மாம்பழத்துக்குள்ளே யிருந்து மயிராண்டி கிளம்பினானாம்

‘ என் தாய் இன்றுதான் என்னை பிறப்பித்தாள். என் தாய்க்கு துஆ கேளுங்கள்!’ என்று குறுஞ்செய்தி இப்போதுதான் வந்தது. அனுப்பியது யாராக இருக்கும்? ஆமாம், நம்ம ஜஃபருல்லா நானாவேதான்.  படித்துவிட்டு சிரித்துக் கொண்டிருக்கும்போது நினைவில் வந்தது ஒரு ஹாஸ்ய மஞ்சரி அஃது பினாங்கு S.P.S.K.காதிறு சாகிபவர்களால் இயற்றி, M.C.முகம்மது காசீமவர்களது “வச்சிர குயிலி” அச்சியந்திர சாலையிற் பதிப்பிக்கப் பட்டது. 1898 ம் வருடம்.  அதைப் பதிகிறேன்.

மதுரை தமிழ் இலக்கிய மின் தொகுப்புத் திட்டத்திலிருந்து, நன்றிகளுடன்..

*

தம்பி என்று கூப்பிட்டதற்கு மயிராண்டி என்று முடித்தது

S.P.S.K.காதிறு சாகிபு

தம்பி – தம்பியானால் நாராதோ?
நாரக்கருவாடோ கருவாடானால் காய்ச்சாளோ?
காய்ச்சக் கொல்லனோ? கொல்லனானால் கொட்டானோ?
கொட்டக் கோவிலோ? கோவிலானால் கும்பிடாளோ?
கும்பிடராஜாவோ? ராஜாவானால் ஏவானோ?
ஏவப்பல்லியோ? பல்லியானால் பதுங்காதோ?
பதுங்கக்கள்ளனோ? கள்ளனானால் ஓடானோ?
ஓடக் காவேரியோ? காவேரியானால் கதறாதோ?
கதற வெள்ளாடோ? வெள்ளாடானால் மேயாதோ?
மேயக்குச்சு வீடோ? குச்சுவீடென்றால் ஒழுகாதோ?
ஒழுக ஓட்டைச்சட்டியோ? ஓட்டைச்சட்டியானால் உடையாதோ?
உடையத்தேங்காயோ? தேங்காயானால் தித்திக்காதோ?
தித்திக்க மாம்பழமோ?
மாம்பழத்துக்குள்ளே யிருந்து மயிராண்டி கிளம்பினானாம்.

*

மாம்பழம் நாரு உள்ளது என்று அர்த்தம்!  ‘ஹாஸ்யம்’ அந்தகாலத்தில் இப்படித்தான் இருந்திருக்கிறது! காதிறு சாஹிபு அவர்களின் மஞ்சரியிலுள்ள மணியமுதல் மரகதக்கல் பரியந்தம் கேள்வியும் ஜவாப்பும் , நாட்கடோரும் நடைபெரும் ஸெஷன்கேஸ் , ஐந்துவிரல்களின் சண்டையும் அதின் தீர்ப்பும் , பன்னிரண்டு மாதங்களைப் பற்றிய கதை , சந்தியாவந்தனக் கதை , கணவனை விட்டுப் பரபுருஷனைத் தேடி அவமானமடைந்த கதை , பிரற்மேற் குற்ற முறைத்து ஏமாந்தவர்களின் கதை , சூரிய சந்திர வாயுக்கள் விருந்துண்ட கதைகளை இங்கே சென்று படியுங்கள். கதைகளை விட சுவாரஸ்யமாக எனக்குப் பட்டது அதிலிருந்த இந்த விளம்பரம்:

ஆங்கிலேய முஹம்மதிய வித்தியா சாலை

இப்பெயர் புனைந்த ஆங்கிலேயப் பாட சாலையொன்று நம் முஸ்லீம் பிள்ளைகள் ஆங்கிலேயக் கல்வி கற்றுத் தேர வேண்டியும், முஸ்லிம்களுக்கோர் ஆங்கிலேயப் பாடசாலை உண்டென மற்ற மதத்தவர்கள் மதிக்கவும், 1898ம் வருடம் மே மாதம் 1 ஆம் தேதி முதல் பினாங்கு சோலியா ஸ்திரீட் 130ம் நம்பர் “டைமன் சூபிலி” மூன்றாவது மெத்தையிற் திறந்திருக்கிறது. இப் பாடசாலைக்காக ஆங்கிலேயக் கல்விகேள்விகளிற் தேர்ந்த Mr.தைரியல் நாயகரவர்களை ஹேட்மாஸ்டராயும் கல்கத்தா பிரவேசப் பரிட்சையிற்தேரிய Mr.வைரமுத்று என்பவரை உபாத்தியாயராகவும் நியமித்திருக்கின்றன. கவர்ன்மென்ட் ஸ்கூல்களைப் போல் நான்கு வகுப்பு வைத்து பிள்ளைகளை சோதனை பார்க்கப்படும். ஆகையால் ஒவ்வொரு முஸ்லிம்களும் தங்கள் தங்கள் பிள்ளைகளை இப்பாடசாலைக்கனுப்பி முஸ்லிம் பாடசாலை என்ற பெயர் வளர்ந்தோங்கச் செய்வீர்களென்று மிகவும் கேட்டுக்கொள்கிறேன். சம்பள விகிதம் முதலாமிரண்டாம் வகுப்புகளுக்கு மாதம் 1க்கு காசு 50 மூன்றாம் வகுப்புக்கு காசு 75 நான்காம் வகுப்புக்கு டாலர் 1-00.

Penang, 25-4-1898
இங்ஙனம் / M.G.Mohammad casim,Manager.