பின்செல்லல் – உமா வரதராஜன்

ஃபேஸ்புக்கில் நண்பர் உமா வரதராஜன் எழுதும் தொடரிலிருந்து ஒரு பகுதி. நன்றியுடன் பகிர்கிறேன்.

umavaratharajan-fb1

பின்செல்லல் (40) – உமா வரதராஜன்

‘என்னுடைய கடைப்பக்கம் தயவு செய்து வந்து விடாதீர்கள் ‘ என்று எவ்வளவோ கெஞ்சிக் கேட்டும் கூட ஒருநாள் நண்பர்கள் கூட்டம் நுழைந்து விட்டது. வெண்கலப் பாத்திரக் கடைக்குள் யானைகள் புகுவதைப் பார்க்கும் திகிலுடன் இருந்தேன் .சற்று முன் சந்தைக்குப் போன வெற்றிவேல் அண்ணன் எந்நேரத்திலும் திரும்பி வந்துவிடக் கூடும் .
அப்போது நான் பதிவு செய்து கொண்டிருந்த பாடல் ‘கோயில் மணி ஓசை தன்னைக் கேட்டதாரோ ‘. பாட்டின் நடுவே ‘பரஞ்சோதி..பரஞ்சோதி ‘ என்ற கிளிக்குரல் வந்த போது மலரவனும் அதனுடன் சேர்ந்து ”பரஞ்சோதி…பரஞ்சோதி ..” என்று கிள்ளை மொழியில் சொல்லிக் காட்டினான் .எல்லோரும் பெரிய சத்தத்துடன் சிரித்தார்கள் .எனக்கு சிரிப்பு வரவில்லை. வியர்த்துக் கொட்டியது. வெற்றிவேல் அண்ணன் வருவதற்குள் இவர்கள் எல்லோரும் கிளம்பி விட வேண்டும் என்று மனதுக்குள் அன்னை மரியாளை அமர்த்தி, அவர் முன்னால் மெழுகுவர்த்தி ஏற்றிப் பிரார்த்தித்துக் கொண்டிருந்தேன் .
மலரவன் என் பக்கமாக வந்து ‘ஏய் கருவாட்டுக் கூடை ..முன்னாடி போ ..என்று வருமே , அது என்ன பாட்டுடா ?”என்று கேட்டான்.
‘’அது என்னத்துக்கு ?’’ என்றேன் எரிச்சலுடன்.
‘’சும்மா சொல்லுடா!’’ .
”என் கண்மணி காதலி …” உர்ரென்று முகத்தை வைத்துக் கொண்டு பதில் சொன்னேன் .
”ஆ….அதேதான் …அந்தப் பாட்டைக் கொஞ்சம் போட மாட்டாயா ?”
”இப்போ போட முடியாது …ரெக்கோர்டிங் போய்க் கொண்டிருக்கிறது …”
”ஓ …பெரிய ரெக்கோர்டிங் …உங்களுடைய கம்பிக் கூண்டுக்குள் நின்று பாலசுப்ரமணியமும் ஜானகியும் பாடிக் கொண்டிருக்கிறார்கள். …சரிதான்..,,அவர்களைக் குழப்பக் கூடாது .கோபித்து கொண்டு போய் விடுவார்கள் …” என்றான் நக்கலாக மலரவன் .
”கேசவா …உமா இங்கே வருவதில்லையா ” என்று கேட்டான் .
அப்பாவித் தனத்தை முகத்தில் வரவழைத்துக் கொண்டு ”உமாவா , யார் அது ?” என்று அவனிடம் கேட்டேன் .
”அடேய்…அடேய்….கடை போர்டிலேயே சிவப்பு எழுத்தில் பேர் இருக்கிறது .இரவிலும் நன்றாகத் தெரியட்டுமே என்று லைட் வேறு போட்டு வைத்திருக்கிறார்கள் ..நீயோ ஒன்றும் தெரியாத பாப்பா மாதிரி யார் அது என்று கேட்கிறாய்….வேறு யார் ? நம்முடைய செம்மீன்தான் !”
அடிமடியில் கைவைப்பது போல் அந்தாளின் கடையில் நின்று கொண்டே அவருடைய மகள் பற்றி விசாரிக்கிறார்களே இந்தப் படுபாவிகள் ‘ என்று உதறலெடுத்தது..
நான் பதில் எதுவும் பேசாமல் சுவரில் தொங்கிக் கொண்டிருக்கும் வெற்றிவேல்அண்ணனின் கட்டுமஸ்தான தோற்றங்களைக் கொண்ட புகைப்படங்களை மலரவனுக்குக் காட்டினேன் ..
”நன்றாகப் பார்த்துக் கொள் !அடித்துத் துவைத்து விடுவார்..உங்களைப் போன்றவர்களுக்காகத்தான் இந்தப் படங்களை இங்கே மாட்டி வைத்திருக்கிறார் …”
அந்தப் படங்களையே பார்த்த படி நின்ற மலரவன்
”உங்களுடைய முதலாளி பயில்வான்தான் .ஒத்துக் கொள்கிறேன் .ஆனால் ஸ்ரூடியோக் காரன் எப்படி சிரிப்பை அடக்காமல் இந்தப் படத்தையெல்லாம் எடுத்திருப்பான் ” என்று என்னிடம் கேட்டான் .
தூரத்தில் வெற்றிவேல் அண்ணன் வந்து கொண்டிருந்தார்,அவர் தலை தெரிந்ததும் மெதுவாக எல்லோரும் நழுவத் தொடங்கினார்கள் .மலரவன் மாத்திரம் திரும்பவும் வந்து ,வெற்றிவேல் அண்ணனுக்கும் கேட்கும் விதத்தில் என்னிடம் ”நான் கேட்ட அந்த ஸ்டூடியோக்காரன் விஷயத்தைக் கொஞ்சம் விசாரித்துச் சொல்லு, சரியா… ?” என்று விட்டுப் போனான்
.நான் அவனைப் பார்த்துப் பற்களைக் கடித்தேன் .
மலரவன் சென்ற பின் வெற்றிவேல் அண்ணன் வெகு அக்கறையுடன் ”என்னடா ,வரதா ! அவன் ஏதோ ஸ்டூடியோக்காரன் சம்பந்தமாக விசாரித்தான் . என்ன விஷயம் ?”என்றார் .
”ஸ்டூடியோக்காரன் ஒருவன் வேலைக்கு ஆள் தேடுகிறானாம் .தனக்கு அது கிடைக்குமா என்று விசாரித்துப் பார்க்கச் சொன்னான் ” என்று ஒரு முழுப் பொய்யைத் தயங்காமல் சொன்னேன் .
”இவனையா ? இந்தக் கழிசடையையா? இவனைச் சேர்த்துக் கொண்டால் ஸ்டூடியோ உருப்பட்ட மாதிரிதான் …. அவனின் மஞ்சள் பெல்பொட்டமும் ,கன்னக்கிருதாவும், ஹிப்பித் தலையும்…இவனுக்கெல்லாம் வீட்டில மூன்று வேளையும் ஆக்கிப் போடுகிறார்களே…அதைச் சொல்ல வேணும்…” என்று வெற்றிவேல் அண்ணன் சலித்துக் கொண்டார் .
புதிதாக வெளிவரும் பாடல்கள் பற்றி வெற்றிவேல் அண்ணனுக்கு அவ்வளவு தெரியாது . புதுப் பாடல்களுக்கு ஓர்டர் கொடுக்கும் வேலையை அவர் என்னிடம் ஒப்படைத்து விட்டார் .’கண்ட கண்ட பாட்டெல்லாம் தேவையில்லை .நன்றாகப் போகும் என்று தோன்றினால் மட்டும் ஓர்டர் செய் ‘ என்று மாத்திரம் எனக்கு அறிவுறுத்தியிருந்தார் . எது நன்றாகப் போகும் என்பதெல்லாம் முன் கணிப்பிட முடியாத ஒரு சங்கதி என்று எனக்குத் தெரியும் . சில பாடல்கள் ஒரு மூர்க்கமான கடலலை கரை தாண்டி ஊரரெங்கும் பரவி விடும் . ‘அடி என்னடி ராக்கமா ‘ ,’என்னடி முனியம்மா கையிலே மையி’, ‘கொட்டாம்பட்டி ரோட்டிலே’ , ‘ரூப் தேரா மஸ்தானா’ , ‘தம் மரோ தம் ‘ இப்படி எவ்வளவோ.
நான் ஓர்டர் கொடுத்த பாடல்களுக்கான மாஸ்டர் கெசெட்டுகள் தபால் பொதி மூலம் மூன்று நாட்களில் வந்து சேர்ந்து விடும். . அந்தப் பொதிக்குள் பல்லாயிரம் வரிக் காதல் கடிதங்கள் இருப்பது போல் தோன்றும் . கெசெட் ப்ளேயரினுள் செலுத்தி ஒவ்வொரு பாடலாகக் கேட்டு முடிக்கும் வரையில் நான் இன்னோர் உலகவாசியாகி விடுவேன்.
வெற்றிவேல் அண்ணனுக்கு பாடல்கள் தொழில் ; கூரை .ஆனால் எனக்கோ அது உலகம் .என் வானம். பாடல்களில் நான் முகர்ந்தவை பல்லாயிரம் பூக்களின் நறுமணங்கள். பூரண நிலவொளி பட்டுத் தெறிக்கும் நீரலைகளின் ஏரியில் இசையின் துடுப்புகளுடன் மிதக்கும் படகொன்று என்னிடம் இருந்தது .பாடல்களால் நான் உருகி, மெழுகின் துளிகளாகச் சொட்டியிருக்கிறேன். என் பாறையில் பாடல்களால் துளிர்த்த புற்கள் உண்டு.. காரிருள் சாலையில் அவை வானத்து நட்சத்திரங்கள்; ஒளிரும் ரீங்கார வண்டுகள்; ஆழ்கிணறிலிருந்து கேட்கும் என் குரலின் எதிரொலி .மனம் சோர்ந்து மயங்கிச் சாய்ந்த போதெல்லாம் என் முகத்தில் விழுந்த பூவாளி நீர்த் துளிகள்.
அந்த மாயாலோகத்துக்கு இன்னொருவரும் அப்போது வந்து சேர்ந்திருந்தார். செல்வச் செழிப்பற்ற முகம். ஒட்ட வெட்டப் பட்ட தலைமுடி .சோளங்கொட்டைப் பற்களுக்கும் அந்தக் கண்களுக்கும் பின்னால், காற்றடித்த பலூனுக்குக் குண்டூசி குத்திப் பார்க்கும் குறும்புத்தனம் ஒளிந்திருப்பது போல் தெரிந்தது. ஆனால் ‘சிரிப்பதா ,வேண்டாமா’ என்ற முகபாவனை.
கெசெட் கவர்களில் இருந்த அந்த மனிதரைக் காட்டி ”அண்ணன் , இந்தாளின் பாட்டுகள் வித்தியாசமாக இருக்கின்றன ” என்றேன் ..
”டேய் ,இந்தாளைப் பார்த்தால் மியூசிக் டைரெக்டர் போலவேயில்லையே …அசல் நாட்டுப் புறத்தான் மாதிரி இருக்கிறான் ..”என்று சிரித்தார் .
”நாட்டுப் புறத்தில் பாட்டு இல்லையா அண்ணன் ?அவருடைய பாட்டுகளைக் கேட்டுப் பாருங்கள் …” என்று கூறி அந்த மனிதர் இசையமைத்த பாடல்கள் பலவற்றை அவருக்குப் போட்டுக் காட்டினேன் .’செந்தூரப்பூவே ..’,’மாதா உன் கோயிலில் …’,’உறவுகள் தொடர்கதை ..’,’நினைவோ ஒரு பறவை ..’,’கண்டேன் எங்கும் பூமகள் ‘,’ஒரு வானவில் போலே ..’,’வசந்தகாலக் கோலங்கள் ‘,’செந்தாழம் பூவில் ..’,’ஏதோ நினைவுகள் ..’,’நானே நானா ..’,’அழகிய கண்ணே ‘,’மயிலே ..மயிலே..’,ஆகாய கங்கை ..’,’எங்கெங்கோ செல்லும் என் எண்ணங்கள் ‘,’என்னுள்ளில் எங்கோ ..’,’என் இனிய பொன் நிலாவே ..’,’என் வானிலே ..’,’காற்றில் எந்தன் கீதம் ….’…
வெற்றிவேல் அண்ணன் காதுகளைத் திறந்து வைத்துக் கொண்டிருந்தாலும் உட்புறமாக தாளிட்டு வைத்திருக்கிறார் என்பது எனக்குப் புரிந்தது.
”சரி கேசவா ,ஏன் அந்தாள் டொங்கு டொங்கு என்று பறை மேளத்தைத் தட்டிக் கொண்டிருக்கிறார் .போதாக்குறைக்கு ஒரு குழல்.அதை பீப்பீ என்று பாட்டுக்கு நடுவில் ஊதா விட்டால் அந்தாளின் மண்டை வெடித்து விடுமா ”என்று வெற்றிவேல் அண்ணன் நக்கலாகக் கேட்டார் .
இன்னொருநாள் ‘அண்ணே அண்ணே சிப்பாய் அண்ணே ‘ என்ற அடித்தொண்டைக் குரலில் ஒலித்த பாடலைக் கேட்டதும் தலையில் அடித்துக் கொண்டார் .வேறொரு நாள் ‘தாம் த தீம் த தோம் ‘என்று கோரஸ் தொடங்கி ‘சச்ஜங்க் …சச்ஜங்க் …’என்று குரல்கள் ஒலித்த போது பொறுமையின் எல்லைக் கோட்டைத் தாண்டி விட்டார்.
”சைக்…இதுவெல்லாம் நல்லாவாடா இருக்கு கேசவா ?” என்று வெற்றிவேல் அண்ணன் என்னை உலுக்கி எடுத்தார் .
நான் புன்னகை செய்து சமாளித்தேன் .”வித்தியாசமாக இல்லையா அண்ணன்? அப்படிச் செய்து பார்க்கிறார்.அது நல்லதுதானே ” என்றேன் .
வெற்றிவேல் அண்ணன் சமாதானமடைந்ததாகத் தெரியவில்லை .
”அந்த நாள் பாட்டுகள் எப்படி இருக்கும் தெரியுமா ?பாசமலர் ,பாவமன்னிப்பு ….”என்று வெற்றிவேல் அண்ணன் தொடங்கியதை ”பார்த்தால் பசிதீரும் ,பாக்கியலக்ஷ்மி ,பாதகாணிக்கை ” என நான் கிண்டல் தொனியில் முடித்து வைத்தேன் .
”ஆங் …அதெல்லாம் பாட்டு …இதெல்லாம் என்ன ? இளையராசாவாம் ” என்று சலித்துக் கொண்டார் .
அதற்குப் பின்னர் இளையராஜா குறித்து இருவரும் பேசிக் கொண்டதில்லை .
அந்த நாட்களில் ‘ஒரே ஜீவன் ஒன்றே நெஞ்சம் வாராய் கண்ணா ‘ என்றொரு பாடல் வெளியானது. ‘நீயா’ படத்தில் பாம்பு ஒன்று பெண்ணுருவில் வந்து இந்தப் பாடலை அடிக்கடி பாடி படத்தின் ஆண் பாத்திரங்களைப் பழி வாங்கிக் கொண்டிருக்கும் . அது என்னையும் விட்டு வைக்கவில்லை. படாத பாடு படுத்தி விட்டது.
புதிதாக முளைத்த நாகதம்பிரான் கோயிலுக்கு பாற்குடங்களுடன் படையெடுத்ததைப் போல எங்களூர் சனங்கள் இந்தப் படத்தையும் கும்பல் கும்பலாகத் தியேட்டருக்குப் போய்ப் பார்த்தார்கள் . இதன் எதிரொலி என் ரெக்கோர்டிங் நிலையத்தில் மறுநாளே தெரிந்தது .
கட்டுப் பெட்டிக்குள்ளிருக்கும் பாம்பை வெளியே எடுத்து ஆட்டிக் காட்டும் குறவன் போல வெற்றிவேல் அண்ணன் மாறி விட்டார். ‘ஒரே ஜீவன் ‘ பாடல் கேட்டு வருபவர்களின் ஓர்டர்களை எல்லாம் பூரிப்புடன் ஏற்றுக் கொள்ள ஆரம்பித்தார்.
‘ஒரு மணித்தியாலக் கெசெட்டை நிரப்ப இன்னும் 13 பாடல்கள் அளவில் தேவைப் படுமே’ என்று நான் கேட்ட போது அவற்றையும் பாம்புப் பாடல்களாகத் தேர்வு செய்து நிரப்பினால் நன்றாக இருக்குமே என வெற்றிவேல் அண்ணன் ஒரு ‘புதுமையான ‘யோசனையை சொன்னார் .
நான் கடுமையாக முயற்சி செய்து ,ஞாபகப் படுத்தி ‘கணவனே கண் கண்ட தெய்வத்தில் தொடங்கி வெள்ளிக்கிழமை விரதம் வரை ‘பாம்புப் பாடல்கள் ‘ பலவற்றைக் கண்டு பிடித்தேன் . அப்படியும் ஓரிரு பாடல்கள் தேவைப் பட்ட போது ‘ ஹிந்தியில் வந்த ‘நாகின்’ போன்ற பாம்புப் படப் பாடல்களையும் சேர்த்துக் கொள்வோமா என்று வெற்றிவேல் அண்ணனிடம் கேட்டேன். அவர் உடனே சொன்னார் .’’வரதா ,நமக்குப் பாம்புதான் முக்கியம். பாஷை அல்ல! ‘’
இதன் விளைவை இரவுகளில் உறங்கும் போது உணர்ந்தேன். ‘ஹெட் போன் இல்லாமலும் காதினுள் ‘ஓ …ஓ ..ஓ ..’என்ற ஒரே ஜீவன் பாடலின் ஹம்மிங்கும் மகுடி ஓசையும் விடாமல் கேட்டுக் கொண்டிருந்தன . அந்த நாட்களில் வந்த கனவுகளிலும் விதம்விதமான பாம்புகள் என்னைத் துரத்திக் கொண்டிருந்தன .
P .B .ஸ்ரீனிவாஸின் பாடல்களில் பித்துப் பிடித்த ஒரு மனிதரையும் அந்த நாட்களில் நான் அங்கே சந்தித்தேன் . ஐம்பது வயதைத் தாண்டிய அவர் தரும் பட்டியலில் ஸ்ரீனிவாஸ் தவிர யாருக்கும் இடமில்லை .அந்தப் பாடல்களை ஒலிப்பதிவு செய்யும் போது ஸ்டூலை எடுத்துப் போட்டுக் கொண்டு என் பக்கத்திலேயே உட்கார்ந்து விடுவார் .மதுவின் லேசான நெடி அவரிடமிருந்து வீசிக் கொண்டிருக்கும் . ‘நெஞ்சம் அலை மோதுதே ..கண்ணும் குளமாகவே …ராதை கண்ணனைப் பிரிந்தே போகிறாள் …’ பாடல் ஒலித்துக் கொண்டிருக்கும் போது பித்துப் பிடித்தவர் போல் தலையை அசைத்த படியே இருப்பார் .கைகள் தன் பாட்டில் உயர்ந்து தாழும் .அவருடைய கண்களில் நீர் தளும்பிக் கொண்டிருக்கும் .அவர் தேர்ந்து தந்த எந்தப் பாடல்களிலும் ஸ்ரீநிவாஸ் உற்சாகத்துடன் ,மகிழ்ச்சி பொங்கப் பாடியது கிடையாது .துயரம் ,சோர்வு ,விரக்தி ,ஏமாற்றம்தான் அந்த மென்மையான குரல் வழியே பரவிக் கொண்டிருந்தன .
அவர் கெசெட்டை வாங்கிக் கொண்டு சென்றதும் வெற்றிவேல் அண்ணன் என்னிடம் சிரித்தவாறு சொன்னதுண்டு .
”இவன் தலைவிதி இது .இன்று வரை கல்யாணம் முடிக்கவில்லை .ராதை பிரிந்து போய் ,கல்யாணமாகி பேரப் பிள்ளையும் கண்டு விட்டாள் …இவர் தண்ணி போட்டுக் கொண்டு கண்கள் குளமாகித் திரிகிறார் ….”
எனக்கு ஏனோ சிரிக்கத் தோன்றவில்லை .அவரவர் துயரத்தை அவரவர் சுமந்து கடக்க எவ்வளவோ மார்க்கங்கள் உண்டு.

*

நன்றி : உமா வரதராஜன்

அபூர்வ சகோதரர்கள் – உமா வரதராஜன்

அரசனின் வருகை’ எழுதி அசத்திய பிரபல எழுத்தாள நண்பர் உமா வரதராஜன்   ஃபேஸ்புக்கில் சிரிக்க வைத்தார் இன்று. ‘எல்லாம் தெரிந்த’ அரபுநாட்டு ஏகாம்பரம்களிடம் நானும் மாட்டிக்கொண்டு படும் பாடு கொஞ்சநஞ்சமல்ல!

***

umavaran

அபூர்வ சகோதரர்கள்

உமா வரதராஜன்

நீராவி உடலால் வெளியேறும் ,மண்டை கொதிக்கும் இந்தக் கோடை வெயிலில் வயலினுடன் அலையும் ஒருவரிடம் அண்மையில் மாட்டிக் கொண்டேன் . சந்தையிலிருந்து திரும்பும் வழியில் பத்திரிகைக் கடையொன்றுக்குள் நுழைந்த போது அவரைக் கண்டேன். வழக்கத்துக்கு மாறாக அண்ணன் இல்லாமல் அவர் அங்கு தனியாகத் தோன்றியது எனக்கு ஆச்சரியத்தைத் தந்தது.

சுமார் 25 வருஷங்களுக்கு முன்னர் இந்த அண்ணனும்தம்பியும் என் பக்கத்துக் கடைக்காரர்கள். அரசியல் முக்கியஸ்தர் ஒருவரின் வாரிசுகள். எதிரும்,புதிருமாக மேஜை-நாற்காலி போட்டு உட்கார்ந்திருக்கும் இவர்களுக்கு நடுவில் யாராவது போய் மாட்டிக் கொண்டால் பேட் மிண்டன் பூப் பந்து போல் ஆவதைத் தவிர வேறு வழி கிடையாது. மூன்றாம் நபருக்குப் பேச எந்த சந்தர்ப்பமும் வழங்காமல் இரு பக்கங்களிலுமிருந்து சகோதரர்கள் பந்தாடிக் கொண்டிருப்பார்கள்.

காலம் அவர்களில் சின்ன மாற்றத்தயேனும் ஏற்படுத்தியிருக்காதா என்பது என் நப்பாசை.

என் நாக்கில் சனியன் நாட்டியமாடத் தொடங்குவது தெரியாமல் அவரிடம் வலியப் போய் ”நீங்கள் நலமா? அண்ணன் எப்படியிருக்கிறார் ?” என்று கேட்டு விட்டேன்.

அவர் என்னை உற்றுப் பார்த்து அடையாளம் கண்டு கொண்டார். அவர் முகம் அப்படியே மலர்ந்தது. இரை கிடைத்த சிங்கத்தின் சந்தோஷம் அதுவென்பதை அடுத்து வந்த ஒரு மணித்தியாலத்தில் புரிந்து கொண்டேன்.

அந்த ஒரு மணித்தியாலத்தில் அவர் தொடாத விவகாரம் என்று எதுவுமில்லை .அரசியல்,பொருளாதாரம்,,சுகாதாரம் , சரித்திரம், புவியியல், கலை,இலக்கியம் என்ற சகல பிரிவுகளிலும் என் தலையைப் பிடித்து அமுக்கி, முக்குளிக்க வைத்தார்.

தலையை இடம்-வலமாக ,மேலும் கீழுமாக ஆட்டுவதைத் தவிர நான் வேறொன்றும் செய்யவில்லை.குத்துச் சண்டை அரங்கில் பாகம் பாகமாகப் பிய்ந்து கிடந்த என்னை ஏதாவதொரு குப்பை லாரி வந்து வாரியெடுத்துக் கொண்டு செல்லக் கூடாதா என்று மனதுக்குள் புலம்பிக் கொண்டிருந்தேன்.
இவ்வளவு ‘ஞான ஸ்நானத்துக்குப்’ பின் பிரிய மனமில்லாமல் இளைய சகோதரர் சொல்லிச் சென்றதுதான் என்னை இப்போதும் பயமுறுத்துகின்றது.

” அண்ணன் இன்று வரவில்லை .உங்களைக் கண்டிருந்தால் மிகவும் சந்தோஷப் பட்டிருப்பார். அண்ணன் என்னை விட மிகவும் அறிவாளி என்பது உங்களுக்குத் தெரியும்தானே ?”

‘அட பாவிகளா! இந்த ஜென்மத்தில் அப்படி ஒரு தப்பை இனிச் செய்வேனா?’

சந்தையில் வாங்கிய மீன் கருவாடாகி இருந்தது.

***

நன்றி : உமா வரதராஜன் | http://www.facebook.com/umavaratharajan