின்னுருக்கான். தாயும் தகப்பனும் எங்கிட்டே வந்தாங்க.. காதுலெ கழுத்துலே போடறதுக்கோ, கல்யாணச் செலவுக்கோ எங்கிட்டே ஏதுவாக்கரிசி? கையிலே காலணாக்கூட இல்லேன்னேன்.”

“அது நாங்க பார்த்துக்கிறோம். நீங்க பொண்ண மட்டும் கொடுங்கோன்னாங்க. கல்யாணத்தில் நான் போட்டுக்கிட்டிருந்த லுங்கி ஜிப்பாகூட மாப்பிள்ளை வீட்டுக்காரங்க தந்ததுதான்.” பெரியவரின் குரல் கம்மத் தொடங்கியது.

“சரி இவ்வளவு தூரம் வந்துட்டாங்கல்ல. இன்னும் ஒரு ரண்டு வருஷம் கழிச்சி முடிச்சித் தாரேன்னு சொல்லி இருக்கலாமில்லியா?”

“இல்லேசமான், பையனுக்கு இப்பவே இருபத்தொன்பது முடியப்போவுது. இப்போ போனா இனியும் ரெண்டு வருஷம் கழிச்சித்தான் வரமுடியும். அப்போதைக்கும் ரொம்பப் பிந்திடும். அத்தோட ஒத்தப்பட வயசிலேயே அவன் கல்யாணத்தை முடிச்சுப்போட வேணும்னு அவனோட வாப்பா உம்மாவுக்கு நிர்ப்பந்தம்.”

“ஒன்னை இப்படிச் செய்துட்டீர். மத்த பொண்ணுகளுக்கு இப்படி கல்யாணம் செஞ்சு வய்க்க மாட்டீர்னு என்ன நிச்சயம். சரி அதுகளுக்கு என்ன வயசாச்சி?”

பெரியவர் பதில் சொல்லவில்லை. தலை குனிந்தவராக உள்ளங்கையை திரும்பத் திரும்ப மலர்த்தியும் நிமிர்த்தியும் பார்த்துக் கொண்டிருக்கவே அதிகாரி தொடர்ந்தார். “நீரு சரிப்பட்டு வரமாட்டீர்வே. கேட்டா பதில் சொல்வேண்ணா எப்படி?”

பெரியவர் பதில் சொன்னார். “ஒருத்திக்கு இருபத்திமூணு. மத்தவளுக்கு இருபத்தியாறு. மூத்தவளுக்கு.. – தொண்டை வரண்டு குரல் உடைய சிரமத்துடன் தொடர்ந்தார்,  இருக்குறயேதுலே மூத்தவளுக்கு வயசு இருபத்தொன்பது..”

அழுகையை அடக்க வாயை மூடினார். சப்தம் நின்றது. கண்களை மூடினார். ஆனால் கண்ணீர் நிற்கவில்லை.

அதிகாரி முழங்கைகளை மேசையில் ஊன்றியவாறு விரல்களைக் கோர்த்துப் பிடித்துக் கொண்டிருந்த தாளைக் கையால் கசக்கிச் சுருட்டி பந்துபோல ஆக்கி தன் முஷ்டிக்குள் வைத்து அடக்கிப் பிடித்துக்கொண்டு “சாய்பே நீர் போவும். மற்றதுகளை நான் பார்த்துக் கொள்கிறேன்” என்றார் தீர்மானமாக.

***

நன்றி : சாத்தான்குளம் அப்துல் ஜப்பார் அவர்கள், இஸ்லாமிய இலக்கியக் கழகம்

கதையின் கடைசி புள்ளியை மட்டும் கனகச்சிதமாக தட்டச்சு செய்து சேவை செய்த சென்ஷிக்கும் அதற்கு பலத்த சிபாரிசு செய்த தம்பி ஆசிப்மீரானுக்கும் நன்றி. நல்ல புள்ளையிலுவ…!

***

மேலும் வாசிக்க :

சங்கு (சிறுகதை ) – சாத்தான்குளம் அப்துல் ஜப்பார்

ஜெண்டில்மேன் அப்துல் ஜப்பார்  – ‘காற்று வெளியினிலே’ நூலிலிருந்து சில பக்கங்கள்

சாத்தான்குளம் அப்துல் ஜப்பார் அவர்களது நேர்காணல்