துபாயிலிருந்து எழுதும் நண்பர் அன்பாதவனின் ‘உயிர்மழை பொழிய வா!’ தொகுதியிலிருந்து ஒரு பக்கம் பகிர்கிறேன். நூலின் முன்னுரையில் கவிஞர் சக்திஜோதி, ‘பொதுவாக ஆண்கள் அனைவருமே தாயின் கருவறை நோக்கித்தான் தொடந்து பயணப்படுகிறார்களோ என்று தோன்றும்படியாகவே நிகழ்வாழ்வில் வாழ்கிறார்கள்… தாயிடமிருந்து அவன் உணர்ந்த வெதுவெதுப்பை காலம் முழுக்க உணர்த்தக்கூடிய மனைவி அல்லது இணையைத் தேடுகிறவனாகவே ஒரு ஆண் வாழ்ந்து மடிகிறான் என்பதுதான் உண்மை.’ என்கிறார் – அந்தக் கடைசி பெண்பாவைக் குறிப்பிட்டு. அஸ்மா, எனக்கு நாலாவதுதான் பிடித்திருக்கிறது. இப்ப உள்ள குளிருக்கு ரெண்டாவதும் ஓக்கே! – AB
———-
கூப்பிட்டாய் என்று விரைந்தோடி வந்தேன்நான்
‘சாப்பிட்டாச் சா’என்(று) உணவளித்தாய் – காப்பியுடன்
பேச இருந்தபோதில் ஊன்றிக் கவனித்தேன்
நாசிக் கருகில்மச் சம்.
காத்திக காத்து வெடவெடக்க நல்லாத்தான்
போத்தியும் போவல என்குளிரு – ராத்ரில
தேனேஎன் மானேன்னு தேடிகிட்டுப் போனாலோ
மூணுநாளு லீவாம்பா யோவ்!
கலைஞ்சிஇவ தூங்கற சீரழவப் பாத்தா
மலைச்சித்தான் போகும் மனசு – வளைக்கநானும்
பைய நகந்துதான் பக்கத்தில் போனாக்கா
கையப் புடிச்சுத்தள் றா!
மட்டு மரியாதை யில்லாம பொண்டாட்டி
கெட்டபல வார்த்தைல ஏசியும் – தொட்டுபுட்டா
கட்டுப் படவேமாட் டேங்குதே; ஆசைய
வெட்டி எறிஞ்சிடவா சொல்லு!
காயம்தான் பட்டுக் கிடந்த மனசுள்ளே
மாயமென்ன செய்தா யடிநீதான் – தூய
மதுதரும் போதை விடமயக்கு தேஏ
இதுதான் நிஜக்காத லா!
கிண்டலாய் சொன்னதுக்கு சுண்டியது உன்முகம்
வண்டலாய்த் தங்கும் வருத்தமோ – தண்ணிரவில்
ஈர இதழ்களால் ஒத்தடம் தந்திட
காரம் இனித்திடுமே காண்.
முத்தங்கள் ஈந்து மகிழும் மறுதாயை
சித்தம் முழுதும் கலந்தாளை – நித்தமும்
பாடாத நாவென்றும் நாவில்லை; அன்னவளின்
ஈடாக யாருமிலைக் காண்.
*
நன்றி : அன்பாதவன், நறுமுகை
தொடர்புடைய பதிவு :
கவி நுகர் பொழுது – அன்பாதவன்
தமிழ்மணவாளன் கட்டுரை