துபாயில் நேற்று மாலை சிறப்பாக நடைபெற்ற அய்யனார் விஸ்வநாத்தின் ஓரிதழ்ப்பூ நூல் வெளியீட்டுவிழாவுக்கு வந்திருந்த ஆசிப்மீரான் கையில் இந்தக் குறிப்புகள் இருந்தன. ஏதாவது மேலும் சொல்லலாம் என்று எடுத்து வந்திருப்பார்! எழுத்தழகைப் பார்த்துவிட்டு நாளை பதிவிடுகிறேன் என்று அப்பிக்கொண்டேன். பைத்தியக்காரன் பத்தும் செய்வான், போகட்டும் விட்டுவிடு! – AB
ஜி. நாகராஜன் :
சமுதாயம் தன்னுடைய நலனுக்காக தனிமனிதன் மீது சுமத்தும் கட்டுப்பாடுகளில் திருமணமும் ஒன்று. இதைக் காதலில் தோன்றச் செய்து, காதலில் நிலை பெற்றிருப்பதாக ஆக்கும் அளவுக்கு மனிதன் ஒரு கட்டுப்பாட்டினை தன்னுடைய சுதந்திரமான ஒரு இச்சையின் மறுபுறமாக மாற்ற முடியும்.
மனிதனைப் பற்றிப் பொதுவாக எதுவும் சொல்லச் சொன்னால் ‘மனிதன் மகத்தான சல்லிப்பயல்’ என்றுதான் சொல்வேன்
இதில் உங்களுக்குப் பிடிக்காதது இருந்தால், “இப்படியெல்லாம் ஏன் நடக்கிறது?” என்று வேண்டுமானால் கேளுங்கள்; “இதையெல்லாம் ஏன் எழுத வேண்டும்?” என்று கேட்டுத் தப்பித்துக் கொள்ளப் பார்க்காதீர்கள். உண்மையைச் சொல்வதென்றால் முழுமையுந்தான் சொல்லியாக வேண்டும். நான் விரும்பும் அளவுக்குச் சொல்ல முடியவில்லையே என்பதுதான் என் வருத்தம்.
*
கோபி கிருஷ்ணன் :
“மன நோயாளி என்பவன் குறுக்கிடும் குடும்பத்தின், பைத்தியக்காரச் சமூகத்தின் பலிகடா. பைத்தியக்காரன் சுவாதீனமுள்ளவன். அவனைப் பைத்தியக்காரன் என்று முத்திரை குத்தும் சமுதாயம்தான் பைத்தியக்காரத்தனமானது” – Thomas Szasz
கட்டுப்பாடுகள் ஏதுமில்லாத Samoaவில் வாழும் தொல்குடிகள் மன ஆரோக்கியத்தின் உச்சநிலையில் வாழ்கிறார்கள் என்று மானிடவியலாளர்கள் கண்டறிந்திருக்கிறார்கள்.
மன இயல்பின் செழுமையான பாதையில் குறுக்கும் நெடுக்குமாக முளைகளை நட்டு, முட்களைப் பரப்பி கூரான கற்களை ஆங்காங்கு போட்டுவிட்டால், ஓட்டம் எப்படி சீராக இருக்கும்?
நாகரீக வளர்ச்சி என்பதே ஆத்ம நிர்மாணத் தூய்மை மீது மடத்தனமாக அணிவிக்கப்பட்ட சாணியில் தோய்த்த சட்டை. சள்ளை பிடித்த விவகாரம். இதற்காகச் சந்தோசப்பட்டு வேறு தொலைய வேண்டுமா என்ன?
“பண்பாட்டையும் பாலியல் பிறழ்வுகளையும் மனதில் போட்டு குழப்பிக் கொள்ளக்கூடாது. உணர்வுபூர்வமான உண்மையான காதலோடு கணவன் அல்லது பிற ஆடவனுடன் பாலுறவு கொள்ளும் பெண்ணைச் சித்தரிக்கும் சாமர்செட் மாமின் ‘த பெயிண்டட் வெல்ஸ்’ஐ எப்படிப் புறக்கணிக்க முடியும்? சாமர்செட் மாமின் இன்னொரு படைப்பான ‘Rain’ பாதிரியார் ஒருவரின் பாலிச்சையைச் சாடுவதாக அமைகிறது. “எல்லா ஆண்களும் பன்றிகள்” என்று ஒரு பரத்தை சொல்லும் வாசகத்துடன் முடியும் இந்தப் படைப்பத்தான் தூக்கி எறிய முடியுமா?”
“பக்திப் பரவசத்துக்கும் விஸ்கிப் பரவசத்துக்கும் அதிக வித்தியாசமில்லை”
“கீர்க்ககார்டின் ‘பயம் எனும் கருத்தாக்கம்’ என்ற புத்தகத்துக்கு எழுதப்பட்ட முன்னுரையில் : ‘இது சுவாரஸ்யமான புத்தகம். ஆசிரியர் ஒரு முக்கியமான எழுத்தாளர் என்ற அபிப்ராயத்தை ஏற்படுத்தியுள்ளார். ஏனென்றால் ஆசிரியர் ஒரு மனநோயாளி எனக் கொள்ளப்படுவதற்கான ஆதாரங்கள் புத்தகத்திலிருந்து கிடைக்கின்றன”
சமூகமே ஒன்றை ஆரம்பிக்கும். அதுவே கண்டிக்கும். களைய எத்தனிக்கும். சீர்திருத்தும். பிள்ளைக்குச் சரியான கிள்ளல். பிறகு ஆதுரத்துடன் தொட்டில் ஆட்டுதல். பம்மாத்து.
சமுதாய அமைப்பு நாறிக்கிடைக்கில் ஒரு தனி நபரைக் குறைகூறுவதில் யாதொரு பயனும் இல்லை.
நமது கலாசாரம் சீரான சிந்தனையத் தூக்கி எறிந்து கொண்டிருக்கும் முரண்பாடுகளில் ஒரு பெரிய அழுக்கு மூட்டை.
இப்பொழுதுள்ள சமுதாயம் பாலுணர்வின் அடிப்படையில் தோன்றும் பொறாமையை அடியொற்றித்தான் தோன்றி இருக்க வேண்டும்.
இது முனிபுங்கவர்களுக்காகவோ, துறவிகளுக்காகவோ, சன்னியாசிகளுக்காகவோ, செக்ஸை பாவம் என்று கருதும் மனநோயாளிகளுக்காகவோ எழுதப்பட்டதல்ல. உள்ளங்களிலும் உணர்வுகளிலும் இயல்பான நம்பிக்கை வைத்திருக்கும், எளிதில் கசிந்துருகிவிடும் இளகிய மனது படைத்தவர்களுக்காக எழுதப்பட்டது. பாலுணர்வும் பரவசமும் காதலும் எத்தனை ரம்மியமானவை?
நன்றி : ஆசிப்மீரான்