இழப்பு (சிறுகதை) – கவிஞர் சல்மா

’கதா’வும் காலச்சுவடும் இணைந்து நடத்திய சிறுகதைப் போட்டியில் இரண்டாம் பரிசு பெற்ற சிறுகதை இது.  இந்தப் பக்கத்திலுள்ள சிறுகதைகளை ஒன்றாக சேர்த்து தனிப் பக்கமாக சென்றவாரம் பதிவிட்டபோதுதான் சல்மாவைப் போடாதது  தெரிந்தது. எனவே இந்தப் பதிவு.  முன்பு tamil.sify.comல்  இருந்த இந்தச் சிறுகதை இப்போது அங்கே இல்லையாதலால் சகோதரி சந்திரவதானவின் வலைப்பக்கத்திலிருந்து நகலெடுத்து பதிவிடுகிறேன். ஒரு விசயம்… கவிதைகள் எனக்கு பொதுவாகப் பிடிப்பதில்லை. தாஜ் கவிதைகளை அதிகம் படித்துவிட்டேனோ என்னவோ! ( ’செம்பருத்திப் பூவே செம்பருத்திப் பூவே’  பாடலை நான் விரும்புவது ஹரிஹரனின் இதமான குரலுக்காக மட்டும் அல்ல; ‘எழுதிய கவிதையை எவர் கண்ணும் காணும் முன்பு  கிழித்தது நினைவில்லையா?’ என்ற பதமான வரிக்காகவும்தான்! பா.விஜய் வாழ்க.) ஆனால் கவிஞர்களின் கதைகள் எனக்குப் பிடிக்கும். அவர்களின் மொழியாளுமை கதைகளில் அதிகம் மின்னுவதாக ஒரு எண்ணம். உமா மகேஸ்வரி சிறுகதைகள் மாதிரி…  – ஆபிதீன்

***

salmaஇழப்பு – சல்மா

மழையினால் நசநசத்துக் கிடக்கிறது வீடு. மொஸைக் தரையில் கால் வைக்க முடியாதபடி நெறுநெறுக்கிற மணல், பற்களைக் கூச வைப்பதாயிருக்கிறது. கூட்டத்தின் அடர்த்தியைச் சிரமத்துடன் விலக்கியபடி வெளியில் வந்து தெருவில் இறங்கி நடக்க ஆரம்பிக்கிறேன். இழப்பின் துயரத்தாலும் மனித நெரிசலின் இறுக்கத்தினாலும் புழுங்கிக்கிடந்த உடலும் மனமும் தெருக்காற்றின் குளிர்ச்சியில் சிலிர்த்துக்கொள்கின்றன என்றாலும் ஓர் அடிகூட எடுத்துவைக்க இயலாதபடிக்குக் கனத்து நடுக்கமுறுகிறது பாதம். ஒரு நிமிடமேனும் அங்கேயே நின்று ஆசுவாசம்கொள்ள விரும்பினாலும் அதற்குச் சாத்தியமில்லாதபடி அவ்விடத்தினூடாக நடமாடித் திரியும் கூட்டத்தினருடைய இருப்பு சங்கட முண்டாக்குவதாயிருக்க, வலுக்கட்டாயமாக வீட்டை நோக்கிக் கால்களை எடுத்துவைத்து நடக்கிறேன். பத்தடி தூரத்தில் இருக்கும் வீட்டை அடையக் கடும் பிரயத்தனம் கொள்ள வேண்டியிருக்கிறது.

வீடு தன்னை நெருங்கவிடாதபடிக்குத் தள்ளித் தள்ளிப் போவதான கற்பனை மனத்தில் ஓட இன்னும் தீவிரமாக எட்டி நடந்து நெருங்கிவிட முயற்சி செய்கிறேன். நீண்ட முயற்சிக்குப் பிறகே வீட்டை அடைவது சாத்தியமாகிறது. இந்த இரவின் முழுமையான இருளையும் தன்மீது போர்த்திச் சாந்தமாக அமர்ந்திருக்கிறது வீடு. தளர்ந்த நடையோடு கதவின் மீது சாய்ந்து ஒரு நொடி தாமதித்தவள், புடவையை விலக்கி இடுப்பின் பக்கவாட்டில் சொருகியிருந்த சாவியை உருவி எடுத்துப் பூட்டைத் திறக்க முயல்கிறேன். பூட்டின் துளை தட்டுப்படாது தடுமாறுகிறேன். “ப்ச்” என அலுத்துக் கொண்டபடி மறுபடியும் அதனைத் திறக்க முயற்சிக்கிறேன். சிறிது நேரப் போராட்டத்திற்குப் பிறகே பூட்டைத் திறக்க முடிகிறது என்றாலும், கனமான பித்தளைத் தாழ்ப்பாளை இழுத்துத் திறப்பது பெரும்பாடாக இருக்கிறது. தினமும் திறக்கும் தாழ்ப்பாளைத் திறக்க இன்று முழுபலத்தையும் திரட்ட வேண்டியிருக்கிறது.

கதவு திறந்து உள்ளே நுழைகிற என்னை எதிர்கொள்கிறது இன்னும் அதிக அடர்த்தியான இருள். “அக்கா நாளைக் காலையில வந்திடுவேன்” – அவனது குரல் இன்னும் செவியிலிருந்து நீங்காமலிருக்க, சுவற்றின் மீது சரிந்து நழுவித் தரையில் அமர்ந்துகொள்கிறேன். சில்லிட்டுக் கிடக்கும் தரையின் குளிர்ச்சி தாங்கமுடியாமல் நடுக்கமுறுகிறது பலவீனமான உடல். சற்று நேர ஓய்விற்குப் பிறகே அவ்விடத்திலிருந்து எழுந்துகொள்ள முடியும் எனத் தோன்றுகிறது. சற்று நேர ஆசுவாசத்திற்குப் பிறகும்கூட அவ்விடத்திலிருந்து எழுந்துகொள்ளக் கடும் பிரயத்தனம் தேவை யாகவேயிருக்கிறது. கைகளிரண்டையும் தரையில் ஊன்றிச் சிரமத்துடன் எழுந்து, அடுத்து என்ன செய்வது என்கிற தடுமாற்றம் உண்டாக, இலக்கில்லாதபடி இருளில் ஊடுருவி ஹாலின் குறுக்காக நடந்து சென்று அங்கிருக்கும் ஜன்னலை அடைகிறேன். கண்களுக்குப் பழகிவிட்ட இருள் பெரிதாகத் துன்புறுத்தாதது நிம்மதியைத் தருகிறது. திறந்திருக்கிற ஜன்னல் கதவிலிருந்து உள் நுழைகிற காற்றில் படபடக்கும் திரையைத் தொட்டு நிறுத்தி ஜன்னலின் ஓர் ஓரமாக அதனை நகர்த்தி ஒதுக்குகிறேன். விரல்கள் பற்றும் ஜன்னல் கம்பியின் குளிர்ச்சியை உணர்ந்தபடி தெருவையும் அதனைத் தாண்டி எதிர்த் திசையில் இருக்கும் கபர்ஸ்தானையும் நோக்கிப் பார்வையைச் செலுத்துகிறேன்.

அவன் புதைக்கப்பட்ட இடம் எதுவாக இருக்கும் என்பதைப் பதற்றத்துடன் அவசரமாகத் தேடுகிற என் கண்களுக்கு மல்லிகைப் பூக்களால் அலங்கரிக்கப்பட்ட புதைகுழி பளிச்செனப் பார்வையில் தட்டுப்படுகிறது. தெருவை ஒட்டிய சுற்றுச்சுவருக்கு அருகில் என் வீட்டு ஜன்னலுக்கு எதிராகவே அவன் புதைக்கப்பட்டிருப்பது தாங்க முடியாத அதிர்ச்சியாய் உருவெடுக்க, இனி எக்காலத்திலும் என்னால் இத்துக்கத்திலிருந்து விடுபடவே முடியாதோ என்கிற பீதி பெரும் துயரமாய் எழுகிறது.

“நீ எத்தனை அடி உயரம்?” அவனது கட்டைக் குட்டையான உருவத்தைப் பார்த்துக் கேட்ட இவளிடம், “அஞ்சு அடிக்கா” கூச்சத்துடன் சொல்லித் தலைகுனிந்து கொண்ட அவனது முகம் நினைவில் மேலெழுகிறது. மழையினால் சொதசொதத்துக் கிடக்கும் ஆறடிக் குழிக்குள் அவ்வுடல் இன்று புதையுண்டு கிடக்கிறது. நேற்றிரவு வீட்டில் தனது படுக்கையில் சகல செüகர்யங்களுடன் படுத்து உறங்கியவனை இன்று பாம்புகள் ஊர்ந்து திரிகிற பாதுகாப்பற்ற இருளில் மூழ்கியிருக்கிற குழிக்குள் கிடத்தியிருப்பதன் யதார்த்தத்தை ஏற்கத் தயங்கும் மனத்தைச் சரிசெய்ய மிகுந்த பிரயாசை வேண்டியிருக்கிறது.

மரணம் எங்கே ஒளிந்துகொண்டிருந்து எங்கிருந்து வருகிறது? ஒரே பாய்ச்சலில் கொத்தித் தூக்கிக்கொண்டு எங்கே போகிறது? பதிலில்லாத கேள்விகளால் தலை வெடித்துவிடும் போலிருக்கிறது. அக்கேள்விகளிலிருந்து விடுபடத் தலையை இடவலமாக ஆட்டித் தன் நிலைக்கு வருகிறவளின் பார்வை, அவனது கபர்ஸ்தானிலிருந்து மீண்டு உள்புறமாகச் சென்று அலைந்து மெர்க்குரி விளக்கின் ஒளி வரிசையாய் அணி வகுத்து நிற்கும் தென்னை மரங்களின் மீது விழுகிறது. அதன் கிளைகள் தீட்டப்பட்ட ஓவியங்களைப் போலத் துளிக்கூட அசையாமல் மெüனித்திருக்கின்றன. ஏதோ ஒரு மரத்திலிருந்து ஒலிக்கும் பறவையொன்றின் ஒலி காதில் விழுகிறது. வழக்கமாக அவ்வொலி திகிலை உண்டுபண்ணுவதாயிருக்கும் என்றாலும் இன்று வெற்று ஒலியாய் மனத்தில் நிரம்புகிறது. வீடு இன்னும் இருளில் மூழ்கியிருக்கிறது. சுவிட்சைத் தட்டி விளக்கை எரியவிட வேண்டும் என்கிற எண்ணமே தோன்றாததால் தொடர்ந்து அங்கேயே நின்றுகொண்டு எதெதையோ யோசிக்க முற்படுகிறேன்.

“செத்துப்போறதுன்னா என்ன?” பகலில் குழந்தை என்னிடம் கேட்ட கேள்வி நினைவுக்கு வருகிறது. எனக்கு எத்தனை வயதிருக்கும்போது இதே கேள்வியை அம்மாவிடம் கேட்டேனெனக் கணிக்க முயல்கிறேன். ஐந்து அல்லது ஆறு? குழப்பமாக இருக்கிறது.

தாழ்வாரத்தில் கிடந்த கட்டிலில் அம்மாவின் மடிமீது தலைவைத்துப் படுத்துக்கொண்டு ஓட்டுச் சரிவிலிருந்து வழிந்து முற்றத்தில் கொட்டிக்கொண்டிருக்கிற மழை நீரிலிருந்து எழும் முட்டைகளைச் சத்தமாக எண்ணத் தொடங்குகிறேன். பதினாறோடு தடைப்படுகிற எண்ணிக்கை அம்மாவுக்குச் சிரிப்புண்டாக்குவதாயிருக்கிறது.

“என்னாச்சு அவ்வளவுதானா?” என்கிறாள். வெட்கம் பிடுங்கித் தின்ன அம்மாவின் மடியில் இறுக்கமாய்ப் புதைகிறது முகம்.

“பக்கத்து வீட்டுப் பானுவுக்கு அம்பது வரைக்கும் எண்ணத் தெரியும். நான் உனக்குச் சொல்லித் தரட்டுமா?”

வேகமாக முகம் உயர்த்தித் தலையாட்டி அதனை ஆமோதித்தபடி “அவளுக்கு அவங்க ராதி சொல்லித் தந்தாங்க. ஆனா எனக்கு ராதி ஏன் இல்லை?” ஆர்வமாக கேட்கிறேன்.

சற்று நேர அமைதிக்குப் பிறகு அம்மா சொல்கிறாள். “அவங்க நீ பொறக்கு முன்னே மெüத்தாப் போய்ட்டாங்க.” முதன் முதலாகக் கேள்விப்படுகிற வார்த்தையின் அர்த்தம் புரியாத குழப்பத்துடன், “அப்டின்னா?” என்று விழித்தவளிடம், “அப்டின்னா செத்துப் போறது . . . அதாவது இறந்து போறது . . . அல்லாட்டப் போறது . . .” இவளுக்குப் புரியும் விதமாகச் சொல்லவியலாத வருத்தம் தொனிக்கும் அம்மாவின் குரலில் இனி எதுவும் கேட்கக்கூடாது என்கிற கண்டிப்பும் கலந்தே இருப்பது புரிய, மெüனமாக அது குறித்த யோசனைக்குள் ஆழ்ந்துபோகிறேன்.

அன்றில்லாமல் எல்லாக் காலத்திற்குமாகத் தன்னுள்ளாகப் பொதிந்துள்ள புதிரினைத் தக்கவைத்துக்கொண்டிருப்பதிலேயே அதன் வசீகரம் தேங்கியிருப்பதாக நினைத்தபடி நெடிய பெருமூச் சொன்றினை விடுவிக்கிறேன்.

“அம்மா” எனக் கத்தியபடி ஓடி வந்து இறுக்கிக் கட்டிக்கொள்ளும் யாஸர் என்னைத் தன் உணர்வுக்குக்கொண்டு வருகிறான். வீடே இருளில் மூழ்கியிருப் பதைக் கண்டு பதறியவள் அவனை இறுக அணைத்துப் பிடித்தபடி சுவிட்ச் இருக்கும் இடம் நோக்கி நகர்கிறேன். பயத்தில் உறைந்திருந்த குழந்தையின் முகம் வெளிச்சத்தில் இறுக்கம் தளர்ந்து பிரகாசம்கொள்கிறது என்றாலும் தாயின் முகத்தில் வெளிப்படும் கலக்கம் புரியாத தடுமாற்றத்துடன் ஓடிப்போய் சோபாவில் அமர்ந்து என் முகத்தையே உற்றுக் கவனிக்கிறான்.

அவனது பயத்தைப் போக்கும் விதத்தில் அவன் முகத்தைக் கூர்ந்து கவனித்து இதமாகச் சிரிக்கிறேன். அச்சிரிப்பு துளிக்கூட என்னோடு ஓட்டவில்லை என்பது அவனுக்குத் தெளிவாகவே புரிகிறது என்பதை அறிந்தவளாக அவனருகே சென்று அமர்ந்து அவனை இறுக அணைத்துக்கொள்கிறேன். என் மடியின் மீது தனது பாதுகாப்பை உறுதி செய்தவனாகத் தூங்க ஆரம்பிக்கிற அவனது தலைமுடியை வருடிக்கொடுத்தவாறே அண்ணாந்து சுவர்க் கடிகாரத்தில் மணி பார்க்கிறேன். நேரம் பத்தைத் தொட்டிருக்கிறது. “பாவம் குழந்தை” என முணுமுணுத்தபடியே அவனைக் கொண்டுபோய்ப் படுக்கையில் விடுகிறேன். ஜரினாவின் வீட்டில் சாப்பிட்டிருப்பான் என்கிற நிம்மதியோடு அவனுக்கு அருகிலேயே படுத்துக்கொள்கிறேன்.

தூங்க முடியும் என்கிற நம்பிக்கை சுத்தமாக இல்லை என்றாலும் சும்மாவேனும் படுத்துக்கொண்டிருக்க விருப்பமுண்டாகிறது. மரணத்தை நெருக்கமாகப் பார்த்த பிறகு வாழ்க்கை எப்படி இத்தனை அர்த்தமற்றதாகவும் அபத்தமானதாகவும் மாறிவிடுகிறது என்கிற கேள்வி பீறிட்டு எழ, மரண வீட்டிலிருந்து வந்த பிறகு, கை கால் முகம் கூடக் கழுவாதது நினைவுக்கு வருகிறது. இதைக் கூடச் செய்யாமல் அப்படி என்ன அலுப்பு எனத் தனக்குள்ளாக முனகிக் கொண்டவளுக்கு, அதற்குக் காரணம் அலுப்பு மட்டும்தானா என்கிற யோசனை எழுகிறது. உடுத்தியிருக்கும் புடவையெங்கும் யார் யாருடைய கண்ணீர்த் துளிகளோ தேங்கிக் கனப்பதாகத் தோன்றினாலும் கொஞ்சம்கூட அசூயை கொள்ளாமல் உடையைக்களையும் எண்ணத்தைப் புறக்கணிக்கிறேன். படுக்கையின் மீதான எனது இருப்பு துளியும் அசைவற்றிருக்கிறது.

இப்படியே தூங்கிவிட முடிந்தால் எத்தனை நன்றாயிருக்கும் என நினைத்தவளுக்கு உடனேயே அதிலுள்ள சாத்தியமின்மையையும் யோசிக்க முடிகிறது. இந்தத் துக்கத்திலிருந்து விடுபட எத்தனிப்பதில் உள்ள சுயநலத்தை எண்ணிக் கூச்சம் உண்டாகிறது.

தூங்கிக் கடக்கும் அளவுக்கு அற்பமானதா இந்த இழப்பு எனக் கேட்டுக் கொள்கிறவளுக்கு, ரொம்பவும்தான் அலட்டிக்கொள்கிறோமோ என அவமானமாக இருக்கிறது. எதையுமே நினைக்காமல் இருக்க முயற்சிக்கிறேன். அது மட்டும் சாத்தியமாகக் கூடியதா என்ன என நினைத்தபடி படுக்கையில் புரண்டு படுத்தவாறு கடிகாரத்தில் மணி பார்க்க முயல்கிறேன். இருளில் ஒன்றும் தெரியவில்லை என்றாலும், பரவாயில்லை, தெரிந்து என்ன செய்யப் போகிறேன் எனச் சமாதானம் செய்துகொள்கிறேன்.

வயிறு பசிப்பதான உணர்வு மேலிடக் காலையிலிருந்தே ஒன்றுமே சாப்பிடவில்லை என்பது நினைவுக்கு வருகிறது. சாப்பாடு மட்டுமா, தண்ணீர்கூடக் குடிக்கவில்லை என நினைத்தவளுக்கு வியப்பு உண்டாகிறது. என்றைக்காவது ஒரு நாள் இதுபோல முழுப் பட்டினி இருந்திருக்கிறோமா என யோசிக்கிறேன். அப்படி ஒரு நாள்கூட இருந்ததில்லை, ரம்ஜான் மாதத்தில்கூட என்பது நினைவுக்கு வர, பின்னர் அதுவே தீராத வியப்பாக மாறுகிறது. இது எப்படி சாத்தியமாயிற்று என்கிற கேள்வியோடு பெரிய சாதனையொன்றினைச் செய்தது போன்றதொரு பெருமித உணர்வுக்கு ஆட்பட்டவள் உடனே உடலைக் குலுக்கி அவ்வுணர்விலிருந்து விடுபடுகிறேன்.

பகலில் குழந்தையைச் சாப்பிட வைத்த பொழுது ஜரினா “இந்தா பார், நீயும் கொஞ்சம் சாப்பிட்டு வயித்தை நனைச்சு வை. நல்ல பையன்தான், பக்கத்து வீட்டுக்காரன்தான், பாசமாத் தான் இருப்பான் எல்லார்கிட்டேயும். வருத்தமாகத் தான் இருக்கு, என்ன செய்ய? அவன் அம்மா, பொண்டாட்டியே ஒரு முறைக்கு நாலுமுறை காப்பி குடிச்சுக்கிட்டாக. ஒனக்கென்ன?” சலிப்போடு கெஞ்சினாள். இவள்தான் பிடிவாதமாக மறுத்துவிட்டாள். ஓர் உயிர் அநியாயமாகப் போய்விட்ட நிலையில் பசியை உணர்வதும் சாப்பிடுவதும் பெரிய குற்றவுணர்ச்சியை உண்டு பண்ணுவதாயிருக்கிறது. கடுமையான பசியை உணர்கிற இந்த நேரத்தில் கூட அவ்வெண்ணம் வலுப் பெறவே செய்கிறது.

பசியும் தூக்கமும் மனித இயல்பு தானே? இதில் குற்றம் சொல்ல என்ன இருக்கிறது என்கிற கேள்வி எழ எனக்கே அந்த அசட்டுத்தனமான வாதத்தை நினைத்து சிரிக்கத் தோன்றுகிறது. என்றாலும் அவனது உடலை அடக்கம் செய்த கையோடு கறியும் சோறும் சாப்பிட உட்கார்ந்த கூட்டத்தைப் பார்த்துத்தான் பயந்து நடுங்கியதும் ஞாபகம் வருகிறது. ஜன்னலுக்கு வெளியே கொட்டும் மழையின் ஓசை கேட்கிறது. குளிர்ந்திருக்கிற இரவில் படுக்கையின் மெத்தென்ற இதமும் குழந்தையின் அருகாமையும் உறக்கம் தன்னை நெருங்குவதற்கான சாத்தியங்களை உறுதி செய்வதை நம்பியவளுக்கு இந்த மழையில் நனையும் குழிக்குள் அவனது உடல் கிடத்தப்ட்டிருப்பதும் நான் சொகு சாகப் படுக்கையில் படுத்திருப்பதும் தாங்கவியலாத துயரமாக உருவெடுக்கின்றன. இரவின் அனைத்துப் பக்கங்களின் மீதும் மரணத்தைப் பற்றிய அச்சுறுத்தல் நீக்கமற நிறைந்திருப்பதனை மறக்க முயன்றவளாக உறங்கிப் போகிறேன்.

****

பாதித் தூக்கத்தில் திடுக்கிட்டு விழித்தவளுக்குத் தொலைபேசியின் ஒலிதான் தன்னை எழுப்பியதோ என்கிற சந்தேகம் தோன்ற, பயத்துடன் உற்றுக் கவனிக்க, தொலைபேசி ஒலிக்கவில்லை என்பதை ஊர்ஜிதம் செய்துகொள்கிறேன். வழக்கமாக நடு இரவில் வரக்கூடிய தொலைபேசி அழைப்பு ஏன் இன்னும் வரவில்லை என்கிற கேள்வி விஸ்வரூபம் கொள்ள, இனிமேல் வரக்கூடும் என்கிற உறுதியோடு கவலையும் சூழ்கிறது.

“இதை நினைச்சு எதுக்காகக் கவலைப்படுற? நீ தனியா இருக்கிற இல்லெ, பொறுக்கி நாய் ஏதாவது வம்பு பண்ணும். பேசாம ரிஸீவரை எடுத்துக் கீழே போட்டுட்டுத் தூங்கு” என்று சொல்லும் ஜரினா, “ஆமாம் அதுவும் முடியாது இல்லெ. ஒம் புருஷன் சவுதியிலிருந்து ராத்திரி நேரந்தான ஒனக்குப் போன்ல பேசுவாரு” என்று அதன் சாத்தியமின்மைகளையும் சொல்லி அலுத்துக்கொள்வாள்.

பிறகு அவளே “ஆமாம், ஒரு வார்த்தையும் பேசித் தொலைக்க மாட்டேங்கிறான். அப்புறம் எதுக்குப் போன் பண்ணுறான் . . .” கெட்ட வார்த்தை சொல்லி நக்கலாகச் சிரித்துக்கொள்வாள்.

மறுபடியும் தூக்கம் வருமென்று தோன்றவில்லை. எனக்கென்னவோ இந்தத் தருணத்தில் எனது விழிப்பு இன்னும் வராத அந்தத் தொலைபேசி அழைப்புக்காகக் காத்திருப்பது போலிருந்தது சங்கட முண்டாக்குவதாயிருக்கிறது. படுக்கையிலிருந்து எழுந்துகொள்ள வேண்டுமென்கிற நிலை கொள்ளாத தவிப்பு மேலிடுகிறது. மெத்தையின் இதம் தரும் குற்றவுணர்வோடேயே என்னை அதனுள்ளாகப் புதைத்து அத்தவிப்பிலிருந்து விடுபட முயல்கிறேன்.

“”ரொம்ப நாளா ஆசை இதே மாதிரி விலையுயர்ந்த கட்டில் மெத்தை வாங்கணும்னு, வாங்கிட்டேன்க்கா”” -பெருமை யோடு ஒலித்த அவனது குரல் திடீரென நினைவில் தட்டுப்பட, உடனேயே பழையபடி குற்றவுணர்வுக்குள் தள்ளப்படுகிறேன்.

கடந்துகொண்டிருக்கிற ஒவ்வொரு நொடியிலும் என் விழிப்பு தொலை பேசி அழைப்பிற்கான காத்திருத்தலாக மாறுகிறதோ என்கிற ஐயம் பெருகிக்கொண்டிருக்கிறது. இதுநாள்வரை நான் அவ்வழைப்பினை விரும்பியே எதிர்கொண்டு வந்திருக்கிறேனோ என்கிற கேள்வி உருவாகிவிடாமல் துரத்த பதற்றமுறுகிறது மனம். என்ன நடந்துகொண்டிருக்கிறது என்கிற கவலையூடே, நான் யாரென அறிந்துகொண்டுவிடக்கூடாதென்கிற பயமும் ஒன்றிணைய, குழப்பத்தில் ஆழ்கிறேன்.

ஒரு வார்த்தை பேசாவிட்டால் என்ன? அந்த அழைப்பில் மிகுந்திருப்பது எனக்கான வேட்கையும் விருப்பமும் தானே? தினமும் கலையும் தூக்கத்தினூடே மனத்தின் அமைதி அழிவதற்குப் பதிலாக ஓர் ஓரத்தில் தனக்குள்ளாகப் பெருமித உணர்வு துளிர்த்ததா இல்லையா? என்னை நோக்கியே என்னால் எழுப்பப்படுகிற கேள்வியினால் சிதைவுறும் என் பிம்பத்தை நேர் செய்யும் விதமாகத் தலையணையின் மீதாகத் தலையை இடவலமாகப் பலமாக ஆட்டிக் கொள்கிறேன்.

ஒவ்வொரு நாளுமே என்னை அழைப்பது யாராக இருக்கும் என்கிற கேள்வியும் அதனை அறிவதற்கான ஆர்வமும் என்னை எத்தனை துன்புறுத்தியிருக்கிறது? இன்றோ யார் என்கிற கேள்வியோடு இன்னும் வரவில்லை என்கிற வருத்தமும் தானே சேர்ந்திருக்கிறது. நினைக்க நினைக்கக் குழப்பம் மட்டும் மிச்சமாகப் படுக்கையிலிருந்து எழுந்து அமர்கிறேன். வெற்று வயிறோடு இருப்பதுதான் இப்படித் தூக்கம் வராமல் சித்ரவதை செய்கிறது என யோசித்தவள், கட்டிலைவிட்டு எழுந்து தண்ணீர் இருக்கும் இடத்தை நோக்கிச் சென்று சொம்பிலிருந்த தண்ணீரை எடுத்து வேகவேகமாகக் குடிக்கிறேன்.

பசியினாலும் தாகத்தினாலும் ஒடுங்கிக் கிடந்த வயிற்றில் தண்ணீர் விழுந்த மறு நிமிடமே வலியுண்டாக, அடி வயிற்றைப் பிடித்தபடியே மறுபடியும் வந்து படுக்கையில் சரிகிறவளுக்கு, வழக்க மாக வரும் தொலை பேசி அழைப்பில் ஒரே ஒருமுறை தான் கேட்க நேர்ந்த பெண்ணின் குரல் நினைவிலாட, அன்று நிகழ்ந்த விஷயத்தை நினைவூட்டிக் கொள்வதன் வழியே, இந்த நாளின் இறுக்கத்தைச் சற்றேனும் தளர்த்திக்கொள்ள முடியும் என்கிற எண்ணம் உண்டாகிறது. அவள் தான் அன்று எத்தனை அற்புதமாகப் பாடினாள்! ரிஸீவரை எடுத்ததுமே என் காதில் விழுந்த பாடலின் வரிகள் அரை குறை விழிப்பில் புரியாத தடுமாற்றத்தை உண்டாக்குவதாயிருக்கிறது. ஒரு சில நொடியில் நிதானத்திற்கு வந்த பிறகே அது ஒரு மலையாளப் பாடல் என்பதும் கொஞ்சிக் குழையும் அக்குரலிலிருந்தே அது ஒரு காதல் பாடல் என்பதையும் என்னால் கணிக்க முடிகிறது. பாடலுக்கு இடையிடையே அவள் யாரையோ முத்தமிடுவதும் பிறகு பாடலைத் தொடர்வதுமாக சுவாரஸ்யம் கொள்கிறது அத்தருணம். அவளது குரலின் வசீகரம் மயக்க மூட்டுவதாய் இருக்க, அதனை ரசித்தபடியே தொடர்ந்து கவனமாகக் கேட்டுக்கொண்டிருக்கிறேன், என் வாழ்க்கையில் ஏதேனும் ஒரு சந்தர்ப்பத்தில் அக்குரலைக் கேட்டிருக்கிறோமா என்கிற தீவிர யோசனையோடு.

முழுப்பாடலையும் பாடி முடித்தவள், “உஸ். கிள்ளாதீங்க வலிக்குது” எனச் சிணுங்குகிறாள். என்ன நடந்துகொண்டிருக்கிறது என்பது புரிய, குழப் பத்திலும், பயத்திலும் நா வறண்டு போகிறது என்றாலும் அக்குரலின் வழியே எனக் குள்ளாக உருக்கொள்ளும் கூடலின் சித்திரம் அந்நேரத்தை சுவாரஸ்யம் மிக்கதாய் மாற்றுகிறது. அவள் மறுபடி “”ச்சீ போங்க”” எனச் செல்லமாய்க் கொஞ்சுகிறாள். பிறகு மலையாளத்தில் ஒரு வார்த்தை சொல்கிறாள். முத்தமிடுகிறாள். மறுபடியும் பாடத் துவங்குகிறாள். இம்முறை தமிழ் சினிமாவின் காதல் பாடல். நான் எத்தனையோ முறை அப்பாடலை ரேடியோவில் கேட்டிருந்தாலும், இன்று அவளது குரலில் அப்பாடல் அற்புதம் கொள்கிறது. காதலில் இன்புற்றிருக்கும் அக்குரலில் நனைந்திருக்கும் காதல் உணர்வு கூச்சத்தை உண்டுபண்ணக் கூடியதாயிருந்தாலும் ரசிக்கக் கூடியதாய் இருக்கிறது.

ஒரு சில நிமிடங்களிலேயே என்ன நடக்கிறது, இங்கே நான் என்ன செய்துகொண்டிருக்கிறேன் என்கிற கேள்வி திடுமென எழ, அவமானத்தினால் குலுங்குகிறது உடல். யாருடைய படுக்கை அறைக்குள்ளோ தான் ஒளிந்துகொண்டுவிட்டதான அருவெறுப்பும், என்ன நிகழ்ந்து கொண்டிருக்கிறது என்பதும் இப்படி நடப்பதற்கான காரணமும் சட்டென உறைக்க, ஆத்திரமாக ரிஸீவரை வைக்கிறேன். என் நம்பரைக் கூப்பிட்டு படுக்கையினருகாக வைத்திருப்பவனது எண்ணத்தை, இத்தனை நேரமாகக் கேட்டுக்கொண்டிருந்ததன் வழியாக நான் பூர்த்தி செய்திருக்கிறேன் என்பது புரிய, ஆத்திரத்தில் பொங்கிப் பொங்கி எழுகிறது உடல்.

அவன்தான் அப்பெண்ணுக்கு எத்தனை பெரிய நம்பிக்கை துரோகத்தினைச் செய்திருக்கிறான். அவளை நினைத்துப் பரிதாபம்கொண்டாலும் ஒரு குற்றவுணர்வுமின்றி இத்தனை நேரமாக அவளது அந்தரங்க உணர்வுகளைக் கேட்டுக்கொண்டிருந்தது மட்டும் எவ்வகையில் நியாயமாயிருக்க முடியும்? அவன் அவளுக்குச் செய்ததற்கு எந்த விதத்திலும் குறைவானதில்லையே நான் செய்தது.

அதன் பிறகு எஞ்சிய இரவு நெடுக அப்பெண்ணின் குரல் என்னைச் சுற்றியே ஓடிக்கொண்டிருக்க, தூக்கம் எங்கோ ஓடி மறைந்தேவிடுகிறது.

நினைவுகளின் சுமையிலிருந்து விடுபட்டவளாகப் படுக்கையில் அமர்ந்திருக்கிறேன். மனமும் உடலும் ஒருசேர அயர்ச்சிக்குள்ளாக, இருளையே வெறிக்கிறேன். உடனேயே தூங்க முடியாவிட்டால் பைத்தியமே பிடித்துவிடக்கூடுமென்கிற அச்சம் உண்டாக, ஒன்று இரண்டு மூன்று என மனதிற்குள்ளாக எண்ண ஆரம்பிக்கிறேன். இதுவரை எங்கோ ஒளிந்திருந்து போக்குக் காட்டியபடியிருந்த தூக்கம் ஒரு பறவையின் சிறகென என் மீதாகப் படர்ந்து என்னை அரவணைத்துக் கொள்கிற அற்புதம் நிகழாதா என்கிற ஆதங்கத்துடனே தொடர்கிறது எனது எண்ணிக்கை.

ஒரு பொழுது இத்தனை வெறுமையோடு விடியுமா என்பது போலத் தொடங்குகிறது இந்த அதிகாலை. அடி வயிற்றில் தசைகள் இறுக்கிப் பிடித்து வலிப்பதை உணர்கிறேன். வறட்டுப் பிடிவாதத்தினாலும் குற்ற உணர்வினாலும் பட்டினி கிடந்ததன் விளைவைப் பற்களை இறுகக் கடித்து எதிர்கொள்கிறேன். சக்கையைப் போலப் படுக்கையின் ஓரத்தில் ஒதுங்கிக் கிடக்கிற உடல், எத்தனையோ ஆண்டுகளாக நோயுற்றுக் கிடப்பது போன்ற பலவீனத்தை அடைந்திருக்கிறது. என்னால் படுக்கையிலிருந்து எழுந்துகொள்ள முடியுமா என்கிற பயம் பிடித்தாட்ட நான் இத்தனை தூரம் தன்னைத்தானே தண்டித்துக்கொள்வதன் முட்டாள்தனம் புரிய வெகுவான சிரமத்துடனேயே எழுந்துகொள்ள முடிகிறது.

அவ்வீட்டின் முன்பாகப் போடப்பட்டிருக்கிற பிரமாண்டமான பந்தல் அவனது மரணத்தை உறுதி செய்வதாய் இருக்க, எனக்குள்ளாக உருக்கொள்கிற பீதியையும் நடுக்கத்தையும் மறைக்க முயன்றவளாக வீட்டினுள்ளே நுழைபவளைப் பல்வேறு விதமான குரல்களுடனேயே அரவணைக்கிறது வீடு. வீடு முழுக்க நிரம்பியிருக்கிற மனிதக் கூட்டத்தினால் அது தன் சவக்களையை முற்றிலுமாக இழந்துவிட்டிருக்கிறது. மண வீட்டிற்கும் மரண வீட்டிற்குமிடையிலான இடை வெளியைக் காற்றில் மிதந்து வருகிற சுவையான உணவின் மணம் இட்டு நிரப்ப, சிறிது நேரக் குழப்பத்திற்கு ஆட்படுகிறேன்.

ஹாலின் ஒரு மூலையில் அமர்ந்திருக்கும் அவனுடைய தாய் தன்னைச் சுற்றி அமர்ந்திருக்கும் மற்ற பெண்களிடம் தன் மகனைப் பற்றிய நினைவுகளைக் கதைகளாகச் சொல்லிக் கொண்டிருக்கிறாள். இடையிடையே தனக்கு அருகாக இருக்கும் எச்சில் பணிக்கத்தை எடுத்து, தான் மென்று கொண்டிருக்கும் வெற்றிலை எச்சிலைச் சாவகாசமாகத் துப்பியபடி இருக்கிறாள். நான் யாராலும் கவனிக்கப்படாதது எனக்குப் பெரிய நிம்மதியைத் தருவதாக இருக்க, ஹாலின் வடக்குப்புறமாக எனக்கெதிராக இருக்கும் அறையை நோக்கி அவசரமாகவே நடக்கிறேன். அறையை மறைத்தபடி தொங்கும் பச்சை நிறத் திரைத்துணியை விலக்கி உள்நுழையும் தருணத்தில் அவனுடைய மனைவிக்கு ஆறுதல் சொல்லக்கூடிய நிலைக்கு என்னைத் தயார்படுத்திக்கொண்டேனா என்கிற கேள்வி எழுந்து அடங்க, திரைத் துணியை விலக்கி அறைக் குள்ளாக நுழைகிறேன்.

பாதத்தில் சற்று முன் கழுவிவிடப்பட்ட தரையின் ஈரமும் குளிர்ச்சியும் தட்டுப்படுகின்றன. வெளி வெளிச்சம் வராமல் அடைக்கப்பட்ட அறை விடிவிளக்கின் ஒளியினால் ஒளியூட்டப்பட்டதாயிருக்கிறது. அறை ரொம்பவும் சிறியதாக இருப்பது மூச்சு முட்டுவது போலிருக்கிறது. சமீபத்தில் கட்டிய வீடு என்றாலும் இத்தனை பெரிய வீட்டில் இவ்வளவு சிறியதாகவா அறையிருக்கும் என யோசித்தபடி அப் பெண்ணை நோக்கிச் செல்கிறேன். தரையின்மீது விரிக்கப்பட்டிருக்கிற பிளாஸ்டிக் பாயின் மீது தலைகுனிந்தபடி அமர்ந்திருக்கிறாள் அவள். அவள் அமர்ந்திருக்கும் தோரணை யாரையோ எதிர்பார்த்திருப்பதைப் போலிருக்கிறது. அறை நடுவே இருக்கும் தொட்டிலில் கிடக்கிறது குழந்தை. அவளருகே அமரும் முன்பாக அக்குழந்தையை ஒருமுறை பார்க்கலாமா என ஓர் அடி தொட்டிலை நோக்கி எடுத்துவைத்தவள் மனம் சகிக்காமல், நின்றுகொள்கிறேன். குழந்தையின் முகத்தைப் பார்த்ததும் துக்கத்தின் அழுத்தம் தாளாமல் கதறி விடுவோமோ என்கிற பயம் பிடித்துக்கொள்ள, அவ்வெண்ணத்தைக் கைவிட்டு அவளை நோக்கி நடந்து அவளருகே அமர்கிறேன்.

வந்திருப்பது யார் என அறியும் பொருட்டுத் தலைநிமிர்ந்து ஒரு நொடி என்னைப் பார்த்தவள் மறுபடியும் தலையைக் குனிந்துகொள்கிறாள். அந்த ஒரு நொடியிலேயே நான் வந்திருப்பது குறித்த திருப்தியை அவள் முகம் காட்டிவிடுவதைக் கவனிக்க முடிகிறது. இருவருக்குமிடையே நீடிக்கிற மெüனத்தைக் கலைக்கும் வழியறியாது அவள் முகத்தை உற்றுக் கவனிக்கிறேன். இருபது வயதிருக்குமா? நிச்சயமாக அதற்கும் குறைவாகத்தானிருக்கும் என்கிற முடிவுக்கு வருகிறேன்.

ரத்தமேயில்லாததுபோல வெளுத்துக் கிடக்கிறது அவளது முகம். நகைகளில்லாமல் மொட்டையாகக் கிடக்கும் கைகளும் காதும் மூக்கும் கழுத்தும் எனது அதிகபட்ச மனத் தைரியத்தை உறுதி செய்வதாயிருக்கின்றன. தலை முடியை வெளித்தெரியாதபடிக்கு முக்காடிட்டு மறைத்துப் புடவையைக் காதுகளுக்குப் பின்புறமாக ஒதுக்கியிருக்கிறாள். அது மேலும் அவளை விகாரப்படுத்துவதாகயிருக்கிறது. கைக்கு அடக்கமான சின்னஞ்சிறிய வட்டமான முகத்தின்மீது படுகிற என் பார்வை நழுவி நழுவிச் சரிய, அதனை மறுபடியும் நகர்த்தி அம்முகத்தின் மீதே பதியவைக்கத் தீவிரமாகவே முயன்றுதோற்கிறேன். அவளது கழுத்துக்குக் கீழே நிலைக்கும் என் பார்வையில்படுகின்றன தாய்மையினால் ததும்பும் கனத்த மார்பகங்களும் அதனை மறைக்க முயன்று தோற்கும் புடவையும். நிறமில்லாத புடவையின் மீது மார்பிலிருந்து கசிந்த பாலின் கறை திட்டுத் திட்டாய்த் தேங்கியிருக்க அந்தப் பகுதியே விறைப்புத்தன்மையோடிருக்கிறது. இத்தனை நேரமில்லாமல் திடீரென எனது நாசியில் வந்து மோதுகிற பால் கவிச்சி காற்றில்லாத அறையின் உள்ளே அடைந்திருக்கும் மக்கிய வாடையோடு சேர்ந்து குடலைப் புரட்டுகிறது. அவள் இருக்கிற நிலையில் நான் அருவெறுப்புணர்வினை அடைவதன் நியாயமின்மையை மனத்தில் இருத்தி, குமட்டலின் வேகத்தை உள்ளுக்குள்ளேயே அடக்குகிறேன்.

என்னைப் போலவே அவளும் என்னையே கவனித்துக்கொண்டிருக்கிறாள். பேசவியலாதபடி மௌனித்திருக்கும் எனது நிலைக்கு இரங்குவது போலிருக்கிறது அவளது பார்வை. மேலும் சற்று நேர அமைதிக்குப் பிறகு மெலிதாக உதடு பிரியாமல் சிரித்து, “”இப்பதான் வர்றீங்களா”” என்கிறாள்.

அவளது இயல்பான சிரிப்பு எனது பதிலைத் தாமதப்படுத்துவதாயிருக்க, “”உம் இப்பதான், நேர உள்ளேயே வந்திட்டேன்”” என்கிறேன்.

“”பாருங்க எங்க கதிய. எப்புடி நிர்க்கதியா நிக்கிறோம்னு”” கலக்கமின்றிக் கணீரென ஒலிக்கிறது குரல். “”போதாக் குறைக்கு இந்தக் கிழடுக கிட்ட வேற மாரடிக்கணும், நான் பாட்டுக்கு நிம் மதியா இருந்தேன், நஸீபு இங்கெ இழுத்துப் போட்டிருச்சு.””

சிறிது நேர இடைவெளிக்குப் பிறகு மறுபடியும் அவளே, “”பாத்திங்களா அந்தப் பொம்பளை வெத்திலை போடுற அழகையும் பேச்சழகையும். வெனை காரி, துளியாச்சும் கலங்கியிருக்காளா பாருங்க. அவ சதையில மண்ணு விழுக.”” கைவிரல்களை ஓன்று சேர்த்து நெட்டி முறித்தவள், “”எம் புருஷனுக்கே இந்தப் பொம்பளைன்னா ஆகாது. நான் என் புருஷன்கூடப் போய்க் குடித்தனம் பண்றது சகிக்காம, எதுக்குடா அவளை டவுண்ல கொண்டுபோய்க் குடித்தனம் வைக்கிற தண்டமா வீட்டு வாடகை குடுத்து. இங்கெ இவ்ளோ பெரிய வீடு சும்மா கிடக்குது விட்டுட்டுப் போ, எனக்கும் துணையா இருக்கும். வாரத்துல ஒரு நாளக்கி வந்துட்டுப் போவேயில்ல. ஊரு ஓலகத்துலப் பொண்டாட்டி புள்ளைய விட்டுட்டு சவுதியில போயி இருக்கறது இல்லன்னு எப்பொப் பாரு பொருமல். இப்ப ஒரேயடியா இங்கெயே வந்துட்டேன் இல்ல, இனிமேயாவது சந்தோஷமா இருக்கட்டும்”” மிகமிக அழுத்தமாக ஒலிக்கிறது அவளது குரல்.

இத்தனை நேரமாக மிகுந்த பரிதாபத்துடன் கேட்டுக்கொண்டிருந்த என்னைத் திடுமென ஒருவிதமான பயம் பிடித்துக்கொள்ள வேறு எவரேனும் அறைக்குள் வந்துவிடுவார்களோ என்கிற பதற்றத்துடன் தலையைத் திருப்பி எனக்குப் பின் புறமாகப் பார்வையை அலையவிடுகிறேன். என் பார்வையில் தெரியும் ஜாக்கிரதை உணர்வையோ எனது தர்ம சங்கடமான நிலையையோ அவள் சிறிதேனும் கணக்கிலெடுத்துக்கொள்ள வேண்டும் என்கிற பாவனையை முகத்தில் இறுத்தியவளாக அவளை மறுபடியும் நிமிர்ந்து பார்க்கிறேன்.

அவளுக்கு எனது நிலை குறித்த கவனம் கொஞ்சமும் வாய்த்ததாகவே தெரியவில்லை என்பதைத் தொடர்கிற அவளது பேச்சு ஊர்ஜிதம் செய்வதாகவே இருக்கிறது.

“”இப்ப நீங்களே இருக்கீங்க, யாரோ ஒரு மூணாவது ஆளு, உங்களுக்கு அவரு மேல எம்புட்டுப் பிரியம், அதுகூட இந்தப் பொம்பளக்கி அவரு மேல கிடையாது தெரியுமா? பணத்துக்காக எம்புள்ள எம்புள்ளன்னு ஒறவு கொண்டாடுனாச் சரியாப் போச்சா? ஒங்கள மாதிரித் தான் எம் புருஷனும். நீங்கன்னா ஒரு பிரியம். ஒங்களுக்கு ஞாபகமிருக்கா, எனக்குக் குழந்தை பிறந்ததும் எங்க வீட்டுக்கு வர்றதா சொல்லியிருந்தீங்களே.””

எனது ஆமோதிப்புக்கெனப் பேச்சை நிறுத்துபவளிடம் ஒன்றும் புரியாத குழப்பத்துடன், “”ஆமாமாம் சொல்லியிருந்தேன்””, என்கிறேன்.

“”அவருக்கு எவ்வளவு சந்தோஷம் தெரியுமா, சொன்னா நீங்க நம்பக்கூட மாட்டீங்க. அக்கா வரப்போறாங்கன்னு ஒரே சந்தோஷம். அக்காவுக்குத் தங்குறதுக்கு இந்தச் சின்ன வீடு வசதிப்படாது. பெரிய வீடா பார்த்துக் குடி போகணும்னு உடனே வீடு மாத்தினார். ஒரு நாள் வந்து தங்கறதுக்கு, எதுக்குங்க இந்த ஆடம்பரம், ஏற்கனவே உங்க அம்மாகிட்ட பேச்சு வாங்கிக்கிட்டு இருக்கறப்போன்னு நானும் எவ்வளவோ தடுத்தேன். கேட்டாதான? அதோட மறுநாளே காரை வாங்கி நிறுத்திட்டாரே மனுஷன்! பக்கத்து ஊர்ல இருக்கற தர்காவுக்கெல்லாம் உங்களக் கூட்டிப்போயிக் காட்டறதுக்காம் என்னுடைய நம்பிக்கையைப் பெறுகிற உத்வேகத்துடன் ஆர்வமாகச் சொல்லி நிறுத்தியவள், கடைசியில, “சாகிறதுக்குன்னுன்னு அந்த காரை வாங்கினாப்புல ஆயிருச்சு”” என வருத்தத்துடன் முடிக்கிறவளின் முகம் விரக்தியினால் சுண்டிப்போய்க் கிடக்கிறது.

எனக்குள் இன்னும்கூட என்ன செய்வதென்கிறக் குழப்பம் நீடிக்கிறது. ஏதோ ஒருவிதத்தில் எனது பேரில் தனக்கும் தன் கணவனுக்கும் உள்ள அதீதப் பிரியத்தைச் சொல்லிவிட முடிந்ததில் உண்டான நிம்மதியோடு சுவற்றில் சாய்ந்து அமர்ந்துகொள்கிற அவளிடம் தனக்கு ஆதரவான ஒரு நிலையை என்னிடத்தில் கோரும் தன்மையிருப்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது. எனக்கென்னவோ, இது வரைக்குமில்லாதபடியான கருணை அவன் பேரில் ஊற்றெடுக்க, என்ன அற்பமான மனிதர்கள் என சýப்புண்டாகிறது. இங்கு வருவதற்கு முன்பிருந்த மனநிலைக்கும் இப்போதைய மன நிலைக்குமிடையேயான மாற்றத்தினை யோசிக்கிற எனக்கு அங்கிருந்து சென்றுவிட வேண்டுமென்கிற ஆவல் மிகுந்துகொண்டிருக்கிறது. எனது இருப்புக்கொள்ளவியலாத மனநிலையை அவள் அறிந்துகொண்டு விடக்கூடாதென்கிற கவனமுடனும் மூன்றாவது நபரான என்னிடம் அவள் வேண்டி நிற்கும் ஆதரவு எப்படிப்பட்டதாக இருக்க முடியும் என்கிற யோசனையுடனும் அமர்ந்திருக்கிறேன். எத்தனை நிராதரவான ஒரு நிலையிலிருந்து இந்த வேண்டுகோள் வரக்கூடும் என்கிற அதிர்ச்சி மட்டுமே எஞ்சியிருக்கிறது.

அவளைத் தைரியப்படுத்த வேண்டும் என்கிற எண்ணத்தோடும் அவளது தொடர்ச்சியான பேச்சின் மீது குறுக்கீடொன்றை நிகழ்த்திவிட்டு அவ்விடத்திலிருந்து தப்பிச் சென்றுவிட வேண்டுமென்கிற நிர்ப்பந்தத்துடனும், “”சரி நடந்தது நடந்து போச்சு. உன் குழந்தைக்காகவாவது நீ தைரியமா யிருக்கணும். நாங்கல்லாம் உனக்கு இல்லெ”” அவளது மெலிந்த கையைப் பற்றியபடி ஆறுதல் சொல்கிற எனக்கே, அவ்வார்த்தைகள் ஒப்புக்குச் சொல்லப்படுவதாகவே இருக்கின்றன.

நான் சொல்கிற ஆறுதல் வார்த்தைகளில் உணரும் பாதுகாப்பை அனுப வித்தவளாகத் தனது கையை எனது கைக்குள்ளாக, மேலும் அழுத்தமாகவே பிணைத்துக் கொள்கிறாள்.

“”எனக்குத் தாய் தகப்பன் இல்லாத குறையை நீங்கதான் போக்கணும்.”” தனக்குள்ளாகச் சத்தமின்றி அழுகிறாள். “”ப்ச், சும்மாயிருங்கறேன் இல்லெ”” அவளது உள்ளங்கையை அழுத்திச் சமாதானம் செய்கிறேன்.

“”அந்தக் காருதான் வெனையா இருந்துச்சு அந்த மனுஷனுக்கு. மலையாளி முண்டை தேவுடியா என்னா மருந்து போட்டாளோ அவ வீடே கெதியா கிடந்து, கடைசியில ஒரேயடியா போய்ச் சேர்ந்துட்டாரு. அவ வீட்டுக்குப் போறப்போதான ஆக்ஸிடெண்ட் ஆச்சு”” அழுகையினூடே ஆத்திரம் கொப்பளித்து வெடிக்க, சுர்ரென மூக்கை உறிஞ்சி எச்சிலைக் கூட்டிப் புளிச்செனப் பக்க வாட்டுச் சுவற்றின் மீது துப்புகிறாள்.

“மலையாளி!” எனக்குப் பொட்டில் அடித்தாற் போலிருக்கிறது. அதற்கு மேல் எனக்குத் தெரிய வேண்டியது எதுவுமேயில்லாமல் போக, அதிர்ச்சியில் துடிக்கும் இதயத்தைக் கட்டுப்படுத்தும் வழியறியாது மார்பின் மீது கைவைத்து அழுத்திக்கொள்கிறேன். இந்த நிமிடத்தில் எனக்கு ஏதேனும் ஆகிவிடுமோ என்கிற பயம் பிடித்துக்கொள்ள அப்படியே அசையாமல் அமர்ந்திருக்கிறேன்.

அதன் பிறகு எப்படி அவளது கையிலிருந்து என்னுடைய கையை விடுவித்துக்கொண்டேன் என்பதோ வீடெங்கும் நிறைகிற பாத்திஹாவின் சப்தங்களோ சாம்பிராணி மணமோ எதுவுமே நினைவில் பதியாமல் கடந்துகொண்டிருக்க முதல் நாளைப் போன்றே நடுக்கமுறும் பாதங்களை வீட்டை நோக்கி நகர்த்திச் செல்கிறேன்.

எனக்குத் தெரியவில்லை அவனைப் பற்றிய நினைவுகளை இனி வெறுப்புடன் என்னால் ஸ்பரிசிக்க முடியுமா என. அவன்மீதான எனது பிரியத்தின் அளவு இனி வற்றிப்போகுமா என அவனது மரணம் குறித்த துக்கம் எனக்குள் இனி உலர்ந்தேவிடுமா என . . .

வீட்டில் நேற்றுப் பாதி இரவில் ஒலிக்காத தொலைபேசி அமைதியாக என்னை எதிர்கொள்ள, இனி ஒரு நாளும் குரலில்லாத அந்த அழைப்பு வரப்போவதில்லை என்பது உறுதியாக ஏனோ எனக்குள்ளாகப் பெருகுகிறது அழுவதற்கான வேட்கை.

***

நன்றி : சல்மா, காலச்சுவடு, சந்திரவதனா

***

மேலும்…

எனக்கு மதப்பற்று கிடையாது – கவிஞர் சல்மா (நேர்காணல் – வி.சி.வில்வம்)

தமிழுக்கு இஸ்லாத்தின் பங்களிப்பு

தமிழுக்கு இஸ்லாத்தின் பங்களிப்பு

முனைவர் பர்வீன் சுல்தானா

**

தலபுல் இல்மி ·பரீதத்துன் அலாகுல்லி முஸ்லிமின் வ முஸ்லிமத்தி..!

நோன்புப் பெருநாளன்று (14-10-2007) , மக்கள் தொலைக்காட்சியின் ‘சங்கப்பலகை’ நிகழ்ச்சியில் , தோழர் தியாகுவுடன் முனைவர் பர்வீன் சுல்தானா நடத்திய உரையாடலை இங்கே பதிகிறேன். சித்தி ஜூனைதா ஆச்சியைப் பற்றி , ‘இன்றைக்கு 125 ஆண்டுகளுக்கு முன்னால்’ என்று பர்வீன் சுல்தானா சொன்னது மட்டும் கொஞ்சம் திடுக்கிட வைத்தது. ஏனெனில் அப்போது ஜூனைதா ஆச்சி பிறக்கவே இல்லை! அதை திருத்தியிருக்கிறேன். அவர் சொன்ன மற்ற தகவல்கள் சரியாக இருக்கும் என்று நம்புகிறேன். எதற்கும் நீங்கள் ‘இஸ்லாமும் தமிழிலக்கியமும்’ என்கிற முனைவர்.பீ.மு. அஜ்மல்கான் அவர்களின் கட்டுரையை ஒப்பிட்டுப் பார்க்கலாம்.

சித்தி ஜூனைதாவைப் பற்றி சொல்லும்போது மட்டும் மகிழ்ந்து போகிற இஸ்லாமிய இலக்கியவாதிகளிலிருந்து மாறுபட்டு,  ‘சல்மா’வின் மறுக்கமுடியாத பங்களிப்பையும் சேர்த்துச் சொல்லும் அந்த ஒரு விஷயத்துக்காகவே பர்வீன் சுல்தானாவைப் பாராட்டுவேன்.

மக்கள் தொலைக்காட்சிக்கும் தியாகுவுக்கும் முனைவர் பர்வீன் சுல்தானாவுக்கும் நன்றிகள்.

– ஆபிதீன் –

***
பர்வீன் சுல்தானா : …பதிமூன்றாம் நூற்றாண்டிற்குப் பிறகு அதாவது பதினான்காம் நூற்றாண்டிற்கு இடைப்பட்ட பகுதியில் , பல்சந்த மாலை என்கின்ற ஒரு நூல் கிடைப்பதாக களவியற்காரிகை நமக்குச் சொல்கிறது. ஆனால் அது முழுமையான நூல் வடிவத்தில் கிடைக்கவில்லை. ஒரு  எட்டுப் பாடல்கள் மட்டுமேதான்
கிடைக்கின்றன. ஆக , எட்டாம் நூற்றாண்டிற்கு முன்னமேயே தமிழகத்திற்கு இஸ்லாமியர்களுடைய வருகை இருந்திருக்கிறது; அல்லது அரேபியர்களுடைய வருகை இருந்திருக்கிறது. அரேபியர்களுக்கே இஸ்லாம் அறிமுகமானதற்குப்  பிறகு – அவர்கள் வணிகம் பொருட்டு தமிழகத்திற்கு வருகின்றபோது –  அந்த  இஸ்லாத்தை பற்றி அவர்கள் இங்கே சொல்லி இங்கே இருக்கின்றவர்களும் இஸ்லாமாகியிருக்கிறார்கள்; அவர்களும் இங்கே குடும்பத்தை விருத்தி செய்திருக்கிறார்கள்.

தியாகு : அதனால்தான் இவங்க இஸ்லாம் ‘ஆனவர்கள்’?

ப : ஆமாம்.. இஸ்லாமியர்கள் என்று சொல்லுகின்ற வார்த்தையை விட தமிழகத்தில் பரவலாக நாம் கேட்கின்ற சொல் – ‘இஸ்லாம் ஆனவர்கள்’ – இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டவர்கள் என்கின்ற பொருளில். ஆனால் ஒரு குறிப்பு என்னவென்றால் , இஸ்லாத்தைப் பரப்புகின்ற பொருட்டு அரேபியர்கள் தமிழகத்திற்கு வரவில்லை. அவர்கள் வணிகத்தின் பொருட்டுத்தான் வந்தார்கள். இவர்களுடைய மார்க்கத்தினுடைய செய்திகளைக் கேட்டு – எப்பொழுதும் ஒரு மாற்று விசயத்திற்காக தயாராகக்கூடிய சமூகச் சூழல் – இஸ்லாத்தை ஏற்றுக் கொள்வதற்கு அடிப்படையாக இருந்திருக்கிறது; அப்படித்தான் பார்க்க முடியும்.
பதினான்காம் நூற்றாண்டின் நடுவிலே கிடைத்த நூல் (பல்சந்த மாலை) முழுமையாக கிடைக்காதபோது , முழுமையாக கிடைக்கக்கூடிய முதல் இஸ்லாமிய இலக்கியம் எது என்றால்… 1572ஆம் ஆண்டு கிடைத்த ஒரு நூல். ‘ஆயிரம் மஸ்லா’ என்ற அந்த நூலுக்குப் பெயர். இந்த மஸ்லா என்ற சொல்லடைவு தமிழுக்குப் புதியது. இஸ்லாமியர்கள் என்ன செய்கிறார்கள்..- இஸ்லாமியர்கள் மட்டுமல்ல, வேறு எந்த மார்க்கத்திற்கு உரியவர்களாக இருந்தாலும் –  அந்த மார்க்கம் மூலமாக அவர்களுக்கு ஒருமொழியானது கொடையாக கிடைக்கிறது.  அப்படி கொடையாக கிடைத்த அந்த மொழிதான் இஸ்லாமியர்களுக்கு அரபி மொழி. அது மட்டுமல்லாமல் பாரசீக (ஈரான்) மொழி அவர்களுக்கு அறிமுகமாகி இருக்கிறது. இந்த பாரசீக மொழியிலும் அரேபிய மொழியிலும் கவித்துவம் பெற்ற அளவுக்கு பாண்டியத்தியம் பெற்றவர்களாக இஸ்லாமியப் புலவர்கள் இருந்திருக்கிறார்கள். இந்தப் புலமைகளை தமிழுக்குக் கொண்டு வருவதற்காக தமிழிலும் அவர்கள் பாண்டியத்தியம் பெற்று , தமிழிலே அவர்கள் பல சிந்தனைகளை கொண்டு வருவதன் மூலமாக இஸ்லாத்தினுடைய கொடையாக தமிழுக்குப் பல புதுவகை இலக்கியங்களை தந்து சென்றிருக்கிறார்கள். தமிழுக்கு இத்தனை பிரபந்த வகை என்று பண்ணிருபாட்டியல் நமக்கு ஒரு பட்டியல் தருகிறது. 96 வகை பிரபந்தங்கள் என்று நமக்கு பல இலக்கண நூல்கள்.. தண்டியலங்காரமும் அதைச் சொல்கிறது. 96 வகை பிரபந்தங்களைக் கடந்த நிலையில் , நூற்றுக்கும் மேற்பட்ட புதிய இலக்கிய வடிவங்களை இஸ்லாமியர்கள் படைத்திருப்பதாக நமக்கு அறிய வருகிறது. நூற்றுக்கும் மேற்பட்ட இலக்கிய வடிவங்களை , ஆயிரக்கணக்கான இலக்கியங்களை தமிழுக்கு அவர்கள் தந்திருக்கிறார்கள்.

தி : அரபிமொழி கற்று அரபி மொழிப் புலமையோடு தமிழுக்கு வருகிறார்கள்; தமிழையே அரேபியில் எழுதுவதாகச் சொல்கிறார்களே. அரபித்தமிழ் இலக்கியம்..அதைப்பற்றிச்  சொல்லுங்கள்

ப : குர் ஆன் என்ற வேதநூல் அரேபிய மொழியில்தான் வாசிக்கப்படுகிறது. அந்த அரேபிய மொழி என்பது இறைவனோடு அளவளாவக்கூடிய ஒரு மொழியாக, ஒரு மொழியிலேயே மிக அதிகபட்ச மரியாதைக்குரிய மார்க்கமொழியாக , இஸ்லாமியர்கள் கருதுகிறார்கள். புனித மொழியாகக் கருதுகிறார்கள். புனிதமாக அந்த மொழியைக் கருதுவதன் விளைவாக இஸ்லாமிய செய்திகளை எழுதுகின்றபோது – இவர்களுக்கு அரபியை வாசிக்கத் தெரியும்;எழுதத் தெரியும்; பேசத் தெரியாது – இந்த பிரச்சனை உண்டு. தமிழகத்திலே எல்லா இஸ்லாமியக் குழந்தைகளும் குர் ஆன் ஓதும். எல்லோருக்கும் அரபி வாசிக்கத் தெரியும். இதைப் போல எழுத்து லிபியும் தெரியும். ஆனால் பேசத் தெரியாது. எழுத்தை வாசிக்கவும் எழுதவும் மட்டுமே அறிந்திருப்பவர்கள் , இஸ்லாமிய எழுத்துக்களை இலக்கியமாக தமிழில் எழுதுகின்றபோது அரேபிய லிபியைப் பயன்படுத்துகிறார்கள். Ttransliteration என்று ஆங்கிலத்தில் சொல்வார்கள்; ஒலிபெயர்ப்யாக – மொழி பெயர்ப்பாக அல்ல –  அரேபிய இலக்கியங்கள் நமக்குக் கிடைக்கின்றன. பல கையெழுத்துப் பிரதிகள்.. ஆனால் பிற்காலங்களில் அது குறைந்து போனது. சிலர் இதிலேயே உயில் எல்லாம் எழுதி வைத்திருப்பார்கள். அரேபியிலெ வாசிக்கிறதுக்காக எழுதுகின்றபோது , புனிதமாக விசயத்தை எழுதுகிறோம்; தன்னுடைய சந்ததிகளுக்காக எழுதுகிறோம் என்று.. அப்படி எழுதிவச்ச பிரதிகளும் காணக் கிடைக்கின்றன.

தி : சிற்றிலக்கியங்கள்..

ப: சுவையான விசயம் இதுலெ என்னவென்றால்..பதினான்காம் நூற்றாண்டுக்குப் பிறகுதான் நமக்கு இஸ்லாமிய இலக்கியங்கள் அறிமுகமாகின்றன – தமிழகத்தில். ஆக, அரேபியர்கள் இங்கே வேரூன்றி, தமிழ் கற்று, அல்லது தமிழகத்தில் இருக்கக்கூடியவர்கள் இஸ்லாத்தை ஏற்று, கல்வி பெற்று மேலே போவதற்கு ஒரு நான்கு ஐந்து நூற்றாண்டுகள் தேவைப்பட்டிருக்கிறது. பதினான்காம் நூற்றாண்டிலே அவர்கள் எழுதத் தொடங்குகின்றபோது – அந்தக் காலகட்டத்தில் இயங்கிக் கொண்டிருந்த இலக்கிய ஓட்டம் என்பது சிற்றிலக்கிய காலமாகத்தான் இருந்திருக்கிறது. காப்பிய காலம் அப்போது இல்லை. காப்பிய காலத்ததை நாம் கடந்திருக்கிறோம். பக்தி இலக்கிய காலத்தையும் கடந்து , அந்த சிற்றிலக்கிய காலக்கட்டத்தில் இஸ்லாமியப் புலவர்கள் எழுதுகோலை கையில் எடுத்தபோது பலவிதமாக இஸ்லாமிய இலக்கியங்களை அவர்கள் எழுதுகிறார்கள். கோர்வை, அந்தாதி, கீர்த்தனை, இசைப்பாடல்கள், ஞான நூல்கள், தூது, குறவஞ்சி என்று பல இலக்கிய வடிவங்களை பயன்படுத்திக் கொண்டு இஸ்லாமிய இலக்கியங்களாக படைக்கிறார்கள். படைத்துக்கொண்டிருந்த அவர்கள் தங்களுக்கு இயல்பாக வாசிக்ககூடிய பிறமொழி அறிவை, சிந்தனையைப் பயன்படுத்தி புதிய இலக்கிய வடிவங்களை அறிமுகம் செய்கிறார்கள். இதில் ஐந்து புதுவகை வடிவங்கள் நமக்கு கிடைக்கிறது. அந்த ஐந்தில் ஒன்றைத்தான் என்னுடைய ஆய்வுத் தலைப்பாக நான் எடுத்தேன். அந்த ஐந்து என்பதில்,  ஒன்று : ‘மஸ்லா’, மஸ்லா என்பது புதிர். கேள்விகள் கேட்டு பதில் வரக்கூடிய இலக்கியம் – விடுகதை போல. அடுத்தது : ‘நாமா’. ‘நாமா’ என்றால் பெயர். இறைவனுடைய பெயர்களைச் சொல்லி பல பாடல்கள் எழுதப்பட்ட ஒரு இலக்கியம் – ‘நாமா’. அடுத்ததாக கிடைக்கும் இலக்கியம் : ‘கிஸ்ஸா’. கிஸ்ஸா என்றால் கதை. கதை வடிவம். பழையான கதை வடிவங்கள் கொஞ்சம் மாற்றி அமைக்கப்பட்டவை இந்த கிஸ்ஸாக்கள். பிறகு வருவது : ‘முனாஜத்’. முனாஜத் என்பது இறைவேட்கை பாடல்கள். முழுமையாக இறைவனிடத்தில் வேட்கை நிகழ்த்துகிற பாடல்கள். வழிபாடு வேறு, வேட்கை வேறு. இறைவனிடத்தில் மன்றாடுதல். அடுத்ததாக வந்த இலக்கியம்தான் ‘படைப்போர் இலக்கியம்’. படையும் போரும். போர்க்கதைப் பாடல்களாக பல இலக்கியங்கள் கிடைக்கிறது. இதில் செவ்வியல் இலக்கியமும் கிடைக்கிறது, நாட்டார் இலக்கியமும் கிடைக்கிறது – பரணி இலக்கியம் மாதிரி. ஆனால் பரணி இலக்கியத்திற்குப் பிறகு தமிழகத்தில் எந்தப் போரும் தோன்றவில்லை என்பதனை மாற்றி அமைக்கும் பொருட்டு இவர்கள் இந்த இலக்கிய வகையை அறிமுகப்படுத்தினார்கள். பரணியிலிருந்து இதை ஒப்பிட்டுப் பார்த்தால் படைப்போர் இலக்கியம் தனித்த வகை. இதன் இலக்கண வடிவமைப்புகள் எல்லாம் வேறு வேறு. தமிழுக்கு இவைகள் புதுவரவு. இஸ்லாம் தந்த கொடையாக அதை சேர்த்துக் கொள்ளலாம்

தி : நீண்ட இலக்கியங்கள்… உமறுப்புலவருடைய சீறாப்புராணமெல்லாம் நெடுங்காப்பியத்தினுடைய தன்மைகளில் இல்லையா?

ப: ஆமாம், படைப்போர் இலக்கியத்தை பார்த்திர்கள் என்றால் சிற்றிலக்கிய வகை. அளவால் சின்னது; அதுதான் சிற்றிலக்கியம்டு சொல்ல முடியாதபடிக்கு வகைகள் வருகிறது. படைப்போர் இலக்கியங்களிலேயே சல்ஹா படைப்ப்போர், சைதத்து படைப்போர் என்று இரண்டு வகை இருக்கிறது. இதில் ‘சல்ஹா படைப்போர்’ என்பது காப்பியம்.  படைப்போர் இலக்கிய வகையை புதுவகை இலக்கியமாக, கண்ணிகளாக , பாடல்களாக எழுதியிருக்கிறாகள். முழுக்க விருத்தங்களால் ஆன செவ்வியல் இலக்கியமாக அது இருக்கிறது. நாட்டார் பாடல்களாகவும் எழுதியிருக்கிறார்கள். பலவகையான வடிவங்களில் இந்த பாடல்கள் நமக்கு கிடைக்கிறது. நீண்ட இலக்கியங்களாகவும் அவர்கள் அதை எழுதியிருக்கிறார்கள்.

தி : இதனுடைய காலம் எப்படி..உமறுப்புலவருடைய..

ப: அது பதினைந்தாம் நூற்றாண்டிற்குப் பிறகுதான். முதல்லே கிடைக்கிற இலக்கியமென்று – மஸ்லாவை – 1572ஐ சொல்லிட்டோம். பதினாறாம் நூற்றாண்டில்தான் இது (சீறாப்புராணம்) கிடைக்கிறது.

தி : சீறாப்புராணம் அனைவரும் அறிந்து பெயரென்று வைத்துக் கொள்ளாலாம். அதே போல பெயர் தெரியாமல் போன இலக்கியங்கள்..

ப: என்னுடைய வேதனையான இன உணர்வுகளை இப்பொழுது நீங்கள் சொல்கிறீர்கள். என்னவென்றால், இஸ்லாமிய இலக்கியங்கள் என்று பார்த்தீர்கள் என்றால் ஆயிரக்கணக்கான இலக்கியங்கள்.. பதிப்பிக்கப்படாமல் சுவடி வடிவிலேயே இருக்கின்றன இன்னும்.. இந்த இலக்கியங்களையெல்லாம் வாசிக்கும் தோறும் அந்த இலக்கியத்தினுடைய செழுமை வசீகரிக்கிறது. செம்மொழியாக இருப்பதற்கு அவ்வளவு தகுதிப்பாடுகளும் இந்த இலக்கியத்திற்கு உண்டு.  சீறாப்புராணம் போல அனைத்துத் தகுதிகளும் பெற்ற பல (இஸ்லாமிய) இலக்கியங்கள் இருந்தாலும் வாசிப்புப் பயிற்சி இல்லாத காரணத்தால் அல்லது அவைகள் அறிமுகம் செய்யப்படாத காரணத்தால் அவை மக்களைப் போய்ச் சேரவில்லை என்பதுதான் என்னுடைய தனிப்பட்ட கருத்து

தி : சீறாப்புராணம் என்பது நபிகள் நாயகத்தினுடைய வரலாறுதானே?

ப: சீரத்து வரலாறு என்பதுதான் பொருள்.

தி : அதை எழுதுவதற்கு சீதக்காதியின் கொடை துணையாக இருந்தது இல்லையா?

ப: ஆமாம். நிச்சயமாக.

தி: சீதக்காதி ஒரு புரவலர். கம்பருக்கு ஒரு சடையப்ப வள்ளல் போல், உமறுப்புலவருக்கு ஒரு சீதக்காதி. சரி, அச்சு வடிவம் பெறாத இலக்கியங்களும் ஏராளமாக இருக்கிறது என்கிறீர்கள்

ப: என்னுடைய ஆய்வுக் களத்திற்காக நான் தேடித்திரிந்தேன். கள ஆய்விலே படைப்போர் இலக்கியத்திற்காக தேடி அலைகின்றபோது …’இபுறாஹிம் படைப்போர்’ என்கின்ற ஒரு நூல் கீழ்த்திசை சுவடி நூலகத்திலிருந்து எனக்குக் கிடைத்தது. மூவாயிரம் கண்ணிகள் இருக்கக்கூடிய அந்த நூலை நான் வாசிக்க நேர்ந்தபோது… ஏர்வாடியில் இருக்கக்கூடிய அந்த இபுறாஹிம் பாதுஷாவைப் பற்றிய வரலாறு – தீன் விளக்கம்டு ஏற்கனெவே ஒரு நூல் வந்திருக்கிறது – அதை அடியொட்டி படைப்போர் இலக்கியமாக இந்த இபுறாஹிம் படைப்போர்  இயற்றப்பட்டிருக்கிறது. ஆனால் அந்த நூல் இன்னும் பதிக்கப் படவில்லை. என்னுடைய தனித்த முயற்சியின் காரணமாக , நான் சேகரித்த அத்தனை நூல்களையும் – அது மிகப் பழமையாக , xerox என்கிற நகலெடுத்தபோது உதிர்ந்து விழுந்த காரணத்தால்  பொடிப்பொடியாகப்போன அந்த நிலையில்கூட – நான் பதிப்பித்திருக்கிறேன் –  பார்க்கர் பதிப்பகம் என்ற என்னுடைய பதிப்பகத்தின் மூலமாக. தமிழியல் ஆய்வு நிறுவனம் அது. அந்த நிறுவனத்தின் அடிப்படையில் இதை நான் முழுக்க பதிப்பித்திருக்கிறேன். ஆனால் இன்னும் பதிக்கப்படாமல் இன்னும் சற்றுவேலை பாக்கியிருக்கூடிய ஒரு..

தி: அதெல்லாம் தாள் சுவடிகள்தான், இல்லையா?

ப: இல்லையில்லை. ஓலைச் சுவடிகள்!

தி: எழுத்து முறையிலே அதில் வேறுபாடு இருக்கிறதா?

ப: ஆமாம். புள்ளி வைத்திருக்காது. இஸ்லாமிய இலக்கியங்களை வாசிப்பதென்பது சற்று சிரமமான விஷயம். நான் சுவடி இலக்கியத்தைத் தேடித்தான் என்னுடைய ஆய்வுப் பணியைத் தொடங்கினேன். இஸ்லாமிய இலக்கியத்திற்கு வந்து நின்றேன்.  என்ன காரணம் என்றால்,  இதை நான் செய்யாமல் யார் செய்வது என்கிற பெரிய கேள்வி எனக்குள் எழுந்து விட்டதுதான் காரணம். என்னவென்றால் நீங்கள் வாசிக்கும்போதும் – இப்படி இருக்குமென்று வைத்துக்
கொள்ளுங்களேன் ஒரு வார்த்தை – ‘அவன் சபுர் செய்து கொண்டிருந்தான்’, ‘மக்ரிப் நெருங்கிக் கொண்டிருந்தது’… ‘சபுர்’ என்றால் என்னவென்று தெரியாமல் வாசிப்பைத் தொடர முடியாது. இஸ்லாமிய இலக்கியங்களில் இருக்கக்கூடிய வாசிப்புச் சிக்கல்களில் இஸ்லாமிய இலக்கியங்கள் புகழ்பெறாமல் போவதற்கு , அல்லது மற்றவகளுடைய வாசிப்பிற்கு  காரணாமாகாமல் இருப்பதற்கு இதைக் கூடச் சொல்லலாம். ‘மக்ரிப்’ என்பது தொழுகைக்கான நேரம் , அது ஆறு மணிக்கு மேல் தொழக்கூடிய நேரம், ‘சபுர்’ என்பது பொறுமையாக இருக்கக்கூடிய அந்த நிலைப்பாடு.. இதைப் புரிந்தால்தான் சரியாக வாசிக்க முடியும்.

தி: சமயம் என்றில்லை, மீனவர்கள் குறித்து ஒரு புதினம் வருகிறதென்று வைத்துக் கொள்ளுங்கள்; அந்த மீனவர்கள் பயன்படுத்தக்கூடிய சொற்களில் பரிச்சயமில்லையென்றால் அதைப் படிக்க முடியாது.

ப: ‘ஆழி சூழ் உலகு’ என்கிற புத்தகம் படித்தேன்.

தி: அதைத்தான் சொல்ல வருகிறேன். ஜோ.டி. குரூஸ¥டைய அந்த நூலை நான் முழுமையாகப் படித்தேன். அதைப் படிக்கும்போது நிறைய அவர்களின் புழக்கச் சொற்கள்… அவங்க தனியா பெயர் வச்சிருக்காங்க!

ப: ஆமாம்…’நீவாடு’ண்டு ஒரு சொல் வரும்…நமக்குத் தெரியாது.

தி: அதுபோல கடல் நீரோட்டங்களுக்கு அவர்கள் வைக்கிற பெயர்கள்.. இதெல்லாம் தெரியாம நாம  வாசிக்கவே இயலாது.

ப: ஆனால் ஒரு உள்ளன்போடு, இது நம்ம தமிழ் சார்ந்ததென்று அக்கறையோடு வாசிக்க ஆரம்பித்தால் புரிந்து விடும்.

தி: நிச்சயமாகப் புரியும். போகிற போக்குல படித்துவிட முடியாது. முயற்சி தேவை.

ப: வாசிப்பு முயற்சி

தி: எழுதுகிறவனுக்கு முயற்சி தேவைப்படுகிறமாதிரி வாசிப்புக்கும் ஒரு முயற்சி தேவை

ப: இந்த முயற்சி இருந்தா இஸ்லாமிய இலக்கியங்கள் பிரபலமாவதற்கும் மற்றவர்கள் கையில் அது தவழ்வதற்கும் அதிக காலம் கிடையாது.

தி: வாசகன்  வசதிக்காக வேண்டி இந்த தனித்தன்மைகளை விட்டுடக்கூடாது என்றுதான் நான் நினைக்கிறேன். இந்த தனித்தன்மையை பாதுகாத்துக்கொண்டுதான் வாசகனை பழக்கிக்கிட்டு வரணும். அந்த வார்த்தைகளை நீர்த்துப்போக விடக்கூடாது. சரி, நவீன இலக்கிய வடிவங்களிலே இஸ்லாத்திண்டைய பங்களிப்பு என்று எதை நினைக்கிறீர்கள்?

ப:  ஒரு விஷயத்தில் நாம் தெளிவாக இருக்க வேண்டும். ‘இஸ்லாமிய இலக்கியம்’ என்பது எது? நிறைய பேர்கள் என்ன சொல்கிறார்கள், ‘இது இஸ்லாமியப் புலவர் எழுதினார்; அதற்காக அது இஸ்லாமிய இலக்கியம்’ என்று. அப்படியல்ல. எழுதப்படக்கூடிய பொருள் , அது இஸ்லாமுடைய வாழ்வியல் நெறிமுறைகளுக்கும், அந்த கோட்பாடுகளுக்கும் ஏற்றதாக இருக்கின்றபோது அது இஸ்லாமிய இலக்கியமாக பெயர் பெறுகிறது. இப்படிப் பெயர் பெறுகிற நேரத்தில் உலகியல் விசயங்களை நிறைய பாடக்கூடிய வாய்ப்பில்லாமல் பல எழுத்தாளர்கள் இருந்திருக்கிறார்கள். அவர்கள் இஸ்லாத்தினுடைய குறிக்கோள்களாக சில விசயங்களை காட்டிவிட்டுப் போயிருக்கிறார்கள். உதாரணத்திற்கு நிகழ்த்துதல்கள், நிகழ்த்துக் கலைகள்..இவைகள் இஸ்லாத்தில் இல்லை; ஆனாலும் வாழ்வியல் நிலையிலே நம்முடைய மண்ணிற்குரிய விசயமாக நிகழ்த்துதல் இருக்கின்றபோது அதைத் தவிர்க்க முடியாமல் போகின்ற சூழலையும் நாம் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம். ஆக, மார்க்கம் சொல்கின்ற ஒரு விசயம் இருக்க , உலகியலோடு ஒத்துவாழக்கூடிய பண்பாட்டு ரீதியான ஒரு விசயம் இருக்க , இரண்டு நிலையிலும் இஸ்லாமியர்கள் தன் நிலையை வழுவாமல் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பதுதான் உண்மை.

தி: செயற்கையாக இல்லாமல் இயற்கைப் போக்கிலேயே ஒரு மண்ணின் பண்பாடும், மதத்தின் பண்பாடும் கலந்துவிடுகிறது. நீங்கள் இஸ்லாமியர் என்பதாலேயே தமிழ் பேசுகிறவர்கள் தமிழரல்லாதவராகவும் அரேயியர்களாகவும் ஆகிவிட மாட்டீர்கள். எங்கள் தஞ்சை மாவட்ட கிராமங்களில் சந்தனக்கூடு என்பதற்கும் கோயில் திருவிழாவிற்கும் பெரிய வேறுபாடு இருக்காது. எல்லோரும் போய் மகிழ்ச்சியாக கலந்து கொள்வார்கள். இதுலெ ஒரு உற்சவமூர்த்தி இருக்கிறார்போல் அதுலெ ஒரு உற்சவமூர்த்தி இருக்காது. அவ்வளவுதான் வித்தியாசம்.

ப: சந்தனம் நிறைந்த கூடு இருக்கும்.

தி: அதேபோல் இங்கே ஒரு கோயில் திருவிழா என்றால் ஒருநாளைக்கு மண்டகப்படி – மாமா வீட்டு மண்டகப்படிண்டு சொல்வார்கள் – மாமா மச்சான் என்று பழகுவார்கள். ஒன்னும் வேற்றுமை இருக்காது; எல்லோரும் மண்ணின் மக்கள் என்கிற உறவுமுறையிலே பழகுவார்கள்.

ப: இன்றைக்கும் வேற்றுமை இல்லே.  வேற்றுமை என்பது அவர்களுடைய வாழ்வியலோடு இல்லாமல் இருக்கிறது. அது ஏதோ அரசியல் தளத்தில் பேசப்பட்டுக் கொண்டிருக்கிறது. இவர்களின் வாழ்வியலோடு அது ஒன்றுகலக்கவே இல்லை என்பதுதான் தமிழகத்தினுடைய மிகப்பெரிய வெற்றியாக நான் கருதுகிறேன்.

தி: மதம், அந்த மதத்தைப் பேசுகிற பிறந்த ஒரு பகுதி, அந்த மதம் அதிகப்பேர் கடைப்பிடிக்கிற ஒரு பகுதி என்றால் அந்த பகுதிக்குரிய தேவைகளுக்கேற்ப உடைகள் , அந்த பழக்க வழக்கங்கள் வருது. ஒரு மணல் வீசுகிற பாலைவனத்தில் உடுத்துகிற அந்த உடையையே வெயில் கொளுத்துகிற இன்னொரு நாட்டிலேயோ வேறொரு இடத்திலேயோ போய் பயன்படுத்த முடியாது. அதனாலேயே அது மத உடை ஆகிவிடாது. மண்ணின் தேவைக்கேற்பத்தான் உடை மாறுபடுகிறது. அதிலேயே சில வேறுபாடுகள் – சமயத்துக்கு சமயம் – இருக்கலாம். அந்த முறையில் பார்க்கிறபோது இஸ்லாத்திற்கென்று , இஸ்லாத்தினுடைய கோட்பாடுகளின் அடிப்படையில் , மார்க்கத்தைப் பரப்புவதற்கென்று உருவான பல்வேறு இலக்கியங்கள் – அவை இந்த மண்ணுக்குரிய இந்த மொழிக்குரிய தன்மைகளை உள்வாங்கிக்கொண்டு இந்த மண்ணுக்கும் மொழிக்கும் ஒரு பண்பாட்டுப் பங்களிப்பை செய்திருக்கிறது. நான் என்ன கேட்கிறேன் என்றால், அப்படி வரும்போது – இஸ்லாத்தினுடைய தாக்கத்தினால் – இஸ்லாம் அல்லாதவர்கள் படைத்திருக்கிற இஸ்லாமிய இலக்கியங்கள் இருக்கலாம் இல்லையா?

ப: நிச்சயமா இருக்கும். நீங்க கேட்ட இந்த கேள்விக்கு முதலில் பதில் சொல்லிட்டு அப்புறம் நவீன இலக்கியங்களுக்கு  வருகிறேன். இஸ்லாம் என்கின்ற மார்க்கத்தின் அடிப்படையான விசயங்களை உள்வாங்கிக்கொண்ட பிறமார்க்கத்து சகோதரர்கள் நிறைய எழுதியிருக்கிறார்கள். இஸ்லாமிய இலக்கியத்திற்கு பங்களிப்பு செய்திருக்கிறார்கள். உதாரணத்திற்கு சொல்கிறேன்: ‘நபிநாதர் பிள்ளைத்தமிழ்’ என்கிற நூலை மு. சண்முகனார் என்கிற ஒரு பெரியவர் எழுதியிருக்கிறார். அற்புதமான ஒரு நூல். இஸ்லாமிய வாழ்வியல் நெறிமுறைகளையோ கோட்பாடுகளையோ ஒழுகலாறுகளையோ முழுக்க உள்வாங்கிக்கொண்டு எழுதப்பட்ட ஒரு இலக்கியமாக அது திகழ்கிறது. அதே போல ‘கோட்டாற்றுக் கலம்பகம்’ என்கின்ற ஒரு நூலை கருத்தையா பாவலர் என்பவர் எழுதியிருக்கிறார். இவருடைய தமிழ் பங்களிப்பு என்பது இஸ்லாத்தினுடைய உலகத்தில் மிக அருமையான ஒன்றாக கருதப்படுகின்றது.

தி: இதை இஸ்லாமிய வாசகர்கள் மதித்து ஏற்றுக் கொள்கிறார்கள்?

ப: நிச்சயமாக. நான் ஒரு விசயத்தை தெளிவாக்குகிறேன். இஸ்லாமிய இலக்கியம் என்பது எழுதப்படுபவர்களைப் பொறுத்து பெயர் பெறுவதல்ல. எழுதப் படுகின்ற பொருளை வைத்து பெயர் பெறுவது. அடுத்ததாக, நவீன இலக்கியங்கள் என்று வரும்போது இஸ்லாமிய கருத்துக்களை உள்வாங்கிக்கொண்டு , இஸ்லாமியர்களுடைய குடும்ப வாழ்க்கையையோ அல்லது மனிதர்களுடைய மேம்பாட்டு நிலையையோ சொல்லக்கூடிய வகையில் மீட்டுருவாக்கத்தையோ அல்லது மறு வாசிப்பிற்கோ உட்பட்ட பல இலக்கியங்கள் இன்றைக்கு வந்து கொண்டிருக்கிறன.  அதை இல்லையென்றே சொல்லிவிடமுடியாதபடி பல நவீன இலக்கியங்கள் வந்து கொண்டிருக்கின்றன. இந்த நவீன இலக்கியங்கள் இஸ்லாமியர்களுடைய வாழ்வியல் நிலைகளை நவீன நோக்கோடு பார்க்கக்கூடிய சூழலை இன்றைக்கு நாம் காணமுடிகிறது. இன்னும் ஒரு விசயம் என்னவென்றால் , பல விசயங்கள் பேசக்கூடாது என்கின்ற நிலை இருந்தது; இதற்கு மதப்பூச்சு வைத்திருந்தார்கள்; ஆனால் , மதத்திற்கும் இதற்கும் சம்பந்தமில்லை என்பதனை இன்றைய நவீன இலக்கியங்கள் சொல்லிக் காட்டுகின்றன. ஏனென்றால் ஒருவர் எழுத வருகின்றபோது – அது நவீன இலக்கியமாக இருக்கின்றபோது – சமயமும் மதமும் எந்த விதத்திலும் அதனால் பாதிக்கப்படாது என்பதனைப் புரிந்துகொண்ட படைப்பாளிகள் இன்றைக்கு வர ஆரம்பித்திருக்கிறார்கள். அது ஒரு மிக நல்ல விசயமாகத்தான் எனக்குப் படுகிறது.

தி: அவர்கள் உலகியல் அரங்கிலும் பங்களிப்பு செய்கிறார்கள்..

ப: நிச்சயமாக. இதுவே பெரிய உலகியல் பங்களிப்புதானே.. ஒரு சாதாரண இஸ்லாமியனுக்கும் வேற்று மார்க்கத்தவருக்கும் என்ன வித்தியாசம் என்னவென்றால் இஸ்லாமியர்கள் , காலையில் எழுந்திருப்பதிலிருந்து ராத்திரி தூங்கும் வரைக்கும், முழுக்க முழுக்க இஸ்லாமியராகவே இருக்கிறார்கள். எப்படி? நாட்களைத் தொடங்குகின்றபொழுது, யாரேயேனும் சந்திக்கிறபொழுது , சாப்பிடுகின்றபொழுது, படுக்கின்றபொழுது, பேசுகின்றபொழுது… எங்கே போனாலும் அவர்கள் இறைவனை மறப்பதில்லை. இறைவார்த்தைகளை சொல்லிக்கொண்டே இருப்பார்கள். ஒரு கல்யாணத்திற்கு கூப்பிடுங்கள், ‘இன்ஷா அல்லாஹ். வருகிறேன்’ என்பார்கள்.  ‘இறைவன் நாடினால் வருகிறேன்’ என்று அர்த்தம். ‘இந்தப் பொருள் நல்லாயிருக்கா?’ என்றால் , ‘மாஷா அல்லாஹ். நல்லாயிருக்கே’ என்பார்கள். ‘இறைவன் படைப்புக்கு நன்றி’ என்று சொல்வது அது. சாப்பிடுவதற்கு ஏதாவது நீங்கள் கொடுங்கள், ‘பிஸ்மில்லாஹ்’ என்று சொல்லி சாப்பிடுவார்கள் – ‘இறைவன் பெயரால் தொடங்குகிறேன்’ என்று. ஆக, அவர்கள் முழுக்க முழுக்க இறைவேட்கையோடும் இறை எண்ணங்களோடும் வாழக்கூடியவர்களாக
இருக்கிறார்கள். அவர்களின் ஒரு குடும்ப வாழ்க்கைக்குள்ளாக நடக்கின்ற சிக்கல்களை பேசுகிற இலக்கியம் என்று வைத்துக் கொள்ளுங்கள், இப்போது வந்திருக்கிறது ‘ரெண்டாம் ஜாமத்துக் கதைகள்’ மாதிரி. சல்மா அவர்கள் அதை எழுதியிருக்கிறார்கள். ஒரு முஸ்லீம் சமூகத்தின் உள்ளேயிருக்கக்கூடிய விடயங்களை அந்தப் பெண் தைரியமாக எழுதியிருக்ககூடிய ஒரு நூலாக அது இருக்கிறது. ஆனால், இஸ்லாத்திற்கும் இதற்கும் முரண்பாடு இருக்கிறதா என்றால் ஒண்ணும் கிடையாது. ஏனெனில் மார்க்கக்கருத்துகளுக்கு எதிராக எதுவும் அதில் பேசப்படவில்லை. பதிலாக , அந்த சமயத்தைச் சார்ந்த மக்களுடைய
சிக்கல்களை அந்த நூல் பேசுகிறது. இப்படிப் பார்த்தால் நிறைய கவிதைகள்.. இன்றைக்கு பல கவிதைகள் வருகின்றன..ஏன், இலங்கையில் வரக்கூடிய பிரச்சனைகள் , இப்போது அங்கே முஸ்லீம்கள் காணும் பிரச்சனைகள் என்று பல கவிதைகள், பல இலக்கியங்கள், பல புதினங்கள்.. இன்றைக்கு வந்துகொண்டேயிருக்கின்றன… அதையும் நாம் இஸ்லாமிய இலக்கியங்களிலே சேர்க்கலாம்.

தி: கடைசி கேள்வி.. தமிழுக்கு இஸ்லாத்தினுடைய பங்களிப்பு என்பதில் சமூகத்தில் சரிபாதியான பெண்களின் பங்களிப்பு என்னவாக இருக்கிறது?

ப: என்னைப்பார்த்து தொடுக்கப்படும் பழகிப்போன கேள்விகளில் இதுவும் ஒரு கேள்வி! எப்போதும் பெண்களுக்கு இரண்டாம் நிலையான பார்வைதான் சமூகம் தந்திருக்கிறது. அதில் நான் இஸ்லாத்தைப் பற்றி சொல்வதற்கு பெருமைப்படுகிறேன். என்ன காரணம் என்றால், இஸ்லாம் ஆண்-பெண் என்கின்ற வித்தியாசத்தை எப்போதும் பேணவில்லை. கல்வி , இரண்டு பேருக்கும் இருக்க வேண்டும் என்று சொல்கிறது. எனக்கு நிரம்பப் பிடித்த ஒரு ஹதீஸ் : ‘தலபுல் இல்மி ·பரீதத்துன் அலாகுல்லி முஸ்லிமின் வ முஸ்லிமத்தி’. ஆணாகவும் பெண்ணாகவும் பிறந்திருக்கக்கூடிய இஸ்லாமியர்களுக்கு கல்வி என்பது கடமையாக்கப்பட்டிருக்கிறது என்று சொல்லக்கூடியது. அந்தக் கல்வித் தளத்தைக் கையில் எடுத்துக்கொண்ட பெண்கள் , எழுதுவதற்காக வருகின்றபொழுது தன்னுடைய உள்ளக்கிடக்கை படைப்பாளியாக நின்று எழுதுகின்றபொழுது , அதை வாசிப்பதற்கான பயிற்சியோ ஏற்றுக்கொள்வதற்கான பயிற்சியோ இன்னும் சமூகத்திற்கு வரவில்லை என்பதுதான் உண்மை. (1917ம் ஆண்டு நாகூரில் பிறந்த) சித்தி ஜூனைதா பேகம் என்கின்ற ஒரு பெண்… அவர்கள் பள்ளிக்கூடத்திற்கு போனது கிடையாது; மூன்றாம் வகுப்புதான் படித்திருக்கிறார்கள்; வீட்டு வேலையெல்லாம் முடித்துவிட்டு வந்து உட்கார்ந்து தனக்குக் கிடைத்த தாள்களிலெல்லாம் எழுதியெழுதி வைத்திருக்கிறார்கள். அப்படி நீங்கள் தேடிப்பார்த்தீர்கள் என்றால் பெண்களுடைய ஆக்கங்கள் நிறைய இருக்கின்றன. ஓலைச் சுவடிகளில் கூட அது இருக்கலாம், சொல்ல முடியாது. ஆனால், பெண்கள் எழுதுகிறார்கள். என்னுடைய உள்ளக்கிடைக்கையும் வேட்கையும் என்னவென்றால் அந்தப் பெண்களுடைய எழுத்துக்களை அவர்களுடைய மொழியை புரிந்துகொண்டு வாசிப்பதற்கான பயிற்சி வந்தால் பெண்கள் இன்னும் எழுத ஆரம்பிப்பார்கள். நிறைய பெண்கள் வருவார்கள்.

தி: எழுத்தைக்கூட இறுதியாக தீர்வு செய்வது சமூகம்தான். சமூகம் எந்த அளவுக்கு தகுதி படைத்ததோ அந்த அளவுக்குத்தான் அதற்கு இலக்கியங்கள் கிடைக்கும். ‘சங்கப்பலகை’யின் சார்பாக உளமார்ந்த நன்றி.

***

தொடர்புடைய சில சுட்டிகள்:
1 : இஸ்லாமும் தமிழிலக்கியமும் / முனைவர்.பீ.மு. அஜ்மல்கான்

2 : சித்தி ஜூனைதா பேகம்

3 : சல்மாவின் ‘இரண்டாம் ஜாமங்களின் கதை’ பற்றி நாகூர் ரூமி

4. நாகூர் ரூமி மொழிபெயர்த்த ஹோமரின் ‘இலியட்’ பற்றி பர்வீன் சுல்தானா

5. தமிழில் சிறுபான்மை இலக்கியம் – ஜெயமோகன்

6. பல்சந்தமாலை பற்றி – நாகார்ஜுனன்