இல் (சஃபர் கதை) – கிண்ணியா இர்பான்

முகில்‘ இதழிலிருந்து (1995) , நன்றியுடன்…
*

ஆறு மாதமாகியும் சவூதி போன கணவரிடமிருந்து பணமும் இல்லை; கடிதமும் இல்லை…

இனி எதிர்பார்த்தது போதும் என்ற கோபக் கவலையுடன், தனக்கு ஏற்கனவே அறிமுகமான ரகுவை நினைத்துக்கொண்டாள் சஹானா. கடிதம் ஒன்றின் மூலம் சந்திக்கவும் தயாரானாள்.

அழகுக்கோ அறிவுக்கோ வசதிக்கோ பஞ்சமற்ற வாலிபன் ரகு. சஹானாவின் வீட்டிலிருந்து சில வீடுகள் கழிந்தாற்போல் அவன் வீடு. சஹானாவின் கணவரோடு ஆபீஸில் வேலை பார்த்தவன். இப்போது அதேஆபீஸில் மேனேஜர். பத்துக்குப் பிறகுதான் வீட்டிலிருந்து போவான். அதற்குள் –

‘..என் நிலை! .. நாலு வயசு மகன் மாத்திரம்தான்.. என்றாலும்.. கணவருக்கு இது தெரிய வராது! எப்படியாவது ரகு ஆபீஸுக்குப் போகமுந்தி இந்த லெட்டரக் குடுத்திடணும்..’

ரகுவின் வீடு நோக்கி நடந்தாள் சஹானா.

‘..ஒருவேளை ரகு கைவிரித்தால்?…’

நடந்தாள் கடிதத்துடன். ரகுவின் வீடு. மனக்குழப்பத்துடன் வெளியே நின்றாள்.

‘..என்னடா, பொறுமையில்லாத பெண்ணாயிருக்கிறாளே என்று கூட ரகு நினைக்கக்கூடும்! என்ன செய்வது? எப்படி இருந்தாலும் புருஷனில்லாத ஆறுமாச காலம் இருக்கிற பெண்…எந்த வசதியுமில்லாம தனியா எப்பிடி…? இது என்க்கு மட்டுந்தானா?… இதொண்ணும் பாவமில்லையே!…’

கையிலிருந்த கடிதத்தைப் பார்த்தாள் சஹானா. ‘ரகு இதற்கு உடனேயே ஒரு பதில் தருவாரா, இல்ல…?’

தயக்கம் தொடர்ந்தது.

‘கட்டியவருக்குச் செய்யும் முதல் அவமரியாதையோ?.. தெரிஞ்ச இவரிடம் வருவதைத் தவிர எனக்கு வேற் வழியுமில்லையே!.. வாயால கேட்கவும் வெட்கமாக இருக்கு!.. சரி, யாருக்குத் தெரியப் போகுது? ஆண்டவனே துணை!…’

வீதியை நோக்கிய சஹானா பிரமித்துப் போனாள்.

‘வீட்டில பார்த்தன். இங்க இருக்கிறீங்க?.. இதிலொரு கெயழுத்துப் போடுங்க~” என்ற தபால்காரர் கடிதத்தை ரஸீதோடு நீட்டினார்.

உடைத்துப் பார்த்தாள்.

முப்பதாயிறம் ரூபாவுக்கான ட்றாஃப்டுடன் கடிதம்.

ரகுவுக்கான கைமாற்றுக் கடிதம் கசங்கியது. திரும்பி நடந்தாள். இன்னும் ஓர் ஆறு மாதம் சென்றாலும் பரவாயில்லை – கணவனின் அடுத்த கடிதத்துக்கு! ரகுவும் வேண்டாம்…

*
நன்றி : கிண்ணியா இர்பான் , அல் அஸூமத் ,  நூலகம்