‘உங்களைப்போலவே நானும் அரைலூசுதான்’ என்று கவிஞர் அஷ்ரஃப் தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டபோது கடுங்கோபம் வந்தது. வராதா பின்னே, முழுலூசை எப்படி அரைலூசு என்று சொல்லலாம்? என்னச் சொன்னேன்!
தனது இரு புத்தகங்களையும் அனுப்பி வைத்தார் நண்பர். ஒன்று ‘ஸ்ரீலங்காவிலிருந்து ஸ்ரீரங்கப்பட்டணம் வரை‘ . பயணக் கட்டுரை, முத்தாரம் வடிவில். இன்னொன்று மொத்தாரம். 216 பக்கங்கள். அரசியலைத் தவிர எதை வேண்டுமானாலும் எழுதலாம்’ என்ற அனுமதியோடு (பின் எதைத்தான் எழுதமுடியும் இலங்கை இஸ்லாமியர்கள்?) அஷ்ரஃப் சிஹாப்தீனால் எழுதப்பட்ட பத்திகளின் தொகுப்பு. தினகரன் வாரமஞ்சரியில் பதினாறு மாதங்களாக எழுதியிருக்கிறார் – ‘தீர்க்க வர்ணம்’ என்ற தலைப்பில். எதைத் தீர்க்க? அது முக்கியமில்லை, கண்ணீர்க் கோடுகள் வரைந்த கார்ட்டூனிஸ்ட் நஜி-அல்-அலி பற்றி, ‘என் கண்ணீரை மறைப்பதற்காகத்தான் நகைச்சுவையாக நடிக்கிறேன்’ என்று சொன்ன மேதை சாப்ளின் பற்றி, பங்களாதேஷின் ஷம்ஷூர் ரஹ்மான் பற்றி, குப்பை மேட்டுக் குடிகளான பர்மிய ஏழைகள் பற்றி, தேசம் இழந்த ஈராக் அகதிகள் பற்றி , அமெரிக்க உளறுவாயன் ரொனால்ட் ரம்ஸ்பீல்ட் பற்றி, மலையாளப் படைப்பாளி பாறக்கடவு பற்றி, மனித உரிமைப்போராளி மாயா ஏஞ்சலோ பற்றி… லிஸ்ட் பெரியது. மொத்தம் 68 பத்திகள். சில கட்டுரைகளில் அஷ்ரஃப் குறிப்பிடும் இலங்கை எழுத்தாளர்களை – முக்கியமாக ஓடையூரான், நாகூர் கனி, வாழைச்சேனை அமர் – நான் அறிந்திராதது வாசிப்பின் குறைவைச் சுட்டுகிறது. ஆஃபீஸில் படித்தால் அரபி அடிக்கிறானே..!
விமர்சனமல்ல, இணையத்தில் எடுக்கப்பட்ட நிறைய தகவல்களோடு நகைச்சுவை கலந்து தயாரிக்கப்பட்ட அஷ்ரஃப் பிராண்ட் அகர்பத்திகளின் சுகந்தத்தைக் கொஞ்சம் சொல்கிறேன்.
அ.முத்துலிங்கத்தின் ‘வியத்தலும் இலமே’ குறித்த கட்டுரையின் முடிவில் எழுத்தாளர்கள் பற்றி ஒன்று சொல்கிறார் அஷ்ரஃப். எனக்கான அட்வைஸாகத்தான் தெரிகிறது அது. ‘எழுதுவதைத் தள்ளிப் போடுவதற்குரிய வேலைகளில் அடிக்கடி ஈடுபடுவதாக வெற்றிகரமான ஒரு மேல்நாட்டுப் படைப்பாளி சொல்கிறார். தமிழில் எழுதுவோரும் இந்த முறையைப் பின்பற்றினால் நன்றாக இருக்கும்!’
‘அடைதல்’ என்று ஒரு கட்டுரை. மெபிக்கோமா என்ற ஆப்பிரிக்க அரசன் வருகிறான். நீர்ப்பஞ்சமுள்ள நாடு அவனுடையது. கடவுளின் அருளை நாடுகிறான். அவர் ஒரு ஆற்றைப் பரிசாக கொடுக்கிறார். கரைபுரண்டு ஓடுகிறது ஆறு , ஆனால் நீர்வளமுள்ள வேறு பகுதிக்குப் பாய்கிறது. அதை பஞ்சம் நிலவிய பகுதிக்கு திருப்பிவிடுவதிலேயே காலம் போகிறது. ஆறும் வற்றிவிடுகிறது. கடவுளிடம் கதறுகிறான் அவன்.
‘நீ தந்த ஆற்றை நீயே எடுத்துக்கொண்டது ஏன்?’ என்று கடவுளிடம் கேட்டான். கடவுளோ ‘நான் அப்படிச் சொல்லவில்லை’ என்றார். ‘அப்படியானால் எனக்குத் தந்த ஆறு எங்கே?’ என்று அரசன் கேட்டான். ‘நீதான் அதைப் பாலைவனத்துக்குப் பருகக் கொடுத்தாய். அந்தப் பிரதேசம் நீரின்றி வரண்டு கிடந்ததை நான் அறிவேன். நீ அறிந்திருக்கவில்லை’ என்று கடவுள் பதில் சொன்னார். ‘பாலைவனம் அத்தனை நீரையும் உறிஞ்சிவிடப் போகிறது என்று தெரிந்திருந்தும் நீ ஏன் எனக்கு எச்சரிக்கை செய்யவில்லை. உனக்கு யாவும் தெரிந்திருந்தும் எனக்கு ஏன் அதுபற்றிச் சொல்லவில்லை” என்று அரசன் கடவுளிடம் கேட்டான். கடவுள் உற்றுப் பார்த்தார். முழுநாடும் ஒருமுறை அதிர்ந்தது. அவர் சொன்னார் : ‘மெபிக்கோமா, இதுதான் மனிதர்களாகிய உங்களோடு உள்ள பிரச்சனை. நீங்கள் எதையும் சரியாகப் பெற்றுக் கொள்வதில்லை!’
இதே ‘அடைதல்’ கட்டுரையில் வேடிக்கையான இன்னொரு கதை இருக்கிறது. உண்மையாக நடந்ததாகத்தான் இருக்க வேண்டும். மேலுலகத்தில், ஒரு மதகுருவுக்கு வெறும் வெண்கலப் பதக்கம்தான் கிடைக்கிறது. இலங்கையின் தனியார் பஸ் டிரைவருக்கோ தங்கப்பதக்கம்! மதகுருவின் ஆட்சேபணைக்கு இறைவனின் பணியாள் பதில் சொல்கிறார்: ‘உமது உபதேசங்களின்போது மக்கள் தூங்கி வழிந்தார்கள். ஆனால் அந்த டிரைவர் பஸ்ஸில் ஏறிவிட்டாலோ எல்லோருமே நடுநடுங்கி மனமுருகிப் பிரார்த்தார்கள்!’
ஆலிம்ஷாக்கள் ‘கவனிக்க’ வேண்டும்!
அஷ்ரஃபின் ‘சீசன் சிறுகதைகளை’யும் படித்து சிரித்தேன். இதில் மூன்று கதைகள் இருக்கிறது. இன்னும் ஒரு நாள் கழிந்தால் தீபாவளி என்று அனுசூயாவும், இன்னும் ஒரு நாள் கழிந்தால் பெருநாள் என்று அனீஸாவும் இன்னும் ஒரு நாள் கழிந்தால் கிறிஸ்துமஸ் என்று அனீட்டாவும் ஒரேநேரத்தில் கவலைப்படுகிறார்கள். மலர்களுக்காக மாய்ந்து மாய்ந்து எழுதும் மட்டிகள் கவனிக்க!
‘ராஜா மகளின் ரோஜா இதழ்’ கட்டுரையில் ஒரு தென்கச்சி ஜோக். தென்கச்சி சொல்கிறார் :
ஒரு நாள் பஸ்ஸில் நான் நின்று கொண்டிருந்தேன். கல்லூரி மாணவர்கள் இரண்டு பேர் அமர்ந்திருந்தார்கள். ஒருவன் என்னைப் பார்த்து விட்டான். மற்றவனை தட்டிச் சொல்கிறான். ‘அவரைப் பார்த்தால் வானொலியில் ‘இன்று ஒரு தகவல்’ சொல்பவர் போலிருக்கிறார்’ என்று. அதுக்கு மற்றவன் சொல்றான் – ‘போடா அவர் எப்பேர்ப்பட்ட விஷயமெல்லாம் சொல்றார். இந்த மூஞ்சியைப் பார்த்தா அப்படித் தெரியலடா’
‘இலவச இறக்கைகள்’ என்று ஒரு கட்டுரை. ‘பெண்கள் பேசிக்கொண்டிருந்தார்கள் என்பதற்காக அதில் உண்மையில்லை என்று எப்படிச் சொல்வது?’ என்று முடிக்கிறார் அஷ்ரப். அஸ்மாவிடம் இதை சொல்லிச் சிரித்தபோது ‘அந்த ஆளு ஒரு அரலூஸு போலக்கிது – ஒங்களப்போல’ என்றாள். இவளும் பாதிதான் என்னைப் புரிந்திருக்கிறாள்!
அஸ்மாவை சமாதானப்படுத்த ‘அரசனும் செம்படவனும்’ கட்டுரையில் வரும் கிளி-நாய்-பூனை கதையைச் சொன்னேன். ‘ஏன் திருமணம் செய்துகொள்ளவில்லை’ என்று கேட்டதற்கு ஒரு பெண் பதில் சொன்னாளாம், நான்தான் ஒரு கிளியையும், ஒரு நாயையும், ஒரு பூனையையும் வளர்க்கிறேனே என்று. அதற்கும் திருமணத்துக்கும் என்ன சம்பந்தம்? ‘இவை மூன்றுமே ஆண்களின் வேலைகளைத்தானே செய்கின்றன. கிளி ஆண்களைப்போல அவ்வப்போது ஆணையிடுகிறது. நாய் அவ்வப்போது ஓய்வின்றி குரைக்கிறது. பூனை கால நேரம் பார்க்காமல் ஊர் சுற்றித் திரிகிறது’
அஸ்மாவுக்கு திருப்தி. ‘அப்ப நீங்க மட்டுதான் லூஸு’ என்று உதைத்தாள். அஷ்ரஃப் பாணியில் சொன்னால் , இன்பமாய் இருக்கிறது!
வில்லங்கமான ஒரு ‘தபாற்காரர் கதை’யை கொஞ்சம் இங்கே குறிப்பிடவா? வேண்டாம், நேற்று காலை ஆறரை மணியிலிருந்து நான் ஆபாசக்குறிப்புகள் எதுவும் எழுதுவதில்லை என்பதை நீங்கள் அறிந்திருக்கலாம்.
அஷ்ரஃப் என்னைப் போலல்ல. நகைச்சுவை பிரமாதமாக வருகிறது அவருக்கு. அந்த ‘ஸ்ரீலங்காவிலிருந்து ஸ்ரீரங்கப்பட்டணம் வரை’ நூலில் ஒரு சம்பவம். கேரளாவின் படகுவீட்டுக்குள் நண்பர்களோடு காலடி எடுத்துவைக்கும்போது படகோட்டியிடம் நம்ம அல்டிமேட் ஸ்டார் அஷ்ரஃப் நடுங்கியபடி கேட்கிறார்: ‘உங்களுக்கு நீச்சல் தெரியும்தானே?’
பதிவின் தலைப்புக்கு வரவேண்டும்…’பொன் செய்யும் மருந்து’ கட்டுரையில் ‘யாரோ’ ஒருவர் சொன்னதைப் படித்து நெகிழ்ந்துவிட்டேன். இதல்லவா குடியரசு தின செய்தி!
என்னிடமுள்ள பெருமையை நீக்கி விடும்படி இறைவனைக் கேட்டேன். அவன் மறுத்தான். அது நான் எடுத்துக் கொள்வதற்கானது அல்ல; நீயாகவே துறந்து விடுவதற்கானது என்று சொன்னான். மகிழ்ச்சியை ஏற்படுத்தித் தருமாறு இறைவனைக் கேட்டேன். அவன் மறுத்தான். நான் உனக்கு ஆசிகளை வழங்குகிறேன்; அதிலிருந்து சந்தோஷத்தைப் பெற்றுக் கொள்வது உன்னைப் பொறுத்தது என்று சொன்னான். எனக்குப் பொறுமையைத் தரும்படி இறைவனைக் கேட்டேன். அவன் மறுத்தான். அது பெருந்துன்பங்களின் வழித் தொடர்புடையது. அது வழங்கப்படுவது அல்ல; அடைந்து கொள்ளப்படுவது என்று சொன்னான். வாழ்வின் இன்பங்களையெல்லாம் அடைவதற்கான சகலத்தையும் தருமாறு இறைவனைக் கேட்டேன். அவன் மறுத்தான். நான் உனக்கு வாழ்க்கையைத் தந்திருக்கிறேன்; இன்பங்களை அடைவது உன்னைப் பொறுத்தது என்று சொன்னான்.
இறைவன் என்னில் வைத்திருப்பதைப் போல மற்றவர்களில் அன்பு செய்ய உதவுமாறு இறைவனைக் கேட்டேன். இறைவன் சொன்னான்: “அப்படிப் போடு!”
***
நன்றி : அஷ்ரஃப் சிஹாப்தீன் | ashroffshihabdeen@gmail.com
அஷ்ரஃப் பற்றி மேலும்
*
அஷ்ரஃப் ஷிஹாப்தீன் கதைகள் :
‘அது’ – உயிரோசை
செய்னம்புவும் சின்ன மாமாவும் – கீற்று
பட்டாக்கத்தி மனிதர்கள் – கீற்று
பூனைக் காய்ச்சல் – திண்ணை
***
பதிவிறக்கம் செய்க (pdf) : ‘யாத்ரா’ இதழ் 1 & ‘யாத்ரா’ இதழ் 8
***
‘தீர்க்க வர்ணம்’ (விலை : 250) பெற :
Yaathra Publication
37, Sri Sidhartha Mawatha, Mabola, Wattala
Sri Lanka
Cell : 0777 303 818
yaathra@hotmail.com