ஆசிஃப் மீரானின் குரலில், நன்றியுடன்…
வாங்கு (மலையாளத் திரையோரம் – 2)
20/03/2021 இல் 10:59 (ஆசிப் மீரான், சினிமா)
தம்பி ஆசிப் மீரான் எழுதிய அருமையான விமர்சனம் – நன்றியுடன்…
***

“ஆயிரக்கணக்கான நபிமார்களை உலகிற்கு அனுப்பியிருந்தும் ஏன் ஒரே ஒரு நபி கூட பெண்ணாக இல்லை?” என்ற கேள்வியைக் கவிதையில் கேட்டு விட்டு தக்கலை ஹெச்.ஜி.ரசூல் பட்டபாடு நாமறிந்தது.
இவ்வளவு இறுக்கமான மதவாதிகள் நிறைந்திருக்கும் இஸ்லாமியச் சமூகத்தில் ஒரு பெண் பாங்கு ( தொழுகைக்கான அழைப்பு) சொல்ல ஆசைப்பட்டால் என்னாகும்?
அதையும் திரைப்படமாக்கிப் பார்க்கும் ஆசை வந்தால் அதுவும் மாற்று மதம் சார்ந்த ஒருபெண் அந்தப் படத்தை இயக்கியிருந்தால் என்னாகியிருக்கும் இங்கு?
ஆனால் கேரள தேசத்தில் அது நிகழும். இத்தனைக்கும் வடகேரளத்தின் பெரும்பகுதி இசுலாமியர்கள் நிறைந்த பகுதி. இசுலாமிய இயக்கங்களும் கட்சிகளும் வலுவாக இயங்கும் ஒரு மாநிலத்தில் இது நிகழ்வதிலிருந்து ஒன்று தெளிவாகிறது.
ஒன்று இசுலாமிய இயக்கங்கள் திரைப்பட உருவாக்கங்கள் ஏற்படுத்தும் தாக்கங்கள் குறித்து அறிந்திருந்தாலும் அதிகம் கவலைப் படுவதில்லை
அல்லது
இப்படி எடுக்கப்படும் திரைப்படங்கள் குறித்து அவர்களுக்கு அக்கறையேயில்லை
அநேகமாக முதலாவதுதான் சரியாக இருக்கக் கூடும். சமீபத்திய உதாரணம் ‘ஹலால் லவ் ஸ்டோரி’ அதற்கு முன்பே ‘அலிஃப்’ உள்ளிட்ட திரைப்படங்கள் வந்திருக்கின்றன. 3% வாக்குகள் வைத்துக்கொண்டு முந்நூறு பிரிவாக இயங்கும் நம்மூர் ‘முல்லா’க்களுக்கு ஒட்டு மொத்தமாகவே திரைப்படமென்பது ‘ஹராம்’ என்பதால்நாம் மல்லு தேசத்தைத்தான் நம்ப வேண்டியிருக்கிறது. அப்படித்தான் நான் நம்புகிறேன்.
கல்லூரியில் படிக்கும் ரஸியாவுக்கு பள்ளிவாசலில் தொழுகைக்கான அழைப்பான பாங்கொலியைக் கேட்டு அதைப் போலவே தனக்கும் பாங்கு சொல்லத் தோன்றும் ஆசையைத் தன் தோழிகளிடம் வெளிப்படுத்தும் வரை வாழ்க்கை இயல்பாகவே இருக்கிறது.
கல்லூரிப் பேராசிரியை மாணவிகளைப் பார்த்து “கல்லூரி முடியும் முன்னர் உங்களுக்கென தனிப்பட்ட ஏதேனும் ஆசைகள் இருந்தால் நிறைவேற்றிக் கொள்ளுங்கள். கல்லூரியை விட்டு வெளியேறி விட்டால் வாழ்க்கையில் அவற்றை நிறைவேற்ற இயலாமல் போகலாம்” என்று சொல்வதன் அடிப்படையில் மற்ற மூன்று தோழிகளும் தங்களது ஆசைகளை நிறைவேற்ற எண்ணுகையில் ரஸியாவின் ஆசை மட்டும் பாங்கு சொல்ல வேண்டும் என்பதாக இருக்கிறது.
அதைச் சொன்னதுமே உடனிருக்கும் இசுலாமியத் தோழி பதற்றமடைந்து, ” உனக்கென்ன பைத்தியமா? இது தீவிளையாட்டு” என்கிறாள்.
ஆனால் ரஸியாவின் இந்த இரகசிய ஆசையை ஃபேஸ்புக்கில் மற்றொரு தோழி வெளிப்படுத்தி விட வீட்டில், கல்லூரியில் மட்டும் என்றில்லாமல் போகிற இடங்களில் எல்லாம் இம்சை தொடங்குகிறது ரஸியாவுக்கு. வாழ்க்கை நரகமாகி விடுகிறது அவர் குடும்பத்தினருக்கும்.
“பெண்ணை ஒழுங்காக வளர்க்கத் தெரியாதா?” என்று நாத்தனார் குத்திக் காட்டுவது, உறவுகள் புடை சூழ பெண்ணுக்குப் பைத்தியம் பிடித்து விட்டதாகச் சொல்வது, ஜமா அத்தார் ஒன்று கூடி ரஸியாவின் தந்தையை எச்சரித்து பள்ளிவாசல் கட்டுவதற்கான ஒப்பந்தத்தையும் ரத்து செய்வது, ‘பேய் பிடித்திருக்கலாம்’ என்று முஸலியாரிடம் ‘ஆயத்துல் குர்ஸி’ ஓதி ஊதிய நீரை வாங்கிக் குடிக்க வைப்பது என்று ஒட்டுமொத்தமாக மாறி விடுகிறது ரஸியாவின் அன்றாட வாழ்க்கை. “ஜேஎன்யூ”வில் படிப்பைத் தொடர நினைக்கும் நல்ல படிப்பாளியுமான ரஸியாவுக்கு எல்லா இடங்களிலிருந்து ம் ஏற்படுத்தப்படும் அழுத்தம் தாங்கவொணாததாகி விடுகிறது. ரஸியாவின் கனவுகளுக்கு எப்போதும் துணையிருக்கும் ரஸியாவின் தாயாருக்கும் ஏன் குடும்பத்தினருக்குமே கூட..
ரஸியாவால் பாங்கு சொல்ல முடிந்ததா என்பதுதான் படத்தின் முடிவு.
“மதத்தைத் தொட்டு விளையாடாதே” என்று ரஸியாவுக்கு விடப்படும் எச்சரிக்கையைத்தான் இன்று எல்லா மதத் தீவிரவாதிகளும் நம்பிக்கையாளர்களுக்கும் சேர்த்தே விடுகிறார்கள்.
பல்லியை அடித்துக் கொல்ல முனையும் தம்பியைத் தடுக்கும் அக்காவிடம் “பல்லியைக் கொன்றால் நன்மை கிடைக்கும்” என்று ‘உஸ்தாத்’ கூறியதாகச் சொல்கிறான் தம்பி
“ஓர் உயிரைக் கொன்று மனிதர்கள் நன்மையைப் பெறுவதற்காக எதையாவது இறைவன் படைப்பானா?” என்கிறாள் அக்கா”உஸ்தாதுகளுக்குத் தெரியாத விசயமா உனக்குத் தெரியும்?” என்று மகளை அடக்கி வைத்து விட்டு “பல்லி குறைஷிகளிடம் நபிகளாரைக் காட்டிக் கொடுத்ததால் அதைக் கொன்றால் புண்ணியமென்றும் ஆனால் சிலந்தி நபிகளாரைக் காப்பாற்றியதால் அதைக் கொல்லக் கூடாதென்றும்” பாடம் நடத்துகிறார் வாப்பா.
“அப்படியென்றால் வீட்டில் ஒட்டடை அடிக்காமல் சிலந்திப்பண்ணை வைக்கலாமா வாப்பா?” என்றொரு வசனம் வைத்திருந்திருக்கலாம். (ஆபிதீன் அண்ணன் வசனகர்த்தாவாக இருந்திருந்தால் நிச்சயம் நடந்திருக்கும்)
நபிகளாரைக் காப்பாற்றியது இறைவன்தானே தவிர சிலந்தியோ பிறவோ இல்லை என்பதை நம்புவதை விடவும் ‘உஸ்தாத்கள்’ உருவாக்கிச் சொல்லும் மிகைப்படுத்தப்பட்ட கதைகளை நம்புவதையே இச்சமூகம் விரும்புகிறது என்பதே சோகம்
‘லீலா’ என்ற படத்தின் கதை திரைக்கதை எழுதிய அதே உன்னியின் கதையை அடிப்படையாக வைத்தே இந்தப் படம் உருவாகியிருக்கிறது. இன்னும் தெளிவாகச் சொல்ல வேண்டுமென்றால் ‘கேரளா கஃபே” ‘சார்லி’ திரைப்படங்களின் கதை வசனகர்த்தா என்றால் ‘சட்’டென்று புரியலாம். “ஒழிவு திவஸத்தெ களி”யும் இவரது சிறுகதைதான் என்பது இன்னொரு கூடுதல் தகவல். திருவனந்தபுரத்தில் பாளையம் பள்ளிவாசலருகில் வாழ்ந்த காலத்தில் அவர் எழுதிய இந்தச் சிறுகதை 25 ஆண்டுகளுக்குப் பின் பொன்னானி என்கிற இசுலாமியர்கள் அதிகம் வாழும் பகுதியின் பின்னணியில் திரைக்கதையாகியிருக்கிறது.
நாயகியின் தாயாகவும் வேடமேற்றிருக்கும் ஷப்னா முஹம்மதுதான் படத்தின் திரைக்கதையாசிரியருமே கூட. அறிமுகம் என்பதால் படத்தில் பெண்ணியத்தைப் பேசுவதா நம்பிக்கைகளின் அடிப்படையில் நழுவுவதா என்ற குழப்பத்தோடேயே காட்சிகளை உருவாக்கியிருக்கிறாரோ என்று தோன்றுகிறது. நாயகியின் குழப்பங்களுக்கு திரைக்கதையும் காரணமாக இருக்கலாம் என்பது சறுக்கல்தான். ஆனால் முழுதுமாக ஒரு நம்பிக்கையைச் சிதைக்கும் விதத்தில் பெண்ணியம் பேசும் சூழலை மட்டுமே வைத்துப் படமெடுத்து விட முடியாது என்ற யதார்த்தத்திற்கான சமாதானமாகவும் அதனை வைத்துக் கொள்ளலாம்
படத்தின் இயக்குநரும் ஒரு பெண்தான். இந்த இசுலாமியப் பின்னணி கொண்ட திரைப்படத்தை இயக்கியவர் காவ்யா பிரகாஷ் என்பதும் அவரும் அறிமுக இயக்குநர்தான் என்பதும் இன்னொரு சுவாரஸ்யமான செய்தி. முதல் படத்திலேயே துணிச்சலான ஒரு கதையைச் சொல்ல முயன்றதற்காகப் பாராட்டலாம்.
அனஸ்வரா ராஜன் அழகாக இருக்கிறார் அழகாகச் சிரிக்கிறார். சில நேரங்களில் யாருக்கு வந்த விதியோ என்றிருந்தாலும் பாத்திரத்தின் கனத்தைத் தாங்கிக் காப்பாற்றி விடுகிறார். வினீத் வழக்கம்போல சிறப்பாகத் தன் வேலையைச் செய்திருக்கிறார். “சுடானி ஃப்ரம் நைஜீரியா” புகழ் சரசா பாலுஸ்ஸேரியை இசுலாமியக் கதாபாத்திரங்களுக்கு நேர்ந்து விட்டு விட்டார்கள் போலிருக்கிறது. நாயகியின் பாட்டியாக சில காட்சிகளே எனினும் அசத்தியிருக்கிறார்.
வீட்டிற்கு மருமகளும் பேத்தியும் புர்கா அணிந்து வரும் காட்சியைக் கண்டு விட்டு ” இதெந்து கோலம்?” என்று கேட்கும்போது அவரது உடல் மொழி அபாரம். ‘தட்டம்’ அணிந்த இசுலாமியப் பெண்கள் ‘புர்கா’வுக்குள் மாறிப்போனதை இந்தக் காட்சியின் மூலமாக உணர்த்த முனைந்திருக்கிறார்கள்.
அர்ஜுன் ரவியின் ஒளிப்பதிவு சிறப்பாக இருக்கிறது. காட்சிகளுக்குத் தேவையானதைத் தந்திருக்கிறார். பாடல்களில் கூடுதல் சிறப்புற இயங்கியிருக்கிறார். ஔசேப்பச்சன் நெடுநாட்களுக்குப் பின் இசை அமைத்திருக்கிறார். அவரது மேதமை முற்றாக வெளிப்படவில்லையெனினும் அவரது இசை ஓர் ஆறுதல்.
ஆனால் தேவையற்ற பாடல்களை வெட்டி நீக்கியிருந்தால் படத்தோடு இன்னும் நெருக்கமாக உணர்ந்திருக் கலாம்.
பி.எஸ். ரஃபீக்கின் வரிகளில்
“யாரோ நீ, நான்தானே நீநீயல்லவோ நான்மண்ணல்லவா நான்மழையும் அல்லவா நான்” என்ற பொருள் கொண்ட “மலயுடெ முகலில்” பாடல் ஈர்க்கிறது.
ஒரு வித்தியாசமான முயற்சி என்ற அளவில் தவிர்க்க முடியாத படமென்ற போதிலும் மத நம்பிக்கைகளுக்கெதிரான விசயங்களில் ஒரு கட்டத்திற்கு மேல் எதையாவது செய்து சிக்கலில் மாட்டிக் கொள்ளக் கூடாதென்ற எச்சரிக்கை உணர்வோடேயே படம் உருவாக்கப்பட்டிருப்பதால் ஒரு முழுமையான படமாக இது உருவாகிவிடவில்லை என்பது ஒரு குறைதானென்றாலும்….
நல்ல படம் பார்க்க விரும்புகிறவர்களுக்கு இந்தப் படத்தைப் பரிந்துரைக்கத் தயங்க மாட்டேன்
**

தொடர்புடைய பதிவு :
ஐயப்பனும் கோஷியும் – ஆசிப் மீரான்
23/03/2020 இல் 16:17 (ஆசிப் மீரான், சினிமா)

தண்டனை (சிறுகதை) – ஆசிப் மீரான்
02/01/2020 இல் 13:22 (ஆசிப் மீரான்)
’குங்குமம்’ இதழிலிருந்து நன்றியுடன்…
தண்டனை (சிறுகதை) – ஆசிப் மீரான்
‘‘அதெல்லாம் முடியாது…’’ என்றார் பெரியவர் மம்மூச்சா.‘‘இல்லைங்க… எத்தனை நாள்தான் இப்படியே காசு கொடுக்காமலேயே சாப்பிடுறது?’’ என்றேன் நான்.‘‘பரவால்ல. நான் சொல்ற வரை அப்படியே இருங்க…’’துபாயில் பணி புரிந்தாலும் அங்கிருப்பதைவிட வாடகை குறைவு என்பதால் ஷார்ஜாவில் தங்கி வேலைக்குப் போகும் பல்லாயிரக்கணக்கானவர்களில் ஒருவன் நான்.
குடும்பங்களை ஊரில் விட்டுவிட்டு புலம் பெயர்ந்து உறவுகளுக்காக வாழும் லட்சக்கணக்கானவர்களிலும் ஒருவன் நான்.அலுவலகமொன்றில் கணக்கராகப் பணிபுரிவதால் குடும்பத்தை அழைத்து வர வாய்ப்பிருந்தாலும் குடும்பத்தை அழைத்து வந்தால் சம்பளம் முழுதும் செலவழிந்து சேமிப்பு இல்லாமல் போய்விடுமென்று வாழ்க்கையை பணத்திடம் அடமானம் வைத்து விட்டுப் புலம்பும் அன்றாடங்களில் ஒருவன்.
சேவல் பண்ணைகள் போல ஒரே அடுக்ககத்தில் பத்துப் பேரோடு அடைந்து வாழும் வாழ்க்கையிலிருந்தாவது விடுபடுவோம் என்று இரண்டு படுக்கை அறைகள் கொண்ட அடுக்ககத்தில் ஓர் அறையில் வாடகைக்கு இருக்கிறேன். இது இங்கு வழக்கம்தான். வாடகைச் சுமையைக் குறைப்பதற்காக ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து ஒரு பகுதியை உள்வாடகைக்கு விடுவது.
கோவாவைச் சேர்ந்த தம்பதிகள் தங்கியிருந்த வீட்டில்தான் நான் உள்வாடகைக்கு இருந்தேன். அறைக்கு வெளியே இருந்த சின்ன கழிப்பறை எனக்கானது. அவர்களைக் காண வரும் விருந்தினர்களுக்கும் அதுதான். சிக்கல் சமையலறைதான். காலை ஐந்து முதல் ஏழுவரை சமையலறையை அவர்கள் எடுத்துக் கொள்வார்கள். எனவே நான் சமைப்பதாக இருந்தால் ஐந்து மணிக்கும் முன்னரே எழுந்தாக வேண்டும். ஏழு மணிக்குப் பின்னரென்றால் அலுவலகம் போகத் தாமதமாகி விடும்.
சுயமாக சமைக்கத் தெரிந்தாலுமே கூட நேரமின்மையும் இந்தச் சூழலும் காரணமாகி விட, கூடவே இரவில் சமைக்க சோம்பலும் சேர்ந்து விட உணவகங்களையே நாட வேண்டிய சூழல்.நான் தங்கியிருக்கும் ‘மஜாஸ்’ பகுதியில் ஏராளமான உணவகங்கள் இருந்தன. இந்திய உணவு வகைகள், பாகிஸ்தானிய உணவு வகைகள், லெபனிய உணவு வகைகள் என்று எல்லா வகையான உணவு வகைகளும் விரவிக் கிடந்தன.
இந்திய உணவகங்களில் பெரும்பான்மையாக மலையாளிகள் நடத்தும் உணவகங்கள். கூட்டத்தில் உயர்தர சைவ உணவகமென்ற பெயரிலும் ஒன்று. வீட்டுக்கு அண்மையில் இத்தனை உணவகங்கள் இருந்தும், எல்லா உணவகங்களிலும் ஏறி இறங்கியும் எதுவும் மனதிற்குகந்ததாக இல்லை.
ஒன்றில் உணவு சரியிருக்காது அல்லது சுத்தமாக இருக்காது. பெரும் கூட்டமாகக் கடமைக்கெனப் பரிமாறப்படும் உணவகங்களோடு மனது ஏனோ உடன்படுவதேயில்லை.
சில உணவகங்களில் நுழைந்தாலே ‘எதற்கு வந்தாய்?’ என்ற மனோபாவத்தோடு அணுகும் அவர்களது உடல்மொழி எனக்குப் பிடிப்பதில்லை.
இப்படியே நாட்கள் நகர்ந்து கொண்டிருந்தபோதுதான் தற்செயலாக அந்த உணவகத்திற்குள் நுழைந்தேன்.
கல்லாவில் அமர்ந்திருந்த முதியவர் தலையிலிருந்து முடி உதிராமல் இருப்பதற்கான வலை அணிந்திருந்த சமையல்காரரிடம் ‘‘ஏன் பரோட்டா அளவு சிறுசா இருக்கு? அம்பது ஃபில்சிலிருந்து ஒரு திர்ஹாமா மாத்தியிருக்கோம். ஒரு திர்ஹாமுக்கு ரெண்டு பரோட்டா தின்னவனுக்கு ஒரு பரோட்டாதான் கொடுக்கப் போறோம். பாதி வயிறுதான் நிறையும் அவனுக்கு. அது அவனோட வயித்தெரிச்சல். அவனுக்கு முக்கால் வயிறு நிரம்புற அளவுக்காவது பெருசா போடு…’’ என்று மலையாளத்தில் சொல்லிக் கொண்டிருந்தார்.
வாடிக்கையாளர்கள் மீதான அவரது அந்தக் கரிசனை பிடித்திருந்தது. அவரே சட்டென்று இறங்கி வந்து ‘‘என்ன வேண்டும்?’’ என்று கேட்டதும் தேவையானதைச் சொன்னேன்.மலையாளிகளின் உணவகத்தில் மட்டும் நான் கவனித்த விசயம் இது.
கல்லாவில் இருந்தாலும் கடையில் வாடிக்கையாளரைக் கவனிக்க ஆளில்லையென்றால் உடனே களமிறங்கி விடுவார்கள். அது மேசை துடைக்கும் செயலாக இருந்தாலும்.ஏனோ முதல் பார்வையிலேயே அவரைப் பிடித்து விட்டது எனக்கு. சிலர் அப்படித்தான். நாமறியாமலே நமக்குள் சிம்மாசனமிட்டுக் கொள்வார்கள். முகலட்சணமென்பது இதுதானோ?
பரோட்டா உடல்நலனைக் கெடுத்து விடுமென்று உலகமே சத்தம் போட்டாலும் என்னைச் சுற்றி இருப்பவர்கள் எல்லோரும் சொல்லி வைத்ததுபோல பரோட்டாவை அவரவருக்கு விருப்பமான கறிகளோடு உண்டு கொண்டிருந்தார்கள். சிலர் உடல் நலத்தைப் பேணுவதாக எண்ணிக்கொண்டு கோதுமை பரோட்டாவும்.
அப்போதுதான் அந்த ஆள் உள்ளே வந்தார். நெடுநாள் வாடிக்கையாளர் தோரணையில், ‘‘ஹாஸிம் எவிடெ?’’ என்றார்.
‘‘இவிட உண்டல்லோ…’’ என்றவாறே சமையலறையிலிருந்து வெளியில் வந்தார் அவர்.
‘‘பெட்டெந்நு ரெண்டு பூரி…’’
‘‘இங்க சாப்பிடவா… கொண்டு போகவா?’’
‘‘கொண்டு போகத்தான்…’’
சரியென்று தலையாட்டி விட்டுத் திரும்பியவர் சமையலறை நோக்கி ‘‘ரெண்டு பூரி…’’ என்று குரலெழுப்ப வாடிக்கையாளர் இடைமறித்து ‘‘ஓயில் கொறச்சு…’’ என்றார்.ஒரு வினாடி கூட இடைவெளி விடாமல் ‘‘பச்சை வெள்ளத்தில் ரெண்டு பூரி…’’ என்று ஹாஸிம் குரலுயர்த்திச் சொன்னதும் தண்ணீர் குடித்துக் கொண்டிருந்த நான் சிரிப்பை அடக்க முடியாமல் நீரைக் கொப்பளிக்கையில் நாசி வழியே நீரேறி எனக்குப் புரையேறி விட்டது.
ஹாஸிம் உடனே ஓடி வந்து ‘‘எந்து பற்றி?’’ என்று கேட்டுக் கொண்டே தலையில் தட்டி ஆசுவாசப்படுத்தி, மீண்டும் தண்ணீர் கொண்டு வந்து குடிக்கச் செய்தார்.
எனக்குக் கொஞ்சம் கூச்சமும் வருத்தமுமாக இருக்க ஹாஸிம் என்னைப் பார்த்து சிரித்துக் கொண்டே நகன்றார்.
சாப்பிட்டு விட்டுப் பணம் கொடுக்கும்போது முதியவர் ‘‘பிரச்னை ஒண்ணும் இல்லையே..?’’ என்று அக்கறையோடு விசாரித்தது எனக்குப் பிடித்திருந்தது.போகிற இடமெல்லாம் அன்பைத் தேடும் மனித மனதினை சுய கழிவிரக்கத்திலிருந்து காப்பாற்றுவதும் இதைப்போன்ற எதிர்பார்ப்புகளற்ற ஆறுதல் மொழிகள்தானே?
‘‘அந்த எருமை மாடு இப்படித்தான் எப்பவும் தமாஷ் பண்ணிட்டே இருப்பான்…’’ என்றார் ஹாஸிமை சுட்டிக்காட்டியவாறே.
ஆனால், எனக்கு ஹாஸிமை வெகுவாகப் பிடித்து விட்டது. பணிச்சூழலை இயல்பான நகைச்சுவையால் மெருகூட்டும் அவரை யாருக்குத்தான் பிடிக்காது?சுற்றி நிறைய உணவகங்கள் இருந்தபோதும் ‘முஸ்தஃபால்’ மட்டும் பிடித்துப் போனதற்கு அவர்களது உணவின் சுவை மட்டுமல்லாமல் சிநேகிதமான இந்நிகழ்வுகளும் காரணமாயிற்று.
உணவகத்தில் நுழைந்த முதல் நாளே இப்படி ஒரு சிறப்பான சம்பவம் நடந்துவிட்டதால் உணவகப் பணியாளர்கள் அனைவருக்கும் என் முகம் நன்றாகப் பதிந்துவிட்டது போல. அடுத்தடுத்த நாட்களில் ‘அண்ணனுக்கு என்ன வேணும்..?’ என்பதிலிருந்து ஒரு வார அவகாசத்துக்குள்ளேயே ‘தலைவரா’க்கி இருந்தார்கள் என்னை. நாட்டில் இப்படித்தான் அநாமதேயமாகத் தலைவர்கள் உருவெடுக்கிறார்கள் போல என்று நினைத்துக் கொண்டேன்புலம் பெயர்ந்து உறவுகளை விட்டு வெகு தொலைவில் வாழ்க்கையில், உணவின்போது அக்கறையோடு பரிமாறுகிறவர்களிடம் இனம் புரியாத ஒரு வாஞ்சை தோன்றிவிடுகிறது இயல்பாகவே.
‘முஸ்தஃபால்’ உணவக ஊழியர்கள் இப்படித்தான் நெருக்கமாகிப் போனார்கள்.தொடர்ந்து அங்கேயே சென்றதில் கடையின் உரிமையாளர்தான் அந்த முதியவரென்பதும் முகமது அஸார் என்ற பெயரைச் சுருக்கி மம்மூச்சா என்றழைக்கிறார்கள் என்பதும் அவரது மகன்தான் ஹாஸிம் என்பதும் தெரிய வந்தது. ஹாஸிம் எப்போதும் கலகலப்பாக இருக்க, மம்மூச்சா ஒவ்வொரு வாடிக்கையாளரிடமும் தனிப்பட்ட முறையில் கவனமாகப் பேசி வாடிக்கையாளர்களிடம் மரியாதையை உருவாக்கிக் கொண்டிருந்தார்.
அவர் ஊருக்குப் போகும் காலத்தில் ஹாஸிம் கல்லாவில் இருந்தால் ‘‘மம்மூச்சா எவிடெ..?’’, ‘‘சாச்சா கிதர் ஹை..?’’ என்ற கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் திணறுமளவுக்கு விசாரணைகள் தொடர்வதைக் கவனித்திருக்கிறேன்.மம்மூச்சா உயரம் குறைவானவரென்பதால் அவரை ஹாஸிம் கிண்டலாக கவாஸ்கரென்றுதான் அழைப்பார்.‘‘நம்முடெ கவாஸ்கர் ஒரு விரமிச்ச தாரம் (ஓய்வு பெற்ற நட்சத்திரம்) கேட்டோ?’’ என்று ஹாஸிம் தன் தந்தையைக் குறித்து கிண்டல் செய்தாலும் அதிலோர் பெருமிதம் நிறைந்திருக்கும்.
இந்தக் காலகட்டத்தில் நான் உணவுக்கட்டுப்பாட்டில் ஈடுபடத் துவங்கினேன். உடல் எடையைக் குறைக்க, காலை வேளைகளில் முட்டை மட்டுமே உண்ணத் துவங்கியிருந்தேன். இரண்டு முட்டைகளும் சர்க்கரை இல்லாத தேநீரும் என் காலை உணவுப்பழக்கமாகியிருந்தது.அன்று காலையில் கொஞ்சம் தாமதமாக எழுந்தேன். சமயங்களில் வேலை காரணமாக இரவு தாமதமாகத் திரும்பினால் காலையில் தாமதமாக அலுவலகம் செல்வதை மேலாளர் அனுமதிப்பார்.வழக்கம் போலக் காலை உணவாக இரண்டு முட்டைகளையும் ஒரு தேநீரையும் அருந்தியபின் கல்லா அருகில் சென்றேன்.
சலாம்கள் பரிமாறியதும் ‘‘இன்னைக்கு அலுவலகம் போகலியா?’’ மம்மூச்சாவின் குரலில் எப்போதுமிருக்கும் அதே வாஞ்சை.
‘‘இனிதான் மம்மூச்சா. இன்னைக்கு தாமதமாகப் போகணும்…’’
‘‘என்ன சாப்பிட்ட இன்னைக்கு?’’
‘‘முட்டைதான்…’’‘‘அட என்னப்பா நீ! காலைல நல்லா சாப்பிட்டாத்தானே நாள் முழுக்க சுறுசுறுப்பா இருக்க முடியும்? இந்தக் கட்டுப்பாடெல்லாம் என்னை மாதிரி வயசானவங்களுக்குத்தானே?’’நான் மெல்லமாகப் புன்னகைத்தேன்.
‘‘என்னமோ போங்கப்பா. இந்த ஹாஸிமைப் பாரு. 24 மணி நேரமும் தின்னுட்டுத்தானே இருக்கான்…’’
என் புன்னகை சிரிப்பாக மாறியது. சிரித்துக்கொண்டே ஐந்து திர்ஹாம்களை மம்மூச்சாவிடம் கொடுத்தேன். ஒரு திர்ஹாம் திருப்பிக் கொடுத்தார்.
‘‘அஞ்சு திர்ஹாம்தான்…’’‘‘ரெண்டு முட்டையும் சாயாவும் நாலுதான்…’’‘‘இல்லையே… அஞ்சுதான்…’’ என்றேன் நான்மம்மூச்சா பதற்றமாகி, ‘‘ஹாஸிம் எருமை மாடே! இங்க வா…’’ என்றார். ‘‘ரெண்டு முட்டையும் ஒரு சாயாவும் எவ்வளவு?’’
‘‘நாலு திர்ஹாம்…’’‘‘அச்சச்சோ! தப்பாகிடுச்சே…’’ பதறியவர் சட்டென்று கல்லாவிலிருந்து இறங்கி வந்து என் கைகளைப் பிடித்துக் கொண்டார். ‘‘மாப்பு…’’நான் பதறிப்போய், ‘‘என்னாச்சு மம்மூச்சா?’’ என்றேன்.‘‘நாலு திர்ஹாமுக்குப் பதிலா அஞ்சு வாங்கியிருக்கேனே?’’ அவர் குரலில் வருத்தம்.
‘‘அதனாலென்ன?’’ ‘‘என்னவா..? உழைக்காம வரக்கூடிய வருமானம் ஹராம். எவ்வளவு நாளா அஞ்சு திர்ஹாம் கொடுக்குறீங்கன்னு தெரியுமா?’’
எனக்கும் நினைவில்லை. உணவுக்கட்டுப்பாடு தொடங்கி ஒரு மாதமிருக்கக் கூடும்.
‘‘சரி விடுங்க! நானே கணக்குப் போட்டுக்கறேன். இன்னைலருந்து நான் சொல்லும் வரை நீங்க காசு கொடுக்க வேணாம்…’’ என்றார் மம்மூச்சா
‘‘ஏன்?’’‘‘உங்ககிட்ட கூடுதலா காசு வாங்கியிருக்கேன். தப்பில்லையா? அதை சரிபண்ற வரைக்கும் நீங்க காசு தரவேண்டாம். உங்க கிட்ட காசு வாங்கக் கூடாதுன்னு ஹாஸிம் கிட்டயும் சொல்லி வச்சிடுறேன்…’’எவ்வளவோ சொல்லியும் காசு வாங்க மறுத்து விட்டார். இப்படியே ஒரு வாரம் ஓடிப் போனது. எனக்குக் குற்ற உணர்ச்சி ஏற்பட்டது.
‘‘இல்லைங்க… எத்தனை நாள்தான் இப்படியே காசு கொடுக்காமலேயே சாப்பிடுறது?’’அசைந்து கொடுக்கவில்லை மம்மூச்சா.‘‘சரி… நாம ஒரு ஒப்பந்தம் வச்சுக்கலாம். என் கிட்ட காசு வாங்காம இருக்குறதுக்கு பதிலா எங்க அடுக்ககத்துல வேலை செய்ற காவலாளி முத்துவுக்கு உணவு கொடுங்க. சம்மதமா?’’ என்றேன்.‘‘அல்ஹம்துலில்லாஹ்! ஆண்டவன் காப்பாத்திட்டான். இப்படி ஒரு தப்பு செஞ்சிட்டோமே? இதுக்குண்டான அபராதத்ைத எப்படி செலுத்துறதுன்னு யோசிச்சிட்டே இருந்தேன். அவரும் சாப்பிடட்டும்…’’ என்றார் மகிழ்ச்சியாகஅந்தச் சிறிய உருவத்தின் முன் மேலும் சிறிதானவனாக உணர்ந்தேன். கடையிலிருந்து வெளியேறும் போது மழைத்துளிகள் விழத் துவங்கின.ரசாயனப் பொடி தூவி செயற்கை மழை பெய்விப்பதாக கடந்துபோன சேட்டன் தன் நண்பரிடம் சொல்லிக் கொண்டிருந்தார். நான் நம்பவில்லை.
*
நன்றி : ஆசிப் மீரான்