பெண் புத்தி – ஐராவதம் சிறுகதை

தப்பிப்பிழைத்த நிலையிலும் கதையை தட்டச்சு செய்து அனுப்பிய தாஜுக்கு முதலில் நன்றி, ஒரு குழப்பம் மட்டும் செய்துவிட்டார். இந்தக் கதையை எழுதியது ஐராவதம் மகாதேவன் என்று அவராகவே நினைத்துக்கொண்டு ( இதில் தவறில்லை, ராகுலின் அம்மா மஹாத்மா காந்தியால் மோடியை ஜெயிக்க முடியாது என்று சென்றமாதம் அருமையான ‘அரசியல்’ கட்டுரையை எழுதிய அறிஞர் நம்ம சீயாளிக்கவிஞர்) இப்படி எழுதியிருக்கிறார் :  ‘பெண் புத்தி’ எழுதியிருக்கும் பெரியவர் ஐராவதம் என் மேன்மைக்குரிய எழுத்தாளர். தினமணி இதழில் அவர் ஆசிரியராகப் பணியாற்றிய போது அவரது எழுத்துக்களை நான் தொடர்ந்து வாசித்திருக்கிறேன். அவர் ஆசிரியராக இருந்த காலகட்டம் ‘பாபர் மசூதி இடிப்பு’ நிகழ்ந்த காலம் என்பது என் நினைவு. அந்த தகிப்பான பொழுதுகளில் அவர் நயம்பட எழுதிய உண்மையான தலையங்கள் மெச்சத் தகுந்தன. இந்தக் கதையை அவரது இன்னொரு கதையாகத்தான் அந்தத் தொகுப்பில் வாசிக்க முற்பட்டேன். கதையின் ஆரம்பப் பகுதியில் இடறிய ‘ஷபனா ஆஸ்மி’யின் பெயரும், அவர் குறித்த செய்தியும் அக்கதையை முழுமையாய் மனதில் வாங்கி வாசிக்க வைத்தது. அன்றைய நினைவில் இன்றைக்கு கண்களை மூடினால் ‘ஷபனா ஆஸ்மி’யின் பருத்த அங்கங்களும், அவர் நடித்த பல படங்களும், குறிப்பாய் ‘மண்டி’யும் என்னை தொந்தரவு செய்யத் தயங்காது’

ஷபனா என்றதும்தான் எனக்கு குழப்பம். கல்வெட்டியல் ஆராய்ச்சியாளருக்குரிய கச்சிதமான ‘கல்’ அல்லவே இது… அப்படியானால் இந்த ஐராவதம், நண்பர் மாமல்லன் குறிப்பிடும் ஐராவதம் சுவாமிநாதனாகத்தான் இருக்க வேண்டும்.  அழகிய சிங்கரின் நவீன விருட்சம் இதழில் அசோகமித்திரன் படைப்புகள் பற்றி எழுதிய ஐராவதம். ஷபனாம்மாவிடம் யாராவது கேட்டு என் சந்தேகம் தீருங்கள் , எந்த ஐராவதம் என்று எழுத்தாளர் பிரிவில் மாற்றுகிறேன். அதற்கு  முன்,  ‘இக் கதையின் விசாலமான பரப்பென்பது என்பது குறைவு. என்றாலும் இதில் காணக்கிடைக்கும் விசாலம், இன்றைய சூப்பர் ஸ்டார் எழுத்தாளர்கள் எழுதும் 800 பக்கங்கள் கொண்ட கதைகளிலும் கிட்டாது. கதையின் ஒவ்வொரு இஞ்ச் திருப்பத்திலும் அவர் புதைத்துவைத்திருக்கும் செய்திகள் ஏராளம். நிறைவான கதை. ஷபனா ஆஸ்மியை அவர் உரசியதைத் தவிர. அவரது அகத்தில் ஷபனா ஆஸ்மி என்னை மாதிரி அத்தனைக்கு அவரை உறுத்தியிருக்காவிட்டால் அவரால் வலிய அப்படி எழுதி இருக்கவும் முடியாது. ஐராவதத்தின் நிழல் நான் என்றால்… என் உண்மை அவர்தானே?’ என்று தாஜ் மெச்சும்  இந்தச் சிறுகதையை ஷபனாவை ஒதுக்கி விட்டு ஒரே மூச்சில் படித்துவிடுங்கள்.

ஆமாம், கதையின் தலைப்பு சரிதானா ? சம்பந்தமில்லாமல் வார்த்தைகள் சேர்ந்திருக்கின்றனவே… அஸ்மாவிடம் கேட்டேன். ‘புத்தி இருந்தா ஒங்கள கல்யாணம் பண்ணியிருப்பேனா மச்சான்?’  என்கிறாள். பெர்ஃபெக்ட்!  – ஆபிதீன் (Juliette Binoche ரசிகன்)

***

பெண் புத்தி

ஐராவதம்

—————-

‘ஜின் – ஆ? விஸ்கியா? ரம் – ஆ? என்ன சாப்பிடுகிறீர்கள்?’ என்று வினவினாள் ஜெயந்தி, கல்யாணராமன் அவள் ஃப்ளாட்டில் நுழைந்ததும்.

‘அதே காம்பினேஷன்தானே?’ என்றார். கல்யாணராமன் குரலில் இலேசான அலுப்பு தோன்ற.

‘ஆம், ஜின் என்றால் லெமனேட், விஸ்கி என்றால் ப்ளெய்ன் சோடா, ரம் என்றால் தக்காளி ஜுஸ்’ என்றாள் ஜெயந்தி.

‘ஹும், ஸ்காட்ச் விஸ்கி தருவதற்கு நீ மர்லின் மன்றோவும் இல்லை, வாங்கி சாப்பிட நான் நாடகாசிரியர் ஆர்தர் மில்லரும் இல்லை’ கல்யாணராமன் அலுத்துக் கொண்டார்.

‘மிஸ்டர் கல்யாணராமன், நீங்கள் 1950 களிலேயே ஏன் உங்கள் வாழ்க்கையை உறைய செய்துவிட்டீர்கள்? புதிய உதாரணமாய் சொல்லுங்கள். அதுவும் இந்திய பின்னணியில் இருக்கட்டும். ஸ்காட்ச் விஸ்கி தர நான் ஷபனா ஆஸ்மியும் இல்லை. வாங்கிப் பருக நீங்கள் ஹிந்தி திரைப்பட வசனகர்த்தா ஜாவேத் அக்தரும் இல்லை’ ஜெயந்தி சளைக்காமல் பதிலடி கொடுத்தாள்.

‘ஐயோ ஜெயந்தி, ஹிந்தி சினிமா உலகில் நான் யாரையாவது பாஸிடிவ்வாக வெறுக்கிறேன் என்றால் அது ஷபனா ஆஸ்மியைத்தான். அவள் மூக்கும் வாயும் இடைப்பட்ட பிரதேசமும், தயவு செய்து அவளை ஞாபகப்படுத்தாதே’ என்று உண்மையாகவே குரலில் கசப்பு தோன்ற கூறினார் கல்யாணராமன்.

‘நீங்கள் மஹேஷ் பட் டைரக்ட் செய்த ‘அர்த்’ படம் பார்க்கவில்லையா? அதில் என்னமாய் நடிக்கிறாள் அவள். தவிரவும், அழகு என்பது என்ன? அரிஸ்டாடில் சொல்கிறார்…..’ஜெயந்தி இழுத்தாற்போல நிறுத்தியதும் கல்யாணராமன் தொடர்ந்தார்.

‘யூனிடி ஆப் ஃபார்ம்… ஒருங்கிணைந்த உருவம்தான் அழகின் ஆதாரம் என்கிறார். பெண்ணின் உடல் மேடு பள்ளங்கள் இருக்க வேண்டிய இடத்தில் இருந்தால்தான் அழகு. ஷபனா மூக்குக்கும் மேலுதட்டுக்கும் இடையில் பல்லவன் பஸ் போய் வரலாம்.’

‘ஹாய்’ என்றபடி உள்ளே நுழைந்தான் மனோகரன். அவன் ஆங்கில இடதுசாரி பத்திரிகைகளில் பொருளாதார கட்டுரைகள் எழுதுகிறவன்.

கல்யாணராமனுக்கு ஜெயந்தியிடம் பிடிக்காத அம்சம் இது ஒன்றுதான். அவள் வீடு திறந்த சத்திரம். யாத்திரிகர்கள் போல ஜனங்கள் போன வண்ணம் வந்த வண்ணம் இருப்பார்கள்.

மனோகரன் அங்கு கிடந்த சோபாவில் கால் நீட்டியபடி சாய்ந்தான்.

‘ஜயந்தி, ஒரேயடியாக பசிக்கிறது. ஏதாவது சாப்பிட இருக்குமா?’ என்றான்.

ஒன்றுமே இல்லை கண்ணா. ஆனால் கவலைப் படாதே. சமையலறையில் போய் பெரிய டிபன் பாக்ஸாக கையில் எடுத்துக்கொள். பக்கத்துத் தெரு ஹோட்டலில் பத்து பூரியும், நிறைய கிழங்கும் வாங்கி வா. ராத்திரி ஜமாய்த்து விடலாம்’ என்றாள் ஜெயந்தி.

‘கல்யாணராமன், சதா பாவம் செய்கிற மோசமான கிறிஸ்துவனான நான் பசியால் அவதிப்படுகிறேன். மிகப்பல புண்ணியங்கள் செய்பவரும் அறிவாளியும் பண்பாளரும் பிராம்மண உத்தமருமான தாங்கள் எனக்காக ஹோட்டல் சென்று வரலாகாதா?’ என்று கை கூப்பியபடி மிகை படுத்தப்பட்ட நாடக பாணியில் மனோகரன் கெஞ்சினான்.

‘நம் எல்லோர் நிமித்தம் நான் ஹோட்டல் போய் வர சம்மதிக்கிறேன். ஆனால் பூரி கிழங்கை என் சிந்தையாலும் தொடேன்’ என்றார் கல்யாணராமன், அபயம் தரும் பாணியில் கடவுள் போல இடது உள்ளங்கையை பூமியை நோக்கி தாழ்த்தியும் வலது உள்ளங்கையை உயர தூக்கிக் காட்டியும்.

‘சுத்த நட்டுவாக்காலி நாயனாராக இருக்கிறீரே? பூரி தின்ன மாட்டீர் கிழங்கு தொடமாட்டீர்; உமக்கு வேண்டியதெல்லாம் வெள்ளை வெளேரென்ற இட்லி. செக்கச்சிவந்த மிளகாய் பொடி. தேன் நிறத்தில் குழைத்துக்கொள்ள நல்லெண்ணை. பேசாமல் வீட்டுக்குப் போய் கதவைத் தட்டும். இல்லத்தரசி இட்லி படைப்பாள். தின்றுவிட்டு தூங்கும்’ மனோகரன் எரிந்து விழுந்தான்.

‘மனோகரா, நான் பசிக்கிறது என்று சொல்லவேயில்லையே? நீ அநாவசியமாக என்னை வம்புக்கு இழுக்கிறாய்’ கல்யாணராமன் முறையிட்டார்.

‘ஓஹோ உமக்கு தாகம் எடுக்குமே? இங்கு வந்ததே தாக சாந்தி நிமிர்த்தம்தானே? ஹோட்டல் போகிறேன். நீர் ஜின் அருந்திவிட்டு ஜிவ்வென்று மேலே செல்லும்’ என்ற மனோகரன் தன் பசி தணிக்க வேண்டி விரைந்து வெளியேறினான்.

இப்பொழுது உள்ளே நுழைந்தவன் உதய சங்கர்.

‘ஹலோ ஜெயந்தி, சரோஜா இல்லையா?’ என்றான் அவன் நுழைந்ததும் நுழையாததுமாக.

‘ஏன், நீ என்னைப்பார்க்க வருவதாக பாவனையாவது செய்யக் கூடாதா? சரோஜா ஒரு மோசமான இங்க்லீஷ் படத்தை இரண்டாவது தடவையாக பார்க்கப் போயிருக்கிறாள். ஆமாம், நீ டைரக்ட் செய்துகொண்டிருந்தாயே அந்த தமிழ் படம் என்ன ஆச்சு?’ ஜெயந்தி மறுமொழி பகன்றாள்.

‘படம் பூரா தயார். ரொம்ப நன்றாக வந்திருக்கிறது. ஏரியா வினியோகஸ்தர்கள் தொடமாட்டேன் என்கிறார்கள். சரி, நான் நாளை வந்து சரோஜாவைப் பார்க்கிறேன், குட்பை.’ என்றபடி வெளியேறினான் உதய சங்கர்.

இதற்குள்ளாக இரண்டு டம்ளர் ஜின்னை உள்ளே தள்ளியிருந்தார் கல்யாணராமன். உதயசங்கர் வெளியேறுவதற்காகவே காத்திருந்தவர்போல ஜெயந்தியின் பக்கத்தில் வந்து உட்கார்ந்தார்.

‘ஜெயந்தி யு லுக் ஸோ ப்யூட்டிஃபுல்’ என்றார். அவள் தோள்களை தன் இரு கைகளாலும் பற்றியவாறே.

‘நெள, யு ஆர் ஃபுல்,’ என்று மனசிற்குள் நினைத்துக் கொண்ட ஜெயந்தி, ‘உங்கள் மனைவியை விடவா நான் அழகு? போன வாரம் கூட நரசிம்மன் கல்யாணத்தின் போது பார்த்தேனே? அவள் எப்பேர்ப்பட்ட அழகி! அவளை மனைவியாக அடைய நீங்கள் நிச்சயம் கொடுத்து வைத்திருக்கவேண்டும்’ என்றாள்.

‘கர்மம், கர்மம்’ என்று தலையிலடித்துக்கொண்டார் கல்யாணராமன். ‘என் பெண்டாட்டியைப் பற்றிப் பேச இதுவா நேரம்? நீ சொல்றமாதிரி அவள் அழகியாகவே இருக்கலாம். ஆனால் ஒரு ஸ்டைல் உண்டா அவளிடம்? சுத்தப்பட்டிக்காடு. கட்டுப்பட்டி, கர்நாடகம்.’

‘மிஸ்டர் கல்யாணராமன், நீங்கள் அவளை திருமணம் செய்து கொண்டு வருடங்கள் பன்னிரெண்டு ஆகின்றன. அவள் இன்னமும் பழமை விரும்பியாகவே இருக்கிறாள் என்றால் அதில் சம பொறுப்பு உங்களுக்கும் உண்டு.’

‘ஜெயந்தி நீ என்னமாப் பிரச்சனையை அனலைன்ஸ் செய்கிறாய்? யூ ஆர் ரியலி மார்வல்ஸ் கிரேட்’ என்றபடி மீண்டும் அவளை அணைக்க முற்பட்டார் கல்யாணராமன்.

‘நீங்கள் இப்போது உங்கள் வசத்தில் இல்லை’ என்ற ஜெயந்தி அவரை சோபாவின் மீது பலவந்தமாக சாய்த்து உட்காரவைக்க முயன்றாள்.

அவரோ அவளுடைய அருகாமைக்கு காத்திருந்தவர்போல, அவளுடைய இடையைப் பற்றிய ‘ஆமாம்…, நான் என் வசத்தில் இல்லை. உன்னைப் பற்றிய பரவசத்தில் இருக்கிறேன்’ என்று அவள் மீது மொத்தமாக சாய்ந்தார்.

‘நீங்கள் ஏன் இப்படி நடந்துக்கொள்கிறீர்கள்? கொஞ்சம்கூட நன்றாயில்லை’ என்றபடி அந்த இடத்தை விட்டு நகர தயாரான ஜெயந்தி, மீண்டும் அவர் ஜின் பாட்டிலை நெருங்குவதைக் கண்டதும் அதை அவர் பார்வையிலிருந்து அப்புறப்படுத்த எண்ணி அவர் கையிலிருந்து பிடுங்கினாள்.

‘எது நன்றாயில்லை? நீ செய்வதுதான் நன்றாயில்லை. அன்றைக்கு ஒரு நாள் உனக்கு தலைவலி என்றபோது என்னை மருந்து தடவச் சொன்னாயே அப்பொழுது என் சிச்ருஷை உனக்கு தேவையாயிருந்தது. இன்றைக்கு நான் தேவையில்லை.’

‘ஓஹோ, அப்படி என்றால் நீங்கள் போதையில் இல்லை. இந்த அளவுக்கு தெளிவாக பேசுவது பற்றி எனக்கு ரொம்ப சந்தோஷம். தலைவலிக்கு மருந்து தடவச் சொன்னது தப்பாய்ப் போய்விட்டதா? நான் பம்பாயிலிருந்து வந்தவள். முதல் கணவனை டைவர்ஸ் பண்ணிவிட்டு வந்திருக்கிறேன். எதற்காகத் தெரியுமா? எந்த ஆணும் என்மீது ஆதிக்கம் செலுத்தக் கூடாது; எந்தவிதமான உரிமையும் பாராட்டக் கூடாது என்பதற்காக, தலைவலிக்கு மருந்து தடவியவர்கள் எல்லாம் என் மீது உரிமை கொண்டாடினால் நான் நாசமாய் போக வேண்டியதுதான்.’

‘உன் வீட்டுக்கு வந்து போகிற ஆண்கள் அவ்வளவு பேரும் உயரிய நோக்கங்களுடன் வரவில்லை.’ கல்யாணராமன் தற்காப்புக்காக இப்படி ஒரு வாதத்தை முன்வைத்தார்.

‘இந்த குற்றச்சாட்டை பெண்ணாகிய நான் சொல்லவில்லை, ஆணாகிய நீங்கள் தான் சொல்கிறீர்கள், அவர்கள் நோக்கம் என்ன வேண்டுமானாலும் இருக்கட்டும். என்னை காப்பாற்றிக் கொள்கிற தைரியம் எனக்குண்டு. உதய சங்கர் என் தங்கை சரோஜாவை திருமணம் செய்து கொள்ளும் நோக்கத்துடன் தான் வருகிறான். நான் தான் அவன் டைரக்ட்செய்த படம் வெளியாகட்டும் பிறகு திருமணத்தை வைத்துக்கொள்ளலாம் என்று தள்ளிப் போட்டிருக்கிறேன்.’

கல்யாணராமன் இதற்குள் மயக்கம் கலந்த தூக்க நிலையில் ஆழ்ந்தார்.

மனோகரன் இட்லி, சட்னி, சாம்பாருடன் உள்ளே நுழைந்தான்.

‘ஐயா கல்யாணராமரே, உமக்கு என்ன ஆயிற்று?’ என்றபடி அவர் அருகில் வந்து அவர் மூச்சு விடுவதை சோதித்துப்பார்த்தான்.

குடித்ததுதான் குடித்தார்,
அவர் கொஞ்சமாகவா குடித்தார்?
கெடுத்துக்கொண்டார் தன்னை.
கெடுக்க முயன்றார் என்னை,
என்று ஜெயந்தி ஒரு பல்லவியை ஆலாபனை செய்தாள்.

‘கல்யாணராமன் கதை இத்தோடு முடிந்ததா?’ என்று வினவினான் மனோகரன்.

‘இரண்டு இட்லியுடன் முடியட்டும், அவரை தட்டி எழுப்பி இட்லி பரிமாறு. இல்லை.. இல்லை, இலையில் இட்லி பரிமாறி பின் அவரை தட்டி எழுப்பு’ என்றாள் ஜெயந்தி.

***

நன்றி: நவீன விருட்சம் (விருட்சம் கதைகள் – தொகுதி – 1) , தாஜ்

***

சுட்டி :

ஐராவதம் என்றொரு எழுத்தாளர் – சுரேஷ் கண்ணன்