மணல் (சிறுகதை) – இத்ரீஸ் யாக்கூப்

“வந்துட்டியளா… இன்னைக்கி பெருநாங்கிறதால, லேட்டாவுமோன்னு நெனச்சேன்…” வாயெல்லாம் பல்லாக முத்துப்பொண்ணு மாப்பிள்ளை (கணவன்), படலைத் திறந்து உள்ளே நுழைவதை கண்டதும் பரவசமானாள். மணி அதிகாலை நாலு இருக்கும். இரவெல்லாம் பயணித்ததில் கன்னமெல்லாம் எண்ணெய் பசையோடு ஒட்டிபோயிருந்தாலும் மனைவியைக் கண்ட சந்தோசத்தில் புதுமாப்பிள்ளை களை கொண்டான்.
“பொற தெரிஞ்சது எட்டுன ஒடனே கெளம்ப ஆரம்பிச்சிட்டேன். கடைய சாத்த நேரமாச்சி. மாயவரத்துலேர்ந்து பத்தர மணிக்கெல்ல்லாம் வெரசா பஸ்ஸு கெடச்சிருச்சி, பட்டுக்கோட்டைலதான் எப்பவும் போல நிக்க வேண்டியதா போச்சி…”
“வாப்பா… ” அவனுடைய உம்மா படுக்கையிலிருந்து எழ முயன்றுக்கொண்டிருந்தாள்.
“நல்லாருக்கியாம்மா…” உம்மாவின் காலடியில் அமர்ந்தபடி அவளது கைகளை வாஞ்சையோடு அழுத்தினான்.
“எனக்கென்ன வாப்பா நல்லாருக்கேன். நீ நல்லாருக்கியா… சதுரமெல்லாம் நல்லா இருக்கா… இருவத்தி ஏழுலேர்ந்து எம்புள்ள எப்ப வருவான் எப்ப வருவான்னு தவிச்சிக்கிட்டு இருந்தேன்… நல்லாருக்கியா வாப்பா, பல்லு வெலக்கிட்டு வா”
“முத்துப்பொண்ணு தேத்தண்ணி போடுவே…”
“சரி மாமி…” என்று கணவனுக்கு அறைக்கு வரும்படி கண்காட்டினாள். சில்லுவிட்ட சிமிண்ட் தரை பாயில் மகள் நன்றாக தூங்கி கொண்டிருந்தாள். றோஸ் கலர் போர்வையில் ஆங்காங்கு இருந்த கத்தரிப்பூ கலர் பூக்களில் ஒன்றை கையில் சுருட்டிக்கொண்டு ஒருகணித்து அழகாக படுத்திருந்தாள் ஆறு வயது செல்ல மகள் அஸ்மா.
‘செல்லம்…’ வாரி அணைத்து எழுப்ப நினைத்தவனை, ஸ்… என்று நேரம் ஆகட்டும் என்று சைகை காட்டினாள்.
“கொண்டு வந்தியாளா”
“ம்ம்” என்று பெருமிதப் புன்னகையோடு ஒரு மணிப்பர்ஸை நீட்டினான். வாடா மல்லி கலர் பேப்பரில் தகதவென மினுங்கிக் கொண்டிருந்த அந்த தங்கச் சங்கிலியை கண்டதும் முதுப்பொண்ணுக்கு நிலைகொள்ளவில்லை, வாநீ வடிந்தது! கழுத்தில் போட எத்தனித்தாள், நுழையவில்லை! செல்ல கோவத்தை வீசியவள், “மச்சான்னா மச்சாந்தான்” அவன் வலுவான புஜத்தில் ஒரு செல்ல முத்தம் ஒன்று வைத்தாள். இவன் இடுப்போரம் மெதுவா கை நுழைக்க, நெளிந்தபடி “போங்க மூஞ்சி கழுவிட்டு, மாமிகிட்ட காமிங்க”
அஸ்மா கொஞ்சம் கொஞ்சம் அசைந்தபடி, தூங்கி கொண்டிருந்தாள். அவள் கன்னத்தை கிள்ள வேண்டும் போலிருந்தது. வாப்பாக்காரன் லேசா முத்தமிட, சட்டென முழித்துவிட்டாள்.
“வாப்ப்பா…” இலைகளை விளக்கி ஒளி சிந்தும் சந்தனப்பூ போல தாவி எழுந்தாள்.
“ராஜாத்தி… முழிச்சிட்டியா…”
“எப்ப வந்தா…”
“இப்பத்தாம்மா வந்தே..”
“ம், முட்டாயி கொண்டு வந்தியா”
“ம்”
“மிச்சரு”
“ம்”
“க்ளாஸ்கோ ரொட்டி..”
“எல்லா வாப்பா கொண்டு வந்திருக்கே ம்மா”
“சரி, சரி போ வாப்பாவோட போயி மூஞ்சி கழுவு…”
மூணு மணிக்கே எந்திரிச்சி வட்லப்பம், சேமியா, இடியப்பம் என எல்லாம் செய்துவிட்டிருந்தாள்.
அடுப்பை ஊதிவிட்டு அப்பச்சட்டியை வைத்தாள். சூடாக, கரண்டியில் மாவெடுத்து நடுவில் ஊத்த, ஸ்… என்று ஆவிபறக்க லாவகமாய் மெல்லியதாய் இங்கிட்டும் அங்கிட்டும் சுற்றி அடுப்பில் வைத்தாள்.
“என்ன கோலியப்பமா…”
“ஆமா, அவள பாத்துக்கிருங்க, கோபால் பல்பொடினா போதும் பாதி தின்னுடுவா. போன மொற பேஸ்ட்டு வாங்கிட்டு வர சொன்னேனே பையில இருக்கா…”
“ஏன் பேஸ்ட்டு இனிக்காதோ, உனக்கு பேஸ்ட்டுல தீட்டணும். அதுக்கு அவ இத திங்கிறா அத திங்கறான்னு எதாவது சொல்லு”
“ம்க்கூம். நா வேணா உமிலேயே தீட்டிக்கிறே..”
“சரி… விடு. பசியாற எல்லாமே செஞ்சிருக்க போல, ராத்தா வூட்டுக்கு போவல?”
“பெருநாளைக்கி இங்கேயே இருக்கலாம்னு பாத்தே. அவ்வொ மகமாரும் வந்துருக்காக, அதே சாக்கா வச்சிக்கிட்டு பதுவுசா எடுத்து சொன்னே, சரி நாளைக்கி வந்துருன்னு ஒப்புக்கிட்டாக”
“ம்ம்”
“சரி தேத்தண்ணி குடிச்சிட்டு, கறி வாங்கிகிட்டு வந்துருங்க”
“எவ்வளவு”
“முக்கா கிலோ வாங்கிகிட்டு வாங்க”
“ராத்தா வூட்டுக்கு போயிருந்தா அவ்வொளே குடுப்பாகல்ல, அர கிலோ போதும்ல, அதுக்கே நூத்தி இருவது வரும், எதுக்கு முக்கா கிலோ? உங்க மாமா எற நூறு ரூவாதான் கூட்டி குடுத்திருக்காக. நீ பாட்டுக்கு இஸ்ட்டத்துக்கு செலவு பண்ணாத ஆமா!”
“ஆமா ஆமா நாந்தான் சாப்புட போறே… காலமுழுக்க இப்படியே இருந்துருலாம்னு பாக்குறியளோ… ஊரு ஒலகத்த போல இருக்க ஒரு நாளுக்கி கூட ஆசப்பட கூடாது போல”
“ஏய் ஏண்டி பெருநா அன்னிக்கின்னு இப்படி பொலம்புற… நீ ஆசைப்பட்டேனுதான ரெண்டாயிரம் சேத்து வச்சி சங்கிலி வாங்கிகிட்டு வந்துருக்கே. அதுவும் பத்தாம அறநூர்வா அங்கிட்டும் இங்கிட்டும் பொரட்டித்தா வாங்கிகிட்டு வந்துருக்கே. கேட்டுக்க”
உம்மாவிடம் காட்ட நெஞ்சு நெறஞ்சு போனாள்.
“பரக்கத்தா இரு வாப்பா! அல்லாஹ் ஒங்கொமருக்கு நெறையா கொடுப்பான்! நல்ல நாளும் பெரிய நாளுமா பொன்ன கண்ணுல காட்டிட்ட, பரக்கத்தா இரு! பரக்கத்தா இரு!”
“மய்யதுநாண்டவுளே…”ன்னு மேல்துண்டால் பனித்த கண்களை துடைத்துக் கொண்டாள்.
செய்யது தாயோட தூஆவில் கரைந்து போனான். ஏனென்றால் இதுதான் சம்பாத்தியத்தில் வாங்கிய முதல் பவுனு. அதுவும் முத்துப்பொண்ணு அவ்வப்போது நச்சரித்துக் கொண்டே இருந்ததால்.
“சும்மா குடுத்தத வாங்காம, ஈரலும் போட சொல்லுங்க, நீங்களும் அஸ்மாவும் திம்பிய”
“ம்”
மாமியாரையும் அஸ்மாவையும் குளிக்க அனுப்பிவிட்டு, செலவு சாமானை அரைக்க தொடங்கினாள். இஞ்சி பூண்டின் பச்சை வாசம் வீடெங்கும் பரவத் தொடங்கியது.
சொல்லியபடி செய்யது திரும்பினான்.
“அவ்வோ ரெண்டு பேரையும் கொளத்துக்கு அனுப்பிட்டே, நீங்களும் குளிச்சிட்டு வந்துருங்க”
“நீ எப்ப போவா…”
“எங்களுக்கு பத்து மணிக்கு மேலதான தொழுவ, ஆனத்த வச்சிட்டு போயிறே(ன்). நீங்க பள்ளிலலேந்து வந்தா சாப்புட சரியா இருக்கும்”
“அதா தவள, செம்பு சட்டிலலாம் தண்ணி நெறச்சி வச்சிருக்கியே… நாம இங்கேயே சேந்து குளிக்கலாமே…”ன்னு வழிஞ்சவன்
“ஆமா ஆமா குளிக்கலா குளிக்கலா… அங்கிட்டு போவியளா… ஒரக்காணத்துக்கும் வூட்டுக்கும் நா’ல்ல நடக்கணு…”
“அட, வாங்கிறே…”
“சும்மா போங்க, பொழுது போவுது… பளியா கொளத்துல சேறு மணக்கும், ஆரியாங்கொளம் போங்க!”
“சரி” என்று சைக்கிளை மிதிக்க தொடங்கினான்.
ஊதா, பச்சை கலரில் கட்டம்போட்ட கைலி, சந்தன கலர் சட்டையில் செய்யதும், தங்க பார்டரில் மாம்பழ கலர் பாவாடை சட்டையில் அஸ்மாவும், வெள்ளை சட்டை, ஊதா அரக்கு பச்சை கட்டம் பூப்போட்ட கைலியும், சிவப்பு ஆரஞ்சு வெள்ளை பூ பிறை போட்டிருந்த இளம்பச்சை மேல்துண்டில் மாமியாரும் முத்துப்பொண்ணு கண்ணுக்கு நிரப்பமாக தெரிந்தார்கள்.
“வெள்ள வேட்டி எடுக்க சொன்னா கேக்குறியளா… கர்ச்சிப்பு கட்டல!”
“சோப்புல வச்சிருக்கே. பள்ளில ஒது செஞ்சிட்டு கட்டிக்கிறே”
“வரிக் காச மறந்துராதிய”
“எடுத்துக்கிட்டேன்”
“தொழுவ முடிஞ்ச ஒடனே முஸாபா செஞ்சி, மரைக்கால்லாம் தனியா ஹஜ்ரத்துக்கு காசு குடுப்பாகலாம்… ராத்தா சொல்லிக்கிட்டாக. இன்னைக்கு நீங்களும் கொடுங்களேன்…”
“நால்லாம் குடுத்தா நல்லாருக்காது. நானே கடைல வேலைக்கு இருக்கவன்”
“ஹஜ்ரத்துக்கு குடுத்தா நல்லதுதான”
“அவர்லாம் நம்மள கண்டுக்கிட்டாலும்…”
“ஏங்க அப்படி சொல்லுறிய… அஸ்மாவுக்கு நல்லா ஓதி குடுக்குறாராம். பள்ளியில எல்லா புள்ளைங்க கிட்டயும் ஒரே மாதிரிதான் நடந்துகிறாராம். முன்ன உள்ள ஹஜரத்து மாதிரி இல்ல இவரு. பாக்க நல்ல ஆளாத்தான் தெரியுதுங்றாங்க “
“எனக்கு அதெல்லாம் சரிப்பட்டு வராதுடி… வெக்கமா இருக்கு”
“ஆமா இப்படியே இருங்க”
இவளுக்கு என்ன ஆச்சு என்று நினைத்தவனாய் “சம்பளம் கொஞ்சம் கூடுன ஒடனே நீ ஏதேதோ சொல்றா, சரி செய்றேன்”
செய்யது தொழுதுட்டு வரவும், இவளும் குளிச்சி முழுகி, புது துணிமணியில் பளபளவென இருந்தாள்.
“என்னடி இது சீல… கையெல்லாம் கூட உப்பியிருக்கு!”
“எதோ சுகன்யா மாடலாம்… நம்ம ஆரிபா தச்சிக்கிட்டு வந்தா, எனக்குன்னு சொல்லாம நானும் கணேசன்ட்ட அதுபோல தச்சி கேட்டேன். ராத்தா வூட்டு துணிமணியோடு இதையும் குடுத்துனால, நல்லா தச்சி தந்துரிச்சி!”
ஒரு பக்கம் சந்தோசமாவும் மறுபக்கம் ஏதும் புரிபடாமல் ஒப்புக்கு ஏதோ சிரிச்சி வச்சான்.
“சரி வாங்க, நீங்க மாமி புள்ள எல்லாம் உக்காருங்க பசியாற வக்கிறேன்”ன்னு தடுக்கைப் போட்டாள்.
“சரி வை, சாப்ட்டு நானும் பழம்பள்ளியாச வர பொய்ட்டு வர்றேன்”
“சீட்டாடவா… உங்களுக்குன்னே அந்த கருவக்காட வசமா விட்டு வச்சிருக்காக பாருங்க”ன்னு வாயெடுத்தவள் மாமியார் அருகே இருப்பதை உணர்ந்து சட்டென நாக்கை கடித்து கொண்டாள்.
உம்மா, மகள் சகிதம், கோழியப்பம், வட்லப்பம், கறியானம், ஜவ்வரிசி சேமியா என ஒரு பிடி பிடித்தான் செய்யது.
“வாப்பா வாப்பா பெருநா காசு குடு வாப்பா… மணலுக்கு போவணும்” மடியில் உருண்டபடி அஸ்மா சிணுங்க,
“என்னடி இப்பவே மணலு… அஸருக்கு அப்புறம் போவலாம். உம்மா கூட்டிட்டு போறேன்” முத்துப்பொண்ணு அதட்டினாள்
“ஹூம்… நா இப்பவே போறே…”
“வெளக்கமாறு பிஞ்சிரும், இன்னும் சோறு கூட உங்கல, அதுக்குள்ள மணலா”
“சரி ராஜாத்தி, வாப்பா வெளில போயிட்டு வந்து அப்புறம் காசு தர்றேன் என்ன…”
“எனக்கு இப்பவே காசு குடு”
சட்டைப்பையை தடவி, அம்பது காசை எடுத்தான் “சரி இந்தா, அப்பா கடையில போயி ஏதாவது வாங்கி தின்னு. மணலுக்கு உம்மா பொழுதொட்டு கூட்டி போவும் சரியா அது வர போயி புள்ளையளோட போயி இங்குணயே வெளயாடு. சரியா…”
(நேரஞ்சென்டுதான் மணலுக்கு /பெருநாள் கொல்லைக்கு போவணும்)

***

பகலெல்லாம் பட்டறையில நின்னு, ராத்திரியெல்லாம் கண்ணு முழுச்சி வந்தவனுக்கு, பொண்டாட்டிக்காரி ஆக்கி வச்ச சோறும், காய்ச்சி வச்ச கறியானமும் வாழக்கா கலியாவும், தேங்கா பால் ரசமும் மங்கா பச்சடியும், கல்யாண விருந்து போல அமைந்துவிட, மனைவி மக்களோடு சற்று அயர்ந்து எழுந்த போது, அஸருக்கு நகரா அடிச்சிட்டாக! பதறி எழுந்தவன் மணியைப் பார்த்தான். நாலை நெருங்கியிருந்தது. இவன் எந்திரிச்சதில் அவளும் மகளும் முழித்துவிட்டார்கள். பிறகு என்ன அஸ்மாவுக்கு இனி மணலுக்கு போயே ஆகணும்!
சரசரன்னு மூஞ்ச கழுவிட்டு அடுப்படிக்கு போனாள், தேத்தண்ணி போட.
அஸ்மாவுக்கு தலைப்பின்னி, சைடூசி குத்தி பூவெல்லாம் வச்சி, பவுடர் பூசி விட ரதி போல ஜொலித்தாள் . கொஞ்சம் மினுக்கத்தை எடுத்து கன்னத்துல இங்கிட்டும் அங்கிட்டும் பூச, கைபட்டு அஸ்மாவுக்கு காது கூசியது, ஹா ஹான்னு சிரிச்சா.
“நீங்க எங்க கெளம்பிட்டிய…”
“பயலுவ படம் பாக்க கூப்புட்டானுவ, பட்டுக்கோட்டைக்கு போவ போறே”
“ஊருக்கு வந்தா கூட்டாளியோடு சுத்த போயிருவியளே… சரி எங்கள மணல்ல இறக்கி உட்டுட்டு போங்க”
“சீக்கரம் கெளம்பு ட்டே மணியாவுது…”
வாப்பாக்காரன் வாங்கிகிட்டு வந்த சங்கிலியை வாப்புச்சி, தன் கையால் பிஸ்மி சொல்லி போட்டுவிட்டு இரண்டு ரூபாய் தாளையும் அஸ்மாவிடம் நீட்டினாள். பிள்ளை வாப்புச்சிக்கு கட்டிபிடிச்சி முத்தம் கொடுக்க, அவளும் “நல்லா இரு ராசாத்தி…”ன்னு நெத்தி கன்னமென முத்த மழை பொழிந்தாள். செய்யது சைக்கிளை மிதிக்க துவங்கினான். முத்துப்பொண்ணுக்கு அவ்வளவு பெரும, சந்தோசம்!
முத்துப்பொண்ணுக்கு வாப்பா இல்லை. ஒரு அண்ணன், மூணு அக்காமார்கள். அவளுடைய உம்மா வீடுகளுக்கு தண்ணி தூக்கி கொடுத்தும், வீட்டு வேலைகள் செய்தும்தான் பிள்ளைகளை வளர்த்தாள். நல்லுள்ளம் படைத்த பெரிய வீட்டு ஆண்கள் பெண்களின் உதவியோடு எப்படியோ மற்ற மூன்று பெண்களையும் கரை சேர்த்துவிட்டாள். ஒருத்தி வடக்கு அம்மாப்பட்டினத்திலும், ஒருத்தி செந்தலையிலும், ஒருத்தி சம்பையிலும் வாக்கப்பட்டுப் போய்விட்டார்கள். கல்யாணம் ஆனதும் அண்ணணங்காரனும் மாறிப்போனான். பொண்டாட்டி வீட்டிலேயே குடிகொண்டுவிட்டான். குடம் தூக்கி, குடம் தூக்கி கொஞ்ச நாளிலேயே ஒரு இருபத்து ஏழில், உம்மாவும் இந்த துன்யாவிலிருந்து விடைப்பெற்று சென்றுவிட்டாள். அவள் வேலை செய்து கொடுத்துக் கொண்டிருந்த வீட்டில்தான் முத்துப்பொண்ணும் இப்போது கைவேலைக்கு சென்றுகொண்டிருக்கிறாள் என்பதை விட அவர்களின் அன்புக்கட்டளையின் பேரிலும் நன்றியின் பொருட்டிலுமே செய்துவருகிறாள். பாசத்தோடு ராத்தா தரும் சோறும், காசும் செய்து கொடுக்கும் வேலைக்கு கூலியாகாது. புதிதாய் பார்ப்பவர்களுக்கு அவர்கள் வீட்டு பெண்தான் என்று நினைக்க வைக்கும். வழியிலே பாக்கும்போதுதெல்லாம் நிரப்பமா ‘அண்ணே அண்ணே’ன்னு இவளுடைய உம்மா கூப்பிட்டத்தில், உச்சி குளிர்ந்து, பின் உடன்பிறந்தவர் போல ஆகிபோன பாருக் மாமாதான், பின்னாளில் ஒற்றையாய் நின்ற இவளை செய்யதுக்கு கல்யாணம் பண்ணி வச்சது என்றாலும், ஏனோ கல்யாணத்துக்கு அப்புறம் அவர் கடையில் நிக்க பிடிக்காமல் அங்குச் சுற்றி, இங்குச் சுற்றி கடேசியா போன ஹஜ்ஜுலதான் மறுபடியும் இந்த கடைக்கு வர சம்மதித்தான். செய்யதுக்கு ஒரே ஒரு தங்கச்சி, உடையநாட்டுல கட்டிக்கொடுத்திருக்கு. மச்சான்காரன் அதிகம் இந்த பக்கம் வர விடமாட்டான். நாளைக்கி கூட வருவாளான்னு தெரியல. அதனால் இந்த மாமியார் மருமகள் மகன் பேத்தி உறவென்பது கிட்டத்தட்ட விதியால் பூட்டப்பட்ட கூண்டுப் பறவைகள் போல வெளியுலகம் பற்றி யோசிக்க அதிகமில்லை. ஒருத்தருக்கு ஒன்றென்றால் அந்த இதயக்கூடே அதிரும்படி சிறகடித்துக் கொள்ளும் என்பதே சரியாகும்.
செய்யது ரோட்டிலேயே சைக்கிளை நிப்பாட்டி கொள்ள, வெண்மேகம் சூடிய நிலவாய் துப்பட்டியை சரிசெய்தவளாய் முத்துப்பொண்ணு இறங்கினாள். மணலுக்கு வந்துவிட்டத்தில் அஸ்மாவுக்கு ஏக குஷி!
“சரி, நீங்களும் பாத்து பொய்ட்டு வாங்க, சோறு உங்க வந்திருவியல்ல”
“அட போங்குறே, படம் முடியவே எட்ற ஆயிரும், பஸ்ஸ புடிச்சி வர்றதுக்குள்ள நேரமாயிரும், நீங்க படுத்துருங்க”
“கொமரனாட்டம் திரிய பாக்குறிய, போங்க போங்க” செல்லமாய் கடிந்தவளாய் அவனை அனுப்பி வைத்தாள்.
ரோட்டுக்கும் மணலுக்கு (பெருநாள் கொல்லைக்கும்) இடையே ஒரு சின்ன ஓடை போல ஆத்து தண்ணி கடல் நோக்கி ஓடிக் கொண்டிருக்கும் இதை ஒட்டியே ஒத்தையடி பாதையோடு கொஞ்ச தூரம் கருவேலங்காடும் உண்டு, அதை கடந்தால் மணல்தான். இந்த பாதையெல்லாம் நல்ல மணலா இருக்கும். பெரும்பாலும் முள்ளு கிடக்காது, இருந்தாலும் பார்த்து நடக்கணும்.
மணலுக்கு வர மூன்று பாதைகள் உண்டு. ஒன்று இது. வடக்கூரு, புதுமனைத் தெரு ஜனங்க ஒரு வழியாகவும், கட்ட டாக்டர் வீட்டுக்கு பக்கத்தில்லுள்ளவர்கள் வண்ணாங்கொல்லைக்கு எதிர்த்த மாதிரி உள்ள வழியாகவும் வருவது வழக்கம். தங்களது வசதிப்படி மாறி வருவதும் உண்டு. வரையறைகள் ஏதுமில்லை.
பெண்களும், குமரிகளும், பிள்ளைகளும் எறும்புபோல உள்ளே போவதும் வருவதுமாய் இருக்கிறார்கள். பொதுவாக பருவம் வந்த ஆண்பிள்ளைகள் யாரும் வருவதில்லை, அனுமதியும் இல்லை. சிறுவர்கள் செய்யும் சேஷ்ட்டைகளுக்கும் அளவிருக்காது.
ஒரு கருவேல மர நிழலில், பாம் பாம் என ஒலியை பெருக்கியும், பெட்டி மூடியை அடித்து அடித்து முடியும் தன்னிருப்பை காட்டிக் கொண்டிருந்தார் வழமையாக தெருவில் சுற்றும் ஐஸ்காரர். தனியே வந்த குழந்தைகள் தங்களது காசையெல்லாம் அவரிடமே கரைத்துக் கொண்டிருந்தார்கள்.
“ம்மா ம்மா ஐஸ் வாங்கித்தா” அஸ்மாவும் ஆரம்பித்துவிட்டாள்.
மாட்டேன்னு சொல்லாமல் ஒன்றை வாங்கி கொடுத்தாள், அவளது சட்டை கொஞ்சம் பாழாகத் தொடங்கியது.
“என்ன உம்மாவும் மகளும் பொண்ணு மாரி ஜொலிக்கிறியளே…”
“என்ன மும்தாஜி, தண்ணியள்ள வந்த மாரி இருக்கு, மூஞ்சியும் ஒட்டிக்கெடக்கு..”
“நோன்பு டீ..”
“என்ன நொம்பா… இது என்ன நோம்பு…”
“நமக்கு நுப்பதும் புடிச்சாதான் நோம்பு மாரி தெரியும்”
“இது என்னடி புதுனமா இருக்கு…!” என்று மூக்கில் விரல் வைத்து நகர்ந்தாள்.
வழக்கம்போல கடைகள் கொள்ளை கொண்டன! கீழ்நிலையிலிருந்து மேல்தட்டு வரை அனைவரும் கடை விரித்திருந்தனர். பெரும்பாலும் பெண்களே. கொஞ்சம் சிறுவர் சிறுமியரும் ஓரிரு ஆண்களும் தங்கள் வீட்டு பெண்களுக்கும், உம்மாமார்களுக்கும், பாட்டியார்களுக்கும், அக்கா-தங்கச்சிமார்களுக்கும் உதவியாய் வியாபாரத்திற்கு துணை நின்றனர். அதே போல எல்லா வீட்டு பெண்களும் பிள்ளைகளும் இங்கும் அங்குமாக கண்டும் உண்டும் திளைக்க ஆரம்பித்திருந்தனர். மணி இப்ப அஞ்சுதானே ஆவுது!
கொதிக்கும் எண்ணெயில் றால் வாடா, வடை, பஞ்சி, முட்டை பஞ்சி, சம்சா, அரிசி முறுக்குன்னு ஒருபுறம் இழுக்க, மறுபுறம் இனிப்பு பூரி, சிலேபி, லாடு (லட்டு), சேவு, பூ(வ)ந்தி,தொதலு, அல்வா என இனிப்பும் மிச்சர், காராசேவு, பக்கடா, காராபூ(வ)ந்தின்னு இன்னொரு புறம் எச்சில் ஊற வைத்தது அஸ்மாவுக்கும் முத்துப்பொண்ணுக்கும். இதில் ப்ராட்டா கடை வேற!
அஸ்மாவுக்கு எத உம்மாகிட்ட கேக்குறதுன்னே தெரியல. எல்லாத்தையும் கண்ணாலேயே விழுங்கி கொண்டிருந்தாள்.
“முத்துப்பொண்ணு… இங்க வா அங்க வா எங்கிட்ட வாங்கு எங்கிட்ட வாங்கு”ன்னு ஆளாளுக்கு இழுத்துக் கொண்டிருக்க, அந்த ஒளிவான பிள்ளையோடு கதீஜா, இவளை நோக்கி கையசைத்தாள்.
கதீஜா இவளை போலவே இன்னொரு வீட்டில் உதவியாய் இருப்பவள். அவர்களது குழந்தையோடு வந்திருக்கிறாள்.
“கைஜாம்மா, நீ எப்ப வந்தா…!”
“நாலு மணிக்கே வந்துட்டங்க்கா…”
“ஸபுரு வல்ல?”
“அவ்வொளுக்கு மேலுக்கு ராஹத்தா இல்லையாம். இது வேற அழுதுகிட்டு இருந்திச்சா, அதா உடுப்பு உடுத்திவிட்டு மணல்ல நில்லு நா சொணங்கி வர்றேன்னு சொன்னாக”
குழந்தையைப் பார்த்தாள். பாலாடைக்கு மேலாடை போட்டது போல பளபளவென இருந்தது. கரும்பச்சை பட்டில் தங்க ஜரிகை பூக்களில் பாவாடை சட்டையில் சந்தன பொம்மை போல இருந்தாள். சிரிக்கவோ அழவோ இல்லை, கம்மென தன் உருண்டை கண்களால் வசீகரித்துக் கொண்டிருந்தாள். அந்த பிள்ளையையும் அஸ்மாவையும் மாறி மாறிப் பார்த்து, கொஞ்சம் மனசுக்குள் பூரித்து கொண்டாள்.
“மூணு வயசு ஆச்சுல்ல”
“ஆமாக்கா, நீ இப்பதான் வர்றியோ…”
“ஆமா மச்சாந்தான் உட்டுட்டு போறாக”
“காலையில கறி வேங்கிகிட்டு போவையில பாத்தே..”
“இன்னைக்கு ராத்தா வூட்டுக்கு போவலயோ..”
“ஆமாடி… சரி வா ஏதாவது வாங்கிட்டு போயி உக்காருவோம்”
கதீஜா தயங்கினாள்.
இவளே ஒர்ரூவாய்க்கு வாடா வாங்கினாள். நால எடுத்து பேப்பர்ல மடிச்சி, சர்புன்னிசா எடுத்து குடுத்திச்சி
சம்சா நாலு வாங்கி கொண்டாள்
“ம்மா, ம்மா முட்ட பஜ்ஜி…” அஸ்மாதான்
“உம்மா அப்புறம் வாங்கித் தர்றேன்”
ஒண்ணும் சொல்லாமல் பின்னாடியே வந்தாள்.
வழியிலே விளையாட்டு ஜமான் கடையை முஜிபு விரித்திருந்தான். பலூனு, ஊக்குரி, கடிகாரம், காத்தாடின்னு மட்டுமில்லாம முட்ட நுரையை விட்டு பிள்ளைகளை தன்பக்கம் வளைத்துக் கொண்டிருந்தான். அஸ்மாவுக்கு ஒரு காத்தாடியும் சின்ன பிள்ளைக்கு பலூனும் வாங்கிக் கொண்டார்கள். கொஞ்சம் தள்ளி வளைவி, கண்ணு மையி, சைடூசி, ரிப்பன், பிளாஸ்டிக் பொருளென பெண்பிள்ளைகளை குறி வைத்து பல்கீசு அமர்ந்துக் கொண்டிருந்தாள். முத்துப்பொண்ணு எல்லாம் போகும்போது வாங்கிக்கலாம்னு கடைகளை கடந்து கூட்டிப் போனாள். உண்மையிலேயே அது சற்று விரிந்த ஒரு பெரிய குட்டை போலதான் இருக்கும். சுற்றி மணல் மேடு. நடுவில் தண்ணியும் பாசியுமா குளம், கறுத்த குளம்! ஒரு நடுத்தரமா ஒரு இடத்தில் அமர்ந்து கொண்டார்கள்.
குளத்திலும், கரையிலும், மேட்டிலும் எங்கு பார்த்தாலும் பிள்ளைகள்தான். சிரிப்பிற்கும் கும்மாளத்திற்கும் சண்டைக்கும் பேச்சுக்கும் பஞ்சமில்லாமல் கிடந்தது. பெரியவர்கள் என்று இவர்கள் இருவர் மட்டுமே. அப்போதுதான் வண்ணாவூட்டு பக்கம் உள்ள பாதை வழியா எங்கிட்டு கெடந்தோ முத்து நாச்சியா மணலுக்குள்ள நுழைந்துக் கொண்டிருந்தாள். அதுவரை இருந்த ஒரு சிரிப்பு, இருவருக்கும் கொஞ்சம் கொஞ்சமாய் மங்க தொடங்கியது. அவளும் இவர்களையே பார்த்து கொண்டே வந்தாள். அங்கும் இங்கும் வேடிக்கை பார்ப்பது போல பாவனை செய்தவர்கள், கிட்ட நெருங்க நெருங்க ஒருத்தி தலையை தாழ்த்தி கொண்டாள், மற்றவள் நேருக்கு நேர் ஒரு வெறுமை பார்வையை வீசினாள். தலையை தாழ்த்தி கொண்டவள் முத்துப்பொண்ணு, மற்றவள் கதீஜா. அருகே கடக்கும் போது பிள்ளைகளையும் இவர்களையும் பார்த்துவிட்டு காறி துப்பிவிட்டு, சிலுப்பி கொண்டு போனாள்.
“இவ்வொ ஏங்க்கா நம்மள இப்புடி பாத்துட்டு போறாக…”
“அவ்வொ அப்டித்தா… விடு!” என்று பெருமூச்சு விட்டுக்கொண்டாலும். முத்து நாச்சியாவை காணும்போதெல்லாம் சில உறங்காத ஞாபகங்கள் அவளை ஒரு கணமாவது கல்லாக உறைய வைத்துவிடும்.
ராத்தாவுடைய ராத்தா (அக்கா) வீட்டில் கொஞ்ச நாளுக்கு உதவிக்கு ஆள் தேவைப்பட்டதால், இவளை அங்கு அனுப்பி வைத்திருந்தார்கள். முத்து நாச்சியா கல்யாணமாகி புதுப்பொண்ணாக வந்து சில மாதங்களே கழிந்திருந்தன. மரைக்கவோட தங்கச்சி மகள் என்பதால் புதியவள் போல அவளை அங்கு நடத்தவில்லை. கிட்டத்தட்ட பெரிய ராத்தா, மருமக கிட்ட பொறுப்புகள் ஒவ்வொன்றையும் ஒப்படைக்க தொடங்கியிருந்தார்.
இவள் அங்கு வேலைக்கு சென்ற முதல் நாள், முத்துப்பொண்ணு-முத்து நாச்சியா என பெயரை மாத்தி மாத்தி பெரிய ராத்தா அழைத்தபடி இருக்கவே… முத்துப்பொண்ணுக்கு அவளையறியாத ஒரு அகங்களிப்பு!
“மச்சி… நம்ம ரெண்டு பேருக்கும் ஒரே மாரி பேருல…”
திருவளையில் தேங்காய் துருவிக்கொண்டிருந்தவள், இன்னும் புதுத்துணி சரசரப்பு போகாத பெரிய ராத்தாவின் மருமகளைப் பார்த்து பெருமித சிரிப்போடு கேட்க,
“முண்டத்துக்கும் முத்துன்னுதான் பேரு வச்சிருக்கோ…”என்று முகத்தை கோணிக்கிட்டு கேட்டத்தில், தலை ஆய்ஞ்சி போட்ட மீனின் கண்ணை போல ஒரு கணம் நிலை குத்தி குனிந்து கொண்டாள்.
“மச்சி…” காய்ந்த குரலில் கொஞ்சமேனும் அவளது பரிவை எதிர்பார்த்தாள்.
“யாருக்கு யாருடி மச்சி, இனிமே மச்சி கிச்சின்னு ஏதாவது கூப்ட்டா நாக்க அறுத்துருவேன் பாத்துக்க! போ போயி தண்ணி தூக்கிக்கிட்டு வாடி!”வென விரட்ட, ஒரக்காணத்துக்கு கிளம்பினாள்.
பாரம்பரியம் மிக்க அந்த குடும்பத்தில் இப்படி ஒரு அலட்டலை அவள் அதுவரை எதிர்கொண்டதில்லை.
பெரிய ராத்தா மகன்களை நாநா என்று அழைத்தே பழகியவள் என்பதால், ஒரு உரிமையில் மச்சி என உறவாட அப்போதுதான் எத்தனித்தாள். எல்லாம் நொறுங்கிவிட்டது. பெரிய ராத்தா முத்து நாச்சியா, முத்துப்பொண்ணுன்னு மாறி மாறி, அதுவும் சரிசமமா கூப்பிட்டு புழங்கி கொண்டிருந்தது, மருமகளுக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. அதனால் இந்த வினை!
ஈனாக்கானா கொல்லைக்கு எதிர்த்த மாதிரி, மும்காசி மரைக்கா வூட்ட அடுத்து இருந்த கருவக்காட்டை விறகுக்கு வெட்டவிட்டுருந்தார்கள். கழிச்சி கிடந்த கம்புகளைகளையும் சுள்ளிகளையும் பெண்கள் தங்களது வீட்டுக்கு உபயோகப்படுத்திக் கொள்ள ஆங்காங்கே உட்கார்ந்து வெட்டிக் கொண்டிருந்தார்கள். முத்துப் பொண்ணும் போயிருந்தாள். நல்ல வெய்யில் வேற!
“முத்து பொண்ணூ…!” ரோட்டிலிருந்து சித்திரைக்கனி கூப்பிடுவதுக் கேட்டது
“என்ன சித்ரக்கனி…!”
“பெரிய ராத்தா வூட்ல ஒன்ன கூப்டுராவோ…!”
வெட்டிய சுள்ளிகளை ஓரமாக கட்டி வைத்துவிட்டு, கொஞ்சம் அருகில் உட்கார்ந்து வெட்டிக் கொண்டிருந்த ஜலீலாவிடம் “எங்கும்மா வந்திச்சின்னா வூட்டுக்கு கொண்டு போக சொல்லு”ன்னு அவளுடைய பதிலை ஏதும் எதிர்பார்க்காமல் விறுவிறுன்னு ஓட்டமும் நடையுமா பெரிய ராத்தா வூட்டுக்கு பக்கம் நடந்தாள்.
இவளை எதிர்பார்த்து வாசலிலேயே முத்து நாச்சியா நின்றுகொண்டிருந்தாள். வாசலில் நிறைய செருப்பு வேற கிடந்தது. விருந்தாளிக யாரும் வந்திருக்கணும்.
“காலேலேந்து எங்கடி பொய்ட்டே, இந்தா பிச்சத்தம்பி கடையில மூணு பவுண்டா வெரசா வாங்கிகிட்டு வா!”
அவளுடைய அதட்டலில், நா வறண்டு வந்தவள், மீண்டும் அதே வறட்சியோடு கடைக்கு ஓடினாள்.
அம்மாப்பட்டினத்திலிருந்து முத்து நாச்சியாவோட சொந்தகாரங்க யாரோ ஆறு பேரு வந்திருந்தாங்க. மூன்று பெண்கள், இரண்டு பிள்ளைகள் மற்றும் ஒரு வயசான ஆளு. ஏதும் கூப்பாடா இருக்கும் என நினைத்துக் கொண்டு ஆறு குவளைகளில் ஊற்றினாள்.
பிள்ளைகள் பவுண்டாவை கண்டதும் குதூகளம் பூண்டார்கள். அந்த மரைக்காவுக்கு இனிப்பு நீராம்.
“மாமா, சீனி போடாம தேத்தண்ணி கொண்டு வரவா…” முத்து நாச்சியாதான் கேட்டாள்
“இந்த வெய்யில்ல எங்கம்மா தேத்தண்ணி, தண்ணி குடு போதும்!”
முத்து பொண்ணை கொண்டு வந்து கொடுக்க சைகை காட்டினாள்.
இனிப்பு நீர்க்காரர் எப்படி பவுண்டோ குடிக்க முடியலையோ, அதுபோலவே இந்த வேலைக்காரியால் குடம் நிறைய இருந்தும், தவிச்ச வாயிக்கு ஒரு பொட்டு தண்ணியை கூட குடிக்க முடியவில்லை!
ஒரு சொம்பு நிறைய அள்ளி வந்து கொடுத்தாள். அந்த மரைக்கா குடிக்க குடிக்க இவளுக்கு நாக்கு சுரந்தது.
நல்லா குடிச்சிட்டு, கொஞ்சூண்டு மிச்சம் வச்சிருந்தார்.
“சோறுண்டுட்டு போவலாம் மாமி… உங்களுக்கு புடிச்ச செங்கனி மீனுதான் வாங்கிருக்கு…”
“இல்ல முத்து நாச்சியா நேரஞ்செண்டுருச்சி… மச்சி வூட்டுக்கு வர்றோம்னு சொல்லிட்டோம். அப்ப வாரோம்…”
கிளம்பிப் போனார்கள்.
மீனாய உக்கார வேண்டுமென, அந்த மரைக்கா மிச்சம் வச்சிட்டு போன ரெண்டு வா தண்ணியை எடுத்து குடித்தாள் முத்துப்பொண்ணு. தாகம் தணியவில்லை. அடுப்படிக்கு சென்று அள்ளி குடிக்க பயம். முத்து நாச்சியா நின்று கொண்டிருந்தாள்.
“பவுண்டா குடிக்கிறியளா” மிச்சமிருந்த ஒரு குவளையை காட்டி மாமியாரிடம் கேட்டாள்.
“நீங்களுவளே குடிங்களுவொ”
முத்து நாச்சியா குடிக்கத் தொடங்க, இவள் மீனாய வந்துவிட்டாள்.
ஆய்ஞ்ச துண்டுகளை பானச் சட்டியில் போட்டு உப்பு மஞ்ச சேர்த்து நல்லா உரசி, கழுவி, அடுப்படிக்கு கொண்டு வந்தாள். முத்து நாச்சியா இல்லை. அவள் குடிச்ச குவளை மட்டும் அங்கேயே இருந்தது. கழுவி வைக்க எடுக்க போனவள், பாதிக்கு மேல மிச்சம் இருந்ததை பார்த்துட்டு, தனக்கும் தாகமாக இருக்கவே படக்கென குடித்துவிட்டாள்.
“எச்சி பக்கிரிசா, நா இல்லாத சமயமா பாத்து பவுண்டாவ எடுத்து அமுக்குறியளோ!”
திடுக்கிட்டவளாய் நடுநடுங்கி போனாள், சட்டென வார்த்தையும் வரவில்லை.
“ஒன்ன யாருடி குடிக்க சொன்னா!”
“இல்ல குடிச்சிட்டு மிச்சம் வச்சது வீணா போகுயிருமேன்னுதான்…” அவளால் தொடர முடியவில்லை.
“ஓஹோ! நா எந்திரிச்சி வந்திட்டேன்னா எம் மாப்புள்ள கூட நீ போயி படுத்துருவியோ!”
“முத்து நாச்சியா என்ன பேசுறா!” மாமியாரின் அதட்டலில் சற்று மிரண்டு போனாள். இவளோ நிலைத் தடுமாறி உடைந்து “ம்மா…!”ன்னு கதவை பிடித்துக் கொண்டு சன்னமா அழ ஆரம்பித்தாள்.
“என்ன இது! நம்ம குடும்பத்துக்கெல்லாம் பழக்கமில்லாத நாத்த பேச்சல்லாம் பேசுறா! இன்னொரு வாட்டி இது போல பாத்தேன்…” அதுக்கு மேல அதட்டி பேச அவருடைய சுபாவத்திற்கும் ஒத்து வரலை!
அவ்வப்போது தன் மருமகள் முத்துப்பொண்ணை நடத்தும் விதத்தை கவனிக்காமல் இல்லை. வீட்டின் கௌரவம் கருதி சத்தமும் போட முடியவில்லை. முத்துப்பொண்ணை தேற்றி வீட்டுக்கு போகும்படி சொன்னாள். சாயங்காலம் தன் தங்கச்சி வீட்டுக்கு போயி, இனி முத்துபொண்ணு அங்க வர வேணாம், எப்பவும் போல நீயே பாத்துக்கன்னு கொஞ்சம் பணத்தையும் திணித்துவிட்டு சென்றுவிட்டார். அதுக்கு அப்புறம் அங்கு செல்லவில்லை என்பதை விட, இப்படி வேலை செய்வதும் பிடிக்கலை. எப்படியாவது இந்த வாழ்க்கையிலிருந்து மீண்டுவிட வேண்டுமேண்டுமென்றும் ஊர் உலகத்தை போல தானும் மதிப்போடு வாழ வேண்டுமெனவும் அல்லாஹ்விடம் துஆ கேட்டபடியே இருந்தாள். ஆனால் முத்து நாச்சியாவோ எப்படியோ அவர்கள் வட்டத்திலிருந்து இவளை விரட்ட வேண்டுமென்றே திரிந்துக் கொண்டிருந்தாள். சின்ன மாமியாரிடமும், அவரின் மகள்களிடமும் ஏதேதோ சொல்லி பார்த்தாள். ஏதும் பலிக்கவில்லை.
“அவ்வொள கண்டதும் நீ ஏங்க்கா ஒரு மாதிரி ஆயிட்டா…”
முத்துப்பொண்ணு ஒரு வழியாய் நிகழ்காலத்திற்கு வந்தாள்.
பெருமூச்சு விட்டபடி “ஒண்ணுல்லடி தங்கச்சி”
“அக்கா… கொண்ட கல்ல வேணுமா” ராஜா முகம்மது நின்று கொண்டிருந்தான்
“ராஜாமுதா… என்னடா எங்கடா இருக்கா…”
“வலங்கிமான்ல அம்மாடத்தாளு கடையில இருக்கங்க்கா”
“அப்புறோ யா இது வேற செய்றா… நல்லாருக்கியா!”
“ம், உம்மாதான் வித்துட்டு வர சொன்னிச்சி”
அவனுக்காக ஒரு சுருளை வாங்கிக்கொண்டாள்.
“கைஜா… நீ ஏண்டி அவ்வொளக் கண்டு தெகச்சா!”
“அவ்வொ அப்பப்ப ஸபுரு ராத்தாவ பத்தி எங்கிட்ட சாரிச்சிட்டே இருப்பாக, அவ வூட்டுல என்ன பண்ணுவா… யாரு யாரரெல்லாம் அவள பாக்க வர்றாக, மாப்புள்ளகாரன் மாசத்துக்கு எத்தன கடுதாசி போடறானு ஒரே இம்மிசியா இருக்கும்க்கா”
சுண்டலைப் பிரித்துக் கொண்டே, “நீ ஏதும் சொல்லுவியோ…”
“நீ வேற அங்கிட்டு போக்கா. அவ்வொ முழிய பாத்தாவே பயமா இருக்கும். அதுவும் அவ்வொ புருவொ இருக்கே கொள்ள கோஸ்டி ஆளு மாரி இருக்கும். நா வாயே தொறக்க மாட்டே. ஒடனே கோவம் வந்து திட்ட ஆரம்பிச்சிருவாக. இதுனாலயே அவ்வொ வாட்டையில நா போறதில்ல தெரியுமா…”
“ம்ம், தமயன் குடும்பத்து மேல அவ்வளவு அக்கற”ன்னு விரக்தியாய் சிரித்தாள்.
ஸபுரு மேல பிரியமெல்லாம் இல்ல. ஸபுரு மாப்பிள்ளை சாவண்ணா, முத்து நாச்சியாவுக்கு ஒண்ணு விட்ட தம்பி. இப்போது ஸபுரு இருப்பது, கொஞ்சம் கொஞ்சமாக பாழடைந்துக் கொண்டிருக்கும் முத்து நாச்சியாவுடைய பூர்வீக வீட்டில்தான். பங்காளிகள் சொத்து பிரிக்கும் போது அந்த பிரம்மாண்டமான வீடு சாவண்ணாவுடைய வாப்பாவிற்கு சென்றுவிட்டது. அது முத்து நாச்சியாவுக்கு அப்போதிலிருந்தே வயிற்றெரிச்சல். ஆனால் இவள் இன்னும் வயிற்றெரியும்படியெல்லாம் அவர்கள் இப்போது வாழவில்லை. எல்லாம் ஸபுரின் மாமனார் காலத்தோடு முடிந்துவிட்டது. மந்தியப்பா ரோடு, ஓச்சோடின்னு கெடந்த அத்தனை நிலம் புலமும் ஒண்ணு ஒண்ணா போச்சி! செல்லப்பிள்ளையாய் சாவண்ணா தொழில் எனும் பெயரில் எல்லாவற்றையும் கரைத்துவிட்டிருந்தான். கடைசியா வம்புக்கொல்லையில கிடந்த தொப்பை ஒத்திக்கு கொடுத்துதிட்டுதான் இப்ப சவுதிக்கு போயிருக்கான். ஸபுரோட நகையும் இப்ப பேங்க்லயும் தட்டான் வூட்லயும் கெடக்கு. எப்ப விடிவு வருமோ. அல்லாஹ்வுக்குதான் தெரியும். இவ்வளவு சிரமத்துல இருந்தும், தமயன் மேல உள்ள வெறுப்பு இன்னும் முத்து நாச்சியாவுக்கு தீரால. தமயன் என்ன தமயன், அவளுக்கு பிடிக்காத யாரும் நல்லா இருந்திட கூடாது. அவர்கள் நட்டப்படும்போது இவளுக்கு சந்தோசம் அப்படி பொங்கும்!
அஸ்மாவும் சின்னப்பிள்ளையும் பதுவுசா விளையாடி கொண்டிருந்தனர். மற்ற பிள்ளைகள் அப்படியில்லை, பெரும்பாலும் எல்லாம் வாலு. மேட்டிலேர்ந்து உருண்டு தண்ணிய தொடுறது, குளத்துல குதிச்சி சேத்த கலக்கிறது, மீனு புடிக்கிறேன்னு தண்ணிய வேகமா கரை பக்கம் காலால் தள்ளி மீன்குஞ்சுகள் துள்ளுவதை ரசிப்பதும் மிதிப்பதுமென அந்த இடமே ரகளைப்பட்டுக் கொண்டிருந்தது.
பிள்ளைகளுக்கு கொண்டை கடலை தீத்த எத்தனித்த பொது சரக்குன்னு பின்னாடிலேர்ந்து வாண்டு ரெண்டு சண்டை போட்டுக் கொண்டு இவர்கள் மேல விழ, கடலை எல்லாம் மண்ணுக்கு இரையானது மட்டுமல்ல, முத்துப்பொண்ணு கையெல்லாம் புழுதியாய் போனது.
“அட கிராம்ல பொறந்தவய்ங்களா… என்ன வரத்துல வர்றாய்ங்க… கழிச்சல்ல போறவனுவொ…”
பதறியபடி பிள்ளைகளைப் பார்த்தாள். நல்ல வேளை ஒண்ணும் ஆகலை. கதீஜாவிடம் பிள்ளைகளை விட்டுவிட்டு கைகளை கழுவ குளத்தை சென்றாள். அஸ்மாவும் பின்னாடியே ஓட, கதீஜா அவளை அதட்டி பிடிக்க சென்றாள். அங்க மூணு பொடிப்பசங்க வட்டமா நின்று, சேற்று தண்ணியை மேல அடிச்சி விளையாடி கொண்டிருந்தபோது, அது கதீஜா மேலேயும் சின்னப்புள்ள மேலேயும் பட்டுவிட்டது!
“அல்லாஹ்வே! அடேய் படையில போறவனுவளா… யாண்டா இந்த அநியாயம் பண்றியளுவோ… அடேய் நீ ராவியத்து மவன்தானே… இருடா உங்கும்மாவ வர சொல்றே…” என்று எல்லோரையும் அதட்டி விரட்டினாள். ஒரு பலனும் இல்லை!
கதீஜாவிடமிருந்து பிள்ளையை வாங்கினாள், இப்போதும் அழாமல் பொம்மையாட்டம் இவளேயே உற்றுப்பார்த்தது! இந்த பெரிய எடத்து புள்ளைங்க மட்டும் எப்படித்தான் இவ்வளவு அழகா இருக்குதுவளோ… இல்ல நமக்குத்தான் அப்படி தோணுதோன்னு நெனச்சப்படி “ராஜாத்தி…” என கொஞ்சினாள். ஆனால் கதீஜாவுக்கோ பயம் தொத்திக் கொண்டது. பொக்குன்னு தன்னை சுத்தப்படுத்திக் கொண்டு, பிள்ளையை வாங்கி, துடைக்க துவங்கினாள். சட்டையெல்லாம் சேத்து தண்ணி!
“சட்டய கெழட்டி கசக்குடி…”
அவசரம் அவசரமாக கதீஜா பிள்ளையின் சட்டையை கழற்றி, கலங்காத பக்கம் சென்று நன்றாக கசக்கினாள்.
சட்டை இல்லாமல் பிள்ளை இருந்ததில் கதீஜா அதிகம் பதற்றமானாள். யாரும் ஸபுரு ராத்தாவிடம் கண்டு சொல்லிட்டால், அவளே வந்தும்விட்டால்? என்ற பயம்தான். ஈர சட்டையை போட்டால் தடுமல் பிடிச்சிக்கிருமோங்கிற கவலை வேற! கொஞ்சம் காயட்டும் என விரித்து பிடித்து நின்றபோதுதான் கவனித்தாள்…
பிள்ளைக் கழுத்துல கிடந்த சங்கிலியை காணவில்லை!
“அல்லாஹ்வே… நா செய்யுவே…!” என்ற கதறலில் முத்துப்பொண்ணு ஆடிப்போனாள்!
“என்னடி கத்துறா… என்னாச்சுன்னு சொல்லுவே…”
“புள்ள கழுத்துல கெடந்த சங்கிலிய காணாக்கா…” முத்துப்பொண்ணு அஸ்மா கழுத்தைப் பார்த்தாள். கிடந்தது.
“எங்கடி விட்டா…”
” செத்த முந்தி கூட கண்டே க்கா…” ஓ வென அழுதாள்!
அவள் சட்டை கழட்டும்போது விழுந்திருக்க வேண்டுமென முத்துப்பொண்ணுக்கு பிடிபட்டது.
அவர்கள் இருந்த இடம், பிள்ளைகள் விளையாடிய இடம், கரை என எல்லா இடத்தையும் சலித்து தேடினாள். பலனில்லை. அங்கு விளையாண்டு கொண்டிருந்த பிள்ளைகளிடமும் சொல்லி தேடி சொன்னாள். கூடுமான வரையில் எல்லா பிள்ளைகளுமே தேட ஆரம்பித்தன. இந்த மணலில் விழுந்த சங்கிலியைத் தேடுவது, கடலில் விழுந்த பொருளை தேடுவது போல இருந்தது. ஒருவேளை தண்ணிக்குள்ளே ஏதும் விழுந்திருமோ…!
முட்டி இறங்கும் வரை தேடினாள், மேலும் இறங்க கூச்சமாக இருந்தது. அதற்குள் வாண்டுகள் மூலமாக செய்தி மணலெங்கும் பரவத் தொடங்கியது.
கதீஜா பிள்ளைக்கு சட்டையை அழுது கொண்டே மாட்டிவிட்டாள். இவ்வளவு கூச்சலிலும் பிள்ளை அழவேயில்லை! அஸ்மா முழித்துக்கொண்டு நின்றாள்.
“போக்கா எல்லா ஒன்னாலதான், இங்க யாரும் வருவாகளா… யா இங்கிட்டு கூட்டிக்கிட்டு வந்தா…!”
அதானே ஏன் இங்கிட்டு வந்தேன் என முத்துப்பொண்ணுக்கும் புரியவில்லை. பதிலில்லாமல் பாவமாக நின்றாள்.
“ஸபுரு ராத்தாட்ட நா என்ன சொல்லுவே…”
“என்னடி நாடகம் போட்டுட்டு இருக்கிய!” – முத்து நாச்சியாவேதான்!
இருவரும் மேலும் அதிர்ச்சியானார்கள். இப்போ என்ன நடக்க போவுதோங்கிற பயம், பீதி…
“ஒளிக்கலாம்னு இங்குனேயே நிக்குறியளோ… வாங்கடி களவாணி முண்டங்களா…”ன்னு கதீஜாவின் கையை இழுத்தாள். இப்போது சின்னப்பிள்ளையும் அழுகையில் சேர்ந்துகொண்டது.
“சும்மா நீங்களே கட்டிவிடாதீக…” என்று முத்துப்பொண்ணு கோபமானாள்.
“ஏண்டி நா பொய் சொல்றன்னா… புள்ளயோட சங்கிலி எங்கடி, காட்டுடி பாப்போம்! ஸபுர ஏமாத்தலாம் என்ன முடியாதுடி பக்கிர்சா முண்டங்களா…”
கூட்டம் கூடிவிட்டது! முத்து நாச்சியாவைப் பற்றி தெரிந்தாலும், இதுக ஏன் இங்கன வந்ததுக… என்ன கேள்வியும் எழுந்தது.
“நா வரும்போது, இவளுவ குசுகுசுன்னு ஏதோ பேசிக்கிட்டு இருந்தாளுவோ… என்ன கண்டதும் தெகச்ச மாதிரி உக்காந்து இருந்தாளுவோ… இப்பதான சேதி தெரியுது கூட்டு களவாணிகள பத்தி… தே … முண்டங்களா எந் தமய வூட்லேயே களவாங்க துணிஞ்சிட் டியளா …”
“ராத்தா எதா இருந்தாலும் கொஞ்சம் மரியாதயா கேளு…. நீ பேசுறது சரியில்ல ஆமா”ன்னு வந்த ராவுத்தரையும்
“மம்மு ராவுத்தரு, நீ ஓ சோலிய பாத்துக்கிட்டு போ… இவளுவள பத்தி ஒனக்கு தெரியாது! இவ (முத்துப்பொண்ணைக் காட்டி) எங்கூட்டுல இருக்கும் போது என்னென்ன களவாண்டான்னு எனக்குதான தெரியும்… ஆமா இவளுக்காக நீ யா ஏத்துக்கிட்டு வாரா…”ன்னு கேட்க தொடங்க, அடுத்து என்ன பேசுவாளோங்கிற அச்சத்தில் அவன் பதறி விலகி கொண்டான்.
சுத்தி நின்ற பெண்கள் எல்லோருமே பாவமாய் வேடிக்கை பார்க்க, “நீங்க யான் இப்புடி குதிக்கிறிய ஸபுரு ராத்தா கிட்ட நா பேசிக்கிறே… கேக்கலைன்னா ஏம்புள்ள கழுத்துல கெடக்குறத நா கழட்டி குடுக்கிறே…”
“வாடி திருட்டு களவாணி… இதுதா கதயோ… கையும் களவுமா பிடிச்சதும் நடிக்கிறியளோ… எந் தமயன் கஸ்டப்பட்டு சம்பாரிச்சத களவாண்டது மட்டுல்லாம, பக்கிர்சா வேச ஓம்முட்டுன்னு வேற சொல்லிக்கிருவியோ…!”
“பாத்து பேசுங்க, இது எம் மாப்புள்ள ஒழச்சு சம்பாரிச்ச காசுல வாங்குனதாக்கும்…”
“பாத்தியளா இந்த கதய … இவ கழுத்து காதெல்லாம் கவரிங்க போட்டுக்கிட்டு… இது மட்டும் இவ மாப்புள்ள வாங்கி குடுத்த பவுனுன்னு பவுசி பேசுவாளாம்!”
“அது பவுனுதா… யா நாங்கல்லாம் பவுனுல போட கூடாதோ…” அவளுக்கும் வேகம் அதிகரித்தது!
“போடலாண்டி அதுக்குன்னு ஒரு தராதரம் வேணும், இரு பாருக் மாமாட்ட சேதி கேக்குறே… ஓ மாப்புள எப்புடி வாங்குனான்னு… சம்பாரிச்ச காசுல வாங்குனானா இல்ல கடையில களவாண்டான்னு!”
“எம் மாப்பிள்ளய பத்தி ஏதும் பேசினியலாக்கும்…”
“என்னடி பண்ணுவா… ஓங்கிட்ட என்னடி பேச்சி… இவதான புள்ளய கூட்டிக்கிட்டு வந்தா… ” இப்போது கதீஜா பக்கம் திரும்பினாள். அவளுக்கு குலை நடுங்கியது!
“சொல்லுடி இந்த சங்கிலி.. புள்ளையோடுதான…”
“இல்ல ராத்தா அது அவ்வூட்டுதான்” திக்கித்திக்கி சொன்னாள்
“இன்னும் உங்க நாடகம் முடியலயா…” மேலும் வெறி கொண்டாள். கூட்டம் தடுக்க வந்தாலும் முத்து நாச்சியா ஓய்வது போல தெரியவில்லை!
“பொறவு எங்கடி ஒளிச்சி வச்சிருக்கா… எடுடி எடுடி..”ன்னு அவளை தர தரவென இழுத்து சென்றாள்.
முத்துப்பொண்ணு பிள்ளையையும் தூக்கிக்கொண்டு அஸ்மாவையும் கூட்டிக்கொண்டு பின்னாலேயே ஓடினாள்.
முத்து நாச்சியாவுக்கு என்னாச்சுன்னு கூட்டமே தெகைச்சு நின்னது. நின்ற ஆம்பள பொம்பளைக்கும் அத்தனை கோபம், முகம் சுளிப்பு. ஆனால் அவளின் பேயாட்டம் இன்னும் முடிந்து விடவில்லை! மோசமாக தொடங்கியது.
எல்லோரும் பார்க்க, “பாவாடை தாவணியை உருவி காட்டுடி… முடிஞ்சி எங்கேயாவது வச்சிருப்பா…!” ன்னு சொன்னதுதான் போதும்
“மச்சி என்ன வேல பண்ணிக்கிட்டு இருக்கா…அல்லாஹ்வே…!”ன்னு ஒரு வெடிக்கிற சத்தம் கேட்டது. ஸபுருக்கும் விசயம் தெரிந்து வந்துவிட்டாள்.
“இப்பதான் வர்றியாக்கும்…” அவளை கோபமாக பார்த்தாலும் அவள் உடுத்தி வந்த மங்கிய பழைய துப்பட்டி உள்ளூர சந்தோசத்தையே தந்தது.
“ஓ வூட்டு சிறுக்கி பாத்துருக்க வேலைய பாத்தியா…”
“ஓ தொண்டதான் கைஜம்பு கடை வரையும் கேக்குதே…”
“ஒனக்கு புத்தி இருக்கா… இவளோடயா புள்ளய அனுப்பி வப்பா… கொஞ்சம் கூட கூறு வாறு இல்ல! நம்ம வூட்டு புள்ள யாரு கூட சேருறதுன்னு ஒரு எண வேணா… நீ பாட்டுக்கு புள்ளய இவளுவ கிட்ட வுட்டுட்டு எவன் வர்றான்னு போறான்னு வாசல்ல நின்னுக்கிட்டு இருந்துருப்பா… இப்ப பவுனு போச்சா… எந் தமயன் ஊருல இருந்தா இந்த அலங்கோலம்லாம் நடக்குமா…”
“மச்சி பாத்து பேசு…”
“நிறுத்து நிறுத்து ஓ சேதிலாம் காதுக்கு எட்டிக்கிட்டுதான் இருக்கு…” எல்லோரின் கண்ணுக்கும் இப்போது ரட்சியாவே தெரிந்தாள் என்பதை விட முழுவதுமாக தனது பேரையும், வீட்டின் பேரையும் சேர்த்து கெடுத்துக் கொண்டிருந்தாள்.
“வேணா மச்சி… ஒன்ன மாரிலாம் எனக்கு பேச வராது!” தொண்டை அடைத்து, அழுகை முட்டிக்கொண்டு வந்தது
“பவுனு போச்சில்ல…” நக்கலாய் கேட்டாள்.
“அது பவுனே இல்ல!” வந்துக்கொண்டிருந்த விம்மலை அடக்கியவாறு, பிள்ளையை கூட்டிட்டு விறுவிறுன்னு திரும்பி நடக்க, ‘ஓ… அப்படியா சங்கதி அப்ப பொட்டு பவுனு இல்ல…!’ உலை வச்ச பானையில் எழுந்து அடங்கும் மூடி போல் சிரிப்பு முத்து நாச்சியாவுக்கு அடி வயிற்றிலிருந்து தொண்டை வரை எழுந்து எழுந்து அடங்கியது. அவள் சொன்ன வார்த்தை, முழுவதுமாக அவளை சந்தோசப்படுத்தியிருந்தது.
சட்டென சுதாரித்தவளாய் முத்துபொண்ணைப் பார்த்தாள்…
பேய் போல் ஒரு பவுண்டவை அவளே உடைத்து மடக் மடக்கென குடித்துக் கொண்டிருந்தாள்.

**

நன்றி : இத்ரீஸ் யாக்கூப்

https://www.facebook.com/idris.ghani.10