மின்தூக்கி

தூக்குவது பற்றி நண்பர் ஆசாத் எழுதியிருப்பது உற்சாகம் தருகிறது!

//1857ம் ஆண்டு முதலாக மின்தூக்கிகள் கட்டிடங்களின் செங்குத்துப் போக்குவரத்துக்கான பயன்பாட்டில் இயங்கிவருகின்றன. பயனர்கள் செல்லும் கூண்டு, அது மேலும் கீழும் சென்றுவரத் தண்டவாளம், கூண்டின் எடைக்கும் பயனர்களின் எடைக்கும் எதிர் எடை, அனைத்தையும் இணைக்கும் எஃகு முறுக்குக் கயிறுகள், இயக்கும் இயந்திரம், கதவுகள் இவற்றை மின்தூக்கிகளின் முக்கியமான பாகங்கள் எனச் சொல்லலாம்.// என்று சிறு குறிப்பும் வரைகிறார், எச்சரிக்கையாக. வாழ்த்துகள்.

ஆசாத் நாவல் பற்றி ஃபேஸ்புக்கில் அய்யனார் விஸ்வநாத் எழுதியதை நன்றியுடன் இங்கே பகிர்ந்துகொள்கிறேன்.

*

அபுல்கலாம் ஆசாத் அவர்களின் மின்தூக்கி நாவலை வெளிவருவதற்கு முன்பே வாசிக்கும் வாய்ப்பு கிடைத்தது. 1980 மற்றும் 90 களின் வளைகுடா வாழ்வை நாவலாக எழுதியிருக்கிறார். சவுதி அரேபிய நிலம் குறித்தும் அங்கு வேலை நிமித்தம் செல்லும் தமிழர்களின் தனியர் வாழ்வு குறித்தும் சுவாரசியமான மற்றும் இலகுவான மொழியில் எழுதப்பட்டிருக்கும் நாவல்.

சவுதியிலிருந்து கதை துபாய்க்கும் வந்து சேர்கிறது. கதையின் நாயகனான ஆரிஃப் பாஷாவிடமிருந்து நடுத்தர வர்க்கத்திலிருந்து வந்த – குடும்பம் மற்றும் வேலை சார்ந்து வளைகுடாவில் வசிக்க நேரிடும் நம் ஒவ்வொருவரின் தன்மைகளையும் பார்த்துக் கொள்ள முடியும்.

பெரும்பாலான வளைகுடா வாசிகளின் பிரதிநிதியாக சித்தரிக்கப்பட்டிருக்கும் ஆரிஃப் பாஷாவின் பயணமும் எதிர்காலம் குறித்தான கனவுகளுடன் வாழும் இளைஞனின் மன ஓட்டமும்தான் இந்த நாவல். வளைகுடாப் பின்னணியிலிருந்து வந்திருக்கும் மின்தூக்கி நாவலுக்கு வரவேற்பும் அன்பும்.

ஆசாத் அண்ணனின் தனித்துவமான பல குணங்களை ஆரிஃப் பாஷாவிடமும் காண முடிவது இன்னொரு சுவாரசியம்
*
நன்றி : அய்யனார் விஸ்வநாத்

அமேஜானில் வாங்க இங்கே அழுத்தவும்.

*

முப்பத்தைந்து ஆண்டுகள் பின்னோக்கிச் சுழன்று பார்க்கும் கதை இது. சவூதி அரேபியாவில் வரிசையில் நின்று, நிமிடத்துக்குப் பதினாறு ரியால் நாணயங்களை பொதுத் தொலைபேசியில் ஒவ்வொரு நாணயமாகப் போட்டுக் குடும்பத்தாருடன் வளைகுடாவாசிகள் உரையாடிய நாள்களை மீண்டும் நினைவுக்குக் கொண்டுவரச் செய்த முயற்சி இது. அபாரமான வளர்ச்சியை நோக்கி துபை சென்றுகொண்டிருக்கையில் அதனுடன் சேர்த்துத் தன்பயணத்தையும் அமைத்துக்கொண்டவனின் சில ஆண்டுகளை வாழ்ந்து பார்க்கும் களம் இது. – ஆசாத்

 

 

மகபூப் பாய் – ஆசாத் பாய்

முகநூலில் நண்பர் ஆசாத் பகிர்ந்த நெகிழ்ச்சியான (பழைய) பதிவு. ரமலான் ஸ்பெஷலாக மீள்பதிவிடுகிறேன், நன்றியுடன்..

*

azad01

மகபூப் பாய் – அபுல் கலாம் ஆசாத்

சென்ற இரண்டரை வருடங்களாக மகபூப்பாயை எனக்குத் தெரியும். மனைவியையும் குழந்தைகளையும் இந்தியாவுக்கு அனுப்பியாயிற்று. பெரியவீடு இனிமேல் தேவையில்லை. ஒருபடுக்கையறை உள்ள சிறிய வீடாக இருந்தால் போதுமென்று வீடு தேடி அலைந்துகொண்டிருந்தபோதுதான் மகபூப்பாயைப் பார்த்தேன்
.
ரியல் எஸ்டேட் கம்பெனியில் அவர் ஆஃபீஸ் பாய். செய்யும் தொழில்தான் ஆஃபீஸ் ‘பாய்’, வயதில் அவர் எனக்கு அண்ணன். பூப்போட்ட லினன் சட்டையில் மேல் பட்டன் போட்டு அவரை நான் இதுவரை பார்ட்ததில்லை. முன் வழுக்கை, அம்மை வடுப்போட்ட முகம், ஏழ்மையான தோற்றம் எல்லாம் சேர்ந்து அவரைப் பார்த்ததும் நம்மை “பாவம் பாய்” எனச் சொல்லவைத்துவிடும்.

“இங்க மகபூப் பாய் யாருங்க”

“நாந்தான். என்ன வேணும்”

“வீடு இருக்குன்னு ஜாஃபர் சொன்னாரு. எனக்கு அரபி பேசத் தெரியாது. முதீர் கிட்ட கொஞ்சம் வந்து தர்ஜுமாப் பண்ணீங்கன்னா…”

“ஆமா, ஜாபர் சொன்னாரு. பேமுலி வாராங்களோ, வீடு பாக்றிய”

“இல்ல. ஃபேமிலி ஊருக்குப் போய்ட்டாங்க, அதனாலதான் சின்னதா சிங்கிள் பெட்ரூம் ஃப்ளாட் எதாவது பாக்கலாமுன்னு”

“அல்லால்லா. இங்க பேமுலிக்காரவொளுக்குத்தான வீடு தாரது”

“இக்காமால இன்னும் ஃபேமிலி ஸ்டேட்டஸ் இருக்குங்க. குரூஜுல அவங்க போகல”

“சரி சரி. அத்தயெல்லாம் முதீர் கிட்ட சொல்லாதியொ”

இப்படித்தான் அவருடன் எனக்குப் பழக்கம் துவங்கியது.

இங்கு நான் அட்வான்ஸ் தந்தவுடனே கார் துடைக்கும் வேலையை தனக்குத்தான் தரவேண்டும் எனக் கண்டிப்பாகச் சொல்லிவிட்டார். சென்னை போரூரிலிருந்து சின்மயா நகர் போவதற்கு ஷேர் ஆட்டோ பிடித்து பதினொரு மணி வெயிலில் கோயம்பேடு செல்லும் ஆயாக்களோடு இடுக்கி அமர்ந்து கொண்டு போகத் தயங்கியதில்லை, ஆனால், சவூதியில் நம் காரை நாமே துடைத்துக்கொள்வதா. ‘கெவ்ரதி’ என்ன ஆவது. அந்த வேலைக்காக மகபூப் பாயுடன் ஒப்பந்தம் போட்டாகிவிட்டது.

பாய் நல்ல உழைப்பாளி. நெல்லையில் ஒருஊர்தான் பூர்வீகம். பெரிய குடும்பமாம், கூடுதல் வருமானத்திற்காக இந்த கார் துடைக்கும் வேலை. கேட்பதற்கென்னவோ சாதாரணமாகத் தோன்றும் வேலைதான். ஆனால், செய்தால் ‘பெண்டு’ கழண்டுவிடும்.

சமயத்தில் அதிகாலையில் சர்க்கரைக்காக நடப்பதாக நினைத்துக் கொண்டு பெயருக்காக கட்டடத்தைச் சுற்றி ஒரு நடை போகின்ற சமயத்தில் வியர்க்கவியர்க்க மகபூப் பாய் வேலையில் ஈடுபட்டிருப்பதைப் பார்ப்பேன்.

ப்ளாஸ்டிக் வாளி நிறைய சோப்புத் தண்ணீர். பெரிய ப்ளாஸ்டிக் பரஷ். டர்க்கி டவல் இரண்டு மூன்று இவைதான் அதிகாலையில் மகபூப் பாயின் தளவாடங்கள்.

முதலில் தூசியைத் தட்டிவிட்டு சோப்புத் தண்ணீரைக் காரின் மேல் ப்ரஷ்ஷால் தெளித்து, பிறகு அப்படியே அதை முகத்தில் க்ரீம் பூசுவதைப் போன்று பரஷ்ஷால் விஷுக் விஷுகெனப் பரப்புவார். ஈரமான டர்க்கி டவலால் அழுத்தித் தேய்த்து விட்டு இன்னொரு டவலை எடுத்து கொஞ்சம் கொஞ்சமாக வழித்தெடுக்க கார் குளித்து முடித்துத் தலை சிலுப்பும். அதன் பிறகு அடுத்த டவலால் மீண்டும் வழித்தெடுத்துக் கடைசியில் காய்ந்த டவல் ஒன்றை உதறி விரித்துப் போட்டு முழுவதுமாகத் துடைத்து விட்டு இரண்டு அடி தள்ளி நின்று பார்த்து பெருமூச்சு விட்டுவிட்டு அடுத்த காரை நோக்கிச் செல்வார்.

வேலை முடிந்த சந்தோஷத்தில் வரும் பெருமூச்சா இல்லை நாம் என்று கார் வாங்கப் போகிறோம் என்ற பெருமூச்சா என்பதை அவர் மட்டுமே அறிவார்.

சென்ற வருடத்தில் ஒரு நாள்,

“ஒரு சின்ன ஒதவி. ரூம்புக்கு வாரன”

“வாங்க. வந்துதான் சொல்லணுமா, இங்கயே சொல்லலாமா” லிஃப்டின் கதவைப் பாதியில் வைத்தபடி நான் கேட்டேன்.

“நீங்க போங்க. பித்தள்ள வாரன்” எனச் சொல்லிவிட்டு, சிறிது நேரத்தில் அறைக்கு வந்தார்.

“ஒண்ணுமில்ல சார். ட்ராப்ட்டு அனுப்புறன். அட்ரசு எழுதித் தந்தியள்னா” என ஆரம்பித்தவர் செக் புத்தகத்தை எடுத்து அதிலும் தொகையை எழுதி யாருக்கு அனுப்புகிறார் என்ற விவரங்களைச் சொல்லி எல்லாவற்றையும் எழுதித் தரச் சொன்னார்.

இவ்வளவு நாட்களாக யாரிடம் சென்று இதையெல்லாம் எழுதினீர்கள் என்று கேட்டதற்கு, குறிப்பாக ஒரே ஆளிடம் செல்வதில்லையென்றும் பணம் அனுப்பும் நேரத்தில் யார் கண்ணில்படுகிறார்களோ அவர்களிடம் சென்று உதவி கேட்டுக்கொள்வதாகவும் சொன்னார்.

அன்று நான் எழுதிக் கொடுத்ததற்குப் பிறகு பாய் வேறு யாரிடமும் சென்று ‘செக்’ எழுதச் சொல்லி உதவி கேட்கவில்லை. ஒவ்வொரு மாதமும் என்னிடம் வர ஆரம்பித்துவிட்டார். என்னிடம் என்ன பிடித்ததோ அல்லது என்னிடம் என்ன பரக்கத்தைக் கண்டாரோ மாதாமாதம் வருவார். இத்தனைக்கு ட்ராஃப்ட் இத்தனை சேமிப்பு என்று மனம்விட்டுப் பேசுகையில் நெருங்குவது போலத் தோன்றினாலும் அதற்கு மேல் மற்ற விவரங்கள் பேசியதில்லை. சில சமயம் வங்கியிலிருந்து வரும் கடிதத்தைக் காட்டுவார்.

தொகையை ஆயிரத்தில்தான் அவருக்குச் சொல்லத் தெரியும். “பதினெட்டாயிரத்திச் சொச்சம்” “ஆறாயிரத்திச் சொச்சம்”. துல்லியமான கணக்கு வழக்கெல்லாம் அவரிடம் கிடையாது.

“ஆயிரத்துக்குப் பன்னண்டாயிரத்துச் சொச்சம்” என்பது அவரது இன்றைய எக்ஸ்சேஞ்ச் ரேட்.

ஆயிரத்துக்கு மூணாயிரத்திச் சொச்சம் இருக்கும்போது சவூதி வந்தவர்.

வளைகுடா நாட்டில் இருந்தாலும் கார் துடைத்து ‘ஓவர்டைம்’ செய்தாலும் செலவுக்கென்று அனுப்பியது போக சுமாரான சேமிப்புதான் அவருக்கு விதிக்கப்பட்டிருக்கிறது அல்லது வழங்கப்பட்டிருக்கிறது.

பிள்ளைகளை நன்றாகப் படிக்க வைக்கச் சொல்வேன். ம் ம் என்ற ஓசையைத் தவிர வேறெதுவும் அவர் பதிலாகச் சொன்னதில்லை. ‘பாவம்’ என நினைத்துக்கொள்வேன்.

இரண்டு நாட்களுக்கு முன் இஃப்தார் விருந்திற்காக அவசரமாகப் புறப்படுக் கொண்டிருந்தபோது வந்தார்.

“சார், செக்கும் அட்ரசும் எளுதித் தரியளா”

“நோம்பு தொறக்கக் கூப்டிருக்காங்க அவசரமாப் போறேனே”

“ஆறு மணிக்கு ஆள் போவுது. நைட் ப்ளைட்டு. எளுதித்தந்தியள்னா இன்னிக்கே தந்தனுப்சிருவன்ல”

தட்ட முடியவில்லை. எழுத உட்கார்ந்தேன். தொகை வழக்கத்தை விடக் குறைவாக இருந்தது. பெயரும் வழக்கமாக எழுதும் பெயராக இல்லாமல் வேறு பெயரைச் சொன்னார். ட்ராஃப்ட், அட்ரஸ், இவற்றை மீறி வேறு எதுவும் சொந்த விவகாரங்களைக் கேட்பது மரியாதை அல்ல என நினைத்துக்கொண்டிருந்தபோதே வாய் தவறிக் கேட்டுவிட்டேன்,

“மகபூப்பாய், என்ன பணம் கம்மியா அனுப்றீங்க. பேரும் வேற யார் பேரோ சொல்றீங்க” அடடா கேட்டுவிட்டோமே என்று நாக்கைக் கடிப்பதற்கு முன் பதில் வந்தது.

“ஜக்காத்துப் பணம் சார்”

சட்டென்று ஒரு வினாடிக்குள் எனக்குள் ஏகப்பட்ட மின்னல்கள். எதிரில் நிற்பது கார் துடைக்கும் மகபூப் பாயா வேறு யாராவதா என்று சந்தேகம் தோன்றி மறைந்தது. என் முகத்தில் ஏற்பட்ட திடீர் மாற்றத்தைக் கவனித்தாரோ என்னவோ அவரே தொடர்ந்தார்.

“நூத்துக்கு ரண்டரை மேனிக்கு உள்ளதக் கணக்குப் போட்டு பெருநாளுக்கு முன்ன ஊருக்குக் கெடைக்றமாதிரி தந்துருவன்ல. நம்மள்ட்ட உள்ளது லெச்சத்துலயா. எதோ உள்ளதுக்குக் கணக்கு. ஆயிரம் ரெண்டாயிரமா தாரன். நூத்துலதான சார்”

அவர் பேசிக்கொண்டே போக எனக்கு உள்ளுக்குள் சுருக்கென்றது. தன்னிறைவான வாழ்க்கையை அனுபவிப்பவன் இன்னும் ஜக்காத் பணத்தை முழுவதுமாகக் கணக்கிட்டுத் தரவில்லை. சொற்ப சேமிப்பை வைத்திருக்கும் அவர் தந்துவிட்டார். மகபூப் பாய்க்கு சரியாக ‘அட்ரஸ்’ எழுதத் தெரிந்திருக்கிறது. எனக்குத்தான் தெரியவில்லை.

*****
முதீர் = மேலாளர்
தர்ஜுமா = மொழிமாற்றம்
இக்காமா = குடியிருப்பு அனுமதிப்புத்தகம்
குரூஜ் = வெளியே (final exit)
பரக்கத் = செழிப்பு
இஃப்தார் = நோன்பை முடித்து உணவருந்துவது
ஜக்காத் = ஏழைகளுக்குச் செய்யவேண்டிய கட்டாய தர்மம்

*

நன்றி : அபுல் கலாம் ஆசாத்