பணக்காரனுக்கு ஒண்ணு பத்தாது! – ’கூகி’

’முஸாஃபிர் ஹுங் யாரோ’ என்று நான் பாடியதைக் கேட்ட நண்பன்,  ‘நீதான்’ என்றான். ஹக். ’முஸாஃபிர் சத்திரம்’ என்ற தலைப்பில் தாஜ் எழுதிய பதிவிற்கான சுட்டியையும் கொடுத்தான். அல்லாவே, அவர் அங்கே எழுத ஆரம்பித்து விட்டாரா மீண்டும்? ஆபிதீன் பக்கங்களின் ஆறு வாசகர்களும் தப்பித்தார்கள்.   தாஜ் தனியாக எழுத ஆரம்பித்தது எனக்கு தெரிந்துவிட்டது என்று காட்ட ’ நாகூர் முஸாஃபர்’ என்ற பெயரில் ஒரு கமெண்ட் போட்டேன். இன்னொரு கமெண்ட் போட்ட ஷார்ஜா நண்பர் தன்னை ‘இன்னொரு முஸாஃபிர்’ என்று அங்கே குறிப்பிட்டிருக்கிறார்.  மூணு ட்ரக் வாங்கி சம்பாதிக்க நினைப்பவர் முஸாஃபரா? வேடிக்கை.  எங்கள் இருவருக்கும் பதில் சொன்ன தாஜ்பாய் – தாஜ்வின் ரியல் எஸ்டேட் ஓனர் – இருக்கிறாரே… தன்னை ’நிஜ முஸாஃபிர்’ என்று சொல்லியிருக்கிறார். ’வாங்க நம்ம காரில் போகலாம்’ என்று சொல்லி சோழன் டிரான்ஸ்போர்ட் பஸ்ஸில் கூட்டிச் செல்பவர் அப்படித்தான் சும்மா சொல்வார்; விடுங்கள் மோகன்லால் ரசிகரை.

அருமையாக ஆரம்பித்திருக்கும் தாஜ் பதிவில் , ஏழை – பணக்காரன் – அல்லா என்றெல்லாம் ’விவாதம்’ வருகிறது.  அதில் வரும் ஹஜ்ரத்தையும் எங்கோ பார்த்த மாதிரி இருக்கிறது. படித்தவுடன் , பணக்காரர்கள் பற்றி ‘கூகி’ எழுதிய பகுதிதான் ஞாபகம் வந்தது. பயங்கரமாக என்னை சிரிக்கவைத்த எழுத்து அது. ’“If poverty was to be sold three cents today, i can’t buy it.” என்று சொல்லும் ’கூகி’யின் எழுத்தை –  சிரிப்பும் சினமும் கலந்த எழுத்தே சிறந்த எழுத்து என்று சொல்வதற்காக – பதிவிடுகிறேன். இண்டெர்நெட் ’ஏழைகள்’ இன்புறுவார்களாக!

ஒரு விஷயம்.  ‘சுதந்திரத்திற்காகப் போராடுவது என்ற விஷயமே ஒரு மோசமான கனவுதான், அர்த்தமில்லாத கொடுங் கனவுதான். இனி, மூன்றே மூன்று விஷயங்களுக்காக நாம் ஒன்று சேர்வோம்: கபளீகரம் செய்வது, பணம் பிடுங்குவது, சொத்துக்களைப் பறிமுதல் செய்வது. திருட்டின் மூன்று புனித வடிவங்கள்: தட்டிப் பறித்தல், அச்சுறுத்திப் பணம் பறித்தல், பறிமுதல் செய்தல். பொதுமக்களுக்குச் சொந்தமான எதைக் கண்டாலும் சும்மா விடாதீர்கள்; ஏனென்றால் நம்மை நாமே பார்த்துக் கொள்ளாவிட்டால் வேறு யார்தான் பார்த்துக் கொள்வார்கள்?’  என்றெல்லாம் (வாக்குமூலத்தில்) வரும் நீண்ட முற்பகுதியை பிறகு பதிவேற்றுகிறேன். நேற்றிலிருந்து கடும் ஜூரம். முந்தாநாள் சந்திக்க வந்த கவிஞர் முபாரக், ஆபிதீன் பக்கங்கள் வரவர சகிக்கவில்லை ; ஆபிதீனும் எழுதுவதில்லை என்று சொன்னதுதான் காரணம் என்று நினைக்கிறேன். அவன் எழுத ஆரம்பித்தால் இன்னும் மோசமாக அல்லவா போகும்! எனவே, முக்கியமான பிற்பகுதி மட்டும் இப்போது. நன்றி – ஆபிதீன்

***

கூகி வா தியாங்கோ  எழுதிய ’சிலுவையில் தொங்கும் சாத்தான்’ (Devil on the Cross) நாவலிலிருந்து..(தமிழாக்கம் : அமரந்த்தா – சிங்கராயர்)

***

தீதிகா வா கூஞ்சியின் வாக்குமூலம் :

‘…இப்போது நான் அந்த புத்திசாலித்தனமான திட்டத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்ளப் போகிறேன். அப்போது அடிமைத்தனத்தின் மகுடத்தை அணியக்கூடிய தகுதியான ஒரே ஆள் நான்தான் என்று நீங்கள் புரிந்து கொள்வீர்கள்.

‘ஒரு இரவில் தூங்கிக் கொண்டிருக்கும்போது திடீரென்று அந்தயோசனை உதித்தது. என் இதயம் மகிழ்ச்சியால் துள்ளியது. நம்மைப் போன்ற செல்வந்தர்களுக்கு புது வாழ்வு தரும் ரகசியம் எனக்கு வெளிப்படுத்தப்பட்டதாக உணர்ந்தேன்.

‘நமது தென்னாப்பிரிக்க போயர் இன நண்பர் பேராசிரியர் பர்னாடு மனித உடலில் உறுப்பு மாற்று சிகிச்சை பற்றிப் பேசுவதற்காக இங்கு வந்திருந்தாரே, அப்போதுதான் அது உதித்தது. கென்யாட்டா மருத்துவமனையில் அவர் மருத்துவர்களுடன் பேசும்போது நானும் இருந்தேன். வழக்கமாக எனக்கு ஏற்படும் கவலை அப்போது பீடித்தது.

‘இந்த தீதிகா வா கூஞ்சி எப்போதெல்லாம் அவனுடைய அபரிதமான செல்வத்தைப் பற்றி நினைக்கிறானோ அப்போதெல்லாம் பல விடை தெரியாத கேள்விகளை அவனுக்குள்ளேயே வருத்தத்துடன் கேட்டுக் கொள்கிறான். இவ்வளவு செல்வங்கள் இருந்தும் என்னிடம் இருப்பது என்ன? ஒரு மனிதனுக்கு – ஒரு தொழிலாளிக்கோ, ஒரு விவசாயிக்கோ, ஒரு ஏழைக்கோ – இல்லாதது என்ன இருக்கிறது என்னிடம்? ஏழையைப் போலவே ஒரே ஒரு வயிறுதான். பரம ஏழையைப் போலவே ஒரே ஒரு இதயம்தான்; இருப்பதிலேயே ஏழையான மனிதனைப் போலவே ஒரே ஒரு…தான். உங்களுக்கு தெரியும், நான் எதைச் சொல்ல வருகிறேன் என்று.

‘ஆயிரம் பேருக்கு உணவு படைக்கும் அளவுக்குப் போதுமான பணமும் சொத்தும் என்னிடம் இருந்தும் ஏழைகளைப் போலவே ஒரு தட்டு உணவே எனக்குப் போதுமானதாக இருக்கிறது. ஒரே சமயத்தில் நூறு சூட்டுகள் அணியுமளவுக்கு என்னிடம் போதுமான பணம் இருந்தும், மற்றவர்களைப் போலவே ஒரே ஒரு கால்சட்டையும், சட்டையும், ஜாக்கெட்டும்தான் நான் அணிய முடிகிறது. சந்தையில் மனித உயிர் விற்கப்படுமானால், ஐம்பது உயிர்களை வாங்குமளவுக்கு என்னிடம்  பணம் இருந்தும் மற்றவர்களைப் போலவே எனக்கு ஒரே ஒரு இதயமும், ஒரே ஒரு உயிரும்தான் இருக்கிறது. ஒரே இரவில் பத்துப் பெண்களுடன் படுக்குமளவுக்கு என்னிடம் சொத்தும் பணமும் இருக்கிறது. ஆனால் ஒரே ஒரு தடவையில் ஒரே ஒரு பெண்ணே என்னை சோர்வடைய வைத்து விடுகிறாள். நானும்  முழுத் திருப்தியில்லாமல் தூங்கிப் போய்விடுகிறேன்.

‘ஆக, ஒரே ஒரு வாயும், ஒரே ஒரு வயிறும், ஒரே ஒரு இதயமும், ஒரே ஒரு உயிரும், ஒரே ஒரு குறியும் எனக்கு இருப்பதைப் பார்க்கும்போது பணக்காரனுக்கும் ஏழைக்கும் என்னதான் வேறுபாடு இருக்கிறது என்று தோன்றுகிறது. அடுத்தவரிடமிருந்து திருடி என்ன பயன்?

‘அந்த இரவில் எனக்குப் புரிந்தது இதுதான்: நம் நாட்டில் வாய், வயிறு, இதயம் போன்ற மனித உடலின் பாகங்கள் – உதிரி பாகங்கள் – தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்று இருக்க வேண்டும். அதாவது, வசதிப்பட்டால் ஒரு பணக்காரன் இரண்டு அல்லது மூன்று வாய்கள், இரண்டு வயிறுகள், இரண்டு குறிகள், இரண்டு இதயங்கள் வைத்துக்கொள்ள முடிய வேண்டும். முதல் வாய் மென்று, மென்று அலுத்துப் போய்விட்டால், முதல் வயிறு நிரம்பிப் போய்விட்டால், மற்ற வாயும் வயிறும் அந்த வேலையைச் செய்ய முடிய வேண்டும். என்னைப் போல வயதான மனிதனிடம் ஒரு சுகர் கேர்ள் இருக்கும் போது முதல் எஞ்சின் நின்றவுடன் அப்படியே தூங்கி விடுவதற்குப் பதிலாக அடுத்ததை இயக்கி கையிலுள்ள வேலையை தொடரலாம். இரண்டு எஞ்சின்களுள் ஒன்றுக்கொன்று இரவு முழுவதும் உதவி செய்தால், காலையில் விழித்தெழும்போது மனமும் உடலும் முழுவதுமாக ஓய்வெடுத்த நிறைவு கிடைக்கும், சில புதிய பழமொழிகளை உருவாக்கலாம்.: ‘பணக்காரனின் இளமை முடிவதேயில்லை’; ஒரு மனிதனுக்கு இரண்டு இதயங்கள் இருந்தால் உண்மையில் அவனுக்கு இரண்டு உயிர்கள் இருப்பதாகத்தானே அர்த்தம்? அப்படியானால், மெய்யான பணக்காரன் சாகவே மாட்டான் என்று பொருள். இன்னொரு பழமொழிக்கும் சாத்தியமுண்டு: ‘பணக்காரன் சாவதில்லை’. நமது பணத்தைக் கொண்டு சாகா வரத்தை வாங்கி, சாவை ஏழைகளின் முழு உரிமையாக்கி விட்டுவிடலாம்.

‘இந்த யோசனையால் நான் புளகாங்கிதமடைந்துவிட்டேன். ஆனால் ஒரு தவறு செய்துவிட்டேன். அதைப் போய் என் மனைவியிடம் சொல்லிவிட்டேன். அதிக அவசரம் கிழங்குக்கு கேடு. பெண்களுக்கு ரகசியங்கள் கிடையாது.

‘முதன் முதலில் என் மனைவி இந்த யோசனையில் மகிழ்ந்து போய் என்னைக் கட்டி அணைத்து ஆங்கிலத்தில் கொஞ்சி (’என் புத்திசாலி குட்டிக் கண்ணு’) முத்தமாரியும் பொழிந்தாள். ஒருவேளை இந்த யோசனை நிறைவேறினால் பிரமாதமாக இருக்கும்; ஏனென்றால் பணக்காரனின் மனைவியை ஏழையின் மனைவியிடமிருந்து வேறுபடுத்துக் காட்ட அது உதவும் என்றாள். இப்போதெல்லாம் ஏழையோ, பணக்காரர்களோ துணிகளின் மொத்த உற்பத்தியால் பெண்கள் எல்லோரும் பார்ப்பதற்கு ஒரே மாதிரிதான் இருக்கிறார்கள். ஆனால், இந்தத் தொழிற்சாலை உருவாகி விட்ட பிறகு, பணக்காரர்களின் மனைவிகளை அடையாளம் காண அவர்களுடைய இரண்டு வாய், இரண்டு வயிறு, இரண்டோ அதற்கு மேலோ இதயம், அப்புறம்…. இரண்டோ அதற்கு மேலோ பெண்ணுறுப்புகள். இவற்றை வைத்து அடையாளம் கண்டுவிடலாம்.

‘இரண்டு பெண்ணுறுப்புகள், ஒன்றுக்கு பதிலாக இரண்டு வைத்துக் கொள்ளலாம் என்றெல்லாம் அவள் சொன்ன பிறகு,  நான் பயத்தில் வெலவெலத்துப் போய்விட்டேன். ஒளிவு மறைவில்லாமல் அவளிடமும் சொன்னேன்: ‘உனக்கு இரண்டு வாய், இரண்டு வயிறு, இன்னும் பிற உறுப்புகள் எத்தனை இருந்தாலும் எனக்குக் கவலையில்லை. ஆனால் இரண்டு… மட்டும் கூடாது, கூடவே கூடாது! இந்தப் பைத்தியக்காரத்தனைத்தை எல்லாம் மறந்துவிடு’ என்று சொன்னேன். உடனே அவள் வாக்குவாதம் செய்ய ஆரம்பித்துவிட்டாள். விஷயம் அப்படித்தான் என்றால் உங்களுக்கும் இரண்டு குறிகள் இருக்கலாகாது என்றாள். உனக்கு எதற்கு இரண்டு சொல், இரண்டை எதற்கு உபயோகிப்பாய் என்று கசப்புடன் கேட்டேன். உனக்கு மட்டும் எதற்கு இரண்டு? இரண்டை நீ எதற்கு உபயோகிப்பாய்? உனக்கு இரண்டு இருந்தால் எனக்கும் இரண்டு இருக்க வேண்டும். இரு பாலாருக்கும் சமத்துவம் இருக்க வேண்டும் என்றாள்.

’இதற்குள் எனக்கு கண்மண் தெரியாமல் கோபம் வந்து விட்டது. அவளுடைய சமத்துவத்தை எடுத்துக்கொண்டு ஐரோப்பா, அல்லது அமெரிக்காவுக்கு ஓடும்படி சொல்லிவிட்டேன். இங்கு நாம் ஆப்பிரிக்கர்கள். நாம் ஆப்பிரிக்கப் பண்பாட்டைத்தான் பின்பற்ற வேண்டும் என்று சொல்லி அவள் முகத்தில் பளாரென்று ஓர் அறை விட்டேன். அழ ஆரம்பித்து விட்டாள். மறுபடியும் ஓர் அறை விட்டேன். மூன்றாவது முறை அறையப் போனபோது அவள் சரணடைந்து விடாள். நான் மூன்றோ பத்தோ கூட வைத்துக் கொள்ளலாம் என்று சொல்லிவிட்டாள். அவள் ஒன்றிலேயே திருப்தி அடைந்து கொள்வாளாம்.

’மக்களே! அந்தக் கண்காட்சியைக் கற்பனை செய்து பாருங்கள். ஒவ்வொரு பணக்காரனும் இரண்டு வாய், இரண்டு வயிறு, இரண்டு குறி, இரண்டு இதயம் வைத்துக் கொள்ளலாம். அப்படியே இரண்டு உயிர்களும் கூட. நம் பணம் நமக்கு சாகா வரம் வாங்கும்படி உதவும். சாவை ஏழைகளுக்கே விட்டு விடலாம். ஹாஹாஹா!

‘கொண்டு வாருங்கள் மகுடத்தை! ஒருவழியாக அது தனக்குத் தகுதியானவரிடம் வந்து சேர்ந்து விட்டது!’

***

நன்றி : அமரந்த்தா, தாமரைச் செல்வி பதிப்பகம்

***

பார்க்க : சிலுவையில் தொங்கும் சாத்தான் – தமிழ்கூடல் விமர்சனம்

மேலும்…


Thanks : africanheritagevideo

அமரந்தா : ‘வார்த்தைக்கும், வாழ்க்கைக்கும் இடைவெளி ஏற்படாமல்…’

அமரந்தாவின் பழைய பேட்டி இது.  ‘தோழி’யில் வெளியானது. அமரந்தா – சிங்கராயர் ஆகியோரின் தமிழாக்கத்தில்  உருவான ‘சிலுவையில் தொங்கும் சாத்தான்’ (கூகி வா தியாங்கோ (Ngugi wa Thiong’o) வின் ‘Devil on the Cross’ நாவல்) வந்த சமயத்தில் வெளியானது என்று நினைக்கிறேன்.

***

‘வார்த்தைக்கும், வாழ்க்கைக்கும்
இடைவெளி ஏற்படாமல்… ‘ : அமரந்தா
சந்திப்பு : ரவிக்குமார் 

amarantha1

உலக மொழிகளிலிருந்தோ அல்லது ஆங்கிலத்திலிருந்தோ நம் மொழியில் மொழி பெயர்ப்புச் செய்யும் பணியில் ஈடுபட்டிருப்பவர்கள் ஒரு சிலர்தான். அந்த ஒரு சிலரில் அமரந்தாவும் ஒருவர். பெண்ணியம் தொடர்பான கருத்துகளில் அதிகம் ஈடுபாடு காட்டி வருபவர். லத்தீன் அமெரிக்க இலக்கியங்களை தமிழில் மொழிபெயர்த்ததன் மூலம் தனித்துவத்துடன் திகழ்கிறார்.

‘அமரந்தா என்ற பெயர்,’ வித்தியாசமாக அதிகம் கேள்விப்படாத பெயராக இருக்கிறதே …..

”லத்தீன் அமெரிக்காவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நாவல் ‘காப்ரியல் கார்சியா மார்க்வெஸ்‘சின் ‘ஒரு நூறு வருடத் தனிமை’ என்ற நாவல். இது 1982-ஆம் ஆண்டின் நோபல் பரிசைப் பெற்றது. அந்த நாவலில் அதிகம் பேசாத ஒரு பெண் கதாபாத்திரத்தின் பெயர்தான் அமரந்தா. அதற்கு முன்னால் என் நிஜமான பெயர் விசாலாட்சி.”

உங்களின் இந்த மொழிபெயர்ப்பு முயற்சிகளுக்குத் தூண்டுகோலாக அமைந்தவை எவை ?

” அலகாபாத் பல்கலைக்கழகத்தில் நான் ஆங்கில இலக்கியத்தில் இளங்கலை பட்டப்படிப்பைப் படித்துக் கொண்டே தில்லியில் கல்வியியல் துறையில் வேலை பார்த்து வந்த நேரம். 1982ல்தான் பயனுள்ள தீவிர கருத்துகளை உள்ளடக்கிய சிறுகதைகளைத் தாங்கி வெளிவந்து கொண்டிருந்த ‘படிகள்’, ‘இலக்கு’, ‘ஞானரதம்’ போன்ற இலக்கியத் தரம் வாய்ந்த பத்திரிகைகளை நான் பார்க்க நேர்ந்தது. அதன் விளைவே, தீவிரமான கருத்துக்களை உள்ளடக்கிய லத்தீன் அமெரிக்கக் கதைகளை ஆங்கிலத்திலிருந்து, தமிழில் மொழி பெயர்க்கத் தொடங்கினேன்.”

நீங்கள் சொல்ல நினைத்த கருத்துகளை நேரிடையாக உங்கள் படைப்புகளின் மூலமாகவே வெளிப்படுத்தி இருக்கலாமே ?

” இந்தியாவின் 200 ஆண்டு கால காலனி ஆட்சியின் வரலாற்றைப் பாடநூல்களில் மீண்டும் மீண்டும் படித்துக் கொண்டிருக்கும் தமிழ் கூறும் நல்லுலகம், தென் அமெரிக்காவில் குறுகிய காலமாக இருந்தாலும் நிஜமாக நடந்த சுதந்திரப் போராட்டங்களையும் தெரிந்து கொள்ள வேண்டும். அப்படித் தெரிய வைப்பது என் கடமை. அதைத்தான் செய்து கொண்டிருக்கிறேன். தற்போது நிலவும் அரசியல் சூழ்நிலைகளை உள்வாங்கி என்னுடைய படைப்புகளில் சொல்லக்கூடிய அளவுக்கு, நேரிடையான அனுபவங்கள் எனக்குப் போதுமான அளவுக்கு ஏற்படவும் இல்லை.”

நீங்கள் முதலில் மொழிபெயர்ப்பு செய்த சிறுகதை எது ? அதை யார் வெளியிட்டார்கள் ?

” மார்க்வெஸ்ஸின் No One writes to the colonel – சிறுகதைத் தொகுப்பிலிருந்து Tuesday siesta என்ற சிறுகதையை ‘ஒரு செவ்வாய் பகல் தூக்கம்’ என்னும் தலைப்பில் 1982 இல் மொழி பெயர்த்தேன். அது 83 இல் ‘படிகள்’ இதழில் வெளிவந்தது.

மொழிபெயர்ப்புக்கு உகந்த கதைகளை எத்தகைய ஊடகத்தின் மூலம் தேர்ந்தெடுத்தீர்கள்?

”ஆங்கிலம் தவிர, அன்னிய மொழிகள் எதுவும் எனக்குத் தெரியாது. நான் மொழி பெயர்க்கும் மூலக்கதைகள் எல்லாமே லத்தீன், ஸ்பானிஷ் மொழிகளில் இருப்பவை. என்னுடைய முதல் சிறுகதை வெளிவந்த உடனேயே நண்பர்களும், உறவினர்களும் என்னைப் பெரிதும் ஊக்கப்படுத்தினார்கள். நண்பர் ஒருவரின் மூலம், ‘கியூபா’விலிருந்து வெளிவரும் ஆங்கில செய்திப் பத்திரிகையான, ‘கிரான்மா’ (Granma)கிடைத்தது. ஒன்று, இரண்டு அல்ல கிட்டத்தட்ட இரண்டு வருட சேகரிப்பு! வாரத்திற்கு ஒருமுறை இலக்கிய இணைப்புடன் வருவதுதான் ‘கிரான்மா’ பத்திரிகையின் விசேஷம்.

அந்த இணைப்புகளில் வெளிவந்தவைகளில் பத்து சிறுகதைகளைத் தேர்ந்தெடுத்து நான் மொழி பெயர்த்தேன். என்னுடைய இந்த மொழிபெயர்ப்புச் சிறுகதைகளை, ‘நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்’ நிறுவனத்தினர், ‘அன்று செவ்வாய்க்கிழமை அதை நான் எப்படி மறக்க முடியும் ?’ என்னும் தலைப்பில் சிறுகதைத் தொகுப்பாக வெளியிட்டனர்.

இதைத் தவிர ‘மீட்சி’ , ‘சிதைவு’ , ‘ஆய்வு’ , ‘1/4’ , ‘ங்’ போன்ற இலக்கியப் பத்திரிகைகளிலும் என்னுடைய மொழி பெயர்ப்புச் சிறுகதைகள் வெளிவந்துள்ளன. ‘ங்’ வெளியிட்ட லத்தீன் அமெரிக்கச் சிறுகதைத் தொகுதியில் என்னுடைய ‘லிமோன் துறைமுகம்’, ‘பனியும் நெருப்பும்’ சிறுகதைகள் இடம் பெற்றன. கோணங்கியின் ‘கல் குதிரை’ இதழ் வெளியிட்ட உலகச் சிறுகதைகளின் தொகுப்பில், ‘கைதி’, ‘சாவும் அமைதியும்’ ஆகிய உரண்டு சிறுகதைகள் வெளி வந்தது. பொதியவெற்பனின் ‘பறை’யில் ‘சந்திப்பு’ வெளியானது. ‘கிரணம்’ பத்திரிகையில் ஜெர்மன் திரைப்படத் தயாரிப்பாளர் வெர்னர் ஹெர்ஸாக்கின் பேட்டி வந்திருக்கிறது.

சே குவாராவின் ‘பொலிவிய நாட்குறிப்பு’ மற்றும் ‘நிழல்களின் உரையாடல்’ (Mothers And Shadows – by MARTA TRABA) நாவல் இந்த இரண்டையும் தாமரைச் செல்வி பதிப்பகம் 97-ஆம் ஆண்டு முறையே நவம்பர், டிசம்பர் மாதங்களில் வெளியிட்டது.

எந்த ஒரு படைப்பும், பாமரனையும் சென்றடைவதில்தானே அந்தப் படைப்பின் நோக்கம் முழுமை அடைந்ததாகக் கொள்ளப்படும். நீங்கள் சொல்லும் இலக்கியப் பத்திரிகைகளை எல்லோரும் படித்திருக்க வாய்ப்பில்லையே ? அவர்கள் பெரும்பாலும் படிக்கும் வெகு ஜனப் பத்திரிகைகளில் நீங்களும் எழுதலாமே?

”நாங்கள் எழுதுவதைக் குறைக்காமல், மாற்றாமல் அப்படியே வெளியிடுவதற்கு வெகு ஜனப் பத்திரிகைகளிலும் சரி, அதை நடத்துபவர்களின் மனத்திலும் சரி, இடம் எங்கே இருக்கிறது ? கொடுப்பதை முழுமையாகப் போடுவதற்கு அவர்களுக்கும் விருப்பமில்லை. அவர்களின் ‘கமர்ஷியல்’ கத்தரிக்கோலுக்கு எங்கள் படைப்புகள் இரையாவதில் எங்களுக்கும் உடன்பாடில்லை. நல்ல விஷயங்களைத் தேடித்தான் போக வேண்டும். அப்படி தேடலுடன் வரும் குப்பன், சுப்பன்களுக்காகத்தான் நாங்கள் எழுதுகிறோம். நல்ல படைப்புகளை வெளியிடும் அளவுக்கு வெகு ஜனப் பத்திரிகைகளின் தரம் உயர வேண்டுமே தவிர, ‘எப்படியாவது எங்கள் படைப்புகள் வந்தால் சரி…’ என்று எங்களால் தாழ்ந்து போக முடியாது.”

பிரச்சினைக்குரிய போராட்டக் கருத்துக்களை கொண்ட படைப்புகளை மொழிபெயர்ப்பு செய்வதில் ஆபத்து குறைவு. அதன் மூலத்தைக் காட்டித் தப்பித்துக் கொள்ளலாம். இதைப் போன்ற செளகரியங்கள் மொழி பெயர்ப்பில் இருக்கிறது இல்லையா?

”அப்படியெல்லாம் தீர்மானமாகச் சொல்லி விட முடியாது. ஆபத்தில்லாமல் எதுவுமில்லை. பின் விளைவுகளின் தன்மையில் வேண்டுமானால் மாறுபாடுகள் இருக்கலாம். அதற்காக விளைவுகளே ஏற்படாது என்று சொல்வதற்கில்லை. மொழிபெயர்க்கத் தேர்ந்தெடுக்கும் விஷயம் என் மனதுக்கு உகந்ததாக இருக்க வேண்டும் என்பதுதான் முக்கியம்.”

பாரதியார், தன்னுடைய சொந்தக் கருத்துகளைத் திரெளபதியின் கூற்றாகப் பாஞ்சாலி சபதத்தில் சொல்லி இருப்பது போல, எந்தப் படைப்பிலாவது உங்களின் குறுக்கீடு (Interpretation) இருந்திருக்கிறதா?

”மகாபாரதம் வாய் வழிக்கதை. நான் மொழிபெயர்ப்பது வெவ்வேறு நாடுகளின் அரசியல் இலக்கியம் (Political Literature). இன்னும் சொல்லப் போனால், அது மூலக் கதாசிரியர்களின் Idiological Statement. அதற்கு 100% உண்மையாக என்னுடைய மொழிபெயர்ப்பு இருக்க வேண்டும் என்று முயற்சிப்பேன். ஸ்பானிஷ் மொழியை யாராவது சொல்லித் தந்தால், கற்றுக் கொள்ள மிகவும் ஆவலாக இருக்கிறேன்.”

 ‘படைப்பாளியின் தனிப்பட்ட வாழ்க்கை, பழக்க வழக்கங்களோடு அவனுடைய படைப்பு சொல்லும் கருத்துகள் முரண்பட்டிருக்கலாம். படைப்பையும், படைப்பாளியையும் ஒப்பீடு செய்யக்கூடாது’ என்பது ஒரு சிலரின் கருத்து. ‘வார்த்தைக்கும், வாழ்க்கைக்கும் இடைவெளி ஏற்படாமல் பார்த்துக் கொள்பவனே படைப்பாளி’ என்பது ஒரு சிலரின் கருத்து. இதில் நீங்கள் எந்தப் பக்கம்?

” ஒரு தனி மனிதன், மனிதத் தன்மையை இழக்காத வரைதான், அவனுடைய திறமைகளைக் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும்.”

சிறந்த படைப்புக்கான அடிப்படை எது ?

”படைப்பாளி வாழ்ந்து கொண்டிருக்கும் காலத்தின் சமூக பிரதிபலிப்பு மட்டுமே படைப்பின் நோக்கமாக இருக்கக் கூடாது. மாறாக, அதிலிருந்து விடுபடவும், மேன்மைப்படுத்தவும், அல்லது ‘இதை விட சிறந்த வழி என்ன?’ என்று மக்களைச் சிந்திக்க வைப்பதும்தான் சிறந்த படைப்புக்கான அடிப்படையாக நான் நினைக்கிறேன்.”

**

நன்றி : அமரந்தா, ஆறாம்திணை (தோழி), ரவிக்குமார்

**

தொடர்புடை  சுட்டி :

சிலுவையில் தொங்கும் சாத்தான்- கூகி வா தியாங்கோ