சரத் சந்திரர் கடிதம்

எனக்கு எழுதியதல்ல, ‘திலீப்குமார் ராய்’க்கு எழுதியது!  கடிதம் எழுதிய வருடம் தெரியவில்லை.  பங்குனி மீ 4 – என்றுதான் சுதேசமித்திரன் தீபாவளி மலரில் (1972) இருக்கிறது. இந்த தீபாவளி மலர் எல்லா நூலகங்களிலும் இருக்கும் – வைத்தீஸ்வரன்கோவில் நூலகத்தைத் தவிர 🙂 . ஆமாம், நண்பரின் நண்பர் அங்கிருந்து ‘சுட்டு’ கொண்டு வந்தார் ( நூல் எண் : 5581) . ஆதவனின் ‘கணபதி – ஒரு கீழ்மட்டத்து ஊழியன்’ , எம். வி. வெங்கட்ராமின் ‘அப்பாவும் பிள்ளையும்’ போன்றவை இருந்ததால் எடுத்து விட்டாராம். உடனே மன்னித்து விட்டேன். சரி,  இனி சரத் சந்திரரின் கடிதம்.  இன்றும் அது புதிதாகத் தெரிவதால் பதிகிறேன்.

***

scchatterjee_portrait01

Portrait by V.N. O’key

சரத் சந்திரர் கடிதம்
தமிழாக்கம் : அ.கி. ஜயராமன்

திலீப்குமார் ராய்க்கு எழுதியது
பங்குனி மீ 4 –

மங்களம் உண்டாவதாக !

நீண்ட நாட்களாக உன் கடிதத்திற்கு பதில் எழுதவில்லை. நீ மிகுந்த கோபங்கொண்டிருப்பாய். அன்றொரு நாள் தியேட்டர் சாலையிலுள்ள உன் வீட்டுக்கு வந்திருந்தேன். அப்போது நீயும் இல்லை. உன் மாமாவும் இல்லை. துரைமார் வீடாயிற்றே. அங்கேயே காத்திருப்பது உசிதமா அநுசிதமா என்பதை நிச்சயிக்க முடியவில்லை. என்னுடன் வந்திருந்த நண்பர் உற்சாகமுள்ள பேர்வழி. தரகு வியாபாரத்தில் அவர் பல பெரிய மனிதர்களிடம் பழகியவர். நமது ‘கார்டு’ இருந்தால் வைத்துவிட்டுப் போகலாம். அதுதான் பழக்கம். வாயைப் பிளந்துகொண்டு இங்கேயே காத்துக்கொண்டிருந்தால் அவர்களுக்கு கோபம் வரும் என்றார். என்னிடம் ‘விசிடிங் கார்டு’ இல்லாததால் பேசாமல் திரும்பிவிட்டோம்.

நேற்று இரவு நெடுநேரம்வரை உன்னுடைய ‘இரு நீர் வீழ்ச்சிகள்’ என்ற புஸ்தகத்தில் பல இடங்களைத் திரும்பத் திரும்ப படித்தேன். உண்மையில் அந்த நூல் மிக நன்றாக இருக்கிறது. அலட்சியத்துடன் ஏனோதானோ என்று படிக்கக்கூடிய புஸ்தகமல்ல. ஆனால் இப்போது எல்லாம் இம்மாதிரி பாராட்டுகளுக்கு மதிப்பில்லை என்பது உனக்குத் தெரியுமே. ஏனென்றால் ‘சொல்’ என்பது யாருக்கு மதிப்புத் தருமோ அவர்களே அதை அவமரியாதை செய்கிறார்கள். ஆகையால் சட்டென்று பேசுவதில்லை. என் வார்த்தையில் நம்பிக்கை வைப்பவர்களிடமெல்லாம் ‘திலீப்பின் இந்தப் புஸ்தகத்தைப் படித்துப் பாருங்கள்’ என்று சொல்கிறேன். என்னுடைய கருத்து என்னவென்றால் இதில் பற்பல நல்ல விஷயங்கள் உள்ளன. அவைகளில் சிலவற்றைப்பற்றி இதற்கு முன் நான் சிந்தித்ததே இல்லை.

‘பார்தவர்ஷம்’ ஆடிமாத இதழில் உன்னுடைய ‘வேலைக்காரன்’ என்ற கதையைப் படித்தேன். கதை என்ற நோக்கில் அதை அவ்வளவு சிறந்தது என்று கூற முடியாது. ஆனால், உன்னுடைய எழுத்தில் ஓர் ஒப்பற்ற அழகு மிளிர்வதைக் காண்கிறேன். அதிலும் உன் (டயலாக்) சம்பாஷணை அற்புதம். கதை எழுதும் லாகவம், வசனங்களின் வேகம் இவை இரண்டும் உன்னிடம் இணையும்போது நீ ஒரு சிறந்த இலக்கிய மேதையாகத் திகழ்வாய் என்பது நிச்சயம். ஆனால், ஒன்றை மட்டும் மறந்து விடாதே! இலக்கியத்தை எழுதிக்கொண்டு போவது எவ்வளவு கடினமோ அவ்வாறே அதை நிறுத்துவதும் கடினமானதே. இந்தக் கலை சொல்லிக்கொடுத்து வருவதல்ல. தானாகவே கற்க வேண்டும். இதை நீ கற்றுக்கொள்ள அதிகக் காலமாகாது என்பதை நான் நிச்சயமாக அறிவேன். இன்று உன்னைக் கேலி செய்பவர்கள் ஒருநாள் – வெளிப்படையாக இல்லாவிட்டாலும் – மனதிற்குள் இந்த உண்மையை ஒப்புக்கொண்டே தீரவேண்டும். நான் புறப்படவேண்டிய நாள் நெருங்கிக்கொண்டிருக்கிறது. இவ்வளவும் நாட்களுக்குப் பிறகும் நீ என்னை மறக்கவில்லை என்றால் என்னுடைய இந்த வார்த்தைகள் உனக்கு நிச்சயம் நினைவில் இருக்கும்.

ஆ…அவர்களின் கட்டுரையைப் படித்தேன். அதைப்பற்றி அபிப்ராயம் கூற இது சந்தர்ப்பமல்ல. வயதுடன் ஆடம்பரத்தின் அதிசயோக்திகள் விலகியதும் இவர் எழுதினால் நன்றாக இருக்கும். சிறுவயதில் செய்த தவறுகளில் ஒன்று – நிறைய புஸ்தகங்களைப் படித்ததன் பெருமை இவர்கள் மீது சவாரி செய்து கொண்டிருக்கிறது. ஆகையால் இவர்கள் எழுத்தில் இவர்கள் சரக்கு ஒன்றும் இருப்பதில்லை. பிறர் எழுதிய உதிரிகளே அதில் நிறைந்து கிடக்கின்றன. அத்துடன் அவசியம் இல்லாத இடங்களில்கூட ஆங்காங்கு இவர்கள் தங்கள் கல்வியின் திறமையைப் புகுத்துவது சகிக்க முடியாதது.

உன் பெண்ணை விரைவாக எழுத வேண்டாமென்று சொல்லு. வேகமாக எழுதுவது குமாஸ்தாவின் வேலை. எழுத்தாளனுடையதல்ல. இதை சற்றும் மறந்து விடவேண்டாம். சிறுவயதில் கதை எழுதுவது நல்லது. கவிதை எழுதுவது அதிலும் சிறந்தது. ஆனால் விமரிசனம் எழுத உட்காருவது அநியாயமாகும். அது நாவலைப் பற்றியதாக இருந்தாலும் சரி, பெண்களைப் பற்றியதாக இருந்தாலும் சரி.

‘சரத் சந்திரரும் கால்ஸ்வொர்த்தி’யும் என்ற கட்டுரையைப் படித்தேன். கால்ஸ்வொர்த்தியின் பெயரைத்தான் கேள்விப்பட்டிருக்கிறேன். அவருடைய நூல்கள்  எதையும் படித்ததில்லை. ஆகவே, அவருக்கும் எனக்கும் எங்கெங்கு ஒற்றுமை, வேற்றுமை என்பதைப்பற்றி எனக்கு ஒன்றும் தெரியாது. கட்டுரையில் என்னைப் புகழ்ந்தும் கால்ஸ்வொர்த்தியை மட்டம் தட்டியும் எழுதி இருக்கிறது. அதிலிருந்து நான் எதையும் நான் அறிய முடியவில்லை. ஆனால் ஒன்று மட்டும் அறிய முடிகிறது. ஆ…அவர் கால்ஸ்வொர்த்தியின் நூல்களை நிறையப் படித்திருக்கிறார். கால்ஸ்வொர்த்தியராக வேண்டுமானாலும் இருக்கட்டும், அவர் நல்ல நல்ல விஷயங்கள் பலவற்றைக் கூறி இருக்கிறார் என்பது மட்டும் அந்தக் கட்டுரையைப் படித்தபோது தெரிய வருகிறது.

மகளின் வாழ்க்கை மகிழ்ச்சியாக இல்லை என்பதைக் கேட்க வருத்தமாக இருக்கிறது. ஆனால் இந்த சமூகத்தில் பெண்களுக்கு ஏற்பட்ட இந்த காமத்தினின்றும் விடுதலை பெற வழியே இல்லையே! அவளுடைய எழுத்தைப் படித்ததும் அவள் சிறந்த புத்திசாலி என்பது தெரிகிறது. ஆனால், வாழ்க்கையில் வயதுடன் நமக்குக் கிடைக்கும் மற்றொரு பொருள் ஒன்று உண்டு – அதன் பெயர் அநுபவம். புஸ்தகங்களை மட்டும் படித்து இதைப் பெற்றுவிட முடியாது. இதைப் பெறாத வரையில் இதனுடைய மதிப்பையும் அறிய முடியாது. அத்துடன் மற்றொன்றையும் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். அனுபவம், தீர்க்க தரிசனம் ஆட்கியவை நமக்குச் சக்தியை அளிக்கின்றன என்பது மட்டுமல்ல. நமது சக்தியை கவர்ந்து கொண்டும் போய்விடும். ஆகையால் இளமை இருக்கும்போதே நற்பணிகளைச் செய்துவிட வேண்டும். அதாவது கதை நாவல் எழுதும் பணிகளைச் செய்துவிட வேண்டும். நான் எவ்வளவோ பார்த்திருக்கிறேன். இளமையில் நாம் எழுதுவதை விடச் சிறப்பாக வயது முதிர்ந்தபின் எழுதிவிட முடியாது. காரணம் வயது அனுபவம் காரணமாக தயக்கமும் கௌரவமும் வந்து குறுக்கிடுகிறது.

மனித உள்ளத்தில் எழுத்தாளன் மட்டும் வசிக்கவில்லை. அங்கே சிந்தனையாளனும் வசிக்கிறான். வயது வளரவளர சிந்தனையாளனும் வளர்கிறான். ஆகையால் வயதான பிறகு எழுத்தாளன் எழுத அமரும்போது சிந்தனையாளன் ஒவ்வொருவரியிலும் அவன் கையைப் பிடித்துக் கொள்கிறான். அவனுடைய எழுத்தில் அறிவின் ஆற்றல், தத்துவம் எவ்வளவுதான் நிறைந்திருந்தாலும் ரசனை, சுவை என்ற நோக்கில் அது குறைபாடு உடையதாகவே இருக்கும். ஆகையால் வாலிப வயதைத் தாண்டி எவன் ஒருவன் ரசானுபவத்தைப் படைக்க முயற்சிக்கிறானோ அவன் தவறு செய்கிறான் என்பதே எனது நம்பிக்கை.

மனிதனுடைய வயதில் ஒரு கட்டம் இருக்கிறது. அந்தக் கட்டத்திற்குப் பிறகு அவன் காவியமோ, நாவலோ எழுதுவது சற்றும் உசிதமல்ல. சந்தர்ப்பத்தை மதிப்பதுதான் கடமையாகும். வயோதிகம் என்பது மனிதனுக்கு துக்கம் தரும் வயதாகும். அப்போது மனிதன் மகிழ்ச்சியூட்டுகிறேன் என்று நடிக்க முயல்வது வியர்த்தம்தான்.

அன்றொருநாள் பெர்ட்ராண்ட் ரஸ்ஸல் எழுதிய  ‘அன் அவுட்லைன் ஆவ் பிலாஸபி’ (தத்துவ ஞானத்தில் எல்லைக்கோடு) என்ற புஸ்தகத்தைப் படித்தேன். கடினமான நூல். கணிதம், வேதாந்தம் ஆகியவற்றில் பயிற்சி உள்ளவர்களே அதை நன்கு புரிந்துகொள்ள முடியும். என்னாலும் புரிந்துகொள்ள முடியவில்லை. ஆனால், அந்த மனிதனுடைய எளிமை, பாமரனுக்கு புரியவேண்டும் என்ற முயற்சி ஆகியவைகளைக் கண்டு அவரிடம் ஈடுபாடும், மதிப்பும் கொள்ளாமல் இருக்க முடியவில்லை. பாமரனிடம் அவருக்கு அபாரமான கருணை. அடடா! பாவம் ! இந்த பாமரனும் தெரிந்து கொள்ளட்டுமே என்ற ஆசை – அவருடைய ஒவ்வொரு வரியிலும் ஒளி வீசிக் கொண்டிருக்கிறது. அடாடா, சிறந்த அறிவாளிகள், உண்மையான ஞானிகள் ஆகியோருடைய எழுத்துக்கும், இலக்கியம் படைக்கிறேன் என்று கூத்தடிக்கும் கோஷ்டிக்கும் எவ்வளவு வித்யாஸம் இருக்கிறது என்றே என் மனம் நினைக்கிறது. அவருடைய எழுத்தையும் எச்.ஜி. வெல்ஸின் எழுத்தையும் அருகருகே வைத்துக்கொண்டு நோக்கினால் இது நன்றாக விளங்கும். பெரிய விஷயங்களை எளிமையாக சொல்லிமுடிக்க இவர்கள் செய்யும் பிரயத்தனமும் தந்திரமும் நன்றாகப் புரியும். ரஸ்ஸலின் ‘ஆன் எஜூகேஷன்’ (கல்வியைப் பற்றி) என்ற நூலையும் வாங்கி வைத்திருக்கிறேன். நாளைய தினம் படிக்கலாம் என்ற உத்தேசம். அடுத்த வருஷம் இங்கிலாந்து செல்வதானால் அவரை ஒருமுறை சந்திப்பதற்காகவே செல்வேன்.

அன்றொருநாள் சில இளைஞர்கள் வந்தார்கள். உன்னுடைய ‘மனநிழல்’ பற்றிப் புகழ்ந்து பேசினார்கள். இந்த புஸ்தகத்தைப் பற்றி நான் கூறியது முற்றிலும் உண்மை என்றார்கள். கேட்டு சந்தோஷமடைந்தேன்.

மாமா எப்படி இருக்கிறார்? இப்போது நீ எங்கே இருக்கிறாய்? சரியாகத் தெரியவில்லை. ஆகையால் மாமாவின் முகவரிக்கே கடிதம் எழுதிக் கொண்டிருக்கிறேன். எனது ஆசிகள்.

– சரத்பாபு.

***

சில சுட்டிகள் :
1. சரத் சந்திரர் –   விக்கிபீடியா

2. வங்கம் தந்த இலக்கியமேதை சரத்சந்திரர் – த. சிவசுப்பிரமணியம்