ஆடுகள் – எஸ். வைதீஸ்வரன்

 

ஆடுகள் – எஸ்.வைதீஸ்வரன்

சாலையோர மூலையில்
கொலை செய்த கையோடு
பீடியும், டீயுமாக
பிடிப்பா ரற்று நின்றவனை

நான் பார்த்ததுண்டு.
புறமுதுகில் கண்ணற்று பிறந்ததனால்
போலீஸ்காரர் பொறுப்பற்று
போக்குவரத்து நடுவில் நின்றிருந்தான்,
என நினைத்தேன்.

கும்பல் தெரியும் பட்டப் பகலில்
கொஞ்சமும் பதட்டமின்றி
சங்கிலி யறுத்து, பெண்ணிடம்
மேலும் வம்புகள் செய்து போன
கயவரை நான் கண்ணாரப் பார்த்தேன்.

அவனையும் சட்டம்
அசட்டை செய்தது.

‘ஏனோ வீட்டுநினைப்பின் அவசரத்தில்
தவறிவிட்டானோ?
ஏதுமறியா மீசை முகத்துடன்
எட்டி நடந்து போகிறானே, கான்ஸ்டேபிள்?’
எனப் பதறினேன்.

‘நாட்டுக்குள் நல்லவர்க்கு
நாதியில்லை, நீதியில்லை
கொலைகாரர்கள் திருடர்கள்
குளிர்விட்டுப் போனார்கள்.
நிலைகுலைந்து நாசமாச்சு
நகரத்து மக்கள் வாழ்வு!’

எனத் தான் மனங்கொதித்து
நாற் சந்தி சிவப்பு விளக்கில்
கோபமுடன்
காத்திருந்தேன், வாகனத்தில்.

கூச்சலிட்டு விசிலடித்தான் ஒரு
கூர்மையான போலீஸ்காரன்.

‘கோட்டைத் தாண்டி நிக்கிறியே,
குத்தமின்னு தெரியலையா, மிஸ்டர்?
சோடா கடை யண்ட போயி நில்லு-
கோர்ட்டுக்குப் போனா
கூட கொஞ்சம் செலவாகும்…’ என்றான்.

ஆடுகள் தான்
எப்போதும்
அறுபடப் பிறந்தவைகள்.

***

தினமணிசுடர்-ல் (ஜனவரி,1995) வெளியான கவிதை இது. (ஓவியர் : லோகு).   வைதீஸ்வரன் ஐயாவின் மேலும் சில கவிதைகள் : ‘திண்ணை’யில்.

நன்றி : எஸ். வைதீஸ்வரன், தினமணிசுடர்