உமர் கய்யாமின் ருபாயியத்திலிருந்து… – ஆசை

‘எவ்வளவு பெரிய இழப்பு!‘ என்று சொன்ன நண்பர் ஆசையிடமிருந்து முதல் புத்தாண்டு வாழ்த்து வந்தது. நன்றிகளுடன் பதிவிடுகிறேன். அடுத்த வாழ்த்து நம் ஹனீபாக்காவிடமிருந்து – ‘சுரபி’ எழுதிய கவிதையுடன்.  அதை  நாளை பதிவிடலாம் என்று ஆசை…
***

நண்பர்கள் அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்,

புத்தாண்டை முன்னிட்டு ஒமர் கய்யாமின் ருபாயியத்திலிருந்து உங்களுக்காகச் சில கவிதைகள்:

 

மகிழ்ச்சி என்ற பெயர் மட்டுமே எஞ்சியிருக்கும் இத்தருணத்தில்,
எஞ்சியதெல்லாம் முதிர்ந்த தோழர்கள் அல்ல, காட்டமான மது மட்டுமே,
மகிழ்ச்சியான கரம் மதுக் குடுவையைப் பற்றியபடியே இருக்கட்டும்-
இந்தக் கரத்துக்கு மதுக் குடுவை மட்டுமே எஞ்சியிருக்கும் இன்று.

 
இன்றிரவு ஒரு பெருங்குடுவை மதுவை ஏற்பாடு செய்துகொள்வேன்,
கோப்பைகள் இரண்டு நிரப்பி அமர்ந்துகொள்வேன் தயாராய்;
காரணஅறிவையும் மதத்தையும் ‌முற்றிலும் விலக்கிவைப்பேன் முதலில்
பிறகு மனைவியாக்கிக்கொள்வேன் திராட்சையின் மகளை.

—–

இமைப்பொழுதில் கடக்கிறது வருடத்தின் வண்டித் தொடர்,
சட்டென்று பற்றிக்கொள் குதூகலமான தருணத்தை:
தம்பி, நண்பர்களுக்கு நாளை வரும் துயரை எண்ணி ஏன் வருந்துகிறாய்?
கோப்பையைக் கொண்டுவா- கடந்துகொண்டிருக்கிறது இரவு.

—–

வசந்தத்தின் வருகையும் குளிர்காலத்தின் புறப்பாடும்
புரட்டுகின்றன நம் வாழ்க்கைப் புத்தகத்தின் பக்கங்களை:
மதுவை அருந்து, கண்ணீரையல்ல- அந்த மகான் சொல்லியிருக்கிறார்,
‘துயரத்தின் விஷத்துக்கு மதுதான் விஷமுறி’ என்று.

அன்புடன்,

ஆசை (Asaithambi Desigamani) | E-Mail :  asaidp@gmail.com

எவ்வளவு பெரிய இழப்பு! – ஆசை

மவுலானா ரூமி (ரஹ்) அவர்களின் ருபாயியாத் பாரசீக கவிதைகளை,  “ரகசிய ரோஜா” என்ற பெயரில் பேரா. ரமீஸ் பிலாலி  தமிழில் தந்திருப்பதாக சகோதரர் நூருல்அமீனின் வலைப்பதிவிலிருந்து   அறிந்தேன். ஆசை வந்துவிட்டது, ஆசை பற்றி எழுத!

உமர்கய்யாமின் ‘ருபாயியத்’ஐ ஆங்கிலத்திலிருந்து நேரடியாக மொழிபெயர்த்துவருகிறார் கவிஞர் ‘ஆசை’. ருபாய் என்பதன் பன்மை ருபாயியாத் (நமக்கு ரூபாய்தான் தெரியும்! – தாஜ்).  ‘தமிழில் வெண்பா, விருத்தம், சிந்து என்று இருப்பதுபோல ருபாயும் பாரஸீகப் பாவினங்களுள் ஒன்று. பல பாரஸீகக் கவிஞர்களும், உர்து கவிஞர்களும் ருபாயியாத்துப் பாடியிருக்கின்றனர். நாலடிகளான ருபாயில் முதல் இரண்டடிகளினுடையவும் கடைசி அடியினுடையவுமான கடை எதுகை ஒன்றுபோல் இணையவேண்டும். மூன்றாம் அடி சாதாரணமாகவும் இருக்கலாம்; மற்ற அடிகளின் கடை எதுகைபோலவும் இருக்கலாம்’ – ஆர்.பி.எம். கனி ( நூல் : பாரஸீகப் பெருங்கவிஞர்கள்).

இந்த ‘ஆசை’க்கு ஒரு ஆசை. இதென்ன ‘மேகத்துக்கு தாகம்’ என்பதுபோல என்கிறீர்களா? நான் என்ன செய்வது, ஆசைத்தம்பி என்கிற அழகான பெயரை ‘ஆசை’ என்று சுருக்கியிருக்கிறார் மனுசன். ஆசையை சுருக்கலாமோ? அரபியும் பார்ஸியும் கற்றுக்கொள்ள வேண்டுமென்று இப்போது பேராசை வந்துவிட்டது. ஆள் மன்னார்குடிக்காரர் (உமர்கய்யாம் அல்ல!). தஞ்சாவூர், திருவாரூர், நாகை மாவட்டங்களுக்குள் ‘மேற்கண்ட மொழி இலக்கியங்களில் புலமையுள்ளவர்கள் யாராவது இருந்தால் எனக்குத் தகவல் கொடுத்து உதவுங்கள்’ என்று ஆசையோடு என்னைக் கேட்கிறார். அலாதியான பெயர்கள் தாங்கிய அரபி மத்றஸாக்களை பரிந்துரைக்கலாம். ஆனால், சகோதர மதத்தவரை அங்கே சேர்த்துக்கொள்வார்களா?  அவர்களுக்குத்தான் முன்னுரிமை கொடுக்கவேண்டும் என்று ஹதீஸே இருக்கிறதாம். எண் தெரியவில்லை, ஆனால் நல்ல விஷயங்களை நம் ரசூல் (ஸல்) சொல்லாமலிருந்ததில்லை.

ஒரு கவிதை :

‘நம் தலைவர்கள்
தொண்டர்களுக்கு ‘ரசூல்’ஐ காட்டுகிறார்கள்
தான் மட்டும்
வசூலில் வாழ்கிறார்கள்!’

வேறு யார் , நம் ஜபருல்லா நானா எழுதியதுதான். அது இருக்கட்டும், விஷயத்திற்கு வருகிறேன். ‘ஆசை’யை மதறஸாக்களில் சேர்த்துக் கொள்வார்களோ? சந்தேகம்தான். அரபிமொழியை பாடமாக சொல்லிக்கொடுக்கும் கல்லூரிகளில் சேரச்சொல்லலாமா?ஆசைக்கோ வயசு அதிகமாயிற்றே… என்ன செய்யலாம்? தெரியவில்லை. விபரமறிந்தவர்கள் ஆசையை தொடர்புகொள்ளுங்கள். ‘அத்தனைக்கும் ஆசைப்படும்’ ஆசையின் மின்னஞ்சல் முகவரி : asaidp@gmail.com

உமர்கய்யாமின் ‘ருபாயியத்’ மொழிபெயர்ப்பு பற்றி நான் முன்பு எழுதியதை எப்படியோ கண்டுபிடித்து, அந்த நேரடியான மொழிபெயர்ப்பு கிடைக்குமா என்று ஆவலுடன் விசாரித்து , ‘அது கிடைக்க வாய்ப்பில்லையே..’ என்று நான் சொன்னதும் ‘எவ்வளவு பெரிய இழப்பு!’ என்று ஆசை அதிர்ந்தது என்னையும் அதிரவைத்துவிட்டது. நண்பர் நாகூர்ரூமியை தொடர்புகொள்ளச் சொன்னேன். ”உங்களுக்குத் தெரிந்த விபரங்கள்கூட எனக்குத் தெரியாது என்பதுதான் உண்மை!’ என்று சொல்லிவிட்டாராம் பேராசிரியர்.

எவ்வளவு நாம் இழந்திருக்கிறோம்!

ஒரு விஷயம், தஞ்சை பெரியகோயில் சம்பந்தமான நண்பர் ஜாகீர்ராஜாவின் கட்டுரையில் (நன்றி : கீற்று) ஒரு பறவையைப் பற்றி இப்படி வருகிறது : ‘பெரிய கோயிலில் வரையப்பட்டுள்ள அபூர்வமான ஓவியங்கள் குறித்தும் பேச வேண்டியிருக்கிறது. 1930ஆம் ஆண்டுவரை உட்பிரகாரம் சுவர் வைத்து மூடப்பட்டிருந்த கோவில் இது. அந்த இருண்ட வழிகளுக்குள் யாரும் பயணித்துப் பார்க்க நினைத்த தில்லை. 1931ஆம் ஆண்டு பெரியகோவிலுக்கு யாத்திரை வந்த பேராசிரியர் எஸ்.கே.கோவிந்தசாமி என்பவர் உட்பிரகாரச்சுவரின் ஓட்டையிலிருந்து பறவை ஒன்று பறந்து சென்றதைக் கவனிக்கிறார். அந்தப்பேராசிரியரின் ஆய்வுமனம் அந்த க்ஷணத்தில் சிறகடித்துக் கிளம்புகிறது. பறவையின் வழிகாட்டுதலுடன் அவர் உட்பிரகாரத்தினுள் பிரவேசிக்க ஆயிரமாண்டு காலத்தொன்மை வாய்ந்த அரிய ஓவியங்கள் குறித்து உலகத்துக்குத் தெரிய வருகிறது. இன்றைக்கும் ஒப்பற்ற கலை வெளிப்பாடுகளை உலகுக்கு வெளிப்படுத்திய அந்தப் பெயர் தெரியாத சிறு பறவைக்குத்தான் காலம் நன்றி சொல்லிக் கொண்டிருக்கிறது’

இஸ்லாமிய இலக்கியங்கள் அத்தனையும் பெற்று நாம் பரவசப்பட இன்னொரு பறவை வரவேண்டும்! எங்கே இருக்கிறாய் சிட்டே?

‘தையல்சிட்டின் கனம்தான்
இருக்கும்
இந்தக் கணம்

அதிர்ந்துகொண்டிருக்கிறது
அது
தையல்சிட்டு பறந்து சென்ற பின்
அதிரும்
இலைக்காம்புபோல’ – ஆசை

**

கவிஞர் ‘ஆசை’யின் மின்மடல்களிலிருந்து…

அன்புள்ள ஆபிதீன் அவர்களுக்கு,

வணக்கம். என்னைப் பற்றிய சிறு அறிமுகத்துக்குப் பின் விஷயத்துக்கு வருகிறேன். என் பெயர் ஆசை (ஆசைத்தம்பி). ‘சித்து’, ‘கொண்டலாத்தி’ என்ற எனது இரண்டு கவிதைத் தொகுப்புகளும் க்ரியா வெளியீடாக‌ வ‌ந்திருக்கின்றன. நான் க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதியின் விரிவாக்கப்பட்ட புதிய பதிப்பில் (2008) துணை ஆசிரியராகப் பணிபுரிந்தேன். என்னுடைய‌ பேராசிரிய‌ருட‌ன் சேர்ந்து நான் உம‌ர்க‌ய்யாமின் ருப‌யிய‌த்தை ஆங்கிலத்திலிருந்து மொழிபெய‌ர்த்துவ‌ருகிறேன் . இந்த மொழிபெயர்ப்பு க்ரியா வெளியீடாக வரவுள்ளது. ருபாயியத் குறித்து இணையத்தில் தமிழில் தேடிப்பார்த்தபோது உங்களுடைய வலைப்பூவையும் காண நேரிட்டது. அதில் உமர்கய்யாமின் ‘ருபாயியத்’ஐ நேரடியாக ·பார்ஸியிலிருந்து தமிழில் மொழி பெயர்த்தவர் நெய்னா மாமா என்று ‘சொல்லரசு’ ஜாபர் மெய்தீன் மாமா சொல்வார்கள் என்ற குறிப்பைக் கண்டேன். இது எனக்குப் புதிய தகவலாக இருந்தது. பாரசீக மொழியிலிருந்து தமிழில் ருபாயியத்தை யாரும் மொழிபெயர்க்கவில்லை என்றே நான் எண்ணியிருந்தேன். இந்த மொழிபெயர்ப்பு எங்கே கிடைக்கும் என்ற தகவலை நீங்கள் தெரிவித்தால் எனக்கு இந்த மொழிபெயர்ப்புக்கு மிகவும் உதவியாக இருக்கும். பாரசீக மொழி எனக்குத் தெரியாவிட்டாலும் மூலத்துக்கு அருகில் இந்த மொழிபெயர்ப்பு இருக்க வேண்டும் என்ற பேராசையில் நம்பகமான ஆறேழு ஆங்கில மொழிபெயர்ப்புகளுடன் ஒப்பிட்டே இந்த மொழிபெயர்ப்பை நான் உருவாக்கிக்கொண்டிருக்கிறேன். அதனால் தமிழில் வந்துள்ள மொழிபெயர்ப்புகளை குறித்த தகவல்களையோ அல்லது இந்தத் தகவல்கள் யாரிடம் கிடைக்கும் என்ற தகவலையோ நீங்கள் கொடுத்தால் மிகவும் உதவியாக இருக்கும்.கூடவே, பாரசீகமும் தமிழும் இலக்கியமும் நன்றாகத் தெரிந்த யாராவது ஒருவரைத் தெரிந்தால் கொஞ்சம் சொல்லுங்கள்…

அதுமட்டுமல்லாமல் எனக்கு அரபி, பாரசீகம் ஆகிய மொழிகளைக் கற்றுக்கொள்ள வேண்டும் என்று ஆவல் எழுந்திருக்கிறது. தஞ்சாவூர், திருவாரூர், நாகை மாவட்டங்களுக்குள் மேற்கண்ட மொழி இலக்கியங்களில் புலமையுள்ளவர்கள் யாராவது இருந்தாலும் எனக்குத் தகவல் கொடுத்து உதவுங்கள்.

அன்புடன்   

ஆசை

*

ஆசைக்கு உதவுங்கள் தயவுசெய்து , வேறு மாவட்டக்காரர்களாக இருந்தாலும் . ஆள் ஓடிவந்துவிடுவார். (சேர்ந்ததும் ஓடிவிடுவார், அதுவேறு!) – ஆபிதீன்

***

மேலும் பார்க்க :

நானும் என் கொண்டலாத்தியும் – ஆசை |

கொண்டலாத்திகளும் குக்குறுவான்களும் – ஆசை

விசிறிக்கொண்டை ஒய்யாரி  –  ஆபிதீன் பக்கங்கள்

உமர் கய்யாமும் நாகூர்க்காரர்களும் –  அப்துல் கய்யூம்

**

Read : 

விசிறிக்கொண்டை ஒய்யாரி

‘ஆசை’யின் இரண்டாவது கவிதைத் தொகுப்பான ‘கொண்டலாத்தி’யிலிருந்து.. ‘இந்தத் தொகுப்பிலுள்ள கவிதைகள் முழுவதும் பறவைகளைப் பற்றியவை. தற்காலத் தமிழ்க் கவிதையில் முழுவதும் பறவைகளைப் பற்றிய கவிதைகளைக் கொண்ட ஒரு தொகுப்பு வெளியாவது இதுவே முதல்முறை. மேலும் இந்தத் தொகுப்பில் இருபதுக்கும் மேற்பட்ட பறவைகளின் முப்பது வண்ணப் புகைப்படங்களும் இடம்பெற்றிருக்கின்றன’ –  ‘க்ரியா

கொண்டலாத்தி

விசிறிக்கொண்டை
ஒய்யாரி
சிறகு விரித்தால்
சிங்காரி

பறக்கும் அழகென்ன
நடக்கும் பவிசென்ன
போயும்போயும் தின்பாளே
புழுவைத் தரையில் கொத்தியே

***

நன்றி :

க்ரியா
ஃப்ளாட் எண்: 3, எச்-18
தெற்கு அவென்யூ
திருவான்மியூர்
சென்னை- 600 041
தொலைபேசி: 044-2441 2993
கைபேசி: 9444512885
creapublishers@gmail.com