தாழிடப்பட்ட கதவுகள் – அ. கரீம்

kareem-book3அய்ந்து நாட்களுக்குப் பிறகு இப்போதுதான் ஓரளவு அமானுல்லா வீட்டின் மாமரத்தில் குருவிகள் வந்தமர்ந்தது. இந்த அய்ந்து நாட்கள் எங்கே போய் இந்தப் பறவைகள் தங்கின என்று அமருக்கு ஒரே குழப்பமாக இருந்தது. அமருக்கு இன்னும் கொஞ்சம் பதற்றமும் பயமும் இருந்தது. நான்கு நாட்களும் கடைவரை வந்து செட்டரைத் திறக்கலாமா? வேண்டாமா? திறந்தால் மறுபடியும் பிரச்சனை வருமோ என்ற குழப்பதினூடே திரும்பி போனவன், கடையைத் திறந்தா ஏதாவது தேறுமா என்ற வேக்காணத்தில் நோட்டம்விடத்தான் வந்தான். எதிரிலுள்ள அமானுல்லா வீட்டின் மரத்தில் குருவிகள் சலசலத்தது. இந்த வீட்டின் உரிமையாளர் இங்கே வாழ்ந்து வந்த போதிலிருந்து பறவைகள் இங்கே வசித்து வருவதை அமர் பார்த்து வருகிறான்.

அந்த வீட்டுக்கு அமனுல்லா குடிவருவதற்கு இரண்டு வருடத்திற்கு முன்பே அமர் ராஜாவுடன் கூட்டுசேர்ந்து கடைக்கு வந்துவிட்டான். அப்போதிலிருந்து அம்மாமரத்தைப் பார்க்கிறான், பறவைகள் இங்கேயே கூடுகட்டி குஞ்சுபொறித்துத் தனது வீடு இதுதான் என வாழ்ந்துவந்த பறவைகள் குண்டு வெடிப்பிலும் அதன் பின் நடந்த கலவரத்திலும் பயந்து ஓடிப்போனயின. இன்று தனது வீட்டுக்குத் திரும்பியுள்ளன. அந்த வீட்டின் உரிமையாளர் அமானுல்லாவுக்கு வீட்டைப் போக்கியதிற்குக் கொடுத்துவிட்டுத் தனது மகளுடன் பெங்களூர் சென்று தங்கி விட்டார். அமானுல்லா அந்த வீட்டுக்கு வந்து அய்ந்து வருடமானது. பழையகால ஓட்டுவீடு என்பதால் வீட்டின் பின்புறம் மாமரம், பப்பாளி மரம், முருங்கை மரம் என்று ஒரு குட்டித் தோட்டமாய் வீட்டின் பின்புறம் இருந்தது.

வீட்டின் பின்பக்கம் துவைக்கும்கல்லுக்கு அருகிலிருக்கும் முருங்கை மரத்தின் கீழுள்ள கயிற்றுக் கட்டில்தான் அமானுல்லா ஆசுவாசமாய் உட்காரும் இடம். அதனாலேயே ஆய்சா அவ்விடத்தைச் சுத்தமாக வைத்திருப்பாள். வீட்டின் காம்பௌண்டுக்குள் மரங்கள் இருப்பதால் இது வரை யாரும் மரத்திலிருந்து எதுவும் திருடியது இல்லை. தான்தான் வீட்டின் உரிமையாளர் என்று நினைவூட்ட வருடத்திகற்கு ஒருமுறை வீட்டின் உரிமையாளர் வந்து ஊறுகாய் போட இந்த மாங்காய் நன்றாக இருக்கும் என்று சொல்லி அந்த சாக்காட்டில் வீட்டை நோட்டமிட்டு மாங்காயைக் கொஞ்சம் எடுத்துப்போவார் அவ்வளவுதான் அவர் பங்கு, மற்றபடி தோட்டத்தில் விளைந்த அனைத்தும் ஆய்சா

கட்டுப்பாட்டில்தான் இருக்கும். அதனாலேயே அவசரத்துக்கு பல நாள் முருங்கக்காய் குழம்பு, மாங்காய்க் குழம்பு தான்.

அமானுல்லா காந்திபுரத்தில் சப்பல்கடை வைத்திருந்தான். நல்ல சிவப்பு நிறம், முப்பத்தைந்து வயது இருக்கும். கூர்மையான மூக்கு. பார்த்தால் இந்திப் பட கதாநாயகன்போல் இருப்பதால் அவன் கட்டிக்கொள்ளும் பெண்ணும் சிவப்பாக இருக்கவேண்டும் என்று காத்திருந்து ஆய்சாவை கட்டினான். அவளும் சளைத்தவள் அல்ல நீளமான சுருள்முடி. நல்ல அரேபிய பெண்போல் சிவப்பு நிறம், பளிச்சென்ற உருண்டை கண்கள். மலையாளப்பட நாயகிபோல் இருப்பாள். அவர்களுக்குப் போட்டியாக சான்ஸா பிறந்தான். இருவரின் அன்பின் சின்னமாக சான்ஸா இருந்தான். ரத்தினபுரி பள்ளிக்கூடத்தில் நான்காம் வகுப்பு படித்து வந்தான். படுசுட்டியான அவனுக்குப் பக்கத்தில் இருக்கும் ராஜா டைலர்கடைதான் அரட்டையடிக்கும் இடமாக இருந்தது. சின்னதிலிருந்தே யாரிடமும் சக்கென ஒட்டிக்கொள்ளும் பழக்கம் சான்சாவிடம் இருந்தது அதானால் எல்லோருக்கும் அவனைப் பிடித்துவிடும்.

அமருக்கும் ராஜாவுக்கும் வேலையில்லாத நேரம் சான்ஸாதான் பொழுது போக்கு. இருவருக்கும் இன்னும் கல்யாணம் ஆகவில்லை கவுண்டம்பாளையத்தில் இருவரின் வீடும் இருந்தது. முஹம்மத் ராஜா என்ற தனது பெயரின் சுருக்கமாய் ராஜா டைலர்கடை என்று வைத்திருந்தான். ராஜாவும் அவன் நண்பன் அமரும் டவுன்ஹால் குமார் ரெடிமேட்சில் டைலராக ஒன்றாக வேலை பார்த்துவந்தபோது நாமும் தனியா கடை ஆரம்பிக்கலாம் என்று முடிவு செய்து அமர் தயங்கிய “உன்ட்ட காசு இல்லேன்னு தெரியும், நான் பார்த்துக்குறேன் ஆனா நீதான் என் பார்ட்னர்” என்று பெரிய தொழிலில் இறங்குவதைப்போல் இந்தக் கடை திறந்தார்கள். பலரும் ராஜாவும், அமரும் அண்ணன் தம்பி என்றுதான் நினைத்துகொண்டு இருந்தார்கள். ராஜாவின் முழுப் பெயரும் தெரிந்தவர்களுக்குத் தான் உண்மை தெரியும்.

அமானுல்லாவுக்கு எந்தக் கெட்ட பழக்கமும் இல்லை. அதேபோல் கெட்ட சாவுகாசமும் இல்லாமல் குடும்பப்பொறுப்போடு இருப்பது பார்த்து ஆய்சாவே பல நேரம் ஆச்சிரியப்படுவாள். கல்யாணமாகி பத்து வருடங்கள் ஆனாலும்கூட புதுக்காதலர்கள் போல இருவரும் கொஞ்சிக்கொள்வார்கள். ஆய்சாவின் மந்திரகோலுக்கு எப்போதும் என்ன சொன்னாலும் கேட்கும் அவன் பள்ளிவாசலுக்குத் தொழுகைக்கு போவதற்கு மட்டும் அசைந்து கொடுத்ததே இல்லை. அவன் தொழுகைக்குப் போனதை ஆய்சா பார்த்ததே இல்லை. பலமுறை கெஞ்சிப்பார்த்திருக்கிறாள். அழுது பார்த்திருக்கிறாள். “ம்ஹூம்’ அசைந்தது கிடையாது. அநேகமாய் ஆய்சாவுக்கும் அமானுல்லாவுக்கும் சண்டை வந்தால் அது பெருநாள், நோன்புக்கு தொழுகைக்குப் போவது சம்மந்தமாகத் தான் இருக்கும் “என்னைக்கும் போறதில்ல இன்னைக்குப் பெருநாள் அன்னைக்குக் கூடவா போக முடியாது” என்று முகத்தைத் தூக்கி கொள்ளுவாள். ஆனாலும் அவனிடம் எந்தப் பருப்பும் வெந்தது இல்லை.

அதற்குக் காரணம் அவன் அத்தா போனதில்லை அவர் திமுகவில் இருந்ததால் என்னமோ தொழுகைக்கு எல்லாம் போகாமல் அப்பிடியே பழக்கமானவர். அப்பிடியே இருந்து பழகிவிட்டார். தங்களுடைய மகனைத் தொழுகைக்குப் போகாதே என்று சொன்னதில்லை. அதேபோல “போ” என்று விரட்டியதும் இல்லை. வீட்டில் தொழுகைக்குப் போவதெல்லாம் கட்டாயமில்லை என்பதால் அவனும் அப்பிடியே பழகி பள்ளிவாசல்பக்கமே தலைவைத்து படுக்காதவன். திடீரென தொழுகைக்குப் போகச்சொல்லி ஆய்சா சொல்லுவது எப்போதும் அவனுக்கு புதியதாக இருந்தது. துவக்கத்தில் அதிக சத்தமிட்ட ஆய்சாவிடம் காலம் செல்லச்செல்ல மெல்ல மெல்ல சத்தம் குறைந்து விட்டது. தொழுகையைப் பற்றி யாராவது சொன்னால் அவனால் மறக்கமுடியாத நியாபகம் ஒன்று இருக்கிறது. இது வரை யாரிடமும் சொல்லாமல் கோழி அடைகாப்பது காக்கப்பட்டுள்ள ஒரு ரகசியம்.

கல்யாணம் ஆன புதிதில் பத்து நாளுக்குள் பக்ரீத் நோன்பு வந்துவிட்டது. மொதோ நோன்பு என்பதால் ஆயசாவின் வீட்டுக்கு முதல்நாள் இரவே இருவரும் சோடி போட்டுப் போயாகிவிட்டது. புதுமாப்பிளை வந்ததால் ஒரே அமர்க்களமாக இருந்தது. விடியவிடிய மைலாஞ்சிக் அரைத்துக் கையில் விதவிதமாகப் போட்டார்கள். ஆய்சாவும் அவள் சோட்டுகளும் தூங்கவே இரவு ஒருமணி ஆனது. காலையில் ஆய்சா அவனை எழுப்பி தொழுகைக்கு நேரம் ஆச்சு கிளம்புங்க என்று சொல்லும் போதுதான் அமானுல்லாவுக்கு நினைவே வந்தது. நமக்குத் தொழவே தெரியாது என்ற ரகசியத்தை இன்னும் சொல்லவே இல்லையென்று திருதிருவெனப் பார்த்தான். “ஏன் என்னாச்சு” என்று ஆய்சா கேட்க உண்மையைச் சொல்லிவிடலாம் என்று தோன்றினாலும் தன்னைப் பெண் வீட்டார் தப்பாக நினைத்து விட்டால் என்ன செய்வது “பொறுக்கிகள்தான் பள்ளிக்குப் போகாமல் ஊர் சுற்றுபவர்கள்” என்று அவன் காதுபடவே பலர் பேசியதைக்

கேட்டிருந்தாலும் தன்னை ஆய்சாவின் வீட்டில் “தொழுகைக்கே போகாத பையனவா என்புள்ளைக்கு கட்டி வச்சேன். அல்லாகுவே என்புள்ள வாழ்க்கையே நாசமாப் போச்சு” என்று நோன்புநாள் அன்று எல்லோரும் மௌத்வீடுபோல் ஒப்பாரிவைத்தால் என்ன செய்வது என்று தெரியாமல் விழித்தான். ஆய்சா கிளம்பச் சொல்லி வேகப்படுத்திக் கொண்டே இருந்தாள். சரி என்று கிளம்பிப் போய்விட்டு எங்காவது ஊர்சுற்றிக்கொண்டு பின்னர் வரலாம் தெரியவா போகிறது அல்லது பின்னால் வந்து யாராவது கண்காணிக்கவா போகிறார்கள் என்று அழகான திட்டமிட்டு குளித்துக் கிளம்பி புதுத்துணி போடும்போது அடுத்த தெருவில் இருக்கும் ஆய்சாவின் அக்கா புருசன் வந்து “என்ன சகளே ரெடியா, போலாமா?” என்று குபிரென்று செய்த்தானைப்போல வந்து நின்றான். அடப்பாவிகளா! இன்னைக்கு வசமா சிக்கி கொள்ளுவுமே என்று அமானுல்லா மருவினான். நாம் ஒரு திட்டம் போட்டால் அல்லா ஒரு திட்டம் போடுகிறார் என்று உள்ளுக்குள் பொருமினான். “என்னங்கே வெரசா கிளம்புங்க மச்சான் உங்களுக்கொசரம் நிக்கிறாரு” ஆய்சா விரட்டினாள். “இல்ல இல்ல மெதுவா வரட்டும் நா நிக்கிறேன் “ அடம்பிடித்து வேதாளம்போல சகலைநின்று கொண்டு இருந்தான். ஆய்சா நின்றுகொண்டிருந்த மச்சானுக்கு நாற்காலி போடாச் சென்றாள். வேறு வழியில்லை ஆய்சாவிடம் உண்மையைச் சொல்லிவிட வேண்டியதுதான், நாமே சொன்னால் நல்லது ஒரு வேளை அவள் மச்சான்வந்து சொல்லி அசிங்கப்படுவதைவிட நேர்மையாகச் சொன்னேன் என்ற நல்லபேராவது வாங்கிகொள்ளலாம் என்று முடிவுசெய்து ஆய்சாவை அழைத்தான். “ஆய்சா ஆய்சா” யாராவது தன்னை பார்க்கிறார்களா என்று நோட்டமிட்டு அவன் இடுப்பைக்கிள்ளி “என்ன மச்சான் ரெடியா” என்று தன்னைச் செல்லமாய் அழைத்தது அவனை அப்பிடியே சொக்கியது. ஐஸ்கட்டியை எடுத்து பனியனுக்குள் அவள் போட்டதுபோல் இருந்தது. சொல்ல வந்ததை மறந்து “நா தொழுகைக்கு போயிட்டு வரேன்” என்று மடங்கிப்போனான். சிரித்துக்கொண்டே சகலையின் வண்டியை நோக்கி நடந்தான். இன்னும் கொஞ்ச நேரத்தில் ஹார்ட் அட்டாக் வந்துவிடுவதுபோல் இதயம் படபடப்பாகத் துடித்தது. இதயத்திலிருந்து இரத்தம் சூடாகி உடல்முழுக்க பரவுவதை அமானுல்லா உணர்ந்தான்.

பள்ளிவாசல் வீட்டிலிருந்து ஒரு கிலோமீட்டர் இருக்கும் பஜார்பக்கத்தில் உள்ளது. எப்படி தப்பிப்பது என்று யோசித்துக்கொண்டே வந்தான். என்ன சகலே ஒரே யோசனையா இருக்கு என்று அவன் கேட்க. “ஒண்ணுமில்ல” என்று சொல்லிவிட்டுப், பேசாமல் இவரிடம் உண்மையைச் சொல்லிவிடலாம் சகலையும் சகலையும் சேர்ந்து கொள்வதைத் தவிர வேறுவழி இல்லை. ஒருவேளை எப்போதாவது வீட்டில் அவனுக்கும் நமக்கும் சண்டைவந்து சொல்லிக்கொடுத்தால் என்ன செய்வது “உங்க சின்ன மாப்பிளைக்கு தொழுகவே தெரியாது அவனெல்லா ஒரு முஸ்லிமூ தூப்” என்று போட்டுடைத்தால் “ஐயோ வேண்டாம்” எந்த அபாய முடிவும் எடுக்க வேண்டாம். அமைதியாகவே வந்தான். “என்ன ஒண்ணும் பேசாம வரிங்க” என்று சகலை ஆரம்பித்தான். “அமானுல்லா என்ன ஆனாலும் வாய விட்டுடாதே” உள்ளிருந்து பட்சி சொன்னது. “ஒண்ணுமில்ல ஊருலே ரெண்டு மூணு வேலையே அப்பிடியே விட்டுட்டு வந்துட்டேன், அதான் யோசனையா இருக்கு” என்று சொன்னான். “அட விடுங்க சகலே ஒண்ணு ஆய்டாது நோம்புக்கு வந்துட்டு சந்தோசமா இல்லாம அப்பிடி வேல வேலன்னு யோசனையாவே இருக்காதீங்க’ என்று சொன்னான்.

பள்ளி வந்துவிட்டது. வண்டியை நிறுத்திவிட்டு ஒழுச் செய்ய தண்ணித்தொட்டிக்கு சகலை அழைத்து சென்றான். அமானுல்லா இதயம் படபடவென அடித்தது. பேசாமல் சொல்லிவிடலாமா? என்று ஒரே குழப்பமாக இருந்தது. பார்த்தும் பார்க்காததுபோல் சகலை செய்வதுபோல் அப்பிடியே ஒழுவு செய்தான். கை, கால்,முகம்,காதுமுதல் கால்வரை சுத்தம் செய்தாகிவிட்டது. தொப்பியை எடுத்துத் சகலை வைக்க அமானுல்லா தனது கர்சிப்பை எடுத்து தலையில் கட்டி பள்ளிக்குள் இருவரும் சென்றார்கள். இனித் தப்பிக்க வழியேயில்லை என்ற முடிவுக்கு வந்தான் அமானுல்லா. “இது என்ன ரெம்ப பழமையான பள்ளியா?“ சிக்கந்தர். “ஆமாம் சகலே ஒரு நூறு வருஷம் இருக்கும்” என்றான். அப்பாடா அல்லா நமக்கொரு வழியைக் காட்டிவிட்டன் “சகலே நீங்க போய் அப்பிடியே முன்னாடி நில்லுங்க நான் அப்பிடியே பள்ளிய பாத்துட்டு வந்து நிக்கிறேன்.” என்று நைசாக சகலையை அனுப்பினான் “போய் பாத்துட்டு வாங்க சகலை” என்று சொல்லி தொழுகை செய்யும் வரிசை நோக்கி சகலை சென்றான். மறுகணமே “விட்டாப் போதுண்டா என்று நைசாகப் பள்ளிலிருந்து அமானுல்லா வெளியே வந்தான். எல்லோரும் உள்ளே செல்லும்போது இவன் மட்டும் வெளியே செல்வதைப்பார்த்து ஒரு நன்னா “தொழுக ஆரம்பிச்சுடும் இப்போ பார்த்து எங்க போறே பாவா” என்று கேட்டார். வண்டி சாவி எடுக்க மறந்துட்டேன் அதான் போறேன்” “சீக்கிரம் வா” அவர் சொல்லியபடி நடந்தார். முகத்தைத் துடைப்பதுபோல் அலேக்காகத் தலையில் இருந்த கர்சிப்பை எடுத்து பேன்ட் பாக்கெட்டில் வைத்துத் தூரத்தில் தெரிந்த டீக்கடை நோக்கி வேக வேகமாக நடந்தான். நெஞ்சின் படபடப்பு கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து ஒருமாறி ஆசுவாசத்திற்கு வந்தான்.

தொழுகை செய்வது ஒவ்வொரு இஸ்லாமியனின் கடமை அதனைத் தவிர்ப்பது இறைவனுக்கு செய்யவேண்டிய கடமையை தவறுவது மட்டுமல்ல தனக்கே செய்துகொள்ளும் துரோகமும்கூட. இந்த நல்லநாளில் இறைவனுக்கு நமது கடைமையைச் செய்வது இறைவன் ஒவ்வொருவரையும் கண்காணிக்கிறான்; அவன் செய்த செயலுக்கு மறுமையில் செயலாற்றுவான்” என்று இமாம் மைக்கில் பயான் சொல்லிக்கொண்டு இருந்தார். அந்த இமாம் தன்னைக் குத்தி காட்டுவதாக அவனுக்குத் தோன்றியது. தொழுகை முடியும் வரை அந்த டீக் கடையிலே காத்திருந்து எல்லோரும் வரும் போது நைசாக கூட்டத்தோடு கூட்டமாகக் கலந்து சகலையைக் கட்டிப்பிடித்து முலாகத் செய்தான்.

வண்டியில் திரும்ப வரும்போது சகலையைப் பேச விடாமல் பள்ளி அப்பிடி இப்படி என்று அளந்துகொண்டே வீட்டுக்கு வந்துசேர்ந்துவிட்டார்கள். தொழுகைக்குப் போய்வரும் மாப்பிளைகளை வரவேற்க ஆய்சாவும் அவள் அக்காவும் ஆரத்தித் தட்டுடன் தயாராய் நின்றுகொண்டிருந்தார்கள். யோக்கிய மாப்பிள்ளைபோல் வீட்டுக்கு வந்து சலாம்சொல்லி எல்லோருக்கும் நோம்பு காசு கொடுத்து குடும்பத்தில் கலந்துவிட்டான். இப்போதும் ஆய்சா சொல்லுவது “கல்யாணம் ஆனமொத நோம்புக்கு தொழுகைக்குப் போனிங்க இப்ப வர போறதில்ல” என்று சொல்லிக்கொண்டே இருப்பாள். அவனுக்கு மட்டும்தான் தெரியும் அப்போதும் போகவில்லை என்ற ரகசியம். ஆனாலும் ஒரு முஸ்லீம் செய்யவேண்டிய அடிப்படை கடமைகளில் தொழுகை மட்டும்தான் அவனிடம் குறையாக இருந்தது. மற்றபடி அல்லாவுதாலா சொன்ன அனைத்து வழிகளுக்குள்ளும் அவன் பொருந்திப் போனான். தொழுகைக்குப் போகவில்லை என்றாலும் அமானுல்லா ஒழுக்கமாக இருப்பது ஆய்சாவிற்கு பெரும் திருப்தி. முஸ்லிமா இருந்துட்டு பல பேரு பீடி தண்ணி அடுச்சுட்டு குடும்பத்த பாக்காமே தெள்ளவாரியா சுத்திறத பாக்குறே ஆய்சாவிற்குத் தன் புருசன் மிக நல்லமனிதனாக தெரிந்தான்.

கிறிஸ்மஸ் வருவதால் ராஜா டைலர்கடையில் கடந்த ஒருவாரம் இரவு பகலாக வேலை கூடி இருந்தது. அந்தப்பகுதியில் ரெண்டு தெரு தள்ளித்தான் சர்ச்சும் இருந்தது. கிறிஸ்துவர்கள் ஆங்காங்கே கொஞ்சம்பேர் இருந்தனர். அதனால் கிறிஸ்மஸ், தீபாவளி, ரம்ஜான் என எல்லா நோம்பிக்கும் வேலை இருக்கும். எல்லாவற்றையும் கணக்குப் பண்ணித் தான் ராஜா அங்கு கடை வைத்தான். வேலை செய்யும் நேரம் யாரையும் தொல்லை செய்யக்கூடாது என்று ஆய்சா சான்சாவை வீட்டுக்குளே வைத்திருந்தாள்.

எப்பிடியாவது விடுதலை கிடைத்தால் போதும் என்று அவன் செய்யும் எந்தத் திட்டமும் அழுகையும் அவுனுக்குக் கைகூடவில்லை. “சரிமா நான் அமர் அண்ணாட்ட போகலே கோயில்டே போய் விளையாட அனுப்புமா” என்று அடம்பிடித்தான். அங்கேயும் ஆய்சா போக அனுமதிக்கவில்லை.

இன்னும் கொஞ்சநாளில் கிறிஸ்மஸ் வருவதால் வீதியே உற்சாகமானது. அங்கே கிறிஸ்மஸ் வந்தாலும் சரி மாரியாத்தா நோம்பி வந்தாலும் சரி வீதியே கலகலவென்று இருக்கும். மாரியாத்தா கோவில் கம்பம் சாட்டிவிட்டால் தினமும் மாலைநேரம் மஞ்சள் பூசிய கம்பத்தைச்சுற்றி இளசுகள் ஆடுவதும் அதனை ரசிக்கேவே இளம்பெண்கள் தாவணியோடு வந்துநின்று வெட்கப்படுவதும், வெட்கத்தைப் பார்த்த இளசுகள் ஒன்னாம் ரெண்டாம் ஆட்டத்தை இன்னும் குத்தி உற்சாகமாக ஆடுவதும் என மாரியம்மன் கோவில் மைதானம் கலகலவென்று இருக்கும். கம்பம் சுற்றி ஆடுவதில் அந்த தெருவில் உள்ள எல்லா மத இளசுகளும் அவர்கள் வீட்டுப்பண்டிகைபோல வேறுபாடு இல்லாமல் கலந்து இருப்பார்கள். இளசுகளுக்கு மாரியாத்தா நோம்பி வருகிறது என்றாலே கொண்டாட்டம்தான். மரியம்மன் திருக்கல்யாண ஊர்வலம் நடக்கும்போது எந்த வேறுபாடும் இல்லாமல் எல்லோரும் ஆத்தாவுக்குத் தேங்காய், பழம் பூஜைக்குக் கொடுத்து ஆத்தாவை ஆராத்தி செய்து வாங்கிய திருநீறைப் பிள்ளைகளுக்குப் பூசுவார்கள். மளிகைக் கடை காதர்பாய் அவர் கடைமுன்பு சாமி வந்தபோது தேங்காய் பழம் கொடுத்து வாங்கியதும், அவர் கடையின் அருகில் குடியிருக்கும் மதலை மேரி அக்காவும், மும்தாஜ் அக்காவும் காதர்பாய் செய்தது போலயே சாமிக்குப் பூஜைக்குத் தேங்காய் பழம் கொடுத்து வாங்கியதை ஆய்சாவுக்குக் குடிவந்த புதிதில் புரியவில்லை அதிசயித்துப் பார்த்தாள். மறுநாள் காதர்பாய் கடைக்குப் போனவள் இதைக் கேட்கலாமா வேண்டமா என்று மருவி மருவி நிற்க அதைப்பார்த்த அவரே ஏறிட்டு கேட்டார் “என்னம்மா ஆய்சா” “இல்ல பாய் நாம இஸ்லாமானவங்க நம்ம அந்த சாமிக்கு ஆரத்தி கொடுக்கிறது தப்பு இல்லையா?” என்றாள்.

இதல என்னமா இருக்கு? நாம அல்லானு சொல்றோம் அவுங்க ஆத்தான்னு சொல்றாங்க சக்கரைனாலும் சீனினாலும் பொருளு ஒண்ணுதாமா இதுலே பிருச்சு பாக்க என்ன இருக்கு? மனசுதாமா காரணம் எல்லாமே ஒண்ணுதான் நினைச்சா நமக்கு பிரிவின தெரியாது, இது காலகாலமா நம்ம மூத்தவங்க எல்லா இடத்திலையும் பண்ணிட்டு வரதுதான். பல ஊருலே நாமதான் முதல்லே சாமிக்கு ஆரத்தித்தட்டு கொடுக்கோணும். அப்புறம்தான் மத்தவங்க. இது எத்தன வருசமா நடக்குதுன்னு யாருக்கும்தெரியாது ஏன் நடக்குதுன்னும் தெரியாது.

எல்லாரும் ஓர் ஆண்டவன் பிள்ளைங்க தானே நமக்கு நல்லதே அல்லா செஞ்சா என்ன ஆத்தா செஞ்சா என்ன எல்லோரும் நல்ல இருக்கோணும்” என்றார். அடுத்த வருடம் முதல் ஆய்சாவும் அம்மன் தேர் ஊர்வலத்தில் தேங்காய் பழத் தட்டோடு நின்றாள்.

ஒருநாள் கணவருக்காகத் தாலி பூஜையென்று விளக்குப் பூஜை நடத்த வீதியில் இருக்கும் பெண்கள் எல்லோரையும் அங்கிருந்த சில இளவட்டங்கள் அழைத்தார்கள். அவர்கள் அழைத்த போது யாருக்கும் புரியவில்லை இதற்கு முன்பு கோவிலில் எல்லோரும்கூடி விளக்குப் பூஜையெல்லாம் செய்தது இல்லை அப்பிடியொரு வழக்கம் இருந்தது இல்லை தாலிபூஜை என்று சொன்னபோது எல்லோருக்கும் சிரிப்புதான் வந்தது. அப்பிடி இப்பிடி என்று ஒரு இருபது பெண்களைத் திரட்டிக் கோவில் மைதானத்தில் கோவில் பூசாரியோடு எங்கிருந்தோ கூட்டி வந்த இன்னொரு பூசாரியையும் வைத்து விளக்குப் பூஜை நடைபெற்றது. எதற்காக இப்பிடிச் செய்கிறார்கள் என்று யாருக்குமே புரியவில்லை அன்று மாலை அந்த வீதிப் பையனை ராஜாகடை அருகிலிருக்கும் பாக்கியம்மா பாட்டி அழைத்தாள். அவன் தான் எல்லோரையும் பூஜைக்கு வரச்சொல்லி கூப்பிட்டுக் கொண்டிருந்தான். நல்ல சுருட்டை முடியுடன் வட்டமுகமாய் இருந்தான். பாக்கியம்மா பாட்டி ஆய்சாவோடு பேசுவதை நிறுத்திவிட்டு ”எதுக்குபா தாலி பூஜை” என்று கேட்க அவன் “எங்களுக்கு என்ன தெரியும் பக்கத்து வீதி ரமேஸ் அண்ணன்தான் இப்படியெல்லாம் நாமே பண்ணி வீட்டுலே நம்ம எல்லோரும் நல்ல புள்ளைங்கனு பேரு வாங்கணும் சொல்லி எல்லாத்தையும் விளக்கு பூஜைக்கு அழைத்து வரச்சொல்லி அதுக்கு ஆகுற எல்லா செலவையும் அவருதான் பண்றாரு” என்றான். எங்க காலத்துலே அப்பிடியெல்லாம் ஒண்ணும் இல்லையேப்பா” என்றாள். அவன் திருதிருவென்று முழித்தான்.

ஊர்லே இருக்கிற புருசனெல்லா நல்ல இருக்கொனுமுனு அந்தப் புள்ள எதுக்குடா செலவு பண்ணனும்” என்று கேட்டாள். அவன் தெரியவில்லை என்று தலையாட்டிவிட்டு “அவரு நாளையிலிருந்து எங்களுக்கு எக்ஸ்சைசும் கத்துத் தரேன்னு சொன்னாரு” என்றான். “அப்பிடினா?” “உடற்பயிற்சி பாட்டி” என்று சொல்லி நகர்ந்தான். பரவாயில்லை பசங்களுக்கு நல்ல புத்தி வந்து தொலஞ்சுருக்கு” என்று பாட்டி ஆய்சாவிடம் சொல்லிக்கொண்டிருந்தாள்.

ஆனா எல்லா புருசனும் நல்ல இருக்கே இந்தப் புள்ள எதுக்கு செலவு பண்ணோணும் அவனுக்கு யாரு பணம் குடுப்பா இல்லாட்டி அவனுக்கென்ன பிரயோஜனம்” என்று சொல்லும்போது அடுப்பில் வைத்த பருப்பு தீயற வாசம் கேட்டு “ யே புள்ளே தீரே வாசம் அடிக்குது” என்று அடுப்பங்கரை நோக்கி விடுக்கென நடந்தாள்.

இரவு வீட்டுக்கு வந்த அமானுல்லாவிடம் விளக்குப் பூஜை பற்றியும் அந்தப் பையன் பேசியதையும் ஆய்சா சொன்னாள். அவனுக்குப் புரியவே இல்லை. “இந்த வீதியில பொறுக்கித்தனம் பண்ணிட்டு தெள்ளவாரியா நெறய திரியுது யாராவது நல்ல புத்தி சொல்லி எல்லாம் உருப்புடுச்சுன்னா நல்லதுதான் என்று அவன் மனசுக்குப்பட்டது.

எல்லாப்பசங்களும் விளையாடிய கோவில் மைதானத்தில் சில பொடியன்கள் நாங்க எக்ஸ்சசைசு பண்றோம் என்று மாலைநேரம் மைதானத்தை ஆக்கரமித்திருந்தனர். கோவில் மைதானத்தில் வட்டமாய் உட்கார்ந்துகொண்டு பேசுவதை அப்பிடி என்ன தான் பேசுகிறார்கள் என்று எல்லோருக்கும் ஆவல் இருந்தது. பக்கத்துக்கு வீதிப் பையன் ரமேஷ் உடற்பயிற்சி கற்றுத் தர அழைத்து வந்த ஆள் ஆறடி உயரம் இருந்தான். நல்ல வாட்டசாட்டமாய் மாநிறத்தில் இருந்தான். ஒரு தேர்ந்த ஞானி பேசுவதைப்போல் இடையிடையே சில தர்ம நன்னெறிக் கதைகளைச் சொல்லி சுவாரஸ்யமாய் பேசினான். “இந்த நாடு நாம் எல்லோருக்கும் சொந்தமானது இந்த நாட்டின் விடுதலைக்கு எவ்வளவு பேர் போராடினார்கள் என்று தெரியுமா? நாம்பாரத நாட்டைக் காப்பது ஒவ்வொரு இளைஞரின் கடமை. விவேகானந்தர் சொன்னார் நூறு இளைஞரைக் கொடுங்கள் இந்த உலகத்தையே மாற்றிக்காட்டுகிறேன் என்றார். அதற்குக் காரணம் இளைஞரினால் மட்டும்தான் எதுவும் செய்யமுடியும். நம் பாரத நாட்டையும் பாரதத் தாயையும் காக்கவேண்டும் அதற்குத் தீங்கு செய்பவர்கள் யாராக இருந்தாலும் நாம் அவர்களுக்கு எதிராக நாட்டுப்பற்றைக் காட்டவேண்டும் அதற்கு நாம் திடமாக இருக்கவேண்டும் என்பதற்குத்தான் மாலைநேர உடற்பயிற்சி. இங்கே உங்களுக்குக் கபடி, சிலம்பம், கராத்தே என்று எல்லாம் சொல்லித் தரப்படும். அதனை நாம் நாட்டின் பாதுகாப்புக்காக எப்போது தேவைப்பட்டாலும் பயன்படுத்த வேண்டும்” என்று அந்த ஆள் பேசியதை மைதான மரத்தடியில் உட்கார்ந்திருந்து பார்த்துக்கொண்டிருந்த பெருசுகளுக்குப் பசங்களுக்கு நல்ல புத்தி சொல்லக் கொஞ்சம் பேர் இருப்பது பெருமையாக இருந்தது. ஆனால் அவர்கள் பேசுவது ஒன்றுமே அங்கு விளையாடும் சின்ன வண்டுகளுக்கு புரியவே இல்லை. மண்ட கடிக்குது என்று ஓடிவிட்டார்கள். அவர்கள் அரும்பு மீசைக்காரர்களிடம் மட்டுமே ஆர்வமாகப் பேசுவதும் கதைசொல்வதுமாக இருந்தனர்.

ஆர்வமாய்ப் பயிற்சிக்கு வந்த பையன்கள் கொஞ்சநாளில் பாதியாய்க் குறைந்து போயினர். மாலைநேர பயிற்சி வகுப்பை ரமேஷ் பொறுப்பாய் இருந்து சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தான். பயிற்சியின் துவக்கத்தில் வந்துகொண்டிருந்த அந்த இளம் ஞானி இப்போதெல்லாம் அங்கு வருவதில்லை எப்போதாவது வருவதும் அவர்களுடன் தீவிரமாய்ப் பேசுவதும் என்று இருந்தார். ரமேஷ் மண்டல வகுப்பு என்று எதோ ஓர் ஊருக்கு அழைத்துச் சென்ற போதிலிருந்து அவன்தான் அந்த பயிற்சி மையத்தின் முழு பொறுப்பைப் பார்த்துக் கொண்டிருந்தான், அவன் வந்ததற்குப் பின்புதான் மாரியம்மன் கோவில் முன்பு தென்னை ஓலை பந்தல் கட்டி விநாயகர் சிலை வைத்து வழிபடுவதும் அதை மூன்று நாட்கள் விசேடமாகக் கொண்டாடுவதும் நடக்க ஆரம்பித்தது.

அமானுல்லா எப்போதாவது ஒருநாள் வியாபாரத்திற்குப் போகாமல் விடுமுறை எடுப்பான். அன்று உடலுக்குச் சலிப்பாய் இருக்கிறதென்று விடுமுறை எடுத்து, முருங்க மரத்தடியில் கயிற்றுக்கட்டலில் படுத்துக்கொண்டு ஆய்சாவிடம் பேசிக்கொண்டு இருந்தான். மதியநேர வெய்யிலுக்கு முருங்கமரக் காத்தும், மாமர காத்தும் இதமாய் இருந்தது. டைலர்கடை முன்பு சண்டைபோடுவதுபோல் சத்தம் கேட்டு அமானுல்லா வெளியே வந்தான். அந்த வீதியில் இருக்கும் அந்தச் சுருட்டை முடிப் பையன் சத்தம் போட்டுக்கொண்டிருந்தான். அவனுடைய பேகிஸ் பேண்ட்டில் சொன்னளவு வைக்கவில்லை இன்னும் அதிகமாக தொழத்தொழ சொன்னதாக கத்திக்கொண்டிருந்தான். அவன் கேட்டளவு வைத்தால் அவன் உடம்புக்கு மிகவும் அசிங்கமாக இருக்கும் என்றும் தெருவெல்லாம் கூட்டிக்கொண்டே போவான் என்பதால் அமர் தான் இரண்டு இன்ச் கம்மியாக வைத்தான். “எப்பிடி இருந்தா எனக்கு நல்ல இருக்குமோ அப்பிடி வைத்து தெய்ங்கன்ன” என்று எப்போதும் சொல்லுமவன் இன்று கத்தோகத்தென்று குதிப்பது எல்லோருக்கும் ஆச்சிரியமாக இருந்தது. அப்பிடியெல்லாம் அடம் பிடிக்கும் பையனும் அல்ல, தகவல் கேட்டு அங்கு வந்த ரமேஷ் வேண்டுமென்றே ராஜாவைப் பார்த்து வெறுப்பாய்ப் பேசினான். “என்ன உன் இஷ்டத்துக்குத் தெச்சுக் குடுப்பே அத நாங்க போட்டுட்டு திரியனுமா? நாங்க என்ன சொல்றமோ அதத்தான் நீ செய்யக் கட வச்சுருக்கே அப்பிடி தெக்கே தெரியலையா கடயக்

காலிபண்ணிட்டு போயிட்டே இரு” என்று குதித்தான். கூட்டம் கூடிவிட்டது. தொழில் செய்யும் இடத்தில் வம்பு வேண்டாம் என்று மருகி மருகி ராஜா நின்றான். இடைமறித்த அமர் “அண்ணா ராஜா தெய்க்கில நான்தான் அவுனுக்கு அசிங்கமா இருக்குனு கொஞ்சம் கம்மி பண்ணி தெய்ச்சேன்” என்றான். “சரி கட அவனோடதுதானே அப்போ அவன்ட்டதானே கேக்கோணும்” என்று ராஜாவை நோக்கியே வந்தான். “ஒழுக்கமா இருக்கோணு இல்ல கட இருக்காது” என்றான். ஒண்ணுமே இல்லாத சின்ன விசியத்தை அவன் பெரிதாக்கியது எல்லோருக்கும் முகம் சுழிக்கச் செய்தது. பெரிய பிரச்னையாகிவிடுமோ என்று அமானுல்லா தயங்கியபடி தலையிட்டான். “சரி தெரியாமா நடந்துருச்சு விடுங்க இனிமே இப்பிடி வராம அவங்களே பாக்கச் சொல்லலாம்” என்றான். “ ! நீங்க சப்போர்ட்டு என்ன எல்லாம் ஒண்ணு சேரிங்களா” என்று ரமேஷ் முடிச்சுப்போட்டுப் பேசினான். “அதென்ன எல்லாரும் ஒண்ணு சேரிங்களா? பொதுவா நியாயமா தானே கேக்குறோம் அதுக்குள்ளே என்ன முடுச்சு போட்டு பேசுறது“ என்று அமானுல்லா கடுப்பாகிக் கேட்டான். ரமேஷ் விடைத்து நின்றான்.

அட விடுங்கப்பா இது ஒரு விசியோனு தொனதொனனு பேசிட்டு போய் வேலய பாருங்க” என்று ஒரு பெருசு நாசுக்காகச் சத்தம்போட்டு விலக்கியது. வெடப்பாய் நின்றுகொண்டு இருந்த ரமேஷை அங்குள்ள இளவட்டங்கள் இழுத்துப் போனார்கள். “அட விடுப்பா கொஞ்ச நாளாவே இவுனுக இப்படிதா திரியறானுங்க” என்று அந்தப் பெருசு அமானுல்லாவிடம் சொல்லி நகர்த்தினார். இவனிடம் எதுக்குப் பேசவேண்டும் என்றுதான் முதலில் அமானுல்லாவும் நினைத்தான். முதலில் பார்த்த ரமேசுக்கும் கொஞ்ச மாதங்களாக பார்க்கும் ரமேசுக்கும் நிறைய வித்தியாசம் உள்ளதை அமானுல்லா கவனித்துக்கொண்டுதான் வந்தான். எல்லோருக்கும் அவன் உடற்பயிற்சி என்று சொல்லும்போது நல்ல பையனாகத்தான் தெரிந்தான். ஆனால் அதன் பின்னால் அவனுடைய நடவடிக்கையும் பேச்சும் அமானுல்லாவின் மனதிற்குச் சரியாகப் படவில்லை. சில மாதத்திற்கு முன்பு அமானுல்லா வியாபாரம் முடிந்து கோவில் தாண்டி வீட்டுக்குப் போய்க்கொண்டிருந்த போது எப்போதும்போல் எல்லோரையும் வட்டமாய் உட்காரவைத்துப் பேசிக்கொண்டிருந்தபோது ரமேஷ் சம்மதம் இல்லாமல் ஓரக்கண்ணால் இவனைப் பார்த்துக்கொண்டு வட்டத்தில் உட்கார்ந்திருந்தவர்களை நோக்கி “இந்த நாடு இந்துக்களின் புனிதமான நாடு இங்கே பல மதங்கள் இருக்கிறது. ஆனால் அவர்கள் நமது வளர்ச்சிக்குத் தடையாகவோ நம் செயலுக்குத் தொல்லையாகவோ இருந்தால் அதனை அனுமதிக்க கூடாது. இந்த நாட்டின் புனிதத்தைக் கெடுப்பவர்கள் யாராக இருந்தாலும் நம் நாட்டிலிருந்து அகற்றும் பாரத காரியத்தைப் புண்ணியக் காரியமாகச் செய்ய வேண்டும்” என்று அவன் பேசியதை ஒரு நிமிடம் அதிர்ந்து அமானுல்லா பார்த்துக்கொண்டே போனான். அவன் இளைஞர்கள் மனதில் விதையை விதைக்கவில்லை விசத்தை விதைத்துக்கொண்டு இருக்கிறான். அதனால்தான் ராஜாவிடம் வம்பு இழுக்கும்போது தயங்கி தயங்கி அமானுல்லா தலையிட்டான்.

என்ன ராஜா அந்தப் பசங்க எப்பிடி தெச்சு தர சொல்லுறாங்களோ அப்பிடி செஞ்சு கொடுத்துட்டு போய்ட வேண்டியது தானே எதுக்குத் தேவை இல்லாம சங்கடம்” என்று அமானுல்லா கேட்டான்.

இல்லனா வேணுமுனு தான் இப்பிடி பண்றானுங்க, அந்தப் பையன் அவனுக்குத் தகுந்த மாறி எப்பிடி தெச்சுக் கொடுத்தாலும் வாங்கிட்டுப்போயி அதப்போட்டு நல்ல இருக்குதுனானு சொல்லிட்டுப் போவான் இதெல்லாம் அந்த ரமேஷ் பண்றது” என்று ராஜா சொன்னான்.

ரமேஷ்க்கு இதுல என்ன இருக்கு தன்கூட இருக்குற பசங்க அதனாலே கேக்க வாறான்.” என்று அமனுல்லா கூறினான். “அது இல்ல விசியம் போன மாசம் இந்தக் கட ஒனரப் பார்த்து இந்தக் கடய அவன் தம்பிக்கு வாடகைக்குக் கொடுக்கச் சொல்லிக் கேட்டு இருக்கான். அவரு ராஜாநல்ல பையன் சரியா வாடகை எல்லா குடுக்குறான் அதனால முடியாதுன்னு சொல்லிட்டாரு. அதுக்கு அவன் ‘நம்மாளுகளுக்குக் குடுத்தா பொலச்சுட்டு போவாங்க; ஆனா நீங்க பாயனுகளுக்கு தான் கொடுக்குறேனு சொன்னா எப்பிடிணா‘ என்று கேட்டு இருக்கான் ‘என்ன தம்பி இப்பிடியெல்லாம் பேசுறேனு’ சொல்லி அனுப்பிவச்சுட்டு எங்கிட்ட வந்து எனக்கும் அவனுக்கும் எதாவது பிரச்சனையானு கேட்டார். இதுவரை அவனிடம் பேசுனதே இல்லைன்னு நா சொன்னே, சரிப்பா ‘பார்த்துக்கோனு’ சொல்லிட்டு போயிட்டாரு அப்போ இருந்து கடய ஒரு மார்க்கமா பார்த்துட்டு போறான்” என்று ராஜா சொன்னபோதுதான் அமானுல்லாவுக்கு விளங்கியது.

வீட்டுக்குள் அமானுல்லா போனபோது ஆய்சா என்ன பிரச்சனை என்று கேட்டாள். அமானுல்லா நடந்ததை எல்லாம் சொன்னான். “நம்ம எதுத்த வீட்டு ராமசாமி தாத்தாவும் இந்தப்பசங்க போக்கே சரியில்லேனு போனவாரம் எங்கிட்ட சொன்னாரு, பீடி வாங்குன காசக் கேட்டதற்கு காதர்பாயிட்ட வம்பு பேசி இருக்காங்க” என்று அவள் சொன்னாள். தெருவில் ஒருவிதமான மாற்றம் நிகழ்ந்துவருவதை எல்லோரும் கவனித்து வந்தார்கள்.

இளம் வயது பையன்கள் எல்லாம் முன்பைப் போலில்லாமல் கொஞ்சம் முறுக்கி விட்டதுபோல் திரிந்துகொண்டிருந்தனர். இப்படி முறுக்கிக்கொண்டு சுத்துவது எங்கே போய் முடியுமோ என்ற கவலையும் அங்கே எல்லோருக்கும் இருந்தது. ரமேஷ் முன்பு அந்தத் தெருவில் தாலி பூஜை என்று சொல்லி வந்தபோது அவன் நல்ல பையனாக இருப்பான்போல இருக்கிறது என்று சொன்னவர்கள் அவன் போக்கு சரி இல்லையே என்று வெளிப்படையாகச் சொல்ல ஆரம்பித்தனர். ஆனால் அவன் அதைப் பற்றியெல்லாம் இப்போது கவலைப்படவில்லை. அவனைச் சுற்றி ஓர் இளவட்டம் என்ன சொன்னாலும் போகாது என்று சொல்லும் அளவு நெருக்கமாய் இருந்தார்கள்.

ஆய்சா சொன்னது அமானுல்லா மனதுக்குச் சரியாகப் படவில்லை இரண்டு வாரம் முன்பு அந்த ரமேஸ் காந்திபுரத்திற்கு செருப்பு வாங்கவந்து அமானுல்லாவை நன்றாக தெரிந்திருந்தும் அவன் கடைக்கு வராமல் பக்கத்துக் கடைக்குப் போய் செருப்பு வாங்கியது அப்போதே உறுத்தலாக இருந்தது. தெரிந்த கடைக்குப் போனால் விலை குறைவாகக் கிடைக்கும் என்று எல்லோரும் போவது சகஜம். ஆனால் அவன் வராததற்கு என் கடையில் எந்தப் பொருளும் வாங்கக் கூடாது என்ற அவனின் உள்நோக்கம் என்பது அமானுல்லாவுக்கு உறுத்தியது. அதனால்தான் ராஜா கடையில் தலையிட மனசு நெருடியது. அவனுடைய ஒவ்வொரு செயலும் அவனைப் பற்றிய பிம்பத்தை அமானுல்லா மனதில் உருவகப்படுத்தியது. . “செருப்பு வாங்க என்கடைக்கு வராதது, ராஜா கடையை காலி பண்ணி தனது தம்பிக்கு வாடகைக்குக் கேட்டது, கோவில் முன்பு அவன் பேசிய பேச்சு எல்லாம் அவனுடைய முஸ்லிம் வெறுப்பைக் காட்டுவதுபோல் இருப்பதாக அமானுல்லாவுக்குத் தோன்றியது. இதை ஆய்சாவிடம் சொன்னால் தேவையில்லாமல் கண்டதை நினைப்பாள் என்று சொல்வதைத் தவிர்த்துவிட்டான்.

ராஜா இந்தக் கடையை வைத்துத்தான் ஒருவருடம் முன்பு தனது தங்கைக்கு நல்ல படியாகக்கல்யாணம் செய்து கொடுத்தான். சொந்தக்கடை வைத்துள்ள பையன் என்பதால் இப்போது அவனுக்கும் கோட்டைமேட்டில் ஒரு பெண் அமைந்து உறைச்சதற்கு அடையாளமாய் தலைக்குப் பூ வைத்தாகிவிட்டது, அமருக்கும் இப்போது ஒரு பெண் அமைந்ததாக இருவரும் ஆய்சாவிடம் சொல்லிக் கொண்டு இருந்தனர். அப்போது ரமேஷ் கடையைக்கடந்து போனான். அவர்களை அறியாமல் அனிச்சையாய் மூவரும் பேசுவதை நிறுத்திக்கொண்டு கொஞ்சநேரம் அமைதியானவர்கள் அவன் போனபின்பு மீண்டும் பேச ஆரம்பித்தார்கள்.

அமர் தனது கல்யாணத்திற்குப் பணம் சேர்க்கவேண்டும் என்பதினால் தனது அப்பாவிடம் கொஞ்சம் பணமும் சீட்டுகாரரிடம் கொஞ்சமும் வாங்கி பெங்களூர் சென்று ஜீன்சும் டீ சர்ட்டும், திருப்பூரில் கொஞ்சம் டீ சர்ட்டும் வாங்கிவந்து கடையில் வைத்து வியாபாரம் செய்துவந்தான். ராஜா அவனது கடை என்று ஒருநாளும் அமரிடம் காட்டிக்கொண்டது இல்லை சின்ன வயதிலிருந்தே இருவரும் நண்பர்களாக இருப்பதினால் அவர்களுக்குள் எந்தக் கசப்பும் இருந்ததில்லை. அது தனது சொந்தக்கடைபோல நினைத்துத்தான் அமரும் கணக்குப் பார்க்காமல் வேலை செய்வான். அவன் வாங்கிவந்த உடைகள் எல்லாம் ஸ்டைலாக இருந்ததினாலும் டவுன்ஹால் கடைகளை ஒப்பிடும்போது குறைந்த விலையில் விற்பதால் பக்கத்துக்கு வீதிப்பையன்களும் வந்து வாங்கிப்போனார்கள். அமருக்கு உற்சாகமாக இருந்தது. இப்பிடியே போனால் வருகின்ற தீபாவளிக்கும் இன்னும் கூடுதலாக சரக்கு எடுத்துவந்து ஒரு காசு பார்த்திடலாம் என்று மனதிற்குள் கணக்குப் போடா ஆரம்பித்தான்.

அன்று மதியவெயில் மண்டையைச் சூடாய் அழுத்தியது. காந்திபுரப் பேருந்து நிலையத்திற்குள் மக்கள் நடமாட்டம் உள்ளதை அமானுல்லா கடையில் இருந்தவாறே பார்த்தால் நன்றாகத் தெரியும். இன்று வெயில் அதிகம் என்பதால் பேருந்து நிலையத்திற்குள் கூட்டம் குறைவாக இருந்தது. கூட்டம் அதிகம் இருக்கும் நேரத்தில் தான் வியாபாரமும் நடக்கும். உஷ்ணம் அதிகமாக இருப்பதினால் சர்பத் குடித்தால் தொண்டைக்குக் கொஞ்சம் இதமாக இருக்குமென்று திருவள்ளுவர் பேருந்து நிலையம் முன்புள்ள முனியண்ணன் தள்ளுவண்டிக் கடைக்கு சென்றான். “வாப்பா அமானு சர்பத்தா?” “நன்னாரி போடுங்க அண்ணே, வெயிலு இப்பவே மண்டையே பொளக்குது மே மாசம் வந்தா தாங்கமுடியாதுபோல” என்றான். “ஆமாப்பா வெயிலு இப்பவே இப்படி இருக்கு’ என்று தலையாட்டி சர்பத் போட்டார். காந்திபுரத்திலேயே முனியண்ணன் கடையில் தான் சர்பத் குடிக்க நல்ல இருக்கும் என்று அங்கு வியாபரம் செய்யும் அனைவருக்கும் தெரியும். முனியண்ணன் தங்கமான மனிதர் சமீபத்தில் கடையில் இருக்கும் போது திடீரென்று நெஞ்சைப் பிடித்து விழுந்தவரை எல்லோரும் சேர்ந்து பெரியாஸ்பத்திரிக்குக் கொண்டு சேர்த்தபோது வைத்தியம் பார்த்த டாக்டர் நெஞ்சுவலி என்று சொன்னார். “இது முதல் அட்டக் ஜாக்ரதையா இருக்கோணும், அதிகமா சந்தோசமும் படக்கூடாது, துக்கமும் கூடாது எந்த அதிர்ச்சியையும் இனி

உங்க உடம்பு தாங்காது சின்னதா ஒரு ஆப்ரேஷன் பண்ணா சரியாகிடும் அதுவர ஜாக்கரதையா இருக்கோணும்” என்று அறிவுரை சொல்லி டாக்டர் அனுப்பினார். அவருக்குஉயிர் போய் உயிர்வந்தது. தனது ரெண்டாம் மகளுக்குக் கல்யாணம் ஆகும்வரை இந்த உசுரு தாங்குனாப் போதும் என்று அமானிடம் அன்று சொன்னார். இன்று வரை அதுக்காக கொஞ்சம்கொஞ்சமாக பணம் சேர்த்து வருகிறார். மாப்பிள்ளையும் இன்னும் சரியாக அமையாதது அவருக்கு விசனமாக இருந்தது.

அடிக்கிற வெயிலுக்கு சர்பத் தொண்டை வழியே இதமாய் வயிற்றில் இறங்குவது அமானுல்லாவுக்கு நன்றாய்த் தெரிந்தது. உஸ்னமான உடலில் சில்லென்று இறங்கியதில் ஒருநொடி உடல்சிலிர்த்து கைமயிர்கள் எழுந்து நின்றது. முள்ளம்பன்றிபோல் தனது உடல் மாறியதுபோல் அவன் உணர்ந்தான். ஸ்ட்ரா வழியே உதட்டை நனைத்துப் போய்க்கொண்டிருந்த சர்பத் அவன் கண்ணைச் சொக்கிய நேரம் “டமார்” என்ற பெரும்சத்தத்தோடு எதிரிலிருந்த ராஜேஸ்வரி வெடித்துச் சிதறியது. நான்கு கடை தாண்டியிருந்த லாலா ஸ்வீட்டில் வேலை செய்து கொண்டிருந்த பையன் பயந்தடித்து கடையிலிருந்து வெளியே ஓடினான். அழகுக்காக டவரின் முகப்பில் போடப்பட்டிருந்த கருப்புக்கலர் அலங்காரக் கண்ணாடி தூள் தூளாக நாலாபுறமும் சிதறி பொலபொலவென்று விழுந்தது. காந்திபுரம் பஸ் ஸ்டாண்டில் மக்கள் ஒன்றும் புரியாமல் அங்கும் இங்கும் ஓடினார்கள். சில நொடியில் பெரும் சப்தத்தோடு மீண்டும் அதே டவரில் வெடித்தது, டவரிலிருந்து புகை திபுதிபுவென மேலே கிளம்பியது. கிளம்பிய புகை மேகத்தை முட்டி வானத்தை இன்னும் கொஞ்ச தூரம் தள்ளிக்கொண்டு போனது. உயர்ந்து நெட்டுக்குத்தி நின்ற கரும்புகை அந்நகரத்தின் மில்லில் கொடுக்கப்படும் வேலை ஷிப்ட் முடிந்ததுக்கான அறிவிப்பு மணிபோல நகர மக்களுக்கு ஒருசேதி சொல்லவதாகக் கரும்புகை நின்றது.

கீழே விழுந்துகிடந்த அமானுல்லா காதுக்குள் “கொய்ஈ’ சத்தம் மட்டுமே கேட்டது. எழவே முடியாதளவு தலை தள்ளியது. சர்பத் கடையின் சைக்கிள் சக்கரத்தின் கீழ் காதில் ரத்தம் வந்து முனியண்ணன் விழுந்துகிடந்தார். அவர் கண்களின் ஓரத்தில் நீர் வழிந்திருந்தது. இரண்டு சைக்கிள்டயருக்கு நடுவில் கைவிட்டு முனியண்ணனின் கையைத்தொட்டான். எந்த உணர்வுமற்று அசைவற்றுக் கிடந்தார். அவர் கண்களின் ஓரத்தில் வழிந்த நீரின் மொட்டில் அவர் மகளின் முகம் கோணல்மானலாய் நெழிந்து தரையில் நனைந்தது.

பேருந்து நிலையத்திற்குள்ளிருந்து எல்லோரும் கத்திக்கொண்டே வெளியே ஓடி வந்தார்கள். அமானுல்லாவுக்கு என்ன நடக்கிறது என்று யுகிக்கவே முடியவில்லை காதுக்கு அருகில் யாரோ லட்சுமிவெடி வைத்ததுபோல காதில் விசில்சத்தம் மட்டும் கொய்யென்று கேட்டுக்கொண்டே இருந்தது. நெஞ்சு படபடப்பு நிற்கவில்லை, பயம் கவ்வியது என்ன நடந்தது என்றே தெரியவில்லை, மக்கள் அங்கும் இங்கும் தலைதெறிக்க ஓடிக்கொண்டு இருந்தார்கள். அமானுல்லா நிதானம் செய்து ஒருநிலைக்கு வந்தபோது கால்கள் நடக்கமுடியாமல் பின்னியது. எங்கோ மீண்டும் வெடித்த சத்தம்கேட்டு உடல் நடுங்கி நனைந்தது. ஆய்சாவின் பயந்த முகமும், சான்ஸா “அத்தா அத்தா” என்று அழைக்கும் அவலக் குரலும் அவனுக்கு கேட்டது.

எல்லா பேருந்துகளும் ஆங்காங்கே நின்றது டவர் முன்பு நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் எல்லாம் சரிந்து கிடந்தது. காந்திபுரத்தின் பிரதான சாலையில் எல்லா வாகனங்களும் ஏதோ சிக்னலுக்கு நிற்பது போல் வாகன ஓட்டி இல்லாமல் தனியே நின்றுகொண்டு இருந்தது. எந்த வாகனமும் செல்ல முடியாதளவு சாலையே வாகன குப்பைத் தொட்டிபோல் நேர்த்தியற்று குழம்பி இருந்தது.

வீடு போய்ச்சேர ஏதாவது வண்டி கிடைக்குமா என்று பின்னும் கால்களோடு அங்கும் இங்கும் அமானுல்லா அலைந்தான். அதற்கான எந்த சமிக்ஞையும் தெரியவில்லை, வீடுபோய் சேர்ந்தால் நல்ல இருக்குமென்று பதட்டத்துடன் வீடுநோக்கி விறுவிறுவென்று ஓட்டமும் நடையுமாகப் போனான். பயத்திலும் ஓட்டத்திலும் வியர்வைமழையில் உடல்நனைந்தது. அவன் நெஞ்சின் படபடப்பு அவனுக்கே கேட்டது. எப்போதும் போகும் தடம்கூட குழம்பி எந்த சந்து கிடைத்தாலும் புகுந்து புகுந்து போய்க்கொண்டிருந்தான். என்ன நினைத்தான் என்று தெரியவில்லை அவனது கண்களில் நீர்நிற்காமல் வந்துகொண்டிருந்தது. ஆய்சாவும், சான்சாவும் சீக்கிரம் வரச் சொல்லி அவனிடம் இறைஞ்சுவதுபோல் அவன்மனம் தகவல் சொல்லியது.

லாடம் கட்டிய குதிரையைப்போல ஓடிக்கொண்டிருந்தவன் அப்போதுதான் கவனித்தான். சிலர் ஆங்காங்கே சில கடைகளை மட்டும் உடைத்துகொண்டிருந்தனர். அவர்களின் முகங்களில் வெட்டுக் காயமும் தலைமுடி பாங்க்வைத்து சடையாய் வளர்ந்து இருந்தது. நூறடி ரோட்டிலிருந்த அன்வர்பாய் மளிகைக்கடையை உருட்டு கட்டைகளோடு சிலர் அடித்து உடைத்துக் கொண்டிருந்தனர். அன்வர்பாய் கடைக்கு அருகிலிருந்த முருகன் ஸ்டோரையும் உடைத்துக் கொண்டுடிருந்தனர். அந்த இளவட்டங்களில் சிலர் கடையிலிருந்து

பொருட்களை ஒவ்வென்றாய் எடுத்து வெளியே வைத்துக் கொண்டிருந்தார்கள். அவர்கள் அந்தக் கடையைச் சூறையாடிக் கொள்ளை அடிக்கிறார்கள் என்ற எந்த உறுத்தலும் இல்லாமல் அவர்கள் பாட்டுக்கு இயல்பாய் பொருட்களை எடுத்துக்கொண்டிருந்தனர். அன்வர்பாய் கதறலும், முருகையா கதறலும் மக்களின் பதட்ட ஓட்டத்தில் கேட்கவில்லை. அவன் வசிக்கும் தெருவை நெருங்கும்வரை இதேபோல் பல கடைகள் சூறையாடப்படுவதைப் பார்த்துக்கொண்டே வந்தான். இப்படியான சந்தர்ப்பம் எப்போதுவரும் என்று காத்திருந்து வாய்ப்பு கிடைத்தபோது அரங்கேற்றியதுபோல் இருந்தது கொள்ளைக்கும்பல்களின் நடவடிக்கை. யார் இவர்கள் எங்கிருந்து வந்தார்கள் என்று ஆராய்ச்சியெல்லாம் செய்ய அவனுக்கு நேரமில்லை எப்பிடியாவது வீட்டை எத்தி ஆய்சா முகத்தையும் சான்சாவையும் பார்த்தால் போதும் அப்போதுதான் அவன் பதட்டம் நிற்கும்.

தெருவில் நுழையும்போது மக்கள் அங்கும் இங்கும் ஓடிக்கொண்டிருந்தனர். அமானுல்லாவின் வீட்டின் கதவு சாத்தப்பட்டு இருந்தது. அவன் வீட்டு வாசப்படியில் இரண்டு பிராந்தி புட்டிகளும் புகைத்துப்போட்ட நாலைந்து சிகரெட் துண்டுகளும் கிடந்தது. தனது வீட்டின்முன்பு இதற்கு முன்னால் இப்படி கிடந்தது இல்லை, காலையில் கடைக்குக் கிளம்பும்போதுகூட ஆய்சா வாசப்படியைக் கூட்டி தண்ணிர் தெளித்திருந்ததைப் பார்த்துவிட்டுதான் போனான். கொஞ்சம் நேரத்திற்கு முன்புதான் யாரோ இங்கு உட்கார்ந்துகொண்டு தண்ணி அடித்திருக்க வேண்டும். கதவைத் தட்டினான் திறக்கவில்லை, ஓங்கி ஓங்கி அடித்தான் அப்போதும் திறக்கவில்லை. எவ்வளவு தட்டியும் திறக்கபடாததும் வீட்டின்முன் பிராந்திபாட்டில் கிடப்பதும் அவனுக்குப் பதட்டத்தை அதிகப்படுத்தியது.

எதிரில் ராஜாவின் டைலர்கடையை ரமேஷ் தலைமையில் மாரியம்மன்கோவில் முன்பு கூடும் பையன்கள் அடித்து நொறுக்கிக் கொண்டுடிருந்தனர், அவன் சிறுகச் சிறுகச் சேர்த்தும் கடன் வாங்கியும் ஆரம்பித்த கடையை எந்தக் காரணமும் இல்லமால் சூரயாடிக்கொண்டிருப்பது குறித்து அமானுல்லாவுக்குக் கோவம் தலைக்கேறியது. அவர்கள் கடையை உடைக்கும் சத்தத்தில் அமானுல்லா அவளை அழைத்த சத்தம் அவர்களுக்குக் கேட்கவில்லை. ஆனால் எதுவும் முடியாத கையறுநிலையில் கதவைத் தட்டிக்கொண்டே இருந்தான். இவ்வளவு கத்தியும் ஏன் கதவைத் திறக்காமல் இருக்கிறாள். தெருவின் இரைச்சலில் எதுவுமே கேட்கவில்லையா? இல்லை என்னானது? என்று எதுவுமே அவனுக்குப் புரியவில்லை. பயம் இன்னும்கூடி நெற்றியிலிருந்து வழிந்து வியர்வை கண்ணிர் தடத்தில் கலந்து தாடையின் வழியே இறங்கிக்கொண்டிருந்தது.

அவன் மண்டைக்குள் கண்டதெல்லாம் நினைக்கவைத்தது. அது கொடூரமானதாகவும் இருந்தது. அவன் எவ்வளவு முயற்சிசெய்தும் அவன் மூளைக்குள் ஓடும் கற்பனைக் குதிரையைத் தடுக்கமுடியவில்லை “படார்” என்ற சத்தம் அவன் நினைவைக் கலைத்தது. ராஜா கடையிலிருந்த துணி அடுக்கும் அலமாரி தெருவில் வந்துவிழுந்தது. அநேகமாய் ராஜாவையும், அமரையும் அடித்து விரட்டி இருப்பார்கள். அதனால்தான் அவர்களைக் காணவில்லை. ஏன் இப்படி வெறிநாய் போல் நடந்துகொள்கிறார்கள். அவர்கள் முகத்தில் காறித்துப்ப வேண்டும்போல் அவனுக்கு இருந்தது. சில மாதங்களுக்கு முன்பே இப்படியெல்லாம் ஒருநாள் வருமென்று அமானுல்லாவிற்கு மனதில்பட்டது. மாரியம்மன்கோவில் முன்பு அவர்கள் பேசும் பேச்சும், வேண்டுமென்றே வெறுப்போடு முறைத்துக்கொண்டு போவதும், அவர்களின் நடவடிக்கையும் அவன் மனத்தில் நெருடியது. இன்று கண்முன் நடந்து கொண்டிருந்தது.

சட்டென நினைவு வந்து வீட்டுக்குப் பின்புறம் உள்ள ஜன்னலை நோக்கி ஓடினான். ஆய்சா ஒருவேளை உள்ளறையில் இருந்தால்? ஜன்னல் வழியே அழைத்தால் கேட்கும். பின்பக்க ஜன்னல் மூடி இருந்தது. “ஆய்சா ஆய்சா” ஜன்னலைத் தட்டிக் கொண்டே ஆய்சாவை அழைத்தான். எந்த பதிலும் வரவில்லை. அவன் எவ்வளவு கத்தியும் எந்த பதிலும் இல்லாதது அச்சத்தை அதிகரிக்க ஜன்னலுக்குக் கீழே உட்கார்ந்துகொண்டு கேவி அழ ஆரம்பித்தான். அவளுக்கு என்ன ஆனதோ சன்சாவுக்கு என்ன ஆனதோ? நிச்சயம் செய்து தலைக்குப் பூ வைத்த நாளின் அவளது வெட்கமுகம், அவனுக்கு அவள் தலைகோதியது, சான்சாவைப் பெத்தெடுக்க பிரசவ வார்டுக்குள் நுழைந்தபோது வைத்தகண் வாங்காமல் அவனையே பார்த்தபடி போன கண்கள், சான்சாவோடு கொஞ்சியது என ஒவ்வொரு காட்சியும் திரைப்படம்போல் அவனுக்குள் ஓடிக்கொண்டிருந்தது. அவர்களுக்கு ஏதாவதாகிவிடுமோ? என்ன நடந்திருக்கும் எதுவுமே புரியாமல் ஜன்னலின்கீழ் தவித்தான்.

கிரீச்” சப்தத்தோடு மெல்லமாய் ஜன்னல் கதவு திறந்து ஒருகண் மட்டும் நோட்டம் பார்த்தது. கிழே உட்கார்ந்து அழுது கொண்டிருந்த அமானுல்லாவைப் பார்த்து பயந்த கண்களில் ஒளிகூடி “மச்சான் வந்துட்டீங்களா” குரல் வந்த திசைநோக்கி மேலே தலை உயர்த்திப்பார்த்தான். சட்டென எழுந்து ஜன்னல் கம்பிகளுக்குள் கையை விட்டு கம்பியோடு அவள் தலையை அணைத்தான். தனக்குத் தற்போதுதான் உயிர் வந்ததாகப்பட்டது. “சீக்கிரம் கதவைத் திற” என்று சொல்லிவிட்டு முன் வாசலுக்கு ஓடினான். ராஜா கடையில் அமர் வாங்கிவைத்திருந்த புதுத் துணிகளையும், தைக்கக் கொடுத்த துணிகளையும் அவர்கள் கையில் கிடைத்த அளவு அள்ளிக்கொண்டு இருந்தனர். “இந்த நாடு

எங்கள் நாடு. எங்கள் நாடு இந்து நாடு, ”ஜெய்காளி” என்று என்னென்னமோ சொல்லிக் கத்திக்கொண்டிருந்தார்கள்.

உன் புருசன் எங்கடி இன்னைக்கு அவனுக்கு இருக்கு, துலுக்க நாய இங்கயிருக்க விட்டதே பெருசு ஏகத்தாளமா பேசுறான் வரட்டும், உங்களே எல்லாம் இங்கேயிருக்க விட்டதே பெருசு. துலுக்கப் புத்தி தொண்டேக் குழி வரைக்குதானு இப்ப காமிச்சிட்டிங்களே, நாங்களும் காட்டுறோம் அவன் வந்துட்டு எப்படி உயிரோடு திரும்பிப்போறானு,” என்று ரமேஷ் கடுமையாக ஆய்சாவை மிரட்டியதும், வீட்டின் முன் உட்கார்ந்து தண்ணி அடித்துவிட்டு ராஜாவையும், அமரையும் அடித்து விரட்டியதும் தடுக்கவந்த ராமசாமி அய்யாவையும் அவர்கள் தள்ளிவிட்டு அடித்ததையும் மளமளவென்று ஆய்சா அழுது கொண்டே ஒப்பித்தாள், அவள் கண்ணில் இன்னும் பயம்தீரவில்லை அமானுல்லா வருவனோ இல்லையோ என்று பயந்து அழுதுகொண்டே கட்டிலுக்கு அடியில் சன்சாவோடு கட்டி பிடித்து படுத்து கொண்டுடிருந்ததை எல்லாம் உடல் நடுங்கியவாறு சொல்லிக் கொண்டிருந்தாள்.

சான்சா ஓடி வந்து “அத்தா” என்று அவன்மீது தொத்தி இறுக்கக் கட்டிப்பிடித்தான், அடுத்து என்னசெய்வது என்றே அவனுக்குத் தெரியவில்லை, எப்படியும் கொஞ்ச நேரத்தில் இபிலீசுகள் வந்துவிடுவார்கள். அதற்குள் எதாவது செய்திட வேண்டும். ஆய்சாவையும், சான்சாவையும் கூட்டிக்கொண்டு போனால் எப்படியும் பார்த்து விடுவார்கள். கதவை மூடி வீட்டுக்குள் இருந்தால் எப்படியும் கதவை உடைத்து உள்ளே வந்துவிடுவார்கள். உள்ளே வந்து ஏதாவது செய்துவிட்டால் என்ன செய்வது அவர்கள் இருக்கும் நிலையில் கொலைசெய்தாலும் ஆச்சிரியமில்லை நிலைமை கொடூரமானது என்று அமானுல்லா நன்றாகவே உணர்ந்தான்.

வீட்டுக்குள்ளும் இருக்கமுடியாது வெளியேவும் செல்லமுடியாது மனம் முழுக்க பயம் சூழ்ந்தது, உடல் நடுங்கியது. சின்ன வயதிலிருந்தே தொழுகை கிடையாது, அல்லாவின் மேல் பயம் கிடையாது இன்னும் சொல்லப் போனால் தன்னை அவன் என்றுமே முஸ்லிமாக நினைத்தது கிடையாது யாருடைய வம்பு தும்புக்கும் போகாத அவன்மீது அவர்கள் முஸ்லிம் என்ற காரணத்திற்காக வெறுப்பு உமிழ்வதை நினைக்கும்போதுதான் முதல் முறையாக என்னதான் இருந்தாலும் தான் ஒரு முஸ்லீம் என்ற தனிமையை உணர்ந்தான். அதுவரை தன்னிடம் நெருக்கமாக நட்பு பாராட்டும் நண்பர்கள் எல்லோரும் இந்துவாகத் தெரிந்தார்கள். அப்பிடி நினைக்க அவனுக்கே அவமானமாகயிருந்தது அவனுக்கு உள்ளிருந்து அடையாளமற்ற உருவம் ஒன்று வெறுப்போடு உமிழ்ந்தது.

உடனே எதாவது செய்தாகவேண்டும் ஆய்சாவையும், குழந்தையையும் பாதுகாக்க வேண்டும். வீட்டுக்குள்ளிருந்து வெளியே சென்றால் ஆபத்து, வீட்டுக்குள் இருந்தாலும் ஆபத்து கதவின் இடுக்கு வழியே வெளியே பார்த்தான். ராஜாவின் கடையை ஒருவன் பெட்ரோலால் நிரப்பப்பட்ட பாட்டிலைத் திரி கிள்ளிப் பற்றவைத்து கடைக்குள் தூக்கியடித்தான். அது நெருப்புமிழ்ந்து கடையைக் கருக்கியது. அமானுல்லாவின் உடல் நடுக்கம் அதிகமாய் வியர்வை ஊற்றாய் தரையில் இறங்கியது.

இறுக்கப் பிடித்திருந்த சான்சாவை ஆய்சாவிடம் கொடுத்துவிட்டு மாமரத்தின் மீது சாய்த்து வைத்திருந்த ஏணியை எடுத்து பின்பக்கச்சுவர் ஓரமாய் சாய்த்துவைத்தான். ஏணியில் சரசரவென்று ஏறினான். சுவர் பெரியதாக இருந்தததினால் அதன் விட்டம் வரை பத்தவில்லை, எட்டி சுவரைப்பற்றி சுவரின் மீது உட்கார்ந்துகொண்டு ஆய்சாவை ஏணியை எடுத்துத்தரச்சொல்லி அப்பிடியே வாங்கி சுவரின் வெளிப்பக்கம் வைத்தான். சுவரிலிருந்து முருங்க மரத்திற்குத் தாவி கீழே இறங்கி “ஆய்சா பூட்டு எங்கே” நடுங்கியபடி கேட்டான். “பூட்டு எதுக்கு? என்ன செய்யுறீங்க” பதட்டமாக ஆய்சா கேட்டாள். “சொல்றேன் எடு! எடு!” வீட்டுக்குள் இருந்த பூட்டையும் சாவியையும் கொண்டுவந்து நீட்டினாள். அதனை வாங்கிக்கொண்டு கதவைத் திறந்தான். ராஜா கடை எரிந்த உற்சாகத்தில் அவர்கள் “காளியை வணங்கி” முழக்கம் போட்டுக்கொண்டிருந்தனர். பூனைஅடி எடுத்து வைப்பதுபோல மெல்லமாய் வீட்டுக்கு வெளியேவந்தான். “வெளியே போகாதிங்க இபிலீசுக இருக்கு எதாவது பண்ணிற போகுது” ஆய்சா அழுதுகொண்டே வீட்டுக்குள் அழைத்தாள். “சத்தம் போடதே! வீட்டுக்கு உள்ளே இரு” என்றான். வெளியே வந்து யாரேனும் கவனிக்கிறார்களா என்று நோட்டமிட்டான். அவர்கள் ராஜா கடையிலிருந்து மூன்று வீடு தள்ளியிருந்த காதர்பாய் மளிகைக் கடையில் கைவரிசையைக் காட்டிக்கொண்டு இருந்தனர். இடையிலிருந்த அண்ணாச்சி கடையை ஒன்றும் செய்யவில்லை அவர் அப்பா என்னைவிட்டால் போதுமென்று கடையை மூடி ஓடியே விட்டார்.

அமானுல்லா ஆய்சாவையும் சான்சாவையும் வீட்டுக்குள் வைத்துக் கதவை மூடித் தாழிட்டுப் பூட்டுப்போட்டான். அவர்கள் கவனிப்பதற்குள் வீட்டின் பின்பக்கம் ஓடினான். சாய்த்து வைக்கப்பட்ட ஏணியில் ஏறிச் சுவரைத் தாவிப்பிடித்து மேலே உட்கார்ந்தான். காலைத் தொங்கவிட்டு அப்பிடியே பாதியாய்ப் படுத்து எக்கி ஏணியை எடுத்தான். வீட்டுக்குள் இறக்கிவைத்து முருங்க மரத்தைப் பிடித்து கிழே இறங்கி வீட்டுக்குள் இருந்த ஜன்னல்கள் எல்லாம் மூடி இருக்கிறதா என்று பார்த்தான் எல்லாம் மூடி இருந்தது. மின்சார இணைப்பைத் தடைசெய்து வீட்டை அமைதியாக்கினான்.

சான்ஸா பயந்து போய் ஆய்சாவை கட்டிக்கொண்டிருந்தான். எந்தச் சத்தமும் இல்லாமல் வீடு அமைதியாக இருப்பது அவர்கள் எதோ கபர்ஸ்தானில் இருப்பது போல் இருந்தது. காற்றின் அமைதி பிளந்து “படார்” என்று கதவு அடித்த சத்தம் கேட்டது. எல்லோருக்கும் திக்கென்று உடல் வியர்த்து நடுங்கியது. அவர்கள் பூட்டை இழுத்து அடித்தார்கள். அமானுல்லா ஆய்சாவையும் சான்சாவையும் இறுக்க அணைத்தான். “ஜி! ஆளு வீட்டப் பூட்டிட்டு ஓடிட்டான்” என்று ஒருவன் சொன்னான். “எப்ப! அந்தப் புள்ள மட்டும்தான் வீட்டுல இருந்துச்சு, எப்படியும் வருவான்னு நெனெச்சேன், அவன் வந்தானா? நம்ம கண்ணுல படவே இல்ல!” ஏமாற்றத்தின் குரல்; அது ரமேஷுடையது என்று கணித்த அமானுல்லாவுக்கு பதட்டம் கூடிக்கொண்டே இருந்தது. ”எதுக்கும் உள்ள இருக்காங்களான்னு பூட்ட ஒடச்சு உள்ளே போய் பாத்திடலாமா ஜி!” என்றான் ஒருவன். அமானுல்லா எதுக்கும் எதாவது உருட்டுக் கட்டை எடுத்துக் கையில் வைத்து கொள்ளலாமா என்று அவன் கண்கள் சுற்றும் முற்றும் பார்த்தன.

அட அதான் வெளியே இவ்ளோப்பெரிய பூட்டு தொங்குதுல்லே, எஸ்கேப் ஆய்ட்டான். வுடு, பூட்டுன வீட்ட ஒடச்சு உள்ளே போனா நாளைக்கு அத காணோம் இத காணோம்னு வேற மாறி போயுடுச்சுனு போலிசும் சப்போர்ட் பண்ணாது, நம்மாளுங்களும் மேல இருந்து கேள்வி மேலே கேள்வி கேப்பாங்க, அப்புறம் நாம எத செஞ்சாலும் அவனுக்குத் தெரியனும். அப்பதான் இடத்தக் காலி பண்ணுவான். நம்மாளுங்க மேல வாழ்க்க முழுக்க பயம் இருக்கும் மூடிட்டு இருப்பானுங்க ஆட மாட்டனுங்க, இன்னைக்கு சிக்கலே ஆனால் எப்படியும் மாட்டுவான் அப்போ பார்த்துக்கலாம்” என்றான் ரமேஸ். அவர்கள் பூட்டை உடைக்கும் எண்ணத்தைக் கைவிட்டது அமனுல்லாவுக்குக் கொஞ்சம் நிம்மதியாக இருந்தாலும் அவன் நெஞ்சு படபடப்பு நிற்கவில்லை.

வெகுநேரம் தெருவில் இறைச்சல் இருந்துகொண்டே இருந்தது. மளிகைக்கடை காதர்பாய் எந்த வம்புக்கும் போனது கிடையாது. கடை உண்டு தொழுகை உண்டு என்று வாழும் மரியாதையான மனிதர். அவர் எழுபதை நெருங்கியிருந்தாலும் யாருக்கும் தொல்லைதராமல் கடைசிவரை உழைத்து வாழவேண்டும் என்ற வைராக்கியம் கொண்டவர். அவரின் கடையை உடைத்தது அமானுல்லாவுக்கு மிகவும் சங்கடமாக இருந்தது. இந்தக் கடையை வைத்துதான் தனது இரண்டு மகள்களுக்கும் கல்யாணம்செய்து தனது வீட்டின் கடமைமுடிந்தது. இனி மார்க்கக் கடமை எப்பிடியேனும் கொஞ்சம்கொஞ்சமாக பணம்சேர்த்து வாழ்நாளின் இறுதிக்குள் மெக்கா செல்லவேண்டும் என்று உழைத்துக் கொண்டிருந்தார். அந்த மனிதரின் கடையை துவம்சம் செய்திருந்தார்கள். நிச்சியமாக இனி அவர் மெக்கா செல்ல எந்த வழியும் இல்லை. அவரின் மெக்கா பயணத்திற்க்கான கதவு மூடியது.

தெருவில் இரைச்சல் குறைந்து குறைந்து தெருவே நிசப்தமானது. தெருவின் அமைதி ஒருவகையில் அமானுல்லாவுக்கு ஆறுதலாக இருந்தது. அனேகமாக எல்லோரும் போய்விட்டர்கள் போலும். இனி இங்கிருந்து வெளியேற யோசிக்க வேண்டியுள்ளது. எந்தப் பாதிப்பும் இல்லாமல் எப்படி வெளியேறுவது வேண்டும் என்று ஒரே குழப்பமாக இருந்தது. நிச்சயம் அவர்கள் என் வீட்டை நோட்டமிட்டவாறே இருப்பார்கள் என்று அமானுல்லாவுக்கு உள்மனது சொல்லியது. அவன் என்ன யோசித்தாலும் இறுதியில் கதவைத் திறந்தாத்தான் தீர்வு என்றே முடிவு வந்துநின்றது. கதவைத் திறந்து அவர்களிடம் மல்லுக்கட்டி ஆய்சாவையும், குழந்தையையும் அழைத்து செல்லும் அளவுக்கு அங்கு நிலைமை இல்லை. எதாவது பாதிப்பு வந்துவிடும். அதே நேரத்தில் வீட்டுக்குள் இருந்து கொண்டேயிருப்பதும் பாதுகாப்பு இல்லை என்ன செய்வது என்று அமானுல்லாவுக்கு ஒரே குழப்பமாக இருந்தது.

அத்தா நாம வெளியே போகவேண்டாம் பயமா இருக்கு இங்கேயே இருக்கலாம்” என்று சான்ஸா அவனைக் கட்டிப்பிடித்து சொன்னான். “ஒண்ணும் பயப்படாத அத்தா பத்திரமா உன்ன நாணி வீட்டுக்குக் கூட்டிப் போறேன்” அமானுல்லா.

வேண்டாம் இங்கயே இருக்கலாம் எவ்வளவு நாளானாலும் நாம வெளியவே போக வேண்டாம்” என்று அழுதுகொண்டே சான்ஸா சொன்னான். அப்போதைக்கு அவனைச் சமாளிப்பதற்காக சரி சரியென்று தலை ஆட்டி வைத்தான். சின்னப்புள்ள பயத்துலே பேசுறான். ஆனால், இங்கேயே இருப்பது எந்தப் பாதுகாப்பும் இல்லை என்று ஆய்சாவிடம் கூறினான். வானம் இருட்டு கட்ட ஆரம்பித்தது. “மக்ரிப் நேரம் லைட் போடமாட்டே அறிவு கெட்டவளே என்ன புள்ள” என்று சொல்லிச் சொல்லி ஆய்சாவை அவள் உம்மா பழக்கப்படுத்தி இருந்தாள். இன்றுதான் முதல் முறையாக அவளது வாழ்நாளில் வீடு இருட்டில் இருந்தது.

பசி வயிற்றைக் கிள்ள ஆரம்பித்தது. மதியத்துக்குச் சாறு செய்ய கடைக்கு போய் எதாவது செலவு வாங்கி வரலாம் என்று ஆய்சா கிளம்பும்போதுதான் அவர்கள் வெளியே வைத்து மிரட்டினார்கள். ராஜா கடையை அடித்து நொறுக்குவதைப் பார்த்து பயந்துபோய் வீட்டுக்குள்ளே ஓடிவந்து பயத்தில் சான்சாவை கட்டிக்கொண்டு கட்டிலுக்கு அடியில் படுத்துவிட்டாள். இன்னும் கொஞ்ச நேரத்தில் சான்ஸா பசிக்கு அழ ஆரம்பித்துவிடுவான். அதற்குள் எதாவது செய்திடவேண்டும். ஆய்சாவுக்குச் சிந்தனையாய் இருந்தது. அவசரத்துக்குக் கைகொடுக்கும் முருங்கக்கீரைக் குழம்பு வைத்திடலாம். ஆனால் அடுப்பு வெளிச்சம் வெளியே போனால் வீட்டுக்குள் இருப்பது தெரிந்துவிடும் என்று ஆமினா பயந்தாள். அமானுல்லா ஜன்னலின் சின்னச்சின்ன ஓட்டைகளில் பழையதுணியைச் சின்னச்சின்னதாய்ச் சுருட்டி வைத்து அடைத்தான். சத்தம் இல்லாமல் சாறு சோறு ஆக்கி முடித்தாள் ஆய்சா, அமானுல்லாவினால் சரியாகச் சாப்பிட முடியவில்லை. இன்னும்பயம் இருந்தது. இருக்கும் வெளிச்சத்தில் இருட்டுக்குக் கண் பழகி அப்பிடியே தூங்கிப்போனார்கள்.

மறுநாள் காலை அமானுல்லா கதவு இடுக்குவழியே அழுத்திவைக்கப்பட்டிருந்த துணியை எடுத்து தெருவைப் பார்த்தான். கோவில் முன்பு இருக்கும் பசங்களில் இரண்டுபேர் நன்றாய்க் குடித்துவிட்டு ராஜா கடைமுன்பு விழுந்துகிடந்து அப்போதுதான் எழுந்து உட்கார்ந்தார்கள். நேற்று அவர்கள் ஆடிய ஆட்டம் பார்த்து பயந்த தெருவாசிகள் யாரும் அவர்களிடம் கேட்கத் தயாரில்லை. நல்ல வேளையாக இரவு வெளியே போகவில்லை. போயிருந்தா பெரியபிரச்சனை ஆகியிருக்கும் என்று அவனுக்கு தோன்றியது. வெளியே என்ன நடக்கிறது என்று தெரியாமல் வீட்டுக்குள்ளேயே அடைந்து கிடப்பது அவனுக்கு என்னமோ செய்தது.

ஆய்சா முருங்க மரத்திலிருந்து கீரையைப் பறித்துக்கொண்டு இருந்தாள். வீட்டில் எந்தக் காய்கறியும் இல்லை. நாளை ஞாயிறு சந்தையில் வாங்கி கொள்ளலாம் இப்போதைக்குக் காதர்பாய் கடையில் வாங்கலாம் என்று போவதற்குள் என்னென்னமோ நடந்தேறிவிட்டது. மூன்று நேரமும் முருங்கக்கீரைக் குழம்பு சாப்பிடுவது சான்சாவுக்கு என்னமோபோல் இருந்தது. அடம்பிடிக்க ஆரம்பித்தவனை “மூச் தொலைச்சுடுவேன்” என்று முதல் முறையாக அமானுல்லா மிரட்டி உட்காரவைத்தான். இரண்டாம்நாள் கடப்பதற்குள் ஒரு யுகம் கடந்தது போல் இருந்தது.

விடியக்காலை நான்குமணிக்கே அமானுல்லாவுக்குத் தூக்கம் கலைந்தது. அவன் மூளை முழுக்க எப்படி இங்கிருந்து தப்பிப்பது என்றே குடைந்து கொண்டிருந்தது. இந்நேரம் வெளியே சென்றால் தெருநாய்கள் குறைத்துக் காரியத்தைக் கெடுத்து விடும். வெளுச்சத்தில் சென்றால் அந்த கிரஸ்தாரி பிடித்த நாய்கள் பிடித்துவிடும் என்னசெய்யலாம் என்றே அவனது முழு சிந்தனையும் ஒருமுகமானது. நட்சத்திரங்கள் வெளுச்சம்மங்கி வானத்தில் மிதந்தது. வெறிக்கவெறிக்க நட்சத்திரங்களையே பார்த்துக்கொண்டு இருந்தான்.

நட்சத்திரங்கள் கொஞ்சம்கொஞ்சமாய் மறைந்து வானம் வெளுப்பது தெரிந்தது. கருப்பு வானம் வடிந்து நிறம்மங்கிய சிகப்பு அடிவானம் விரிந்தது. அவசர வேலைக்கு செல்வது போல் இரண்டு காகங்கள் கரைந்துகொண்டே போனது. அப்போதுதான் கவனித்தான் தனது வீட்டுமரங்கள் பறவைகள் இல்லாத மொட்ட மரமாய் நிற்பதை. தினமும் அதிகாலை தூங்கவிடாமல் விதவிதமான சத்தங்களோடு எழுப்பிவிட்ட பறவைகள் ஒன்றைக் கூடக் காணவில்லை. இந்த வீட்டுக்குக் குடிவந்த புதிதில் தொல்லையாக இருந்த பறவைகளின் சத்தம் பின்பழகி இனிமையான பாடலாக மாறியது. அந்தப் பறவைகள் எங்கே போனது. மனிதர்கள் இல்லாத இடத்தில் பறவைகள் வாழும். பறவைகள் இல்லாத பூமியில் மனிதர்கள் வாழமுடியாது என்று ஒருமுறை எங்கோ படித்த நியாபகம் அவனுக்கு வந்தது. அப்பிடியென்றால் மனிதர்கள் வாழமுடியாத பூமியில் நாம் இருக்கிறோமா? என்று அவன் தெருவை நினைவில் நிறுத்தினான். அந்தத் தெருவில் எல்லோரும் இரத்தம் சொட்டும் கூரிய ஆயுதத்தோடு முறைத்துக் கொண்டே போவதும் அவனும் ஆய்சாவும் குழந்தையும் ஒருவரையொருவர் பயந்தபடி கைப்பிடித்துக் கொண்டே போவதுமாய் அந்தத் தெரு அவனுக்குள் படிமம் காட்டியது.

ஆய்சாவின் முகம் இன்று கொஞ்சம் பரவாயில்லையாக இருந்தது. அவள் கண்களில் நேற்றிருந்த பயம் கொஞ்சம் குறைந்திருந்தது. மூன்றுநாட்கள் வீட்டுக்கு உள்ளேயே இருந்துவிட்டு வெளியே யாரும் இல்லாததுபோல் கதவில் பூட்டுப்போட்டு நடிக்கும் நாடகம் அவனுக்கு ஆச்சிரியமாக இருந்தது. தான்தான் தக்க நேரத்தில் இப்படி யோசித்து சாமார்த்தியமாய் முடிவு எடுத்தோம் என்பதை அவனாலேயே நம்ப முடியவில்லை. தனது வாழ்வில் இப்படியான ஒரு தருணம் வரும் என்று அவன் கனவில்கூட நினைத்துப் பார்த்திருக்க மாட்டான். இந்தத் தெருவில் குடிவந்ததற்குப் பதிலாகக் கோட்டைமேட்டுலையோ இல்லை சாரமேட்டுலையோ குடிபோயிருந்தால் மொஹெள்ளா வாசிகள் அதிகம் இருப்பதால் கொஞ்சம் தைரியமாகவாவது இருந்திருக்கலாம். சாத்தான்கள் சூழ்த்திருக்கும் குகைக்குள் மாட்டியதுபோல் அந்த வீடு அவனுக்குத் தோன்றியது.

மூன்று நாட்கள் கடந்திருந்தது. ஆய்சா இன்றும் முருங்க மரத்தில் கீரை பறித்துகொண்டு இருந்தாள். “லே வேற கொழம்பு எதாவது செய்யேன், தினமு கீற தின்னு நாக்கு ஒரு மாறி இருக்கு” அவன் பாவமாய்க் கேட்டது ஆய்சாவுக்கு சங்கடமாய்ப் போனது. வாய்க்கு ருசியா ஆக்கிப் போடாதவ எப்படி நல்ல பொஞ்சாதிய இருப்ப ச்சே! அல்லா எனக்கு இப்படி ஒரு வரம் தந்திருக்கானே என்று தன்னை நொந்து கொண்டாள். மச்சான் கேட்டு செய்துகொடுக்க முடியாத பாவியானதை அவளால் ஜீரணிக்க முடியவில்லை. தினமும் கீரைத் தின்று தன் நாக்கு செத்துப்போனதைக் கூட அவள் நினைக்கவில்லை ஆனால் மச்சானுக்கும், குழந்தைக்கும் ஆக்கிப்போட முடியவில்லையேயென்று நினைத்து பொலபொலவென்று அழுது விட்டாள். “பரவால இருக்கறத குடு” என்று அவளைச் சமாதானம் செய்தான். அவள் அழுதபோது இவன் கண்ணிலும் நீர்க்குளம் தேங்கியது. அதனைக் காட்டிக்கொள்ளாமல் அவளைத் தேற்றினான். ஆனாலும் சான்ஸா இன்று சாப்பிடமாட்டேன்னு அடம் பிடிப்பான் என்ன செய்வது என்று இருவருக்கும் தோன்றியது. சான்ஸா நன்றாகத் தூங்கிக் கொண்டு இருந்தான். நான்கு நாட்கள் இன்னும் எதுவும் ஆகாமல் உயிரோடு இருப்பதே பெரியது இதில் வாய்க்கு ருசியாய் கேட்குதா” என்று தன்னையே துப்பினான்.

மூன்று நாட்களும் சான்சாவை வா..சி. பார்க் கூட்டிப் போவதாகவும், ஐஸ் டியுப் வாங்கி தருவதாகவும் என்னென்னமோ சொல்லிச் சமாதனம் செய்து மூன்று வேளையும் கீரையைச் சாப்பிட வைத்தாகிவிட்டது. எழுந்த அவனிடம் அன்று அழுதே கெஞ்சினான் ஒரு நாளைக்கு பொறுத்துக்கோ பாவா நாளைக்குக் கண்டிப்பா வெளியே கூட்டிப்போறேன் என்று கண்ணீர் வழிந்தான். சான்சாவுக்கு ஒன்றும் புரியவில்லை. முழுங்க முடியாமல் இருவேளை மட்டும் அமைதியாக அன்று சாப்பிட்டு இருந்தான். என்ன ஆனாலும் சரி. நாளை தைரியமாக வெளியே சென்றுவிடவேண்டும் என்று அமானுல்லா மனதில் தோன்றியது. இதற்குமேல் குழந்தையும் தாங்காது. இரண்டாம் நாள் வேகமாகவந்த இரவு நேற்றும் இன்றும் வெகுநேரமானது. இந்த நான்காம் இரவும் முடிந்தால் ஐந்தாம்நாள் வந்துவிடும். என்ன வாழ்க்கை என்று வெதும்பிக் கொண்டிருந்தான். வானம் மப்புக் கட்ட ஆரம்பித்து. நட்சத்திரங்கள் வானத்திலிருந்து வெளியே வந்தது. இரவு முழுக்க அவனுக்குத் தூக்கமே இல்லை. ஏதோ ஜெயிலிலிருந்து தப்பிக்கத் திட்டம்தீட்டுவதுபோல் பல யோசனைகளை அடுக்கினான்.

இரவு பன்னிரெண்டு மணியளவில் தனது வீட்டின் கதவருகே யாரோ உட்கார்ந்துகொண்டு பேசுவதுபோல் கேட்டது. ஆய்சாவும் சான்சாவும் நன்றாய்த் தூங்கிக்கொண்டிருந்தனர். பூனை எலியைப் பிடிக்க எட்டுவைத்து நடப்பதுபோல் காலடி சத்தம் இல்லாமல் கதவருகே சென்றான். அவன் வீட்டு வாசல் படியில் உட்கார்ந்துகொண்டு சிலர் தண்ணி அடிப்பது அவனுக்குத் தெரிந்தது. வீட்டுக்கு முன் மரம் மறைவாய் இருப்பது அவர்களுக்கு தண்ணி அடிக்க வசதியாகிப் போனது. கதவைத் திறந்து எல்லோரையும் விலாசவேண்டும் என்று நினைத்தான் வீட்டை நினைத்து அமைதியானான்.

உனக்கு அஞ்சு சர்ட்டு நாளு பேன்ட்டுனாங்க”

எங்கே ரெண்டு இடுப்புக்குப் பத்துலே கடச்சவர லாபம்”

ரமேஷ் அண்ணே நல்லவரு. தனக்கு எதுவும் வேண்டான்னு சொல்லிட்டாரு. எல்லாத்தையும் நம்மலே எடுத்துக்கச் சொன்னாரு. பெரிய மனுஷன் பெரிய மனுஷன் தான்” என்றான் ஒருவன்.

அவர்கள் எல்லோரும் ராஜாகடையில் எடுத்து பங்குபோட்டது குறித்து பேசிக்கொண்டிருந்தார்கள்.

நல்லவேள காதர்பாய் கடையே ரமேஷ் அண்ணே அடிக்கச் சொன்னாரு, இல்லாட்டி பீடி, பான்பராக் வாங்குன கணக்கு நூத்திருவதுருபா கொடுக்கவேண்டி வந்துருக்கும் இனி அந்தக் கவல இல்ல” இன்னொருவன் சொன்னான்.

அந்தக் கல்லாபெட்டில இருந்த காசத் தூக்கனது யாருடா கடைசி வர தெரியவேயில்ல” என்றான் ஒருவன்.

கல்லாப்பெட்டி பக்கத்துலே பத்திரமா ரமேஷ் அண்ணாதான் பார்த்துட்டு இருந்தாரு பாய வெரட்டும்போது கோட்ட விட்டுருப்பாரு அந்த கேப்புலே எவனோ அடுச்சுருப்பன்”

ஒருவேள ரமேஷ் அண்ணனே எடுத்திருப்பாரோ” கரகரத்த குரலில் ஒருவன் சொன்னான்.

என்னடா மப்புலே என்ன வேணுமுனாலும் பேசுவியா ரமேஷ் அண்ணாவையே சந்தேகப் படுற அவரு இல்லேனா ஒரு மயிரும் நமக்கு கெடச்ருக்காது இப்பப் போட்டுருக்குற புதுத் துணியே அவரு போட்ட பிச்ச! இல்லாட்டினா எல்லாத்தையும் நம்மலேயே எடுக்க சொல்லுவாரா மயிரு” இன்னொருவன் ரமேஷ்க்கு வக்கலாத்து வாங்கினான். கல்லாப் பெட்டியை ரமேஷ் வெறிக்க பார்த்துக்கொண்டு இருந்ததைக் கரகர குரல்காரன் சொன்னதை யாரும் காதில்வாங்கிக் கொள்ளவே இல்லை. காதர் பாய் மெக்கா போவதற்காய் குருவி சேர்ப்பதைப்போல் சேர்த்த பணத்தை இந்த நாய்கள் திருடியதை அமானுல்லா கேவலமாக நினைத்தான். ஏதோ அவர்களின் அத்தா கடையிலிருந்து எடுத்ததுபோல் மிகவும் உரிமையோடு பேசிக்கொண்டிருந்தார்கள்.

ஏண்டா இந்த வீட்டு செருப்புக் கடக்காரன் எங்கட போனான், அவன் அன்னைக்கு வருவான்னு பார்த்தேன் ஆளையே காணோம். அந்தப் புள்ள மட்டும்தான் இருந்துச்சு எந்த வழியா போனான்னு தெரியல அவளையும் காணோம்” என்றான் ஒருவன். அமானுல்லா தன்னையும், ஆய்சாவையும் தான் சொல்கிறான் என்று காதைக் கூராக்கிக் கேட்டான்.

ரமேஷ் அண்ணன் கையிலே அவன் அன்னைக்கு மாட்டியிருந்தான்னா சாவுதான், அவன்மேல அப்பிடி காண்டு” மற்றொருவன் சொன்னான்.

அப்பிடி என்ன அவன்மேல அப்பிடி கடுப்பு” என்றான். நல்ல போதை மயக்கத்தில் பேசுகிறார்கள் என்பதை அவர்களின் வார்த்தை பிறழலில் அமானுல்லாவினால் உணர முடிந்தது.

அங்காளி பங்காளி தகராறா-? எல்லாம் காசு தான்”

என்ன காசா?”

ஆமா! அவன் கட பக்கத்துல சப்பல் கடைபோட்டு இருக்குறது ரமேஷ் அண்ணன் பிரண்டு. நம்ம அமைப்புக்கும் அப்பப்போ நன்கொடை தருவாரு. இந்த ஆளு கட இருகிறதுனால அவருக்கு வியாபாரம் பெருசா நடக்குறது இல்ல, அதனால இவன் கட இல்லாட்டி வியாபாரம் நல்லயிருக்கும் நன்கொடையும் நல்ல தரலாமுன்னு அவரு ரமேஷ் அண்ணன்ட்ட சொல்லியிருக்காரு ஒருவேள அதனால அவன்மேல இவ்வளோ கடுப்பான்னு தெரியல” என்று குரல் தாழ்த்திப்பேசினான். அமானுல்லாவுக்கு திக்கென்று ஆனது. பக்கத்துக்கடை செல்வமா இப்படிப் பேசியது தன்னிடம் பெரிய உத்தமன்போல் பேசிவிட்டு அவன் நெஞ்சுமுழுக்க நஞ்சு இருக்கிறது என்று பொருமினான். தான் நேர்மையாய்த் தொழில் செய்வதால் நம்மைத் தேடிவருகிறார்கள். அது அவனுக்கு இவ்வளவு எரிச்சலா?. என்று நினைத்தான்.

தொடர்ந்து அவர்கள் பேசினார்கள் “அப்புறம் அவன் முஸ்லிமு அவுங்களாக் கண்டாலே அண்ணனுக்குக் கோவம்வரும் எப்படா சிக்குவானுங்க காத்திருப்பாரு. இப்ப சிக்கிட்டானுங்க, என்னதா இருந்தாலும் எங்கயோ இருந்து வந்து அவனுங்க சொந்தமா கட கிட வச்சு நல்ல இருக்கானுங்க. நம்ம ஜனங்க செருப்புகூட வாங்க வக்கு இல்லாமே பிச்சக்காரன்போல் பராரியாத் திரியுறாங்க. அன்னைக்கு பூமார்கட் கூட்டத்திலயும் ஒரு ஜி! அப்பிடித்தானே சொன்னாரு, இவுனுங்க தாடியும் மயிரும் பார்த்தா பத்திட்டு வருது இவ்வள நாள் ஒண்ணும் தெரியாம சுத்திட்டு இருந்தோம். ரமேஷ் அண்ணா வந்ததுக்கு பின்னாடி தான் நாட்டு நடப்புல எப்படி இருக்குனு தெரியுது. இவ்வள நாள் கேனமாறி இருந்துட்டோம் இனி அப்பிடியிருக்கக் கூடாதுன்னு தெருஞ்சுபோச்சு பாயனுங்கள அளவாதான் வச்சுக்கணும்.

அந்த செருப்புக் கடக்காரன் மாட்டுனா என்ன வேணாலும் நடக்கும்” என்று அவன் சொன்னது உயிரைக்கூட எடுக்க அவர்கள் தயாராக இருப்பதுபோல்தான் இருந்தது.

அவர்கள் பேச்சில் கடந்தமுறை நடந்த கலவரத்தில் அவர்களும் பல முஸ்லிம் பகுதிக்குள் புகுந்து வெட்டியதையும் முஸ்லிம் கடையில் பொருட்களை வாங்காதேனு போஸ்டர் ஒட்டியதையும் பெருமையாகச் சொல்லிக்கொண்டு இருந்தார்கள். தொழில் போட்டியும், இஸ்லாமிய வெறுப்பும்தான் இவர்கள் தன்னை சம்பந்தம் இல்லாமல் விரட்டுவதற்கான காரணம் என்பதைத் தெரிந்து கொண்ட அமானுல்லா அவசரப்பட்டு வெளியே போனால் இப்போதைக்கு நல்லது இல்லை என்று முடிவுக்கு வந்தான். நல்ல போதையிலிருந்த அவர்கள் ராஜா கடை வாசலில் போய் படுத்தார்கள்.

அதற்கு பிறகு அமானுல்லாவுக்கு தூக்கமே வரவில்லை காதர்பாய், ராஜாவின் முகம்தான் நியாபகம் வந்தது. தான் உண்டு தன் வேலை உண்டு என எந்தக் கெட்ட எண்ணமும் இல்லாமல் எல்லோரிடமும் சகஜமாய் வாழும் இவர்களை எப்படிப் பிரித்துப் பார்க்க இவர்களுக்கு மனம் வருகிறது. மனுஷன் பழகும்போதே தெரியாத அவனோட ஒழுக்கம். இனி ஜென்மத்துக்கும் இந்த வீதிப்பக்கம் ராஜாவும் வர மாட்டான், காதர்பாயும் வரமாட்டாரு, இப்படி கேவலமா நடந்து என்னத்த பெருசா செஞ்சுகிளுச்சடப் போறானுங்க என்று மனதில் திட்டித் தீர்த்தான்.

தூக்கம் இல்லாமல் புரண்டுபுரண்டு படுத்தான். தூக்கத்துக்காய் கண் எரிந்தது. ஆனால் எப்போது என்ன நடக்குமோ என்ற பயம் தூங்கவிடாமல் யோசிக்க வைத்துக்கொண்டே இருந்தது. வானம் இன்னும் கருப்பு கட்டியிருந்தது கண் எரிச்சலில் அதிகாலை அசந்து தூங்கினான். ஆய்சா தட்டி எழுப்பும்போதுதான் விடிந்து வெகு நேரமானது தெரிந்தது.

என்ன இவ்வளவு நேரம் தூங்குறீங்க உடம்பு சுகமில்லையா” என்றால் ஆய்சா. அவளிடம் இரவு நடந்ததைச் சொல்லலாமா? சொன்னால் ஒருவேளை அவள் மனம் உடைந்து பயப்பட ஆரம்பித்தால் என்ன செய்வது, இந்த நான்கு நாளாகத்தான் கொஞ்சம் தேறியுள்ளாள் நாம்பாட்டுக்கு சொல்லி அவளுக்குப் பயம்கூடிவிட்டால் இங்கிருந்து தப்பிப்பது கஷ்டம். என்னசெய்வது என்று முழுங்கினான். கொலை செய்வதைக் கூட அவர்கள் பெருமையாக, சாதாரணமாக பேசுவது எரிச்சலை உண்டாக்கியது. அதே நேரத்தில் உயிரோடு ஆய்சா குழந்தையோடு இங்கிருந்து வெளியேற முடியுமா? என்ற பயமும் வந்தது.

என்ன உடம்பு சுகமில்லையா” என்று மீண்டும் அவனை கலைத்து ஆய்சா கேட்டாள். ஒன்றும் இல்லை என தலையாட்டினான். அவன் முகம் சுருங்கிப் போனதை ஆய்சா கவனித்தாள். என்னவாக இருக்கும் என்று அவளுக்கு உறுத்த ஆரம்பித்தது.

சான்ஸா இன்னும் தூங்கிக்கொண்டு இருந்தான். ஆய்சா முருங்க மரத்திலிருந்து அய்ந்தாம் நாளும் கீரை பறித்தாள். அய்ந்து நாட்களாக முருங்கக் கீரை சாப்பிட்டுச் சாப்பிட்டு அமானுல்லாவுக்கே நாக்கு செத்துப் போயிருந்தது. அப்பிடியென்றால், சான்சாவுக்கும், அவளுக்கும் எவ்வளவுக் கொடுமையாக இருக்கும். இன்று நிச்சயம் சான்சாவைச் சமாதானப் படுத்த முடியாது. இவர்கள் செய்யும் அக்கிரமம், குழந்தைக்கு என்ன தெரியும். நல்ல சோறு கூட போடாத் துப்பில்லாத அத்தானு நினைப்பான். நேற்றே முழுங்க முடியாமல் அழுதுகொண்டே சாப்பிடும்போது அவனது கண்ணீர் சோறில் கலந்தது. தலையை உயர்த்தி ஆய்சாவைப் பார்த்தான். தனக்கு எதாவதனால் இவள் குழந்தையை வைத்து என்னசெய்வாள். உலகம் தெரியாதவள். அவளின் உலகமே சான்சாவும் நானும்தான். நாங்கள் இல்லாத உலகத்தை அவள்கனவிலும் நினைத்து பார்க்க மாட்டாள். கருகமணி இல்லாத அவள் கழுத்தை நினைத்துப் பார்க்கவே மனம் பாரமாய் இருந்தது.

அவன் உடல்நடுங்கி வியர்வை சொட்ட ஆரம்பித்தது. கீரை பறித்துக்கொண்டு இருந்த ஆய்சா அப்பிடியே கிழே போட்டுவிட்டு அமானுல்லாவின் கையைப் பிடித்து என்னாச்சுங்க! மச்சான் என்னாச்சு தோள்களைப் பிடித்து உலுக்கினாள். ஒன்றும் பேசாமல் எழுந்துசென்று சான்சா படுக்கை அருகில் கிடந்த நான்கு போர்வைகளை எடுத்து ஒன்றின் மேல் ஒன்றாய் விரித்தான். ஆய்சாவுக்கு ஒன்றும் புரியவில்லை. “மச்சான் என்னாச்சு” அருகில் நின்று கேட்டுக்கொண்டே இருந்தாள். தலை பாரத்துக்கு நீர்ஆவி பிடிப்பதை போல நான்கு போர்வையையும் எடுத்து தலைக்கு போர்த்தினான். ஆய்சாவுக்கு அமானுல்லா என்ன செய்கிறான் என்றே புரியவில்லை. ஆனால் அவன் முகம்மட்டும் சரியாய் இல்லை என்று கண்டாள். தலையை உயர்த்தி ஆய்சாவை பார்த்துவிட்டு அவளை அருகில் உட்காரவைத்து நான்கு போர்வையையும் மூடி மடைதிறந்த வெள்ளமாய் ஆய்சாவைக் கட்டிக்கொண்டு அழ ஆரம்பித்தான். தான் அழும் சத்தம்கூட வெளியே போகக் கூடாது என்று போர்த்திக்கொண்டு அழுதான். “ஒன்னும் இல்ல மச்சான் பயப்புடாத பயப்புடாத” என்று அவளும் அழுதாள். “வாயவிட்டு அழக் கூட நமக்குக் குடுத்து வைக்கலடி ஆய்சா” என்று அவளைக் கட்டிப்பிடித்து தேம்பித் தேம்பி அழுதான்.

அய்ந்து நாட்கள் கடந்த பின்பும்கூட தெருவில் இன்னும் அமைதி தொடர்ந்தது. தெருவில் கிழக்கும் மேற்கும் போய்வந்த அவர்கள் அமானுல்லா வீட்டைக் கடந்து போனபோது தாளிடப்பட்டதைப் பார்த்து “இப்போதைக்கு ஓடிப்போனவன் வர வாய்ப்பே இல்லை” என்று கிண்டல் செய்துகொண்டே போனார்கள்.

*

kareem - kathavu-cover2

நன்றி : அ. கரீம், பாரதி புத்தகாலயம், யாழினி சென்ஷி

தொடர்புடைய சுட்டி :
‘கரீம் கோருவது வக்கணையான பதில்களையல்ல, மாற்றத்தை’ –ஆதவன் தீட்சண்யா முன்னுரை