’ஹஜ்ஜை முடித்து அருளைச் சுமந்து’ வரும் அல்-ஹாஜிகளுக்கும் ஆரவாரமின்றி இனியாவது சுமக்கப்போகும் ’அல்-நமாஸி’களுக்கும் ஆபிதீனின் ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துகள். அஸ்கர் அலி என்ஜினியர் எழுதிய ‘இஸ்லாத்தின் பிரச்சினைகள் : ஒரு மறுபார்வை’ நூலிலிருந்து ஓரிரு பத்திகளை (’இஸ்லாம் – அறுதித் தரிசனம்’ கட்டுரை / பக் : 171-172) பதிவிடுகிறேன்.
***
..ஒவ்வொரு தொழுகையும் வறியவர்களுக்கும் பற்றாக்குறை நிலையில் இருப்பவர்களுக்கும் சமுதாயத்தின் நலிந்த பிரிவினருக்கும் சேவை செய்யும் கடமையைப் புதுப்பித்துக் கொள்வதே ஆகும். வறுமையை ஒழிக்கவும் ஏழை எளியவர்களின் துன்பத்தைத் தீர்க்கவும் தகுந்த திட்டங்களில் தங்களை ஏடுபடுத்திக்கொள்ள ஒரு வலுவான உந்துதலை ஒவ்வொரு தொழுகையும் தொழுபவர்களின் உள்ளங்களில் உண்டாக்க வேண்டும்.
ஆனால் இஸ்லாமியத் தொழுகையும் வெறும் சடங்காகத்தான் தரம் தாழ்ந்து இருக்கிறது. இதற்கு நிறைய காரணங்கள் உண்டு. முதலாவதாக, சுரண்டப்படுபவர்கள், ஏழைகள், சமுதாயத்தின் பிற நலிந்த பிரிவுகள் ஆகியோரின்பால் இஸ்லாம் கொண்டுள்ள ஈடுபாடு புறக்கணிக்கப்பட வேண்டும் என்ற சுயநல சக்திகளின் விருப்பம். ஏனெனில் அந்த ஈடுபாடு ஆள்வோர் மற்றும் ஆதிக்க வர்க்கங்களின் நலன்களுக்குக் கடுமையாக ஊறு விளைவிக்கும். வேறெந்தச் சமூகத்தைப் போலவே இஸ்லாமிய சமூகங்களும் அதிகாரப் படிநிலைகளைக் கொண்டுள்ளன. வேறெந்தச் சமூகத்திலும் காணப்படும் அதே அளவு அநீதியும் சுரண்டலும் இஸ்லாமிய சமூகங்களிலும் காணப்படுகின்றன. எல்லாச் சமூகங்களையும் போலவே இஸ்லாமிய சமூகங்களும் ஏற்றத தாழ்வானவையே. மற்ற சமூகங்களில் இருப்பது போலவே இஸ்லாமிய சமூகத்திலும் வருமானத்திலும் செல்வத்திலும் பாரதூரமான வேறுபாடுகள் நிலவுகின்றன. மற்ற மத சமூகங்களில் உள்ள செல்வர்கள் போலவே முஸ்லிம் செல்வர்களும் ஏழை எளியவர்களின் துன்பங்கள் குறித்த உணர்வற்றவர்களாகவே உள்ளனர். ஏழைகளின் துன்பங்களைத் தீர்ப்பதற்கு, ஜகாத் கூட சரியாகச் செலுத்தப்படுவதில்லை. இவ்வாறு இஸ்லாமிய சமூகங்களும் ஏற்றத்தாழ்வு நிறைந்தும் தேக்கமுற்றுமே காணப்படுகின்றன.
ஆக, இஸ்லாமியத் தொழுகையின் புரட்சிகர உத்வேகம் முற்றிலுமாக மறைந்து போயிற்று. புனித குர்ஆனிலிருந்து தாம் ஓதுவது என்ன என்பதைக் கூடப் புரிந்துகொள்ளமால் எந்திரத்தனமாகத் தொழுகை நிகழ்த்தப்படுகிறது. பிரார்த்தனைகள் அனைத்தும் அரபு மொழியில் உள்ளன. ஆனால் கோடிக்கணக்கான முஸ்லிம்களுக்கு அரபு மொழியே தெரியாது. அவற்றை அந்த அந்த நாட்டு மொழிகளில் மொழிபெயர்க்கும் எவ்விதமான முயற்சியையும் உலமா எதிர்க்கின்றனர். வெகுகாலம் வரை குர் ஆனைப் பிற மொழிகளில் மொழிபெயர்ப்பது அனுமதிக்கப்படவில்லை. கடந்த நூறு ஆண்டுகளில்தான் குர்ஆன் உலகின் பலமொழிகளிலும் பரவலாக மொழிபெயர்க்கப்பட்டு வந்துள்ளது.
நோன்பு, ஹஜ் யாத்திரை போன்ற சடங்குகளுக்கும் இந்தக் கூற்று பொருந்தும். இச்சடங்குகளும் எந்திரத்தனமாகவே நிறைவேற்றப்படுகின்றன. அவற்றின் ஆன்மிக மற்றும் விடுதலை உள்ளடக்கங்கள் அறவே அழிந்து விட்டன. இவ்விசயத்தில் இஸ்லாத்துக்கும் மற்ற மதங்களுக்கும் இடையில் சிறிதளவும் வேறுபாடு இல்லை. இவ்வகையில் முஸ்லிம்கள் மற்றவர்களைவிடத் தஙகளை உயர்ந்தவர்களாகச் சொல்லிக் கொள்ள முடியாது.
**
தமிழாக்கம் : க. கிருஷ்ணமூர்த்தி, சிங்கராயர்
***
நன்றி : அஸ்கர் அலி என்ஜினியர் , ‘அடையாளம்’
***
அஸ்கார் அலி எஞ்சினியர் (1940), தாவுதீ போரா முஸ்லிம் குடும்பத்தில் பிறந்தவர், பொறியலில் (சிவில்) பட்டம் பெற்று பம்பாய் மாநகராட்சியில் பொறியியலாளராக நீண்டகாலம் பணிபுரிந்தார். இஸ்லாம் பற்றிய ஆய்விலும் சமய ஒப்பியில் ஆய்விலும் ஈடுபாடு மிக்கவர், இஸ்லாமிய மூலநூல்களை அரபி, பாரசீக மொழிகளிலேயே கற்றவர். ஆங்கிலத்தில் பல நூல்களை எழுதியுள்ளார். மேற்கத்திய தத்தவ ஞானம், குறிப்பாக இருத்தலியல்வாதம், மார்க்சியம் போன்றவை இவருக்கு ஈடுபாடுள்ள மற்ற துறைகள். இதற்கு முன் எஞ்சினியரின் ‘இஸ்லாமியின் தோற்றமும் வளர்ச்சியும்’ என்னும் நூல் ஓரியன் லாங்மேன் (1993) வெளியீடாகத் தமிழில் வெளிவந்திருக்கிறது. ’இஸ்லாத்தின் பிரச்சினைகள் : ஒரு மறுபார்வை’ (Rethinking Issues in Islam) தமிழில் வெளிவரும் அவருடைய இரண்டாவது நூல். – அடையாளம் பதிப்பகம்
***
Read :