தழுவல்களும் நழுவல்களும் – அம்ஷன்குமார்

இலக்கியமோ சினிமாவோ, அப்படியே ’சுடுபவர்களை’ அப்புறம் பார்க்கலாம். ஓராயிரம் பேர் இங்கே இருந்துகொண்டுதான் உயிரை வாங்குகிறார்களே – இந்தப் பதிவு போடும் என்னையும் சேர்த்து. பதிவுக்கு வரவா? உயிர்மையின் நூறாவது இதழ் ’100 படைப்பாளிகளிடம் 100 கேள்விகள்’ என்று ’மாபெரும்’ உரையாடலாக வந்திருக்கிறது. இதழின் பிரதான விசயம் ‘கூடங்குளம் – பொய்யைப் பிளந்து வாழ்வைக் காக்கும் போர்’ என்ற தலைப்பில் நண்பர் அ.முத்துக்கிருஷ்ணன் வைக்கும் வலிமையான வாதங்கள்தான். சீரியஸ் மேட்டர்தான் நமக்குப் பிடிக்காதே. அதனால் இது. வேண்டுமானல் – சாம்பிளுக்கு – சிரிக்காமல் இதை அழுத்துங்கள். அழுத்துனா பெருசாவும்! ஆச்சா?  ம்… உரையாடல் என்று மட்டும் சொல்வதில் உடன்பாடில்லை போலும் உயிர்மைக்கு. அந்தப் பகுதியில் வந்த – ’ஒருத்தி’ இயக்கிய (அவளை இன்னும் நான் பார்க்கவில்லை என்று சொன்னால் ‘எவ அவ?’ என்று அலறுகிறாள் அஸ்மா) – அம்ஷன்குமாரின் பதில் மட்டும் இப்போது.  எழுபதுகளின் இறுதியில் , மதிப்பிற்குரிய எஸ்.ஆல்பர்ட் சாரின் முயற்சியில் ஓரிரு உலக சினிமாக்கள் திருச்சியில் திரையிடப்பட்டபோது அவரை பார்த்திருக்கிறேன். அவ்வளவுதான்.

அம்ஷன்குமாரிடம் கேட்கப்பட்ட கேள்வி இதுதான்: சமீப காலமாக தமிழில் பிறமொழிப் படங்களைத் தழுவி எடுக்கும் போக்கு அதிகமாக உள்ளது. இது அசலான தமிழ் சினிமா உருவாவதற்கு தடையாக இருக்குமா?

பதில் :

சினிமாவில் நகலெடுத்தல், தழுவுதல் ஆகியன காலம் காலமாக நடந்து வருகின்றன. இங்கு மட்டுமல்ல, உலகெங்கிலும். சார்லஸ் சாப்ளினின் மௌனப்படமான மாடர்ன் டைம்ஸ் வெளியானபொழுது அதன் மீது ஒரு பிரெஞ்சு படத் தயாரிப்பாளர் வழக்குத் தொடுத்தார். தனது படத்தில் வரும் தொழிற்சாலைக் காட்சிகளை சாப்ளின் நகலெடுத்துவிட்டார் என்பது குற்றச்சாட்டு. சாப்ளினின் பெரும் விசிறியான அப்படத்தில் இயக்குனரான ரெனெ க்ளேர் அவ்வாறு சாப்ளின் செய்திருக்கும் பட்சத்தில் அது தனக்குப் பெருமைதான் என்றுகூறி வழக்கு நடைமுறைகளிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டார். மாடர்ன் டைம்ஸ் வெளிவந்த அதே 1936ம் வருடத்தில் இங்கு நடைபெற்ற ஒரு சுவாரஸ்யமான வழக்கு பற்றி அறந்தை நாராயணன் ‘தமிழ் சினிமாவின் கதை’யில் தகவல் தந்துள்ளார். அந்த வருடம் சதி லீலாவதி தமிழ்ப்படம் வெளியானது. எஸ்.எஸ்.வாசன் எழுதிய நாவல், எல்லிஸ் ஆர்.டங்கனால் இயக்கப்பட்டிருந்தது. அதே சமயம் ஜித்தன் பானர்ஜி, அல்டேகரின் இயக்கத்தில் பதிபக்தி என்கிற மேடை நாடகம் அதே பெயரில் படமாக வந்தது. இரண்டுமே ஒரே கதைதான். பதிபக்தி தயாரிப்பாளர் வழக்கு தொடுத்தார். இரண்டு படங்களின் கதைகளும் ஓர் இந்திக் கதையின் தழுவல் என்பது தெரிய வந்தது. அந்த இந்திக் கதாசிரியரை அழைத்து இருவர் மீதும் வழக்கு தொடரச் சொல்லட்டும்மா என்று நீதிபதி கேட்காத குறைதான்.

சமூகப் படங்களில்தான் நகல், தழுவல் ஆகியன நடக்கத் தொடங்கின. புராணங்கள், நாட்டார் கதைப் படங்கள் ஆகியவற்றில் பொதுவாக பிறமொழிப் படங்களின் தழுவல்கள் இருப்பதில்லை. பல நேரங்களில் ஒரே சமயத்தில்  இரண்டு மொழிகளில் படங்கள் தயாராகும்பொழுது ஒரே அச்சில் அவை வார்க்கப்படுகின்றன. ஸ்டூடியோக்கள் தங்களது வசதிகளை வைத்துக்கொண்டு ஒன்றுக்கும் மேற்பட்ட மொழிகளில் ஒரே கதையை ஒரே நேரத்தில் படமாக்கின.

தழுவிப் படம் எடுப்பவர்கள் தழுவப்படும் படத்தின் உரிமை பெற்று எடுத்தால் களவாடல் என்கிற அபவாதத்திலிருந்து தப்பிவிடுகிறார்கள். அது நேர்மையான செயல். ஆனால் பெரும்பாலான சமயங்களில் உரிமை பெறாமல் தழுவல் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. ஹாலிவுட்டில் தயாராகும் படங்கள் புத்தகங்களின், படங்களின் உரிமை பெற்று எடுக்கப்படுகின்றன. இங்கு அந்தப் பண்பாடு வளரவில்லை.

ஒரு காரணம், எழுத்தாளரின் கதையைப் படமெடுத்தால் தயாரிப்பாளருக்கு முதல் வில்லனாக அந்த எழுத்தாளரே முளைத்து விடுகிறார். பல எழுத்தாளர்கள் கதை திரைக்கதையாவதன் ரசவாசம் புரியாதவர்களாக இருப்பதால் வீண் வம்புகளில் அகப்பட்டுக் கொள்ளாது அவர்களின் படைப்புகளைச் சுட்டுவிடுவது எளிதாக உள்ளது. இது டிஜிடல் யுகம். தகவல்களுக்குப் பஞ்சமில்லை. எந்தப் படம் வந்தாலும் அதன் மூலத்தை உடனே விமர்சகர்கள் கண்டுபிடித்து விடுகிறார்கள். படத்தை எடுத்தவர்கள் அதை ஒப்புக்கொள்வதில்லை.  அந்தக் கற்பனை தங்களுக்கு ஏற்கனவே இருந்ததாக வாதிடுகிறார்கள். நெருக்கிப் பிடித்த பிறகு கம்பராமாயணமே தழுவல்தானே என்று அசடு வழிகிறார்கள். ரசிகர்கள் இதையெல்லாம் அவ்வளவாகப் பொருட்படுத்துவதில்லை. அவர்களுக்குப் படம் பிடித்திருந்தால் போதும். எவ்வளவு காலம்தான் ஒரே கதையை அவர்கள் வெவ்வேறு தலைப்புகளில் பார்த்துக் கொண்டிருப்பார்கள். தமிழில் வரும் பெருவழக்குப் படங்களின் கதைகள், கதையாடல்கள் என்றோ காலவதியாகிவிட்டன. அவற்றில் ஏதாவது புதுமையாக வரவேண்டுமென்றாஅல் பிறமொழிப் படங்களைத் தழுவி எடுத்தால்தான் ஆயிற்று என்கிற நிலை வந்துவிட்டது.

எது அசல், எது தழுவல் மற்றும் நகல் என்பதையெல்லாம் படம் பார்த்தவுடனேயே சொல்லிவிட முடிகிறது. ரேக்ளா ரேஸை நம்மால் படம் எடுக்க முடியும். அதிலும்கூட பென்ஹர் பட வாடை வீசும். கார் ரேஸ் என்றால் அது நிச்சயம் ஹாலிவுட்டின் நகல்தான். சினிமாவில் மட்டுமல்ல, எழுத்திலும் இதனைச் சொல்லலாம். துப்பறியும் கதைகள், விஞ்ஞானக் கதைகள், மேஜிக் ரியலிசக் கதைகள் என்று எவ்வளவு பெரிய இலக்கிய ஜாம்பவான் எழுதினாலும் அவற்றில் இரவல் சரக்குகள் இருக்கும். தமிழுக்கேயுரிய சூட்சும மூளைக்குள் அவையெல்லாம் தட்டுப்படுவதில்லை. அவ்வாறு தழுவல் செய்வதன்மூலம் மொழி மற்றும் பாரம்பரியம் சார்ந்த சாத்தியப்பாடுகளை மீறி வளம் சேர்க்க முடிகிறது. திரும்பத் திரும்ப ஒரு சில கருத்துக்களையே வைத்துப் படமெடுக்கப்பட்டு வரும் சூழலில் தழுவல் படங்கள் வேறு வகைமைகளை வளமையுடன் கொண்டுவரும் சாத்தியங்கள் உள்ளன.

ஆனால், விடாப்பிடியாக நைந்து போன ஒரு சட்டகத்தினுள் தழுவல் சமாச்சாரங்களைத் திணிப்பதால் புதுமைகள் தோன்றாது மடிகின்றன. தழுவல்கள் படைப்பாக்கம் மிக்க மீறல்களை ஊக்குவிப்பவனாக இருக்க வேண்டும். குரசோவாவின் ரோஷமான் படம் எஸ். பாலசந்தரின் அந்த நாளாக தழுவல் மூலம் கிடைத்தது. கதாநாயகன் தேசத்துரோகியாக வரும் ஒரே தமிழ்ப்படம் அது. ஒரு குறிப்பிட்ட அளவிற்கு அது தமிழ்ப்படக் கதையாடலை முன்னுக்கு நகர்த்தியது. பாடல்களே இல்லாமல் படம் எடுக்கப்பட்டதேகூட  தழுவலின் தாக்கம் என்று கொள்ளலாம். எந்தப் படம் தழுவப்படுகிறது என்பது மட்டுமின்றி என்ன அழுத்தம் அதிலிருந்து பெற்றுக் கொள்ளப்படுகிறது என்பதும் தழுவல் படத்தின் தரத்தை நிர்ணயிப்பதாக உள்ளது. ரித்விக் கட்டக்கின் மேக மேக தாரா எஸ். கோபாலகிருஷ்ணனின்  குலவிலக்காக வந்தது. அதேபோல் கட்டக்கின் சுவர்ணரேகா மாறனின் இயக்கத்தில் மறக்க முடியுமாவாகத் தமிழுக்கு வந்தது. ஆனால், தழுவல்கள் பெற்றுக்கொண்டது கட்டக்கின் மெலோடிராமாவைத்தான். கட்டக்கின் காவிய சிந்தனையோ சாதியத்தின் புரையோடல்கள் பற்றிய சித்தரிப்புகளோ தழுவல்களில் இல்லை.

அண்மையின் பல தழுவல் படங்கள் வந்துள்ளன. அவற்றை எடுத்தவர்களே அவை தழுவல்கள் என்று தற்காப்புடன் மறுக்கிற சூழலில் அவற்றின் பெயர்களை நான் குறிப்பிட்டு எதையும் கிளற விரும்பவில்லை. வழக்கமான சங்கதிகள் நிறைந்த தழுவல் படங்களைப் பற்றிப் பேசுவதற்கு  ஒன்றும் இல்லை. தொழில்நுட்ப ரீதியில்  தழுவல்கள் நகல்களாகத்தான் இருக்கின்றன.  இவை தவிர,  சில கலைப்படங்கள் தழுவப்பட்டு தமிழில் எடுக்கப்பட்டுள்ளன். கதை மட்டுமின்றி ஷாட்டுகள் கூட மூலத்திலிருந்து பெறப்பட்டன என்று விமர்சகர்கள் அவற்றை விமர்சித்தனர்.

கலைப் படங்களைத் தமிழில் முழுதாக தழுவி எடுப்பது வெகு அபூர்வம். விமர்சனத்தினால் அந்த முயற்சிகளைக் கொன்றுவிடக்கூடாது. அந்த வகையில் அந்தப் படங்கள் மாற்றுப் படங்களை நோக்கிய வித்தியாசமான முயற்சிகள் என்றுதான் கூறவேண்டும். அத்தகைய படங்களின் குறைபாடுகள் அவை தமிழ்ப் படக் கதையாடலை புதுப்பிக்காமல் தொடர்ந்து அந்நியப்பட்டு நிற்கின்றன என்பதுதான். கதையாடல்கள் அந்நியத்தன்மை கொண்டனவாக இருந்தால் புதுமைகள் உட்புகாது. நாம் நமக்குத் தேவையான ஒன்று இன்னதென்று அறியாமல் எதிர்பார்ப்புடன் இருக்கும்பொழுது அது இதுதான்  என்பதான் உணர்வினை உடனே தோற்றுவிக்கும் இயல்பினதாகப் புதுமை இருக்க வேண்டும். அதிலிருந்துதான் நமக்கேயுரிய சினிமா மொழி உருவாகும். புத்திசாலித்தனமாக தழுவல்கள் அதற்கான பங்கை ஆற்ற முடியும்.
***

நன்றி : அம்ஷன்குமார், உயிர்மை

***

சில சுட்டிகள் :

பாரதியின் இளம் நண்பர்கள் : http://www.kalachuvadu.com/issue-108/page27.asp

சினிமாவுக்குப் போன ஜெயகாந்தன்   : http://www.uyirmmai.com/contentdetails.aspx?cid=2772

தமிழ்ச் சிற்றேடுகளின் சினிமா அக்கறைகள் :  http://www.kalachuvadu.com/issue-100/page87.asp

வேர்கள் :  http://navinavirutcham.blogspot.com/2009/04/blog-post_14.html

சியாட்டில் விற்ற நிலம் :   http://navinavirutcham.blogspot.com/2008/09/blog-post_24.html

மாடர்ன் டைம்ஸ் : http://www.kalachuvadu.com/issue-144/page49.asp