இறையன்பு சொல்லும் கதைகள் – பேரா. சுப.வீ

மரியாதைக்குரிய பேரா. சுப.வீ அவர்களின் உரையை பல வருடங்களாக கலைஞர் டிவியில் கேட்கிறேன். இன்று காலையில் கூட Euclid’s Elements பற்றி கொஞ்சம் சொன்னார் – எனக்கே புரிகிறமாதிரி. அவர் பேசுவதற்கு முன் , ‘புத்தகங்களிலும் செய்தித் தாள்களிலும் நாம் படிக்கத் தவறியவைகளை சிறு சிறு தொகுப்புகளாகத் தொகுத்து அழகு தமிழில் நமக்கு வழங்க வருகிறார் பேராசிரியர் சுப.வீரபாண்டியன் அவர்கள். நம் (கலைஞர் டிவியின்) ’விடியலே வா ’நிகழ்ச்சியில் அடுத்த பகுதியாக வர இருப்பது ‘ஒன்றே சொல், நன்றே சொல்’ என்று தினமும் அந்த தொகுப்பாளினி – ஒரு விரலை அந்தப் பக்கமும் இந்தப் பக்கமும் அசைத்து (வஹாபி குரூப்போ?!) – சொல்வது எரிச்சலைக் கிளப்புகிறது. இதை மாற்றலாம். நல்லது, இறையன்பு IAS-ன் எழுத்து பற்றி சுப.வீ சில தினங்களுக்கு முன் பேசியதை இங்கே பகிர்கிறேன். பதிவின் கீழே சில சுட்டிகளையும் குறிப்பிட்டிருக்கிறேன். அதையும் வாசிக்கவும். சூஃபி என்றால் அது யார் என்றும் நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டும் அல்லவா? – AB

—-
suba-veerapandian-wp-abசுப.வீ : அனைவருக்கும் என் அன்பு வணக்கம். கதைகேட்டு கதைகேட்டு வளர்ந்த மரபுதான் நம்முடையது. எப்போதும் எந்தச் செய்தியையும் நேரடியாகச் சொல்வதைவிட கதையின் மூலமாகச் சொன்னால் அது இயல்பாக மக்களைச் சென்றடையும். ஐ.ஏ.எஸ். அதிகாரியாக இருக்கிற இறையன்பு அவர்கள் தம்முடைய பேச்சிலும் தன்னுடைய நூல்களிலும் அங்கங்கே சின்னச்சின்ன சிறுகதைகளை எழுதிக்கொண்டிருக்கிறார். அவற்றை சிறுகதை என்பதைவிட குட்டிக்கதைகள் என்று சொல்லலாம். அந்தக் கதைகள் சூஃபி மரபிலிருந்து எடுக்கப்பட்ட கதைகள் , ராமாயணம் – மகாபாரதத்திலிருந்து எடுக்கப்பட்ட கதைகள் , ராமானுஜர் வாழ்விலிருந்து எடுக்கப்பட்ட கதைகள், நபிகளின் வாழ்விலிருந்து எடுக்கப்பட்ட கதைகள் , விஞ்ஞானிகளின் கதைகள்.. இப்படி பல்வேறுவிதமான தளங்களிலிருந்து – நிகழ்ந்தவை என்று சொல்லப்படுகிற கதைகளும் கற்பனையாகச் சொல்லப்படுகிற கதைகளுமாக – சின்னச்சின்ன குட்டிக்கதைகள் அங்கங்கே இடம் பெறுகின்றன. அது படிக்கும்போது நமக்கு ஒரு ஊக்கத்தைத் தருகிறது. எளிமையாக எதையும் புரிந்துகொள்ள உதவுகிறது.

சூஃபி மரபுத் தத்துவத்திலிருந்து ஒரு கதையை அவர் சொல்வார். தந்தை ஒருவர் இறந்துபோகிறபோது தன்னுடைய மூன்று மகன்களுக்கும் தன்னுடைய ஒட்டகங்களை எழுதிவைத்துவிட்டு இறந்தார். அவரிடம் மொத்தம் 17 ஒட்டகங்கள் இருந்தன. அதை எப்படிப் பகுத்துக்கொள்ள வேண்டும் என்று அவர் எழுதினார். இந்தக் கதைகள் எல்லாவற்றிலும் மைய இழையாக இருப்பது ஒன்று, அதாவது.. வழக்கமாகச் சிந்திப்பதிலிருந்து எப்படி மாற்றிச் சிந்திப்பது என்பது. ஒரு திரைப்படமேகூட ‘மாத்தி யோசி’ என்று வந்தது. மாற்றுச் சிந்தனை. Lateral Thinking என்று ஆங்கிலத்தில் சொல்வார்கள். அப்படி ஒரு மாற்றுச்சிந்தனையைக் கொண்டிருக்கிற கதைதான் இதுவும்.

17 ஒட்டகங்களை அவர் எப்படி எழுதிவைத்திருக்கிறார் என்றால் மூத்த மகனுக்கு சரிபாதி கொடுத்துவிடவேண்டும். இரண்டாவது மகனுக்கு மூன்றில் ஒரு பங்கு. மூன்றாவது மகனுக்கு ஒன்பதில் ஒரு பங்கு என்று அவர் எழுதியிருக்கிறார். இப்போது தொடக்கத்திலேயே ஒரு சிக்கல் வந்து சேர்ந்துவிடுகிறது. 17 ஒட்டகங்களை எப்படி சரிபாதியாகக் கொடுப்பது? எல்லோரும் சேர்ந்து பேசினார்கள். ஒரு ஒட்டகத்தை வெட்டித்தான் கொடுக்க வேண்டும், வேறு வழியில்லை.. என்று முடிவெடுத்தார்கள். ஆனால் அந்த ஊரில் இருந்த பெரியவர் ஒருவர் சொன்னார் , வேண்டாம்.. எந்த ஒட்டகத்தையும் கொல்லாமலேயே நாம் பிரித்துக்கொடுத்துவிடலாம் என்றார். எப்படி என்று யாருக்கும் புரியவில்லை. அவர் சொன்னார், பதினேழு ஒட்டகங்கள் இருக்கின்றன, இந்தப் பிள்ளைகளுக்கு நான் – அவர்களின் அப்பாவினுடைய சிநேகிதர் என்ற முறையில் – ஒரு ஒட்டகத்தை பரிசாகக் கொடுக்கிறேன். இப்போது 18 ஒட்டகங்கள் வந்துவிட்டன. ஒன்பது ஒட்டகங்கள் மூத்த மகனுக்கு. மூன்றில் ஒரு பங்கு என்றால் இரண்டாவது மகனுக்கு ஆறு ஒட்டகங்கள். மூன்றாவது பிள்ளைக்கு – ஒன்பதில் ஒன்று என்றால் – இரண்டு ஒட்டகங்கள். கூட்டிப்பார்த்தால் 9+6+2 சரியாக 17 என்றுதான் வரும். தந்தை சொன்னமாதிரியேதான் இப்போது பிரித்துக்கொடுத்திருக்கிறார்கள். நண்பர், தான் கொடுத்த ஒட்டகத்தை திரும்ப எடுத்துக்கொண்டுவிட்டார் என்று ஒரு கதை உண்டு. இது, ஒரு கணக்கை வேறுமாதிரியும் சிந்திக்கலாம் என்பதற்காகச் சொல்லப்பட்டிருக்கிற கதை.

iraiyanbu1அதைப்போல இன்னும் பல செய்தி. நாம் ஒன்றை எப்படிச் சொல்கிறோம் என்பதைப் பொறுத்து அதற்கான பொருள் மாறும். கஞ்சர்களைப் பற்றி நாடு முழுதும் எப்போதும் கதை உண்டு. எந்தப் பெரியவர்களிடத்திலே நாம் பேசிக்கொண்டிருந்தாலும் எங்க ஊர்ல ஒரு கஞ்சன் இருந்தான் என்று அவர்கள் கதையைத் தொடங்குவார்கள். பணத்தைச் சேமிப்பது வேறு, சிக்கனமாக இருப்பது வேறு, கஞ்சனாக இருப்பது வேறு. அப்படிக் கஞ்சனாக , எதற்கு கொடுக்கவேண்டுமோ அதற்கு கொடுக்காமல் பணத்தை கருமியாக வைத்துக்கொள்பவர்களைப் பற்றி நாடு முழுவதும் கதைகள் உண்டு. அவற்றுள் ஒரு வேடிக்கையான கதையை இறையன்பு அவர்கள் தன்னுடைய நூலிலே குறிக்கிறார்.

ஒரு கஞ்சன் வெள்ளத்திலே அடித்துக்கொண்டு போகப்பட்டான். அப்போது அவனை காப்பாற்ற வேண்டுமென்று ஊர்க்காரர் ஒருவர் நினைத்தார். இவன் எவ்வளவுதான் கஞ்சனாக இருந்தாலும் அடிப்படையில் நல்லவன்; எனவே இவனை காப்பாற்றிவிடலாம் என்று தோன்றியது. அவர் நீச்சல் தெரிந்தவர் ; வெள்ளத்தில் போகிற கஞ்சனைப் பார்த்து ‘கையைக் கொடு.. கையைக் கொடு’ என்று கேட்டார். அவன் கையைக் கொடுக்கவில்லை. இவருக்கு பிறகுதான் சட்டென்று தோன்றியது, அவனிடத்திலே எதைக்கேட்டாலும் கொடுக்க மாட்டான், அவனைக் காப்பாற்றுவதாக இருந்தாலும் அவன் கையைக் கேட்டால் கொடுக்க மாட்டான், எப்படி மாற்றி சிந்தித்தார் என்றால்… ’என் கையை எடுத்துக்கொள்’ என்று இப்போது சொன்னார். கஞ்சன் தாராளமாக தன் கையை நீட்டிப் பிடித்தான், காப்பாற்றப்பட்டான் என்று ஒரு வேடிக்கையான கதையும் உண்டு.

‘கையைக் கொடு’ என்பதும் ’கையை எடு’ என்பதும் ஏறத்தாழ ஒரே பொருள்தான் , ஆனால் கையை எடுத்துக்கொள் என்று சொன்னால் அவனைக் காப்பாற்ற முடிகிறது, உன் கையைக் கொடு என்று சொன்னால் அவனைக்கூட நம்மால் காப்பாற்ற முடியவில்லை என்று இந்தக் கதை சொல்லும்.

இப்படி பல்வேறு செய்திகள்.. வாழ்க்கை பற்றிய சில புரிதல்கள்…
—–
நன்றி : சுப.வீ, இறையன்பு
*
உரையை முழுதாகக் கேட்க என்னை அணுகவும். எல்லாவற்றையும் டைப் செய்து பகிர்ந்தால் அப்படியே அழகாக லவுட்டி பேஸ்புக்கில் போட்டுக்கொள்வீர்கள் என்றுதான் இந்த எச்சரிக்கை. ஹிஹி…
*
தொடர்புடைய பதிவுகள் :

1.
இமாம் அலி (ரழி) தீர்த்த இன்னொரு வித்தியாசமான புதிர் (நன்றி : புத்திசாலி)

2.

இந்த 17 ஒட்டகங்கள் கணக்கு இங்கே எளிமையாக – அலி ரலியல்லாஹூஅன்ஹூவின் கருணையோடு – தீர்க்கப்படுகிறது. ஒட்டகம் மேய்க்கிற எனக்கு இதுவே சரியென்றும் படுகிறது. நன்றி :  காஜாமுகைதீன்

இறையன்பு I.A.S-ன் இறை நம்பிக்கை

‘அடுத்தவர்கள் நலனுக்காகச் செய்யும் ஒவ்வொரு செயலும் பிரார்த்தனைதான்! ஒவ்வொரு நிகழ்வையும் விழிப்பு உணர்வுடன் அணுகினால் வாழ்க்கையே வழிபாடுதான்!’ – இறையன்பு

மேலும் வாசிக்க : http://faithfullindian.blogspot.com/2007/07/blog-post.html

**

இறையன்பு I.A.S-ன் வலைப்பதிவிற்கான சுட்டி அனுப்பியவர் சகோதரர் ராமகிருஷ்ணன். ராம், அங்கே ஒரு ஒரு பதிவுதான் இருக்கிறது. நான்கு வருடங்களுக்கு முன்பு அதைப் பதிவிட்டது இறையன்புதானா? சொல்லுங்கள். எப்படியிருந்தாலும் நல்ல செய்திகள். நன்றி உங்களுக்கு. ‘சுயநலம் குறித்து சிந்திக்காமல் பணியாற்றத் தொடங்குகிறபோதே ஜெயிக்க ஆரம்பித்து விடுகிறோம். வெற்றி என்பது நம்மீது எறிந்த கற்களால் எழுப்புகிற கோபுரம்!’ என்று சொல்கிறார் இறையன்பு. ஐ.பி.எஸ்.,ஆக ஆசைப்படும் என் மகன் நதீமிடம் சொல்ல வேண்டும். வாப்பா என்றாலே கல்லை எடுக்கிறான்!