இம்ரானின் அனுபவங்கள் எவருக்கும் வரவேண்டாம் – அ.மார்க்ஸ்

imran01

‘சொல்ல முடியாத வலி’யென்று லரீனாஹக் சொன்னது ரொம்பவும் கொஞ்சம்… இங்கே சொடுக்கி வாசியுங்கள்.

நன்றி : அ.மார்க்ஸ்

மருந்துக் காலனியம் பற்றி அ. மார்க்ஸ்

‘அடையாளம்’ வெளியீடான ‘ஒழுங்கவிழ்ப்பின் தேவைகள், சாத்தியங்கள்’ நூலிலுள்ள ‘மருத்துவத்தில் மாற்றுகள் – ஓமியோபதி‘ கட்டுரையிலிருந்து கொஞ்சம். சனவரி 1994-இல் ‘நிறப்பிரிகை’யில் வெளிவந்த கட்டுரை இது. ‘இவற்றைச் சிந்திப்போம்; இவற்றோடு சிந்திப்போம்; இவற்றைத் தாண்டிச் சிந்திப்போம்’ .

***

பொருளாதாரச் சுரண்டல், காலனியக் கொள்கை என்பதைத் தவிர நவீன மருத்துவம் என்பது அணுகல் முறையிலேயே பிற்கால முதலாளியத்திற்கேயுரிய வகையில் அதிகாரங்களை மக்களிடமிருந்து பிரித்தெடுத்து மையத்தில் குவிக்கும் நோக்குடையதாக இருக்கிறது. மனிதர்கள் செயலற்ற மந்தைகளாக்கப்படுகின்றனர். நவீன மருத்துவத்தின் மிகவும் ஆபத்தான அம்சம் இதுவேயாகும். இதனை அது நிறைவேற்றும் வழி முறைகளாகக் கீழ்க்கண்டவற்றைக் குறிப்பிடலாம்.

1. நகர்சார்ந்த மையப்படுத்தப்பட்ட மருத்துவமனை, விலை மதிப்புள்ள உயர் தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்ட நுண் கருவிகள், மெத்தப் படித்த அதீத நுண்திறன் மிக்க மருத்துவர்கள் ஆகியவற்றைக் கொண்டதாக நவீன மருத்துவம் மாறியுள்ளது. ஆனால் உண்மையில் இந்நிலை தேவையில்லை. மூன்றாம் உலக நாடுகளில் அதிக அளவு மனிதச் சாவுகளுக்குக் காரணமான காசம், தொழுநோய், வயிற்றுப்போக்கு போன்ற நோய்களைக் கண்டறியவும் , மருத்துவ உதவி அளிக்கவும் இவை எதுவும் தேவையில்லை. சீனா, கியூபா போன்ற நாடுகளில் வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தப்பட்டது போன்ற அதிகம் படித்திராத, பயிற்சியளிக்கப்பட்ட, கிராமப்புற ‘வெறுங்கால்’ வைத்தியர்களைக் கொண்டே இந்நோய்களை நாம் உயர் தொழில்நுட்ப உதவிகளின்றி தீர்க்க முடியும். மக்களை நோக்கி மருத்துவம் சென்றடையும் வழி இதுதான்.

2. மருத்துவரை அதிகாரியாகப் பார்க்கும் ஒரு மருத்துவ முறையாக நவீன மருத்துவம் உள்ளது. மருத்துவக் குழுவில் அங்கம் பெறும் நர்சுகள், மருந்தாளுநர்கள் முதலியோர் மருத்துவரின் எடுபிடிகளாக மட்டுமே கருதப்படுகின்றனர். இவர்களிடம் வேறெந்த மருத்துவப் பொறுப்புகளும் கொடுக்கப்படுவதில்லை. மருத்துவர் எளிதில் அணுக முடியாதவராகவும், அதிகம் சம்பாதிக்கும் ஒரு நபராகவும் சமூகத்தில் உலவுகிறார். நோயாளிகளிடம் இவர் வாய் திறந்து பேசுவதுகூட இல்லை. நோய் பற்றிய விளக்கங்களையும் சொல்வதில்லை. இவர் பயன்படுத்தும் ‘கிளினிக்கல்’ சோதனைக் குறிப்புகளும் நோயாளிகளுக்கு விளங்குவதில்லை. இதன் மூலம் மனித உடம்பும் மருத்துவமும் மர்மப்படுத்தப்படுகின்றன. மனிதனின் மிக அடிப்படையான அடையாளமாகிய அவனது உடம்பே அவனுக்குப் புரியாததாகவும் அதன் மீது ஆளுமை செலுத்தக்கூடிய நபராக மருத்துவரும் மாறும் நிலை உருவாகிறது. பொதுவில் மருத்துவர் என்றால் மேல்தட்டு மேல் சாதியைச் சேர்ந்த ஓர் ஆண் என்கிற நிலையே நிலவுகிறது.

3. மனித உடல் என்பது ஓர் உயிரியல் முழுமையாகக் கருதப்படாமல் பல்வேறு உதிரி பாகங்களால் ஆன ஓர் எந்திரத் தொகுப்பாக   அணுகப்படுகிறது. ஒரு குறிப்பிட்ட உடலுறுப்புகளின் உபாதை என்பதை ஒரு பழுதடைந்த எந்திரத்தின் பாகமாக அணுகி வலி தணித்தல், உறுப்பு மாற்றுதல் போன்ற பழுதுநீக்கும் நடைமுறையாக மருத்துவம் மாற்றப்படுகிறது.

4. மருந்துகள் சந்தைப் பொருளான பின்பு விளம்பரம், லஞ்சம், ஊக்க ஊதியம் என எல்லாவிதமான வணிக நடைமுறைகளும் பயன்படுத்தப்படுவதோடு மருந்துகளையும் கூட்டு மருந்துகளையும் உற்பத்தி செய்தல், மூன்றாம் உலக அப்பாவி மக்களைப் புதிய மருந்துகளைச் சோதனை செய்யும் சோதனை எலிகளாகப் பயன்படுத்துதல் முதலியனவும் மேற்கொள்ளப்படுகின்றன.

5. மருந்துக் காலனியத்தின் மூலம் மருத்துவத்துறையில் தனது அதிகாரத்தை இழந்த உள்நாட்டு அரசுகள் இந்நிலைக்கு எதிராக முரண்டு பிடிக்க முயற்சித்தால் உடனடியாக ஏகாதிபத்தியங்கள் தலையிட்டு அவற்றை வழிக்குக் கொண்டு வந்துவிடுகின்றன. வங்க தேசத்திலும் சிரிமாவோ காலத்து இலங்கையிலும் இத்தகைய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டபோது பன்னாட்டு மருத்துவக் கம்பெனிகளும் அவற்றின் முகவர்களான உள்ளூர் (நவீன) மருத்துவர்களும், ஏகாதிபத்தியமும் இணைந்து தாக்குதல் தொடுத்து அம்முயற்சிகளை முளையிலேயே அழித்தன. இவை எல்லாம் கூட சுமார் இருபது ஆண்டுகளுக்கு முந்தைய நிகழ்ச்சிகள். இன்றைய புதிய பொருளாதாரச் சூழலில் கேட்க வேண்டியதில்லை.

6. நவீன மருத்துவ அறிவு என்பது ஏகாதிபத்தியங்களிடமும் அவற்றின் உள்தரகு நிறுவனங்களிடமும் (எ.டு: அப்போலா, இந்துஜா போன்ற நிறுவங்னகள்) குவிகின்றன. ‘எய்ட்ஸ்’ யுகத்தில் ரத்தம் பற்றிய உயர் ஆய்வுகளும் அறிவும்  அரசு நிறுவனங்களிடமிருந்து  மேற்குறித்த நிறுவனங்களின் கைகளுக்கு மாறியுள்ளன. அறிவு முடக்கப்படும்போது மக்களிடமிருந்து அதிகாரம் பறிக்கப்படும் அவலத்தை இங்கே விளக்க வேண்டியதில்லை.

7. நவீன மருத்துவம் பெண்களுக்கே உரித்தான உடல் உபாதைகளுக்கு முக்கியத்துவம் அளிப்பதில்லை.

***

நன்றி : அ. மார்க்ஸ் , அடையாளம் (admin@adaiyalam.com)