அம்மரம் இம்மரம் – கம்பாரின் கவிதை

ஞானபீட விருது பெற்ற கன்னடப் பேராசிரியர் சந்திரசேகர கம்பார் எழுதிய இந்தக் கவிதை , கணையாழியில் (oct’2011) வெளியாகி இருந்தது. தமிழாக்கம் : கே. மலர்விழி. கம்பார் பற்றி ‘தமிழ்ச்சூழலிலிருந்து ஒரு பார்வை’ பார்த்த தமிழவனின் கட்டுரையை விரைவில் இணைக்கிறேன், இன்ஷா அல்லாஹ். கவிதையைப் பார்க்குமுன் , ‘சிற்றிதழ்களில் வருகின்ற கவிதைகள் மாணவர்களுக்குப் புரியல்ல, இதை நாங்க எப்படி கவிதைன்னு ஏத்துக்கிறதுன்னு அவங்க கேக்கிறாங்களே..’ என்ற கேள்விக்கு மா. அரங்கநாதன் அவர்கள் சொன்னதைப் பார்ப்போம் (இவரது தீராநதி நேர்காணலை நம் ஹனீபாக்கா தன் முகநூலில் போட்டிருந்தார்) :

‘வாஸ்தவம்தான்.  எனக்குப் புரியக்கூடிய ஒண்ணு என் பேரனுக்குப் புரியாமல் இருக்கும். என் மகனுக்குப் புரியாமலிருக்கும். என் அப்பாவுக்குப் புரிஞ்ச ஒண்ணு எனக்குப் புரியாமலிருக்கும். இப்படி எல்லோருக்கும் புரியும்படியா எழுதணும்னு எழுதறவனுக்கு என்ன தலையெழுத்தா?’

அதானே..? ரொம்ப ரசித்தேன்.  அதைவிட முடிவில் , ‘ கவிஞன் இதுவரைக்கும் சொல்லாத விஷயத்தை அல்லவா  சொல்கிறான். அது அவனுக்கே கூடப் புரியாமல் போகலாம்’ என்று சொல்லியிருந்தது பிரமாதம் –  ‘ பழங்கள் /கொட்டிக்கொண்டே இருந்தாலும் / பரந்த மண்ணில் / விழுந்தால் பயனில்லை..!  / ஒரு / சின்னக்கூடை / சேமித்து விடுமே..!’ என்று ‘புரியாமல்’ எழுதும் நம் ஜபருல்லாநானாவுக்கு சொன்னது மாதிரி –  சீர்காழிக் கவிஞருக்காக அல்ல! – இருந்தது. கம்பீரமான கம்பாரின் கவிதை இனி…

chandrashekar-kambar2

அம்மரம் இம்மரம்

நதிக்கரையிலொரு மரம்
நதியில் ஒரு மரம்

நிஜமான மரம் மேலே
பிம்பமான மரம் கீழே

மேலிருக்கும் மரத்தில் கீசு கீசு பிரபஞ்சம்
கீதங்கள் பாடிக்கொண்டு

இறக்கை நுனிகளால் இலைகளின் மேலே
கனவுகளைக் கிறுக்குகையில்

கீழே வேர்களில்
துள்ளும் மீன்கள் ஆழத்தில் போய்
நிழல் வெளிச்சத்தின் வலையில் நீந்தியவாறு
நினைவுகளைத் தூண்டும்.

நீரலை எழும்போது
ஒன்று நடுங்கும்
மற்றொன்று நகைக்கும்

என்றாலும் ஞாபகமிருக்கட்டும்
மரங்கள் இரண்டானாலும்
வேர் ஒன்றே.

நீ ஒரு மரம் ஏறினால்
மற்றொன்றில் இறங்குவாய்
தலை மேலாக ஏறுகிறாய்
தலை கீழாக இறங்குகிறாய்

மேலே நீல வானம்
கீழே அதனுடைய நகல்
இரு வானங்களிலும் மௌனம்

ஏற ஏறக் காற்றாவாய் என்றறிவாய்
என்றாலும் நினைவிருக்கட்டும்
கீழிறங்கும் விதி தப்பாது.

ஏறுவது உன் கையிலிருந்தாலும்
இறங்குவது உன் கை மீறியது

ஏறியவர் சொர்க்கம் சேருவார்களாம்
நமக்கது உறுதியில்லை
மூழ்கியவர்க்கு பாதாளம் நிச்சயம்
வேண்டுமெனில் உறுதிப்படுத்திக்கொள்ளலாம்

இக்கதையின் சோக தோஷம் என்னவெனில்
நிஜமான மரம் மற்றும்
நீரிலுள்ள மரம்
இவ்விரண்டும் ஒன்றான இடம்
மாயமாக இருப்பது.

அதற்காகத்தான் சொல்கிறேன் நண்பா!
மேலே ஏறினாலும்
தலை கீழாகத் தொங்குவது தப்பாது.

மேலிருந்து குதித்துத்
தளம் தொட்டு
மாயமான நிலத்தை
தேடனுமடா! தேடி வாழணும்.

***

நன்றி : சந்திரசேகர கம்பார் , கே. மலர்விழி, கணையாழி, தீராநதி, மா. அரங்கநாதன், இஜட். ஜபருல்லா