என்னைத் தேடிக் கண்டுபிடிக்கவே நான் எழுதுகிறேன் – எம்.வி.வி. ஏற்புரை

‘காதுகள்’ நாவலுக்கு – 1993ஆம் ஆண்டு – சாகித்ய அகாதெமி விருது பெற்றபோது எம்.வி. வெங்கட்ராம் நிகழ்த்திய ஏற்புரை. நன்றி : அகரம் பதிப்பகம்.
***

M-V-Venkatramஒரு நீண்ட யாத்திரைதான். ஆயினும் எனக்குச் சோர்வோ விரக்தியோ ஏற்படவில்லை. அரை நூற்றாண்டுக்கும் மேலாக, சரியாகச் சொன்னால் 57 ஆண்டுகளாய் என் இலக்கியப் பிரயாணம் நிகழ்கிறது. படைப்பாளிக்கு மரபு ஏது? கைகள் எழுத மறுக்கின்றன, சில ஆண்டுகளாய். எனினும், சிருஷ்டி வேட்கை என்னுள் தகித்துக்கொண்டு இருக்கிறது. போன வருடம்கூட என் புத்தகம் ஒன்று வெளிவந்தது.

வாசகர்களையும் விமரிசகர்களையும் பற்றிச் சிறிதும் கவலைப்படாத இலக்கியப் படைப்பாளி நான். என்னைப் புரிந்துகொண்டு, நான் எங்கு இருக்கிறேன் என்பதைக் கண்டுபிடித்து, என் படைப்புகளைச் சுவைத்துப் போற்றுகிற ரசிகர்களை நான் போற்றுகிறேன். ஒரு லட்சம் பேர் கை தட்டியதால் என் இலக்கியப்பணி வளரவில்லை. ஒரு சில ரசிகர்களால் என் படைப்பாற்றல் வலுப்பெறுகிறது.

வாழ்க்கையை, என்னை வாழவைக்கிற இந்தச் சமுதாயத்தை இங்குள்ள உயிரினங்களையும் உயிரற்ற சடப் பொருள்களையும் நான் நேசிக்கிறேன். இந்த மண்ணுக்கு, இந்தச் சுழலுக்கு, சூழலுக்கு, இந்த இன்பதுன்பத்துக்கு என்னை அனுப்பிவைத்தது யார் அல்லது எது என்று கண்டுபிடிக்க நான் ஓயாமல் செய்யும் முயற்சிதான் என்னுடைய இலக்கியப் படைப்பு. அதாவது, என்னைத் தேடிக் கண்டுபிடிக்கவே நான் எழுதுகிறேன்.

மனித சமுதாயம் குற்றம் குறைகள் நிரம்பியதாகத்தான் இருக்கும். அதைக் கண்டு எந்தக் கலைஞனுக்கும் ஆற்றாமையும் ஆத்திரமும் உண்டாவது இயற்கை. சமுதாயத்தைக் கண்டிக்கவும் கேலி செய்யவும் இலக்கியப் படைப்பாளி முனைகிறான். சமுதாயத்தைத் திருத்தவும் புரட்சி செய்யவும் தன் எழுத்தாற்றலையும் படைப்புத் திறனையும் பயன்படுத்துகிறான்.

சொல்லுக்குள்ள வசிய சக்தி மகத்தானது. படைப்பாளியின் சொல் முதலில் அவனையே தன்வசப்படுத்திக் கொள்கிறது. பிறகு மக்களைக் கவருகிறது. அவனுடைய சொல்லினால், சொல் வெளியிடுகிற கருத்தினால் மக்கள் மயங்குகிறார்கள். அவனுடைய கருத்தைப் பின்பற்றி அநீதியற்ற சமூகத்தை நிறுவவும் முற்படுகிறார்கள்.

ஆனால், ஒரு நோயை குணப்படுத்தும் அரிய மருந்து மற்றொரு நோய்க்கு வித்திடுவதுபோல் ஒரு கருத்தினால் உருவாகும் சமூக அமைப்பை மற்றொடு கருத்து குலைக்கிறது. ஒரு கருத்து மற்றொரு கருத்தைக் கொல்லும்போது புதியதொரு கருத்து முளைவிடுகிறது. பகுத்தறிவில் பிறந்த கருத்துக்களை வைத்துக்கொண்டு மனிதன் என்றைக்கும் சண்டையிட்டுக் கொண்டேயிருப்பான். சமூகத்தில் குற்றம் குறைகளுக்கும் பிரச்சினைகளுக்கும் ஒருபோதும் பஞ்சம் இராது. எனவே கலைஞனுக்கு எல்லாக் காலத்திலும் வேலை இருந்துகொண்டே இருக்கும். இந்த  அடிப்படைத் தத்துவ அமைதியைக் கண்டவன்தான் முழுமையான இலக்கியக் கர்த்தாவாக இருக்க முடியும்.

இந்த மனித வாழ்க்கையே என் இலக்கியப் படைப்புகளின் ஊற்றுவாய். என் புற, அகவாழ்க்கையே என் இலக்கியமாகப் பரிணமித்தது. நான் பார்த்ததையும் கேட்டதையும் பேசியதையும் சுவைத்ததையும் தொட்டதையும் விட்டதையும் அறிந்ததையும் சிந்தனை செய்ததையும்தான் சுமார் அறுபது வருடங்களாய் எழுதி வருகிறேன். என் படைப்புகள் எல்லாவற்றிலும் நான்தான் நிரம்பி வழிகிறேன்.

ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னால் ‘நித்தியகன்னி’ என்றொரு நாவல் எழுதினேன். அக்கதையின் கருவை மகாபாரதத்திலிருந்து எடுத்தேன். ‘பெண் விடுதலை’ என்னும் பீஜத்தை அதில் நான் வைத்தேன். பலப்பல நூற்றாண்டுகளாய்த் தெரிந்தோ தெரியாமலோ, ஆண் வர்க்கம் பெண்ணுக்கு இழைக்கும் கொடுமையை அதில் நான் விசாரிக்கிறேன். இன்று பெண் விடுதலை பற்றி நிறையப் பேசுகிறோம். எழுதுகிறோம். சட்டங்கள் இயற்றியுள்ளார்கள். ஆண் மனோபாவம் மாற வேண்டும் என்கிறோம்; நியாயம்தான். பெண் மனோபாவம் மாறியுள்ளதா என்பது கேள்விக்குறியாகவே இருக்கிறது.

திருமண பந்தத்தை மீறி ஆணும், பெண்ணும் உடலுறவு கொள்வது பாவம் என்கிறார்கள். ஆனால், இம்மாதிரி உடலுறவு சோகத்தை சுகமாக்கும் சாதனமாகச் சிலருக்கு, பெண் ஆண் இருபாலருக்கும் உதவுகிறது என்பதை ‘வேள்வித் தீ’ என்கிற என் நாவலில் சுட்டிக் காட்டினேன். பட்டு நெசவாளர்களின் வாழ்க்கையை இந்த நாவல் வருணிக்கிறது. கல்வியறிவு உள்ளவர்களுக்கு விதிக்கப்படும் ஒழுக்கக் கட்டுப்பாடு, அறியாமை வயப்பட்ட மக்களுக்குப் பொருந்தாது என்பதையும் இந்த நாவல் வலியுறுத்துகிறது.

எந்த உடல் நலனும் குணநலனும் உள்ள கணவனும் மனைவியும் மானத்தைக் காத்துக்கொள்வதற்காக, எதிரிகளோடு போரிட்டு மடிவதை, ‘ஒரு பெண் போராடுகிறாள்’ என்னும் நாவலில்  சித்தரிக்கிறேன். பெண் விடுதலை பற்றி மட்டும் அல்ல, எனக்குத் தென்படுகிற வாழ்க்கைப் பிரச்சினைகள் பலவற்றையும் சுட்டிக் காட்டும் பல சிறுகதைகள், நாவல்கள், பல குறுநாவல்கள், ஓரங்க நாடகங்கள் எழுதியிருக்கிறேன்.

பதினாறு வயதில் எழுதத் துவங்கிய நான் இலக்கியப் படைப்பு மட்டும் அல்லாமல் மொழி பெயர்ப்புகள், வாழ்க்கை வரலாறுகள், பொது அறிவு நூல்கள் என சுமார் 200 தமிழ் நூல்கள் படைத்திருக்கிறேன். இன்றைய மனித வாழ்க்கை ஒரு போராட்டமாகக் காட்சி தருகிறது. போராட்டங்களுக்கு இடையில் புதைந்து கிடக்கும் அமைதியைத் தேடுவதாகிறது என் இலக்கியப் படைப்பு.

அகாதெமி விருது பெறும் ‘காதுகள்’ என்கிற என் நாவல் என் வாழ்க்கை வரலாற்றில் ஒரு சிறிய பகுதி. என் வாழ்க்கை உங்கள் வாழ்க்கை போன்றது அல்ல என்பதே இதன் தனித்தன்மை. பகுத்தறிவையும் அறிவியலையும் நம்புகிறவர்களுக்கு அது திகைப்பு தருகிறது. அதற்கு நான் என்ன செய்ய?

இந்த நாவலின் கதாநாயகன் மகாலிங்கம், ஓர் எழுத்தாளன். செல்வத்தோடும் செல்வாக்கோடும் வாழ்ந்தான். அவனுக்கு 36, 37 வயதாகும்போது திடீரென்று உள்ளிருந்தும், வெட்ட வெளியிலிருந்தும் குரல்கள் ஒலிக்கத் தொடங்கின; ஆபாசமாகவும், பயங்கரமாகவும் 24 மணி நேரமும் கத்திக்கொண்டிருந்தன. அதைத் தொடர்ந்து கற்பனை கூடச் செய்யமுடியாத கோரமான உருவங்களும் அவனைச் சூழ்ந்திருந்தன.

மகாலிங்கம் நிலை குலைந்தான். ஆனால், அவனுடைய புத்தியோ ‘நான்’ என்னும் உணர்வோ சிறிதும் பிசகவில்லை. தன்னுள்ளும் தன்னைச் சுற்றிலும் நிகழ்வதை ஒரு சாட்சியாக இருந்து கவனித்து வந்தான். அவன் ஒரு எளிய பக்தன்; திருமுருகன் என்னும் தெய்வத்தையே குருவாக வரித்துக்கொண்டவன். அருவருப்பு தரும் உருவங்கள் ஆபாசமான சொற்களை உமிழ்வதைச் சகிக்க முடியாமல் அவ்வப்போது தன் இஷ்ட தேவதையின் உருவப்படத்தின் முன்னிலையில் சென்று முறையிடுவதைத் தவிர அவனுக்கு வேறு வழி இல்லை.

தாமச சக்தி தன்னைக் காளி என்று கூறிக்கொண்டது.  மகாலிங்கம் முருகனை வழிபடக்கூடாது என்றும் தன்னைத்தான் வழிபடவேண்டும் என்பது தாமசத்தின் மையக்கருத்து. இந்தக் கருத்தை மகாலிங்கம் ஏற்கவேண்டும் என்பதற்காகவே பல பயங்கரமான அருவருப்பு தருகிற பிரமைக் காட்சிகளை அலை அலையாகத் தோற்றுவித்தபடி இருந்தது.

இந்த அனுபவம் தொடங்கியதைத் தொடர்ந்து அவனுடைய செல்வமும் செல்வாக்கும் சரிந்தன; வறுமையும் அவன் கால்களைக் கவ்விக்கொண்டது. சுமார் 20 ஆண்டுகள் இந்த அதிசுந்தரமான, அதிபயங்கரமான அனுபவம் நீடித்தது. அமானுஷியமான தமஸ்ஸ¤ம், அதிமானுஷ்யமான சத்துவமும் தன்னுடைய அகத்திலும் புறத்திலும் நடத்தும் போராட்டத்தை உதாசீனம் செய்துகொண்டு அவன் சில நாவல்களும், குறுநாவல்களும், பல சிறுகதைகளும் எழுதினான். ஏராளமான மொழிபெயர்ப்புகள், ஐம்பதுக்கும் அதிகமான வாழ்க்கை வரலாறுகள், பல பொதுஅறிவு நூல்களையும் எழுதிக் குவித்தான்.

தாமச சக்தியின் தாக்குதலில் ஆரம்பித்த ‘காதுகள்’ என்னும் நாவல் அதை வென்று ஒழிக்கவல்ல சத்துவ சக்தியின் தோற்றத்தோடு முடிவு பெறுகிறது. தேடல் தொடருகிறது.

ஆம். தேடல் தொடருகிறது. திரும்பிப் பார்த்தால் ஒரே ஆச்சரியமாக இருக்கிறது. யாரும் இல்லாத இடத்தில் இல்லாத ஒன்றைத் தேடி அலைந்தேனோ என்று சில சமயம் சந்தேகம் தோன்றுகிறது. இந்த என் வாழ்க்கையின் ரகசியம்தான் என்ன?

இந்த என் வாழ்க்கை விளங்க மறுக்கும் ஒரு புதிராகவே தோன்றுகிறது. இதனை எனக்குத் தெளிவுபடுத்தும் தத்துவம்தான் என்ன?

நான் என் ஆசானின் சொல்லுக்காகக் காத்திருக்கிறேன்.

mvv-book

***

தட்டச்சு : ஆபிதீன், பிரதி உதவி : சென்ஷி

***

தொடர்புடைய சுட்டிகள் :

எம்.வி.வி நேர்காணல்

ஜானகிராமனுக்காக ஒரு கதை – எம்.வி. வி

“மணிக்கொடி’ எழுத்தாளர் எம்.வி.வெங்கட்ராம் –  பா.முத்துக்குமரன்

எம்.வி.வெங்கட்ராம்….. பின்னிரவின் மழை… – மணி செந்தில்

அடுத்த வீடு – எஸ்.ராமகிருஷ்ணன்

எம்.வி.வி. சிறுகதைகள்

எழுதி எழுதிச் சோர்ந்த எம்.வி.வி

’என் கதைகளில் என்னையே தேடினேன். நான் கேட்டதையும், பார்த்ததையும், பேசியதையும், சுவைத்ததையும், தொட்டதையும், விட்டதையும், அறிந்ததையும், சிந்தைசெய்ததையும்தான் எழுதினேன். ’ –  என் எழுத்து : எம்.வி.வெங்கட்ராம்

***

எம்.வி.வெங்கட்ராம் அவர்கள் பற்றி காலச்சுவடு இதழில் ரவிசுப்ரமணியன் அருமையான கட்டுரை (கலக்கத்திலும் கனிவைக் கைமாற்றிவிட்டுப் போன கலைஞன் ) எழுதியிருக்கிறார். நேற்று படித்து நெகிழ்ந்து விட்டேன். ’நம் கஷ்டங்களுக்கு நாமே பொறுப்பு. அதை வெளியில் சொல்லவும் கூடாது. அதுக்கு இன்னொருத்தரைக் குற்றவாளி ஆக்கவும் கூடாது. நாமதான் தாங்கணும்’ என்பாராம். இயலவில்லையே எம்.வி.வி சார்…

’ஆறாம்திணை’ யில் 2001-ம் ஆண்டு வெளிவந்த எம்.வி.வியின் நேர்காணலை இப்போது வெளியிடலாம் என்று தோன்றுகிறது. இன்றும் அங்கே இருக்கிறதுதான். ஆனால் பழைய TSCII எழுத்துருவாதலால் பிரௌவுஸர் செட்டிங்கை சரி செய்ய வேண்டியிருக்கும் நீங்கள்.  எனவே ’ஒருங்குறி’யில் மாற்றி இங்கே பதிவிடுகிறேன். நேர்காணலின் கீழே ’நித்யகன்னி’ நாவல் பற்றிய சகோதரர் ரௌத்ரனின் பார்வையும் இருக்கிறது. பெர்க்மனின் ’Virgin Spring’ சினிமாவோடு (click here for torrent file) தொடர்பு படுத்தி எழுதியிருக்கிறார். அற்புதமாக இருந்தது. அவசியம் வாசியுங்கள். நன்றி.

***

‘மணிக்கொடி’ எழுத்தாளர்களுக்கு இசங்கள்
கிடையாது – எம்.வி.வெங்கட் ராம்
சந்திப்பு : அப்பணசாமி, தேனுகா, கண்ணம்மா 

***

‘மணிக்கொடி’ இலக்கியக் கொடியைச் சேர்ந்த எம்.வி. வெங்கட்ராம், எம்.வி.வி. என புதுமைப்பித்தன் முதல் இன்றைய இளைய தலைமுறை எழுத்தாளர் வரை அழைக்கப்படுபவர். அவரது ‘வேள்வித் தீ ‘, ‘அரும்பு’ , ‘நித்திய கன்னி’ முதல் சமீபத்திய ‘காதுகள்’ நாவல் வரை நாவல்களுக்காக தமிழ் இலக்கிய உலகம் முழுமையாலும் அங்கீகரிக்கப்பட்டிருக்கிறார். இருந்தாலும் இவரது சிறுகதைகள், கவிதைகள் உலகம் பற்றி தமிழ் உலகம் அவ்வளவாக அறியாதது. மிகச் சமீபத்தில் இவரது சிறுகதைகள் தொகுக்கப்பட்டு ‘எம்.வி.வெங்கட்ராம் கதைகள்’ என்ற பெயரில் நூல் வடிவம் பெற்றுள்ளது.

இன்று எண்பதுகளைக் கடந்து கொண்டிருக்கும் எம்.வி.வி. யைக் கும்பகோணத்தில் அவரது இல்லத்தில் சந்தித்தோம். கண்பார்வை மிகவும் குறைந்துள்ளது. கேட்கும் திறனும் அரிதாக உள்ளது. அன்னியக் குரல்களை அடையாளம் காணுவது சிரமமாக  உள்ளது.  அதனையே பழகிய குரல் திரும்பவும், உரத்த குரலில் பேசும்போது, இரண்டு முறை திரும்பக் கேட்டு உணர்ந்து கொள்கிறார். இன்னொருவர் உதவியுடனேயே நடமாடுகிறார். இருந்தாலும், தினமும் சவரம் செய்து, இஸ்திரி செய்யப்பட்ட உடைகளை அணிந்து, நெற்றியில் விபூதி, குங்குமம் அழியாமல் ‘பளிச்’ என்று அதே எம்.வி. வி.யாகவே இருக்கிறார்.

கேள்விகளுக்கு ஓரிரு வார்த்தைகளில் சுருக்கமாக பதிலளிக்கிறார். பல விஷயங்கள் நினைவில் இல்லை என்கிறார். முரண்பாடான விஷயங்களில் கருத்துச் சொல்ல மறுக்கிறார். இவ்வளவு காலத்துக்குப் பிறகும் யாருடைய மனதையும் புண்படுத்துவானேன் என்ற எண்ணம் அவரிடம் இருக்கிறது.

தொடர்ந்து பத்து நிமிடம் பேசினால் சிரமமாக இருக்கிறது. சில ஆண்டுகள் முன் சந்தித்தபோது, மணிக்கணக்காக அவர் பேசிக் கொண்டிருந்தது நினைவில் மோதுகிறது…….

நீங்கள் படைப்பிலக்கியத்திற்குள் எப்படி வந்து சேர்ந்தீர்கள்? அதைப் பற்றி சொல்லுங்களேன்?

”எங்கள் குடும்பத்தில் படித்தவர்கள் யாரும் கிடையாது. நான் ஒருவன்தான் படித்தேன். பி.ஏ. பொருளாதாரம் கல்லூரியில் படித்தேன். வரலாறு எனக்கு விருப்பப்பாடமாக இருந்ததால் வரலாற்றில் சற்று ஆர்வம் வந்தது உண்மை. கதைகள் படிக்கிற ஆர்வம் முதலில் இருந்தது. அப்பொழுது பத்திரிகைள் எல்லாம் ரொம்பக் குறைவு. ஆனந்தவிகடன், கலைமகள், வினோதன் என்று எல்லாப் பத்திரிகைகளையும் நான் நிறையப் படிப்பேன். துப்பறியும் நாவல்கள் எல்லாம் படிப்பேன். படித்துப் படித்து 13, 14 வயதிலேயே நானும் இதைப்போல் எழுத வேண்டும் என்று ஆர்வம் தோன்றிற்று. அப்பதான் எழுதிப் பார்த்தேன். எழுதியதை எல்லாம் தெரிந்த பத்திரிகைகளுக்கு அனுப்புவேன். அவர்கள் திருப்பி அனுப்புவார்கள். சமயத்தில் அனுப்ப மாட்டார்கள். இதுதான் நான் எழுத்தாளன் ஆன விதம்.”

உங்கள் முதல் சிறுகதை எந்தப் பத்திரிகையில் பிரசுரம் ஆயிற்று?

” என் முதல் கதை ‘மணிக்கொடி’ யில்தான் பிரசுரமாயிற்று. அக் கதைக்கு ‘சிட்டுக்குருவி’ எனப் பெயர் சூட்டியிருந்தேன்.”

எப்படி ‘மணிக்கொடி’ யில் பிரசுரம் ஆயிற்று ? மணிக்கொடி எழுத்தாளர்களுக்கும் உங்களுக்கும் அறிமுகம் உண்டா ?

”பழக்கம் எல்லாம் ஒன்றும் கிடையாது. ‘மணிக்கொடி’ என்று ஒரு பத்திரிகை வருவது கூட தெரியாது எனக்கு. அப்பொழுது நான் இந்தி படித்துக் கொண்டிருந்தேன். என்னுடைய இந்தி வாத்தியார் வீட்டில்தான் ‘மணிக்கொடி’ பத்திரிகையை முதலில் பார்த்தேன். பார்த்த உடனேயே எனக்கு என்ன தோன்றிற்று என்றால், ‘என் எழுத்து ‘மணிக்கொடி’ போன்ற பத்திரிகையில்தான் வரும்’ என்ற எண்ணம் உண்டாயிற்று. உடனே ஒரு கதை எழுதி என் இந்தி வாத்தியாரிடம் கொடுத்தேன். தெய்வாதீனமா அப்ப கு.ப.ராவும், நா. பிச்சமூர்த்தியும் கும்பகோணத்தில் இருந்தார்கள். அவர்களிடம் கொடுத்து, ‘இதை ‘மணிக்கொடி’க்கு அனுப்ப முடியுமா என்று பாருங்கள்’ என்று கொடுத்தார். இரண்டு பேரும் அந்தக் கதையைப் படித்துப் பார்த்து விட்டு, ‘மிக உயர்ந்த கதை இல்லையென்றாலும் ‘மணிக்கொடி’யில் வருவதற்கான தகுதி இருக்கிறது’ என்று என் வாத்தியாரிடம் கூறினார்கள். பின்னர் அவர்களே ‘மணிக்கொடி’க்குக் கதையை அனுப்பி வைத்தார்கள். அந்த ஒரு கதையைத்தான் அவர்களிடம் காண்பித்தேனே தவிர, மற்ற கதைகளையெல்லாம் நானாகவே அனுப்ப ஆரம்பித்து விட்டேன் பின்னர் அந்தக் கதைகள் ‘மணிக்கொடி’யில் பிரசுரமாயிற்று.”

‘மணிக்கொடி’ எழுத்தாளர்கள், பி.எஸ். ராமையா, புதுமைப்பித்தன் இவர்களோடு எப்படி பழக்கம் ஏற்பட்டது?

”அப்ப எனக்கு 16, 17 வயதுதான் ஆகிறது. ரொம்ப சங்கோஜ புத்தி. கு.ப.ரா, ந.பிச்சமூர்த்தி இவர்களையெல்லாம் ஒரு சில முறைதான் பார்த்திருக்கிறேன். அப்புறம் பார்த்ததே கிடையாது. இவர்களையாவது ஒருமுறை பார்த்திருக்கிறேன். புதுமைப்பித்தனைப் பார்த்ததேயில்லை. மற்ற எல்லோரையும் பார்த்திருக்கிறேன். லா.ச.ரா, மெளனி பற்றி எல்லாம் எழுதியுள்ளேன்”.

லா.ச.ரா உங்களுக்குப் பின்தான் எழுதினாரா?

”எனக்குப் பிறகுதான் எழுதினார். சென்னையில் நான் இருக்கும்போது என்னைப் பார்க்க அவர் வருவார். நானும் அவரைப் பார்க்கச் சென்றிருக்கிறேன்.”

‘மணிக்கொடி’யில் எத்தனை கதை எழுதியுள்ளீர்கள்?

”கிட்டத்தட்ட 18 கதைகள் எழுதியிருக்கிறேன்”.

சிறுகதை வரலாற்றைப் பற்றி நவீன எழுத்தாளர்கள் கூறும்போது ‘மணிக்கொடி’ எழுத்தாளர்களில் புதுமைப்பித்தன், ந.பிச்சமூர்த்தி, மெளனி, பி.எஸ். ராமையா பற்றி குறிப்பிடுகிறார்கள். ஏன் தங்களைக் குறிப்பிடுவதில்லை?

”அதற்கு முக்கியமான காரணம் என்னவென்றால் என் கதைகள் தொகுப்பாக வரவில்லை”.

ஆனால் ‘மணிக்கொடி’ எழுத்துகளை வாசிக்கும்போது உங்களையும் வாசித்திருப்பார்கள் அல்லவா ?

”அப்ப அதைப் பற்றிய பேச்சு இருந்தது. அதாவது ஒரு பதிப்பு வந்து 30 வருடங்களுக்கு பிறகே மறுபதிப்பு வருகிறது. ஒரு தலைமுறைக்கே, இப்படி ஒரு கதை இருப்பது மறந்து போகிறது. அதனால் இப்படி ஆயிற்று”.

‘தேனீ’ சிற்றிதழை எப்பொழுது ஆரம்பித்தீர்கள்? எப்படி நடத்தினீர்கள்? ஏன் ‘தேனீ’ நின்று போனது? கரிச்சான் குஞ்சு ‘குபேர தரிசனம்’ சிறுகதையில், நீங்கள் ரொம்ப வசதியாக அந்த காலகட்டத்தில் இருந்தீர்கள் என்று எழுதியுள்ளாரே ?

”அந்தக் காலத்தில் நான் கொஞ்சம் வசதியாகத்தான் இருந்தேன். நாலு பேர் ஒன்று சேர்ந்து நடத்திய பத்திரிகை அது. நாலு பேரின் வசதியையும் நான் ஒருத்தனே சந்திக்க வேண்டியிருந்தது. அதில் இரண்டு நண்பர்களால்தான் அப்பொழுது கொஞ்சம் உதவி செய்ய முடிந்தது.”

யார் யார் என்று கூற முடியுமா?

”பெயரெல்லாம் வேணுமா. அது ரொம்ப டீடெய்லா போய்டுமே. இரண்டு நண்பர்களால்தான் அப்பொழுது உதவ முடிந்தது. நான் எல்லாவற்றையும் கவனிக்க வேண்டியதாயிற்று. நிதி முதற் கொண்டு. அதனால் சில சொத்துகளை விற்க வேண்டிய நிர்ப்பந்தம் உண்டாயிற்று. அந்த சமயத்தில் நான் சற்று வசதியாகத்தான் இருந்தேன். சரிகைத் தொழில் செய்து கொண்டிருந்தேன். வியாபாரம் நன்றாக இருந்தது. அந்த வியாபாரத்தை நலியச் செய்து விட்டது இந்தத் ‘தேனீ’ பத்திரிகை. அதனால் வியாபாரத்தில் வீழ்ச்சியைச் சந்திக்க வேண்டியதாயிற்று.”

மௌனியின் கதைகளைத் ‘தேனீ’ பத்திரிகையில் வெளியிட்டிருக்கிறீர்கள் இல்லையா ?

”மெளனியின் கதைகள் இரண்டை மட்டும் ‘தேனீ’ யில் நான் வெளியிட்டுள்ளேன். அவர் தலைப்பு இல்லாமல்தான் கதைகளை அனுப்பி வைப்பார். படித்துப் பார்த்து நான்தான் தலைப்பு வைத்திருக்கிறேன்.”

‘எழுத்து’ பத்திரிகையில் கூட நீங்கள் சிலவற்றை எடிட் செய்திருக்கிறீர்கள் இல்லையா?

”ஆம். எடிட் செய்துள்ளேன். தமிழே சரியாக எழுத வராது அவருக்கு. அதையெல்லாம் எடிட் பண்ணி வெளியிட்டுள்ளேன். கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருந்தது. அதைப் பற்றியெல்லாம் நான் நிறைய எழுதியிருக்கிறேனே.”

மெளனியின் கதைகளைத் திருத்தியிருக்கிறீர்கள். தலைப்பு எல்லாம் கூட வைத்திருக்கிறீர்கள்? மெளனி உங்கள் பார்வையில் சிறந்த எழுத்தாளரா?

”மெளனி இலக்கணமே இல்லாமல் எழுதுவார். மெளனியின் கதைகளை எல்லாம் நான் திருத்தியிருக்கிறேன். தலைப்பு கொடுத்திருக்கிறேன் என்பதெல்லாம் உண்மைதான். ஆனால், இவை எல்லாவற்றையும் மீறி அவர் ஒரு நல்ல கலைஞர்”.

மெளனியைப் புதுமைப்பித்தனே ‘சிறுகதையின் திருமூலர்’ எனப் பாராட்டி உள்ளார். எல்லாருமே மெளனியை அளவுக்கு மீறிப் புகழ்வதாகத் தோன்றுகிறது. அந்தப் பாராட்டுக்கெல்லாம் அவர் தகுதியுடையவர்தானா?

”மெளனி சிறந்த சிறுகதை எழுத்தாளர்தான். ஆனால், நான் அவருக்குத் தமிழ் தெரியாது என்பதை வெளிக் கொண்டு வந்த போது, அவருடைய பாராட்டுகளெல்லாம் விடுபட்டுப் போச்சு. சிறுகதையின் திருமூலர் என்ற பேச்சு கூட நின்னு போச்சு.”

ரஜினி பாமிதத்தின் படைப்புகளை எப்பொழுது மொழிபெயர்த்தீர்கள் ?

” வித்யாப்பியாசம் முடிந்த பிறகு (பி.ஏ. பொருளாதாரம்) வேலைக்கு முயற்சி செய்து கொண்டிருந்தேன். வேலைக்காக சென்னைக்கு வந்த பிறகுதான் மொழி பெயர்த்தேன்.”

படைப்பிலக்கியவாதியான நீங்கள் எப்படி ரஜினி பாமிதத்தின் வரலாற்று நூலான ‘இந்தியா டுடே’யை மொழி பெயர்க்க வேண்டும் என்று நினைத்தீர்கள்?

”நானாகச் செய்யவில்லை. India Historical Research என்ற ஓர் அமைப்பு இருக்கிறது. அவர்கள் என்னை அழைத்துச் செய்யச் சொன்னார்கள். ‘நேஷனல் புக் டிரஸ்ட்’ நிறுவனத்துக்காகவும் பல நூல்கள், கிட்டத்தட்ட 10 நூல்களை மொழி பெயர்த்துள்ளேன்.”

‘காதுகள்’ என்கிற உங்க நாவலை மாஜிக்கல் ரியலிசம் என்று சொல்கிறார்களே? அதைப் பற்றி உங்கள் அபிப்பிராயம் என்ன?

”ஏதாவது ஒரு பெயர் வைக்கணும், என்ன உத்தி என்று சொல்வதற்காக. அதனால் மாஜிக்கல் ரியலிசம் என்று வைத்திருக்கிறார்கள்”.

நீங்கள் எழுதும்போதே மாஜிக்கல் ரியலிசம் என்ற உத்தியைப் பயன்படுத்த வேண்டும் என்று நினைத்து எழுதினீர்களா அல்லது பிற்பாடு எழுத்தை வகைப்படுத்துவதற்காக மாஜிக்கல் ரியலிசம் என்ற வார்த்தையை விமர்சகர்கள் பயன்படுத்துகிறார்களா?

”அப்படியெல்லாம் ஒன்றும் எழுதவில்லை. அதைப் பற்றியெல்லாம் நான் நினைத்துப் பார்த்ததும் கிடையாது. ரியலிசம் என்ற பெயர்களெல்லாம் தெரியுமே தவிர, இதையெல்லாம் நான் நினைத்துப் பார்த்ததே கிடையாது.”

’காதுகள்’ நாவல் எனது சொந்த வாழ்க்கையைப் பற்றியது என்று குறிப்பிட்டுள்ளீர்கள்? நாவலில் குறிப்பிட்டுள்ள பிரச்சினைகளை உங்கள் சுய வாழ்க்கையில் எதிர் கொண்டுள்ளீர்களா? எவ்வாறு எதிர்க்கொண்டீர்கள். ஏன் எழுத வேண்டும் என்று நினைத்தீர்கள்?

”பிரச்சினைகள் இருந்தது. அதை நான் குறிப்பிட்டிருக்கிறேன். பிரச்சினையை எதிர்கொண்டபோது இருந்த தீவிரம், சற்று குறைந்தபோது நாவலாக எழுத வேண்டும் என்று தோன்றிற்று .அதனால் நாவலாக எழுதினேன்”.

நாவலில் பிரச்சினையைத் தத்துவார்த்தமாக அணுகி உள்ளீர்கள்? ஆனால் நீங்கள் எதிர்கொண்ட பிரச்சினை மனம் சம்பந்தப்பட்டது.  அதை எவ்வாறு தத்துவார்த்தமாக நாவலில் மாற்றினீர்கள் ?

” நானே பின்னர் நார்மலாகிவிட்டேன். நடந்தவை எல்லாம் நன்றாக ஞாபகத்தில் இருந்தது. அதனால் அதை சுலபமாக எழுத்தாக மாற்ற முடிந்தது”.

பிரச்சினையின் அதீத எல்லைக்குள் சென்று மீண்டவர் நீங்கள். அந்தப் பிரச்சினை உங்களுக்கு எவ்வளவு காலம் நீடித்தது? எப்பொழுது முதல் தொடங்கிற்று? பால்ய காலம் முதலா?

”ரொம்ப வருஷம் இருந்தது. கிட்டத்தட்ட 20 வருஷங்கள் அதிகமாகவோ, குறைவாகவோ தொடர்ந்தபடி இருந்தது.”

அப் பிரச்சினை இருந்த காலத்தில் உங்களுக்கு எவ்விதமான மன உணர்வுகள் இருந்தன?

” நான் ஏற்கனவே எழுதியிருக்கிறேனே அதைப் பற்றி”.

 ‘காதுகள்’ நாவலில் தத்துவார்த்தமாக அகம், பிரம்மம் என்று எழுதியுள்ளீர்களே?

” தத்துவார்த்தமாகத்தானே நடந்தது.”

அதாவது உங்கள் நிஜவாழ்வில் நடந்த ஓர் விஷயம் எப்படி தத்துவார்த்தமாக உருமாற்றம் அடைந்தது?

”நினைப்பே எனக்கு முதலில் அப்படித்தான் வித்தியாசமாகத்தான் இருந்தது. தத்துவார்த்தமாக நடந்தது எப்படி என்று நான் சொல்ல முடியும்? அது ஆரம்பிச்சது அப்படித்தான். கெட்ட சக்திகள் என்னைத் தாக்கியது. நல்ல சக்திகள் என்னைக் காப்பாற்றியது என்று அதை நான் எழுதல்ல, இன்னும் ஆழமாக ஆராய்ந்து எழுதல்ல. ஏனென்றால் நான் அப்படி எழுதினால் நாவல் ஒரு முடிவுக்கு வந்துவிடும். அப்படி வரக்கூடாது என்பதற்காக நான் அந்த கெட்ட சக்திகள் பற்றி மட்டுமே எழுதினேன். நல்ல சக்தி என்னைக் காப்பாற்றியது பற்றி நான் எழுதவில்லை. அதனால்தான் அந்த நாவல் தத்துவார்த்தமாக முடிந்தது. அந்த நாவலில் ஓர் இடத்தில் மட்டுமே நல்ல சக்தி என்னை இயக்குகிறது என்பதைக் காண்பிப்பதற்காக முருகன் கோயிலில் சென்று முறையிடுவதைப் போல சில வரிகள் எழுதியுள்ளேன். அந்த மாதிரி நான் வேறு எந்த இடத்திலும் எழுதவில்லை.”

இரண்டு சக்திகளும் அதாவது அந்த நல்ல சக்தியும், கெட்ட சக்தியும் உங்களுக்கு உள்ளேயே இருந்தது என்று சொல்ல வருகிறீர்களா?

”இரண்டும் நடந்தது. அது பரிசுத்தமான விஷயம். அதைத்தான் ‘காதுகள்’ நாவலில் நான் சொல்லி இருக்கிறேனே”.

‘காதுகள்’ நாவலில் ஒரு தனி மனிதனின் துயரமான வாழ்க்கை பற்றி சொல்லுகிறீர்கள். ஆனால் அதைப் படிக்கும்போது அது நகைச்சுவையும் அதே நேரம் அதிர்ச்சியும் கலந்த ஒரு உணர்வைத் தருகிறதே. எப்படி? எவ்வாறு அந்த மொழியைக் கண்டடைந்தீர்கள்? அந்த நாவலில் ஒரு அழுத்தமான தன்மை உள்ளதே அது எப்படி?

”சில பேர் என்னிடமும் நகைச்சுவையாக எழுதியுள்ளீர்கள் என்று கூறியிருக்கிறார்கள்” .

பல பேர் ஹாஸ்ய நாவல் என்று சொல்லியிருக்கிறார்கள். பல பேர் பாதிக்கு மேல் படிக்க முடியாமல் பயந்துபோய்க் கொடுத்திருக்கிறார்கள். படித்தவர்கள் பல பேர் இப்படியெல்லாம் கூட நடக்குமா என்று கேட்டிருக்கிறார்கள். எழுதும் போதே நாவல் கொஞ்சம் ஹாஸ்யமாக இருக்க வேண்டுமென்று நினைத்தீர்களா, ஒரு அதிர்ச்சியைக் கொடுக்க வேண்டும் என்று திட்டமிட்டு எழுதப்பட்டதா?

”ஒரு திட்டம் இல்லாமல் எப்படி எழுத முடியும்.”

சிலர் படித்து முடித்த பிறகு ஹாஸ்யமாக இருப்பதாகவும், சிலர் பயமாக இருக்கிறது என்றும் உணர்ந்துள்ளனர். இது வாசகர்கள் தாங்களாகவே அடைந்த உணர்ச்சியா அல்லது அவர்கள் இந்த உணர்ச்சியை உணர வேண்டும் என்று நீங்கள் திட்டமிட்டீர்களா?

”இல்லை, இல்லை. இது திட்டமிடப்பட்டதில்லை. வாசகர்கள் தாங்களாகவே அடைந்த உணர்ச்சிதான்.”

‘காதுகள்’ நாவல் தொலைக்காட்சித் தொடராக வருகிறதே பார்த்தீர்களா?

”இல்லை. என்னால் தற்போது பார்க்க முடியவில்லை. கேட்டுக் கொண்டுதான் இருக்கிறேன். அவ்வளவாகக் காது கேட்காது, இருந்தாலும் கேட்டுக் கொண்டிருக்கிறேன்.”

கேட்ட அளவில் உங்களுக்கு என்ன தோணுகிறது?

”ஓரளவு செய்திருக்கிறார்கள். ஒண்ணும் சொல்வதற்கு இல்லை”.

பொதுவாக யதார்த்தக் கதைகள் தமிழில் பெரும்பான்மையானவர்களின் கவனிப்பைப் பெறுவதில்லையே!

”தற்பொழுது கவனிக்கிறார்களே. இப்போது Bulk edition – வந்தவுடனே கவனிக்கிறார்கள் அல்லவா. அதைப் போல் பிற்பாடு பேசுவார்கள்.”

உங்கள் எழுத்து, ஆர். சண்முக சுந்தரத்தின் எழுத்துகளெல்லாம் காலம் கடந்து இப்பொழுதுதான் கவனிக்கப்படுகிறதே? ஏன்?

”நான் முன்பே குறிப்பிட்டது போல் புத்தகம் கிடைக்கவில்லை, தொகுப்பாக வரவில்லை என்பதுதான் காரணம்.”

உங்கள் நாவல்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமாக உள்ளதே ஏன்?

”It was so planned. ஒரு நாவல் மாதிரி மற்றொன்று இருக்கக் கூடாது என்று திட்டமிட்டே எழுதினேன். ‘நித்திய கன்னி’ போல் ‘வேள்வித் தீ’ இருக்காது. ‘வேள்வித்தீ’ போல் ‘அரும்பு’ இருக்காது. இப்படி ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதம்.”

உங்கள் ‘நித்யகன்னி’ நாவல் பரவலாகப் பேசப்பட்டதைப் போல், ‘வேள்வித் தீ’யோ, ‘அரும்போ’ பேசப்பட்டதில்லையே ஏன்? உங்கள் படைப்புகளில் உங்களுக்குப் பிடித்தது எது?

”எல்லாமே எனக்குப் பிடித்த படைப்புகள்தான். எல்லாவற்றையுமே நன்றாகச் செய்திருக்கிறேன் என்ற நம்பிக்கை இருக்கிறது. ‘அரும்பு’ நாவல் பேசப்பட வேண்டிய அளவுக்குப் பேசப்படவில்லை. அதற்குக் காரணம் நாவலின் பிரதி கிடைப்பதில்லை. கடந்த 2 ஆண்டுகளாக சுத்தமாகக் கிடைக்கவில்லை. இப்படி ஆண்டுக்கணக்கில் கிடைக்காமல் இருப்பதன் மூலம் அதைப் பற்றி மதீப்பீடு செய்வதற்கு வழி இல்லாமல் போகிறது. 700 பக்கங்கள் கொண்ட நாவலாக இருப்பதால் மறு பதிப்பும் கூட போடாமல் இருக்கிறார்களா?”

நீங்கள் எழுதிய ‘வேள்வித்தீ’ , ‘அரும்பு’ நாவல்கள் பற்றி, தற்போதைய மனநிலையில் சரியாகச் செய்திருப்பதாக நினைக்கிறீர்களா? சற்றுத் திருத்தி வேறு மாதிரி எழுதியிருக்கலாம் என்று நினைக்கிறீர்களா?

”வாசகர்கள் என்ன நினைக்கிறார்கள் என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் நான் என்ன நினைக்கிறேன் என்றால் எல்லாம் சரியாகச் செய்திருக்கிறேன் என்றுதான் நம்புகிறேன்.”

போஸ்ட் மாடர்னிசம், ஸ்ட்ரக்சுரலிசம், மாஜிகல் ரியலிசம் – இப்படிப்பட்ட இலக்கிய இசங்கள் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

”எழுதும்போது இந்த விஷயங்களை எல்லாம் நினைத்துக் கொண்டு எழுதுவதில்லை. மணிக்கொடி எழுத்தாளர்கள் எல்லோருமே இந்த இசங்கள் பற்றிய சிந்தையோடு எழுதவில்லை. பின்னால் வந்தவர்கள்தான் இந்த இசங்களை நினைத்துக்கொண்டு எழுதுகிறார்கள். நாங்கள் இதையெல்லாம் நினைத்துக் கொண்டு எழுதவில்லை.”

ஆனால் நீங்கள் எழுதிய காலத்திலேயே இந்த இசங்கள் எல்லாம் இருந்திருக்கிறதே? குறிப்பாக நேச்சுரலிசம், ரியலிசம், எல்லாம் இருந்திருக்கிறதே?

”இந்த இசங்களை எல்லாம் யோசித்துக்கொண்டு தமிழ்நாட்டில் அவ்வளவு டீப்பாக யாரும் எழுதவில்லை.”

புதுமைப்பித்தனின் எழுத்தில் ·பிராய்டிசத்தின் பாதிப்புத் தெரிவதாக எல்லோரும் சொல்கிறார்களே?

”அவர் இசங்கள் பற்றியெல்லாம் ஒன்றும் எழுதவே இல்லை”.

ஜேம்ஸ் ஜாய்ஸ் உத்திகளெல்லாம் உங்களுக்குத் தெரிகிறது. அந்த உத்திகளை எல்லாம் பயன்படுத்தி இருக்கிறீர்கள்? அப்படியென்றால் அப்பொழுதே அந்த இசங்கள் எல்லாம் இருந்திருக்கிறது அல்லவா?

”இருந்திருக்கிறது. ஆனால் அதைப் பெரிய அளவில் பயன்படுத்தி எழுதவில்லை.”

 சி.சு. செல்லப்பா நிறைய இசங்கள் பற்றி பேசியிருக்கிறாரே? ஆனால் நீங்கள் இந்த நினைப்போடு படைப்பில் ஈடுபடவில்லை என்று கூறுகிறீர்களா?

”நான் மாத்திரம் அல்ல ; சி.சு.செல்லப்பாவே அப்படி எழுதவில்லை.”

ஆனால் புதுமைப்பித்தனின் முன்னுரையாகட்டும், மெளனி கதைகளின் முன்னுரையாகட்டும் மேற்கத்திய எழுத்தாளர்களின் பாதிப்பில்தான் எழுதப்பட்டது என்று அவர்களே குறிப்பிட்டுள்ளார்களே? உங்கள் நாவலை மாஜிகல் ரியலிசம் நாவல் என்று சொல்கிறார்கள்? ஆனால் நீங்கள் அதை ஒரேயடியாக சுய வரலாறு என்று கூறுகிறீர்களே? எல்லோரும் மார்க்யூஸின் நாவலுக்குப் பிறகு, தமிழில் வந்துள்ள மாஜிகல் ரியலிச நாவல் ‘காதுகள்’ தான் என்கிறார்களே?

”நாங்கள் யாரும் இந்த இசங்களின் நினைப்போடு எழுதவில்லை. யாராவது அதற்கு மதிப்புரை எழுதும்போதுதான், இது மாஜிகல் ரியலிசம், இது சர்-ரியலிசம் என்று முத்திரை குத்தி விடுகிறார்கள்.”

”இசங்கள் பற்றிய பிரக்ஞை உங்கள் காலத்தில் இல்லை என்று கூறுகிறீர்கள். அது எந்த காலத்தில் ஆரம்பித்தது ? தற்பொழுது இசங்கள்தான் இருக்கிறது, நாவல்கள் இல்லை. நாவல் கூட முக்கியம் இல்லை அதனுடைய விமர்சனம்தான் முக்கியமாகி வருகிறது! இசங்கள் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. அதைப் பற்றி ஆழமாகப் பேசுகிறார்கள். உங்கள் காலத்தில் எப்படி?

”இசங்கள் எல்லாம் எங்கள் காலத்தில் கிடையாது”.

சி.சு. செல்லப்பா படைப்புகளை விட, விமர்சனம் சார்ந்த புத்தகங்களையே விரும்பிப் படிப்பார், எழுதுவார் என நீங்கள் குறிப்பிட்டுள்ளீர்களே, அப்படி என்றால் அப்பொழுதே அந்தப் பிரக்ஞை இருந்திருக்கிறது அல்லவா?

”யாராவது ஒருவர் இந்த இசங்களைக் கண்டுபிடிப்பார்கள். ஆனால் அவர்களே இதைப் பற்றி அதிகம் எழுதுவதில்லை. அந்த மாதிரிதான் இருந்தது. இதை வைத்து எழுதுவது மிகக் குறைவாகத்தான் இருந்தது. நீங்கள் சொல்வது எனக்குப் புதிதாகத் தான் இருக்கிறது.”

உங்களுக்குப் பிடித்த எழுத்தாளர்கள் யார்? பிடித்த படைப்புகள் எவை?

”தி. ஜானகிராமன், ந. பிச்சமூர்த்தியின் படைப்புகள் எல்லாம் எனக்கு பிடிக்கும். அசோகமித்திரன், ஜெயகாந்தன் படைப்புகள் எல்லாம் பிடிக்கும். ஆனால் ஜெயகாந்தனுடைய நூல்கள் எல்லாவற்றையும் படித்ததில்லை. மேற்கில் கா·ப்கா, தாஸ்தயெவ்ஸ்கி, ஆல்பர்காம்யூ ரொம்பப் பிடிக்கும். கிளாசிகல் நாவல்கள் எல்லாம் பிடிக்கும். டால்ஸ்டாய் எழுதிய அன்னா கரீனா ரொம்பப் பிடிக்கும். சாமர்செட் மாம் எழுத்துகள் பிடிக்கும் என்றாலும், அதிகமாகப் பிடிக்கும் என்று சொல்ல முடியாது.”

‘மணிக்கொடி’ காலம் மாதிரி இல்லாமல் இப்போது கதைகள் எல்லாம் வியாபாரப் பொருளாக மாறி வருகிறதே, அதைப் பற்றி உங்கள் எண்ணம் என்ன?

”அது வேற. வியாபார எழுத்துகளைத்தான் நீங்கள் அதிகம் பார்க்கிறீங்க. ஏனென்றால் அதிகமாகத் தெரிவது அதுதான். ஆனால் உண்மையில் சின்னச் சின்னப் பத்திரிகைகள் வருகிறது பாருங்கள். அதில்தான் உண்மையான இலக்கியம் இருக்கிறது. அவையெல்லாம் நிறைய வந்து கொண்டுதான் இருக்கிறது.”

சிறு பத்திரிக்கை நடத்தி நீங்கள் மிகவும் கஷ்டப்பட்டு இருக்கிறீர்கள்? தற்போதும் நிறைய சிறு பத்திரிகைகளை இளைஞர்கள் கொண்டு வருகிறார்கள்? இது பற்றி உங்கள் அபிப்பிராயம் என்ன ?

”சரியோ, தப்போ இளைஞர்கள் முன் வருவதும், தியாக மனப்பான்மையோட செய்வதும், நல்ல கதைகள், நாவல்கள் வெளிவருவதும் சந்தோஷமான விஷயம்தான்.”

சிறு பத்திரிகைகளில்தான் நல்ல படைப்புகள் வருகிறதா?

”நல்ல படைப்புகள் சிறு பத்திரிகையில் தான் இதுவரை வந்துள்ளது. வர முடிந்திருக்கிறது”.

1960, 70 களுக்குப் பிறகு எழுதத் தொடங்கியவர்கள் எவ்வாறு எழுதுகிறார்கள்? அவர்களைப் பற்றிய உங்களது அபிப்பிராயம் என்ன?

”கடந்த 7, 8 வருஷமா எனக்கு சரியாக் கண் தெரியல. ஆனால் அதற்கு முன் உள்ளவர்களைப் படிக்கும் போது நன்றாகத்தான் எழுதுகிறார்கள். மோசம் என்று சொல்ல முடியாது. புதிய எழுத்துகளெல்லாம் வரத்தானே செய்யும்”.

நீங்கள் சென்னையில் இருந்தீர்களே, உங்கள் சென்னை வாழ்க்கை எப்படி இருந்தது?

” ‘தேனீ’ நடத்துவதற்கு முன்னால் ஒருமுறை சென்னை சென்றிருந்தேன். ஆனால் இரண்டாவது முறை ‘தேனீ’ நடத்தி, நஷ்டப்பட்ட பின்தான் சென்றேன். சில காலம் வசதியாகத்தான் இருந்தேன். வீட்டிற்கும் வசதி செய்து கொடுத்தேன்.”

நீங்கள் எப்போதும் உங்கள் தோற்றத்தில் அதிக கவனம் செலுத்துகிறீர்களே எப்படி? ஆடை அணிந்து கொள்வதிலும், மற்றவர் முன் வெளிப்படும் போதும் நீங்கள் உங்களை அதிகம் கவனித்துக் கொள்கிறீர்களே?

”இது சிறுவயது முதலே என் சுபாவமாக இருந்து வருகிறது. முழுக்கைச் சட்டை, அரைக்கைச்சட்டை போடுவது ; எட்டு முழ வேஷ்டி, துண்டு போட்டுக் கொள்வது இது சென்னையில் இருக்கும்போது விடுபட்டுப் போய்விட்டது.”

இதைப் போல் மற்றவர்களிடமும் எதிர் பார்க்கிறீர்களா?

”ஆம். அருகில் இருப்பவர் ‘நீட்’ டாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். குறிப்பாக வெள்ளை எனக்கு ரொம்பப் பிடிக்கும்.”

வெற்றிலை போடுகிறீர்களே ரொம்பப் பிடிக்குமா? சென்னைக்குச் செல்லும்போது எப்படி?

”கும்பகோணம் வெத்திலை போடாமல் இருக்க முடிவதில்லை. சென்னைக்குச் சென்றாலும் எப்படியாவது வெத்திலை வாங்கிப் போட்டுவிடுவேன். சென்னையில் கிடைக்கும். இப்பவும் கிடைக்கிறது.”

***

நன்றி :

**

எம்.வி. வெங்கட்ராம் – விக்கிபீடியா

***

ரௌத்ரனின் (பெயரை மாத்துங்க சார், பயமா இருக்கு!) பார்வை : ’நித்யகன்னி – எம்.வி.வெங்கட்ராமன்