ஆஹா, இந்த அப்துல் காதர்!

அமாவாசைக்கும் அப்துல்காதருக்கும் தொடர்புண்டா இல்லையா என்ற கேள்விக்கு விடைதெரிய நீங்கள் அணுக வேண்டிய அன்பு எழுத்தாளர்: ஏ.ஏ.ஹெச்.கே.கோரி.

அமாவாசையும் அப்துல் காதரும் – 1
அமாவாசையும் அப்துல் காதரும் – 2
அமாவாசையும் அப்துல் காதரும் – 3

படிச்சாச்சா? கணையாழி’யில் ஜனாப். கோரி எழுதிய ’காய்தல்’ யாரிடமாவது இருந்தால் எனக்கு அனுப்புமாறு ‘கோரி’க்கை விடுக்கிறேன். ம்.. தொடர்பு உண்டா, இல்லையா என்பதல்ல விஷயம், ‘நிலாச்சாரல் தளத்தில்’ இருக்கும் கோரியின் கதைகளை நேற்று எதேச்சையாக ( ‘கரிசல் காட்டுக் கதை சொல்லி’ என்று கூகிளிட்டபோது இவரும் கிடைத்தார்) பார்த்துக்கொண்டிருந்தபோது அப்துல்காதரிடமிருந்தே ஃபோன் வந்தது. ஆ..! மாய யதார்த்தத்தின் தொல்லை தாங்க முடியவில்லை. சும்மா சொன்னேன், கதையில் வரும் அப்துல்காதரல்ல இந்தக் காதர். எங்கள் ஊர் காட்டுப்பள்ளி முஹல்லாவைச் சேர்ந்த காதர் இவர். ஒரு ‘மவுத்’ செய்தியைச் சொன்னார் நண்பர் காதர் – சவுதியிலிருந்து, சில நாட்களுக்கு முன்பு. அதிர்ச்சியுற்ற அந்த நிலையிலும் நான் இலக்கியத்தை விடவில்லை. நான் யாராக்கும்? ’ஒர மொர’ய ஒடனே அனுப்புங்கனி’ என்றேன். ஓரளவு சம்மதித்தார். புகைப்படமும் வேணும் என்று சொன்னபோது பூதத்தைப் பார்த்தமாதிரி மிரண்டார். இணையத்தில் ஏற்படுத்திவைத்திருக்கிற இமேஜ் என்னாவது? தராவிட்டால் வரைந்து விடுவேன் என்று மிரட்டியபோதுதான் தந்தார். புகைப்படத்தில் உள்ளது காதரேதான். என்ன, எடுத்து இருபது வருடம் இருக்கும்!

சவுதியில் நான் ‘ஒட்டகம்’ மேய்த்தபோது (1985 – 1989) பல சமயங்களில் என் கண்ணீரைத் துடைத்தவர் இந்தக் காதர். கலகலப்பான சில சம்பவங்களுக்கும் காரணமானவர். எதைப்பற்றியாவது – யாரைப்பற்றியாவது நான் புகழ ஆரம்பித்தால் குறுகுறுப்பான பார்வையுடன் கவனித்துக் கொண்டிருப்பார். ‘ம்…புள்ளி வச்சி முடிச்சிடும்!’ என்பவர் , நான் முடித்ததுமே பயங்கரமாக சிரிக்க ஆரம்பிப்பார். முடித்துவிட்டேன் என்று நினைத்துக்கொண்டு பல சமயங்களில் சிரிப்பதும் உண்டு – இப்போதைய ‘ஹி..ஹி..’ போலவே! 

இந்த அன்பு காதர்பாய் செய்த உதவிகளுக்கு நன்றிக்கடனாக இந்தப் பதிவை இடவில்லை; தன் மனைவிக்கு நீளமான கடிதங்களை அந்த காலத்தில் எழுதிக் கொண்டிருந்தவர் இப்போது சுவாரஸ்யமான பதிவுகளும் போடுகிறாரே, நம் பக்கத்து வாசகர்களுக்கு இவரை அறிமுகப்படுத்துவோமே என்றும். எப்போதாவது இங்கே மறுமொழியிட வரும் காதர் சொந்தமாக ‘ஆஹா பக்கங்கள்‘ என்று வலைப்பதிவு எழுத ஆரம்பித்து மிகக் குறுகிய காலத்தில் பல இணைய நண்பர்களைப் பெற்றுவிட்டார். ’சொல்லரசு’ ஜாஃபர் முஹய்யதீன் மாமாவின் பக்கத்து வீட்டுக்காரராக இருந்ததால் எழுத்து வருகிறது போலும் என்று முதலில் நினைத்துக்கொண்டிருந்தேன். புகழ்பெற்ற ‘சிந்துநதிக் கரையினிலே’ நாவல் எழுதிய மர்ஹூம் ‘ஹஸன்’ அவர்கள் இவருடைய பெரியப்பா என்று தெரிந்தபோது வாயை மூடிக்கொண்டேன்.

காதர் எழுதிய பதிவுகளில் எனக்குப் பிடித்தது இந்த ’ஒர மொர’தான் . உறவுமுறை அல்லது ஊரின் முறை என்பதை இப்படித்தான் நாகூரில் சொல்வார்கள். அப்படித்தானே திட்டச்சேரி மாப்ளே? ‘மனைவிமார்களை பிடிப்பது எப்படி?’ (கவனமாக சேர்த்துப் படிக்கவும்!) , ‘சாதனை செய்வது எப்படி?’ என்று பல ’எப்படி?’களை தந்துகொண்டிருக்கும் நண்பர் , ‘மரணமில்லாமல் வாழ்வது எப்படி?’ என்றும் விரைவில் பதிவு போடலாம். ’Nothing is Impossible’ என்று சொல்பவராயிற்றே! எதிர்பார்க்கிறேன். அப்புறம் காதர்.., உங்களுக்கு நீங்களே விருது கொடுத்துக் கொள்வதெல்லாம் சரிதான். அதில் பிரச்சனையில்லை. உங்கள் தளத்திலுள்ள வெட்டி widgetsகளை மட்டும் முதலில் வெட்டி எறியுங்கள். பதிவுலகின் மிகப்பெரிய தொல்லையாக இது போய்விட்டது. யார் யார் எங்கிருந்து வந்தார்கள் என்று தெரிந்து என்னய்யா செய்யப்போகிறீர்கள்? ‘supersonic’ 100 mbs இணையவேகம் உள்ளவர்கள்தான் சுலபமாக பார்க்க இயலும். எங்களைப்போன்ற நோஞ்சான்களுக்கு நொண்டுகிறது. இந்த ஃபீலிங்ஸ் நமக்குள்ளேயே இருக்கட்டும்!

நாகூரில் ஒரே ஒரு ஆள்தான் எழுத்தாளாராகாமல் இருந்தார். இன்று அவரும் ஆகிவிட்டார். ஆஹா!

ஆபிதீன்

***

‘ஒர மொர’ (அல்லது) விருந்துக்கு எப்படி அழைப்பது?? – அப்துல் காதர்

சமீபத்தில் நான் ஊருக்கு சென்றிருந்த  பொழுது எங்கள் வீட்டில்  நடந்த ஒரு கல்யாண விருந்துக்கு சொந்த பந்தங்களை அழைக்கச் சென்றிருந்தேன். அப்பொழுது அறிந்துக் கொண்ட சில சில்லரைப்  படிப்பினைகள்.

நம்மில் எல்லோருக்குமே, நின்றாலும் சடங்கு, உட்கார்ந்தாலும் சடங்கு என்று வாழ பழகி விட்டோம். வீண்ஆடம்பர  செலவுகள் செய்ய வேண்டாம் என்று   ஒருபுறம்  பேசிக் கொண்டே மேற்படி செயல்களையும், செலவுகளையும் நாம் அறிந்தோ அறியாமலோ செய்து கொண்டு தானிருக்கிறோம். எதையும் தவிர்த்துக் கொண்டதாகத் தெரியவில்லை.

பொதுவாக நம் வீடுகளில் கல்யாண விசேஷம் என்றால், பெண் மாப்பிள்ளை மற்றும் கல்யாண தேதியை முடிவு செய்த பின்னர், சொந்தபந்தங்களுக்கு அலைபேசியில் தகவல் தெரிவிப்போம். அவங்களும் “சீரும் சிறப்புமா கல்யாணத்தை நடத்துங்க!” என்று உலகத்தில் இல்லாத புகழ்மொழியை எல்லாம் தேடிக் கண்டு பிடித்து வாழ்த்துவார்கள். நாமும்   அப்படியே உச்சிகுளிர்ந்து போய்விடுவோம். இதில்  யாருமே  விதிவிலக்கில்லை என்றாலும், பத்திரிகை வைத்து அழைக்க, என்று ஒரு களேபரம் நடக்கும் பாருங்க….!!  அதை விவரித்தால், பல பக்கங்களுக்கு  சுவைபட  சொல்லிக்  கொண்டே போகலாம். அதற்க்கென்று  எவ்வளவு பணவிரயம், நேரவிரயம், எவ்வளவு  அலைச்சல், அதனால் ஏற்படும் சந்தோசம் ஒரு பக்கம்  என்றாலும், அலைச்சலினால் ஏற்படும் உடல் உளைச்சல்??.

இது போக..

பெண்களை பெண்கள் அழைத்தாலும், அவர்களை  – ஆண்களும் ஒரு ஃபார்மாலிட்டிக்கும், ஆண்களை ஆண்கள் அழைத்தாலும், அவர்களை  – பெண்களும் ஒரு ஃபார்மாலிட்டிக்கும் அழைப்பார்கள் உங்களுக்கும் அது தெரியும்தானே!

இது ‘ஒர மொர’ யில் நடக்கும் சம்பிரதாயமான விஷயம்; அப்பதான் அதில் சந்தோஷமும், பந்த பாசத்தின் பிணைப்பும், அந்த நேரத்தில் கலகலப்பாய் கல்யாணம் களைக்கட்டி வரும். என்றாலும் …இதில் நான் எந்தக் குறையும் சொல்ல வரலீங்க!

பின்னே??

இங்கே ஒரு ஊர் இருக்குங்க. அங்கே பத்திரிகை கொடுத்தோமா, வந்தமா சாப்பிட்டோமா,  மொய்  வச்சமா, போனமா என்றில்லாம, பத்திரிகை வைத்த வீட்டிலுள்ள ஆண்களை (ஒவ்வொரு தடவையும் அந்தக் கல்யாணம் முடியும் வரை) நாம்  கடை வீதிகளில் நடந்து போகும்போது நம்  எதிரே  அவர்கள் வரக் கண்டால்  (சிரித்து Just hello சொல்லிவிட்டு  மட்டும் போகக் கூடாதாம்…) பின்னே?? திரும்பவும் அவர்கள் கைகளை பிடித்துக் கொண்டு  (முன்பு பத்திரிகை வைக்கும் போது அழைத்தோமே, அதுமாதிரியே-தலைப்பிலிருந்து ரிப்பீட்டனுமாம். அதாவது) “அவசியம் கல்யாணத்துக்கும், சாப்பிடவும் தேவைக்கு எல்லாத்துக்கும் வந்துடுங்க!” (மச்சான்ஸ், மாம்ஸ், பெரியப்ஸ், சித்தப்ஸ் என்று இன்னபிற முறைகளைச் சொல்லி) பவ்யமாய் அழைக்கனுமாம். அப்ப தான் அவங்கல்லாம் வருவாங்களாம்.

அப்படியில்லாமல் அந்த கல்யாண தேவைக்கே வர மாட்டார்களாம். ஆக்கிய சோறு  அப்படியே கிடக்குமாம். அப்படி ஒரு நடப்பு அந்த ஊரில் இருக்குங்க!  என்னாங்க இது??

நான் தெரியாமத் கேட்கிறேன்…

கல்யாண வீட்டுக்காரனுக்கு 1008 வேலைகள் இருக்கும். எத்தனையோ (வெளியே சொல்ல முடியாத) சங்கடங்கள் இருக்கும். அதில் அவன் குழம்பிப் போயோ, வேறெதாவது நினைவு களுடனோ ரோட்டில் நடந்து போகலாம். அப்படி போகும் போது உங்களை கவனிக்காமல் போகக் கூடுமானால்  – வேணும்னே அவன் உங்களை  கவனிக்காமல் போறான் – என்று தான் எடுத்துக்குவீங்களோ? என்னாங்கடாது?? உங்க  அழிச்சாட்டி யத்துக்கு ஒரு   அளவே இல்லையா??

இது உங்க வீட்டில் நடந்தால் என்றில்லை – எங்க வீட்டில் நடந்தாலும் இதுதானாம். இது என்னங்க பண்பாடு??

இந்த ஊருக்கு என்று ஊர் உறவின்முறை என்று சொல்லக் கூடிய நிர்வாக பொறுப்பாளர்கள் கூட இருக்கிறார்கள். ஆனாலும் திருந்தினபாடில்லை.  இவைகளெல்லாம் நாம் எந்த நூற்றாண்டில்  வாழ்கிறோம் என்ற சிந்தனையை தான் தருகின்றன.

சரி அதுபோகட்டும்  என்று  நினைத்தால் மேற்படி விஷயத்தை எல்லாம் மிஞ்சியது இன்னுமொரு ஊருங்க!! அங்கே என்னவென்றால்.. கல்யாணத்தன்று  சாப்பாடு ரெடியானவுடன், உள்ளூருக்குள்ளேயே கூட, கல்யாண வீட்டுக்காரர்கள் ஒரு காரோ, ஒரு ஆட்டோவோ எடுத்துக் கொண்டு வீடு வீடாக சென்று “அழைத்தவர்களை” திரும்பவும் அழைத்துக் கொண்டு வந்தால் தான் சாப்பிடவே வருவாங்களாம். இப்படியும் ஒரு ஊர் இருக்கு  தெரியுமா உங்களுக்கு?

இதையெல்லாம் கண்கூடாக பார்த்த பின் எனக்கு என்ன சொல்வ தென்றே தெரியல்லைங்க!!

இதை எல்லாம் முடித்துக் கொண்டு மயிலாடுதுறைக்கு போனேங்க. அவங்க சொன்னாங்க. “என்னாங்க இவ்வளவு கஷ்டப்பட்டு  இவ்வளவு தூரத்திலிருந்து வர்றீங்க. ஒரு போன் பண்ணி   சொல்லியிருந்தா வந்து விழுந்திருக்க மாட்டோமா அல்லது பத்திரிகைதான் கொடுக்கணும் என்று நீங்க ஆசைப்  பட்டிருந்தா  எங்க  ஃபேக்ஸில் போட்டிருக்கக் கூடாதா?” என்றாங்கங்க. அட்ரா சக்க!!

அவங்க அப்படி சொன்னதும் நாள் முழுக்க அலைந்து பட்ட கஷ்டமெல்லாம் தீர்ந்து போன மாதிரி ஒரு ஃபீலிங்ஸ். அவங்களுக்கெல்லாம் எந்த மாதிரியான ஒரு பரந்த மனசு. இந்த மாதிரி இலகுவாய் உள்ள விஷயங்களை நாம் ஏன் எல்லோரும் எல்லா ஊர்களிலும் பின்பற்றக் கூடாது?? ஒரு சின்ன முயற்சியாய் ஒருவர் இதை ஆரம்பித்தாலே, ‘அட இது நல்ல மாதிரியா இருக்கே!’ என்று பலபேர் பின்பற்ற ஆரம்பித்து விடுவார்களே!! ஒரு சமுதாய முன்னேற்றத்துக்கு வழி கோலியதாக அமையுமே. 

ஆதலினால்…

இந்த மாதிரி ஃபீலிங்ஸ் எல்லோருக்கும் வரணும்னா, முதலில் நமக்கும் வரணுமே!!…. அதனால்தான்,– “இந்த ஃபீலிங்ஸ் நமக்குள்ளேயே இருக்கட்டும்!!”

***
நன்றி : அப்துல் காதர் | makhader2010@gmail.com