‘பத்தேமாரி’ சினிமா பற்றி கட்டுரை எழுதிய சகோதரர் ஈரோடு கதிர், ‘மனித உறவுகளும், உறவுகள் சார்ந்த வாழ்க்கையும் பொதுவாக மேம்பட்ட தியாகங்களின் மேல்தான் ஒவ்வொரு முறையும் கட்டமைக்கப்படுகிறது. அந்தத் தியாகம் சரியாக உணரப்படாத இடங்களில், அது எந்தவித உறுதித்தன்மையும் ஏற்படுத்தாமல், மேலே கட்டமைக்கப்படுவதை குலையச் செய்துவிடுகின்றன, அல்லது கட்டமைப்பு தன் கனத்தைக் கொண்டு தியாகத்தையே குலைத்துவிடுகின்றன.’ என்ற முன்குறிப்புடன், படத்தின் இறுதிக்காட்சியில் நாராயணன் (மம்முட்டி) சொல்வதை தமிழில் தந்திருக்கிறார். அதை மட்டும் இங்கே மீள்பதிவு செய்கிறேன். ஆபிதீன் போன்ற சபராளிகள் அழாமல் படிப்பது கஷ்டம்.
*
ஈரோடு கதிர் எழுதியது :
பத்தேமாரியில் (படகில்) ஏறி கோர்ஃபஹான் வந்து இறங்கினோம். அங்கே ஒரு சாயபு உதவியோடு சார்ஜா வந்தோம். சார்ஜாவில் இருந்து துபாய்க்கு நடந்து வந்தோம். உயர்ந்த கட்டிடங்கள் அப்போதுதான் எழும்பிக்கொண்டிருந்தன. இப்போது காணும் பல கட்டிடங்களில் என் வியர்வைத் துளியும், கடின உழைப்பும் உண்டு. ’நம்மை நேசிப்பபவர்களுக்காகத்தான் கஷ்டப்படுகிறோம்’ என நினைக்கும்போது சோர்வு வருவதில்லை. நாம் அனுப்பும் காசு ஒரு தேவையை பூர்த்தி செய்கிறதென்பதே மிகுந்த மகிழ்ச்சியானது. எங்களில் பலரும் மனதை நாட்டில் வைத்துவிட்டு உடலை மட்டும் இங்கு வைத்துக்கொண்டு வேலை செய்கிறவர்கள்.
என்ன வேலை, என்ன சம்பளம் என மனைவி கூட அறிந்ததில்லை. எப்படிக் கஷ்டப்படுகிறோம் என்பதைச் சொல்வதில் வெட்கம் ஒன்றுமில்லை, ஆனால் அவர்களுக்கு நம் கஷ்டத்தைச் சொல்ல வேண்டாமென்றுதான் சொல்லாமல் இருக்கிறோம். ஊருக்கு பத்தாயிரம் அனுப்பும்போது, ’இருபதாயிரம் சம்பாதித்துவிட்டு, பத்தாயிரம் அனுப்புகிறார்கள்’ என்று அங்கிருப்பவர்கள் நினைக்கலாம். ஆனால் ஏழாயிரம் கிடைத்தாலும் மூன்றாயிரம் கடன் வாங்கியும் அனுப்புவதுண்டு. ஒரு போதும் ’எனக்கு பலன் திரும்பக் கிடைக்கும்’ என்பதற்காக உதவி செய்ததில்லை. அப்படி எதிர்பார்த்து கொடுப்பது அன்பின்பால் அல்ல, கடன் கொடுத்தல்.
பிறப்பு முதலே கடவுள் பல சௌபாக்கியங்களைக் கொடுத்ததுண்டு. நேசம் மிகுந்த அம்மாவின் மகனாய் பிறந்தது, அன்பான சகோதர, சகோதரிகள், பிள்ளைகள், எப்போதும் புரிந்துகொள்ளும் மனைவி, வாழ்க்கை முழுதும் உடன் நிற்கும் நண்பன் என இவர்களை நினைக்கும்போது நான் எல்லா வளங்களையும் பெற்றதாகவே நினைக்கிறேன்.
’எப்போதாவது பரிசுப் பொருட்களோடு வரும் விருந்தினர்களை’ போல பிள்ளைகள் எங்களைக் கருதுவதுண்டு. பிள்ளைகளின் வயதொத்தவர்களைக் காணும்போது, நமக்கு நம் பிள்ளைகளின் நினைவு வரும். அப்பா, அம்மா வயதில் இருப்பவர்களைக் காணும்போது எத்தனை பிள்ளைகளுக்கு தங்களின் அப்பா, அம்மா நினைவுக்கு வருகின்றனர்?
ஒவ்வொருவரும் தம் மனதில் நினைப்பதுபோல்தான் வாழ்க்கையை வாழ்கின்றனர். ’இவர் மகிழ்ச்சியோடு வாழ்கிறாரா, வருத்தத்தோடு வாழ்கிறாரா’ என வெளியிலிருந்து பார்ப்பவர்கள் எப்படிச் சொல்ல முடியும்? அப்படிச் சொல்ல முடியாது. ’ஊரில் இருக்கும் குடும்பத்தின் அங்கமாய் நாம் இல்லையே’ என்று பல தருணங்களில் நான் வருத்தப்பட்டதுண்டு. சகோதரன் ஸ்கூட்டரிலிருந்து விழுந்து அடிபட்டுக் கிடந்தபோது, மனைவிக்கு தொண்டையில் புண் வந்து சாப்பிட முடியாமல் இருந்தபோது, மகனுக்கு மஞ்சள் காமாலை வந்து படுக்கையில் இருந்தபோது அவர்களோடு உடன் இருக்க முடியவில்லையே என வருத்தப்பட்டதுண்டு. அழுததுண்டு.
எனக்கு வயதாகிவிட்டதே என்று கவலையில்லை, இனி குடும்பத்திற்கு தொடர்ந்து உழைக்கும் அளவிற்கு உடல்பலம் இல்லையே என்பதுதான் கவலை.
உங்களைச் சுற்றியிருப்பவர்கள் மகிழ்ச்சியாக இருக்க நீங்கள் காரணமாய் இருந்தால், பெற்ற அம்மாவும் அப்பாவும் மன நிம்மதியோடு உறங்குவதற்கு நீங்கள் காரணமாய் இருந்தால் அதுவே வாழ்க்கையில் சாதித்ததாக கருதப்படும். மற்றவர்களுக்கு எவ்வளவு உதவியாய் இருந்தோம் என்பதுதான் சாதனை. என் குடும்பம் பட்டியினிலிருந்து மீண்டது, அப்பாவின் கடன்களை அடைத்தது, சகோதரிகளுக்கு திருமணம் செய்துகொடுத்தது, சகோதரனின் தொழிலுக்கு உதவியது என இதெல்லாம் பார்க்கும்போது நான் ஒரு முழு வெற்றியாளன் தான்.
இனியொரு பிறப்பு உண்டெனில், இதே மனிதனாக பூமியில் பிறக்க வேண்டும்; இதே பெற்றோர்களின் மகனாய், இதே சகோதரிகளின் சகோதரனாய், இதே மனைவியின் கணவனாய், என் பிள்ளைகளின் தகப்பனாய், என் நண்பன் மொய்தீனின் நண்பனாகவும் இன்னொரு பிறப்பு வேண்டும்”
*
நன்றி : ஈரோடு கதிர் & Prakash Rajamanickam
தொடர்புடைய பதிவு: