கல்கியின் ‘சங்கீத யோகம்’ பற்றி க.நா.சு

ka.na.su-by-adimoolamநான் செவிடன். அதாவது சங்கீதத்தைப் பற்றிய வரையில் நான் செவிடன். அரைச்செவிடு, கால்செவிடு கூட இல்லை; முழுச் செவிடுதான், ‘அப்படியிருந்தும் கல்கியின் தமிழ் இசை விவாதக் கச்சேரிகளை – அதாவது அது பற்றிய கட்டுரைகளை – என்னால் படித்து வெகுவாக ரஸிக்க முடிகிறது. சங்கீத யோகம் என்கிற இந்தப் புஸ்தகத்தில் தமிழிசை இயக்கத்தைப்பற்றி கல்கி எழுதிய கட்டுரைகள் பலவும் தொகுத்துத் தரப்பட்டிருக்கின்றன. பதினைந்து பதினாறு வருஷங்களுக்கு முன் தொடங்கி, ஒரு நாலைந்து வருஷங்கள் தமிழனின் தினசரிப் பேச்சிலும் வாழ்க்கையிலும் அடிபட்ட விஷயம் இது. கல்கியின் எழுத்தின் சிறந்த அம்சங்கள் பலவற்றிற்கும் உதாரணமாக அந்தக் காலத்து ‘எரியும் பிரச்சினை’க் கட்டுரைகள் உதவுகின்றன.

ஆசிரியர் முகவுரையிலேயே நம்மைக் கவர்ந்துவிடுகிறார். ‘சங்கீத யோகம்‘ முதலிய தமிழிசை இயக்கக் கட்டுரைகளை ஒரு புஸ்தகமாகப் போட்டால் என்ன?’ என்று சின்ன அண்ணாமலை ஒரு போடு போட்டார்.

‘போட்டால் என்ன? போடலாம்! அதனால் பூகம்பமோ யுகப் புரட்சியோ ஏற்பட்டுவிடாது. ஆனால் எதற்காகப் போடவேண்டும்?’ என்று கேட்டேன்.

‘உலகப் புரட்சியையும் உலக மகா யுத்தத்தையும் தடுப்பதற்காகத்தான்’ என்று சொன்னார் சின்ன அண்ணாமலை.

‘சங்கீத யோகத்துக்கும் உலகப் புரட்சிக்கும்  என்ன சம்பந்தம்?’ என்று கேட்டேன்.

‘அது என்ன அப்படிச் சொல்கிறீர்கள்? அச்சகத் தொழிலாளர்களுக்கு வேலையில்லாமல் போனால் அவர்கள் ஸ்டிரைக் செய்வார்கள். அதன் மூலம் கம்யூனிஸ்ட்களின் செல்வாக்கும் பெருகும்; உலகப் புரட்சி ஏற்படும்; ருஷ்யாவின் தலையின் அணுகுண்டைப் போடுவார்கள்; மூன்றாவது உலக மகாயுத்தம் ஆரம்பமாகும். இதையெல்லாம் தடுப்பதற்காகத்தான் சொல்கிறேன். சங்கீத யோகத்தைப் புத்தகமாகப் போட்டால் அச்சகத் தொழிலாளிகள் சிலருக்கு வேலை கிடைக்குமல்லவா? அதனால் அவர்கள் ஸ்டிரைக்செய்யாமல் இருப்பார்கள் அல்லவா? அதன்மூலம் உலகப்புரட்சி ஏற்படாமல் தவிர்க்கலாம் அல்லவா?’ என்றார் சின்ன அண்ணாமலை.

‘ரொம்பசரி; அப்படியானால் அவசியம் சங்கீத யோகத்தைப் போடுங்கள்! உலகப் புரட்சியின் தலையிலேயே அதைப் போட்டுவிடுங்கள்’ என்றேன்.

‘எந்த நல்ல இயக்கத்தின் வளர்ச்சிக்கும் வேகம் கொடுப்பது, அதற்கு ஏற்படும், எதிர்ப்புகள்தான்’ என்று ஒரு இடத்தில் கூறுகிறார் கல்கி. அந்த எதிர்ப்புகளைச் சமாளித்து விவாதம் செய்து தன் கட்சியை நிலைநாட்டும் வன்மை பெற்றவர் கல்கி. அவர் எழுத்திலே
உள்ள தெளிவும் வேகமும் இந்த விவாதக் கட்டுரைகளிலே தொனிக்கின்றன. ஒரு விஷயத்தை நேராக சொல்லி, அதை ஏற்றுக்கொள்ளாதவர்களைக் கிண்டல்செய்து, தன் கட்சியை, அதாவது எழுத்தளவிலாவது நிலைநிறுத்தும் சக்தி கல்கிக்கு ஏராளமாக இருந்தது.ஒரு இருபது இருபத்தைந்து வருஷங்களில் தமிழ்நாட்டில் எழுந்த எந்த இயக்கத்திலும் கல்கிக்குப் பங்குண்டு. அவர் இந்தமாதிரி இயக்கங்களில் எடுத்துக்கொண்ட பங்குதான் அவரைத் தமிழனுக்கு அறிமுகம் செய்து வைத்தது என்று சொல்ல வேண்டும். இந்த வகையில் கவனிக்கும்போது கல்கியின் சங்கீத யோகத்துக்கு அவருடைய எழுத்துக்களிலே ஒரு தனி மதிப்புண்டு.

…. … ….

கல்கியின் எழுத்து வன்மைக்கு இதோ (இன்னொரு) உதாரணம்.  kalki“சென்னை நகரில் சமூக வாழ்க்கையின் டிசம்பர் கடைசியில் நடக்கும் சங்கீதவிழாக்கள் மிகுந்த முக்கியத்துவத்தை அடைந்திருக்கின்றன. இந்த விழாக்களை திறந்துவைப்பதற்குச் சங்கீதம் தெரியாத பிரமுகர்களை ஒவ்வொரு வருஷமும் அழைப்பதும் வழக்கமாயிருந்து வருகிறது. இந்தத் திறப்புவிழக்களை நடத்துகிறவர்கள் சாதாரணமாக, எனக்கு சங்கீதத்தைப் பற்றி ஒன்றும் தெரியாது என்று அவையடக்கம் சொல்லிக்கொண்டுதான் ஆரம்பிக்கிற வழக்கம். ஆனால் இந்த வருஷம்.. விழாவைத் திறந்துவைத்த…போல் அவ்வளவு அழகாக யாருமே தங்கள் பிரசங்கத்தை ஆரம்பித்ததில்லை. முதல் வாக்கியத்திலேயே இவர் தம்மை ‘இக்னாரமஸ்’ என்று தெரிவித்துக்கொண்டார். ‘இக்னாரமஸ்’ என்னும் அழகிய கம்பீரமான வார்த்தைக்குத் தமிழில் சரியான பிரதி பதம் கிடைப்பது கஷ்டமாக இருக்கிறது. ஆங்கிலமும் தமிழும் நன்கறிந்த சில நண்பர்களைக் கேட்டுப் பார்த்தேன். அவர்கள் ‘அஞ்ஞான இருட்குன்று’, ‘மௌடீகமலை’, ‘மடசாம்பிராணி’ முதலில் சொற்றொடடர்களை கூறினார்களே தவிர, ‘இக்னாரமஸ்’ என்பதைப் போல் கம்பீரமான தனிப்பதம் ஒன்றைக் குறிப்பிட முடியவில்லை’ என்று தொடங்கி விழாவைத் துவக்கிவைத்த பெரிய மனிதர் உண்மையிலேயே இக்னாரமஸ்தான் என்று நிரூபிக்கிறார் கல்கி! படித்து அனுபவிக்க வேண்டிய எழுத்துத்தான் இது. –

க.நா.சு

**

மேலும் வாசிக்க க.நா.சு எழுதிய ‘படித்திருக்கிறீர்களா?’வை தேடுங்கள். 1957ல் ‘அமுதநிலையம்’ வெளியிட்ட நூல் (விலை ரூ 2 – 75).  இதே கட்டுரையில் சங்கீத உலகில் எத்தனையோ சாஹித்திய கர்த்தாக்கள் இருந்திருக்கும்போது தியாகராஜ ஸ்வாமிகளிடம் மட்டும் வித்துவான்களுக்கு இவ்வளவு பக்தி சிரத்தை ஏன்?  அவருடைய ஆராதனை உற்சவத்தில் இவ்வளவு ஊக்கம் ஏன் காட்டுகிறார்கள்? என்பதற்கு கல்கி அளிக்கும் சூப்பரான விளக்கம் இருக்கிறது. தியாகராஜஸ்வாமிகளின் கீர்த்தனைகளைத்தான் ரொம்ப அதிகமாக வித்துவான்கள் சின்னாபின்னப்படுத்துகிறார்களாம். அதற்குப் பரிகாரமாக திருவையாற்றில் ஸ்வாமிகளின் சமாதிக்கு உற்சவம்!

முதன்முதலாக  தமிழ்நாட்டில் பணம்கொடுத்து (தமிழிசையில்) பாட்டுகேட்டவர் சாட்சாத் பரமசிவனேதான் என்ற தகவல் சொல்வதும் கல்கிதான்.

கல்கியின் கிண்டலை எடுத்துச் சொல்வது  இருக்கட்டும், ஒருவரைப் பாராட்டும்போது கனகச்சிதமாக ஓரிரு வாக்கியங்களில் அழகாகச் சொல்லும் கலை க.நா.சுவுக்கு மட்டுமே சொந்தம்போல. ஏ.கே.செட்டியாரைப் பற்றிச் சொல்லும்போது ‘உலகம் பூராவையும் சுற்றிவந்த செட்டியாருக்கு எல்லா இடங்களையும் பற்றி 96 பக்கங்கள் மட்டும்தான் எழுத முடிந்தது; இதுவே ஒரு பாராட்ட வேண்டிய விசயம்’ என்கிறார். நாகூர் பற்றியே நாலாயிரம் பக்கங்கள் உளறும் ‘அஞ்ஞான இருட்குன்று’ ஆபிதீன்கள் கவனிக்கவேண்டிய செய்தி.

தி.ஜ. ரங்கநாதானின் ‘பொழுதுபோக்கு’ என்ற நூலில் தூக்கமருந்து என்றொரு கட்டுரையாம். சீரியஸான இலக்கியப் பத்திரிகையைப் படித்தால் காலே நிமிஷத்தில் தூக்கம் வந்துவிடும் என்று சொல்கிற தி.ஜ.ராவை ‘பொழுதுபோக்கு’ம் நல்ல தூக்கத்திற்கு உத்தரவாதம் என்று வெடைக்கிறார் க.நா.சு.  குசும்பு புடிச்ச நம்ம பாட்டையாவின் மாமனாராயிற்றே!

புதுமைப்பித்தன், லா.ச.ரா., தி.ஜானகிராமன், கு.அழகிரிசாமி, கு.ப.ரா., பற்றி க.நா.சு  எழுதியவற்றை (மீண்டும்) படித்துக்கொண்டிருக்கிறேன். அப்பாவி  ‘அய்யா’ ஏற்படுத்தியிருக்கும் கலவரங்களிலிருந்தும் அழகி அஸ்மாவின் புடுங்கல்களிலிருந்தும்  தப்பிக்க இதுவே அழகிய வழி. ‘அன்பு வழி‘யும் கூட.

இலக்கியம் நீடூழி வாழ்க!

***

குறிப்பு ; க.நா.சு கோட்டோவியம் : ஆதிமூலம் ; கல்கி ஓவியம் : ம.செ

***

தொடர்புடையவை :

உ யி ல் -க. நா. சு. கவிதைகள்

கல்கியின் படைப்புகள்  : http://www.chennailibrary.com/kalki/kalki.html