‘அகம் பிரம்மாஸ்மி’ – கென் கவிதைகள்

மழைக் கால தவளைகளின்
குரல் கேட்டுக்கொண்டே இருக்கிறது
பாம்புகளுக்கு

வாயிடுக்கில் இருந்தும்
தப்பிடும் வழியேதுமின்றியும்
குரல் எழுப்பிக்கொண்டேதான்
இருக்கின்றன

வாழ்தல் இறத்தல்
என்றெல்லாம் மாறும்
சூழலிலும் பெய்திட்ட
மழைக்கு
குரல் எழுப்ப மறப்பதில்லை
அவை

மழையாய் குரலெழுப்பி
சாகின்றன தவளைகள்
குவியத்துவங்கிடுகின்றன
மேகங்கள்
ஆகாயத்தில்

****

பொழுதின் முடிவுகளில்
மசமசக்கிறது இரவின் நிறம்
கரிய சிறகுகளில்
மூடி மறைக்க முயல்கிறது
ஏதோ அங்கொன்றின்
மினுமினுப்புகளில் தெரிகிறது
விர‌விட‌ இயலாத‌து
கூகையின் அல‌ற‌லில்
திடுக்கிடுகிறது

உச்சிக்கிளைக‌ளுட‌ன் ராட்ஷ‌ச‌னாய்
தூர‌த்தெரிவது
எச்ச‌த்தில் விளைந்ததாம்
வேர்க‌ளின்
விய‌ர்வைக் குளிய‌ல்க‌ள்
கூர்நாக்குக‌ளுக்கு தெரிவ‌தில்லை
எல்லாம் ம‌றைத்த‌
அக‌ங்கார‌ க‌ருமையை
கிழ‌க்கின் வெளுப்பு
உடைக்குமாம்
ப‌ரிகசித்து எழுந்தோடுகிறது
கொண்டைச்சேவ‌ல்

****
உரசலில் நனைதலில்
இருக்கலாம்
அலைகளின் ஓலம்
வெண்மையின் கரிப்பில்
கரைதலில் இருக்கலாம்
கடலின் கண்ணீர்
தீராத வாழ்தலின் ருசி
தனித்திருப்பவனோடு
சேர்த்து வைக்கிறது
சிலநினைவுகளை
சில முத்தங்களை
பிரிதலின் பிரக்ஞை
இற்றுப்போகையில்
சொல்லப்படாத வார்த்தைகளின் முனைகள்
கோட்டையின் பாழடைவில்
வெளவால்களோடும்
புழங்கத் துவங்குகின்றன‌

தாய்மையின் முலைக்காம்புகளில்
பூசப்படும் வேம்பின் கசப்பு
தெரிவதில்லை
பால்குடி மறக்கவியலா
மழலைக்கு

****

புதிதான உலகை சிருஷ்டித்திருந்தான் அவன்
ஒற்றைக் கண் காகம் , நொண்டிப்பூனை என
இருவர் மட்டுமிருந்தனர்

நான் மட்டுமே மனிதனாயிருக்கிறேன்
நானே பிரம்மம் என்றபடியே
காகத்தை கல்லெறிந்துக் கொன்றான்
நொண்டிப்பூனை பிடித்துக்கொண்டோடியது

மூவரின் உலகம் ஒரு கொலையோடு
இருவராய் மாறியது
எக்கணமும் ஒற்றையாய் தொடங்கலாம்
நானே பிரம்மம் என்றான்

விறைத்த காகம் மூடிடாத
கண்ணோடு பூனையுடன்
கெஞ்சிக் கொண்டிருந்திருக்கலாம்

குருதிப் படிந்த கல் இப்போது
பூனையை குறிப்பார்க்கிறது
அகம் பிரம்மாஸ்மி என்றான்

****

நன்றி: கென், வார்த்தை, புதுவிசை, சென்ஷி & பண்புடன் குழுமம்