குர்அதுல்ஐன் ஹைதரின் அக்னி நதியிலிருந்து..

அக்னி நதி

குர்அதுல்ஐன் ஹைதர்

தமிழாக்கம் : சௌரி

ஒன்பதாம் அத்தியாயம்

***
கபீர் காலையில் எழுந்ததுமே, தறிபோட உட்கார்ந்து விடுவார். நெசவு அவரது தொழில்; நெய்த துணிகளை அடுக்கித் தோளில் போட்டுக்கொண்டு காசியில் தெருத்தெருவாக அலைந்து விற்பனை செய்வது அவருக்குப் பிழைப்பு. மாலையில் அவர் வீட்டுக்கு எதிரே மகிழ மரத்தினடியில் பக்தர்கள் கூடுவார்கள். தம்பூராக்கள் சுருதிகூட்ட, தாளக்கட்டைகள் அளபெடையாக ஒலிக்க பஜன் கீதங்களின் இசை நிகழ்ச்சி தொடங்கும்.

காசிமா நகரிலுள்ள பண்டாக்களுக்கும் மௌலானாக்களுக்கும் கபீர் மேற்கொண்டிருக்கிற , பரப்பிக்கொண்டிருக்கிற பக்தி தத்துவநெறி வெறுப்பூட்டியது. ஆனால் அவர்கள் என்ன செய்ய முடியும்? நாடு முழுவதும் இந்தப் புது மோகத்தில் ஈர்க்கப்பட்டிருக்கிறது. கடந்த முன்னூறு ஆண்டுகளாக பக்தி தத்துவ மார்க்கத்தில் மிகப்பெரிய கவச்சிகரமான அணிவகுப்பு பவனி வந்து கொண்டிருக்கிறது. பாதுஷாக்களும், சத்ரபதி ராஜாக்களும், மந்திரிகளும், சேனாதிபதிகளும் குறுநில மன்னர்களும் அப்பவனியில் உலா வந்தனர். இன்று அந்தப் பவனியில் -பக்திநெறியெனும் புதிய ஊர்வலத்தில் பாட்டாளிகள், நாவிதர்கள், சக்கிலியர், உழவர், எளிய தொழிலாளிகள் யாவரும் இடம் பெற்றிருப்பதைக் கமால் கண்டான், இது ஜனநாயக பாரதம். இங்கு கந்தலாடைச் சாமியார்களும், ஸூஃபி ஞானியரும், வைதிக ஸந்தக் கவி யோகியரும்தான் அருளாடசி புரிபவர். இஸ்லாமின் சமத்துவக் கோட்பாடு இந்துப் பக்தர்களைக் கவர்ந்தது. அமைதி விரும்பும் ஸூஃபி ஞானிகள் இஸ்லாமை பாரதமெங்கும் பரப்பி வந்தார்கள். இங்கே வாளுக்கு வேலை இல்லை. பல நூற்றாண்டுகளாகத் தாழ்த்தி-இழிவுபடுத்தி வைக்கப்பட்டிருந்த தீண்டப்படாத மக்கள், இப்போது ஸூஃபி ஞானியர், இந்து பக்த கவிகள் ஆகியோருடன் கூடி .அமர்ந்து ராம நாம சங்கீர்த்தனம் செய்து மகிழலானார்கள். இது விசித்திரமான அதிசய உலகம். இதில் இந்து-முஸ்லிம் சச்சரவுக்கு இடமில்லை. இங்கு அன்பின் பேராட்சி நிலவியது. மனிதர்களைத் தேடி அலைந்த கமாலுத்தீன், இதுகாறும் தான் கொண்டிருந்த கணிப்பை மாற்றிக் கொண்டான். இந்த உலகில் கொடிய ஓநாய்களைத் தவிர உண்மையான மனிதப் பிறவிகளும் வாழ்கிறார்கள் என்பதைக் கண்டான். தனக்கு மண்டபத்தில் உணவு- சத்துமாவு
கொடுத்தனே ஆயர்குல வாலிபன், அவனைக் கொல்லவேண்டுமென்கிற வெஞ்சினம் கமாலுக்கு ஏற்படவில்லை. காரணம், அந்த எளியவனுக்கு நாடு பிடிக்கும் ஆசை கிடையாது. அவனுக்கு இரு வேளை உணவு வயிறாரக் கிடைத்து விடுகிறது. அவன் மனநிறைவுடன் கடவுளுக்கு நன்றி கூறுகிறான். அவனுக்கு நாடுகளிடையே நடக்கும் அரசியல் கெடுபிடிகள் பற்றி என்ன கவலை? அவன் எதிரே வரப்பில் அமர்ந்திருக்கும் குடியானவன் மடியில் குழந்தையை வைத்துக்கொண்டு கொஞ்சுகிறானே, கனி கொடுத்து மகிழ்கிறானே, அவனுக்கு என்ன கவலை? தில்லியில் யார் ஆட்சி நடக்கிறது. எவர் ஆட்சி கவிழ்ந்தது என்பது பற்றி? சுல்தான் ஹூஸேன் தில்லியை ஆண்டாலும் அந்த உழவன் இப்படியே உழுதுண்டு வாழ்வான். நிலவரி கட்டி வருவான்; சுல்தான் சிக்கந்தர் ஆண்டாலும் அவன் இப்படியேதான் இருப்பான். இந்தத் துருக்கர்களின் ஆக்கிரமிப்புக்குப் முன்பு, பிருத்விராஜ் முதாலனவர் ஆண்டுவந்த காலத்திலும் இவனுடைய பாட்டன் – முப்பாட்டன்மார்களும் இதேபோல் கோடையில் இளைப்பாறி வந்தார்கள். மாரியில் தீ மூட்டத்திற்கு எதிரே குளிர்காய்ந்தார்கள். வசந்த காலத்தில் தெம்மாங்கு இசைத்து மகிழ்ந்தார்கள். பஞ்சம் ஏற்பட்டபோது ஆர்ப்பாட்டமில்லாமல் செத்து மடிந்தார்கள்!

மாலைப்பொழுதில் மக்கள் கீர்த்தனை நிகழ்ச்சியில் கலந்துகொள்ளக் குழுமினார்கள். கமாலுத்தீனும் அந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டான்.

பாக்தாதில் பிறந்து வளர்ந்து, இந்திய நகர் ஜௌன்புரில் செழிப்பாக வாழ்ந்து வந்த அபுல் மன்சூல் கமாலுத்தீன் வரலாற்று அறிஞன், ஆராய்ச்சியாளன், அரசியல் நிபுணன், படைவீரன், தத்துவ ஞானம், ஆத்மஞானம் ஆகியவற்றில் பித்துக்கொள்ளாத சிந்தனையாளன். இப்போது இறுதியாகாக் காசிமாநகரில், பஞ்சகங்கா கூட்டத்திற்கு வந்து சேர்ந்தான்!

ஆனால், பல அடிப்படைப் பிரச்சினைகளைப் பற்றிச் சிந்திக்கும் தத்துவபுத்திக்கு வேலை இல்லாமல் போகவில்லை. கபீர் தம் நேயர்களிடம் தெரிவித்தார்: “நல்லவர்களே! ஹரியிடம் அன்பு செலுத்துங்கள். உங்கள் துயரங்கள் தாமே விலகிவிடும்”. துக்கம்தான் உண்மை; துன்பத்தின் மூலப்பொருளும் உண்மைதான்..! இதே கருத்தைத்தான் தோணியில் வந்த தாந்திரிக சித்தன் கமாலுக்கு விளக்க விரும்பினான். சரி, ஆனால் ஹரி யார்? கரை எங்கே இருக்கிறது? கரைக்குச் சென்றாலும் அங்கே என்ன கிடைக்கும்? உண்மையான நம்பிக்கை என்பது என்ன? கடவுளைப்பற்றிய கற்பனைக்கு முடிவு? பற்றுதல் துறவி இரண்டினாலும் என்ன கிடைக்கும்? மோட்சம் என்பது என்ன..? ஆனால், ஞானத்தின் சிந்தனை உலகம்தான் எவ்வளவு விரிவானது! எந்த சிந்தனைத்தொடரை முதலில் பயிலத் தொடங்குவது? செயல், அறிவு, அன்பு இந்த மூன்றின் மார்க்கங்களும் அவனுக்கெதிரில் திறந்திருக்கின்றன. அவன் எந்த வழியில் முதலில் செல்லவேண்டும்? இஸ்லாமியப் பள்ளிக்கூடங்களில் இஸ்லாமிய தத்துவம் குறித்து, பிரச்சினைகள் பற்றி நீண்ட தீவிரமான சர்ச்சைகள் நடந்தன. ஸூஃபி ஞானிகளும், தர்வேஷ் பக்கிரிமார்களும் தம் தம் கட்சிகளை – சாதனைகளைப் பற்றியவாறு முனைந்திருந்தார்கள். ஆண்டவனின் அன்பு வேண்டிப் பெருமூச்சுவிட்டுக் கொண்டிருந்தார்கள். கங்கைகரையில், மாந்தோப்புகளில் மறைந்திருக்கும் உபாஸனைக் கூடங்களில்தான் அந்தப் பெரியவர்களை கமால் பார்த்தான். அவகள் எல்லை கொண்டது – எல்லை கடந்தது இருநிலைகளுக்குமிடைப்பட்ட ஆன்மீக நிலைகளைக் கடந்திருந்த மேலோர்கள். சிலர் குருத்தியானத்தில் ஒடுங்கியிருந்தார்கள். யோகிகள் நிர்வாண நிலையப் பெறவும், ஸூஃபி ஞானிகள் ஃபநா(இறுதி) ஒடுக்கத்தை எய்தவும் சமாதி நிலையை மேற்கொண்டிருப்பதைக் கண்டான். ஸூஃபி ஞானிகள் அவனிடம் சொன்னார்கள்: “இறுதி உண்மை ஒளிதான். அதுதான் நூர். நூர்(ஒளி) ஒளி இல்லாதது நிலையில்லாதது”. வேறு “சில பக்கிரிகள் கமாலிடம் சொன்னார்கள்: “இறுதி உண்மை உள்ளம்தான்”. மேலும் புதர்களடர்ந்த கானகத்தில் கொடிப்பந்தல்கள் மிகுந்த சோலையில் , அவன் அல்லாவின் அருள் திறன்களான ஜலால் (வலிமை), ஜமால் (அழகு), கமால்( நிறைவு) தன்மைகளைக் கேள்வியுற்றான். இந்த இந்துஸ்தாந்த்தில் மெய்யடியார்களின் சிந்தனை வளம் என்றுமே குன்றியதில்லை ஃபரீத்துத்தீன் அத்தார், ஷேக் ஜலாலுத்தீன் தப்ரேஜி, பலாவுத்தீன் ஜகரியா, ஜலாலுத்தீன் கர்க்போஷ், க்வாஜா மோயினுத்தீன் சிஷ்தீ, குதுபுத்தீன் பக்தியார் காசீ முத்லான ஞானிகள் வாழ்ந்து தத்துவ போதனை புரிந்த தேசம் இந்துஸ்தானம். இவ்வளவு சான்றோர்கள் தோன்றிய நாட்டில் இருந்துகொண்டு அறிவார்வம் கொண்டுள்ள எவன்தான் வாழாவிருப்பான்.

ஒருநாள் இரவு, மடத்தில், சுவரில் சாய்ந்து உட்கார்ந்துகொண்டு வெகுநேரம் சிந்தித்தான். வித்வான்கள் சுலோகங்களை ஓதிக்கொண்டிருந்தார்கள். கமால் வெளியே நின்று கேட்டுக்கொண்டிருந்தான். அவன் மிலேச்சன் (முஸல்மான்). ஆதாலால் மடத்துக்குள்ளே போகக்கூடாது. அவனுக்கு அந்த சுலோகங்கள் விரோதமாக இருந்தன. ஜௌன்பூரில் இருந்த முஸல்மான்களும் காசிவாழ் பண்டாக்களும் வரிசையாக நின்று அவனைப் பார்த்துப் பல்லை நெறிப்பது போல்
இருந்தது. எவரும் அவன் பேச்சைக் கேட்பதில்லை. அவன் சுவரடியில் உட்கார்ந்தான்.

“ஐயா இரக்கம் உள்ளவரே! ஐயா இரக்கம் உள்ளவரே!”

கமால் திரும்பிப் பார்த்தான். அருகில் மலைவாசிகள் சிலர் உட்கார்ந்திருந்தார்கள். அவர்கள் தம்பூராவில் சுருதி கூட்டிப் பாடிக் கொண்டிருந்தார்கள்.

“ஐயா இரக்கம் உள்ளவரே!”

சோம்பல் முறித்துவிட்டுக் கமால் எழுந்தான். “கமாலுத்தீன்!” அவன் தன்னையே விளித்துக்கொண்டு சொன்னான். “கபீர் உபாசித்துக் கொண்டிருக்கும் பெருமான் (ஸாஹப்) உன்னை அழைக்கிறார் என்று தெரிகிறது. அவர்தான் இவர்கள் குறிப்பிடும் ‘இரக்கம் உள்ள ஐயன்’. நீ இரண்டு வழிகளைக்கண்டு விட்டாய். இப்போது அன்பு வழிதான் மீதி. அவ்வழி சென்று அன்பின் எல்லையை நீ காண்பாய். இனி நீ செல்ல வேண்டியது அன்பு வழிதான்.”

கமால் நதித்துறைக்குச் சென்றான். கங்கையைக் கடந்து கபீர் வசித்து வந்த சோலைப்பகுதிக்கு வந்து சேர்ந்தான். நாட்கள் கடந்தன. சம்பாவின் நினைவு விசித்திரமான உருவில் அவன் மனத்தில் பதிந்தது. அமீர் குஸ்ரோவின் கவிதை ஒன்று நினைவு வந்தது. ஹஜ்ரத் நிஜாமுத்தீன் ஔலியா அவர்கள் காலமாகியபோது பாடிய கவிதை இது

வெண்மதி வதனத்தின் நிலவுத் தேசுடையாள்
மென்முகந் தனில்கருங் கூந்தல் அளைந்திடக்
கிடக்கின்றாள்; குஸ்ரோ நீ வீடுதிரும்பிடுவாய்!
இடமெங்கும் இருள்மூடத் தொடங்குவ தைப்பார்

அன்பு செலுத்துவன் பொருள் கமாலுக்குப் புரிந்தது. இதை அவனுக்கு சம்பாதான் கற்றுக்கொடுத்தாள். கங்கையோடு யமுனை கலப்பதைப்போல் ஞானக்கவி கபீர்தாஸோடு அவன் ஒட்டுறவு கொண்டிருந்தான். இரு நதிகளோடும் சங்கமிக்கும் சரஸ்வதி நதியைப்போல், வெளியார்க்குப் புலப்படாதவாறு அந்தர்வாஹினியாகக் கலந்திருந்தாள் சம்பா. ஆனால் கபீர்தாஸருடன் கொண்டிருந்த ஒட்டுறவும் நீடிக்கவில்லை. காசி மாநகர்ப் பண்டிதர்களும் மௌல்விகளும் தில்லி சுல்தான் சிக்கந்தர் லோதியிடம் முறையிட்டார்கள்: ‘இந்த நெசவுக்காரன் பொதுமக்களைத் தவறான வழிக்கு இட்டுச் செல்கிறான். கண்டித்து வையுங்கள்.” தில்லி சுல்தான் கபீருக்குத் தகவல் அனுப்பினான். “காசி நகர் பண்டிதர்கள் – மௌல்விகள் முதலியவர்களின் கொள்கை வெறியிலிருந்து தப்பித்துக் கொள்ள வெளியூர் போங்கள்.”

***

நன்றி :  நேஷனல் புக் டிரஸ்ட், இந்தியா