உருக்கும் நிகழ்விது உணர்த்திடுதே…

தியாகத் திருநாள் வாழ்த்துகள்

இப்னு ஹம்துன்

இறையோ இதுவோ இப்பிறையோ?
இல்லை இல்லை தேய்ந்திடுதே!
முறையாய் பெரிய கதிர்கூட
முழுதாய் மறையுது அந்தியிலே
நிறைந்த சிந்தை இபுறாஹீம்
நெஞ்சில் பூத்த தேடலிலே
இறையின் மார்க்கம் விளங்கியதே
இம்மை வாழ்வு சிறந்திடவே!

கனவில் கண்டார் பலியிடவே
கருணை பரிசாம் இளம்மகனை!
நினைந்தே உறுதி பெற்றிட்டார்
நிச்ச யமிது இறையாணை!
அணைத்தே மகனை கேட்டாரே
அவரும் ஒப்பத் துணிந்தாரே
புனையா உண்மை தேடிடுவோம்
புரிந்தால் நன்மை நமக்கன்றோ

அறுக்கத் துணிந்தார்; அறவில்லை
அல்லாஹ் நாட்டம் அதற்கில்லை
பொறுத்துப் பார்த்தார் இபுறாஹிம்
பேரிறை அளித்தான் ஆடொன்றை.
சிறந்த எண்ணச் சோதனைக்கே
செய்த வழியாம் அக்கனவு
துறப்பீர் பாசம் பற்றெல்லாம்
தூயோன் இறையின் ஆணைக்கே!

உற்ற துணையை, சிறுமகவை
ஒன்றும் இல்லா ஊரொன்றில்
பற்றை அறுத்து விட்டுவிட்டார்
படைத்தோன் இறைவன் சொன்னபடி!
சுற்று முற்றும் ஒன்றுமில்லை
சுகமாய் வாழ ஏதுமில்லை
பெற்ற மகவும் பரிதவிப்பில்
பெண்ணும் பெற்றார் பெருந்துன்பம்
சற்றே நில்லும் என்கணவா!
சடுதி விரைந்து செல்லுமுன்னே
“பற்றை அறுத்துப் போவதெல்லாம்
படைத்தோன் ஆணை? பண்பிதுவா?”
குற்ற மின்றி கேட்டுவிட்டார்
குமைந்தே சொன்னார் “இறையாணை”
மற்ற விளக்கம் வேண்டாமல்
மாண்பாம் இறையே போதுமென்றார்

தாகத் தவிப்பில் சிறுகுழந்தை
தாயும் செய்ய ஏதுமின்றி
ஏகன் இருக்கப் பயமற்று
எங்கும் நீரைத் தேடிவர
போக வரவும் பொழுதாக
புரண்டு உதைத்து குழந்தையழ
மேகம் கூட உதவாத
மென்மை அறியா பாலைவனம்.
காணக் கிடைத்த மலைகளிடை
கடுகி நடந்தார் தொங்கோட்டம்
கானல் என்று அறியாமல்
கண்ட நீரைக் காணவில்லை
வானம் பார்த்தார் வழியில்லை
வாழ்வில் இதுபோல் துயரில்லை
காண வந்தார் குழந்தையினை
கண்டார் ஊற்றைக் காலடியில்!
பெருகப் பெருகும் நீரன்று
பெரியொன் இறையோன் கருணையது
உருகிப் போனார் உளமாற
உண்மை இறையைப் புகழ்ந்தாரே!
நெருங்கிச் சொன்னார் நீரிடமே
நில்நில்! நீரும் நின்றதுவே
உருக்கும் நிகழ்விது உணர்த்திடுதே
உண்மை இறையை சார்ந்திடென்றே!

***

(நில்நில் = ஸம்ஸம், (வற்றாத, இயற்கை நீரூற்று)
(தொங்கோட்டம் = அரபியில் ‘சயீ’ – இருமலைகளுக்கிடையே ஓடி நீர்த் தேடல்)

***

நன்றி : இப்னு ஹம்துன் ( http://www.ezuthovian.blogspot.com ) | E-Mail : fakhrudeen.h@gmail.com

அவளுக்கு இவள் பெயர் , அவனுக்கும் அவர் பெயர் : இப்னு ஹம்துன் கவிதைகள்

’கடல் கடந்தவனின் மனைவி’ என்று தலைப்பு வைத்தால் இன்னும் கவர்ச்சியாக இருந்திருக்கும். எப்படியெல்லாம் இழுக்க வேண்டியிருக்கிறது உங்களை!  ’பொதி சுமப்பவர்களை’த் தொடர்ந்து இந்தப் பக்கங்களுக்காக இப்னு ஹம்துன் எழுதிய கவிதைகளைப் பதிவிடுகிறேன். ‘எளிய கவிதைகள்’ என்று அவர் குறிப்பிட்டதால் எளிமையாகவே இருக்கும் என்று நினைக்கிறேன். ’பிடித்திருந்தால் வெளியிடுங்கள்’ என்று ஏன் சொன்னார் என்றுதான் தெரியவில்லை.  ‘பரங்கிப்பட்ட’ பஃக்ருத்தீன் எழுதினால் பார்க்காமல் இருப்போமா?!

***

ஏக்கம்

அழைப்பு மணி
அலறும் போதெல்லாம்
கடங்காரனாயிருக்குமோவென்று
கவலைப்பட்டு அமர்ந்திருப்பவனின்
கண்ணில் படுகின்றன
கூரையின் வழியே
உள்நுழைந்த
சூரிய ஒளியின்
சிதறல் துளிகள்அள்ள முடியாத வெள்ளிக்காசுகளாய்.

***
நினைவுகள்

விவாகரத்து செய்தபின்னர்
எதிர்பாராமல் ஒருநாள்
வீதியில் எதிர்பட்ட
முன்னாள் கணவனை விட்டும்
வேகமாகப்பார்வையைத் திருப்புகிறாள் மனைவி.
பார்க்கிறாளா வெனபாராமல் பார்த்துக்கொண்டேயிருக்கிறான் அவன்
இருவரின் உலகத்திலும்
இப்போதைக்கு யாரும் இல்லை.

***

நேசம்

வெளிநாட்டில் வசிக்கும் முறைப்பையன்
வாங்கியனுப்பிய பரிசை
நெஞ்சோடு
பத்திரப்படுத்தும் பேத்தியை
பாசம்பொங்க முத்தமிடுகிறாள் பாட்டி
அவளுக்கு இவள் பெயர்
அவனுக்கும் அவர் பெயர்.

***

வெட்கம்

மக்கள்தொகை கணக்கெடுக்கும் பெண்ணிடம்
மயிலிறகைப் போல
கடிதத்தின்
அனுப்புநர் முகவரியில்
பெயர் காட்டுகிறாள்
கடல்கடந்தவனின் மனைவி.

***

நட்பு

பழைய நண்பனை
பார்த்த பரவசத்தில்
நினைவில் தோன்றின
மறந்திருந்த
எங்கள்
பட்டப் பெயர்கள்

***

நன்றி : இப்னு ஹம்துன் | fakhrudeen.h@gmail.com

பொதி சுமப்பவர்கள் – இப்னு ஹம்துன்

இடிந்த தேசத்திலிருந்து ஓர் இடிமுழக்கம்‘ என்ற அருமையான கட்டுரை எழுதிய சகோதரர் இப்னு ஹம்துனின் கவிதை – பொதி சுமப்பவர்களுக்காக.   குறிப்பு : பொதி என்றால் பொண்டாட்டி அல்ல!
***

பொதி சுமப்பவர்கள்இப்னு ஹம்துன்

விதியெல்லாம் தன்வசமே   வைத்திருத்தல் போலத்தான்
   விதவிதமாய் பெரும்பேச்சு; விளக்கங்கள் அப்பப்பா!
கதிமோட்சம் தன்வழிதான்! – கருத்துரைப்பு செய்வதுவும்
   கடவுளவன் உரிமையிலே கைவைத்தல் ஆகாதா?
மதிகூறும் படியெல்லாம் மதவிளக்கம் தந்துவிடல்
   மனிதரெல்லாம் தன்பின்னே மடைதிரளும் ஆசைதான்!
அதிகாரம் கொள்வதற்கே அலைகின்றார்  பெருங்குழப்பம் 
   ஆனமட்டும் செய்கின்றார்  அவனியிலே பேச்சாலே !

புதிதாக ஒன்றுசொல்லிப் புகைந்தெரியச் செய்துவிட்டு
   பலபேரை பின்சேர்த்து பாதகங்கள்  புரிந்துவிட்டு
சதியாலே பேர்பெற்று சட்டதிட்டம் வகுத்துவிட்டு
    சங்கடங்கள் ஏதுமின்றி சுயநலனே சிந்தித்து
எதிர்வாதம் புரிவோரை இழித்துரைத்துப்  புறந்தள்ளி
   என்வாதம் மட்டுந்தான் இறைஏற்கும்  என்பாரும்
நிதிவேண்டி வருவதல்லால் நிலைமையிலே மாற்றமுண்டா?
   நெருப்பெடுப்பார் பீடிக்கு, நம்குடிசை எரிகையிலே!

அதிகாலை இறைதொழவும் ஆலயமும் சென்றுவிடார்
    அரசியலில் செல்வாக்கை ஆலயத்தால் அடைகின்றார்.
அதற்காக வம்புகளும் அடிதடியும் வழக்குகளும்
   அடுத்துள்ளோர் மானத்தின் மீதேறிச் செல்லுதலும்
மிதிக்கின்றார் மாண்பினையும்  மானுடத்தின் நேயத்தையும்
    மதிக்காமல் இழிவாக்கி மலிவான சொல்வீசி
பதிக்கின்றார் பெருங்கேட்டை பாராரும் உமிழ்வதற்கே
   பாவத்தைச் செய்யுமிவர் புனிதத்தை அறியாரே!

துதிசெய்யும்  ஒருகூட்டம்; துப்பறியும் மறுகூட்டம்
   தூயமனம் இல்லாரை தொடர்ந்திடுதே பெருங்கூட்டம்
சுதிசேர்க்கும் சிறுமனங்கள் சுயமறியா  ஆரணங்கள்
   சூழ்ச்சியிலே சிக்கிவிடும் சின்னஞ்சிறு  பூமனங்கள்
பொதிசுமப்பர் போலத்தான் பொருளறியார் தன்சுமப்பை
   பொல்லாங்காய் புறம்பேசி பொய்யுரைக்கும் இவர்பற்றி
விதிவசத்தை தன்னிடமே வைத்திருக்கும் இறையிடமே
   ஒப்படைப்போம் முறையீடாய்!  ஒழுங்கமையச் செய்வானே!

***

நன்றி : இப்னு ஹம்துன் (பஃக்ருத்தீன்) | fakhrudeen.h@gmail.com

மர்மத்தை உதிர்த்தபடி மெளனமாக…

வெளியேறும் கவிதைகள்
இப்னு ஹம்துன்

உங்களின் பூமியில்
உங்களின் பார்வையில்
ஒரு கவிதை வருகிறது.

முதலில் நீங்கள்
மகிழ்ச்சி அடைகிறீர்கள்.
கவிதைகளின் வானத்தில்
ஓரிடம்
கிடைக்கப்பெற்றதற்காக.

அதன்பின்
உங்களின் மேதமை அழுத்த
அதில் ஒரு எழுத்தையேனும்
சேர்க்க நினைக்கிறீர்கள்.
அர்த்தம்  அனர்த்தமாகலாம்
என்பதை அறியாமலே!

அல்லது
கண்ணாடி அணிந்த உங்களுக்கு
காட்சிப்படுகின்றன
எழுத்துப் பிழைகள் என்று சில.
உங்கள் ‘இலக்கணத்திற்கு’
அதை மாற்ற நினைக்கிறீர்கள்.

மெல்ல… கவிதையில்
உங்களைக் குடியமர்த்துகிறீர்கள்
மர்மத்தை உதிர்த்தபடி
மெளனமாக வெளியேறுகிறது கவிதை.

எஞ்சியிருக்கும் சக்கைகளை
எடுத்துக் கொஞ்சுகிறீர்கள்.
ஞாபகார்த்தமாக
நாலு மரச்’சட்டங்’களுக்குள் சிறைப்படுத்துகிறீர்கள்.
உங்கள் அறையை
அலங்கரித்துக்கொள்ள
அது உதவுகிறது.

தீரா தொலைவுக்குச் சென்ற
வெளியேறிய கவிதையோ
ஒருபோதும் திரும்புவதாயில்லை.

*

நன்றி : பஃக்ருத்தீன் (இப்னு ஹம்துன்)

« Older entries