கரும்பும் கள்ளியும் (நாடகம்) – கோமல் சுவாமிநாதன்

இந்தியா டுடே இலக்கிய ஆண்டு (1993-94) மலரில் இருந்து, நன்றியுடன்…
**
டாக்டர் மனோகர் வீடு. வீடு வசதிகளுடன் இருப்பதற்கான தோற்றம்.
ஹாலில் செய்தித்தாள் கிடக்கிறது. மனோகரின் மகன் கௌசிக் தன் அறையிலிருந்து வருகிறான். பேப்பரை எடுத்து வந்து சோபாவில் அமர்ந்து படிக்கிறான்.
அவன் மனைவி திலகம் காபி கொண்டு வருகிறாள்.
திலகம்: என்னங்க… பேப்பரில ஏதாவது விசேஷம் உண்டா ?
கௌசிக்: இந்த நூற்றாண்டின் இறுதிக்குள்ள இந்தியாவிலிருந்து முற்றிலுமாக வறுமையைப் போக்கி விடுவோம் என்று குடியரசு தினச் செய்தியில் ஜனாதிபதி குறிப்பிட்டிருக்கிறார்.
திலகம் : பாபு ராஜேந்திர பிரசாத் ஜனாதிபதியாக இருந்தபோது அந்த செய்தியை டைப் பண்ணிக் கொடுத்திருப்பாங்க. ஒரு ஜனாதிபதி விடாம திரும்பத் திரும்ப அதையே படிச்சுக்கிட்டிருக்காங்க. வேற ஏதாவது செய்தி உண்டா ?
கௌசிக்: குடியரசு தின விருதெல்லாம் குடுத்திருக்காங்க. பத்மஸ்ரீ, பத்மபூஷண் இதெல்லாம்.
திலகம்: நமக்குத் தெரிஞ்சவங்க யாருக்காவது கிடைச்சிருக்கா பாருங்க!
கௌசிக்: மன்னார்குடி பர்வதம்மாள். பரத நாட்டியம்.
திலகம் : கொடுக்க வேண்டியதுதான். இந்த வயசுல கொடுக்கல்லேன்னா எப்படி? பரத முனிவர் சொல்லாத ஆட்டமெல்லாம் அவுங்க உடம்புல ஆட ஆரம்பிச்சுட்டது.
கௌசிக் (சிரித்து): உனக்கு ரொம்ப கிண்டல் ஜாஸ்தி.
அப்புறம்…. காளையார் கோவில் கிருஷ்ணசாமி, அனந்த ராமன். அவர் சிறந்த அதிகாரி. பொது நிறுவனம் ஒன்றின் சேர்மன்….
திலகம்: சிறந்த அதிகாரின்னா எப்படி…?
கௌசிக்: லஞ்சம் கிஞ்சம் வாங்கியிருக்கமாட்டார்.
திலகம்: பார்ப்போம். போன வருஷம் பத்மவிபூஷண் வாங்கின அதிகாரி இந்த வருஷம் மோசடி வழக்குல திஹார் ஜெயில்ல இருக்கார் தெரியுமா?
கௌசிக்: என்ன நீ எல்லாத்தையும் குறை சொல்லிக் கிட்டிருக்கே… யாருக்குத்தான் பட்டம் கொடுக்கணும்கிறே?
திலகம்: கொடுக்கற ஆள்களையெல்லாம் பார்த்தா யாருக்குமே கொடுக்க வேணாம்னுதான் தோணுது.
கௌசிக்: திலகம்! அ..டே.. டே அப்பாவுக்கு பத்ம பூஷண் பட்டம் கிடைச்சிருக்கே…..
திலகம்: என்ன சொல்றீங்க! மாமாவுக்கு பத்ம பூஷணா?
கௌசிக்: ஆமா. இதப்பாரு. குழித்தலை சந்தான கிருஷ்ண மனோகர். அவர்தானே?
திலகம் (பேப்பரை வாங்கிப் பார்த்து): ஆமா! அவருக்குத்தான் கிடைச்சிருக்கு! கௌசிக் (மேலே பார்த்து): அப்பா… அப்பா… டாக்டர் மனோகர் இரவு உடையில் மாடியிலிருந்து இறங்கி வருகிறார்.

மனோகர்: குட்மார்னிங். கௌசிக்.
கௌசிக்: அப்பா! உங்களுக்கு பத்மபூஷண் பட்டம் கிடைச்சிருக்கு.
மனோகர்: வாட்… எனக்கா?
கௌசிக்: ஆமா, இதப்பாருங்க.
மனோகர் பேப்பரை வாங்கிப் பார்க்கிறார்; கண்கள் மலர்ச்சியால் அகல விரிகின்றன.
மனோகர்: ஓ… என்னுடைய திறமையை இத்தனை வருசத்துக்குப் பிறகாவது அங்கீகரிக்க அரசாங்கத்துக்கு மனசு வந்ததே. உலகத்துல விரல் விட்டு எண்ணக்கூடிய விவசாய விஞ்ஞானிகளிலே டாக்டர் மனோகரும் ஒருத்தர்னு உலகத்துப் பத்திரிகையெல்லாம் எழுதறான். ஆனா இது நாள் வரைக்கும் நான் அரசாங்கத்தின் கண்ணுல படல்லே. ஒட்டுக் கரும்புல இருந்து ஒரு வீரிய இனத்தைக் கண்டு பிடிச்சு கரும்பு உற்பத்தியிலேயே ஒரு மகத்தான சாதனை பண்ணி இருக்கேன் நான். இந்தியாவில பல மடங்கு கரும்பு உற்பத்தி யாகுது. சர்க்கரை இறக்குமதி அறவே இல்லை என்கிற நிலை யாரால வந்தது?
கௌசிக்: நிச்சயமா உங்களால தான்பா. பம்பாயில் உள்ள கரும்பு உற்பத்தியாளர் சங்கம் உங்க அறிவைப் பாராட்டி தங்க மெடல் பரிசளிச்ச பிறகுதான் அரசாங்கம் முழிச்சுக்கிட்ட துன்னுநெனைக்கிறேன். உங்க திறமையை முதன் முதல் அங்கீகாரம் செய்தவங்களே அவுங்கதான்.

திலகம்: ஆமா! மாமாவுடைய ஆராய்ச்சியினால அவுங்க எத்தனை லட்சம் லாபம் சம்பாதிச்சாங்க! அதுக்கு இதுகூட செய்யக்கூடாதா?
கௌசிக்: ஆனா டாக்டர் நஞ்சுண்டன் மட்டும் தன்னு டைய ஆராய்ச்சியை நீங்க திருடி வெளியிட்டுட்டதாக இன்னமும் சொல்லிக்கிட்டிருக்காரே!
மனோகர்: அவன் கிடக்குறான், பைத்தியக்காரன். பிழைக்கத் தெரியாதவன். என் மேல பொறாமை. அவன் மட்டும்தானா? டாக்டர் பிரகாசம் ஒரு கட்டுரையே எழுதியிருக்கான். இந்த ஒட்டு ரக கரும்பு விளைச்சலிலே உற்பத்திச் செலவு ரொம்ப அதிகமாகுதாம். கரும்பைத் தாக்கி தொளை உண்டு பண்ணுகிற பூச்சி அதிகமாகு தாம். பூச்சிக் கொல்லி மருந்தும் உரமும் அதிகம் செலவாகுதாம். அதனால இது பணக்கார விவசாயிகளுக்குத் தான் லாபமாம். சிறு விவசாயிகளை தோட்டத்தை விட்டு விரட்டியடிக்கிற சதியாம் இது. என்னல்லாமோ மனசுக்குத் தோணினதெல்லாம் இறக்கி வச்சிருக்கான்.

போன் மணி அடிக்கும் சத்தம் கேட்கிறது ஓ. இனிமே விடாமே என்னை கங்கிராஜுலேட் பண்ணி போன் வந் துக்கிட்டே இருக்கும். நான் மாடியில இருக்கேன்.
(மனோகர் மாடிக்குப் போகிறார்)

திலகம்: ஏங்க, உங்கப்பா தனக்கு ஏதோ சர்ப்ரைசா விருது கிடைச்ச மாதிரி நடிக்கிறாரே, கவனிச்சீங்களா?
கௌசிக்: என்ன சொல்றே நீ? திலகம்: ஒண்ணுமில்ல: போன வாரம் முழுக்க பம் பாய்க்கு, கரும்பு உற்பத்தியாளர் சங்கத் தலைவர் கோர்படே கூட பேசிக்கிட்டிருந்தார்.
கௌசிக்: அதனால….? திலகம்: அவுங்க பேச்சுல பத்மபூஷண் அது இதுன்னு காதில் விழுந்தது.
கௌசிக்: அதனால என்ன இப்ப. கோர்படேவா பட்டம் கொடுத்திருக்கான். கவுர்மெண்டுல்ல கொடுத்திருக்கு.
திலகம்: கோர்படேயுடைய மைத்துனன் ஒரு எம்.பி.ன்னு உங்களுக்குத் தெரியாதா…? மகாராஷ்டிரா வில இருந்து கரும்பு முதலாளிகள் பத்து பதினஞ்சு பேர் எம்.பி.யாக இருக்காங்கன்னு உங்களுக்குத் தெரியாதா?
கௌசிக்: நீ எல்லாத்துக்குமே ஒரு குதர்க்கம் கண்டு பிடிக்கிறவளாயிட்டே. கிடைக்க முடியாத பட்டம் நம்ப மாமாவுக்குக் கிடைச்சிருக்கேன்னு ஏன் உன்னால பெருமை அடைய முடியல்லே!
திலகம்: பட்டம் தேடி வந்தா என்னைப் போல சந்தோஷப்படறவங்க யாரும் இருக்க முடியாது. இந்தப் பட்டம் கேட்டு வாங்கினதோன்னு எனக்கு சந்தேகமா இருக்கு.
கௌசிக்: அப்படி எல்லாம் சந்தேகப்படாதே. அப்பா அந்த அளவுக்குத் தன்னைத் தரம் தாழ்த்திக்க மாட்டார். இந்த மனித குலம் பசி பட்டினியிருந்து விடுதலை அடையணும்னு அவரைப் போல சதா சர்வ நேரமும் யாராலும் சிந்திச்சுக்கிட்டிருக்க முடியாது. வாழ்க்கையில் ஒவ்வொரு அங்குலமும் போராடி முன்னுக்கு வந்தவராக்கும் அவர்.
திலகம் சிரிக்கிறாள்.
கௌசிக்: என்ன சிரிக்கிறே?
திலகம்: உங்க அப்பாவைப் பத்தி இவ்வளவு உயர் வான மதிப்பு வச்சுருக்கீங்களே அதைப் பத்திதான். அல்லது மதிப்பு வச்சிருக்கிறதாக எனக்கு வேண்டி நடிக்கறீங்களோ என்னமோ.
கௌசிக்: நான் நடிக்கிறேனா? நோ. நோ. உன்னைப் போல என்னால மனிதர்களை விபரீதமா வேற கோணத் துல வச்சு கற்பனை பண்ணிப்பார்க்க முடியாது.
திலகம்: நீங்க சாதுன்னு சொல்ல வரீங்க. அதே சமயம் நான் வம்புக்காரினு முடிவு பண்றீங்க.
கௌசிக்: நான் அப்படிச் சொன்னேனா? ஏன் ஒரு நல்ல ஹாலிடேயில இப்படி ஒரு மோதலை உண்டு பண்றே?
திலகம்: நீங்க ஏன் எல்லாத் துக்கும் ஒரு பொய்யான முற்றுப் புள்ளி வச்சுட்டு தப்பிச்சு ஓடப் பார்க்கிறீங்க? உங்கப்பாவா இருந்தா என்ன, அவரைப் பத்தி யும் கொஞ்சம் பேசிப் பார்ப்பமே.
கௌசிக்: இப்ப என்ன சொல்றே? அப்பாவுக்கு பத்மபூஷண் கிடைச்சது தகிடுதத்தம். அவர் அதுக்குத் தகுதியில்லே . ஓ.கே. அவ்வளவுதானே. ஐ அக்ரி வித் யூ.
திலகம்: இதுதான் வடிகட்டின சுய நலம். எதிலயும் பட்டுக்காம எந்த அபிப்ராயமும் சொல்லாம மடிப்புச் சட்டை கலையாம ஜகா வாங்குறது, டிபிகல் மிடில் க்ளாஸ் மனோபாவம்.
டாக்டர் மனோகர், மாடியிலிருந்து இறங்கி வருகிறார்.
மனோகர்: காலேஜ் வாத்தியாரம்மா யாருக்கு இப்ப லெக்சர் கொடுத்துக்கிட்டிருக்காங்க?
கௌசிக்: ஒண்ணுமில்லைப்பா…. உங்களுக்கு பத்ம பூஷண் கிடைச்சது, அவுளுக்கு ரொம்ப சந்தோஷம்.
மனோகர்: அவ சொல்றது சரிதாண்டா. எல்லாத்தையுமே நீ பூசி மொழுகிட்டுப் போயிடறே. இப்படியே பூசி மொழுகிட்டுப் போனா ஒரு நாள் அது படார்னு வெடிச்சுத்தான் தீரும். இன்னைக்கு அது வெடிக்கட்டும்.
திலகம்: மாமா… நான் வந்து……
மனோகர்: ஏன் பயப்படறே? இத்தனை நேரமா வீராவேசமாப் பேசினே, இப்ப ஏன் தயங்குறே? எனக்குக் கிடைச்ச பத்மபூஷண் லாபியிங்குல கிடைச்சது என்பது தானே உன்னுடைய கன்டென்ஷன்? இப்ப நான் கேக்குறேன். திறமையை மதிக்கத் தெரியாத தேசத்துல ‘லாபியிங்’ என்ன தவறு?
கௌசிக்: அப்பா ஒண்ணுமில்லைப்பா. அவ ஏதோதமாஷா…
மனோகர்: ஒரு தமாஷுமில்லைடா. இது முத்திப் போனா பிரிஞ்சு போயிடுவோமோன்னு தானே நீ பயப்படுறே. பிரிஞ்சு போனா என்னடா. ‘எங்கப்பாவுக்கு பத்ம பூஷண் கொடுத்தது அவளுக்குப் பிடிக்கல்லே; பிரிஞ்சு வந்துட்டோம்’னு சொல்லேன். அவுங்க அப்பா மாதிரி ‘தாமிர பத்திரமும் எனக்கு வேண்டாம், அஞ்சு ஏக்கர் நிலமும் எனக்கு வேண்டாம்’ அப்படீன்னு சொல்லிட்டு தியாகத்தை வேறவிதமா வெளிச்சம் போட்டுக் காட்டச் சொல்றாளா?
திலகம்: மாமா. ஏன் எங்கெல்லாமோ போறீங்க. ஐ ஆம் சாரி. நான் சொன்னது தப்புன்னா நான் உங்க கிட்ட மன்னிப்புக் கேட்டுக்கறேன்.
மனோகர்: இதுதான் கோழைத்தனம்கிறது. விவாதத்தை ஆரம்பித்து விட்டா இப்படியெல்லாம் பின்வாங்கக் கூடாது. கமான். உலகத்துல எந்தப் பரிசு நேர்மையா கிடைக்குதுன்னு நீ நெனைக்கிறே? நோபல் பரிசுல எத்தனை ஃப்ராடு இருக்கு தெரியுமா? கம்யூனிசத்துக்கு விரோதமாக எழுதின எத்தனை பேரை அவுங்களுக்கு இலக்கியத் தகுதி இருக்கான்னு கூட பார்க்காம தூக்கி விட்டிருக்காங்க. இங்கே தகுதி இல்லாதவங்க எத்தனை பேர் மந்திரிக்கும், ஆளுங்கட்சிக்கும் வேண்டியவங்கன்னு பரிசை வாங்கிட்டுப் போறாங்க! இவ்வளவு ஏன்? எத்தனை முதல் மந்திரிகள் பல்கலைக்கழகத்தை வற்புறுத்தி பட்டம் வாங்கிக் கிறாங்க. அப்படியிருக்க திறமை யுள்ள நான் எனக்காக கொஞ்சம் முயற்சி பண்ணினது தப்பா? சொல்லு! |
திலகம்: மாமா! நீங்க கேட்டதுனால நான் சொல்ல வேண்டிய நிர்பந்தத்துல இருக்கேன். நீங்க முயற்சி பண்ணி பட்டம் வாங்கினது கூட தப்பில்லை. ஆனா உங்களுக்குத் திறமை இல்லைன்னு நான் சொல்றேன்.
மனோகர்: வாட்! எனக்குத் திறமையில்லியா….?
கௌசிக்: திலகம்! நீ என்ன சொல்றே?
திலகம்: இதனுடைய விளைவுகள் என்ன ஆகும்னு தெரிஞ்சுக் கிட்டுதான் சொல்றேன்.
மனோகர்: எனக்குத் திறமை இல்லையா? கரும்பு விவசாயத்திலேயே ஒரு புரட்சியை உண்டு பண்ணின எனக்குத் திறமையில்லையா?
திலகம்: திறமைன்னு நீங்க எதைச் சொல்றீங்க? ஒரு ஏக்கர் நிலத்துல நீங்க கண்டுபிடிச்ச வீரிய கரும்பு சில டன்கள் கூடுதல் விளைச்சலைக் கொடுத்தா அதுக்குப் பேர் திறமை, ‘நான் ஒரு விஞ்ஞானி’ன்னு மார் தட்டிக்கிறீங்க. ஆனா… ஆனா… அந்தத் திறமை மனிதாபி மானத்தோட சம்பந்தப்பட்டிருக்கணும்.
மனோகர் (சிரித்து): ஓ. சயன்ஸ் வெர்சஸ் ஹ்யூமனிசம். இதப் பாரு, சயன்ஸ் ஒரு நீதிபதி. உள்ளதை தான் சொல்லும். பரிவு பச்சாதாபம் இதுக்கு எடம் கொடுத்து உண்மையை மறைச்சிடாது.
திலகம்: நான் பேசுறது சயன்ஸ் என்கிற ஒரு அரூபப் பொருளைப் பத்தி அல்ல; சயன்டிஸ்ட் என்கிற மனிதனைப் பற்றி.
மனோகர்: ஓ… அப்படி நான் என்ன மனிதாபிமானம் இல்லாம நடந்துக்கிட்டேன் சொல்லு? (திலகம் மௌனமாயிருக்கிறாள்)
மனோகர்: எந்த விமரிசனத்துக்கும் நான் தயாராக இருக்கேன். சொல்லு.
கௌசிக்: இந்த விவாதம் இனிமே தொடர வேண் டாம். இன்னிக்கு நாம மூணு பேருமே எங்கியாவது ஒரு ஹோட்டலுக்கு லஞ்சுக்குப் போவோம். எவ்ரிதிங் ஈஸ். ஓ. கே.
திலகம்: எவ்ரிதிங் ஈஸ் நாட் ஓ. கே. தயவுசெய்து கொல்லைப்புறம் போய் வேலி ஓரத்தில பக்கத்து வீட்டுல முளைச்சிருக்கிற அடுக்கு மல்லி செடியைப் போய் பாருங்க.
கௌசிக்: ஆமா.. நேத்து கூட அழகா ஒரு சின்னப்பூ பூத்திருந்ததே…
திலகம் : இன்னிக்கு அந்த பூவும் இல்லை , செடியும் வாடிப் போய் தலை தொங்கிக்கிடக்குது.
கௌசிக்: நேத்து வெயில் ரொம்ப அதிகம் இல்லையா? அதனால இருக்கலாம்.
திலகம்: ஜனவரி மாசத்து வெயில்ல அது தலை தொங்கிப் போகலீங்க. அதை தலை தொங்க வச்சவர் உங்கப்பா.
கௌசிக்: அப்பாவா….? திலகம்: ஆமாம். நேத்து அதிலயிருந்து உங்கப்பா ஒரு பூவைப் பறிச்சார். அதை பறிக்கிறபோது ஒரு சின்ன கொப்பு முறிஞ்சிட்டது. அதைப் பக்கத்து வீட்டுக்காரர் பார்த்துட்டார். ‘ஏன் சார், நீங்க படிச்சவர்தானே. அந்த செடி இப்பதான் கொப்பும் கிளையுமா வந்துக்கிட்டிருக்கு. பூவைப் பறிச்சாலும் பரவாயில்லை. இப்ப ஒரு கொப்பையும் உடைச் சிட்டீங்களே’ அப்படீன்னு கேட்டுட்டார். உங்கப்பாவுக் குக் கோபம் வந்து அவரோட சண்டைக்குப் போனார்.
கௌசிக்: சின்ன கொப்பு ஒடிஞ்சதுக்காக அவன் அந்த வார்த்தையைச் சொல்லலாமா? அநாகரீகம் பிடிச்சவன்.
திலகம்: ஆனா அதைவிட அநாகரிகமான காரியத்தை உங்கப்பா செய்துட்டார். வீட்டுக்காரர் கதவைச் சாத்திட்டு உள்ள போனவுடனே இவர் பாத்ரூமுக்குப் போய் ஹீட்டர்லயிருந்து ஒரு பக்கட்டுல கொதிக்க கொதிக்க வெந் நீரைப் புடிச்சார். எதுக்கு இவர் வெந்நீரைப் புடிக்கிறார்னு நான் பார்த்துக்கிட்டே இருந்தேன். நேரே பின் பக்கம் போய் அந்த அடுக்கு மல்லிச்செடி மேல ஊத்திட்டார். உண்டா, இல்லையா? கேளுங்க.
கௌசிக் தன் தந்தையைப் பார்க்கிறான்.
மனோகர்: ஆமடா, அந்த அயோக்கியப் பயலை எப்டீடா பழிவாங்குறது?
கௌசிக்: ஓ.கே. இந்த நிகழ்ச்சியை மறந்துடுவோம். மல்லிகைச் செடியில் வெந்நீரை ஊத்திட்டார்ங்கிற சாதாரண விஷயத்துக்காக அவருக்கு பத்மபூஷண் கொடுக்கக்கூடாதுன்னு நீ சொல்லக்கூடாது.
திலகம்: இது சாதாரண விஷயம் இல்லீங்க. மல்லிகைச்செடியில வெந்நீரை ஊத்தறதும் ஒண்ணுதான், ஹிரோஷிமா நாகசாகியில அணுகுண்டைப் போடறதும் ஒண்ணுதான்.
திலகம் உள்ளே போக மனோகரும், கௌசிக்கும் அவளையே பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

***

ஓவியம் : ஆர்,பி. பாஸ்கரன்

*

நன்றி : இந்தியா டுடே