முளைத்தெழும் கவிதை – ஃபாயிஸா அலி

‘குடும்பம் ,வீட்டுவேலை,பாடசாலை,பத்திரிகைப்பணி எனப் பரபரப்பாக இயங்குகிற என்போன்ற இல்லத்தரசிகளுக்கெல்லாம் கவிதையென்பது ஒரு பகற்கனவாகவோ இல்லை திணறடிக்கும் பாரச்சுமையாகவோதான் அமைந்து விடுகிறது.ஆனாலுங்கூட வாசிப்பும் தேடலும் சார்ந்த ஒரு தளத்திலேயே பிறந்து வளர்ந்து வாழ்ந்தும் வருவதனால்தானோ என்னவோ ஓய்வெனக் கிடைக்கும் சொற்ப நேரத்தையும் எழுத்து சார்ந்தே இயங்கிடத் தோணுகிறது.’ என்று சொல்லும் சகோதரிஃபாயிஸா அலியின் புதிய கவிதையைப் பதிவிடுகிறேன். அவருடைய மற்ற ஆக்கங்களைப் பார்க்க ’முத்துச் சிப்பி’ தளத்திற்குச் செல்லவும்.

அன்பின் ஃபாயிஸா, உங்கள் தொகுப்பு ஒன்றை சீக்கிரம் அனுப்புங்கள்.  கவிஞர் தாஜைப் பிடித்து விமர்சனம் எழுதவைத்து விடுகிறேன். என்ன ஒரு சிக்கல், அவர் கவிதையொன்றை இங்கே பதிவிடவேண்டி வரும்! பரவாயில்லையா?

***

முளைத்தெழும் கவிதை

கிண்ணியா எஸ். பாயிஸா அலி

பேரழகைச் சுமந்தபடி
சூரியனை நோக்கிச் சீறுது பச்சையம்பு.
நலம் விசாரிக்க வரும் காற்றோடு
கைகுலுக்கியவாறே
குளிர் விருந்தளித்து மகிழும் தளிரிலைகள்.
மஞ்சள் பூவிதழின் மருங்குகளில் வந்தமரும்
வண்டுகளின் ரீங்காரங்களுக்குள்
கண்விழிக்கும் அரும்புகளில்தான்
எத்தனை பரவசம்.
பசிய மென்கொடிக்கயிறுகளில்
தளம்பாது இறங்கி வருகிற வித்தைக்கார அணிலுக்காய்
அடிமரத்தில் வாய்பிளக்கும் சாம்பல்பூனை.
அட, முதல்மரத்தோடுதான் முளைத்திருக்கும்
கவிதையும்.

***

நன்றி : கிண்ணியா எஸ். பாயிஸா அலி | sfmali@kinniyans.net

மிதந்து வரும் நுரைப்பூவாய்…. – கிண்ணியா எஸ். பாயிஸா அலி

சகோதரி எஸ்.பாயிஸா அலியின் புதிய இரண்டு கவிதைகளை பதிவிடுகிறேன், நன்றிகளுடன்.  ‘மூழ்கிடினும் முத்தாய் மேலெழுவோம், தேடலிலும் முழுத்தெளிவை நாமடைவோம்’ என்று சொல்லும் இவரின் வலைத்தளம் : http://faiza.kinniya.net/ 

***

காலைநேரம் சாலையோரம்

என்னமாய் பரபரக்குது
இந்த சாலையோரம்  காலைநேரம்
தொடராயும் நெருங்கியும்
ஊர்ந்து திரிபவை
புகைத்து மகிழ்கிற இளவட்ட எறும்புகளோ.
முள்ளந்தண்டை வளைக்கிற
மூட்டைகளோடு நடைபயில்பவை
கால் முளைத்த வெண்பஞ்சு மேகங்களோ.
சதாவும் அவசரங்களோடு அலைகிற சாரதிகளை
கிளறிக் கிளறி வறுக்கிறாரோ
பச்சை ஏப்ரன் சுற்றிய சீருடை சமையற்காரர்.
வதங்குகிற வெங்காய மணமும்
கொத்துரொட்டியின் கொத்தோசையுமாய்
சுற்று மண்டல சுவைநரம்புகளை
சிலிர்ப்பூட்ட முனைகிறதோ
மருங்குகளின் சிற்றுண்டிச் சாலைகள் .
பின்னிரவு நாய்கள்
கலைத்துப் போட்ட
தொட்டிக் குப்பைகளை  தின்னத் தொடங்குதோ
குப்பை வண்டிகள்.
உயர்ரகங்களில் பளீரிடும் விற்பனைத் தளங்களை ….
தெம்பிலிக் குலைகளை வரிசையிட்டும்
பூக்களும் பொத்தான்களும் நிறைந்த
சின்னச்சின்னச் சட்டைகளைக் கொழுவியபடியுமாய்
விற்பனையில் முந்திவிடுகிறார்களோ
நடைபாதை வியாபாரிகள்.
குளியலறை நீர்க்குழாயை…
சமைத்த வாயு அடுப்பை….
கொஞ்சமாய் பிரச்சனைப் படுத்துகிற முன்கதவை ….
சரியாக மூடியிருப்பேனோ வெனும் சுழல்வினூடே…
அவித்த மரவெள்ளித் துண்டாய்
நசிந்து வெளிரப் பண்ணவெனவே
விரைந்து வருகிற பேரூந்தை எதிர் பார்த்த படிக்கு ..
நானும்
இதே சாலையோரம் காலைநேரம்.

***

மிதந்து வரும் நுரைப்பூவாய்…..

போவதா விடுவதாயென
இடைவிடாதடித்த எண்ண அலைகளினூடே
சரி போவோமெனக் கரையொதுங்குது மனசு.
தலைமையுரை
அதிதியுரை
ஆய்வுரை
நயவுரை
நன்றியுரையென விரிகிற உரையலைகளினூடே
மிதந்து வருகிற நுரைப்பூவாய்
நான் மட்டுமே காணுகிற உன்னோடு
பேச விரும்புதது
எல்லாமும் முடிந்து நூலோடு வீடேகிய வேளையிலும் …
அங்கே தொடங்கிய சிடுப்பான சிணுங்கலை
இங்கேயும் தொடர்கிற சின்னவளுக்கு
ஆடைமாற்றுகிற வேளையிலுங் கூட
ரசித்தவை
பிடித்தவை
முகம் சுழித்தவையென்றாகிய
ஒருநூறு சேதிகளையும்
பகிர்ந்திடவே ஆதங்கிக்குதது.
நிலா, நட்சத்திரங்களின்
சன்னமான குறட்டையொலிகள் தவிர
மற்றெல்லாமுமே மௌனித்துக் கிடக்கிற
இந்நிசியின் நிசப்தங்களுக்குள்
தற்செயலாய் விழித்துக் கொண்டு
தனிமைப் படுகையிலே …
அட  சற்றுமுன்னமாவது பேசியிருக்கலாமோவென
மறுபடியும் முணுமுணுக்கத் தொடங்குதது
மிக அருகிருந்தும் ….
ஒரு புன்னகைதானும்
பூக்க மறுக்கும் உன்னோடு.

***

நன்றி : கிண்ணியா எஸ். பாயிஸா அலி

மின்னஞ்சல் : sfmali@kinniyans.net