காசிம்பீ பாய்முடைஞ்சா கண்டசனம் வாய்பிளக்கும்

போவதற்கு முன் (அட, ஊர்போவதற்கு முன்!) உருப்படியான பதிவு ஒன்று போடனும் என்று நினைத்தேன். எனவே நான் எழுதலாகாது. என் தேர்வாக , அற்புதமாக எழுதும் தம்பி முபாரக்கின் ‘சொல்லக் கொதிக்குதடா நெஞ்சம்‘ கட்டுரை, பிரபஞ்சன் சிபாரிசு செய்த பின்னி மோசஸின் ‘வழக்கம்போல் நாளையும்‘ சிறுகதை, அப்புறம் எங்கள் செல்ல உமா மகேஸ்வரியின் கவிதை ஆகியவற்றை வைத்திருந்தேன் (சமத்துவத்தைக் கவனிக்கவும்!). சீட்டுக் குலுக்கிப் பார்த்தால் ஜெயித்தது பெண்கள்தான். அவர்கள் எப்போதுமே அப்படித்தான். இங்கே இருபெண்கள். காசீம்பீயும் உமா மகேஸ்வரியும். காசீம்பீ என்கிற பாய்முடையும் பெண் பற்றிய அந்தப் பாட்டை யார் எழுதியது என்று தெரியவில்லை. (அஸ்மாபீ?!), ‘மௌவ்வல்’ எனும் ஒலிநாடாவில் அது இருக்கிறதாம். நண்பர் மரபின்மைந்தன் முத்தையா சொன்னார். பேச்சாளர் பர்வீன் சுல்தானா அவருக்குத் தந்தாராம். முத்தையாவுக்கும், எனக்கும் பிடித்த வரிகளை கீழே தந்திருக்கிறேன். அத்தோடு , இன்னும் இங்கே வராத அந்த உமா குருவியின் கவிதையும் . ஊர் சென்றால் முதல்வேலை அந்த ‘மௌவ்வல்’ வாங்குவதுதான். ‘மௌவ்வல்’ என்றால் என்ன என்று முதலில் தெரிந்தபிறகு (வவ்வாலின் வாப்பாவோ?) முழுப்பாடலையும் இங்கே முடைவேன்.

அப்புறம் பாக்கலாம், ‘ஹயாத்’ பாக்கி இருந்தா!

***

காசிம்பீ பாய்முடைஞ்சா கண்டசனம் வாய்பிளக்கும்
வாசமுள்ள தாழம்பாயாம் வண்ண வண்ண தாழம்பாயாம்
மடிசீலை வெத்திலை பாக்கும் மனசறிஞ்ச சத்திய வாக்கும்
குடித்தனத்து நீக்கும் போக்கும் கொண்டவளாம் காசீம்பீவி

*

உமா மகேஸ்வரி

எடுப்பாரற்ற தொலைபேசியொலி

உமா மகேஸ்வரி

நீயில்லாத அறைக்குள்
நிறையும் தொலைபேசியொலி
சொல்கிறது என்னிடம்

எதையெதையோ.

உன் இப்போதையை இன்மை
முற்போதைய இருப்பு
மற்றும் நீ வந்ததும்
வார்க்கக் கூடிய
கொஞ்சல், கோபம்
அதட்டல். அன்பு
எல்லாவற்றினுள்ளும் அது
மெல்லூசி முனை போல் நுழைந்து
கோர்த்தெடுத்துத் தருகிறது எனக்காக.
உன் சுவடுகளின்
ஒலி ரூபத்தை ஒப்படைக்கிறது என்னிடம்.
மௌனத்தின் மரணத்தை,
விவாதத்தின் சூட்டை
பகிர்வின் இதத்தை
ஒருவேளை நீ ஒற்றப்போகும் முத்தத்தை
ஒத்திப் போடும் அதன் வெற்றித் தேடல்
தருகிறது எப்படியோ ஒரு
அழகிய ஆசுவாசத்தை

*

நன்றி : கணையாழி, உமா மகேஸ்வரி, மரபின் மைந்தன் முத்தையா, ‘எழுத்தும் எண்ணமும்’ குழுமம்

ஏனிந்தக் குருவியை இன்னும் காணோம்? – உமா மகேஸ்வரி

‘குருவி’ இந்த வலைப்பக்கத்தில் சீக்கிரம் வந்து அமரும், புதிய கவிதைகள் பாடியபடி!  ஆமாம், உமாவிடம் இப்போதுதான் பேசினேன். பேச்சில் அதே குழந்தைத்தனம் (இன்னக்கி கொஞ்சம் தேவலை! – தாஜ்) . ‘நட்சத்திரங்களின் நடுவே’ தொகுப்பிலிருந்து எங்களின்  பிரியத்திற்குரிய (நாகூர் பாஷையில்: புரியத்துக்குரிய!) உமா மகேஸ்வரியின் எளிய கவிதை ஒன்று.

உமா மகேஸ்வரி
பிரியம் – உமா மகேஸ்வரி

ஏனிந்தக் குருவியை
இன்னும் காணோம்?
எனக்கு மகா செல்லம் அது.
பழுப்புக் கலரில் அழுக்குக் குஞ்சு.
சின்ன இறக்கைகளில்
கறுப்புக்கோடு தெரியும்.
கண் மட்டும்
கண்ணாடிக்கல் மாதிரி
வெளிச்சத் துறுதுறுக்கும்.
உரிமையாய் கூடத்தின்
உள்ளே நுழைந்து நடக்கும்.
புத்தகம் ஒதுக்கி
அதையே கவனிக்கும் என்னை
அலட்சியப்படுத்தும்.
மாடி வெயிலில்
வேட்டியில் காயும்
வடகத்தை அலகால் நெம்புதல்,
தோல் உரிக்காது
நெல்லை விழுங்குதல்,
துணிக்கொடியில் கால் பற்றிக்
காற்று வாங்குதல்,
அறைக்கண்ணாடியில்
தன்னைத் தானே
கொத்திக் கொள்ளுதல் –
அதற்குப் பிடித்தம்.
நான் இறைக்கும்
தானியமணிகளை
அழகு பார்த்துத் தின்னும்
ரசனாவாதி.
ஏனிந்தக் குருவியை
இன்னும் காணோம்?
அது வரும் மாலை
மெதுவாய் நகருதே!
கீழ்வானப் பரப்பில்
கண் விசிறித் தேடினும்
காணவில்லை, எங்கு போச்சோ!
திடுமெனக் காதில்
தித்தித்தது அதன் கீச்சுக்குரல்
ஜன்னல் பிளவில்
உன்னிப் பார்த்தால்
அடுத்த வீட்டு முற்றத்தில்
இறைந்திருக்கும் தானியம் பொறுக்கி
அழகு பார்க்கும் என் குருவி;
என் முகம் ஏறிடாது
திருப்பிக் குனியும் விழிகளை.

***

நன்றி : உமா மகேஸ்வரி, தாஜ், தமிழினி

உமா மகேஸ்வரி : ‘என் செல்ல மகளுக்கு…’

umamaheswari‘நவீனத் தமிழின் முக்கியமான பெண் கவிஞர்களில் ஒருவரான உமா மகேஸ்வரியின் கவிதைப் பின்புலம் வீடு சார்ந்தது. வீட்டின் உறவுகள் – குறிப்பாகப் பெண்கள், குழந்தைகளின் உலகம் – சார்ந்தது. வீட்டிலிருந்து விரியும் நிலக் காட்சிகள், வான்வெளி சார்ந்தது. இவற்றுடான உரையாடல் இந்த வாழ்க்கையின் அர்த்தம் குறித்தான தேடலாக விரிவுகொள்கிரது. அதில் தவிர்க்கவியலாது கசியும் துக்கத்தையும் இந்தத் தொகுப்பிலுள்ள கவிதைகள் உனர்த்துகின் றன. வாசக மனத்தில் கவிதைகளை அழுத்தமாகப் பதியவைக்கும் வகையிலான சிற்றோடையின் நீரோட்டம் போன்ற மொழிநடை உமா மகேஸ்வரியின் தனிச் சிறப்பு’ – ‘இறுதிப் பூ’ தொகுப்பிற்காக காலச்சுவடு பதிப்பகம்.

‘நிஜத்தில் மேற்கண்ட வரிகள் உமா மகேஸ்வரியின் கவிதை வீச்சுக் குறித்த முழுமையான அபிப்ராயமாக நான் கொள்ளவில்லை. பல முகம் கொண்ட அவரது கவிதைகளின் அரூபத்தை அளக்க பெரிய ஆய்வு செய்ய வேண்டும்.’ –  தாஜ் 

***

உமாமகேஸ்வரியின் ‘இறுதிப் பூ’  தொகுப்பிலிருந்து…

என் செல்ல மகளுக்கு…
உமா மகேஸ்வரி

 
என்னுடைய
வெண்ணிறச் செம்பருத்திகள்
காற்றில் எதையோ எழுத
விரிவதைப்
படிதாண்டிப் பார்க்கவியலாமல்
என் பாதங்கள் பனித்து
மூச்சு நிற்கும் அந்த நாள்.
நிசப்தத்தில்
கரு நீலக் குளமாக
மரணம் வரைந்த என்னை
உன் கண்ணீர் சொட்டிக்
கலைத்து விடாதே.
கடந்து பற
உன் வானத்திற்கு.
உன்னைத் தவிர
எனக்கென்று அழ
ஒருவரும் இல்லையென்பது
அழுகையாய்த்தானிருக்கிறது
எனக்கே.
ஆயினும்,
உன்
சிறு கைகளில்
நான் கனக்க மாட்டேன் பிணமாக.
இறக்கவாவது செய்வேன்
நான்,
நானுமற்று நானாக.

*** 
நன்றி:   உமாமகேஸ்வரி ,   காலச்சுவடு பதிப்பகம் தாஜ்

தொடர்புடைய சில சுட்டிகள் :

உமா மகேஸ்வரி கவிதை- ஏதோ ஒரு பறவை எஸ்.பாபு

உமா மகேஸ்வரி கவிதைகள் கற்பாவை –   கருணாகரன்

உமா மகேஸ்வரி கவிதைகள் – புதுவிசை (கீற்று)

உமா மகேஸ்வரியின் அரளி வனம் (சிறுகதைகள்) – புத்தக அறிமுகம்

வாசக அனுபவம்: உமா மகேஸ்வரியின் ‘வெறும் பொழுது ‘  -பி.கே.சிவகுமார்  

Newer entries »