எதிர்கொள்ளுதல் (கவிதை) – சமயவேல்


சமயவேலின் ‘எதிர்கொள்ளுதல்’ கவிதையை பெருமாள் முருகன் விளக்குவதை வாசித்துவிட்டு , ‘எப்படிலாம் நுணுக்கமாக ரசிக்கிறாஹா, வெவரிக்கிறாஹா.. எனக்கு ஏன் அப்படி வரமாட்டேங்குது புள்ளே?’ என்று அஸ்மாவிடம் கேட்டேன். ‘அஹ தலையில மூளை இக்கிது.. ஆனா ஒங்க தலையில…’ என்று சொல்லி முடிக்காமல் ஒரு கல்லை எறிந்தாள். புரிந்துவிட்டது. தொப்பி! – (MeWe -2019)

*

samayavel-18a

எதிர்கொள்ளுதல் – சமயவேல்

ஒரு கல்

என் முதுகில் விழுந்தது

வலியோடு நிமிர்ந்து

மரத்தைப் பார்த்தேன்

காற்றில் கிளைகள்

ஆடிச் சிரித்தன

எவரோ எப்போதோ எறிந்து

சிக்கிப் போன கல்லுக்கு

விடுதலை

குனிந்து கல்லை எடுத்தேன்

என் வலி, விசாரம்,

வழியற்ற கோபம் எல்லாம்

கல்லின் முழுமுற்றான மௌனத்தில்

கரைந்து போயின

ஒரு குழந்தையெனக்

கல் கைவிட்டு இறங்கிக்கொள்ள

நான் மீண்டும்

பழம் பொறுக்கத் தொடங்கினேன்.

***

நன்றி : சமயவேல்

தொடர்புடைய பதிவு :

கை விட்டு இறங்கும் கல் – பெருமாள்முருகன்

கோழிகளே என்னை மன்னித்து விடுங்கள்

கவிஞர் சமயவேலின் சீரியஸான கவிதைக்கு முன் ஒரு கார்ட்டூன். ஓவியர் யாரென்று தெரியவில்லை. அலுவலகத்தில் உள்ளது. ஆங்காரமாய் வரும் அரபி சற்றே சிரிப்பதற்காக சுவரில் ஒட்டியிருக்கிறேன் இதை.  அந்தக் கோழியின் கிறக்கத்தைப் பாருங்களேன் (இதற்கும் வருவார் இஸ்மாயில் – ‘நானா , அந்த சேவல் செய்றது கொஞ்சம்கூட சரியா இல்லே; மார்க்கத்துக்கு விரோதம்’ என்று!).

***

புரியாமையின் சாலையில் விழுந்து கிடக்கும் கவிதை
சமயவேல் (உயிர் எழுத்து – நவம்பர் 2008 இதழ்)

என்ன ஆயிற்று
காந்தும் காலை வெயிலா
பக்கத்தில் நிற்பவனின் சிகரட் புகையா
சதக் சதக் என பாய் வெட்டுகிற
கோழிகளின் சதை நிண நாற்றமா
ரோமம் நீக்கக் கரகரவென்று சுற்றுகிற
கிரைண்டரின் சப்தமா
கொஞ்சம் கொஞ்சமாக ஏறும் கிறுகிறுப்பு
வெடித்து விடுமோ என் தலை?
அடிவயிற்றிலிருந்து ஏதோ கிளம்பி
நெஞ்சைப் பிசைந்து தலைக்கேறுகிறதே
ஓ, அதுதான்; தலை கோணி கண்கள் சுழன்று
மேலேறி மேலேறி
அது அல்லா கோயிலின் கோபுரமல்லவா?
அல்லாவே எனக்கு மட்டும் ஏன்
இப்படி நிகழ்கிறது?

*

வலிப்பு வந்தவரின் விரல்களை விலக்கி
இரும்பு படிக்கல்லை திணித்து அமுக்குகிறார்
சிகரட் புகைத்தவர்;
வலித்து வலித்து வெட்டி வெட்டி
எதனிடம் போராடுகிறது இவரது உடல்?
1 1/2கிலோ கறி கேட்டவர் கால்களைப் பிடிக்கிறார்
லெக் பீஸ் கேட்டவர் கைலியைச் சரி செய்கிறார்
கால்களில் சாய்ந்த தலையை கைகளில் ஏந்தி நிமிர்ந்தி
நீவி விடுகிறார் பக்கத்து டீக்கடைக்காரர்
வாயிலிருந்து வழிந்த கோளையை அவரது
கைலி கொண்டே துடைத்து விடுகிறார் ரோஜா நிற
கூடைக்காரர்
ஒருவித முனகலுடன் அடங்குகிறது வலிப்பு.

*

விழித்துப் பார்க்கிறேன்
சாலையில் கிடக்கிறேன், இல்லை
என்னைச் சுற்றி நிற்கிற
கருணை முகங்களின் பின் தெரிகிற
அல்லா கோயிலின் ஒரு கோபுரமல்ல
இந்த உலகின் ஆயிரமாயிரம் கோபுரங்களும்
ஏந்திப் பிடித்திருக்கிற
நூலூஞ்சலில் அல்லவா படுத்திருக்கிறேன்.

*

கோழிகளே கோழிகளே
என்னை மன்னித்து விடுங்கள்
உங்களைப் பற்றிக் கூற
என்னிடம் ஏதுமில்லை.

*

நன்றி : சமயவேல், உயிர் எழுத்து