சந்தோஷம் – கி. ராஜநாராயணன்

முன்னையனுக்கு எட்டு ஒம்பது வயசிருக்கும். தன் தகப்பனாருடைய சட்டையை எடுத்துப் போட்டுக்கொண்டிருந்தான். அது அவனுக்கு, வேதக்கோயில் சாமியாரின் அங்கிமாதிரிப் பெரிசாய் இருந்தது. எண்ணெய் அறியாத செம்பட்டை ரோமம் கொண்ட பரட்டைத் தலை. அந்த தலையின்மேல் ஒரு கோழிக்குஞ்சுவை வைத்துக்கொண்டு அந்தக் கிராமத்தின் இடுக்காட்டமுள்ள ஒரு தெருவில் அந்தக் கடேசிக்கும் இந்தக்கடேசிக்குமாக

‘லக்கோ லக்கோ’

‘லக்கோ லக்கோ’ என்று சொல்லிக்கொண்டே ஓடி ஓடி வந்து கொண்டிருந்தான்,

‘லக்கோ’ என்ற சொல்லுக்குத் தமிழில் என்ன அர்த்தம் என்று அவனுக்கும் தெரியாது; யாருக்கும் தெரியாது! அது, அவனால் சந்தோஷம் தாளமுடியாததினால் அவனை அறியாமல் அவன் வாயிலிருந்து வந்த ஒரு வார்த்தை அந்தமாதிரியான வார்த்தைகளுக்குத் தாங்க முடியாத சந்தோஷம்’ என்பதைத் தவிர வேறு அர்த்தம் கிடையாது.

அவன் தலையில் வைத்துக்கொண்டிருந்த அந்தக் கோழிக்குஞ்சு ரொம்ப அழகாக இருந்தது. பிரகாசமான ஒரு அரக்குக் கலரில் கருப்புக் கோடுகளும் வெள்ளைப்புள்ளிகளுமாகப் பார்க்கப் பிரியமாக இருந்தது. அதனுடைய கண்களின் பின்பக்கத்தில் மிளகு அளவில் ஒரு சின்ன வட்டவடிவக் கோடு அதன் அழகை இன்னும் அதிகப் படுத்தியது.

முன்னையனுடைய தகப்பன் அந்தச் ‘சாதிக்கோழி’க் குஞ்சுவுக்காகத் ‘தபஸ்’ இருந்து, மேகாட்டில் தனக்குத் தெரிந்தவர்களிடமெல்லாம் சொல்லி வைத்து, இரண்டு ‘சாதிக்கோழி முட்டைகளுக்கு நடையாய் நடந்து, எத்தனையோ நாட்கள் காத்திருந்து, கொண்டுவந்து தனது அடைக்கோழியில் வைத்துப் பொரிக்கப்பட்ட குஞ்சு அது.

வீட்டில் யாரும் இல்லை. எல்லோரும் பருத்திக்காட்டுக்குப் பருத்தி எடுக்கப்போயிருந்தார்கள், தெருவில் ஆள் நடமாட்டமே இல்லை. தூளியில் தூங்கும் சிறுகுழந்தையைப் பார்த்துக்கொள்ள அவன் மட்டும் இருந்தான், கோழிக்குஞ்சுவை வைத்துக்கொண்டு இப்படி விளையாடிக் கொண்டிருக்கிறான்.

முன்னையனுக்குக் குஷி பிடிபடவில்லை. கோழிக்குஞ்சுவுக்கு பயம், அது அவனது தலைமயிற்றைக் கால்விரல்களால் பற்றிக் கொண்டது. அவனும் அதனுடைய கால்விரல்களைத் தலையில் அழுத்திப் பிடித்துக்கொண்டு ‘லக்கோ லக்கோ’ என்று சொல்லிக்கொண்டு, மறுக்கி மறுக்கி ஓடிவந்தான்.

அந்தவேளையில் அங்கே வந்த மூக்கன் இந்தக் காட்சியைப் பார்த்தான். அவன் மனசையும் அது தொட்டது. சிரித்துக்கொண்டே பார்த்தபடி நின்றான்.

மூக்கனுடைய சொந்தப் பெயர் யாருக்கும் தெரியாது. கடவுள் அவனை அவன் அம்மாவின் வயிற்றுக்குள் அனுப்புமுன் அப்பொழுது தான் அவன் செய்து முடிக்கப்பட்டிருந்தான். இன்னும் சரியாகக்கூடக் காயவில்லை. பச்சை மண்ணாக இருந்தான். அப்பொழுது அவன் மரியாதையில்லாமல் கடவுளைப் பார்த்துச் சிரித்தானாம். அவருக்குக் கோவம் வந்துவிட்டது. லேசாக மூக்காந் தண்டில் ஒரு இடி வைத்தாரம். உடனே மூக்கின்மேல் மத்தியில் பள்ளம் விழுந்துவிட்டதாம். மூக்கன் அப்படியே பிறந்தான். பிறந்த உடனேயே அவனுக்கு அந்தப் பெயர் நிலைத்துவிட்டது. இப்பொழுதுகூட அவன் யாரையாவது பார்த்துச் சிரித்தாலும் மூக்காந்தண்டில் ஒரு குத்துவிடணும்போலத்தான் இருக்கும்; இந்த அழகில் அவனுக்கு முகம் நிறையச் செம்பட்டை மயிர் கிருதா மீசைவேறு.

மூக்கன் மீசைக்குள்ளேயே சிரித்துக்கொண்டு முன்னையனைத் தன் அருகே இழுத்து நிறுத்திப் பிரியத்தோடும் அதிசயத்தோடும், ‘ஏது இந்தக் கோழிக்குஞ்சு? ரொம்ப நல்லா இருக்கு?”, என்று கேட்டான்.

முன்னையன் சந்தோஷ மிகுதியால் இப்படிக்கூடி இந்தக் கோழிக் குஞ்சை ஒரு பெரிய்ய பிறாந்து தூக்கிட்டுப் போச்சி நான் அதைத் துரத்திக்கிட்டே ஓடுனேன். அது கீழே போட்டுட்டுப் போயிருச்சி, என்று சொன்னான்.

‘ஐய்யோ இது என் குஞ்சுமாதிரி இருக்கே; இந்தக் குஞ்சைத் தேடித் தான் அலையுதேன்.பிறாந்தா தூக்கிட்டு போனது; நீ நல்லாப் பாத்தியா?” என்று அவனும் அந்தக் கோழிக்குஞ்சைப் பார்த்த மகிழ்ச்சியில் ஒரு பொய் சொன்னான்.

‘..கண்ணாணை சொல்லுதேன். செத்த மிந்திதான் தூக்கீட்டுப் போனது. எம்புட்டு ஒசரம் அந்தப் பிராந்து பறந்ததுண்ணு நினைக்கே! கல்லைக் கொண்டியும் கட்டியைக் கொண்டியும் எறிஞ்சேன். ஒரு கல்லு அதந்தலையில் உரசிக்கிட்டுப்போனது. ‘சரி, இவன் இனி விடமாட்டா’ண்ணு கீழே போட்டுட்டது. அப்படியே பிடிச்சிக்கிட்டேன்’, என்று இறைத்துக்கொண்டே சொன்னான்.

மூக்கன் குஞ்சை வாங்கிப்பார்த்தான். அது பயத்தினால் நடுங்கிக் கொண்டிருந்தது. இடதுகையில் அதை வைத்துக்கொண்டு வலதுகையால் பிரியத்தோடு தடவிவிட்டுக்கொண்டே, யாராவது வருகிறார்களா என்று நோட்டப்பார்வை பார்த்தான்.

முன்னையனும், யாராவது வருவதற்கு முன்னால் அதை அவனுக்குக் கொடுத்துவிடவேண்டும் என்று நினைத்து, ‘இது ஒங்குஞ்சா. சரி; கொண்டுபோ’ என்று சொல்லி மூக்கனுடைய கைகளைக் குஞ்சோடு சேர்த்துத் தள்ளினான். அது, “சீக்கிரம் கொண்டு போய்விடு’ என்று சொல்லுவது போலிருந்தது.

மூக்கன் மடியில் குஞ்சைப் பதனமாகக் கட்டிக்கொண்டு புறப்பட்டான்.

முன்னையனுக்கு இப்பொழுதுதான், தன்னுடைய சந்தோஷம் நிறைவுபெற்றதாகப்பட்டது.

மூக்கனுக்குத் தொழிலே கோழி பிடிப்பதுதான். இதைத் தெரிந்து முன்னையன் அவனுக்குக் கொடுக்கவில்லை. யார் வந்து அந்த சமயத் தில் கேட்டிருந்தாலும் அவன் கொடுத்திருப்பான்.

மூக்கன் வேலைக்கே போகமாட்டான். பேருக்கு ஒன்றிரண்டு கோழிகளை விலைக்கு வாங்குகிறதுமாதிரி வாங்கிக் கோழிக் கூடையில் போட்டு மூடிக் கோவில்பட்டிக்குக் கொண்டுபோய் விற்பான். ஆனால் அவன் அதைச் சாக்காக வைத்துக்கொண்டு கள்ளத்தனமாகத் திருட்டுக்கோழிகளைப் பிடித்து விற்றுச் சம்பாதிப்பதையே தொழிலாகக் கொண்டிருந்தான்.

கிராமத்தில் மக்கள் காட்டுவேலைக்குப் போனபின்தான் மூக்கன் எழுந்திருந்து தன் குடிசையைவிட்டே வெளியே வருவான். ஆள் நட மாட்டம் இல்லாத இடமாகவும் கோழிகள் குப்பையைக் கிளறிக் கொண்டு மேயும் இடமாகவும் பார்த்துத் தன்னுடைய வேட்டையைத் தொடங்குவான்.

ஒரு வெங்காயத்தில் முள்ளைக் குத்திப் போடுவான். அதற்கு முன்பாக முள்ளைக் குத்தாத ஒன்றிரண்டு வெங்காயத்தையும் போடுகிறதுண்டு. முள்ளைக் குத்திய வெங்காயத்தை எறிகிறதிலும் ஒரு சாமர்த்யம் வேணும். முள் ஒருச்சாய்ந்து அது ஓடிவந்து ஆவலோடு கொத்தும்போது அதன் உள்மேல் அண்ணத்தில் குத்துகிறாப்போல் அமையவேண்டும். மூக்கனுக்கு இதெல்லாம் சாதாரணம்.

வாய்க்குள் நிரம்பிய வெங்காயமும் குத்திய முள்ளுமாக இருக்கும் போது கோழி, அதிர்ச்சியாலோ அபாயக்குரல் எழுப்ப முடியாமலோ போய்விடுகிறது. கோழி செயலற்றுப்போய் அப்படியே இருக்கும். ஒரு சிரமமும் இல்லாமல் எடுத்துக் கக்கத்தில் இடுக்கிக்கொண்டு மறைத்துக் கொண்டு வந்துவிடவேண்டியதுதான்.

இது பகல் வேட்டை ..

மூக்கன் ராவேட்டைக்கும் போவான், ராவேட்டைக்கு முள்ளும் வெங்காயமும் வேண்டியதில்லை. ஒரு ஈரத்துணியே போதும். இதில் கவனிக்க வேண்டிய விஷயம், கோழிகள் நெருக்கமாக ஒன்றோடு ஒன்று ஒட்டாமல் தனித்து நிற்கவேண்டும். திடீரென்று அதன்மேல் ஈரத் துணியைப் போட்டதும் அது சப்தம் எழுப்புவதில்லை. அப்படியே சுருட்டிக்கொண்டு வந்துவிடவேண்டியதுதான்.

மூக்கன் அந்தக் குஞ்சைத் தன் குடிசைக்குக் கொண்டுவந்து தண்ணீரும் உணவும் வைத்தான். தாயைக் காங்காத குஞ்சு ‘கிய்யா, கிய்யா’ என்று கத்திக்கொண்டே இருந்தது.

மூக்கனின் பெஞ்சாதி மாடத்தி பருத்திக்குப் போய்விட்டு வந்தாள். குடிசைக்கு முன்னாலுள்ள பானையடிக்குப் போய், மாராப்பை நீக்கி விட்டு ஒரு அரைக்குளிப்புக் குளித்துவிட்டு வந்தாள். அன்று அவள் ஏழு தரத்துக்கு பருத்தி எடுத்திருந்தாள். அதுவும் தண்ணீரின் குளுமையும் சேர்ந்து ஒரு கெந்தளிப்பான மனநிலையில் குடிசைக்குள் வந்தாள்.

பொங்கிப்போயிருந்த புருஷனையும் தீனி வைத்துக்கொண்டிருந்த கோழிக்குஞ்சுவையும் பார்த்தாள். அவனை இடித்துத் தள்ளிவிட்டு அந்த அழகான குஞ்சை ஆச்சரியமும் ஆனந்தமும் பொங்க எடுத்து மடியில் வைத்துக்கொண்டாள். மனித வெதுவெதுப்பை அனுபவித்த குஞ்சு தன் அனாதரவான நிலைமாறி இனிமைக் குரல் கொடுத்து அவளோடு ஒட்டிக்கொண்டது.

‘ஏது இது?’ என்று தலையை மட்டும் அசைத்து மூக்கைச் சுரித்துப் புருவத்தை வளைத்துத் தலையாலேயே கேட்டாள்.

“மேலூர் சின்னக்கருப்பன், இது பாஞ்சாலங்குறிச்சியிலிருந்து மண் எடுத்துக் கொண்டாந்து அடைகாக்க வச்ச குஞ்சு; கட்டாயம் நீ இதை வச்சிக்கிடனும்ண்ணு குடுத்தான்’ என்றான்.

அவள், தான் அவனிடம் சொல்லப்போகும் வார்த்தைகளுக்காக வேண்டி அவன் சொன்ன அந்த வார்த்தைகளை அங்கீகரித்தாள்! பிறகு அவள் சொல்லுவாள், ‘என் உடன்பிறந்தான் ஒரு சாவல் வச்சிருந் தான் நல்ல பச்சை நிறம். இந்தச் சில்லாவிலேயே அதுக்குச் சோடி கெடையாது. அது பாஞ்சாலங்குறிச்சிக்கோட்டை மண்ணை எடுத்து கிட்டு வந்து, நல்ல அக்கினி நட்சத்திரத்திலே அடைகாக்க வச்சிப் பொரிச்ச குஞ்சாக்கும் அது. அதோடகூட வச்ச அம்புட்டு முட்டைகளும் கூ முட்டையாப் போச்சு. அது ஒண்ணுதான் குஞ்சானது. சீமைச் சஜ்ஜு பொஞ்சாதி வந்து ஆயிரம் ரூவாய்க்கு அந்தச் சாவலை ஆசைப்பட்டுக்கேட்டா. தலை ஒசரம் பவுனாக் குவிச்சாலும் நாந் தர முடியாதுண்ணு சொல்லீட்டான், என்று பொங்குதலாகச் சொன்னாள்.

அவள் சொல்லுகிறது பொய் என்று மூக்கனுக்கும் தெரியும். அவளுக்கும் தெரியும். ஆனால் அதை நிஜம்மாதிரியே நினைத்து இருவரும் ஏற்றுக்கொண்டார்கள்! இரண்டு மனித வெதுவெதுப்பில் மூழ்கி, தனது அடைக்கலக்குரல் முனகலைக் கொஞ்சங் கொஞ்சமாகப் பைய்ய நிறுத்தி, கண்களை மூடி அந்த இதமான வெப்பத்தில் ஓய்வு எடுக்க ஆரம்பித்தது அந்த அழகிய சின்னக் கோழிக்குஞ்சு.
*
கணையாழி ஜூலை , 1972

Thanks : https://archive.org/

கி.ரா – ஜெயகாந்தன் – பால் ரோப்ஸன்

கதைசொல்லி இதழ் 21 (ஜூன் ஆகஸ்ட் 2007) கி.ரா பக்கங்களிலிருந்து பகிர்கிறேன்…

——-

kira-anthi-wp-ab..ஜெயகாந்தனின் அறையில் இன்னொரு உலகமும் இருந்தது! நிறைய்ய இசைத்தட்டுகள் வைத்திருந்தார். அவ்வளவும் அய்ரோப்பிய சாஸ்திரிய சங்கீதம். “ஒய் பாவி மனுஷா” என்று வியந்து போனேன். இப்படி ஒன்று அவரிடம் அங்கே இருக்கும் என்று கொஞ்சமும் எதிர்பார்க்கலை நான்.

பீதோவனின் சிம்பனியைக் கேட்டிருக்கிறீர்களா என்று ஒரு இசைத்தட்டைக் கையில் எடுத்துக்கொண்டு கேட்கிறார்.

அவனுடைய நாமத்தைக் கேட்டிருக்கிறேன். இப்பொக் கண்ணால் பார்க்கிறேன் இந்த இசைத்தட்டை.

‘ஜெர்மானிய நாட்டின் தியாகப் பிரம்மம்’ என்று கு.அ. சொல்லுவான். ஆனால் அவனும் கேட்டதில்லை இதை.

நிலைகொள்ளவில்லை எனக்கு; அய்யோ என்று சொல்லி உட்கார்ந்து அவர் சோபா படுக்கையில் சாய்ந்து கொண்டேன்.

ருஷ்யமொழியின் மூத்த எழுத்தாளர்களில் ஒருவரான அலக்ஸாந்தர் குப்ரீன் கதையான ‘மாணிக்கக் கங்கணம்’ தமிழில் படித்ததிலிருந்து இவனைத் தேடிக் கொண்டிருந்தேன். கேக்கணுமெ இவனை இப்பொக் கேட்கிற மனநிலை இருக்கா; தெரியலையே என்ற தவிப்பு வந்துவிட்டது.

“உலகப் பிரசித்தி பெற்ற கறுப்புப் பாடகன் பால்ரோப்ஸன் பாடலைக் கேட்டிருக்கிறார்களா?” என்று இன்னொரு இசைத்தட்டைக் காட்டிக் கேட்கிறார்.!

இத்தாலிய நாட்டின் பிரசித்தி பெற்ற வயலின் இசைநிபுணர் (பெயர் ஞாபகம் இப்பொ இல்லை) இசைத் தட்டைக் காட்டுகிறார். இன்னும் என்னவெல்லாமோ பெயர்கள்; இசைத்தட்டுகள்.

முதல்லெ பீதோவன் என்றேன்.

இசைத்தட்டு சுழல ஆரம்பித்தது.

எனது பிரக்ஞை அங்கே இல்லை. பீதோவனால் என்னைக் கட்டி இழுக்க முடியவில்லை. பயந்தபடியே ஆயிற்று!

பால்ரோப்ஸனைப் போடுங்கள்.

கண்ணாடியில் ஒட்டிக்கொண்ட பல்லியின் கால்களைப்போல என்னில் ஒட்டிக்கொண்டது அவனது குரல். கேவி அழாத ஒரு ஏக்கம் தொனித்த குரல்.

என்ன சொல்லுகிறான்?

தான் ஒரு அநாதையாய் உணர்வதாகச் சொல்கிறான்.

ஏன்?

தங்களுக்கு என்று ஒரு மண் இல்லை தங்குவதற்கு; நாடு நாடாய் அலைந்துகொண்டிருக்கிறோம் அநாதைக் குழந்தைகளாய் என்கிறான் ‘சம்டைம் அய் ·பீல்..’ எனும் அந்தப் பாடலில்.

*

*

அது அவர்களது நாடோடிப் பாடல். இந்த வகைப்பாடல்கள் மனசை அறுக்கும். இங்கே தமிழிலும் இந்த வகைப் பாடல்கள் உண்டு.

முட்டைகள் இட்டுக் குஞ்சு பொரித்து, இரை தேடிப்போன ஆக்காட்டிப் பறவை, தொலைந்து போன தனது குழந்தைகளை நினைத்து அழுவது போல உள்ள துயரமான பாடல் (முனைவர் கே.ஏ. குணசேகரன் பாடிக் கேட்க வேண்டும்)

பால் ரோப்ஸன் பாடிய இன்னொரு பாடல் ‘வாட்டர் பாய்‘. தண்ணீர் சுமக்கும் ஒரு கறுப்புப் பையனைப் பற்றியது. அந்தப் பையனுடைய தோற்றத்தையும் பிரியமான குணங்களையும் வர்ணித்து வர்ணித்து அப்பேர்ப்பட்ட பையன் எங்கே, அவன் உங்களுக்குத் தட்டுப்பட்டானா; பார்த்தீர்களா? என்று உருகி உருகிக் கேட்கும் அந்தப்பாடல். அந்தக் குழந்தைத் தொழிலாளி வேலையின் தாளமுடியாத சுமையினால் ஓடிப்போயிருக்கலாம். அல்லது அடித்துக் கொல்லப்பட்டிருக்கலாம்.

பால்ரோப்ஸனுடைய தேன் குரலைப் பற்றிச் சொல்லவேண்டும். அந்தக் குரல் நம்முடைய பித்துக்குளி முருகதாசின் குரல வகையைச் சேர்ந்தது.

(பாடும்போது உள்ள பால்ரோப்ஸனுடைய குரல் பேசும்போது எப்படி இருக்கும் என்று கேட்க ஆசையாக இருந்தது. பல நாட்கள் கழித்து எனது அந்த ஆசையும் நிறைவேறியது செங்கல்பட்டில் டாக்டர் ஹரி.ஸ்ரீநிவாசன் (‘சார்வாகன்’) வீட்டில் வைத்து.)

*

நன்றி : கி.ரா, கதைசொல்லி, varadero1839

 

முன்னத்தி ஏர் (கி.ரா. நேர்காணல்)

கி.ராஜநாராயணன் அவர்களின் நேர்காணலை பிரபா மீனாக்ஷி ப்ளஸ்ஸில் பகிர்ந்திருந்தார் – சில குறிப்புகளுடன். ஐயாவின் ‘கிடை’ படித்தபிறகுதான் எழுதும் தைரியமே எனக்கும் வந்தது. ‘டிக்கெட்’ பற்றி இவர் சொன்னதுபோல , அங்கே ஃபேஸ்புக்கில் , பப்பாளிக்குப் பக்கத்தில் நின்றுகொண்டு, ‘விழும் காலம் வேளை வந்திடில் போக ஆயத்தம்’ என்று இலங்கை எழுத்தாளர் S.L.M ஹனீபாவும் எழுதியிருக்கிறார். பிரார்த்தனைகள்.’ என்று மறுமொழியிட்டேன். மீள்பதிவிடுகிறேன். ‘ரயில்’ வருவதற்குள் பார்த்துவிடுங்கள்! – AB-

Prabha எழுதியது :

அதி அற்புதம் கி .ரா. ஆரம்பகாலங்களில் , நண்பர்களுக்கான கடிதங்களே எழுத்தின் நடையை தீர்மானிப்பதை அழகா சொல்லி இருக்கார் . இப்போது அந்த கடிதங்களை அலைபேசி இன்ன பிற தொலை தொடர்பு சாதனங்களின் பேச்சு அழித்து தொலைத்து விட்டது தான் துரதிர்ஷ்டம் . காலம் தாழ்ந்த விருது , சொல்லாமல் கடக்க முடிவதில்லை தான் , மரணம் குறித்து பேசுகிற இடத்தில கி ரா . நிக்கறார் .

சம்ப்ரதாயம் என்கிற பெயரில் நடைபெறும் , தேவையற்ற , சொல்ல போனா , பிறர் பல நேரங்களில் ஒரு வேலையா கருதி விடுகிற அளவிலான தொந்தரவா ஒரு மனிதனின் மரணம் இருந்து விட கூடாது என்கிற தெளிவு ..கி. ரா .. அற்புதமே தான் .

“ரயிலுக்கு டிக்கெட் எடுத்துட்டேன் . ரயிலுக்காக காத்திருக்கேன் ..”

அந்தக் குரலின் கம்பீரமும் , தளர்ந்த உடலின் நெகிழ்வும் .. கண்கள் கலங்குகிறது. கி ரா வின் அடையாளம் அவரின் எழுத்து மட்டுமல்ல ..கி ரா என்கிற அற்புதமான மனிதரும் கூடத்தான் .

மிக்க நன்றி : புதுவை இளவேனில் .
*

 

*
Thanks to : puduvaiilavenil & Prabha Meenakshi

கி. ராஜநாராயணன் : சாகித்திய அக்காதெமி விருது ஏற்புரை (1992)

kira - koballakiramaththumakkal book-bஎன் வாழ்வில் நினைவில் கொள்ளவேண்டிய இந்நாளில், எனக்கு இங்கே விருதுவழங்கி கௌரவித்த சாகித்ய அக்காடமிக் கமிட்டியாளர்களுக்கும் என்னைத் தேர்ந்தெடுக்கக் காரணமான அனைவர்க்கும் முதலில் எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்திய நாட்டின் ஒரு தெற்குக் கடேசி மூலையில் இருக்கிறது எனது கிராமமான இடைசெவல். 250 வீடுகளே கொண்ட சிறிய கிராமம்தான். இப்போது அங்கே என்னையும் சேர்த்து சாகித்ய அக்காடமி விருது பெற்றவர்களின் எண்ணிக்கை இரண்டு என்று ஆகிறது.

தமிழ்ச் சிறுகதை இலக்கியத்தில் குறிப்பிட்டுச் சொல்லும்படியான அந்த மற்றொரு எழுத்தாளன் எனது நண்பன் கு. அழகிரிசாமி எனது தெருவைச் சேர்ந்தவன்.

மரணத்துக்குபின் அவனுக்கும், உயிரோடு இருக்கும்போதே எனக்கும் விருதுவழங்கி எங்களைக் கௌரவித்திருக்கிறது சாகித்ய அக்காடமி.

நாட்டின் மிக உயர்ந்த அளவு மழை கொட்டும் இடம் சிரபுஞ்சி என்று சொன்னால், நாட்டின் மிகக்குறைந்த அளவு மழை பெய்யக்கூடிய இடம் எனது வட்டாரமான கரிசல் பிரதேசம்.

இந்த மண்ணைக் ‘கரும்பாலைவனம்’ என்று ஒரு விதத்தில் குறிப்பிட்டுச் சொல்லலாம்.

என்றாலும் இந்த வறண்ட மண்ணில்தான் பல மகத்துவர்கள் தோன்றியிருக்கிறார்கள்.

பெருங்கவிஞர் வரிசையில் ஸ்ரீ ஆண்டாளும் பெரியாழ்வாரும், சென்னிகுளம் அண்ணாமலை ரெட்டியாரும் எட்டையபுரம் சுப்ரமண்ய பாரதியாரும், ரசிக ஞானி என்று புகழ்பெற்ற ரசிகமணி டி.கே.சி.யும் இசையோகி விளாத்திகுளம் சுவாமிகளும், தேசபக்தச் செம்மல்களான வீரபாண்டிய கட்டபொம்மனும் வ.உ.சிதம்பரம் பிள்ளையும். (இசை மும்மூர்த்திகளில் ஒருவரான முத்துசாமி தீட்சிதர் வாழ்ந்து அடங்கிய மண்ணும் இதுதான்).

‘கருப்புக்காந்தி’ என்று புகழ்பட்ட காமராஜூம், இப்படியான இன்னும் பலர் பிறந்த மண் இது.

இந்தக் கரிசல் மண் வட்டாரம் ஒரு காலத்தில் வெறும் கள்ளிச் செடிகளும் முள்ளுக்காடுகளும் நிறைந்த வனாந்திரப் பிரதேசமாகவே இருந்தது. இந்த இடத்திற்கு ஆந்திர நாட்டிலிருந்து வந்த தெலுங்கு மக்களும் கன்னட நாட்டிலிருந்து வந்து கன்னடம் பேசும் கவுண்டர் இன மக்களும் வந்து, இந்தக் காடுகளையெல்லாம் திருத்தி நாடாக்கினர்.

இந்த மக்கள், அவர்கள் பிறந்து வாழ்ந்த மண்ணை விட்டுவிட்டு இங்கேவந்து இப்படிக் குடியேறப் பலப்பலக் காரணங்கள் இருந்தன.

தமிழ் மொழியில் ஒரு பாடல் உண்டு.

‘கொடிய மன்னன் இருக்கும் நாட்டில் வசிப்பதைவிட கடும்புலிகள் வாழும் காடு நன்றே’ என்கிறது அப்பாடல்.

ஆந்திர நாட்டிலிருந்து தெலுங்குபேசும் மக்களில் ஒரு பகுதியினர் இந்தக் காட்டுக்குள் வந்து ஒரு கிராமத்தை அமைத்த சோகமான நீண்டகதையை வர்ணிக்கிறேன் – இப்போது இங்கே விருது பெற்ற ‘கோபல்ல புரத்து மக்கள்’ நாவலின் முதல் பாகமான ‘கோபல்ல கிராம’த்தில்.

இப்படியாக அந்த மண்ணிலிருந்து இந்த மண்ணுக்கு குடிபெயர்ந்து வந்த நடப்பை எங்கள் முன்னோர்கள் எங்களுக்கு நாங்கள் குழந்தைப் பருவத்தில் இருந்தபோதே கதைகதையாகச் சொல்லியிருக்கிறார்கள்.

ஆரம்பத்தில் பிறந்த அந்தக் கதைகளை, தாத்தாக்களும் பாட்டிகளும் தங்கள் பேரன் பேத்திகளுக்குச் சொன்னார்கள். அந்தப் பேரன்மாரும் பேத்திமாரும் கிழவர்களாகித் தங்கள் பேரன் பேத்திகளுக்குச் சொன்னார்கள்; இப்படியாக அந்த நடப்புச் சம்பவங்கள் கதையாகி, கதை புராணமாக உருவெடுத்து, மனசைத் தொடும் கதைகளாக் கேட்ககேட்க தெவிட்டாதபடி ஆகிவிட்டது! ‘கோபல்லபுரத்து மக்க’ளின் முதல் பாகமான ‘கோபல்ல கிராம’ நாவலுக்கு அடிப்படையாக இந்த நாட்டுப்புறக் கதைகளே அமைந்தன.

இந்நாவலின் முதல்பாகம், கிழக்கிந்தியக் கம்பெனியார் இங்கே கால்ஊன்றி, ஆட்சியைக் கைப்பற்றியதோடு முடிகிறது.

இரண்டாம் பாகமான ‘கோபல்லபுரத்து மக்களில்’ பிரிட்டிஷ் ஆட்சி வந்ததின் விளைவால் இந்த கிராமத்தில் ஏற்பட்ட மாற்றங்கள், அந்த ஆட்சியை எதிர்ந்து இந்திய மக்கள் கிளர்ந்தெழுந்து போராடிய போராட்டம், அப்போராட்டம் இந்தச் சிறிய கிராம மக்களை எவ்வாறு பாதித்தது என்பதைச் சொல்லுகிறேன்.

இந்தியா சுதந்திரம் பெற்ற கதையோடு இந்நாவல் இப்போதைக்கு முடிவடைகிறது.

சாகித்ய அக்காடமி விருது பெறும் ‘கோபல்லபுரத்து மக்க’ளோடு ‘கோபல்லகிராம’த்தையும் சேர்த்துப் பார்த்தால்தான் ஒரு முழுமை கிடைக்கும்.

நாளைக்கு சாகித்ய அக்காடமி இந்நாவலை மற்ற இந்திய மொழிகளில் மொழிபெயர்க்க விரும்பும்போது இந்த எனது யோசனையையும் மனதில் கொண்டால் சிறப்பாக இருக்கும் என்பதை இங்கே கூற விரும்புகிறேன்.

இந்நாவலைப் பிறமொழிகளில் மொழியாக்கம் செய்வதில் சில சிக்கல்கள் இருப்பதாக ஒரு கருத்து நிலவுகிறது. அதைப் பற்றியும் இரண்டொரு வார்த்தைகள் கூறுவது இங்கே பொருத்தம் எனப்படுகிறது.

பொதுவாக,

வட்டாரமொழி இலக்கியங்களைப் பிறமொழிகளில் மொழியாக்கம் செய்வது என்பது கடினமான காரியமாகவே இருக்கும் என்பதை ஒப்புக்கொள்கிறேன்.

என்றாலும், உலகின் பிற பகுதிகளில் இவைகளை சிரமம் மேற்கொண்டு செய்துகொண்டிருப்பதாகவே அறிகிறேன். நமது நாட்டிலும் அவ்வகை முயற்சியில் சாகித்ய அக்காடமி முனைந்து செயல்படுமானால் வெற்றிகாண இயலும் என்று நம்புகிறேன்.

சாதாரண மேம்போக்கான பொதுமொழி நடையை விட வட்டாரவழக்கு நடைமொழி ஆழமானது. அது மக்களின் ஆன்மாவிலிருந்து உதிப்பது. அதற்கே என்று ஒரு மொழிச்சிறப்பு உண்டு.

வட்டார வழக்குச் சொற்களை சரியாகப் புரிந்துகொள்ள விஸ்தாரமான ஒரு அகராதி தமிழில் இல்லாதது பெரிய்ய குறை. எனது கரிசல் வட்டாரத்துக்கு என்று ஒரு சிறிய அகராதி ஒன்றைத் தமிழில் முதன்முதலாக எனது நண்பர்களின் உதவியோடு செய்து வெளியிட்டியிருக்கிறேன். என்றாலும் எனக்கு அது நிறைவு தருவதாக இல்லை.

இன்னும் திருத்தமாகவும் சிறப்பாகவும் அதை மறுபதிப்பாகக் கொண்டுவரவேண்டும் என்று தோன்றிக்கொண்டேயிருக்கிறது. அதன் இரண்டாவது பதிப்பு வெளிவரும்போது அக்குறைகளைக் களைந்து சீராக்கலாம் என்றிருக்கிறேன்.

சாகித்ய அக்காடமி எனக்கு வழங்கியிருக்கும் இந்த விருது எனக்கு மட்டுமல்ல, கரிசல் இலக்கிய எழுத்தாளர்களுக்குக் எனது மக்களுக்கும் கிடைத்த ஒரு விருதாகவே கருதி ஏற்றுக் கொள்கிறேன்.

இங்கு கூடியுள்ள அனைவருக்கும் எனது பணிவான வணக்கத்தையும் நன்றியயும் கூறி அமர்கிறேன்.

*

தட்டச்சு : ஆபிதீன்
நன்றி : கி. ராஜநாராயணன், அன்னம் பதிப்பகம், ஒரத்தநாடு கார்த்திக் . Download PDF 

« Older entries