ஹாஜியார்கள் திருந்துவதேயில்லை…! எழுதித்தான் போக்க வேண்டும் சுமையை. முழுச் சோம்பேறியான நான் என் பங்குக்கு ‘வாழைப்பழம்’ எழுதினேன். அதைவிட சிறப்பாகவும் சுருக்கமாகவும் , ‘குமர்’ (கல்யாணமாகாத கன்னிப் பெண்) விஷயத்தை எடுத்துக்கொண்டு , களந்தை பீர் முஹம்மது இம்மாத தீராநதியில் அருமையான சிறுகதை எழுதியிருக்கிறார். பாராட்டுக்கள்.
ஜபருல்லா நானா, ‘இறைவா! / இரவு ஒரு கனவு கண்டேன் – ஹஜ்ஜூக்குப் போவதாக / ஷைத்தானுக்கு கல்லெறிந்தேன் / திடீரேன ஒரு உருவம் தெரிந்தது / ‘நான்தான் ஷைத்தான்… / என்னைக் கல்லெடுத்து அடிப்பதற்காக இவ்வளவு தூரம் வரவேண்டுமா? / உன்மேலேயே நீ கல்லை எறிந்து கொள்ளலாமே’ என்றது / இறைவா ! என்னை என் ஷைத்தானிடமிருந்து காப்பாற்று!’ என்று சென்றவாரம் ஒரு ‘கவிதை’ சொன்னார் . ‘மானுட வசந்தம்’ புகழ் ஹபீப் முஹம்மது , ‘ ஷைத்தானுக்கு கல்லெறிகிறேன் என்று அங்கே போய் ,கல்லை விட்டுவிட்டு ஷைத்தானை கூட்டிக்கொண்டு வந்துவிடுகிறார்கள்’ என்று சொன்ன கிண்டலின் வேறுவடிவம்தான் அந்தக் கவிதை.
இறைவா! என்னை ஜபருல்லாவின் கவிதைகளிலிருந்து காப்பாற்று!
இனி, ‘யாசகம்’..!
– ஆபிதீன் –

வாப்பா அன்று உற்சாகமாய் வந்தார். முகத்தில் ஒரு மலர்ச்சி. அவர் செருப்பைக் கழற்றிப்போடும்போதே அந்தத் துள்ளல் தெரிந்தது. பொதுவாகவே வியாபாரம் இப்போதெல்லாம் நன்றாக இருப்பதாக அவர் சொல்வதை தவ்லத் கேட்டிருக்கிறாள். வாங்கிவந்த காய்கறிகள் அன்றன்றைக்கே விற்றுவிட்டால் நல்ல வியாபாரம்தானே! எனவே, கடையை இன்னும் கொஞ்சம் நன்றாக வைத்தால் வியாபாரத்தைப் பெருக்கிவிடலாம் என்று வாப்பா சொல்வதும் தவ்லத்துக்குத் தெரியும். அதற்கான வாய்ப்புகள் ஏதாவது கிடைத்திருக்கும். மேலும் தன் நிக்காஹ் பற்றி இதுவரை வாப்பா கொண்டிருந்த கவலையும் முக்கியமானது; வாப்பாவின் உற்சாகத்துக்குக் காரணம் அதுதானோ என்று தவ்லத் எண்ணினாள். தவ்லத்தை எவ்வளவு சீக்கிரம் தள்ளிவிடுகிறோமோ, அவ்வளவு வேகத்திற்கு அவள் தங்கை காமிலாவையும் தள்ளிவிடலாம். வாப்பாவின் உற்சாகத்திற்குக் காரணங்கள் இருக்கும்தானே! ஏதாவது ஒரு வரனைப் பற்றிய தகவல்களுடன் வாப்பா வீட்டிற்குள் வந்திருக்கலாம். அவள் சுவாசத்தில் ஒரு நறுமணம் கமழ்ந்தது. வாப்பாவாகத்தான் சொல்லவேண்டும் எதுவாக இருந்தாலும்; அல்லது ம்மா வழியாக வரவேண்டும்; அவளாக எதுவும் கேட்டறியமாட்டாள். துணிமணிகளைத் துவைப்பதற்கு ம்மா வாய்க்கால் போயிருக்கிறாள். சீக்கிரம் வந்து தொலையமாட்டாளோ என்றிருந்தது.
வாப்பா ருசித்துச் சாப்பிட்டார். வேறு எங்கெல்லாமோ பார்வைகளைத் திருப்பி, திருப்பிய இடமெல்லாம் பார்வையை அப்படியே லயிக்கவிட்டு, வாய்க்குள் போன உணவைப் பதமாக மென்று கொண்டிருந்தார். இது புது வாப்பா. அவர் இன்று சாப்பிடுவது ரொம்ப அழகாக இருந்தது தவ்லத்துக்கு. சாப்பிடும்போது வாப்பா ஏதாவது ஒன்றிரண்டு வார்த்தைகள் சொல்வதுண்டு; இன்று அதுவுமில்லை.
அவளும் அதற்கு மாறு நேராமல் பார்த்துக் கொண்டாள். வாப்பாவின் உன்னிப்பான பார்வையைக் கவனித்தால், அவர் கண்டுகொண்டிருக்கும் காட்சிகள் சாதாரண தூரத்திலில்லை. சாப்பிட்டபின் விரல்களைச் சுத்தமாக சூப்பினார். கையில் எச்சில் என்று சொல்ல எதுவுமில்லை. உடன் சொம்பிலுள்ள தண்ணீரை அவர் கையில் தவ்லத் ஊற்றவும் அவர் கை கழுவிக் கொண்டார். காலடிகளையும் அதிர்வில்லாமல் எடுத்து வைத்து நகர்ந்தாள் அவள். ‘‘தவ்லத்’’ என்றார். அந்தச் சமயத்தில் அந்தக் குரல் வினோதமாக ஒலித்தது. அது அவரின் குரலாக இல்லை.
‘‘நான் இந்த வருசம் ஹஜ்ஜுக்கு போறதா இருக்கேன்மா’’ மெதுவாக, நிறுத்தி நிறுத்தி இதைச் சொன்னார். மார்க்கக் கடமையை வாப்பா நிறைவேற்றப் போகிறார். வாப்பாவின் உற்சாகம் சரியே. அவருடைய இலயிப்பான தூரப் பார்வையில் இதுவரையிலும் மக்காவும் மதீனாவும்தான் தென்பட்டிருக்கின்றன. அதைப் புரிந்துகொண்ட அடுத்தகணம்தான், தவ்லத் உணர்ந்தாள் தனக்கான மணவாளன் அந்தப்
பார்வையில் இல்லையென்பதை. இப்போது அவள் மட்டுமே ஒரு குதிரையில் மெதுவாகச் செல்கிறாள். மறுபடியும் மரங்கள் மறைந்த ஒரு பொட்டல் வெளி. பரவாயில்லை. முதலில் வாப்பாவின் ஆசை நிறைவேறட்டும். ஹஜ்ஜுக்குப் போவோர் வருவோரைப் பற்றியெல்லாம் வாப்பாவுக்கு நிறைய பிரேமைகள் உண்டு. அப்படிச்செல்லும் ஒவ்வொருவரையும் வாப்பா புகழ்ந்து பேசுவார். தங்களின் பல கஷ்டங்களையும் ஒதுக்கிவைத்துவிட்டுத் துணிச்சலாக அவர்கள் போவதே நல்ல பக்தியின் அடையாளம் என்று வாப்பா ஒவ்வொருமுறையும் சொன்னார். வாப்பாவின் இந்தப் பயணம் பற்றி யார் புகழ்பாடுவார்களோ? இப்போது நினைத்தாலே போதும்,
ஹஜ்ஜுக்குப் புறப்பட்டு விடுகிறார்கள். அடுத்த தெரு மொன்னா முகம்மது இந்த வருசம் மூன்றாவது முறையாகவும் ஹஜ் போவதாக ஊரில் பரவலாகப் பேச்சு அடிபடுகிறது.
‘‘ஹஜ்ஜுக்கு போறதுல இவ்வளவு ஆர்வத்த காட்டுற மனுஷன், அப்படியே ஜகாத்து கொடுக்கிறதிலேயும் ஆர்வம் காட்டணும்ல. ஒத்த ரூபாய்க் கூட கண்ணுலயே காட்டுறதில்ல’’ என்ற ஏச்சுக்களும் கூடவே வந்துவிட்டன. போனவருசம் முத்தலிப் ஹஜ்ஜுக்குப் போனான்.
‘‘என் கண் காணப் பொறந்த பையன். மூக்கை உறிஞ்சிக்கிட்டு அலைஞ்சான். இப்ப பாரேன் ஹஜ்ஜுக்குப் புறப்பட்டுட்டான்’’ என்று வாப்பா
அப்போது சொன்னார். வாப்பா அதை சந்தோசத்தில் சொன்னாரா, ஆற்றாமையில் சொன்னாரா? ஆனால் முத்தலிப் பேங்க உத்யோகத்தில் இருக்கிறவர். வாப்பாவுக்கு என்ன உண்டு? மனம் சற்றே படபடப்பானது. காய்கறி வியாபாரத்திலுள்ள இலாபத்தை எடுத்து பேங்கில் போட்டிருப்பாரோ? அப்படி அவர் எதையாவது சேர்த்து வைத்திருந்தால் அது தனக்கும், தன் தங்கைக்குமான திருமணச் செலவுக்காகத்தானே இருந்திருக்க வேண்டும்? ‘நான் தனியாளா கெடந்து கஷ்டப்படுகிறேனே’ என்று வாப்பா அவ்வப்போது சொல்வது புகாரி காக்காவை மனசில் நினைத்துத்தான். அவன் மனம் கொண்டால் கடைக்குப் போவான்; இல்லையென்றால் ஊர் சுற்றுவான்.
போக்கிரிகள்தான் அவனுக்கு உற்ற துணைவர்கள். வாப்பா வீட்டுக்கு வந்தால் அவனைப் பற்றி வசைபாடுவார். அவனைப் பற்றி எப்போதும் ஒரு பிராது வைத்திருப்பார். கடைக்கு வருவதுபோல் வந்தான், பணத்தை எடுத்துக் கொண்டு போய்விட்டான். வாப்பா சொல்வதை ம்மா காது கொடுத்துக் கேட்பதுபோலவும் இருக்கும்; கேளாததுபோலவும் இருக்கும்.
இதுவரையிலும் கைக்கும் வாய்க்கும் மட்டுமே சரியாக இருக்கின்ற வருமானம். வாப்பா எப்போதும் நல்ல சாப்பாடு போட்டிருக்கின்றார். வேறு எந்தவிதமான வசதிகளும் பெருகிடவில்லை. டெலிவிசனும் டெலிபோனும் அத்தியாவசியம் என்று ஆகிவிட்ட பின்புதான் இந்த வீட்டிற்கு வந்தன. இப்படியிருக்கும்போது வாப்பாவின் ஹஜ்ஜீப் பயணம் எப்படி நடக்கப்போகின்றது? வியாபாரம் நன்றாக இப்போது சூடு பிடித்து வருகின்றது என்று வாப்பா சொல்லி இருபது நாள்கள்கூட ஆகியிருக்கவில்லை. ஒரு பயணத்துக்குத் தேவையான பணம் இதற்குள் சேர்ந்திருக்காதே என்று தவ்லத்துக்கு உறைத்ததும் மனம் குடைச்சலாகிவிட்டது. ம்மா வாய்க்காலில் இருந்து வந்ததும் மெதுவாக அவள் காதில் போட்டாள் விஷயத்தை. நவீசாம்மாவுக்கு இது அதிர்ச்சியான அதிர்ச்சி. ஹஜ்ஜுக்குச் செல்லும் இந்த ஆசை அவளுக்கும் உண்டு. ஆனால் அது தங்களின் வாழ்க்கையில் நடக்க முடியாதது என்று உணர்ந்து என்றோ விலக்கிக்கொண்டாள்.
மனைவியை அவர் அழைத்தார். அப்போது வாப்பா நிலைப்படி அருகில் நின்று கொண்டிருந்தார். ம்மாவைத் தனியாக அழைத்துப்பேசும் வழக்கம் வாப்பாவுக்குக் கிடையாது. ம்மா நின்ற இடத்திற்கு, உட்கார்ந்த இடத்திற்கு வந்து பேசுவதே வாப்பாவின் வழக்கம். ம்மா அவ்விடமாய்ப் போகும்போது ஈர்க்குச்சியால் பற்களைக் குத்தியவராகப் பார்வையைத் தொலைதூரத்திற்கும்தான் வைத்துக் கொண்டிருந்தார். ‘‘என்ன?’’ என்ற ம்மாவின் குரலில் சின்னப் பதற்றம்!
‘‘ஒக்காரு இப்படி!’’
‘‘ம்… உக்காந்துட்டேன்.’’
‘‘இந்த வருசம் ஹஜ்ஜுக்கு போயிட்டு வந்துரலாம்னு இருக்கேன்.’’
அதிரடியாய்ச் சொல்லிவிட்டார். நபீசாம்மாவுக்குத் தூக்கிவாரிப் போட்டது. யா அல்லா! இது என்ன சோதனை?
‘‘என்ன யோசிக்கறே?’’
அப்போதும் பேச முடியாமல் போய்விட்டது அவளுக்கு. வளர்ந்த குமர்கள் இரண்டு வீட்டில்; பொறுப்பற்ற பையன் ஒருவன் தெருவில். தன் ஆசையை மூட்டை கட்டிவிட்ட மனுஷிக்கு, கணவனின் ஆசையை எப்படித் தடை சொல்வது என்று புரியவில்லை.
‘‘நெஜமாத்தான் சொல்றீங்களா?’’
‘‘இதுல நெஜம் வேற பொய் வேறென்னு இருக்கா?’’
‘‘அப்படியில்ல. ஆனா ரெண்டு குமருங்க வீட்டுல இருக்குங்களே!’’
சூடேறிவிட்டது அவருக்கு. ‘‘நான் அதையெல்லாம் யோசிக்காமயா இருப்பேன்? என்னமோ உனக்கு மட்டும்தான் அவங்க மேல அக்கறை இருக்குற மாதிரி பேசுற!’’
‘‘இருந்தாலும்… குமருங்க விசயமாச்சே! எந்த நிமிசமும் ஒரு வரன கொண்டு வந்து ஆண்டவன் இறக்கிவிட்டுருவான…’’
‘‘ஆங்… ஆண்டவன்தான கொண்டுவந்து இறக்கி விடுவான்ங்கிறே. நானும் அதே ஆண்டவன் காரியமாத்தான் பேசுறேன். அவனுக்கு எப்ப எத செய்யணும்னு தெரியாதா?’’
‘‘இருந்தாலும் பாருங்க. எங்கினயோ ஒண்ணு… எனக்கு அத சரியா சொல்ல வரமாட்டேங்கு…’’
‘‘சரியா இருந்தாத்தானே சொல்ல வர்றதுக்கு! ஒண்ணும் யோசிக்காத… ஊர பாரு. திரும்புற தெசையெல்லாம் ஹாஜிமாரா இருக்காங்க.
நானும் அப்படி ஆவவேண்டாமா?’’
மறுபடியும் வாப்பாவின் பார்வை நிலைகொண்டது. ஊரே ஹாஜிமார்களால் நிரம்பி வழிவதை நபீசாம்மாவும் தவ்லத்தும் உணராமலில்லை. முன்பெல்லாம் ஹாஜிமார்கள் என்றாலே துண்டாகத் தெரியும். ஐம்பது வயது, அறுபது வயதுக்கு மேலே வெள்ளைக் கைலியும், தலையிலிருந்து நீங்காத தொப்பியும், நீண்ட வெள்ளைத்தாடியும் காலைத்தொடும் ஜிப்பாவுமாக வருபவர் நிச்சயம் ஒரு ஹாஜியாராகத்தான் இருப்பார். இப்போது பேண்ட், ஷர்ட் போட்டு தொப்பியில்லாமல் தாடி மட்டும் வைத்துக்கொண்டு சரசரவென்று போகிறவர்கள் எல்லோருமே ஹாஜிமார்களாகத்தான் இருக்கிறார்கள். இவர்கள் பெருகியிருக்கிற அளவுக்குப் பிரச்னைகளும் பெருகித்தான் இருக்கின்றன. சொத்துத் தகராறுகளில் இரண்டு பக்கமும் இரண்டிரண்டு ஹாஜிமார்களோ, மும்மூன்று ஹாஜிமார்களோ இருக்கிறார்கள். ஒரு ஹாஜியார் வீட்டுக்கு மகள் திரும்புகிறாள். _இன்னொரு ஹாஜியாரால் தலாக் சொல்லப்பட்டு! வாய்தா, வழக்கு என்று பஸ்ஸில் ஏறிப்போகும்போதே அடிதடியாகிவிட்டது என்று மேலும் ஒரு வழக்கு! இரத்தக் கறையும் கிழிந்த சட்டையுமாக ஊர் திரும்பும் ஹாஜிமார்கள். இதையெல்லாம் புகாரி வந்து அவ்வப்போது வீட்டில் சொல்லிக் கொண்டிருப்பான். ‘‘வாய மூடுல’’ என்பது ம்மாவின் பதிலடியாக இருக்கும். ஹாஜியார்கள் மீது காக்காவுக்கு ஏன் இப்படியொரு பொறாமை என்று தவ்லத்துக்கும் எரிச்சலாக இருக்கும்.
‘‘இவங்களயெல்லாம் யாரு ஹஜ்ஜுக்குப் போகச் சொன்னாங்க?’’ என்பது புகாரி காக்காவின் அடுத்த கேள்வி. வீட்டிற்குள் புகாரிமேல் மனக்குறைகள் இப்படியே உருவாகி நீண்டன.
ஆனால் இப்போது புகாரி காக்காவின் பேச்சுக்குரல் கேட்கின்றது. அவன் வீட்டில் இல்லாதபோதும். ‘சரி’ என்கிற செயலின்மீது ‘தப்பு’ என்கிற சொல் படிகின்றது. அன்றாடம் வரவு_செலவை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிற நமக்கு ஹஜ் ஒரு கடமையாக மாறுகிறதா என்று தவ்லத்தின் மனம் கேட்கிறது. ஆனால் இந்தக் கேள்வி வந்ததுமே அவள் படபடத்துவிட்டாள். தன் மனசுக்குள் இந்தக் கேள்வி எழுவதை
அவள் விரும்பவில்லை. மார்க்கக் கடமைகளிலிருந்து தன்னை விலக்கிச் செல்கிற காற்றிலிருந்து அவள் விலகப்பார்க்கிறாள். காற்றின் வலிமை தீரவில்லை. பள்ளிக்கூடம் சென்றிருக்கிற வயதுக்கு வந்த தங்கையை நினைத்து மருவிக் கொண்டிருந்த மனசு, உண்மையில் தன்னை நினைத்துதான் மருவுகிறது என்பதும் லேசாகப் புரிகிறது. ம்மா இவ்வளவுக்குத் திணறி நிற்கிறாளே! அதுதான் என்ன?
எந்த விசயமானாலும் வாப்பாவோ ம்மாவோ பேச ஆரம்பித்தால் முழுதுமாகக் கலந்துறவாடுவார்கள். கடைசி முடிவுக்கு வந்து விடுவார்கள். ஆனால் இப்போது பேச்சே இல்லை. ம்மா நிலைத்து நிற்கிறாள். வாப்பாவும் ‘என்ன பேசாம நிக்குற?’ என்று கேட்கவில்லை.
புகாரி காக்கா வீட்டிற்கு வருவதை தவ்லத் எதிர்பார்த்தாள். அவனுக்கென்று பசிநேரம் எதுவும் கிடையாது. வீட்டிற்கு வருகிற நேரத்தில்
சாப்பாட்டை விழுங்கிவிடுவான். சோறு மட்டும் தயாராகி காய்கறிகள் தயாராகயில்லை என்றாலும் ரசம் போட்டுப் பிசைந்து, ஊறுகாயைத் தொட்டுச் சாப்பிட்டு வெளியே கிளம்பிவிடுகிற இனம். நேரங்கெட்ட நேரத்திற்கு அவன் வந்தாலும் தவ்லத்துக்கு இம்சைகள் இல்லாமல் இருக்கும். அவனே கைப்பட எல்லாவற்றையும் வைத்துச் சாப்பிட்டுவிட்டுப் போய்விடுவான். என்றாலும் அவன்மீது பிரியங்களற்றுப் போய்விட்டது எல்லோருக்கும். அவன் பேச்சுத்தான் வீட்டில் மரியாதையைக் குறைத்தது. தவ்லத்துக்கும் அவன்மீது வெறுப்பு உண்டு.
அவன் பேசுவது எல்லாமே ஏறுக்கு மாறானது. ஆனால் இப்போது அவன் பேச்சில் ஏதோ நியாயங்கள் இருந்திருக்குமோ என்று யோசிக்கலானாள். வாப்பாவின் ஹஜ்பயணம் பற்றி அறியவரும்போது நிச்சயம் கேலி செய்வான்; அல்லது தகராறு செய்வான். அப்போது தான் யார் பக்கம் இருக்கப் போகிறோம்? ‘இரண்டு மனம் வேண்டும்’ பாட்டினை இன்று காலையில் கேட்டபோது, அதில் இன்று மட்டுமே இதுவரையிலும் இல்லாத ஓர் அதிர்வை உணர்ந்திருந்தாள். அந்தப் பாட்டிற்குள் ஏதோ விடை இருக்குமாப்போல், அவள் மனம் அந்தப் பாட்டிற்குத் திரும்பிச் சென்றது.
ம்மா சாப்பிடும் நோக்கில் அடுக்களை வர்தாள். தட்டைக் கழுவும்போது ஏதோ யோசனையாக அதை அப்படியே வைத்துவிட்டு அவர் இருக்கும் இடம் நோக்கிப் போனாள். ‘‘அப்ப பணத்துக்கு என்ன செய்யப் போறீங்க?’’
இதைக் கேட்டதும் அவர் தாடியைத் தடவினார். ‘‘கடனா பணம் கேட்டுப் பாத்தேன். ஒண்ணும் நடக்கல. கடைய எம்பேர்ல எழுதித் தந்தீங்கன்னா பணம் தர்ரேன்னு சொல்றான் எலக்ட்ரிக் கடை மூசா. வேற எங்கேயும் கடன் கெடைக்கலேன்னா அப்படித்தான் செய்யணும்!’’
‘‘யா ரஹ்மானே! நீங்க சொல்றது ஆண்டவனுக்கே பொறுக்காதே!’’ என்று அலறினாள் நபீசாம்மா. தவ்லத்துக்கு மூச்சு முட்டிவிட்டது.
அவள் சட்டென்று விலகிப்போய் அழ ஆரம்பித்துவிட்டாள். புகாரி காக்கா உடனே இங்கே வந்து குதிக்க வேண்டும் என்று அங்குமிங்குமாக அழுத கண்ணீரோடு பரபரத்துப் பார்த்தாள்.
‘‘ஏன் இப்படி அலர்றே?’’ என்று அவரின் குரல் உயர்ந்தது.
‘‘அதையும் கொடுத்துட்டா அப்புறம் என்ன செய்றது?’’
‘‘நான் மீட்டிருவேன். எப்படியும் மீட்டிருவேன். கடைய மீட்டாம நான் ஓயமாட்டேன்!’’
‘‘அப்ப குமருங்க காரியம்? இரண்டு குமருங்க….’’ அவருக்கு இரண்டு விரல்களையும் நீட்டிக்காட்டி நபீசாம்மாவும் அழலானாள்.
‘‘ஏய் வாயை மூடு’’ கடுமையாக ஒலித்த குரலில் வீடு அதிர்ந்தது.
‘‘என் புள்ளங்கள நான் காப்பாத்துவேன்; எப்படியும் காப்பாத்துவேன். இந்த பார்… இந்த பார்… தெருவுல நின்று பிச்சையெடுத்தாவது … இப்படி பிச்சையெடுப்பேன்’’ என்று தன் தோளில் கிடந்த துண்டை, யாசகம் செய்பவனைப் போல நடித்து, நீட்டிக் காட்டிச் சொன்னார்.
‘‘வெள்ளிக்கிழமை ஜும்மாவுல எத்தனபேரு கையநீட்டி கேட்டிக்கிட்டிருக்காங்க. அதமாதிரி நானும் போவேன் ஒவ்வொரு பள்ளிவாசலா… யாசகம் கேப்பேன். ஒவ்வொரு நல்லடியார்கிட்டேயும் கேப்பேன்… இப்படி இப்படி’’ என்று அவர் துண்டை உதறி உதறிக் காட்டக் காட்ட, தவ்லத் வாப்பாவின் உச்சக்கட்டக் குரலைக் கேட்டு விரைந்து நகர்ந்து வந்து அவரைப் பார்த்தாள். தூணை இறுகப்பற்றி நின்றாள். அவர் அறிந்த எல்லாப் பள்ளிவாசல்களின் முன்னாலும் ஒவ்வொரு வெள்ளிக்கிழமை தொழுகை நேரத்திலும் அவர் மனைவியின் குரலோடு சேர்ந்து, அவரின் குரலும் ஒலித்துக் கொண்டேயிருந்தது. ‘‘வீட்டுல ரெண்டு குமருங்கள கரையேத்தணும் பாவா. உங்க புள்ளையா நெனச்சி, உங்க சகோதரியா நெனச்சி அள்ளிப் போடுங்க மவராசனுங்களே!’’ தொழுகை முடிந்து கூட்டம் கூட்டமாய்ப் பள்ளிவாசல்களில் இருந்து கரைந்து வழியும் தொழுகையாளிகளிடம் இருந்து ஏதோ ஒரு சில கைகள் அவ்வப்போது அபூர்வமாய் நீண்டு சின்னச்சின்ன கரன்ஸிநோட்டுகளைக் கைமடக்காய்ப் போட்டபோதும், விரித்துப் பிடித்த துணியில் இன்னும் எவ்வளவோ வாய்பிளந்த வெற்றிடம்… வாப்பா, அம்மாவின் குரல்களும் சளைக்காமல் கேட்டபடியே இருக்கின்றன நீண்ட காலத்துக்குமாக!
நன்றி : தீராநதி
தொடர்புடைய சுட்டி :
ஊர் விலக்கம் தேவையா? – களந்தை பீர்முகம்மது