உமா மகேஸ்வரிக்கு விருது

சகோதரி உமா மகேஸ்வரிக்கு மேலும் பல விருதுகள் குவிய வாழ்த்துகிறேன்.

**

உமா மகேஸ்வரி

உமா மகேஸ்வரிக்கு நஞ்சன்கூடு திருமலாம்பாள் விருது
பழனி கிருஷ்ணசுவாமி

தமிழ் எழுத்தாளர் உமாமகேஸ்வரிக்கு பெங்களூரைச் சேர்ந்த என். எம். கே. ஆர். வி. பெண்கள் கல்லூரியின் பிரிவாகிய ஷஸ்வதி பெண்ணியல் ஆய்வு மையம் வழங்கும் இந்திய மொழிகளில் சிறந்த பெண் எழுத்தாளருக்கான நஞ்சன்கூடு திருமலாம்பாள் விருது வழங்கப்பட்டுள்ளது.

1986ஆம் ஆண்டு நிறுவப்பட்ட இவ்விருது இதுவரை இந்திய மொழிகளில் எழுதும் பல்வேறு பெண் எழுத்தாளர்களுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. இதற்கு முன்பு தமிழில் இவ்விருதைப் பெற்றவர் ராஜம் கிருஷ்ணன். நாற்பதாயிரம் ரூபாய் ரொக்கமும் காமதேனுச் சிற்பமும் கொண்டது இவ்விருது. வெங்கட் சாமிநாதன், பழனி கிருஷ்ண சுவாமி, கே. வி. ஷைலஜா ஆகியோர் தேர்வுக்குழு நடுவர்களாகப் பணியாற்றினார்கள்.

தமிழ்ச் சமூகம் தனது மத்தியதரக் குடும்பப் பெண்களுக்காக விதித்திருக்கும் வரம்புகளைத் தாண்டாமல் நான்கு சுவர்களுக்குள்ளேயே தன் வாழ்க்கையை அமைத்துக்கொண்ட பெண்ணின் வாழ்பனுபவங்களைக் கவிதை, சிறுகதை, நாவல் எனப் பல வடிவங்களிலும் உமா வெளிப்படுத்தியிருக்கிறார். ஒரு மகளாக, சகோதரியாக, மனைவியாக, மருமகளாக, தாயாகத் தனக்குத் தெரிந்த, அனுபவப்பட்ட வாழ்வைச் செறிவான மொழிநடையில் இவர் வெளிப்படுத்தும் விதம் நேர்மையானது. அதேசமயம் காத்திரமானது. உமாவின் எழுத்துக்களில் விரியும் பெண்ணுலகம் காலங்காலமாக அடக்குமுறையிலும் தாழ்ந்து பணிதலிலும் வாழப் பழக்கப்படுத்தப்பட்டது. தனக்கென்று எந்த அடையாளமுமில்லாதது. உமாவின் எழுத்துக்களில் வெளிப்படும் உள்ளார்ந்த குரல் பெண்ணுரிமையைப் பலப்படுத்தும் நோக்கம் கொண்டது என்றாலும் அதைத் தம்பட்டமடிப்பதில்லை. சித்தாந்த முகமூடிகள் எதையும் அவர் அணிந்துகொள்வதில்லை.

உமாவின் எழுத்துக்களிலும் இடம்பெறும் கேட்கும் உரையாடல்களின் பின்புலமாக அவர் அமைத்துக்காட்டும் உலகம் ஆணாதிக்கச் சமூகத்தில் வாழ நேர்ந்த பெண்ணின் ஆவேசம், ஆதங்கம் ஆகியவற்றை எடுத்துக்காட்டும் உலகமாக நம்முன் விரிகிறது. இறப்பு, நோய், நிலையாமை ஆகியவற்றுக்கிடையில் வாழநேரும் மனிதனுக்கு அன்பு என்னும் அச்சாணி இல்லாமல் போய்விட்டால் வாழ்வு எவ்வாறு பொருளற்றுப்போய்விடும் என்பதையும் இவரது எழுத்துக்களில் பார்க்கிறோம்.

‘எவ்வழி நல்லவர் ஆடவர் அவ்வழி நல்லை வாழிய நலனே’ என்னும் கூற்றின் பொருத்தப்பாட்டை ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு சோதித்துப் பார்ப்பதற்கு உமாவின் எழுத்துக்கள் உதவக்கூடும்.

***

நன்றி : காலச்சுவடு , பழனி கிருஷ்ணசுவாமி

மரப்பாச்சி – உமா மகேஸ்வரி

‘மெய்தான், அய்ந்து வருடங்களுக்கு முன்பு வாங்கிய  உமா மகேஸ்வரியின் மரப்பாச்சி தொகுதியை நேற்றுத்தான் படித்து முடித்தேன். கவிதைகளை விடவும் உமா மகேஸ்வரியின் கதைகள் எனக்கு வேறொரு உலகத்தை காட்டியது. அம்பை, பாமா, சிவகாமி, அந்த வரிசையில் வைத்துப்பார்க்க்கூடிய ஆளுமை உமா மகேஸ்வரியின் எழுத்தில் அடங்கிக்கிடக்கிறது’ – எஸ்எல்எம் ஹனிபா

***

மரப்பாச்சி

உமா மகேஸ்வரி

பரணில் எதையோ தேட ஏறிய அப்பா இறங்கும்போது வேறொரு பொருளைக் கையில் வைத்திருந்தார். கடந்த காலத்தின் தூசு அவர் மீது மங்கலாகப் படிந்திருந்தது. பழைய பொருள்களோடு ஞாபகங்களையும் உருட்டிக் களைத்துக் கனிந்த முகம். அப்பா அனுவைக் கூப்பிட்டார் – எந்த நொடியிலும் விழுந்து சிதறுவதற்கான அச்சுறுத்தல்களோடு அவசர வாழ்வில் விளிம்பில் தள்ளாடும் அபூர்வமானதொரு குழந்தைக் கணத்தைத் தன்னிலிருந்து சேகரித்து அவளில் நட்டுவிட வேண்டும், உடனடியாக. ஒரு மாயாஜாலப் புன்னகையோடு அதை அனுவிடம் நீட்டினார். சிறிய, பழைய மஞ்சள் துணிப்பையில் பத்திரமாகச் சுற்றிய பொட்டலம், பிரிபடாத பொட்டலத்தின் வசீகரமான மர்மத்தை அனு ஒரு நிமிடம் புரட்டிப் பார்த்து ரசித்தாள். உள்ளே என்ன? பனங்கிழங்குக் கட்டு? பென்சில் டப்பா? சுருட்டிய சித்திரக் கதைப் புத்தகம்? எட்டு வயது அனுவிற்கு இந்தப் புதிரின் திகில் தாங்க முடியவில்லை. அப்பாவின் ஆர்வமோ அது இவளுக்குப் பிடித்திருக்க வேண்டுமே என்பதாக இருந்தது. அவசர அவசரமாகப் பிரித்தபோது வெளியே வந்தது கரிய மரத்தாலான சிறிய பெண்ணுருவம். அதனுடைய பழமையே அனுவிற்குப் புதுமையானதாயிற்று. தெய்வ விக்கிரகங்களின் பிழைபடாத அழகோ, இயந்திரங்கள் துப்பிய பிளாஸ்டிக் பொம்மைகளின் மொண்ணைத்தனமோ வழவழப்போ அதற்கில்லை. விரல்களை உறுத்தாத சீரான சொரசொரப்பு. இதமான பிடிமானத்திற்கு ஏதுவான சிற்றுடல்; நீண்டு மடங்கிய கைகள்; ஒரு பீடத்தில் நிறுத்தப்பட்ட கால்கள்; வாழ்தலின் சோகத்தை வளைகோடுகளுக்குள் நிறைத்த கண்கள்; உறைந்த உதடுகள். ‘ஹை, பின்னல்கூட போட்டிருக்கப்பா.’ அனு ஒவ்வொன்றாகத் தடவிப் பார்த்தாள் அதிசயமாக. ‘ஒவ்வொரு அணுவிலும் இதைச் செதுக்கிய தச்சனின் விரல்மொழி, உளியின் ஒலி’ என்று அப்பா முழங்கை, கால்கள் மற்றும் முகத்தில் இருக்கிற சிறுரேகைகளைக் காட்டிச் சொன்னார். பிறகு அவளுடைய திகைப்பைத் திருப்தியோடு பார்த்தபடி, புதிய விளையாட்டுத் தோழியுடனான தனிமையை அனுமதிக்கும் விதமாக அங்கிருந்து நகர்ந்தார்.

மரச் செப்புகள், சிறு அடுப்பு, பானை, சட்டி, சருவம், குடம், கரண்டி என்று எதிர்காலச் சமையல் அறையின் மாதிரி அவள் சிறு கைகளில் பரவிச் சமைந்து அவளைக் களைப்புறச் செய்தது. வட்டத் தண்டவாளத்தில் ஓடும் குட்டி ரயிலின் கூவல் சோகத்தின் நிழலை நெஞ்சுள் பூசுகிறது. கிளி, மைனா, புறா என்று பறவை பொம்மைகளின் மொழியோ சதா மேகங்களைத் துழாவிக் கொண்டிருக்கிறது. பிளாஸ்டிக் யுவதிகள் அவள் கற்பனையின் கனம் தாளமாட்டாத மெலிவோடு இருக்கிறார்கள்.

அம்மா சமையல், கழுவுதல், துவைத்தல், துடைத்தல் என எந்த நேரமும் வேலைகளோடிருக்கிறாள். பிறகு தங்கச்சிப் பாப்பாவின் குஞ்சுக் கை, கால்களுக்கு எண்ணெயிட்டு நீவி, காலில் குப்புறப் போட்டுக் குளிக்கவைக்கிறாள். துவட்டிச் சாம்பிராணிப் புகை காட்டி, நெஞ்சோடு அணைத்துச் சேலையால் மூடி மூலையில் உட்கார்ந்திருக்கிறாள் நெடுநேரம்.

‘அம்மா நான் உன் மடியில் படுத்துக்கட்டுமா?’

‘இன்னும் சின்னக் குழந்தையா நீ?’ நெஞ்சு வரை மேடேறிய கர்ப்ப வயிற்றோடு அம்மாவுக்குப் பேசினாலே மூச்சிரைக்கிறது. அவள் பகிர்ந்து தரும் அன்பின் போதாமை அனுவை அழுத்துகிறது.

அப்பா மெத்தையில் சாய்ந்து மடக்கி உயர்த்திய கால்களில் தங்கச்சிப் பாப்பாவைக் கிடத்தி தூரியாட்டுகிறார். கிலுகிலுப்பையை ஆட்டி பாப்பாவிற்கு விளையாட்டுக் காட்டுகிறார். ‘ங்கு, அக்கு’ என்று பாப்பாவோடு பேசுகிறார்.

‘அப்ப, இந்தக் கதையில அந்த ராஜா…’ என்ரு அனு எதையாவது கேட்டால்., ‘பெரிய மனுசிபோல் என்ன கேள்வி நை நைனு, சும்மா இரு’ என்று அதட்டுகிறார்.

‘நான் யார்? பெரியவளா, சின்னவளா, நீயே சொல்’ அனு கேட்கையில் மரப்பாச்சி மௌனமாய் விழிக்கும்.

‘எனக்கு யாரிருக்கா? நான் தனி.’ அனுவின் முறையிடல்களை அது அக்கறையோடு கேட்கும். சுடுகாயைத் தரையில் உரசி அதன் கன்னத்தில் வைத்தால் ‘ஆ, பொசுக்குதே’ என்று முகத்தைக் கோணும். கொடுக்காப்புளிப் பழத்தின் கொட்டையில், உட்பழுப்புத் தோல் சேதம் அடையாமல் மேல் கறுப்புத் தோலை உரித்து நிலை மேல் வைத்தால் பகல் கனவும் பலிக்கும் என்கிற அனுவின் நம்பிக்கைகளுக்கு ‘ஆமாஞ்சாமி’ போடும். அவள் நிர்மாணிக்கிற பள்ளிகளில் மாணவியாக, தொட்டில்களில் பிள்ளையாக, சில நேரம் அம்மாவாக, கனவுலக தேவதையாக எந்த நேரமும் அனுவோடிருக்கும்.

மரப்பாச்சி புதிய கதைகளை அவளுக்குச் சொல்லும்போது, அதன் கண்களில் நீல ஒளி படரும். மரப்பாச்சி மரத்தின்  இதயமாயிருந்தபோது அறிந்த கதைகள், மரம் வானை முத்தமிட்ட பரவசக் கதைகள், மழைத்துளிக்குள் விரிந்த வானவிற் கதைகள்… அவள் எல்லா நாளும் ஏதாவது ஒரு கதையின் மடியில் உறங்கினாள்.

வருடங்கள் அவளை உருகிப் புதிதாக வார்த்தன. நீண்டு, மினுமினுக்கிற கைகள்; திரண்ட தோள்கள்; குழைந்து, வளைந்த இடுப்பு, குளியல் அறையில் தன் மார்பின் அரும்புகளில் முதன் முறையாக விரல் பட்டபோது பயந்து, பதறி மரப்பாச்சியிடம் ஓடி வந்து சொன்னாள். அது தனது சிறிய கூம்பு வடிவ முலைகளை அவளுக்குக் காட்டியது.

அவள் குளியல் அறைக் கதவுகளை மூடித் தன்னைத் தனிப்படுத்திக் கொள்வதில் அம்மாவிற்குக் ஆதங்கம். ‘நான் தலை தேய்து விடறேனே’ என்கிறாள்.

‘ஒண்ணும் வேணாம்’ என்று அனு விலகுகிறாள். அம்மா தனக்கும் அவளுக்கும் இடையே தள்ளத் தள்ள முளைத்தாடும் திரைகளை விலக்க முயன்று, தாண்டி முன்னேறுகையில் புதிது புதிதாய் திரைகள் பெருகக் கண்டு மிரண்டாள். நிரந்தரமான மெல்லிய திரைக்குப் பின்புறம் தெரியும் மகளின் வடிவக்கோடுகளை வருடத் தவித்தாள்.

எல்லோரும் தூங்கும் இரவுகளில் அனுவின்  படுக்கையோரம் அம்மா உட்கார்ந்திருப்பாள். அனுவின் உறக்கத்தில் ஊடுருவி நெருடும் அம்மாவின் விழிப்பு. உள்ளங்கை அனுவின் உடல் மீது ஒற்றி ஒற்றி எதையோ எதையோ தேடும். ‘என்னம்மா?’ பாதி விழிப்பில் அனு கேட்டால் பதற்றமாகக் கையை இழுத்துக்கொண்டு, ‘ஒண்ணுமில்லை’ என முனகி, முதுகு காட்டிப் படுத்துக் கொள்வாள். அம்மாவின் முதுகிலிருந்து விழிகளும் வினாக்களும் தன் மீது பொழிவதை அனுவால் அறிய முடியும்.

பள்ளிக்குக் கிளம்பும் நேரம் இப்போதெல்லாம் மேலாடையைச் சரியாகப் போடுவது அம்மாதான், சாயங்காலம் அவள் வர பத்து நிமிடம் தாமதித்தால் , வாசலில் அம்மா பதறித் தவித்து நிற்கிறாள். எங்கே போனாலும் அம்மாவின் கண்களின் கதகதப்பும் மிருதும் அடைகாக்கிறது.

தன் அயர்விலும் ஆனந்தத்திலும் மரப்பாச்சி மங்குவதையும் ஒளிர்வதையும் கண்டு அனு வியக்கிறாள். தன்னை அச்சுறுத்தவும் கிளர்த்தவும் செய்கிற ததும்பல்களை மரப்பாச்சியிடமும் காண்கிறாள். கட்புலனாகாத கதிர்களால் தான் மரப்பாச்சியோடு ஒன்றுவதை உணர்கிறாள்.

மரப்பாச்சியின் திறந்த உடல், கோடுகள் தாண்டி மிளிரும் விழிகள், இடுப்பும் மடங்கிய கையும் உருவாக்கும் இடைவெளி அனைத்தையும் உறிஞ்சத் திறந்த உதடுபோல் விரியும். அனுவின் உலகம் அதற்குள் வழுக்கி, நகர்ந்து, சுருங்கும்.

சிறுமிகள் அனுவை விளையாடக் கூப்பிட்டு உதடு பிதுக்கித் திரும்புகிறார்கள். கூடத்துத் தரையில் முடிவுற்று ஆடும் தொலைக் காட்சியின் ஒளி நெளிவுகள், இரவில் ஊறும் இருள், ஜன்னல் கதவுகள் காற்றில் அலைக்கழிய, அனு கட்டில் ஓரத்தில் சுருண்டிருப்பாள். மேஜையில் இருக்கும் மரப்பாச்சியின் கண்கள் அவளைத் தாலாட்டும் மெல்லிய வலைகளைப் பின்னுகின்றன. அதன் முலைகள் உதிர்ந்து மார்பெங்கும் திடீரென மயிர் அடர்ந்திருக்கிறது. வளைந்து இடுப்பு நேராகி , உடல் திடம் அடைந்து, வளைந்த மீசையோடு அது பெற்ற ஆண் வடிவம் விசித்திரமாயும் விருப்பத்திற்குரியதாகவும் இருக்கிறது. அது மெதுவாக நகர்ந்து அவள் படுக்கையின் அருகில் வந்தது. அதன் நீண்ட நிழல் கட்டிலில் குவிந்து அனுவை அருந்தியது. பிறகு அது மெத்தை முழுவதும் தனது கரிய நரம்புகளை விரித்ததும் அவை புதிய புதிய உருவங்களை வரைந்தன.; துண்டு துண்டாக. அம்புலிமாமா கதைகளில் அரசிளங்குமரிகளை வளைத்துக் குதிரையில் ஏற்றுகிற இளவரசனின் கைகள். சினிமாக்களில் காதலியைத் துரத்தி ஓடுகிற காதலனின் கால்கள். தொலைக்காட்சியில் கண் மயங்கிய பெண்ணின் கன்னங்களில் முத்தமிடுகிற உதடுகள். தெருவோரங்களில், கூட்டங்களில் அவள் மீது தெறித்து , உணர்வைச் சொடுக்கிச் சிமிட்டுகிற கண்கள். இன்னும் அம்மாவின் இதமான சாயல்கள், அப்பாவின் உக்கிரக் கவர்ச்சியோடான அசைவுகள், அத்தனையும் சிந்திய நிழற்துண்டங்கள், அபூர்வமான லயங்களில் குழைந்து கூடி உருவாகிறான் ஒருவன். அவள் ஒருபோதும் கண்டிராத, ஆனால் எப்போதும் அவளுள் அசைந்தபடியிருந்த அவன், அந்த ஊடுருவல் தனக்கு நேர்வதைத் தானேயற்று கவனம் கொள்ள முடிவது என்ன அதிசயம்? தனக்கு மட்டுமேயாகவிருந்த அந்தரங்கத்தின் திசைகளில் அவன் சுவாதீனம் கொள்வது குளிர்ந்த பரபரப்பாகப் பூக்கிறது. அந்த இரவு, காலையின் அவசரத்திலும் உடைபடாது நீண்டது. அனு வேறெப்போதும் போலன்றி தன் உடலை மிகவும் நேசித்தாள். கனவின் ரகசியத்தைப் பதுக்கிய மிதப்பில் பகல்களிருந்தன. பள்ளி முடிந்ததும் தாவி வந்து அவளை அள்ளுகிற மரப்பாச்சி; ‘ஏன் லேட்?’ என்று ‘உம்’மென்றாகிற அதன் முகம்; நீள்கிற ரகசியக் கொஞ்சல்கள்; அம்மா இல்லாத நேரம் இடும் முத்தங்கள்; அவள் படுக்கையில் அவளுக்கு முன்பாகவே ஆக்கிரமித்திருக்கிற அவன். போர்வைக்குள் அனுவின் கைப்பிடியில் இருக்கிற மரப்பாச்சியை அம்மா பிடுங்க முயற்சித்தால், தூக்கத்திலும் இறுகப் பற்றிக் கொள்கிறாள். அதன் விரிந்த கைகளுக்குள் தன்னைப் பொதிந்தும், மார்பு முடிகளைச் சுருட்டி விளையாடியும் மீசை நுனியை இழுத்துச் சிரித்தும் தோள்களில் நறுக்கென்று செல்லமாய்க் கிள்ளியும் அவள் நேரங்கள் கிளுகிளுக்கும். தாபங்களின் படிகளில் சுழன்றிறங்குகிறாள் அவள். அகலவும் மனமின்றி அமிழவும் துணிவின்றி வேட்கையின் விளிம்பலைகளில் நுனிப் பாதம் அளைகிறாள்.

கிருஸ்துமஸ் லீவ் சமயம் அத்தை வந்தபோது அனு கவுனை கால்களுக்கிடையில் சேகரித்து, குனிந்து, கோல நடுச்சாணி உருண்டையில் பூசணிப் பூவைச் செருகிக்கொண்டிருந்தாள். ‘அனு எப்படி வளர்ந்துட்டே!’ அத்தை ஆச்சரியத்திற்குள் அவளை அள்ளிக் கொண்டாள். உணவு மேஜையில் விசேஷமான பண்டங்கள், பார்த்துப் பார்த்துப் பரிமாறும் அம்மா. அத்தை அனுவை லீவிற்குத் தன்னோடு அனுப்பும்படி கேட்டதும் அம்மாவின் முகத்தில் திகிற் புள்ளிகள் இறைபட்டன. ‘அய்யோ மதினி, இவளை நாங்க கடிச்சா முழுங்கிடுவோம்? அப்படியே இவள் ஆளாகிற முகூர்த்தம் எங்க வீட்டில் நேர்ந்தால் என்ன குத்தம்? எனக்கும் பிள்ளையா குட்டியா? ஒரு தரம் என்னோட வரட்டுமே’ அத்தை அவளைத் தன்னருகில் வாஞ்சையாக இழுத்துக் கொண்டாள்.

ஒரு உறுப்பையே தன்னிலிருந்து வெட்டியெடுப்பது போன்ற அம்மாவின் வேதனை கண்டு அனு மருண்டாள். துணிகளை அடுக்கிய பெட்டியில் மரப்பாச்சியை வைக்கப் போனபோது அத்தை, ‘அங்கே நிறைய பொம்மை இருக்கு’ என்று பிடுங்கிப் போட்டதுதான் அனுவுக்கு வருத்தம்.

அந்தப் பயணம் அவளுக்குப் பிடித்திருந்தது. நகர்கிற மரங்கள்; காற்றின் உல்லாசம்; மலைகளின் நீலச்சாய்வு. எல்லாமும் புத்தம் புதிது.

அம்மா வற்புறுத்தி உடுத்திவிட்ட கரும்பச்சைப் பாவாடையில் அனுவின் வளர்த்தியை மாமாவும் வியந்தார். பார்த்த கணத்திலிருந்தே மாமாவிடம் இருந்து தன்பால் எதுவோ பாய்வதை உணர்ந்து அவள் கூசினாள். ‘எந்த கிளாஸ் நீ? எய்த்தா, நைன்த்தா?’ என்று கேட்டுவிட்டு பதிலைக் காதில் வாங்காமல் கழுத்துக் கீழே தேங்கிய மாமாவின் பார்வையில் அது நெளிந்தது. ‘ எப்படி மாறிட்டே? மூக்கொழுகிக்கிட்டு, சின்ன கவுன் போட்டிருந்த குட்டிப் பொண்ணா நீ?’ என்று அவள் இடுப்பைத் திமிறத் திமிற இழுத்துக் கொஞ்சியபோது மூச்சின் அனலில் அது ஊர்ந்தது. ‘சட்டை இந்த இடத்தில் இறுக்குதா?’ கேட்டு தொட்டுத் தொட்டு மேலும் கீழும் அழுத்தித் தேடிய உள்ளங்கையில் இருந்து அது நசநசவென்று பரவியது. மாமாவின் கைகளில் இருந்து தன்னை உருவிக்கொண்டு ஓடினாள் அனு.

அத்தை பிரியமாயிருந்தாள். திகட்டத் திகட்ட கருப்பட்டி ஆப்பாம், ரவை பணியாரம், சீனிப்பாலில் ஊறிய சிறு உருண்டையான உளுந்து வடைகள் என்று கேட்டுக்கேட்டு ஊட்டாத குறைதான்.

‘உன் அடர்த்தியான சுருள்முடியில் இன்னிக்கு ஆயிரங்கால் சடை பின்னலாமா? பின்னி முடித்து, கொல்லையில் பூத்த பிச்சி மொட்டுகளை ஊசியில் கோர்த்து வாங்கி , ஜடையில் தைத்து, பெரிய கண்ணாடி முன் திருப்பி நிறுத்தி, சின்னக் கண்ணாடியைக் கையில் தந்தாள். ‘நல்லாயிருக்கா பார் அனு!’

அம்மா ஒளிந்துவைத்த அன்பின் பக்கங்கள் அத்தையிடம் திறந்து புரண்டன. அனு எந்நேரமும் அத்தையை ஒட்டி, இரவில் சுவர் மூலையில் ஒண்டிப் படுத்து, அத்தையின் சேலை நுனியைப் பார்த்தபடியே தூங்க முனைவாள். அவ்வளவு தூரத்தையும் ஒரு விரல் சொடுக்கில் அழித்துவிட்டு , மரப்பாச்சிக்குள்ளிருந்து கிளம்பி வருகிறான் அவன். அத்தைக்கும் அனுவிற்கும் நடுவே இருந்த சிறிய இடைவெளியில் தன்னை லாவகமாகச் செலுத்திப் பொருத்திப் படுக்கிறான். உறக்கத்தோடு அனுவின் தசைகளிலும் நரம்புகளிலும் கிளர்ந்து கலக்கிறான். அவனும் அவளும் இடையறாத மயக்கத்தில் இருக்கையில் ஒரு அன்னியப் பார்வையின் திடீர் நுழைவில் அத்தனையும் அறுபடுகிறது. அனு உலுக்கி விழிக்கிறாள். மிகவும் அவசரமாக கழிப்பறைக்கு போகவேண்டும் போலிருக்கிறது. கொல்லைக் கதவு திறந்து  தென்னைகள், பவழமல்லி, மருதாணி எல்லாம் கடந்து, இந்த இருட்டில் குளிரில்…அய்யோ, பயமா இருக்கே. அத்தையை எழுப்பலாமா? ச்சே, அத்தை பாவம். அலுத்துக் களைத்து அயர்ந்த தூக்கம். ஏறி இறங்கும் மூச்சில் மூக்குத்தி மினுக்கும். காதோர முடிப் பிசிறில், கன்னத்து வியர்வைத் துளிர்ப்பில் அத்தைக்குள் புதைந்த குழந்தை வெளித் தெரிகிறது. எப்படியாவது தூங்கிவிடலாம். இல்லை, தாங்க முடியவில்லை. அடிவயிற்றில் முட்டும் சிறுநீர் குத்தலெடுக்கிறது. மெல்ல எழுந்து அத்தைக்கும் முழிப்புக் காட்டாமல் , கொலுசு இரையாமல் பூனைபோல நடந்து, சாப்பாட்டு மேஜையில் இடித்துச் சமாளித்து, இருட்டில் தடவி சுவிட்சைப் போடுகிறாள். கதவில் சாவியைத் திருகும் சிற்றொலி நிசப்தத்தின் மென்மைக்குள் பெரிதாக வெடிக்கிறது. அத்தை புரள்வது கேட்கிறது. ‘ரொம்ப இருட்டாயிருக்குமோ?’ பயந்து, நடுங்கி, அடித்தாழை ஓசையிட நீக்கி, கதவைத் திறந்தால் பளீரென்று நட்சத்திரங்களின் கலகலத்த சிரிப்பு. மின்விளக்கின் மஞ்சளௌளி தரையில் சிறுசிறு நாகங்களாக நெளிகிறது; மிக அழகாக,அச்சமேற்படுத்தாததாக. தன் பயங்களை நினைத்து இப்போது சிரிப்பு வருகிறது. காற்றில் அலையும் பாவாடை. பிச்சிப்பூ மணம். செடிகளின் பச்சை வாசனை. மருதாணிப் பூக்களின் சுகந்த போதை, தாழ்ந்தாடுகிற நட்சத்திரச் சரங்கள். நிலவின் மழலையொளி. கழிவறைக் கதவின் கிறீச்சிடல்கூட இனிமையாக. சிறுநீர் பிரிந்ததும் உடலின் லகுத்தன்மை. இந்த மருதாணிப் புதர்கிட்டே உட்கார ஆசையாயிருக்கே. அய்யோ அத்தை தேடுவாங்க. திரும்பி வருகையில் அனு தான் தனியாக இல்லாததை உணர்ந்தாள். உடல் மீது நூறு விழிகள் மொய்த்து உறுத்தின. அனிச்சையாக ஓடத் தொடங்கியபோது எதன் மீதோ மோத, கடினமான கைகள் அவளை இருக்கின, காலையில் உணர்ந்த அதே சுடு மூச்சு. ‘ச்சீ, இல்லை; என்னை பேய் பிடிச்சிடிச்சோ?’ கரிய, நரை முடியடர்ந்த நெஞ்சில் அவள் முகம் நெருக்கப்படுகிறது. கொட்டும் முத்தங்கள் – கன்னத்தில், உதட்டில், கழுத்தில், அவளுள் தளிர் விடுகிற அல்லது விதையே ஊன்றாத எதையோ தேடுகிற விரல்களின் தடவல், மாறாக அதை நசுக்கிச் சிதைக்கிறது. சிறிய மார்பகங்கள் கசக்கப்பட்டப்போது அவள் கதறிவிட்டாள். வார்த்தைகளற்ற அந்த அலறலில் அத்தைக்கு விழிப்புத் தட்டியது. காய்ந்த கீற்றுப் படுக்கைமீது அனுவின் உடல் சாய்க்கப்பட்ட போது  அவள் நினைவின்மையின் பாதாளத்துள் சரிந்தாள். கனமாக அவள் மேல் அழுத்தும் மாமாவின்  உடல். அத்தை ஓடிவரவும் மாமா அவசரமாக விலகினார். அத்தையின் உலுக்கல்; ‘அனு, என்ன அனு!’ அவளிடம் பேச்சு மூச்சில்லை. ‘பாத்ரூம் போக வந்தப்ப விழுந்துட்டா போல.’ மாமாவின் சமாளிப்பு. அத்தை மௌனமாக அவளை அணைத்துத் தூக்கிப் படுக்கையில் கிடத்துகிறாள்.

அரை மயக்க அலைகளில் புரளும் பிரக்ஞை. ‘இதுவா? இதுவா அது? இப்படியா, இல்லை, முகமும் முகமும் பக்கத்தில் வரும்; உடனே ஒரு பூவும் பூவும் நெருங்கி ஆடும்; வானில் புதிய பறவைகள் சிறகடிக்கும். நீலமேகமும் பசும் புல்வெளியும் ஒட்டி உறவாடும்; திசைகளெங்கும் குழலிசை இனிமையாகப் பெருகும்; அப்படித்தானே அந்த பாட்டில் வரும்? ஓஹோ, அப்படியிருந்தால் இது பிடித்திருக்குமா? நீ விரும்புவது அணுகுமுறையின் மாறுதலையா? இல்லை. ச்சே, இந்த மாமாவா? காதோர நரை. வாயில் சிகரெட் நெடி. தளர்ந்த தோள்களின் வலுவான இறுக்கத்தில் இருந்த கிழட்டுக் காமத்தின் புகைச்சல். நெஞ்சைக் கமறுகிறது. உடல் காந்துகிறது. மார்பு வலியில் எரிகிறது. கண்கள் தீய்கின்றன.

‘அய்யோ அனு, மேல் சுடுதே. இந்த மாத்திரையாவது போட்டுக்கோ’ அத்தை வாயைப் புடவையால் போர்த்திக்கொண்டு விம்முகிறாள். மாமாவின் அறைக்கு ஓடி என்னவோ கோபமாய்க் கத்துகிறாள்.

‘நான் இனி நானாயிருக்க முடியாதா? மாமாவின் தொடல் என் அப்பாவுடையது போலில்லை. அப்பா என்னைத் தொட்டே ஆயிரம் வருடம் இருக்குமே! என் முதல் ஆண் இவனா! என் மேல் மோதி நசுக்கிய உடலால் என்னவெல்லாம் அழிந்தது? பலவந்தப் பிழம்புகளில் கருகி உதிர்ந்த பிம்பங்கள் இனி மீளுமா? மாமா என்னிலிருந்து கசக்கி எறிந்தது எதை? எனக்கு என்னவோ ஆயிடிச்சே. நான் இழந்தது எதை? தூக்கம் ஒரு நனைந்த சாக்குப்போல் இமைமீது விழுந்தது.

காலையில் தேய்ந்த ஒலிகள். அடுப்படியில் லைட்டரை அழுத்தும் சத்தம், பால் குக்கரின் விசில், டம்ளரில் ஆற்றும் ஓசை. விழித்தபடி படுத்திருந்த அனுவிடம், ‘இந்தா காப்பியைக் குடி அனு’ என்கிறாள் அத்தை.

‘வேணாம், எனக்கு இப்பவே அம்மாகிட்டே போகணும்’

அத்தையின் கெஞ்சல்களை அனு பொருட்படுத்தவில்லை. மாமா பேப்பரை மடித்துவிட்டு பக்கத்தில் வருகிறார். மறைக்க முடியாத குற்ற உணர்வு அவர் முகத்தில் படலமிட்டிருக்கிறது அசிங்கமாக.

‘உனக்கு மாமா ஒரு புது ஃப்ராக் வாங்கித் தரட்டுமா?’. தோளில் பட்ட கையை அனு உடனடியாக உதறித் தள்ளுகிறாள். மாமா அத்தையின் முறைப்பில் நகர்ந்து விலகுகிறார்.

பயணம் எவ்வளவு நீண்டதாக நகர்கிறது? எத்தனை மெதுவாகச் சுழலும் சக்கரங்கள்? அத்தையின் மௌனம் நெஞ்சில் ஒற்றுவதாகப் படிகிறது. அத்தை அம்மாவின் நைந்த பிரதியெனத் தோற்றம் கொள்கிறாள். ‘அம்மா, அம்மா! நான் உன்னிடம் என்ன சொல்வேன்? என்னால் இதை எப்படிச் சொல்ல முடியும்?’

‘என்னாச்சு? உடனே திரும்பிட்டீங்க? அம்மா இடுப்புக் குழந்தையோடு ஓடி வருகிறாள். அனுவைப் பாய்ந்து தழுவும் அவள் பார்வை. அத்தை வரவழைத்துக்கொண்ட புன்னகையோடும் கலங்கி வருகிற கண்ணோடும்.

‘ஒரு நாள் உங்களைப் பிரிஞ்சதுங்கே உங்க பொண்ணுக்குக்க் காய்ச்சல் வந்துடுச்சு’ எனவும் அம்மாவின் விழிகள் நம்பாமல் அனு மீது நகர்ந்து தடவுகின்றன – கை தவறி விழுந்தும் உடையாமல் இருக்கிற பீங்கான் சாமானைப் பதறி எடுத்துக் கீறவில்லையே என்று சரி பார்ப்பதுபோல.

அனு ஒன்றும் பேசாமல் உள்ளே ஓடுகிறாள். வீட்டின் நாற்புறமும் தேங்கிய துயரம். அமானுஷ்யமான அமைதி அங்கே பொருக்குக் கட்டியுள்ளது. ‘என் மரப்பாச்சி எங்கே?’ அனு தேடுகிறாள். கூடத்தில் தொலைகாட்சிப் பெட்டிமீது, அடுக்களையில் பொம்மைகளிடையே, பாப்பாவின் தொட்டிலில், எங்கும் அது இல்லை. ‘அது கீறி உடைந்திருக்கும். நூறு துண்டாக நொறுங்கிப் போயிருக்கும். அம்மா அதைப் பெருக்கி வாரியள்ளித் தூர எறிந்திருப்பாள். அனுவின் கண்களில் நீர் கோர்த்தது. அழுகையோடு படுக்கையில் சரிந்தபோது மரப்பாச்சி சன்னலில் நின்றது. ஆனால் அது அனுவைப் பார்க்கவேயில்லை. அவளையன்றி எங்கேயோ, எல்லாவற்றிலுமோ அதன் பார்வை சிதறிக் கிடந்தது. அனுவின் தொடுகையைத் தவிர்க்க அது மூலையில் ஒண்டியிருந்தது. அதனோடான நெருக்கத்தை இனி ஒருபோதும் மீட்க முடியாதென்று அவள் மனம் கேவியது. உற்றுப் பார்த்தபோது மரப்பாச்சியின் இடை வளைந்து, உடல் மறுபடியும் பெண் தன்மையுற்றிருந்தது. மீண்டும் முளைக்கத் தொடங்கியிருந்த அதன் முலைகளை அனு வெறுப்போடு பார்த்தாள்.

***

நன்றி : உமா மகேஸ்வரி , தமிழினி பதிப்பகம்

உமா மகேஸ்வரியின் கவிதைகளும் கட்டியங்காரனின் கூற்றும் – தாஜ்

‘குமுறிக்கொண்டிருக்கும்போது ‘குருவி‘யின் கவிதைகளா?’ என்று சகோதரர் ‘ஹபீபு’ கேட்கக்கூடும். தமிழச்சி தங்கபாண்டியன் ஒரு கவிதையில் சொன்னதுபோல ,  ‘இத்தனைக்குப் பிறகும் சாப்பிடத்தான் வேண்டியிருந்தது’ என்பதுதான் பதில். சரி, ஒருவகையாக ‘குருவி’ இங்கே வந்து அமர்ந்தது பற்றி சந்தோஷம். அனுப்பிவைத்த ‘கட்டியங்காரனுக்கு’ ஆயிரம் நன்றிகள்.

***

உமா மகேஸ்வரியின் கவிதைகளும்
கட்டியங்காரனின் கூற்றும் – தாஜ்

கவிஞர் உமா மகேஸ்வரியின்
எட்டு கவிதைகள்
கீழே
உங்களின் பார்வைக்கு இருக்கிறது.

*

இன்றைக்கு, தமிழில் புதுக் கவிதை எழுதும்
பெண் கவிஞர்கள்
கொஞ்சத்திற்கு ஜாஸ்தி!
இதில் பெரிய விசேசம்…
எல்லோரும் நன்றாக எழுதுவது.

‘ஆணாதிக்கத்தை முறியடிக்க வேண்டும்…’
‘பெண்ணுரிமையை நிலைநிறுத்த வேண்டும்….’ என்கிற
கோஷத்தை முன்னெடுத்து
எழுதும் பெண் கவிஞர்களே
இவர்களில் அதிகம்!
அதனாலேயே…
பலநேரம் அவர்கள்
‘பால்சர்ந்த யுக்தி’களோடு எழுதுகிறார்கள்!

‘ஏன் அவர்கள் அப்படி எழுதணும்?
அப்படி எழுதினால்தான்….
தங்களின் கோஷத்தை தெரிவித்ததாகுமா?’
கேட்கிறார்கள்.
‘தமிழ்க் கலாச்சாரத்தை/
அதன் வரம்பை/ நெறியை மீறலாமா?
பெண்ணென்பவள் மீறலாமா?
அடக்கம்தானே அவர்களது நிரந்தரம்!
எப்படி இப்படி மீறலாம்?’யென
ஆக்ரோஷமாகவே சீறுகிறார்கள்.
இப்படி கேட்பவர்களில் / சீறுபவர்களில்
பெரும்பாலோர் ஆண்கள்!
ஆணாதிக்கத்தின் வம்சாவளி வந்த ஆண்கள்!

தமிழ்ச் சினிமாவுக்கு
‘குத்துப் பாடல்கள்’ எழுதும் ‘மகா கவிஞர்களும்’
அந்த வம்சாவளியோ என்னவோ?
 
உரிமைக்களுக்காக / அடக்கு முறைகளை தகர்ப்பதற்காக
போராடும் அந்தப் பெண் கவிஞர்களை
சினிமா கவிஞர்கள்(?)
ஏகமாகத் திட்டி/ எதிராக கோஷம் எழுப்பி
கண்டமேனிக்கு தங்களது எதிர்ப்பை
ஒன்றுக்கு மேற்பட்டமுறை பதிவு செய்திருக்கின்றார்கள்.
இதைவிடக் கொடுமை ஏதேனும் உண்டாயென்ன?

இப்படியொரு வலுவான எதிர்ப்பை தெரிவிக்கும்
இவர்களது லட்சனம்தான் என்ன?
குறைந்தபட்சம்
அந்தப் பெண்கவிஞர்களைச்சாட யத்தனிக்கும் முன்
தங்களை இவர்கள்…
கண்ணாடியிலாவது பார்த்திருக்க வேண்டாமா?
மேலெல்லாம் சகதியும் சாக்கடையுமாக
இருப்பதைக் கண்டு வெட்கி, தலை முழுகி
பிறகாவது
எதிர்ப்பென்று வாய்திறக்கக்கூடாதா.

*

பெண் என்றால் ஆணுக்கு இளைத்தவள்
பெண் என்றால் மறைமுக அடிமை
பெண் என்றால் புகுந்த வீட்டின் இனாம் வேலைக்காரி
பெண் என்றால் போகப் பொருள்
பெண் என்றால் பிள்ளை பெறும் இயந்திரம்
பெண் என்றால் காசாக்கத் தகுந்த ‘மாடல்’
பெண் என்றால் பத்திரிகைகளின் விற்பனைக்கான புகைப்படம்
பெண் என்றால் சினிமாக்களுக்கு நிர்வாணம் வழங்கும் பேதை
பெண் என்றால் ஆண்களின் முன், ஒட்டுத்துணியோடு ஆடும் ‘கேபரே’காரி
பெண் என்றால் பாலியல் தொழிலுக்கான உடல்
பெண் என்றால் வாங்கவும்/ விற்கவும் தகுந்த பண்டம்
பெண் என்றால் ‘பொட்டுக் கட்டி’ சுகம் காணும் பொதுச்சொத்து
பெண் என்றால் நெறி காக்கவேண்டும்
பெண் என்றால் வரம்பு மீறாதிருக்க வேண்டும்
பெண் என்றால் அடக்கி வாசிக்கவேண்டும்
பெண் என்றால் அராஜகங்களை சகிக்கவேண்டும்
பெண் என்றால் கற்பு பேணவேண்டும்
பெண் என்றால் கலாச்சாரத்தை மெச்சி வாழவேண்டும்
பெண் என்றால் வாழ்விடமே  சகலமாக்கிக் கொள்ளவேண்டும்
பெண் என்றால் சிரிக்க மறக்கவேண்டும்
பெண் என்றால் அதட்டிப் பேசுவதைவிட வேண்டும்
பெண் என்றால் உயர் படிப்புக்கூடாது
பெண் என்றால் பரபுருஷர்களோடு வேலை செய்யக்கூடாது
பெண் என்றால் உயர் பதவிகளுக்கு தகுதி காட்டக்கூடாது
பெண் என்றால் தூரம்வரும் நாட்களில் வெளித்திண்ணையில் படுக்கவேண்டும்
பெண் என்றால் கணவனை அடைய வரதட்சணை தரவேண்டும்
பெண் என்றால் கணவன் மரித்தால் சதியேறவேண்டும்
பெண் என்றால் கணவன் மரித்தால் சிகை மழிகக வேண்டும்
பெண் என்றால் கணவன் மரித்தால் பொட்டு, பூவைத் துறக்கவேண்டும்
பெண் என்றால் கணவன் மரித்தால் மறுமண நினைவை மறக்கவேண்டும்

இப்படி இப்படி இன்னும் இன்னும்….

மதங்களின் பேராலும்/ சாஸ்திர சம்பிரதாயங்களின் பெயராலும்/
பழமையின் பெயராலும்/ குடும்ப குலப் பெருமைகளின் பெயராலும்
நாடுகள் தழுவி/ தேசங்கள் தழுவி/ கண்டங்கள் தழுவி
ஆணாதிக்க சக்திகள் அடித்த/ அடித்துவரும்
அடாவடிக்கொட்டம் கொஞ்சமல்ல.
பெண்களை காலுக்கடியில் போட்டு
உயிரோடு கொல்வதற்கும் மேலான
இத்தனை…
கொடுமைகளும்
சூதுவாது அற்றவையா?
சூழ்ச்சிகள் அற்றவையா?
ஆண்களின் சுகத்திற்கும்/ அவர்களின் நேர்மையின்மைக்கும்/
அவர்களது அனுசரணைகளுக்குமான…
ஈவு இரக்கமற்ற
பெண்கள் மீதான இந்த நிர்பந்தக் கொடுமைகளை
நேர்மைகொண்ட எந்த சமூகம்தான் சகிக்கும்?
நவீன உலகில்…
புத்திகொண்ட எந்த பெண்ணும்தான் பொறுப்பாள்?

பெண்களுக்கென்று ஓர் மனம் இருக்கும் என்றோ
சுதந்திரக் காற்றைச் சுவாசிக்கத் தோன்றுமென்றோ
ஆணாதிக்க பெருங்கூட்டத்திற்கு
காலாதிகாலமாய் ஏன் தோணவில்லை?
சூழ்ச்சிக்கும் சூதுக்கும் கூட ஓர் கால எல்லையுண்டே!

இதே ஆணாதிக்கம்…
இன்னொரு பக்கத்தில்…
பெண்களை….
கண்ணகியென்றும்/
தெய்வ அம்சமென்றும்/
குலம்காக்கும் திருமகளென்றும்/ தாய் என்றும்…
இனிக்க இனிக்கப் புகழ்ந்து மெச்சி….
அவர்கள் நிகழ்த்திய/ நிகழ்த்துகிற
கூடுதல் நயவஞ்சகக் கூத்துக்களுக்கும் பஞ்சமில்லை! 
தப்பைத் திருத்திக்கொள்ளாமல்
இப்படி நாவினிக்க பேசுவததென்பது…
அவர்கள் திருந்தாதவர்கள்
திருந்தவே மாட்டாதவர்கள்
என்பதற்கான அத்தாட்சி!

*

காலச் சுழற்சியில்…
ஏதோவோர் புள்ளியில்..
உஷ்ணம் தகித்ததோர் புலர்தலில்…
விழித்துக் கொண்ட பெண் வர்க்கம்
தாங்கள் இரண்டாம்தரப் பிரஜையாகவும்/
அடக்குமுறைகளுக்கு உட்பட்டும்
வாழ்ந்து வருவதிலான கசப்பை உணர
நிமிர்ந்தார்கள்.
நேர் நின்றார்கள்
கண்கள் சிவக்க கேள்விகள் தெறித்தது.
தங்கள் மீது யுகயுகமாக இறுகும் கட்டுகளை
அறுத்தெறிந்தார்கள்.
பேச்சில்/ எழுத்தில்
தங்களுக்கு மறுக்கப்பட்டவைகளையெல்லாம்….
பேச/ எழுத தாராளம் கொண்டார்கள்!

நேர் வார்த்தைகளில் பேசினால்
ஆணாதிக்க வர்க்கம்
காதுகொடுத்து கேளாது என்பதை
உணர்ந்ததினாலேயோ என்னமோ
திரும்பத் திரும்ப
முலை/ யோனி/ படுக்கை/ புணர்தல்/
கட்டில் சங்கடம்/
கலவியின் போதாமை/
வீணே மீசை முறுக்கும் வீட்டுக்காரன்/
செத்தகுறி… என்பதான
பால்சார்ந்த வார்த்தைகளையும் 
அதற்குறிய சம்பவங்களையும் குறியீடாக்கி
நம் பெண் கவிஞர்கள்
தங்களது கவிதைகளால்
ஆணாதிகத்திற்கு பேதி தர ஆரம்பித்தார்கள்.

தங்களது சுதந்திர வேட்கைக்கு குறுக்கே நிற்கும்
ஆணாதிக்ககாரர்கள் விலகும்வரை/
பெண்வர்க்கம் எதிர்கொள்ளும் அநீதிகள்
அத்து இத்து வீழும்வரை…
அவர்கள் தரும் பேதி தொடரத்தான் செய்யும். 
பேதி தருவதென்பது
சிலநேரம் சிலருக்கான வைத்தியச் சிகிச்சையின் ஆரம்பம்! 
 
பெண்களின் மீதான கட்டுகள் தெறிப்பது குறித்து
ஆணாதிக்க வர்க்கம்
இன்றைக்கு
விக்கித்துப்போயிருக்கிறார்கள்..
செய்வதறியாது விழிக்கிறார்கள்.
பெண் கவிஞர்களின் ஆக்ரோஷ கேள்விகளை மறுக்க
அவர்களிடம் நேர்மையான பதிலேதும் இல்லை.
அதனாலேயே…
கோபம் கொள்கிறார்கள்.
மீண்டும் மீண்டும் சுடு சொற்களால்
கண்டமேனிக்கு…
பெண் கவிஞர்களை சாடுகிறார்கள்.

அதனாலும்…
பயனும் கிட்டாமல் போக…
பெண் கவிஞர்களுக்கு நீதி நேர்மைகளை போதிக்கிறார்கள்.
பொய்யான வியப்பை பரவவிடுகிறார்கள்.
பெண்களின் மகத்துவம் பேசுகிறார்கள்.
குலவிளக்கென கரிசனை காட்டுகிறார்கள்.
தாய் என மெச்சுகிறார்கள்
பெண்களை தலைக்கு மேல் வைத்திருப்பதாக
புராணக்கதை பேசுகிறார்கள்.
இன்றைய நவீனப் பெண்களா…
மயங்குவார்கள்?
அதுவும்…
நவீன கவிதை எழுதும் பெண்களா?
கவிதைகள் எழுதும் ஆண்களாலேயே
அவர்களுக்கு உரைபோட முடியவில்லையே!

சரியாகக் கணித்தால்….
நம் பெண் கவிஞர்களிடம்தான்…
இன்னும் எத்தனையெத்தனை யுக்திகளோ!
இந்த ஆணாதிக்ககாரர்களையே
பெற்று வளர்த்த வர்க்கமாச்சே!

இதுதான்/ இவ்வளவுதான்.
நம் பெண் கவிஞர்கள்
தங்களது புதுக் கவிதைகளில்
பால் சார்ந்து எழுதும்
கதைச் சுருக்கம்!

*

இஸ்லாமிய நாடுகளிலும்/
உலம் தழுவிய பிறநாடுகளிலும்
இஸ்லாமியப் பெண் கவிஞர்கள்
தங்களது சுதந்திரம் குறித்தும்/
அதன் ஏக்கம் குறித்தும்/
தங்களின் மீது ஏற்றிவைக்கப்பட்டுள்ள
பழமையின் அளவுகோள்கள் குறித்தும்
கவிதைகள் என்றும்
கதைகள், கட்டுரைகள் என்றும் நிறையவே எழுதுகிறார்கள்.

நம் மண்ணிலேயும் கூட
பொருட்படுத்தத் தகுந்த
இஸ்லாமிய பெண் கவிஞர்களின் குரல்கள் உண்டு!
அவற்றையெல்லாம் இங்கே…
தெரிந்தே எழுதாது விடுகிறேன்.
எழுத தொடங்கினால் அதுவோர்…
தனிக்கதையாகிவிடும்.
இன்று இல்லாவிட்டாலும்…
நாள் நட்சத்திரம் பார்த்து
ஒரு நாளைக்கு
எழுதிப்பார்க்க வேண்டும்.

*
ஆணாதிக்கத்தைச் சாடும் மொழியில்
கவிஞர் உமா மகேஸ்வரி
எழுதிய கவிதைகள் குறைவு.
என் பார்வையில் அதுவோர் குறையாகவே படுகிறது,
அதட்டிப் பேசாத
கவிதைகளையே எழுதப்பழகிய அவருக்கு
இப்படியான கவிதைகள் எழுதுவதில்
தேக்கம் ஏற்பட்டுப் போனதை
புரிந்துகொள்ள முடிகிறது.
 
ஆனால்…
சமூக/ கலாச்சார சார்ந்த
மீறல் கவிதைகளை
அவர் நிரம்பவே எழுதியிருக்கிறார்.
இங்கே உங்களது பார்வைக்கு வைத்திருக்கும்
இந்த எட்டுக் கவிதைகளும்
அதற்கு சான்று.

தமிழ் சாகித்தியத்துக்கான
இந்த வருடத்து
சாகித்திய அகாடமி விருது
கவிஞர் உமா மகேஸ்வரிக்கு…
கிடைக்கலாம் என்றெரு தகவல்
இலக்கிய வட்டத்தில் உலா வருகிறது.
தகுதியானவர்தான்.
சந்தோஷம்!
அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

இவண்.


கட்டியங்காரன்…
– கநாசு.தாஜ்
10:16 PM 10/7/2010

***

உமா மகேஸ்வரியின் கவிதைகள்…

1. ‘சித்திர அரூபம்’

எல்லாமும் நகர்கின்றன
விரைந்து
நிற்பதேயில்லை அவை
திரும்பியும் பார்ப்பதில்லை
அவற்றை
மீட்டெடுக்க முடிவதில்லை மீண்டும்
எந்தச் சக்தியும்
பறந்து மறைகின்றன
அவை.
இந்த அரூபச் சித்திரத்தின்
வளைகளோடு
இழைதல்
உன்னை மீறியதா?
சுழலும் இதே
திகிலின்பத்தில்
சுண்டப்பட்டுத் தொலைந்து
சிதறுவதும்?

*

2. ‘மடைகள்’

விதிகளைக் கிழிப்பதில் வேலி தாண்டிக்
குதிக்கும் திகிலின்பம்;
குளிர் பெட்டிக் காய்கள் போல்
முலைகளில் பனி துளிர்க்கும்.
அலையும் மரங்கள் பெயர்தலை விரும்பும்.
மறைவுகளில் தளும்பும் சிந்தை
இமையாப் பொழுதிலும் நெஞ்சில்
இறங்கும் மூர்க்கம்.
புரியப்புரிய விலகும் வெறுப்பின் விடுதலை
மீறிய அபஸ்வர மயக்கம்
மடைகளின் விளிம்பில்
கவர்ச்சிகளிடம் தோற்ற பயம்.
இருந்தும் பரிபூரணமுற்றது
மகரந்த மஞ்சள்
ஒருபோதும் சீராகதெனினும்
ஒட்டுண்ணியாகும் உயிர்
வெற்று வாழ்விடம்
சதுப்பு நடையாக.

*

3. ‘சித்திர இசை’

மூளைக்குள் நிறங்கள் குழைக்கும்
இசைச் சித்திரம்
கணந் தோறும்
மயக்கத்திற்கும், திடுக்கிடலுக்குமூடே
அலைகின்றன நரம்புவலைகள்.
சிகரத்தில் ஒன்றித் தெறிக்கையில்
அறுபட்டு வீழ்கிறேன்
தொகுக்கவே முடியாமல்.
ப்ரியம் தெரிவித்தவளுக்கு
கணையாழி சூட்டிக்
கடந்து மறந்தவன்
நெருடுகிறான் நினைவடியில்
செத்த மீனின் செதில்களாக.
அபத்த நாடகத்தில்
பொருந்தா வேடங்களின்
ஒவ்வா வசனம்,
புரிய அறியாயென்
மந்த கவனத்தைச்
சிராய்த்த அம்பு நுனிகளைச்
சீராகச் செருகித் துளைத்தெடுத்தேன்
பாதத்திலிருந்து,
உடல் வகிர்ந்து,
உச்சி கீறி.

*

4. ‘என் கடல்’

ஒன்றுமில்லை
என்றைக்கும் போல
காதோரம் பதிக்கையில்
அலையோசையிடம் கேட்டேன்
விசனத்தோடு
இவ்வளவு அழிவாயென
அதன் மூர்க்கம் குறித்து.
அவ்வளவுதான்;
எவ்வளவோ தடுத்தும் கேளாமல்,
என்னுடைய சங்கிலிருந்து
இறங்கிப் போய்விட்டது
கடல்
திரும்பியே பாராமல்.

*

5. ‘மழை வரம்’

நீ வரமளித்துப் போன
வெளி முழுவதும்
விடாமல் கொட்டிக்கொண்டிருக்கிறது
மழை.

உதிரும் கற்பனைகளினூடே
நீர்க் குமிழ்கள் கொண்டு
லகுவாய் மிதந்து நெருங்கும்
மனங்களைத் தாக்குகிறாய்.
நா நுனிக் கங்கு தீண்டி
வெந்து வீழ்கிறாள் ஒருத்தி.
விரைந்துகொண்டிருக்கிறது
சாரல் வேறெங்கோ.

*

6. ‘உன் முகங்கள்’

அப்போதெல்லாம்
என் விரல் நுனிகளில்தானிருந்தது
அந்த விழிகளின் அசைவு.
தென்னம்பாளையைக் கொத்திக்கொண்டிருந்த
மஞ்சள் குருவிகளை,
என் நீள நிலைக்கண்ணாடியை
நெருங்க அழைக்க விரும்பினேன்.
வானேறிய பறவைக் கூட்டங்கள்
இருளத் தொடங்கின
படுக்கை மீது துளி தெறித்தது
மழையின் வரைமுறையின்மை.
சாரல் முணுமுணுக்கும் இப்பொழுதுகளிலோ
நீ தெரிவிக்காத உன் பகுதிகளைத்
தெளிந்தெரியும் கங்குகளாகக்
கை மாற்றித்
தவித்து ஏந்துகிறேன்.
அந்த மலைச் சரிவில் உண்டு,
மிருதுவாக இளகிப்
பசுமையுறும் பாறைகளும்.
ஒப்புகிறேன் –
தற்சமயம் புரிபடாத தொலைவில்
முறுகிக் கடும் மோனம் கொள்வனவும்
உன் முகங்கள் தானென்று.

*

7. ‘முத்த மழை’

மழை விசிறும்
கண்ணாடி முத்தங்கள்
உன்னுடையவை போன்றே.
பிரியங்கள் திரண்டு.
வெறிச் செம்மை ஜொலிக்க,
ஆவேசமாய் நெருங்கி
அணுகித் தெறித்தும்
திசையற்றுச் சிதறி உடைகின்றன.
திக்கற்ற கனவாக.

*                                                                                                                           
8. ‘மழைத் தூது’

பெரும்பாலும்
அடைமழை கொட்டும்
ஒரு சாயங்காலத்தில்
நீயற்ற வெளியை
நான் வெறித்தல் நிகழும்.
குரல்களின் அபாய வலையிலிருந்து
உன்னை
மழைச்சரங்கள்
என் முற்றத்திற்கு
இழுத்து வரட்டும்.
தாளத் துளிகளில் உன் விழிகளை
வரைந்தபடி தளைப்பட்டிருக்கிறேன்.                                                                                            

மழையோடையில் காகிதக் கப்பலையோ,
பாதி சிகரெட்டையோ விட்டுவிட்டு,
ஆசை, ஆசையாய் உன் கன்னம் தொடும்
சின்னத் திளியை மட்டும் உதறி விடாதே.
உன் கூரைக்குள் நுழைகையில்
என்
ஈரத் தவங்களின்
இளைத்த தபால் அது.
                                       
***

‘இறுதிப் பூ’ – கவிதைத் தொகுப்பிலிருந்து…

வடிவம் &  தட்டச்சு: கநாசு. தாஜ்

*

நன்றி :  ‘செல்லக் குருவி’ உமா மகேஸ்வரி

உமாமகேஸ்வரிக்கு ஒரு கடிதம் : சு.ரா.

சுந்தர ராமசாமி [1931-2005] ஐந்தாம் ஆண்டு நினைவு
கநாசு.தாஜ்

ஐந்து ஆண்டுகளுக்கு முன்
இதே அக்டோபரில்தான்
சுந்தர ராமசாமி மறைந்தார்.
அவரது துயரச் செய்தியை
அறியவந்த நேரம்,
தமிழகம் தழுவ பெருமழை!
மனதை நெருடியது சஞ்சலம்
பார்வை கொண்ட இடமெல்லாம்
பெருக்கெடுத்தது நீர்!
நாடு பூராவும்
என்னை ஒத்த/ என்னை விஞ்சிய
எத்தனை எத்தனையோ வாசகர்கள்

பல இடங்களில் வெள்ள அறிவிப்பு!

கலை இலக்கியத்தோடு
ஆத்மார்த்தமாய் ஈடுபாடுகொண்ட
இலக்கியப் பெருசுகளின்
பட்டியலில் சு.ரா.வும் உண்டு.

அத்தனை இலக்கியப் பெருசுகளும்
எழுதுவதோடு தங்களது பணியை
முடித்துக் கொண்டபோது…
கலை இலக்கியம் பரவலாக்கப்படவும்/
நுட்பம் கொள்ளவும்
ஓர் இயக்கம் காணவும் முயன்று
வித்தியாசப்பட்டவராக தெரிந்தவர் சு.ரா.!

தமிழில்….
நவீன இலக்கியம் வளம்பெற வேண்டும்/
அதைத் தோடி வாசிப்போர் பெருகவேண்டுமென
நிஜமாகவே அவர் விரும்பினார்.
இருபது, அல்லது முப்பது வருடங்களில்
அது சாத்தியமாகும் எனவும்
தீர்க்கமாக நம்பினார்.
தனது, ‘ஜே.ஜே: சில குறிப்புகள்’ நாவலில்
அதனைக் குறிப்பிட்டு எழுதவும் செய்தார்.
(ஜே.ஜே: சில குறிப்புகள்/ பக்கம்:2)

”மாயக் காம உறுப்புகளை மாட்டிக்கொண்டு,
அவ்வுறுப்புகளை ஓயாமல் நம்மேல்
உரசிக் கொண்டிருக்கும் அற்பங்கள்
தமிழில் எழுதுகின்றன என்பதால் நமதாகிவிடுமா?
சீதபேதியில் தமிழ்ச் சீதபேதி என்றும்,
வேசைத்தனத்தில் தமிழ் வேசைத்தனம் என்றும் உண்டா?
இப்போது 1978இல்
இதுபற்றிய நம் சிந்தனைகள் தெளிவாக இல்லை.
ஒப்புக்கொள்கிறேன்.
குழம்பியும் மயக்கங்கள் நிறைந்தவையாகவும் இருக்கின்றன.
வாஸ்தவம்தான்.
ஆனால் இந்த நூற்றாண்டின் இறுதியில்,
அல்லது அடுத்த நூற்றாண்டின் முதல் பத்துக்குள்
நடக்கப்போவது வேறு.
அன்று ஒரு தவளைகூட கிணற்றுக்குள் இருக்க முடியாது.
இது எனக்கு வெகு நிச்சயமாகத் தெரிகிறது.
அன்று பிடிவாதமாக வெளியே வராதவை
உயிர் மூச்சற்று அழிந்துபோகும்.
இது இயற்கையின் நிர்தாட்சண்யமான விதி.”

இன்றைக்கு அவரது இந்தப் பதிவையும்
அவர் குறிப்பிட்ட கால நிர்ணயத்தையும் பார்க்கிறபோது,
இந்த மக்களை நம்பி… அல்லது
வீச்சாக கிளம்பிய
நவீன இளம் எழுத்தாளர்களை நம்பி…
அவர் கொண்ட தூரநோக்கு கணிப்பு/ அந்தத் தீர்க்கம்
ரொம்ப அதிக/ அவரது பேராசையாகப் படுகிறது.

இலக்கியப் பரவல் சார்ந்த
அவரது இந்த ஆசை
அடுத்தப் பத்தாண்டுகளில் நடக்கும் என்பதற்கும் கூட
எந்த முகாந்திரமும் இல்லை.

அவர் சீராட்டிப் பாராட்டி
வித்தைகள் கற்றுத்தந்த
சிஷ்ய எழுத்தாளர்கள் சிலர்
அவருக்கே பாடம் கற்றுத்தர முயன்றதும்-
எதிர் முகாம் தேடிப் போனதும்
இங்கே சொல்லத் தகுந்த
அவர் சார்ந்த சோகம்.

சு.ரா.வின் காலத்தை கணக்கில் கொண்டால்…
அன்றைய காலக்கட்டத்தில்
இலக்கியத்தை இன்னும் இன்னுமென
பட்டைத் தீட்டிய கர்த்தாக்களான
க.நா.சு./ தி.ஜா./ வெங்கட்ராம்/ நகுலன்/
அசோகமித்திரன்/ கி.ரா./ ஆதவன் போன்று
நிஜத்தில் இயங்குபவர்கள் இன்றைக்கு இல்லை.

இது உலகமயமாக்கலின் காலம்!
அந்த நிஜம் சார்ந்த
இலக்கியத் தொப்புள்கொடி வம்சமே
இன்று அறுப்பட்டுக்கிடக்கிறது.

நவீன இலக்கிய வட்டத்திற்குள்
இன்றைக்கு
தீர எழுதுகிறவர்கள்
இருக்கிறார்களோ இல்லையோ
‘நானே இலக்கியம்’ என்று
தண்டோரா போட்டுக்கொள்பவர்கள் இருக்கிறார்கள்.

நிஜத்தில்….
இன்றைய நவீன இலக்கியப் படைப்பாளிகள்
சினிமா என்கிற சின்ன வீட்டை
ஏற்படுத்திக் கொண்டவர்களாகவும், அல்லது
அப்படியோர் சுகம் தேடுபவர்களாகவுமே
தெரிய வருகிறார்கள்.
ஆசை அவர்களை அலைக்கழிக்கிறபோது
அவர்களும்தான் என்ன செய்வார்கள்?

ஆசை குறித்து புத்தன் சொன்னது நிஜமென்றால்…
இவர்களது இன்றைய இலக்கிய ஆக்கங்கள்
நமக்கென்ன பெரிய சிலாகிப்பைத் தந்துவிடப் போகிறது.

ஆனால்,
கவிதைத் தளத்தில் தொடர்ந்து
புரட்சி நிகழ்ந்து கொண்டிருக்கிறது.
புதுக்கவிதை வாசிப்போரைவிட
அதனை எழுதுபவர்கள் அதிகம்!
கணவனிடம் முரண்படும் அத்தனைப் பெண்களும்
கவிதையெழுத உட்கார்ந்துவிடுவதாகவும் படுகிறது.
கவிதையெழுத என்ன கஷ்டம்?
பேப்பரும் பேனாவும்
எல்லோர் வீட்டிலும் கிட்டத்தானே செய்கிறது!

என்றாலும்….
சு.ரா.வும்/ காலச்சுவடும்
நம் பெண் கவிஞர்களுக்கு தந்த
தார்மீக ஊக்கம்
இன்றைக்கு எதிரொலித்துக்கொண்டிருப்பது நிஜம்.
அந்தப் பெண் கவிஞர்கள்
நிறைவாக சாதிப்பவர்களாகவும் இருக்கிறார்கள்.
என்பதும் வியப்பே!
சு.ரா.வின் ஆவி ஆறுதல் கொள்ளும் இடமிது.

*

இலக்கியம் சார்ந்தவர்களுக்கு
சு.ரா. எழுதிய கடிதங்கள் சிலவற்றை பிரசுத்து,
இந்த மாத காலச்சுவடு(Oct-2010)
சு.ரா.வுக்கு
ஐந்தாம் ஆண்டு நினைவு அஞ்சலி செய்திருக்கிறது.

அந்தக் கடிதங்களில் ஒன்றை தேர்வு செய்து,
இங்கே பதிந்து
அவரது நுட்பம் கூடிய எழுத்தை
வாசகர்கள் நுகரத் தந்திருப்பதே… என் அஞ்சலி!

இந்தக் கடிதம்…
புதுக் கவிதைக்காக
பல பாராட்டுகளையும்/ பரிசுகளையும் பெற்ற
கவிஞர் உமா மகேஸ்வரிக்கு அவர் எழுதியது.
வளரும் படைப்பாளியை சந்தோஷப்படுத்தும்
அன்பின் வரிகளாகவே இருக்கிறது.

உமாவுக்கான செய்திகளையும் தாண்டி
கடிதத்தில் நிறையப் பேசி இருக்கிறார் சு.ரா.
தன்னைச் சார்ந்து அவர் பேசியிருப்பது
நம் கவனத்திற்குரியதாக இருக்கிறது.

மேலும்…
கடிதவரிகளில் பெருக்கோடும்
கிண்டலுக்கும் கேலிக்கும் இனிக்கவும் செய்கிறது.
உமாவிடம்,
உரிமையோடு கேலி பேசியிருப்பதும்
கேரள பெண் சினேகிதகளைப் பற்றி
அவர் சிணுங்குவதும் கூடுதல் இனிப்பென்றாலும்
யோசிக்கவைக்கிறது.

தவிர,
ஹமீது என்கிற மனுஷ்யபுத்திரனும்
ராஜாத்தி என்கிற சல்மாவும் கூட
அவரது கிண்டல் கேலிக்கு தப்பவில்லை.

குறிப்பாய்…
அவரது கேலியில் ராஜாத்தி அதிகமாவே மிண்ணுகிறார்!

பொதுவில் ஒரு சொல்
ஆபிதீன்…

இந்த ஆண் படைப்பாளிகளுக்கு
நோபலோ, சாகித்திய அகாடமியோ தரும்
மகிழ்வைவிட
பெண் தோழிகளே
பெரும் மகிழ்வு தருபவர்களாக இருப்பார்கள் எனப்படுகிறது!
இதுவும் இன்னொரு இயற்கை சார்ந்த நியதியோ?

அவ்வளவுதான்.
இனி…
சு.ரா.

***

சுந்தர ராமசாமி
27.12.01

அன்புள்ள உமா,

அடிக்கடி உங்களுடன் போனில் பேச வேண்டுமென்றும்
அதற்கு வசதிப்படாதவரை
கடிதமேனும் எழுத வேண்டும் என்றும் நினைத்துக் கொள்கிறேன்.
கடந்த இரணடு மூன்று வாரங்களாக
என் திட்டப்படி
எதுவும் செய்ய முடியாதபடி வேலை நெருக்கடி.
புதுவருஷத்தில் சிறிது ஓய்வாக இருக்க வேண்டும் என்று
நினைத்துக் கொள்கிறேன்.

இரண்டொரு முறை ராஜாத்தி போனில் பேசினார்.
நன்றாகவும் உற்சாகமாவும் இருக்கிறார்.
தேர்தலில் வெற்றி பெற்ற பின்பும்
ஆட்சி
தன் கைக்கு வரவில்லையே என்ற வருத்தம் இருக்கிறது.
அது நியாயமான வருத்தம்தான்.
பெண்களின் ஆதங்கங்கள்
ஏனோ ஆண்களுக்கு தெரிவதில்லை.

உங்கள் மகளைப் பற்றி ராஜாத்தியிடம் சொன்னேன்.
எனக்கு என்ன அபிப்ராயமோ
அதே அபிப்பிராயம்தான் அவருக்கும்.
அந்தப் பெண்ணிடம் பேசும் போது
நீங்கள் பெரிய அதிர்ஷ்டசாலி என்ற எண்ணம் வருகிறது.
இப்படி ஒரு பெண் குழந்தை இருக்கும் போது
எதைப்பற்றியும் நீங்கள் கவலைப்பட வேண்டியதில்லை.
பின்னால் எந்தப் பாடமெடுத்து
அவளுக்குப் படிக்க விருப்பம் என்பதை அறிந்து
அவளுடையப் போக்குக்கு விட்டுவிட வேண்டும்.
இது என் வேண்டுகோள்.

சி.சு. செல்லப்பாவுக்கு
சாகித்திய அக்காடெமி பரிசு கிடைத்ததைப் பற்றி
ஒரு சிறு கட்டுரை எழுதி
‘தினமணி’க்கு அனுப்பியிருக்கிறேன்.
அது வெளிவந்தால் நீங்கள் படித்துப் பாருங்கள்.

சமீப காலங்களில் நிறைய பேருடன்
அக்கப்போர் மூண்டுவிட்டது.
குமுதம் இதழ்,
கவிஞர் நகுலன்,
கவிஞர் சிற்பி,
இந்தியா டுடே ஆசிரியர்
மாலன் போன்ற பலரிடமும்.
எல்லோருக்கும் சரமாரியாக
கடிதங்கள் எழுதியிருக்கிறேன்.

காலச்சுவட்டில் என்னுடைய எழுத்து
வெளிவர நான் விரும்பும் போது
ஹமீதுக்குத்தான் அவற்றை அனுப்பி வைப்பேன்.
அவருக்கு இந்தக் கடிதங்களையும் அனுப்பி வைக்க வேண்டும்.
பெரிய மனது பண்ணி அவர் இவற்றை வெளியிட்டால்
காலச்சுவடு வாசகர்களுக்கு அவை படிக்கக் கிடைக்கும்.
அண்ணனும் தங்கையும்(ஹமீதும், ராஜாத்தியும்)
தமிழகத்திலேயே
முக்கியமான இரு வி.வி.ஐ.பி.க்களாகிவிட்டார்கள்.
முதுகில் மரு இருந்தால்தான்
இது போன்ற அதிர்ஷ்டங்கள் எல்லாம் நடக்கும்.
எனக்குக் கிடைத்துக் கொண்டிருப்பது வசை.
கண்ணனுக்குக் கிடைத்துக் கொண்டிருப்பது
என்னைப் போல் பல மடங்கு வசைகள்.
எங்களுடைய ஜாதகங்கள் அப்படி.

நான் உங்களை என் சிநேகிதி என்று அழைத்தால்
நீங்கள் எதற்காக அழவேண்டும் என்பது தெரியவில்லை.
கண்ணீர் விழியோயோரத்தில்
எப்போதும் காத்துக் கொண்டு நிற்குமா என்ன!
வாய்விட்டுச் சிரியுங்கள்.
எவரைப் பற்றியும் கவலைப்படாமல்,
உலகம் உய்யும்.

ஸ்வரூபராணி என்ற பெயரில்தான் தனித்துவம் இருக்கிறது.
உமா தமிழ்நாட்டில் தெருவுக்கு இரண்டு பேர் இருக்கிறார்களே.
வயதைக் கேட்டால்…
சொல்ல மாட்டேன் என்கிறீர்கள்.(இது அவ்வளவு
கேள்வியாக இல்லாமல் இருக்கலாம்.)
ஆனால் ஒரு மனித ஜென்மத்திற்கு
எழுபது வயது ஆகிவிட்டால்
அது எந்தக் கேள்வியை வேண்டுமென்றாலும் கேட்கும்
சுதந்திரம் இந்திய மரபில் இருக்கிறது.
உங்கள் மகளிடம் என்னைப் பற்றிப்
புகார் சொன்னீர்கள் என்றால்,
‘தாத்தா அப்படிக் கேட்டதில் என்ன தப்பு?’ என்று சொல்வாள்.
சிறுவயதிலேயே அவள் என் கட்சியில் சேர்ந்தாகிவிட்டது.

குழந்தைகள் எவ்வளவு என்று கேட்டால்
40 பெயரை அடுக்கியிருக்கிறீர்கள்.
எப்போதாவது நீங்கள் இல்லாத போது
உங்கள் மகளுடன் பேசி
விஷயத்தைத் தெரிந்து கொள்வேன்.
அவளுக்கு உண்மை பேசுவதில் நம்பிக்கை இருக்கிறது.
உங்கள் பெண் என்றாலும்கூட
எந்தக் கோணலும் இல்லாத குழந்தை.

நன்றாக உழைக்கும் கணவரை
உத்தம ஸ்திரீகள்
பொதுவாகப் பாராட்டுவதுதான் வழக்கம்.
கணவர் கைநிறையச் சாம்பாதித்தால்
தனக்கும் குழந்தைகளுக்கும்
பொன்னும் பட்டும்
வாங்கிக் கொள்ளலாம் என்று நினைப்பார்கள்.
கலிகாலத்தில் எல்லாம் தலைகீழாக இருக்கிறது.

எனக்கு வயதாவதைப் பற்றி
நீங்கள் துளியும் கவலைப்பட வேண்டாம்.
ஜாதகப்படி 95 வயது வரையிலும் போகும்.
அதற்கு மேலும் போகலாம்.
அதற்குள் சுமார் பத்து பத்துப் பதினைந்து
புத்தகங்களேனும் எழுதிவிடுவேன்.
சி.சு. செல்லப்பா 70 வயதுக்கு மேல் 85 வயதுக்குள்
தோராயமாக ஐயாயிரம் பக்கங்கள் வரையிலும்
எழுதியிருப்பதாகச் சொல்கிறார்கள்.
அவரைத் தோற்கடிக்க வேண்டும் என்று
நினைத்துக் கொண்டிருக்கிறேன்.

சங்குக்கோலம் இருப்பது எங்கள் வீட்டின் வாசலில்தான்.
பண்டிகை நாளென்றால்
மைதிலி கணினியில் பணியாற்றும்
அரை டஜன் பெண்களையும் சேர்த்துக்கொண்டு
முன் திண்ணையிலிருந்து தார் ரோடு வரையிலும்
கோலம் போட்டு விடுவார்கள்.
அதை மிதிக்காமல் வரவேண்டுமென்றால்
ஹெலிகாப்டரில் மொட்டை மாடியில் வந்து இறங்கலாம்.
இல்லை பின்பக்கமாக வந்து
சமையலறை வழியாக வீட்டுக்குள் வந்து விடலாம்.

நான் புகைப்படத்திற்காக நிற்கும் எல்லா இடங்களும்,
தென்னை மரங்களும், வாழையும், புல்பூண்டுகளும்
எங்கள் வீட்டின் பகுதியே.
நான் ஒரே மகன் என்பதால்
என் அப்பா எனக்குத் தந்துவிட்டுப் போயிருக்கும்
அருமையான வீடு இது.
நீங்கள் பார்த்தாள் ரொம்பவும் சந்தோஷப்படுவீர்கள்.
95 வயதில் புறப்பட்டுப் போவதில் வருத்தம் ஒன்றுமில்லை.
என்றாவது ஒரு நாள் போகவேண்டியதுதான்.
ஆனால்…
இந்த வீட்டையும், மண்ணையும், மரங்களையும்,
மட்டைகளையும், அழகான என் நாற்காலியையும்
விட்டுவிட்டுப் போகவேண்டியிருக்குமே என்று
நினைக்கும்போது நெஞ்சை அடைத்துக்கொள்கிறது.

நீங்கள் ஆத்மார்த்தமாக ஸ்வாமி கும்பிட வேண்டும் என்று
அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
ஸ்வாமியிடம் உங்களை ரட்சிக்கக் கேட்டுக்கொள்வதுடன்
என்னையும் ரட்சிக்கக் கேட்டுக்கொள்ளுங்கள்.
என் நண்பர்கள் பேராசிரியர் ஜேசுதாசன் அவர்களும்,
ஹெப்சிபா ஜேசுதாசன் அவர்களும்
உடல், பொருள், ஆவி மூன்றையும்
இயேசு நாதருக்குத் தத்தம் செய்திருப்பவர்கள்.
அவர்கள் காலையிலும் மாலையிலும் ஜெபம் செய்கிறபோது
ஒருநாள் கூட என்னைப்பற்றி யேசுநாதரிடம் சொல்ல
மறந்து போனதே கிடையாது.
இது நூற்றுக்கு நூறு உண்மை.
இதே முறையில் எனக்காக
அல்லாவிடமும் விண்ணப்பித்து வருகிறார்
கவிஞர் சல்மா அவர்கள்.
நீங்களும் உதவ வேண்டும்.

என் எழுபதுகளில் பல வரிகள்
உங்கள் மூளையில் ஒட்டிக்கொண்டிருப்பது
எனக்குப் பெருமையாக இருக்கிறது.
போகப்போக இவர்களுடைய எண்ணிக்கை
கூடிக்கொண்டே போகும் என்பதில்
எந்தச் சந்தேகமும் இல்லை

இப்பொழுது தமிழ் மண்ணில்
ஐந்து சிநேகிதிகள்தான் எனக்கு இருக்கிறார்கள்.
(அம்பை, லல்லி, சல்மா, பிரசன்னா,
ஆண்டிப்பட்டி அம்மையார் ஆகியோர்.)
கேரளாவில்
இதற்கு மூன்று மடங்கு அதிகமாக இருக்கிறார்கள்.
அவர்கள் கடிதம் எழுதும் போது
சகோதரர் என்ற வார்த்தையைப் பயன்படுத்தாமல்
சுந்தர ராமசாமிக்கு என்று மட்டுமே எழுதுவார்கள்.
தங்கள் கடிதங்கள்
ஏதோ ஒரு கற்பனையான இடத்தில்
மாட்டிக்கொள்ளும்போது உருவாகிற விசாரணையிலிருந்து
எந்தக் களங்கமும் இல்லாமல் தப்பித்துக்கொள்ள வேண்டுமென்ற
முன் ஜாக்கிரதை அவர்களிடம் இல்லை.
எல்லாம் வடிகட்டின அசடுகள்.

இந்த சிநேகிதிகளின் எண்ணிக்கை
ஒரு சில வருடங்களில் ஐயாயிரத்தை எட்டிவிடும்.
எதிர்காலம் பெண்களுடையது.
ஆண்கள் இப்போதே
சமையல் படித்து வைத்துக்கொள்வது நல்லது.
அப்படி ஏற்பட்டால்
பெண்களுக்கே உரிய பொறாமைக் காய்ச்சல்
உங்களுக்கு வராமல் அடிக்கடி கண்ணீர் சிந்திவிட்டு
அதைப் பற்றி எனக்கும் எழுதுங்கள்.
அப்போது எனக்கு மிகவும் சந்தோஷமாக இருக்கும்.

ஜனவரி ஆறாம் தேதி சென்னையில் வைத்து
காலச்சுவடு பிரசுரத்தின் பத்துப் புத்தகங்கள்
ஒருசேர வெளியிடப்படுகிறது.
அழைப்பிதழ் அச்சேறி வந்ததும்
உங்களுக்கு அனுப்பி வைக்கிறேன்.
கணவருடன் போய்விட்டு வாருங்களேன்.
சென்னையில்தான் நல்லி, குமரன், போத்தீஸ், லலிதா ஜுவல்லரி,
தங்கமாளிகை, உம்மிடி எல்லாம் இருக்கின்றன.
ஒரு ஐந்து லட்சம் எடுத்துக்கொண்டுப் போனால் போதுமானது.
பணத்தை வீணாக்குவது எனக்குப் பிடிக்காது.

ஆண்டிப்பட்டியில் மழையுண்டா? இங்கு நல்ல மழை.
பனிகாலத்தில் இவ்வளவு மழை பெய்ததே இல்லை.
சில இடங்களில் மட்டும் மழை ஏன் பெய்கிறது என்பது
உங்களுக்குத் தெரியுமா?

உங்கள் படைப்புகளை தொட்டுக்கூடப் பார்க்கவில்லை.
நீங்கள் கோபப்பட்டுக் கொள்ளவோ கண்ணீர் சிந்தவோ கூடாது.
இங்கு எனக்கு வேலை பிடுங்கிக்கொண்டிருக்கிறது.
இனி கொஞ்சம் கொஞ்சமாகப் படிப்பேன்.
சாதகமான விஷயங்களை வெளிப்படையாகவும்
பாதகமான விஷயங்களைக் கொஞ்சம் தளுக்காகவும்
நிச்சயம் சொல்வேன்.

உங்களுக்கும் உங்கள் மகளுக்கும்
மற்றபடி எல்லோருக்கும்
எங்கள் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

மிக்க அன்புடன்,
சுரா.

***
நன்றி: காலச்சுவடு, கநாசு.தாஜ் , உமா மகேஸ்வரி

« Older entries