பொன்விழாக் காணும் எனது சைக்கிள் வண்டி – எஸ்.எல்.எம். ஹனீபா

‘அன்புள்ள ஆபிதீன், காக்காவுக்கும் அவ்வளவு நல்லமில்லை. என்னதான் மனம் ஆலாய்ப்பறந்தாலும் உடல் அடம்பிடித்து மறுக்கிறது. இவ்வளவு காலமும் நீ சொல்லச் சொல்ல நான் கேட்டேன். இனிமேல் நான் சொல்வது போல் நீ நடந்து கொள் என உடலும் உபதேசம் பண்ண வந்து விட்டது… பொறுத்திருந்து பார்ப்போம்’ என்று சில தினங்களுக்கு முன் மெயில் அனுப்பியிருந்த ஹனீபாக்கா, தன் ‘சைக்கிள்’ பற்றி இப்போது எழுதியிருக்கிறார். ‘நன்றாக ஓட்டியிருக்கிறீர்கள் காக்கா!’ என்று சும்மா பதில் எழுதினேன் – கடைசி வரியைப் பார்த்து கண்ணீர்விட்டேன் என்று சொல்லாமல். இலக்கியவாதியிடம் மிஞ்சும் எந்தப் பொருளும் காலத்துக்கும் நிலைக்கும் போல… – ஆபிதீன்

***

hanifakka-cycle1f2

பொன்விழாக் காணும் எனது சைக்கிள் வண்டி

எஸ்.எல்.எம். ஹனீபா

நேற்றுப் போல் இருக்கிறது, ஜி.சி.ஈ. ஓ.எல். வகுப்பில் எட்டுப் பாடங்களிலும் சித்தியடைந்தால், ஒரு சைக்கிள் வாங்கித் தருவதாக வாப்பா சொன்னார். அதை நிறைவேற்றியும் வைத்தார்.

அந்த நாள்களில் சைக்கிள் என்பது பெரும் சொத்து. அதுவும் இங்கிலாந்து தயாரிப்புகளான Raleigh, Rudge, Humber, BSA இந்த சைக்கிள்களுக்குத்தான் பெரும் மதிப்பு. ஒவ்வொரு நாளும் துடைத்து அலங்காரம் செய்து வைத்திருப்பார்கள்.

1963ல், ஒரு ரெலி சைக்கிளின் விலை 220 ரூபா. ஒரிஜினல் சீற் பூட்ட வேண்டுமென்றால் மேலதிகமாக 25 ரூபா கொடுக்க வேண்டும். அப்பொழுதுதான் மேடின் இங்கிலாந்த் என்ற பெயருடன் “Terry seat” ஒன்று பூட்டித் தருவார்கள். வாப்பா செலவைப் பார்க்காமல் எனக்கு அந்த சீற்றிலும் ஒன்றை வாங்கிப் பூட்டித் தந்தார்.

முப்பது வருடங்களாக என் வசம் இருந்த சீற். பின்னர் ஒரு நாளில் எனது உறவினர் ஒருவரால் களவாடப்பட்டு அதற்குப் பதிலாக ஒரு லோக்கல் சீற் அணிவிக்கப்பட்டிருந்தது. அது வேறு கதை.

இந்தத் தேசத்தில் என்னுடைய சைக்கிள் போகாத இடமில்லை. பதினெட்டு வயதிலேயே இந்த சைக்கிள் யாழ்ப்பாணத்தைப் பார்த்து விட்டது. கிளிநொச்சி விவசாயப் பாடசாலையில் படித்த அந்த நாட்களில் இரணைமடுக் குளம், ராமநாதபுரம், வட்டக்கச்சி, ஹட்சன் வாய்க்கால், குமாரபுரம், பரந்தன், உருத்திரபுரம், யாழ்ப்பாணம் என்று இந்த சைக்கிள் மிக லாவகமாக என்னை ஏற்றிக் கொண்டு வலம் வரும்.

அதே போல் புத்தளம், வத்தேகம, பன்வில, குண்டசால, அக்குறன என்று மலைநாட்டிலும் எனது சைக்கிள் ஏறுவதும் இறங்குவதுமாக இருந்த நாட்களுமுண்டு. நான் வத்தேகமவிலும் பன்விலயிலும் கடமை புரிந்த நாட்களில் மாலை நேரங்களில் முத்தையா அவர்களின் லக்கிலேண்ட் பேக்கரியில் பாணும் ரஸ்கும் வாங்க இந்த சைக்கிளில் போய் வருவேன். மிக மலிவாகக் கிடைக்கும்.

அந்த நாட்களில் சைக்கிளில்தான் கண்டியிலிருந்து லக்கிலேண்ட் பேக்கரிக்கு மா மூடைகள் வரும். அந்தக் காட்சியை நான் பார்த்து நிற்பேன்.

கெக்கிராவயில் நான் கடமை புரிந்த நாட்களில் கலாவெவ, பலலுவெவ, புத்தரின் பெரிய பிரமாண்டமான சிலை இருக்கின்ற அவுக்கன போன்ற ஊர்களுக்கெல்லாம் இந்த சைக்கிளில் போய் வருவேன். மாலை வேளைகளில் கலாவெவ அணைக்கட்டின் நீண்ட நெடுவீதியில் சைக்கிளில் பயணிக்கும் சுகம் இருக்கின்றதே, அதற்கு நிகர் இந்த உலகில் எந்தப் பயணமும் இருக்காதென்று நம்புகிறேன்.

வடமத்திய மாகாணத்தில் புத்தளத்தின் பல கிராமங்களுக்கும் எனது சைக்கிள் பயணித்து வந்திருக்கிறது. பொலன்னறுவை மாவட்டத்தில் எனது சைக்கிள் போகாத ஊரில்லை. 1970களின் ஆரம்பத்தில் வெலிகந்தையிலிருந்து திருக்கோணமடு, 24 கி.மீ. தூரம் ஒரு மணி நேரத்தில் பயணிப்பேன். போகும் பாதையில் யானை, கரடி, சிறுத்தை என்று மிக வேகமாக அதைக் கடந்து செல்வேன். ஒரு நாள், என்னையும் எனது மூத்த மகளையும் ஐந்து கி.மீ. தூரம் யானை துரத்த, யானையைத் துரத்தி துப்பாக்கிகள் சகிதம் பண்ணை முகாமையாளர் ஜீப்பில் வர, பெரும் திகில்.

1967ல் கொழும்பிலும் எனது சைக்கிள் ஒரு வருடம் இருந்திருக்கிறது. கொழும்பின் அத்தனை மூலை முடுக்குகளுக்கும் இந்த சைக்கிள் சென்று வரும். மறைந்த மலையக எழுத்தாளர் என்.எஸ்.எம். ராமையா அவர்களை அவரது வீட்டுக்கு அடிக்கடி போய் சந்தித்து வருவேன். அந்த நாட்களில் அவர் ஒரு ஹாட்வெயார் கடையில் கணக்கப்பிள்ளையாக இருந்த ஞாபகம். கிரான்பாஸ் வீதியால் நானும் ராமையாவும் சைக்கிளை உருட்டிக் கொண்டு பலாப்பழம் சாப்பிட்டுச் சென்ற காட்சி இன்னமும் மனத்தில் ருசிக்கிறது.

படிக்கின்ற காலத்தில் எனது சைக்கிளில் பயணித்த எத்தனையோ சினேகிதிகளை, மதினிமார்களை இப்பொழுதும் நினைத்துப் பார்க்கிறேன். வேண்டுமென்றே அவர்களை சைக்கிளிலிருந்து கவிழ்த்துப் போடுவதும், எல்லோரும் குலுங்கிச் சிரிப்பதும் அதற்குப் பெயர் கவிதை என்று சொல்வோமா?   இடையில் ஒரு விடயத்தைச் சொல்ல வேண்டும். அந்த நாள்களில் சைக்கிள் ஓடக் கற்றுக் கொள்வதென்பது ஒரு பெரிய காரியம். சைக்கிள் ஓடத் தெரியுமென்றால் அவரை மற்றவர்கள் ஒரு விமான ஓட்டிக்கு நிகராக மதிப்பார்கள்.

பழகுவதற்கென்றே சைக்கிள் பழுது பார்க்கும் கடைகளில் இரண்டு டயர்கள் மட்டுமுள்ள இறதல் சைக்கிள்களை வாடகைக்கு விடுவார்கள். ஒரு மணித்தியாலம் பத்துச்சதம் வாடகை. இரண்டு நண்பர்கள் இரண்டு பக்கமும் பிடித்துக் கொள்ள இளவரசர் இறந்த சைக்கிளில் ஏறி அமர்வார். ஏறுவதும் விழுவதுமாக இரண்டு மாதங்கள் கடந்த பிற்பாடு ஒரு நாள் எப்படியோ சைக்கிள் இவரை ஏற்றிச் செல்லும். அப்படித்தான் நாங்கள் சைக்கிள் பழகினோம். இப்பொழுதெல்லாம் இரண்டு நாட்களில் சின்னஞ்சிறுவர்கள் சிட்டுக்கள் போல் சைக்கிளில் பறந்து செல்கிறார்கள். இதை என்னவென்பேன்?   அதேநேரம் எனது ஊரில் சைக்கிள் ஓடத் தெரியாதவர்கள் எத்தனையோ பேர் இன்னும் இருக்கிறார்கள்.

இன்று சைக்கிளுக்கு ஐம்பது வருடம். இத்தனை ஊருக்குச் சென்றும் இந்த சைக்கிளை நான் களவு கொடுக்கவில்லை. அதுதான் பெரும் சாதனை. பெரும் அதிர்ஷ்டம். (சென்ற வாரம், வாழைச்சேனை பொலிசார் ஒரு வருட காலத்திற்குள் 61 சைக்கிளைத் திருடி சாதனை படைத்த ஒரு இளைஞனைக் கைது செய்திருக்கிறார்கள்)   நான் எனது வாழ்நாளின் பெரும் பயணங்களை சைக்கிளிலேயே கழித்திருக்கிறேன். சென்ற வாரம் என்னைப் பரிசோதித்த எனதருமை நண்பர் சத்திரசிகிச்சை நிபுணர் டாக்டர் தம்பாவிற்ற அவர்கள் சைக்கிள் ஓடுவதை மெதுவாகக் குறைத்து விடுங்கள் என்று சொல்லி ஒரே போடு போட்டு விட்டார்.

எனது வயல் வரப்புகளையும் மரங்களடர்ந்த சோலைகளையும் நீரோடைகளையும் கடற்கரைகளையும் மனிதர்களையும் நண்பர்களையும் நினைத்த நேரத்தில் காண்பதற்கு என்னை அழைத்துச் சென்ற என்னுயிர்த் தோழன் என்னுடைய இந்த சைக்கிள். எனது இறுதிப் பயணத்தில் அற்புதமான இந்த உலகை விட்டும் இந்த வாழ்வின் கடைசி யாத்திரையை எனது சைக்கிள் மூலமே நான் கடந்து சென்று மண்ணுக்குள் மறைந்தால் எப்படியிருக்கும்?

என்னருமை சைக்கிளே! உன்னிடமிருந்தும் விடை பெறுகிறேன்.

***

நன்றி : எஸ்.எல்.எம். ஹனீபா , மின்னஞ்சல் : slmhanifa22@gmail.com

காலம் : எஸ்.என்.நாகராஜனின் வாக்குமூலம்

எஸ்.எல்.எம். ஹனீபா அவர்களிடமிருந்து இன்று வந்த மெயில்…

***

கடந்த இருபத்தியிரண்டு வருடங்களாக காலம் சஞ்சிகை கனடாவிலிருந்து திரு. செல்வம் அவர்களை ஆசிரியராகக் கொண்டு வெளிவருகிறது என்பதை நாம் அறிவோம்.

காலம் 40, 41 இதழ் சென்ற ஜனவரியில் மிகவும் காத்திரமாக வெளிவந்திருக்கிறது. இதழில் தமிழ் எழுத்துலகின் முன்னோடிகள் பலரும் பங்களிப்புச் செய்திருக்கிறார்கள். சச்சிதானந்தன் சுகிர்தராஜா, அ.முத்துலிங்கம், ஜெயமோகன், அம்பை, தமிழ்நதி, நாஞ்சில் நாடன், எஸ்.ராமகிருஷ்ணன், சேரன், கிண்ணியா எஸ்.பாயிஸா அலி, அனார், உமா சக்தி, செழியன், எம்.ஏ. நுஃமான், யமுனா ராஜேந்திரன், பொ.வேல்சாமி, மு.புஷ்பராஜன், சுல்பிகா, சங்கர் ராமசுப்பிரமணியம் என்று படைப்பாளிகள் பலரும்.

இதன் சிறப்பம்சமாக உயர்திரு எஸ்.என். நாகராஜன் அவர்களின் நேர்காணலைக் குறிப்பிடலாம்.

யமுனா ராஜேந்திரன் நேர்காணலை மிகவும் சிறப்பாகச் சாத்தியமாக்கியிருக்கிறார். சிற்றிதழ்களுக்கேயான இடநெருக்கடி காரணமாக 102 பக்கங்களிலான முழு உரையாடலின் தேர்ந்தெடுத்த சில பகுதிகள் மட்டுமே காலம் சஞ்சிகையில் இடம்பெற்றிருக்கிறது. இதன் முழு உரையாடலும் நூல் வடிவில் சென்ற மாதமே தமிழகத்தில் நூலாக வெளிவந்துமிருக்கிறது.

நாமெல்லோரும் இந்த உரையாடலை படிக்க வேண்டிய நிர்ப்பந்தங்களுக்குள் நம்மை திரு. நாகராஜன் அவர்கள் இழுத்து விட்டிருக்கிறார்கள்.

அந்த உரையாடலின் கடைசிப் பத்தியை இங்கு குறிப்பிடுகிறேன்.

இறுதியாக ஏதேனும் சேதி சொல்ல விரும்புகிறீர்களா?

SNR2சோசலிசமெல்லாம் அப்புறம் பார்க்கலாம். மனித இனமே அழிந்து போய்விடும் நிலையிலிருக்கிறது. காப்பாற்றியாக வேண்டும். புவி வெப்பம் அதிகரித்துக் கொண்டிருக்கின்றது. அதைத் தடுக்கும் அளவு நாம் தயாராகவில்லை. அதன் விளைவால் பனி மலைகள் உருகி விடும். எனவே முதலில் மக்களைக் காப்பாற்றியாக வேண்டும். அதற்கு முதலில் ஆயுங்களைக் கீழே போட வேண்டும். நமது நாட்டிலிருந்துதான் இதைத் தொடங்க வேண்டும். ஆபிரிக்காவிலிருந்து முடியாது. அங்கே பழங்குடி மக்களுக்குப் பணத்தைக் கொடுத்துக் கெடுத்து விட்டார்கள்.

வெள்ளைக்காரர்களைப் பொறுத்தவரையில் பிற நாடுகளிலிருந்து கொள்ளையடித்த பணம் இருக்கிறது. அவர்களைக் காப்பாற்ற வேண்டிய தேவையில்லை.

இந்தியாவிலும் இந்தோனேசியாவிலும்தான் முஸ்லிம் மக்கள் தொகை அதிகம். அவர்கள் ஏகாதிபத்திய எதிர்ப்புக்கு வந்துள்ளார்கள்.

அடுத்து பெண்கள். அவர்கள் முன்வர வேண்டும். குறிப்பாக வெள்ளைக்காரப் பெண்கள் முன்வர வேண்டும். அதற்குக் கோரிக்கை விடுக்க வேண்டியவர்கள் முஸ்லிம் பெண்கள். அவர்கள் சகோதரிகளாக உணர வேண்டும். பரஸ்பர பாதிப்புக்களையும் அழிவுகளையும் உணர வேண்டும். போர்களால் அதிகமான கணவர்களை இழந்தவர்கள் முஸ்லிம் பெண்கள். அவர்கள் நிச்சயம் முன்வருவார்கள்.

அது ஆயுதமற்ற போராட்டமாக இருக்கும். ஆயுதப் போராட்டத்தால் இனி உலகைக் காப்பாற்ற முடியாது. ஏனென்றால் உங்களிடமிருக்கிறது அவர்களிடமும் இருக்கிறது.

இந்தியாவிலிருந்து மூன்று பிரிவினர் முன்வர வேண்டும். பசுமைப் புரட்சியை எதிர்த்து நிற்கக் கூடிய ஏழை விவசாயிகள். முஸ்லிம் இளைஞர்கள், மற்றும் தலித்துகள். பெண்கள் தனியாக ஓர் அமைப்பாக வந்தாக வேண்டும்.

இந்த உலகத்தைக் காப்பாற்ற வேண்டுமென்றால் அமெரிக்காவின் வெளிநாட்டுக் கொள்கையை எந்தக் காரணத்தைக் கொண்டும் ஆதரிக்கக் கூடாது. மற்றவர் தலையிடுவதை ஏற்றுக் கொள்ள முடியாது. அந்தந்த நாட்டு மக்கள்தான் அவரவர் பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்ள வேண்டும். இரண்டாவது நமது வாழ்க்கை முறையை மாற்றிக் கொள்ளத் தயாராக வேண்டும். தேவைகளைக் குறைத்துக் கொள்ளும் அடிப்படையில் சென்றால்தான் உலகம் வாழ முடியும். தேவைகளைப் பெருக்கிக் கொண்டு போனால் உலகம் அழிந்து விடும்.

தள்ளாத வயதிலும் எஸ்.என்.நாகராஜன் அவர்களின் இந்த வாக்குமூலம் சத்தியம் நிரம்பியது.

***

நன்றி : எஸ்.எல்.எம். ஹனீபா

ஆண்மை 13 – எஸ்.பொ. கதைகள்

குறிப்பு : இந்தப் பக்கங்களிலிருந்து காப்பி செய்யும் நண்பர்கள் தயவுசெய்து ‘லிங்க்’ கொடுக்கவும். நன்றி (இப்படித்தான்!). காக்காவ உருவுஉருவுண்டு உருவி (சாதாரண அர்த்தம்தான்..) கதையை வாங்கியிருக்கிறேன், தெரியுமா? – ஆபிதீன்

***

அன்புள்ள ஆபிதீன்,

குருநாதருடைய ஐம்பத்து மூன்று கதைகளடங்கிய “எஸ்.பொ. கதைகள்” தொகுதியிலிருந்து “ஆண்மை 13” கதையை அனுப்புகிறேன். அவருடைய புகழ்பெற்ற தேர் கதைக்கு நிகரான கதை. அங்கு சண்முகத்தார் வருகிறார். இங்கு சாம்பசிவத்தார் வருகிறார். யாழ்ப்பாணத்துத் தமிழை அவர் போல் வாலாயமாக்கிக் கொண்டவர்கள் எவருமில்லை என்பேன். இன்றைய வாசகனுக்கு இந்தத் தமிழ் பெரும் சங்கக் குறைச்சல்தான். ஆனாலும் அதிலுள்ள கலை நேர்த்தியும் சொல்லும் அழகும் ரொம்பக் கலாதியானது. இந்தக் கதை நமது மதிப்புமிகு எழுத்தாளர் ஜெயமோகனுக்கும் பிடித்த கதை என்பதால் இவற்றுக்கு இரட்டிப்பு மகிமை உண்டு.

இன்று சுதந்திர நாள். நானும் ஸபீரும் மிகவும் சுதந்திரமாக இந்தக் கதையை டைப் பண்ணி அனுப்புகிறோம். வெளியே மழை தூறிக் கொண்டிருக்கிறது.

அன்புடன்
ஹனீபாக்கா / 4th Feb ‘2013

***

spo-VB0000251

ஆண்மை 13 –

எஸ். பொன்னுத்துரை

ஈச்சேரில் விழுந்த” சந்திர சேகரம் கோழி உறக்கத்தை வாலாயம் பண்ணி, அதனைச் சுகிக்கின்றார். யாழ்தேவியிலே பகற் பயணம். அகோர வெயில். காட்டு வெக்கை. இத்தனைக்கும் மேலாகச் சிவசம்பு சாப்பாட்டுக்கடைச் சோற்றைக் கொறித்தார். மனசார ஒரு மயக்கம். சாய்வு நாற்காலியிற் தாம் தூங்குவதான நினைப்பே அவருக்கு யாரோ உடம்பைப் பிடித்து விட்டது போன்ற சுகத்தைக் கொடுத்தது.

வள்ளிசாக மூன்று ஆண்டுகளுக்குப் பின்னர், அவருடைய குடும்பம் தாயடி வீட்டிலே வந்திருக்கிறது. பெத்துப் பெருகிய குடும்பம். அவருடைய மனைவி சரஸ்வதி மூலம் ஐந்து பிள்ளைகளையும் பெட்டைக்குஞ்சுகளாகவே பீச்சி விட்டாள். அரிய விரதங்கள் பிடித்து, இருக்காத தவம் எல்லாம் கிடந்து, கண்ட கண்ட தெய்வங்களையெல்லாம் கையெடுத்துக் கும்பிட்டது வீண் போகவில்லை. சோட்டைத் தீர்க்க ஆறாம் காலாகப் பொடியன் பிறந்தான். சந்தான விருத்தியில் அவனே மங்களமாக அமைந்தான்.

பயணக் களைப்பைப் பாராட்டாமல் சரஸ்வதியும் புத்திரிகளும் வீட்டைத் துப்பரவு செய்யும் உழவாரத் திருப்பணியில் ஈடுபட்டிருக்கிறார்கள்.

சந்திரசேகரத்தை சயனநங்கை முற்றாகச் சரித்துவிடவுமில்லை. இமைகளைப் பிளந்து காங்கை ஏறுவதான கூச்சத்தில், அவருடைய கண்களின் இமைக் கதவுகள் சற்றே அகலும். இமைகளின் ஈயக் குண்டுகளைச் சுமக்க இயலாது என்கிற வாக்கில் மீண்டும் மூடிக் கொள்ளும். இமைகள் இலேசாகத் தோன்றுகின்றன. முற்றத்தில் மாமரங்கள் செழுங்கிளைகள் பரப்பியிருக்கின்றன. அவை வெக்கையை உறிஞ்சுவதினாலேதான் இத்தகைய இதம் விடிந்திருக்கிறது என்பதை அனுமானிக்க முடிகிறது. மாமரங்களுக்கப்பால் “கேற்” தெரிகிறது. அதிலே கறள் மண்டிக் கிடக்கிறது.

கேற்றிலே நிலை குத்திய விழிகளைப் பிரித்தெடுத்து, இடப்பக்கமாகவே மேய விடுகிறார். மதிலில் பாசி சடைத்து நுதம்பி வழிகின்றது. சுவரின் வெடிப்பிலே ஆலங்கன்று ஒன்று வேர் விட்டு, கொழுத்து வளர்கின்றது. “உதை உப்பிடியே வளரவிட்டால் சுவருக்கு மோசம் தரும்” ஐயரின் வளவைச் சுற்று மதில் வளவு என்றுதான் சொல்வார்கள். அந்த எல்லையைப் பற்றியும் அறிக்கையைப் பற்றியும் கவலையில்லை. வலப்பக்கமும் கொல்லையும் வேலியும். வலப்புற வேலியிலே ஊரும் அவருடைய பார்வை தரிக்கின்றது. அந்த வேலி கறையான் தின்று இறந்து கிடக்கின்றது. கோழி ஒன்றும் அதன் குஞ்சுகளும் ஒரே சுரத் தொனியைச் சாதகஞ் செய்து கொண்டு, வேலியிலுள்ள கறையான்களை மேய்கின்றன. … பூரணத்திற்கு வேலியைப் பற்றி என்ன கவலை? சோட்டைக்குத்தானும் அவளுக்கு ஒரு பெட்டைக்குஞ்சு பிறக்கவில்லை. சீமாட்டிக்கு எல்லாம் கடுவன்கள்.

வேலியையும் தாண்டி சேகரத்தாரின் மனம் அலை மோதுகிறது. முப்புறமும் எரிக்கமுனையும் முக்கண்ணனாகச் சாம்பசிவத்தார் காட்சியளிக்கிறார். சொற்கள் அனற் குழம்பை அள்ளிச் சொரிகின்றன.

“உந்த வேலியைப் பிரிச்செறிஞ்சு போட்டு மதிள்தான் கட்ட வேணும். உவளவை கோயில் கிணத்திலை போய்த் தண்ணி அள்ளட்டுமன்… ம்… பக்கத்திலை பாவங்கள் – ஏழை பாளையள் – வந்து தண்ணி அள்ளட்டும், போகட்டும் வரட்டும் என்று ஒரு பொட்டு விட்டால், தட்டுவாணியள் மாப்பிள்ளையல்லோ கொள்ளப் பாக்கிறாளவை…”

“பொட்டு” மேவப்பட்டு, பனையுயரத்தை எட்ட முனைந்த புதுவேலி சாம்பசிவத்தாரின் வைராக்கியத்தைப் பறை கொட்டியது. பூரணத்தைப் பார்க்க முடியாது. தூண்டிற் புழுவின் ஆக்கினையைத் தமதாக்கிச் சந்திரசேகரம் சாம்பினான்.

அழகு என்ற சொல்லின் அர்த்தப் பொலிவு முழுவதையும் தனதாக்கி எழில் பிழிந்தவள் பூரணம். இடையை இறுக்கிச் சுருக்கும் பாவாடையோடும், குரும்பை மார்பை அமுக்கி விறைத்த சட்டையோடும், சருவக்குடம் சுமந்து, அவள் தன் வீட்டிற்கும் அயல் வீட்டுக் கிணற்றுக்கும் நடைபயில… அந்த நடைபயிலும் நர்த்தனைக் கால்களிலே தன் உள்ளத்தை வெள்ளிப் பாதசரமாகத் தொங்க விட்டு…

விழிமொழிக் கொஞ்சல் முற்ற முற்ற, கிணற்றடி கமுக மரவட்டில் காதற்கடிதங்கள் கனிந்து தொங்கத் தொடங்கின. கமுக மரம் சமத்தான தபாற்காரன்தான். ஆனால் காற்றும் காகமும் செய்த திருக்கூத்தால் பூரணத்தின் கடிதமொன்று சாம்பசிவத்தின் கைகளிலே கிட்டியது. உறவு பிளவுற்றது. வேலி பனையுயரத்தை எட்ட முனைகிறது.

வேரோடி விளாத்தி முளைத்தாலும் தாய்வழி தப்பாது என்று சொல்வார்கள். தாய்வழியில், பூரணம் சந்திரசேகரத்தின் மனைவியாக வாழத்தக்க உறவு முறை. ஆசையின் தொங்கு தாவல்கள், பூரணத்தை அடைவதற்குத் தாயின் ஆதரவைத் திரட்டும் நள்ளல். இரவுச் சாப்பாட்டின் போது இதைப் பற்றி சேகரம் மெதுவாகப் பிரஸ்தாபிக்கிறான். சித்திரைப் புழுக்கத்திற்காக விறாந்தையில் விசிறியுடன் இருந்த சாம்பசிவத்தாரின் செவிகளிலே அந்த உரையாடலின் சில நறுக்குகள் விழுந்து விடுகின்றன. காலம் அப்பிய சாம்பற் புழுதியை உதிர்த்துக் கொண்டு, கோபம் அம்மணமான அக்கினி உடம்பைக் காட்டலாயிற்று.

“உங்கை என்ன காத்தையைக்… கதையள்? இப்பவே தாய்க்கும் மேனுக்கும் சொல்லிப்போட்டன். அந்த எடுப்பை மறந்து போடுங்கோ. நான் மசிவனென்டு கனவிலும் நிலையாதையுங்கோ… உதுக்குக் கன்னிக் கால் நடுகிறதிலும் பார்க்க நான் பாடையிலைப் போக ஓமெண்டுவன்”.

அதிலே தொனித்த உறுதி சேகரத்தின் தாய்க்குத் தெரியும். மகனுடைய ஆசையின் பக்கம் தன்னால் சாய முடியாது என்ற நிதர்சனத்தின் உறைப்பு.

“உங்களுக்குத்தான் ஆண்டவன் கண்டறியாத தொண்டையைப் படைச்சிருக்கிறான். இப்ப என்ன நடந்து போச்சு எண்டு துள்ளுறியள்? இவன் வாயுழையைப் புசத்துறான் எண்டு கேட்டுக் கொண்டிருந்தால், நான் என்ன சுகத்தைக் கண்டன்? மத்தளம் போல இரண்டு பக்கமும் அடிபடுறன்…” என்று சலித்து, மூக்குச் சிந்தி, முன்றானைக்கும் வேலையைக் கொடுத்தாள் தாய்.

தொடர்ந்து புகுந்த மௌனம் நீண்டது.

“டேய் சந்திரன்! ஏண்டா, இப்படி எங்களைக் கொல்லுறாய்? உன் விருப்பப்பட்டி ஆட, எனக்கும் உன் கோத்தைக்கும் முதலிலை ஏதேன் நஞ்சைத்தாவன்? கண்டறியாத பலகாரத்தைக் கண்டவனைப் போல, இடியப்பக் காரியின்ரை வாடிப்போன நோடாலத்தை நினைச்சு இந்தப் பேயன் உருகுகிறான்…” என்று விவகாரத்திற்குச் சாம்பசிவத்தார் புதிய வேகம் கொடுத்தார்.

அடுக்களையிலிருந்து எவ்வித சளசண்டியும் எழும்பவில்லை. இளகிய இரும்பும், கருமத்தில் மனம் குத்திய கொல்லனும்! குரலின் சுருதியைத் தாழ்த்தி, அதிலே பாசத்தைக் குழைத்து, “தம்பி, நீ ஒருத்தன் நல்லா வாழ வேண்டுமெண்டுதானே இவ்வளவு பாடுபட்டம்? உனக்கு ஒரு கெடுதல் வந்து அண்ட விட்டிடுவமே? கலியாணம் எண்டால் சின்னச் சோறு கறி ஆக்கிற அலுவலிலை. அதைப் பெரியவங்களின்ரை பொறுப்பிலை விட்டிடு.. சோதினை பாஸ் பண்ணினாப் போலை போதுமே? நல்ல உத்தியோகம் ஒண்டிலை உன்னைக் கொழுவிவிட வேணும் எண்டு நான் ஓடித் திரியிறன். நீ என்னடா எண்டா குறுக்கால தெறிக்கப் பார்க்கிறாய்… இனிமேல், ஒண்டு சொல்லிப் போட்டன். அந்தப் பலகாரக்காரியளின்ரை கதை இந்த வீட்டிலை எடுக்கப்படாது…” எனப் பேசி முடித்தார்.

பேச்சுக்கு முத்தாய்ப்பு வைத்ததுடன் சாம்பசிவத்தார் நின்று விடவில்லை. ஓடி அலைந்து பிற்கதவுகளில் நுழைந்து பிடிக்க வேண்டியவர்களைப் பிடித்து இழுக்க வேண்டிய கயிறுகளை இழுத்து மகன் சந்திரசேகரத்தை நல்லதொரு உத்தியோகத்திலே மாட்டிக் கொழும்புக்கு அனுப்பி வைத்தார். அதற்குப் பின்னர்தான் சாம்பசிவத்தார் நிம்மதியாகத் தூங்கினார் என்று கூடச் சொல்லலாம்.

தூங்குவதான பாவனையில் பழைய சம்பவங்களை அசை போட்டுக் கொண்டு கிடக்கிறார் சந்திரசேகர்.

“சரசக்கா! எப்பிடிப் பாடுகள், உடம்பு கொஞ்சம் இளைச்சுக் கிடக்குது” – இது பூரணத்தின் குரல்.

“அவளின்ரை குரல் அப்பிடித்தான் கிடக்குது? ஒரு உடைவோ ஒரு கரகரப்போ?”

பக்கத்து வீட்டாரைப் பற்றிய நினைவின்றி இயந்திர வாழ்க்கை உருளும் கொழும்பில் வாழ்ந்த பிள்ளைகளுக்கு அயல் வீட்டுப் பிரிவு புதுமைச் சுவையை ஊட்டுகிறது.

“வாருங்கோ பூரணமக்கா! பழக்கமில்லாமல் பூட்டிக் கிடந்த வீடு. உதைத் துடைச்சுத் துப்பரவாக்கிறதுக் கிடையிலை இடுப்பு முறிஞ்சு போடுமெணை. உதென்ன சருவச் சட்டீக்கை?”

“இதெணை கொஞ்சம் இராசவள்ளிக் கிழங்கு. புள்ளையளுக்குப் பிரியமா இருக்குமெண்டு கிண்டினனான். இதுதானே மூத்த பொடிச்சி? உங்கைப் பாருங்கோவன் நல்ல வடிவா வளந்திருக்கிறான். எக்கணம் என் கண்ணும் பட்டுப்போகும்… எடுங்கோ புள்ளை. ஐயா நித்திரையே? அவருக்கும் கொஞ்சம் கொண்டு போய்க்குடு தங்கச்சி…”

சந்திரசேகரத்தார் தான் நித்திரையில் ஆழ்ந்து விட்டதாக நடிக்கிறார். “ஐயா, நித்திரையெண்டால் எழுப்பக் கூடாது” என்ற ஞாயிற்றுக்கிழமை – பிற்காலத்தில் போயா தின – ‘மெட்னி’த் தூக்கங்களுக்கு விதிக்கப்பட்டிருந்த பொதுவிதி அவரைக் காப்பாற்றுகிறது.

“பழைய பூரணமே? பெருவிரல்களால் பத்து இடங்களில் குழிதோண்டி, இரண்டு வார்த்தைகள் பேசத் திக்குவாளே, அந்த மங்குளிப் பெண்ணா இவள்? இப்பொழுது கதை கண்டவுடன் சொர்க்கம்”

சந்திரசேகரத்தாரின் மனம் நினைவோடையைக் கிழித்துச் செல்கின்றது.

உத்தியோகமான புதிதிதில் கொழும்பிலே போர்டிங் சீவியம். அலாம் மணி – பிளேன் டீ – பேப்பர் – முகச்சவரம் – தந்த சுத்தி – குளிப்பு முதலியன் – பாண் – விறுக்கு நடை – பஸ் – ஓட்டம் – கந்தோர் – அலுவல்கள் – டீயும் முசுப்பாத்தியும் – அலுவல்கள் – சோறு என்ற நினைப்பில் கல்லைக் கொறிக்கும் லன்ச் என்ற வித்தை – வம்பு மடம் – அலுவல் – டீ – நடை – பஸ் – மெது நடை – அரட்டை – சாப்பாடு – இங்கிரமெண்டைக் காப்பாற்றப் படிப்பு – லைட் அவுட் – தூக்கம்!

இராணுவ ஒழுங்கிலே நேரத்தின் ஆட்சிக்குள் உடலை வசக்கி எடுக்கும் இயந்திர இயக்கம். பின்னேர டீயுடன் ஒரு வடை – கடுதாசி விளையாட்டு – வசுக்கோப்புப் படம் என்ற விதிவிலக்குகளுக்கு மேற்படி நேரசூசியில் மிகமிக ஒறுப்பாக அனுமதி வழங்கப்பட்டிருந்தது. மற்றும் பிரக்ஞை கூட ஸ்மரித்த இயக்கம். பக்கத்து வீட்டுப் பூரணத்தின் முகம் தலை நீட்டுவதுண்டு. நேரத்தின் இராக்கதம் அதனைப் பிடித்து விழுங்கும்.

சாம்பசிவத்தார் அனுபவசாலி, மகனை “தனிக்க” விடாது அடிக்கடி கொழும்புக்கு இஷ்டமான சோட்டைத் தீன்களுடன் வந்தார். எத்தனையோ குழையடி கோசுகளுக்குப் பிறகு, சரஸ்வதியை அவனுடைய வாழ்க்கைத் துணைவியாக்கி விட்டார். சரஸ்வதி ஆதனபாதங்களுடன் சீமாட்டியாக வந்து சேர்ந்தார். “அப்பன் கீறிய கோட்டைத் தாண்டாத சற்புத்திரனாக” நற்பெயரெடுத்து சந்திரசேகரம் இல்லற வாழ்க்கையில் இறங்கினான். மூன்று ஆண்டுகளாக மலடியோ என்று பூச்சாண்டி காட்டிய சரஸ்வதி, தொட்ட சொச்சம் விட்ட மிச்சம் ஐந்து பெண்களையும் ஒரு கடுவனையும் அடுக்கடுக்காகப் பெற்று விட்டாள். அத்துடன் கணவருக்கு “ஆர்” விகுதியையும் சேர்த்து சந்திரசேகரத்தாராக மகிமைப்படுத்தி விட்டார். அவள் தாயில்லாதவள். நல்லதுக்கும் கெட்டதுக்கும் மாமியார் வீடுதான். மூன்றாம் பிள்ளையின் பிரசவ வீட்டில் சாம்பசிவத்தார் கண்களை மூடினார். “பேத்தி பிறந்த ஜாதக பலன்” என்று அந்த நிகழ்ச்சிக்கு விவரணம் கூறிய ஊர்ச்சனம், “நெய்ப்பந்தம் பிடிப்பதற்கு ஒரு பேரன் இல்லையே” என்று ஒறுவாயையும் சுட்டிக்காட்டியது.

சாம்பசிவத்தாரின் மனைவி வலுத்த சீவன். ஆறாம் பிள்ளைப் பேறுக்காக பழக்க தோசத்திலேதான் வீட்டுக்கு சரஸ்வதியைக் கூட்டி வந்தார். அவளுடைய தாயாருக்கு இயலாத நிலை. பொடியன் பிறந்தான். அவனைத் தடுக்கிலே கண்டு களித்த நிலையிலே பெத்தாச்சிக் கிழவி மோசம் போனாள். ஆண்டு திவசத்திற்குப் பிறகு இந்த வீட்டை அவர் சரியாகப் பராமரிக்கவில்லை. பொடியனுக்கு இப்பொழுது வயது நாலு. “ஊமை” என்ற பட்டத்தைச் சுமக்கிறான். டாக்டர்கள் அவன் பெரிய “பேச்சாளனாக” விளங்குவான் என்று அபிப்பிராயப்படுகிறார்கள். அவைன் பற்றி வளர்ந்து வரும் விசாரமும் ஒரேயடியாக வீட்டோடு வந்து குடியேறுவதற்குக் காரணமாக அமைந்தது.

“மூத்தவன் இந்த கோர்சுதான் யூனிவேஸிடி என்றன்ஸ் எடுத்தவன். கூப்பிட்டிருக்கிறாங்களாலம். எடுபடுவன் எண்டுதானெணை சொல்லுறான்..” பூரணம் இன்னும் போகவில்லை. எல்லோரும் பேச்சிலே குந்திவிட்டார்கள்.

“என்னை எடுத்தவர்? என்ஜினியரிங்கோ?” சரஸ்வதி மூத்த பெண் திலகம் கேட்கிறாள். அவள் யாருடனும் சட்டென்று பழக்கம் பிடித்துக் கொள்ளுவாள்.

“இல்லை, புள்ளை டாக்குத்தர் படிப்புக்கும் போக வேணும் எண்டு இஞ்சினை சொல்லித் திரிஞ்சான்…” பூரணத்தின் குரலிலேய எவ்விதப் பெருமையும் மண்டவில்லை. புதிதாகச் சேர்ந்துள்ள பணத்தின் செருக்கு துளி கூட இல்லை.

சந்திரசேகரத்தார் மறுபக்கம் திரும்பிப் படுப்பதான அபிநயத்துடன் புரளுகின்றார். மனம் பூரணத்தைப் பற்றிய நினைவுகளிலே மொய்த்துச் சுவிக்கின்றது.

“கடையப்பக்காரியள்” என்று சாம்பசிவத்தார் சிந்திய சுடுசொற்கள் பூரணத்தின் தாயாரை வெகுவாகத் துன்புறுத்தியது. அன்று தொடக்கம் அவள் நாயாக அலைந்து, தன் மகளுக்குக் குடும்ப வாழ்க்கை ஒன்று குதரிச் செய்து விட்டாள். சின்ன வயது தொடக்கம் எல்வெட்டித் துறையாருடைய கடையிலே வேலை செய்த அநாதைப் பையன் சோமசுந்தரத்தைக் கைப்பிடித்த ராசி, அள்ளிக் கொடுத்தது. திருச்சி பீடிக் கொம்பனிக்கு ஏஜன்சி எடுத்து ஆரம்பமானது அவனுடைய தனி வியாபாரம். இன்று இங்கு ஒரு கடை, குருநாகலில் இரண்டு கடைகள், கொழும்பில் பீடிபக்டரி, கிளிநொச்சியில் வெள்ளாண்மைப் பூமி, ஐந்து லொறிகள் என்று செல்வம் பொங்கி வழிகின்றது. “புளியுருண்டை” வியாபாரமும் உண்டு என்று பேசிக் கொள்கிறார்கள். காகம் குந்தியே மாடு சாகப் போகுது? சென்ற ஆண்டு அவருக்கே ஜே.பி. பட்டமும் கிடைத்திருக்கிறது!

“ஓமெணை, அவர் யாவார விஷயமாத்தான் கொழும்புக்குப் போயிருக்கிறார். என்னதான் அள்ளிக் குவிச்சாலும் வீட்டுச் சோறுக்கும் தண்ணிக்கும் பொசிப்பில்லை. அந்தரிச்சை சீவியமெணை..”

“பூரணம் உண்மையிலை சீதேவிதான். இல்லாட்டில் என்னைக் கட்டிக் கொண்டுதானே கஷ்டப்பட்டிருப்பாள்? அவளுக்கு நாலும் கடுவன்கள். ஆசைக்குக் கூட ஒரு பெட்டையில்லை. அவளுக்கு எல்லாம் பெண்களாகப் பிறந்திருந்தாலும் கவலைய்யில்லை. தெறிச்சிப் பார்த்து நல்ல மாப்பிள்ளை எடுக்கிறதுக்கு வேண்டிய காசு இருக்கு. எனக்கு எல்லாம் பொடியன்களாகப் பிறந்தாலும் என்ன புண்ணியம்? சீனியரோடை நில், என்னைப் போலக் கிளாக்கராகு என்றுதானே சொல்லியிருப்பன்? இந்த வீடும் வளவும்! காடலைந்த முயலாட்டம் இந்த வளையை நாடி வநிதருக்கிறேன். சரஸ்வதி கொண்டு வந்ததுகள் சில ஈட்டிலை கிடக்கு. அதுகளை மீட்டாலும் கோமணத் துண்டளவிலை ஒரு வளவும், பேரளவுக்கு ஒரு வீடும் கட்டிக் குடுக்கத்தான் தேறும்…

பத்து வருஷ சேர்விஸோட ஸ்பெஷல் கிரேடிற்குப் போகேக்கிள்ளை எல்லாத்தையும் வெட்டிப் புளக்கலாம் எண்டுதான் நினைச்சன். நான் கிளறிக்கல் சேர்விஸிலை சேர்ந்து கொட்டப்பெட்டிச் சம்பளத்தோடை சமாளித்தது போலேதான் நடக்குது. சரசுவுக்கு என்ன தெரியும்? பிள்ளையளுக்கு என்ன விளங்கப் போகுது? பாவம், அதுகளும் ஏதோ அந்தஸ்தைப் பற்றிப் பெரிசா நினைச்சுக் கொண்டிருக்குதுகள்…”

காதலின் மெல்லிய உணர்ச்சிகள் என்ற பழைய நினைவுகளை அசைபோட்ட சந்திரசேகரத்தார் புத்திபூர்வமான லோகாயுத விசாரணையில் இறங்கி மனத்தைப் புண்ணாக்கி அப்படியே தூங்கி விட்டார்.

விழித்த பொழுது, வள்ளிசாக ஒரு மணி நேரமாவது தாம் தூங்கி விட்டதை அவர் உணர்ந்தார். கை கால்களை அலம்பிக் கொண்டு தேநீர் குடிக்க வந்தமர்ந்தார். சரஸ்வதி ராசவெள்ளிக்கிழங்கைக் கொடுத்தாள். “யார் தந்தது?” என்று கேட்காமலேயே சாப்பிடத் தொடங்கினார்.

“பூரணத்தின் சுபாவத்தைப் போலவே கிழங்கும் இனிக்கிறது”

“கேட்டியளேய்யா… இண்டைக்கும் நாளைக்கும் உலை வைக்கக் கூடாதாம். நாளையண்டைக்குத்தான் நல்ல நாளாம்…”

“கொழும்பிலை இருந்த உமக்குமெணை உந்தப் பஞ்சாங்களங்களைப் பாக்க நல்லாத் தெரியுது போல…”

“பூரணக்காதான் சொன்னா. இண்டைக்கும் நாளைக்கும் தானே சமைச்சு அனுப்பப் போறது எண்டும் சொன்னாவு. நான் வேண்டாமெண்டு சொல்லவும் அவ கேக்கிறாவு இல்லை…”

“ஓமணை உனக்கும் இஞ்சை துடைச்சுக் கழுவத்தானே ரெண்டு நாளும் சரியாப் போகும்”

“பூரணமக்கா தங்கமான மனுஷி.. பொடியளும் அப்பிடித்தான்”

“நான் கொஞ்ச நேரம் நித்திரை கொள்ளுறத்துக்குள்ளை நீர் ஊருலகமெல்லாம் அறிஞ்சிட்டீர்” என்று சிரித்தபடி தேநீரைக் குடித்து முடித்தார்.

“நான் ஒருக்கா வேலி அடைக்கிற நாகப்பனைப் பார்த்திட்டு வாறன்”

பூரணம் முற்றத்தில் நின்று சிரிக்கிறாள். அவரும் பதிலுக்குச் சிரித்தார்.

“மனசார இவள் ஒரு மனுஷியுந்தான், ஒரு வடிவுந்தான்”

நாகப்பனும் சின்னவனும் வேலியடைக்கிறார்கள். கொல்லை வேலி சின்னன். விடியற்புறம் வந்தவர்கள் அதனை அடைத்து முடித்த பிறகுதான் சாப்பாட்டைப் பார்த்தார்கள்.

வெயில் ஏறத் தொடங்கியது. பூரணத்தின் வளவுப் பக்கத்து வேலி பிரிக்கப்பட்டது. அடைப்பு வேலை ஆரம்பமாகியது. சந்திரசேகரத்தார் கூட மாட நின்று வேலை செய்கிறார். “கட்டுக்கோத்துக்” கொடுக்கக் கூட ஓர் ஆண் பிள்ளை இல்லையே.

சோட்டைக்குப் பிறந்த பொடியன் பூரணத்தின் இடுப்பிலே குந்தியிருக்கிறான்.

“நடுவாலை ஒரு பொட்டு வைச்சு அடையுங்கோ. புள்ளை குட்டியள் போய் வரட்டும்” என்று பூரணம் சொல்லுகிறாள்.

அந்தப் பொட்டினை அடைத்து தன் மகனின் வாழ்வைக் காப்பாற்றுவதாக சாம்பசிவத்தார் நினைத்தார்.

பொட்டுகள் உறவுக்கான வாசல்கள். உறவுகளே… அன்று பூரணத்தின் அழகிலே அவர் மனம் அலைந்தது. இன்று – அவளுடைய ஆளுமையிலே ஒரு கனவும் சுகமும் இருப்பதை உணர்கிறார். அந்தச் சுகத்தில் நெஞ்சிலை தைத்துச் சீழ் வைத்து விட்ட சிறாம்பை சந்திரசேகரத்தார் மெதுவாக இழுக்கிறார்.

இருபது வருடங்களுக்குப் பின்னர் “பொட்டு” ஒன்று விடப்பட்டு வேலி அடைக்கப்படுகின்றது.

***

espo-slfmh2b

எஸ்.பொவுடன்  எஸ்.எல்.எம். ஹனீபா  (தல ஜெதப்புல இக்கிற மாதிரி தெரியுது!)

***

நன்றி : எஸ்.பொ., ஹனீபாக்கா, ஸபீர்

***

போனஸ் : ? (pdf)

espo1பொன்னுத்துரை தன்னுடைய படைப்பாற்றலில் ஒரு பரிமாணத்தை மற்றதைக் காட்டிலும் கூடுதலாகவே சாதித்திருந்தார். அது அங்கதச்சுவை. அவருடைய ஒரு நூலின் அட்டை மீது வெறும் கேள்விக்குறி மட்டுமே இருக்கும். அட்டையைப் பிரித்தால் 80 பக்கங்க ளுக்கு உங்கள் சிந்தனையை ஒரு சூறாவளியில் பறக்க விட்டது போன்ற இலக்கிய அனுபவம். உண்மையில் அந்த 80 பக்கங்களை mind boggling என்று தான் கூறமுடியும். அங்கதச்சுவை என்பதை விட அங்கதனின் மகா சூரத் தந்தையான வாலிச்சுவை என்று தான் எனக்குத் தோன்றியது. – அசோகமித்திரன் (முன்னுரையில்)

லா.ச.ரா.வுக்கும் சுஜாதாவைப் பிடிக்கும்!

சொல்பவர் நம்ம ஹனீபாக்கா.  அவரை பகிரங்க விவாதத்திற்கு அழைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் 🙂

***

தம்பி ஆபிதீன்,

நேற்று சும்மா இருந்தாப்ல கணையாழிக் கட்டொன்றை எடுத்துப் புரட்டினேன். 1966 தொடக்கம் 70 வரையுமான தொகுப்புகள். உள்ளே சுஜாதா அவர்களின் கடைசிப் பக்கக் குறிப்புகளில் சிலது என் கண்களில் பட்டு சிரிக்கவும் சிந்திக்கவும் செய்தன. தமிழ் எழுத்துலகில் நுட்பமாக அவதானித்து படிமமாக வெளிக்கொண்டு வருவதில் அவருக்கு நிகராக யாரைச் சொல்ல முடியுமோ நானறியேன். லா.ச.ராவைச் சந்தித்த நேரம் அவரின் மேசையில் சுஜாதாவின் நைலோன் கயிறு நாவல் கிடந்தது. நான் கண்ணைக் காட்டி வியந்த போது, சுஜாதாவின் நடை எனக்குப் பிடிக்குமென்றார். இதோ அவர் எழுதிய நான்கு பத்திகள். – எஸ்.எல்.எம்,ஹனீபா

sujatha-kanayali3

ஆகாசவாணி

ஆகாசவாணி பற்றி சென்ற இதழில் ஒரு கட்டுரை வெளியாகியிருந்தது. மதராஸ் நிலையத்தில் சங்கீதக் கச்சேரி எனக்கு மிகவும் பயம். நல்ல ச, கச்சேரியாக இருக்கும். மெய்ம்மறந்து கேட்டுக் கொண்டிருப்பேன். பட்டென்று மென்னியை நெரித்து “இதுவரை பாடினார்கள். இனி மாட்டுத் தீவனத்தைப் பற்றி அகில பாரத உரை நிகழ்ச்சியில் விவசாய அதிகாரி ஒருத்தர் பேசுவார்” என்பார்கள். பேச்சு என்றால் என்ன? சரசரசர என்று பேப்பர் புரட்டும் சப்தம்… இரைக்க இரைக்க பதினைந்து நிமிஷ விஷயத்தைப் பத்தே முக்கால் நிமிஷத்தில் படித்து முடிப்பார். அதற்கப்புறம் நிலைய வித்வான் நொந்து போய் ஸாக்ஸபோன் வாசிப்பார்.

ஆகாசவாணியின் வெளிநாட்டுக்கான காலைத் தமிழ் நிகழ்ச்சியிலிருந்து ஒரு பகுதி:-

“ஆகாசவாணி” ‘சலம்’ – நாடகம்… இதை எழுதியவர் ஆர்.ஜி. கோவிந்தன்… இதில் நடிப்பவர்கள் ஆர்.ஜி. கோவிந்தன், ஆர்.ஜி. ஜனஜகுமாரி, ஆர்.ஜி. உஷா, தயாரிப்பு ஆர்.ஜி.ஜி. விந்தன்… “இதுவரை சலம் நாடகம் கேட்டீர்கள். நடித்தவர்கள் ஆர்.ஜி…” அறிவிப்பாளர் யார் என்கிறீர்கள்? ஆர்.ஜி. கோவிந்தனே!

ஈப்போவிலிருந்து இந்த நிகழ்ச்சிகளைத் தினம் தவறாமல் 3 வருஷம் கேட்டு வந்த நைனார் முகம்மது என்கிற கடல் கடந்த தமிழர் ஒருவர் தற்போது பேப்பர் துணி கிழிக்கிறார் என்று கேள்வி.

பெப்ரவரி 1966

**

ஒரு டெலிபோன் சம்பாஷணை

“ஹலோ”
“ஹலோ”
“யார் பேசுறது?”
“நான்தான்”
“நான்தான்னா யார்?”
“நான்தான் ரேவதி”
“ரேவதி! அப்பா இல்லையா?”
“இல்லை”
“அம்மா?”
“இல்லை”
“சரி, அப்பா வந்தா ராமன் போன் பண்ணினதாகச் சொல்லுகிறாயா?!”
“யாரு?”
“ராமன், எழுதிக்கோ ரா-ம-ன்”
“ரா எப்படி எழுதுவது?”
“சரிதான்! பாப்பா, வீட்டில வேறே ஒருத்தரும் இல்லையா?”
“சேகர் இருக்கான்”
“சரி சேகரைக் கூப்பிடு”
“சேகர் இந்தா” என்று ரேவதி சேகரிடம் (வயது 1) டெலிபோனைக் கொடுக்கிறாள்.

**

அச்சுப்பிழைகள்

அச்சுப்பிழைகளில் நகைச்சுவை இருக்கிறது. சம்போ கந்தா என்பதை சம்போகந் தா என்று அச்சடித்தவர் தன்னையறியாமல் நகைச்சுவை நாஸ்திகராகிறார். சென்ற இதழில் சில சுவாரசியமான பிழைகள் இருந்தன. சுவையுள்ள புத்தகம், சுமையுள்ள புத்தகமானது. “அத்தா, உனை நான் கண்டு கொண்டேன்” என்ற ஆழ்வார் வரி, “அத்தான் உனை நான் கண்டு கொண்டேன்” என்று சினிமாப் பாட்டாக மாறியது.

நான் இவைகளை எடுத்துரைப்பதில் என் நோக்கம் இதிலுள்ள ஹாஸ்யத்தைச் சொல்வதற்கே. அச்சகத்தார் என்னை மன்னிக்கவும். அவர்கள் தொழிலிலுள்ள கடினத்தை நான் அறிவேன்.

**

என்ன செய்கிறாய்?

லேய்ட்ம்டன் என்கிற கனடா தேசத்துக் கவிஞரை அறிமுகப்படுத்துகிறேன்:-
“பதினான்கு வருஷ
மண வாழ்க்கையில் நான் ஒரு தடவை
கூட
என் மனைவிக்குத் துரோகம் நினைத்ததில்லை.
நீ, நான் கேள்விப்பட்டேன், இன்னும்
கன்னி என்று.
உனக்குச் சம்மதமானால்
உன் கன்னிமையையும்
அபூர்வமான என் கற்பையும் பண்ட
மாற்றிக் கொள்ளலாம்,
நாளைக்கு மூன்றிலிருந்து ஐந்துக்குள்
என்ன செய்கிறாய்

ஏப்ரல் 1970

***

நன்றி : ஹனீபாக்கா (E-Mail : slmhanifa22@gmail.com)

« Older entries Newer entries »