‘உயிர்த்தலம்’ – மேலும் சில விளம்பரங்கள்

‘புத்தகங்கள் ரசிப்பதற்கு அல்ல, சிந்திப்பதற்கு’ என்று News7-ல் இன்று காலை சொன்னார் இயக்குனர் தங்கர்பச்சான்‌. என் ‘உயிர்த்தல’த்திற்கு பயங்கர எதிர்ப்பா இருக்கே…! என்று தோன்றியதில் கூகுள் ப்ளஸ்ஸில் நான் பகிர்ந்த மேலும் சில விளம்பரங்களைப் பகிர்கிறேன். நன்றி. – AB
***

Jun 10, 2016

uyirthtlam - vazhaippazam1
அல்-கோஸ் அல்-மதீனா சூப்பர் மார்க்கெட் வாழைப்பழம். ‘சிரிக்காதீர்கள். எனக்கு கோபம் வருகிறது. வாழைப்பழம் என்றால் சிரிப்பு மட்டுமா? ஒரு குடும்பத்தையே சிதறிப் போக வைக்கும் அது.‌..’

—————————

Jun 8, 2016
எனக்கு குத்துச்சண்டை பிடிக்காது என்று சொன்னதற்கு ஏன்டா பிடிக்காது என்று குத்தினால் என்னங்க அர்த்தம்? ‘In any world which is sane, boxing would be a crime’ என்பார் ஓஷோ. சரி, குத்துங்கள் – ‘ருக்உ’வில் வரும் இந்த தமாஷைப் படித்துவிட்டு!

குத்துச்சண்டை வீரர் குல் முஹம்மதுவின் வீட்டில் நுழைய எந்தத் திருடனும் பயப்படுவான். குல் முஹம்மது, வாசலில் ஒரு போர்டு மாட்டி வைத்திருக்கிறார். ‘இது குத்துச் சண்டை வீரர் குல் முஹம்மது வீடு. இவரை இதுவரை குத்துச் சண்டையில் ஜெயித்தவர் யாருமில்லை’ என்று. எவன் நுழைய முடியும் ? ஆனால் ஒருவன் நுழைந்து திருடியும் விட்டான். அவனைப் பிடிக்கலாம் என்று பாய்ந்தால் திருடன் எழுதி வைத்து விட்டுப் போன ஒரு தாள் பட படக்கிறது. ‘ இதை திருடியவர் ஓட்டப் பந்தய வீரர் ஒலி முஹம்மது. இவரை இதுவரை ஓட்டப் பந்தயத்தில் ஜெயித்தவர் யாருமில்லை.’!
—————————

Jun 7, 2016
கவிஞர் தாஜ் : காலச்சுவடு கண்ணனோடு (உயிர்த்தலம் பற்றி) நான் பேசுவதை கேட்ட சிலர் ஆபிதீனின் புத்தகத்தை தேடினார்கள். ஸ்டாலுக்குள் ஆபிதீனின் உயிர்த்தலம் புதிதாக நாலுவரிசை உயரத்துக்கு உயிர்த்தெழுந்தது! ஓரிரண்டு பேர் உயிர்த்தலத்தை வாங்கவும் வாங்கினார்கள்!

பெரிதாக்கிப் பார்க்க : https://www.facebook.com/photo.php?fbid=1060605434009199&set=a.1060605417342534.1073745566.100001792565524&type=3&theater

—————————

Jun 5, 2016

நாகூர்க்காரங்க வைக்கிற தலைப்பெல்லாம் ஒரு மாதிரியாத்தான் இருக்கு. அவரு உயிர்த்தலம்.. இவரு (நாகூர் ரூமி) மாற்றுச்சாவி!

—————————

Jun 2, 2016
bonding – Meghdut Sen

bonding - Meghdut Sen

—————————

Apr 26, 2016
உயிர்த்தலம் புத்தகத்தில் எதாவது எழுதி ஒரு கையெழுத்து போட்டுக் கொடுங்க அண்ணி என்று யாழினி கேட்டதற்கு, ‘அண்ணனின் இலக்கியம் ஒழிக!’ என்று எழுதியிருக்கிறாள் அஸ்மா.

—————————
Jun 1, 2016

காலச்சுவடு அரங்கில் ஒருவர் : உயிர்த்தலத்தை வுட்டுட்டு மீதி எல்லாத்தையும் காட்டுங்க சார் !
—————————
Apr 17, 2016
ஆபிதீனின் உயிர்த்தலத்தை முகர்ந்தேன், நல்ல வாசனை என்று முகநூலில் சொல்லியிருக்கிறார் நண்பர் தாஜ் . நன்றி!
—————————

Apr 17, 2016
இன்று துபாய் வந்த ஜாஃபர்நானா , என் உயிர்த்தலத்தைக் கையில் பிடித்துக் கொண்டிருப்பதை இங்கே காணலாம் (இவர் வாசிப்பதை ஊரில் பார்த்த பேத்தி, ‘ஹை, சிரிப்பு‌‌ புத்தஹம்!’ எனறு சொல்லுமாம்!)
—————————

Dec 1, 2015

காலச்சுவடு வெளியீடாக எனது ‘ உயிர்த்தலம்’ தொகுதி (இரண்டாம் பதிப்பு) வந்திருப்பதில் மகிழ்ச்சி. ‘நகுலனுக்கு ஒரு சுசீலா போல ஆபிதீனுக்கு ஒரு அஸ்மா! அனைத்துக் கதைகளிலும் அஸ்மா எழுத்தின் மகிழ்ச்சியாகி ஒளிர்கிறாள். நம்மிடமிருந்து என்றோ விடைபெற்றுக்கொண்ட நகைச்சுவை உணர்வுகள் எள்ளலும் கிண்டலும் கேலியுமாக இந்தப் பக்கங்களில் குதூகலிக்கின்றன’ என்கிறார் மதிப்பிற்குரிய ஹனீபாக்கா. ஒத்துழைத்த நண்பர்கள் அனைவருக்கும் நன்றி.
https://abedheen.wordpress.com/2015/12/01/uyirththalam-kalachuvadu/

————-
Oct 12, 2014
ஃபேஸ்புக்கில் போகன் சங்கர்

ஆபிதீன் அவர்கள் எழுதிய உயிர்த்தலம் புத்தகத்தை மதுரையில் ஒளிந்திருந்த ஒரு புத்தகக் கடையில் ஒரே ஒரு பிரதி கிடைத்து வாங்கினேன்.இதற்கு முன்பு சில இஸ்லாமிய எழுத்துகளை தமிழில் படித்திருக்கிறேன் .கீரனூர் ஜாகிர் ராஜா ,தோப்பில் தவிர மற்றவை எல்லாம் உரலுக்குள் தலையை விட்டது போலவே இருக்கும்.அதுவும் நல்ல அரபி உரல்.நல்ல அரபி இடி.என் நண்பர் ஒருவருக்கு தோப்பிலே அப்படித்தான் தோன்றிற்று.அவர் கூடுதலாய் மலையாள உரலில் மலையாள இடியும் வேறு சேர்த்து தருவார்.

ஆபிதீன் கதைகள் முற்றிலும் வேறு தளம்.இணைவைத்தலுக்கு மறுமை நாளில் வானகத்தில் கொடுக்கப்படும் தண்டனைகள் பற்றி காபிர்களுக்கு கவலை இல்லை என்பதால் நான் தைரியமாகவே அவரை பஷீருடன் ஒப்பிடுவேன்.மலையாளத்தின் இக்காமாருக்கே உரிய பகடி.சுய எள்ளல் .அதே சமயம் சாரமற்ற வெற்று வெடிச் சிரிப்பும் அல்ல.தமிழ் முஸ்லிம்கள் எப்போதும் கைக்கு புத்தூர் மாவுக் கட்டு போட்டது போலவே எழுதுகிறார்கள் என்பது என் கருத்து.ஆபிதீன் அப்படி அல்ல. தொகுப்பில் உள்ள வாழைப்பழம் கதை ஒன்றே அவரது மேதமையைக் காட்டி விடுகிறது.ஆயிரம் தலை வாங்கிய அபூர்வ சிந்தாமணி யின் அனாயாசத்தோடுஒரே வீச்சில் நம் தலையையும் வாங்கி விடுகிறார்

நான் இந்தப் புத்தகத்தை வஹாபிகள்,சங்க காரியதரிசிகள் வாழைப்பழத்தை தோல் சீவி வெட்டி சாப்பிடுகிறவர்கள் தவிர மற்ற எல்லோருக்கும் பரிந்துரைப்பேன்

—————————

Friday, December 2, 2011
ஆபிதீன் கதைகள் – அஷ்ரஃப் சிஹாப்தீன்

—————————

Monday, July 28, 2008
ஆபிதீனின் உயிர்த்தலம் / அங்கதத்தின் பிரமாண்டம்! – தாஜ்
*

ஆபிதீன் பற்றிப் பேசிய அனைவருக்கும் நன்றி . பேசாதவர்களுக்கு என் ஸலாம்!

786வது பதிவு. இதுவா மெஹ்ராஜ்…..??????!

டூர் போகும் அவசரத்திலும்,   கஜல் கேட்காத நானாவின் அன்புக்காக பதிவிடுகிறேன்…

***

இதுவா மெஹ்ராஜ்…..?????? – ஹமீது ஜாபர் கட்டுரை

Mehraj

ஓரிறைக் கொள்கையும் இறைவன் உருவமற்றவன் என்பது இஸ்லாத்தின் கோட்பாடு. “லா இலாஹா இல்லல்லாஹு……” என்று தொடங்கும் மூல மந்திரம் முதலில் “லா” ‘இல்லை’ என்கிற எதிர்மறை வார்த்தயை முதலில் கையாளுகிறது. அடுத்து வேறு இறைவன் இல்லை, அல்லாஹ் என்ற பெயருடைய இறைவன் ஒருவனைத் தவிர என்று உறுதியுடன் சொல்கிறது. இதனை உறுதிப்படுத்தும் விதமாக குர்ஆனில் ‘இஹ்லாஸ்’ (ஏகத்துவம்) என்று சொல்லக்கூடிய 112 ம் அத்தியாயத்தில் (1) “கூறுவீராக இறைவன் ஒருவன். (2) அவன் எந்த தேவையும் அற்றவன். (3) அவன் எவரையும் பெறவுமில்லை; யாராலும் பெறப்படவும் இல்லை. (4) அவனுக்கு நிகராக ஒன்றுமில்லை.”

இங்கே அவன் என்று குறிப்பிடுவது ஆண்பாலுமில்லை பெண்பாலுமில்லை. ‘அவன் என்ற வார்த்தைக்கு பன்மை கிடையாது,  உயர்திணை. அவர், அவள் என்ற சொல் ஒருமை அதற்கு பன்மை அவர்கள்’ என்று பழைய லிஃப்கோ தமிழ் அகராதியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஒன்று உருவாகவேண்டுமென்றால் அதற்கு மூலம் என்று ஒன்று வேண்டும். இப் பிரபஞ்சத்தின் மூலம் பெருவெடிப்பு என்கிறார்கள், அதேபோல் உயிரினங்களின் மூலம் தண்ணீர் என்கிறது அறிவியல். ஆனால் இறைவன் என்ற சொல்லுக்கு அல்லது சக்திக்கு மூலம் எதுவும் கிடையாது. அது மூலமற்ற ஒன்று. வேறு வார்த்தையில் சொன்னால் முதலும் முடிவும் அற்றது.

மனித இனம் தோன்றி பல்கிப் பெருகி உலம் முழுவதும் வியாபித்தபின் மூல இறைவனை மறந்து எதையெல்லாம் நினைக்கிறார்களோ அதையெல்லாம் என் இறைவன் என எண்ணிலடங்கா இறைவனை உருவகப்படுத்தினர்.  இத்தகைய அவல நிலையை நீக்கவே இறைதூதர்கள் தோன்றினார்கள் என்கிறது இறைமறை. இறுதியாக தோன்றிய நபி ரசூல்(சல்) அவர்கள் மேலே சொன்ன அத்தியாயத்தை, ஓரிறைக் கொள்கையை நிறுவி இஸ்லாத்தை நிறைவு செய்தார்கள்.
பெருமானார் அவர்கள் ஓரிறைக் கொள்கையைப் பரப்புங்கால் “மக்களின் அறிவுக்குத் தகுந்தாற்போல் பேசுங்கள்” என்ற இறை அறிவிப்பு வந்தது. அதன் பிறகு கேட்போரின் அறிவு ஏற்றுக்கொள்ளும் வகையில் இறைவனையும் அவனது படைப்பினங்களையும் வகைப்படுத்தி பேசினார்கள்.

அவர்களின் மறைவுக்குப் பின் வந்த இறைநேசர்கள் பெருமானாரைப் பின் பற்றியே மார்க்க பிரச்சாரம் செய்து வந்தார்கள். அதேநேரம் அகமியத்தின் உண்மை நிலையை மறைக்கவுமில்லை, தகுதியுள்ளவர்களுக்கு போதனையும் செய்தார்கள். நாகரீகம் வளர வளர காலப்போக்கில் இஸ்லாம் அதன் தூய்மையை இழந்து, எது இறை கொள்கையோ அது மறைந்து இறைவனுக்கு அருவுருவ நிலையை கற்பித்து அருவநிலை என்பது வெறும் சொல்லாடலாக இருந்துவருகிறது.

இதற்கு சிகரம் வைத்தார்போல் அறிவிற்சிறந்த மார்க்க அறிஞர் ஒருவர் “இறைவனுக்கு உருவம் இருக்கிறது, நாளை மறுமையில் அவனது கால்களைக் கண்டபிறகே சொர்க்கம் செல்வோம்” என்று சில வருடங்களுக்கு முன்பு பறை சாற்றினார்.

இப்போது வெறொரு அதிர்ச்சி சென்ற 6-6-13 அன்று முகநூலில் வந்த மேலே உள்ள படம் என்னை நிலைகுலைய செய்துவிட்டது. (வெளியீடு: ISLAM4PEACE)

ஒவ்வொரு நபிமார்களுக்கும் ஒவ்வொரு சிறப்பை இறைவன் தந்தருளியிருக்கிறான். அந்தவகையில் ரசூல்(சல்) மெஹ்ராஜ் மூலமாக சிறப்பைக் கொடுத்தான். இது எப்படி நடந்தது என்ற உண்மை நிலை பெருமானார் அவர்களுக்கு மட்டுமே தெரியும். உண்மையைச் சொன்னால் மக்களுக்குப் புரியாது அதே நேரத்தில் நடந்து முடிந்த நிகழ்வை மக்களுக்குத் தெரியப்படுத்தவும் வேண்டும், மறைக்கக்கூடாது எனவே எல்லோருக்கும் புரியும்படி ரத்தினச் சுருக்கமாக விளக்கினார்கள்.

இறைவன் மெஹ்ராஜைப் பற்றி என்ன சொல்கிறான் குர்ஆனில்? “ஓர் இரவில் தன் அடியாரை புனிதமிக்க ஹரம் ஷரீஃபிலிருந்து மஸ்ஜிதில் அக்ஸா வரை அழைத்துக்கொண்டுபோன இறைவன் தூய்மையானவன்” என்று சொல்கிறான். இதற்கு ‘இஸ்ரா’ என்று பெயர். அதன் பிறகு அங்கிருந்து ஏழு வானங்களைக் கடந்து அறுஷே மு அல்லாஹ்வில் இறைவனை சந்தித்தது மெஹ்ராஜ்.

மெஹ்ராஜ் என்ற சொல்லுக்கு ஏணி, ஏறிப்போகுதல் என்று அர்த்தம். ஏறிப்போகுதல் என்றால் சட உலகில் ஒவ்வொரு படியாக கால் வைத்து ஏறிப்போதல் என்று அர்த்தமல்ல. கீழ் நிலையிலிருந்து மேல் நிலைக்குப் போகுதல்; Basement லிருந்து superior நிலைக்குச் செல்லுதல்; கீழ்த்தரமான மனிதக்கட்டுபாடுடைய சட உலகிலிருந்து material அல்லாத spritual நிலைக்கு உயர்தல். அப்படி உயரும்போது எத்தனை தடைகள் அல்லது திரைகள் வருகின்றனவோ அத்தனைக்கும் வானம் என்று பொருள் கொடுக்கிறார்கள் சூஃபியாக்கள்.  முதலில் ஒரு திரை வரும் அப்புறம் ஒரு திரை வரும் இப்படி ஏழு திரைகள் இருக்கின்றன. ஒரு திரை உணர்ச்சித் திரை; மறு திரை எனக்கு அறிவு இருக்கிறது என்ற நினைப்பு, கர்வம் என்ற திரை; மறு திரை கோபம் என்ற திரை இப்படி ஒவ்வொரு திரையை கடக்கும்போது தான் யார் என்பது தெரியும். எந்த நிமிடத்தில் தான் யார் என்பது புரிகிறதோ அந்த நிமிடத்தில் இறைவனை சந்தித்தீர்கள் என்று பொருள். எனவே எங்களுக்கு மெஹ்ராஜின் பாக்கியம் கிடைக்காதா? நாங்கள் செய்ய முடியாதா ? என்று நபி தோழர் அபுபக்கர் சித்தீக் (ரலி) அவர்கள் கேட்டபோது, “அஸ்ஸலாத்துல் மெஹ்ராஜுல் முஃமினீன்” – தொழுகை ஈமான் கொண்டவர்களுக்கு மெஹ்ராஜாய் இருக்கும் என்று நபிகள் பிரான் நவின்றுள்ளார்கள்.

மெஹ்ராஜின் தாத்பரியம் / உண்மை நிலை பற்றி  இங்கே பதிவிடப்பட்டு விட்டது. இல்லாமல் , படம் வரைந்து காண்பித்திருப்பது மிகப்பெரிய அபத்தமாக உள்ளது. வானத்தின் எல்லையை நிர்ணயிக்க முடியாமல் திணறிக்கொண்டிருக்கும் இன்றைய நவீன சுழலில் தட்டுத் தட்டாக வானத்தை விளக்கியிருப்பது மெஹ்ராஜை கொச்சைப் படுத்துவதாகும்.

இறைவன் உருவமற்றவன். உருவமற்ற ஒன்று உருவமுள்ள ஓரிடத்தில் எப்படி இருக்க முடியும்? தட்டுத்தட்டாக காண்பிக்கப்படும் வானத்தில் ஒரு தட்டுக்கும்/வானத்துக்கும் மறு தட்டுக்கும் /வானத்துக்கும் எத்தனை தூரம்? அங்கேதான் அல்லாஹ் இருக்கிறான் என்றால் மற்ற இடங்களில் இல்லை என்பது மட்டுமல்ல அல்லாஹ்வுக்கு உருவம் இருக்கிறது என்ற பொருள் வருகிறது? அல்லாஹ்வுக்கு இருப்பிடம் தேவை என்பதாகிறது. “அல்லாஹு சமது’ – எந்த தேவையும் அற்றவன் என்ற இரண்டாம் வசனம் பொய்யாகிறது. மொத்தத்தில் சூறா இக்லாஸ் (ஏகத்துவம்) பொய்யாகிறது.

இஸ்லாத்தின் ஏகத்துவக் கொள்கையையும், குர் ஆனையும் ஏளனப்படுத்தும் இத்தகைய வரைபடங்களை வைத்து பெருமைப் படும் இஸ்லாமிய சகோதரர்களை என்னவென்று சொல்வது? அல்லது பரப்புரை செய்யும் மார்க்க விற்பன்னர்களை எந்த கோணத்தில் பார்ப்பது?

சகோதரர்களே ! சற்றே சிந்தியுங்கள்.. தெளிவு கிடைக்கும் வரை சிந்தியுங்கள்…

***

நன்றி : ஹமீது ஜாஃபர் ( http://hameedjaffer.blogspot.com/ ) | E-Mail : manjaijaffer@gmail.com

இப்னு பதூதா (The Greatest Arab Traveller : 1 ) – ஹமீது ஜாஃபர்

ஜாஃபர் நானாவின் இந்தக் கட்டுரையை எடிட் செய்தபோது ’கிரேட்டஸ்ட் ட்ராவல்’ செய்தது நானாவா அல்லது இப்னு-பதூதாவா என்ற சந்தேகம் வந்துவிட்டது. அத்தனை பின் நவீனத்துவம்! குழப்பத்தை நீக்க , நானாவின் குறிப்புகளை சாய்வெழுத்தில் – அங்கங்கே நானாவுக்குப் பிடித்த நீலக் கலரில் – அமைத்திருக்கிறேன். கவனமாக படியுங்கள். ஒரே ஒரு சந்தேகம், இப்னு-பதுதா 75000 மைல்கள் சுற்றியவராக இருக்கட்டும். ‘என்னயும் புள்ளைங்களையும் வுட்டுட்டு ஏன் போறீங்க?’ என்று – ‘The Prefab People’-ல் வரும் மனைவி மாதிரி – என் உயிர் அஸ்மா கேட்கும்  கேள்வியின் தூரத்திற்கு நிகராகுமா அது? என்னதான் இப்போதெல்லாம் Skype-ல் பார்த்தாலும் நேரில் பார்ப்பது போல் வருமா? (முகத்தைச் சொல்கிறேன் !) .  என் துக்கத்தை விடுங்கள்; வெறும் தகவல் திரட்டாக இல்லாமல் சுவாரஸ்யமான பகுதிகளையும் சேருங்கள் என்று சொன்னதால் நானா உழைத்திருக்கிறார் இந்தக் கட்டுரையில் , கூடுதலாகவே. அந்த ’மோதிரம்’ நிகழ்ச்சி உதாரணம். ஒரே ஒரு வருத்தம்,  இப்னுபதாதா சென்ற இடங்களைச் சொல்லும் svg கோப்புகளை (Maps) இணைக்க இயலவில்லை. பிரமாதமாக விக்கிப்பீடியாவில் செய்திருக்கிறார்கள். சுட்டி மட்டும்தான் கொடுக்க முடிந்தது. அவசியம் அதையும் பாருங்கள். அனைவருக்கும் நன்றி – ஆபிதீன்

***

இப்னு பதூதா – அருட்கொடையாளர் – 10

ஹமீது ஜாஃபர்  : ஒவ்வொருவருக்கும் ஒன்றோ பலவோ தனித்திறமை இருக்கும். அது அவனுக்கு தெரிந்தும் இருக்கலாம் இல்லை தெரியாமலும் போகலாம். ஆனால் அது ஒவ்வொரு மனிதனுடைய வளர்ச்சிக்கும் பின்-துணை என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை. ஒருமுறை எங்கள் ஹஜ்ரத் அவர்கள் ஆன்மீகப் பாடம் நடத்திக்கொண்டிருக்கும்போது,    “உன்னுடைய potentiality  என்ன என்பதை நீ தெரிந்துகொள்ளவேண்டும், அது உன் வளர்ச்சிக்கு பெரும் துணை” என்று பேச்சை நிறுத்தி, potentioality என்றால் என்ன என்று தெரியுமா? என்ற கேள்வியை முன் வைத்தார்கள். நாங்கள் யாரும் பதில் சொல்லவில்லை, அது கேள்வி அல்ல அவர்கள் பேச்சின் வேகம் கேள்வி மாதிரி வரும் அது அவர்கள் பாணி. தொடர்ந்தார்கள், “Potentioality என்றால் உந்து சக்தி, எதற்காக நீ பாடுபடுகிறாயோ அல்லது எது உன் சிந்தனையில் சதா ஓடிக்கொண்டிருக்கிறதோ அல்லது எதற்காக ஊணை மறக்கிறாயோ; தூக்கத்தை தியாகம் செய்கிறாயோ அல்லது எதை எடுத்தாலும் அதனுடன் பின்னிப் பார்க்கிறாயோ அது. அது எல்லோருக்கும் ஒரே மாதிரி இருக்கும் என்கிற அவசியமில்லை ஓவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதிரியாக இருக்கும். அப்படி இருக்க நாம்  normal ஆக ஏன் இருக்க வேண்டும் என்று கேட்கிறேன், அப்படி இருப்பது தவறு. நம்மிடமுள்ள potentiality-ஐ, latent force-ஐ, dominant force-ஐ develop பண்ணணும்.  உங்களிடம் ஒரு திறமையை அல்லா கொடுத்திருக்கான், இவனிடம் ஒரு திறமையை அல்லா கொடுத்திருக்கான், அவரிடம் ஒரு திறமையை அல்லா கொடுத்திருக்கான். இப்படி ஒவ்வொரு ஆளுக்கும் ஒரு திறமையை அல்லா கொடுத்திருக்கான். ஆனால் இதில் என்ன unfortunate என்று கேட்டால், யார் யாரிடம் என்னென்ன திறமை இருக்குதென்று அவங்களுக்கே தெரியவில்லை, அதை தெரிந்தவர்கள்தான் மேலே வருகிறார்கள்…. ” என விளக்கம் கொடுத்துக்கொண்டிருந்தார்கள்.

ஆம், இப்படி தன்னை அறிந்து அப்பாதையில் சென்றுகொண்டிருந்தவர்கள்தான் வெற்றி அடைந்திருக்கிறார்கள். ஒருவர் ரசவாதத்தில் மோகம் கொண்டு ரசாயனத்தில் வெற்றி கண்டார்; ஒருவர் வீட்டுக் காவலில் இருந்துக்கொண்டே பார்வை தத்துவத்தை படைத்தார்; மார்க்கக் கல்வி கற்று பள்ளிவாசலில் இருக்கவேண்டியவர் மருத்துவத் துறையில் சாதனை படைத்தார். இப்படி மருத்துவம், கணிதம் , வானசாத்திரம், மொழி, தத்துவம் என ஒவ்வொரு துறைகளிலும் ஒவ்வொருவரும் சாதனை படைத்தார்கள்.  ஆனால் இங்கு ஒருத்தர் ஊர் சுற்றவேண்டும் என்ற ஆசை கொண்டு 75000 மைல்கள் சுற்றித் திரிந்திருக்கிறார். சுற்றியது வேடிக்கைக்காகவுமல்ல, விளையாட்டுக்கமல்ல, நாடு பிடிக்கவேண்டும் என்ற ஆசையினாலுமல்ல. மாறாக தான் சென்ற நாடு/இடத்தின் வாழும் மக்கள், உணவு, உடை, கலாச்சாரம், பண்பாடு, மொழி, தட்பவெட்பம், மன்னர்கள், ஆட்சிமுறை, வளர்ச்சி அனைத்தையுமே கண்டறிந்து பின்னால் வரும் சமுதாயத்துக்கு அருட்கொடையாகத் தந்தருளியிருக்கிறார் இப்பெரியவர்.

                        
இப்னு பதூதா (1304-1369)  The Greatest Arab Traveller                           

பாகம் 1

மஃக்ரிப் என்று அரபியிலும் மொரோக்கோ என்று பிற மொழிகளிலும் அழைக்கப்படும் நாட்டின் ஜிப்ரால்டர் ஜலசந்தியை ஒட்டிய தன்ஜித்-طنجة /Tangier என்ற கடற்கரை நகரத்திலிருந்து ஆப்ரிக்கா, ஆசியா மைனர், இந்தியா, இலங்கை என்று சீன தேசம் வரை 75000 மைல்கள்(120,000 k.m) சுற்றிவந்த இப்னு பதூதா, மார்க்கோ போலோவிற்கு ஐம்பதாண்டுகளுக்கு முந்தியவர். ஒரு முறைக்குமேல் மறுமுறை ஒரே வழியில் செல்வதில்லை என்ற கொள்கையுடன் தரை மார்க்கம் வழியாக கழுதை, ஒட்டகம், நடை, குதிரை எனவும் படகு, கப்பல் என கடல், நதி வழியாகவும் மேற்கு ஆப்ரிக்காவில் திம்புக்து, மாலி, நைஜர்,  Horn of Africa என்று சொல்லப்படும் எரித்ரியா, ஜிபோத்தி, எத்தியோபியா, சோமாலியா மற்றும் வடக்கு ஆப்ரிக்க நாடுகளும், தெற்கு மற்றும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளையும், மத்திய கிழக்கு, தெற்கு ஆசியா, மத்திய ஆசியா, சீனா முதலிய நாடுகளையும் சுற்றி வந்த இப்னு பதூதா தன் பயண அனுபவங்களைத் தொகுத்து ‘ரிஹ்லா’-الرحلة(பயணம்/The Journey) என்ற தலைப்பில் நூல் ஒன்றை எழுதியுள்ளார். வாகன வசதி இல்லாத காலத்தில் தனி ஒரு மனிதர் ஏறக்குறைய 44 நாடுகளுக்குமேல் சுற்றி பல்வேறு மக்கள், பல்வேறு அரசர்கள், பல்வேறு மந்திரிப் பிரதானிகள், பல்வேறு சூஃபிக்கள், பல்வேறு இறைநேசர்கள், பல்வேறு முக்கிய பிரமுகர்கள் என இப்படி இரண்டாயிரத்துக்கும் மேலானவர்களுடன் தொடர்பு வைத்திருவர் வேறு யாரும் இருக்கமுடியாது.

இளமைக் காலம்

அபு அப்துல்லாஹ் முஹம்மது இப்னு அப்துல்லாஹ் அல்-லுவாதீ அல்-தன்ஜீ இப்னு பதூதா (أبو عبد الله محمد ابن عبد الله اللواتي الطنجي ابن بطوطة) என்பது இவரது முழுப் பெயர். ஷம்சுதீன் என்றும் அழைக்கப்பட்ட இப்னு பதூதா பிப்ரவரி 25, 1304 ல் தன்ஜித் நகரில் பல நீதிபதிகளை இஸ்லாத்திற்கு அளித்த குடும்பத்தில் பிறந்தார். பெர்பர்(Berber) எனும் இனத்தைச் சேர்ந்தவரான இவர் தனது இளமைக் காலத்தில் பிறந்த நகரிலேயே கல்வி கற்றார். அக்கால கட்டத்தில் வடக்கு ஆப்ரிக்கப் பகுதிகளில் மாலிக்கி மதஹபு பிரிவு இருந்ததால் அம்மதஹபின் சட்டவியலில் நிபுணத்துவம் பெற்றார். இஸ்லாமிய கல்வியில் தேர்ச்சிப் பெற்றபின் ஹஜ் செய்யவேண்டும் என்ற ஆவல் உந்தப்பட்டவராக தனது 21ம் வயதில் 1325 ல் மக்காவை நோக்கி ஹஜ்ஜிற்குப் புறப்பட்டார். ஏறக்குறைய 18 மாத காலம் பயணம் செய்து ஹஜ் கடமையை நிறைவேற்றினார். வேறு வார்த்தையில் சொன்னால் நீ…..ண்ட பயணம் செய்து ஹஜ்ஜை நிறைவேற்றிய ஒரே மனிதர் எனலாம். அதன்பின்பும் 24 ஆண்டுகாலம் தன் சொந்த நாட்டிற்கு திரும்பவே இல்லை.

“என் மனதில் தோன்றி மறைந்துக்கொண்டிருந்த அந்த ஆசை சிறிது சிறிதாக வலுப்பெற்று அவ்விரு புனித இடங்களைக் காணவேண்டும் என்ற எண்ணம் நீண்ட நாட்களாக என் மனதில் உந்திக்கொண்டிருந்தது, ஆனால் என்னுடன் வருவதற்கு எனது நண்பர்களோ, உறவினர்களோ, பயணிகள் கூட்டங்களோ காணப்படவில்லை, எனவே நான் தனியாகப் புறப்படும் நிலைக்குத் தள்ளப்பட்டேன். என்மீது அன்பு வைத்திருந்த பெற்றோர்கள், நண்பர்களை விட்டுப் பிரிவது துன்பத்தைத் தந்தது; அப்பிரிவாற்றாமையினால் நான் தனிமையில் கண்ணீர்விட்டேன்.” என்று தனது குறிப்பில் எழுதியுள்ளார். (H. A. R. Gibb)                                    

பயணம் தொடங்கியது…..

’நான், ஹிஜ்ரி 725, ரஜப் பிறை 2 (ஜூன்14,1325) வியாழக்கிழமை என் சொந்த ஊரான தன்ஜீரை விட்டுப் புறப்பட்டேன். அப்போது எனக்கு வயது 22, (ஆங்கில கணக்குப்படி 21 வருடம் 4 மாதம்).

பயணம் மிகவும் ஆபத்து நிறைந்ததாகவே இருந்தது. வடக்கு ஆப்ரிக்க கடற்கரையோரமாகப் பயணம் செய்து த்லிம்சன் என்ற நகரத்தை அடைந்தபோது துனிசிய சுல்தானின் தூதுவர்கள் இருவரின் தொடர்பு கிட்டியது. ஆனால் அவர்கள் அன்றே அங்கிருந்து புறப்பட்டனர். நான் மட்டும் அங்கு மூன்று நாட்கள் தங்கி தன் பயணத்திற்குத் தேவையான பொருட்களை வாங்கிக்கொண்டு என் பயணத்தை துரிதப்படுத்தினேன். மிலியானா என்ற நகரை அடைந்தபோது அங்கு அவ்விரு தூதுவர்களையும் சந்தித்தேன். அது கோடைக்காலமாக இருந்ததால் வெப்பம் தாங்காமல் அவர்கள் இருவருமே நோய்வாய்ப்பட்டிருந்ததால் பத்து நாட்கள் தங்க நேரிட்டது. மீண்டும் பயணத்தைத் தொடர்ந்தபோது நான்கு மைல் தூரத்தில் அவர்களில் ஒருவருடைய நிலமை கவலைக்கிடமாகி இறந்தார் அதனால் மூன்று இரவு அங்கேயே தங்க நேரிட்டது. தூதுவரையும் துணைக்கு வந்தவர்களையும் அங்கே விட்டுவிட்டு தூனிசிலிலிருந்து வந்த ஒரு வணிகக் கூட்டத்துடன் பயணத்தைத் தொடர்ந்தேன்.

துனிசியாவை நோக்கி….

அல்ஜீர்ஸை(அல்ஜீரியாவின் தலைநகர்) நெருங்கியதும் நகருக்கு வெளியே மற்ற வணிகக் கூட்டத்தாரின் வரவை எதிர்நோக்கி சில நாட்கள்வரை காத்திருந்தனர். அவர்கள் வந்ததும் மித்திஜா வழியாக ஜுர்ஜுரா  எனப்படும் ஓக் மரக்காடுகளைக் கடந்து பிஜயா(Pijaya) நகரை அடந்ததும் துனிசிய வணிகர் ஒருவர் மரணம் அடைந்தார். அல்ஜீர்ஸை சேர்ந்த ஒருவர் துனிசியாவில் இருக்கும் தனது வாரிசு ஒருவரிடம் சமர்ப்பித்துவிடும்படி 3000 தினார் மதிப்புள்ள தங்கத்தை அவரிடம் கொடுத்திருந்தார். அதைக் கேள்வியுற்ற சயிது இப்னு அல்நாஸ் என்ற பிஜயாவின் ஆட்சிப் பொருப்பிலிருந்த துனிஸ் மன்னரின் பிரதிநிதி  அதை அபகரித்தார்.  துனிசிய அரசின் பிரதிநிதி ஒருவர் இப்படி வழிப்பறி செய்வதை முதன்முறையாகக் கண்டேன். இங்கு நான் நோயுற்றேன். என் உடன் வந்தவர்கள் சொன்னார்கள், நீ வேண்டுமானால் இங்கேயே தங்கி சுகப்படுத்திக்கொண்டு வரும்படி , நான் மறுத்துவிட்டேன். ஒரு வேளை நான் பயணிக்கும் வழியில் இறக்கவேண்டும் என இறைவன் நிர்ணயித்திருந்தால், என் முகம் மக்காவை நோக்கி இருக்கட்டும் என்று சொல்லிவிட்டு பயணத்தைத் தொடர்ந்தேன்.

குவாசண்டினா(Constantine) அடைந்தபோது மணல்காற்றும் கூடவே கடுமையான மழையும் எங்களைத் தாக்கியது, எங்கள் கூடாரங்கள் சேதமடைந்தன, நாங்கள் அருகிலிருந்த வீடுகளில் தஞ்சம் புக நேர்ந்தது. இதை கேள்வியுற்ற அந்நகரின் கவர்னர் எங்களை சந்தித்து எல்லா உதவிகளையும் செய்தார், என் தலைப்பாகைத் துணி கிழிந்திருப்பதைக் கண்டு எனக்கு வேறொரு துணி கொடுத்தனுப்பினார், அது நேர்த்தியான சிரியாவின் துணி, அதன் ஒரு முனையில் இரண்டு தங்க நாணயங்கள் கட்டப்பட்டிருந்தன. இது என் பயணத்தில் கிடைத்த முதல் வெகுமதி அல்லது பிச்சை(alms) என்று சொல்லலாம்.

பின் குவாசண்டினாவிலிருந்து போனா(Bone) என்ற நகரை அடைந்து அங்கே சில நாட்கள் தங்கிவிட்டு தூனிஸ் புறப்படும்போது மீண்டும் நான் நோயுற்றேன். நீண்ட பயணம் நோய் இவைகளினால் நான் பலவீனம் அடைந்திருந்ததால் எங்கே கிழே விழுந்துவிடுவேனோ என்ற ஐயப்பாட்டில் என் தலைத்துணியை எடுத்து கழுதையுடன் சேர்த்துக் கட்டிக்கொண்டேன். இதை தூனிஸ் சென்றடையும் வரை அவிழ்க்கவே இல்லை.

தூனிஸில்….

தூனிஸ் நகரை அடையும் முன்பே அம்மக்கள் எங்கள் வணிகக்கூட்டத்தை வரவேற்று ஒருவரோடு ஒருவர் நலம் விசாரித்தலும், வாழ்த்துக்கள் பரிமாறிக்கொள்ளவும் செய்தனர். ஆனால் என்னை யாரும் விசாரிக்கவுமில்லை வாழ்த்து தெரிவிக்கவுமில்லை எனக்கு அறிமுகமானவர் யாரும் இருந்தால்தானே? எனவே நான் தனிமைக்குத் தள்ளப்பட்டதை உணர்ந்தேன். துக்கத்தை அடக்கமுடியாமல் வெளிவந்த கண்ணீரின் சுவையை துடைத்ததைக் கண்ட பயணி ஒருவர் எனக்கு ஆறுதல் சொல்லி அன்பு சொரிய ஆரம்பித்தார். நகரை அடையும் வரை அவருடைய இதமான வார்த்தைகள் எனக்கு ஆறுதல் அளித்தன.

தூனிஸ் மக்கள் நிறைந்த நகரமாக இருந்தது. சுமார் ஒரு லட்சம் பேர் வசிப்பார்கள்; இஸ்லாமிய கலாச்சாரமும்  கல்விக்கூடமும் நிறந்த நகரமாக விளங்கியது; வடக்கு ஆப்ரிக்காவின் வணிக நகரமாக இருந்தது; கம்பளி, தோல், தோல்பொருட்கள், துணி, மெழுகு, ஆலிவ் எண்ணெய் மற்றும் தானிய வணிகங்கள் நடந்தன; அழகிய பள்ளிவாசல்களும், அரண்மனைகளும், பொதுப் பூங்காக்களும் இருந்தன.

அங்கு இரண்டு மாதகாலம் தங்கியிருந்தேன். கல்லூரி விடுதி(Dormitory)யில் தங்கியிருந்தேன். பல உயர் அதிகாரிகளையும், நீதிபதிகளையும், கல்வியாளர்களையும் சந்திக்கும் வாய்ப்பு கிட்டியது, அது எனக்கு பயனுள்ளதாகவே இருந்தது, அப்போது அது ரமலான் மாதம், பெருநாள் தொழுகைக்கு மைதானத்தில் அனைத்து மக்களும் கூடினர். துனிசியாவின் சுல்தான் அபு யஹ்யா பின் அபு ஜக்கரியாவும் அவரது பிரதானிகளும் மக்களில் ஒருவராகத் தொழுகையில் கலந்துகொண்டார். தொழுகைப் பேருரைக்குப் பின் ஒருவருக்கொருவர் ஆலிங்கனம் செய்து வாழ்த்து தெரிவித்துக்கொண்டனர். நோன்பும், நோன்பு பெருநாளும் திருவிழா போலிருந்தது.

பெருநாள் கழித்து சில நாட்களில் ஹஜ்ஜு செய்வதற்காக பயணக்கூட்டம் புறப்பட ஏற்பாடாகியது. பயணத்தின்போது ஏற்படும் சில மனத்தாங்கள்களையும், வழக்குகளையும் தீர்வு செய்யும் பொறுப்பை(judge) என்னிடம் ஒப்படைத்தனர். தூனிஸிலிருந்து (erarly Nov 1325) திரிப்போலியை நோக்கி புறப்பட்டோம். ஸ்ஃபக்ஸ்-Sfax (also Sfaqes or Safaqis) மற்றும் காபிஸ் நகரில் தங்கவேண்டியதாகி விட்டது. பத்துநாட்கள் பெய்த தொடர் மழையால் எங்களால் மேற்கொண்டு பயணிக்க முடியவில்லை. எங்களின் பாதுகாப்புக்காக பல நிலைகளில் வீரர்கள் துணையாக வந்தனர்.

ஸ்ஃபக்ஸில் ஒரு துனிசிய அதிகாரியின் மகளை மணமுடிக்க ஏற்பாடாகி திரிப்போலியில் அப் பெண்ணை சந்தித்தேன்.  ஆனால் திரிப்போலியிலிருந்து புறப்பட்ட பிறகு பெண்ணின் தந்தையுடன் ஏற்பட்ட விவகாரத்தால் அப்பெண்ணைவிட்டு பிரியும் நிலை அவசியமாகியது. பின் ஃபெஜ்(Fez) லிருந்து வந்திருந்த ஒருவரின் மகளை மணந்தேன். அவள் விருப்பத்திற்கிணங்க எங்கள் பயணிக்குழு அனைவருக்கும் ஒரு நாள் விருந்தளித்து மகிழ்வித்தேன்’.

(ஸ்ஃபக்ஸில் முதல் மணம் நடந்ததாக சில தகவல்கள் உள்ளன. பொண்டாட்டியெ கூட கூட்டிக்கிட்டுப் போனாரா இல்லை அங்கேயே விட்டுப்போனாராண்டு யாரும் கேக்கவாணாம். அது எனக்கு தெரியாது – ஜாஃபர்)

அலக்ஸாந்திரியாவை நோக்கி….

பாதுகாப்பை அனுசரித்து பெரும்பாலும் பயணிகள் கூட்டத்துடன்(caravan) பயணம் செய்வதையே இப்னு பதூதா விரும்பினார். அவரது பயணிகள் குழு லிபியா கடற்கரை வழியாக செல்லும்போது திரிப்போலி அருகே கொள்ளையர் கூட்டம் ஒன்று வாளை சுழற்றிகொண்டு தாக்கவந்தது, ஆனால்  இறைவன் அருளால்(by Divine will) தாக்குதல் எதுவும் செய்யாமல் வேறுபக்கம் சென்றுவிட்டனர். அதன் பிறகு எந்த தடங்களும் இல்லாமல் அலக்ஸாந்திரியா பட்டினத்தை அடைந்தனர்.

’ஏறக்குறைய எட்டு அல்லது ஒன்பது மாதங்களில் சுமார் 2200 மைல்களைக் கடந்து அலக்ஸாந்திரியாவை அடைந்தோம். இடையிடையே பல நகரங்களில் தங்கியதால் அடுத்த ஹஜ்ஜு வருவதற்கு இன்னும் எட்டு மாதங்கள் இருந்தன. எனவே நான் கெய்ரோ செல்ல விரும்பினேன்’.

(1326 ஏப்ரல் 5 அன்று அலக்ஸாந்திரியாவை அடைந்த இப்னு பதூதாவுக்கு அத்துறைமுகப் பட்டினம் மிகவும் பிடித்திருந்தது, மிகவும் சுறுசுறுப்பான துறைமுகமாக இருந்தது. அலக்ஸாந்திரியாவின் ஆட்சி பொருப்பு எகிப்தின் மம்லுக் சுல்தானின் Behri Mamluk empire   என்ற பிரிவின்கீழ் இருந்தது. அலக்ஸாந்திரியா தனக்குப் பிடித்திருந்ததாகவும், தான் பார்த்த மிக சிறப்பு வாய்ந்த ஐந்து நகரங்களில் ஒன்றாக  இருந்ததாகவும் பின்னால் குறிப்பிடுகிறார். [we reached Alexandria. It is a beautiful city, well-built and fortified with four gates and a magnificent port. Among all the ports in the world I have seen none to equal it except Kawlam [Quilon] and Calicut in India, the port of the infidels [Genoese] at Sudaq [Sudak, in the Crimea] in the land of the Turks, and the port of Zaytun [Canton?] in China, all of which will be described later ]. – ஜாஃபர்)

கலங்கரை விளக்கம்  “wonders of the ancient world”

’பழமை உலகின் அற்புதங்களில் ஒன்றான கலங்கரை விளக்கத்தைக் காணச் சென்றேன், சதுரவடிவிலான மிக உயரமான கட்டிடமாக இருந்தது, அதன் ஒரு பகுதி சேதமுற்றிருந்தது. அதன் வாயில் தரை மட்டத்திலிருந்து உயரத்திலிருந்தது. அதன் வாயிலுக்கு நேர் எதிரே வேறொரு காட்டிடம் அதே உயரத்திலிருந்தது. அதற்கு செல்வதற்கு ஒரு பலகையை பாலம்போல் அமைத்திருந்தது, அந்த பலகையை எடுத்துவிட்டால் அக்கட்டிடத்திற்குப் போகமுடியாது. வாயில் கதவுக்குப் பின்புறம் கலங்கரைவிளக்கப் பணியாளர் வசிக்குமிடம் இருந்தது. கலங்கரை விளக்கத்தினுள்ளே பல அறைகள்(Chembers) இருந்தன. அது நகரத்தைவிட்டு மூன்று மைல் தூரத்தில் கடற்கரை ஓரமாக, புறநகர் மதிற்சுவரையொட்டி இருந்தது. நகரிலிருந்து செல்லும் ஒரேயொரு பாதை வழி மட்டுமே அதனை அடைய முடியும், வேறு வழி இல்லை. நான் மீண்டும் 23 ஆண்டுகள் கழித்து வந்தபோது 750(1349) எந்த வகையிலும் போக முடியாதபடி அது இடிந்த நிலையில் காணப்பட்டது. மாலிக் அல்-நாசிர் என்பவர் அதே போல் ஒன்றை அதனருகே கட்டினார் ஆனால் அவர் மரணத்துக்குப் பின் அதுவும் முடிவுபெறாமல் நின்றிருந்தது. அந்நகரில் வேறொரு அற்புதத்தைக் கண்டேன், மிக நேர்த்தியாக செதுக்கப்பட்ட ஒரே கல்லிலான பளிங்குத் தூண்(an obelisk) ஒன்று மிகப் பெரிய சதுர மேடையின் மீது நிற்பதைக் கண்டேன். அது யார்காலத்தில் வடித்தது, எப்படி நிலைநிறுத்தினார்கள் என்று யாருக்குமே தெரியவில்லை.

நான் சந்தித்த இரு மகான்கள்

அலக்ஸாந்திரியாவில் நான் இரு பெரிய மனிதர்களை சந்தித்தேன், அதில் ஒருவர் நீதிபதி  சொல்வன்மையில் வித்தகராக இருந்தார் (a master of eloquence). அவர் அணிந்திருந்த தலைப்பாகை பல சுருள்கள் கொண்ட மிகப் பெரிதாக இருந்தது. அதுபோன்று கீழ்திசையிலும் கண்டதில்லை,மேல்திசையிலும் கண்டதில்லை. மற்றவர் புர்ஹானுதீன் என்ற இறைநேசர். அவருடைய அனுசரனையும் உபசரிப்பும் என்னை வெகுவாகக் கவர்ந்தது, மூன்று நாட்கள் அவருடன் இருந்தேன். ஒரு நாள் அவரது அறைக்குள் நுழைந்தபோது “நீ வெளிநாடுகளில் பயணம் செய்வதை ஆசிக்கிறாய்” என்றார். “ஆம், நான் விரும்புகிறேன்” என்றேன். பின்பு சொன்னார், “நீ இந்தியாவில் என் சகோதரர் ஃபரீதுதீனையும், சிந்துவில் என் சகோதரர் ருக்னுதீனையும், இன்னொரு சகோதரர் புர்ஹானுதீனை சீனாவிலும் கண்டிப்பாக சந்திப்பாய், அவர்களிடம் என் சலாத்தையும் வாழ்த்தையும் தெரிவி” என்றார். அப்போது, அத்தனை தூரமுள்ள இந்தியா, சீனாவுக்குப் போகவேண்டும் என்ற எண்ணமே எனக்கில்லாதிருந்தபோது இம்முன்னறிவிப்பு என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. ஆனால் அம்மூவரையும் சந்திக்கும் வரை என் பயணம் தடைபடவில்லை.
 
ஷெய்கும் கனவும்

நான் அலக்ஸாந்திரியாவில் இருக்கும்போது ஒரு முர்ஷித்(pious man)/ஷெய்கைப் [ இமாம் அபுல் ஹசன் ஷாதுலி(ரஹ் என சில குறிப்புகள் சொல்கின்றன.- ஜாஃபர்] பற்றி கேள்விப்பட்டேன், அவர் ஓர் சிறிய அறையில்(Cell) தனிமையில் வாழ்வதாகவும் (lived in solitary retreat in a cell), தன்னைக் காண வருபவர்கள் அனைவருக்கும் அவரவர் விருப்பப்படி விருந்தளிப்பதாகவும்,  தினமும் மன்னர், மந்திரிகள் முதல் மக்கள் வரை அலையலையாக வருவதாகவும் கேள்விப்பட்டேன். அவரைக் காணவேண்டும் என்ற துடிப்புடன் அலக்ஸாந்திரியாவை விட்டுப் புறப்பட்டேன். அவர் இருக்கும் ஊரான ஃபவ்வா(Fawwa  or Fua) வை அடைந்தேன். அது அழகிய சிறிய ஊர், ஒரு தூர்ந்தக் கால்வாயில் அவருடைய அந்த அறை இருந்தது. அது ஓர் மதிய வேளை சலாம் சொல்லியவாறு உள்ளே நுழைந்தபோது அரசருடைய பிரதிநிதி ஒருவர் அங்கே இருந்தார். என்னைக் கண்டதும் எழுந்து ஆரத்தழுவி வரவேற்று விருந்தளித்தார். மாலை நேரத்தொழுகையை என்னை தொழவைக்கும்படி சொன்னார். நான் சற்று நேரம் தூங்கவேண்டும் என்ற விருப்பத்தை சொன்னதும் அவர் அறைக்கு மேல் மொட்டைத்தளத்தில் தூங்கச் சொன்னார். அப்போது கடுமையான கோடைக் காலம், நான் தயங்கியதை கண்டு “ஒவ்வொருவருடைய இடத்தை இறைவன் நிர்ணயித்துள்ளான்” என்ற இறைவசனத்தை சுட்டிக்காட்டினார். நான் எதும் பேசாமல் மேலே சென்றபோது அங்கு வைக்கோலினாலானப் படுக்கை, தோல் விரிப்பு, ஒலு செய்ய தண்ணீர், ஒரு குடுவையில் குடிக்க நீர், ஒரு குவளை அனைத்தும் இருந்தன. அவை எனக்காக வைக்கப்பட்டது போல் தோன்றியது.

நான் நன்றாக தூங்கினேன். அன்று இரவு ஓரு கனவு, ஒரு பெரிய பறவை என்னை சுமந்துகொண்டு மக்காவை நோக்கிப் பறக்கிறது, பின் ஏமன், பின் கிழ்திசை, அதன்பின் தெற்கு நோக்கி, பின் மீண்டும் கீழ்திசை நோக்கிப் பறந்து முடிவாக பசுமை நிறைந்த இருண்ட தேசத்தில் இறக்கிவிடுவதுபோல் கண்டேன். மறு நாள் காலை பார்வையாளர்கள் சென்றபின் என்னை அழைத்து கனவின் விளக்கத்தை சொன்னார். “நீ மக்காவுக்குப் புனிதப் பயணம் செய்வாய், மதினா செல்வாய், ஏமன், ஈராக், துருக்கி சென்று பின் இந்தியா செல்வாய். இந்தியாவில் நீண்ட நாள் இருப்பாய் அப்போது அங்கே என் இந்திய சகோதரர் ‘தில்ஷாத்’ ஐ சந்திப்பாய் அவர் உன்னை, நிகழப் போகும் ஆபத்திலிருந்து காப்பாற்றுவார்” என சொல்லிவிட்டு பயணத்துக்கான ஆகாரமும், பணமும் சிறிது தந்து என்னை வழியனுப்பிவைத்தார். அவர் ஆசியால் என் பயணம் இனிதாகவே இருந்தது.’

(அறிவை வைத்து உரசிப் பார்த்தால் எதோ மந்திரவாதி கதை போல இருக்கும், அதுக்கு நான் பொறுப்பல்ல; அறிவுக்கு அப்பாற்பட்டது எதுவும் நடக்கலாம், இது occult science சம்மந்தப்பட்டது. ஆதாரம் கேக்கிறவங்க உங்களுக்கு நீங்க என்ன ஆதாரம் என்கிறதை நீங்களே கேட்டுக்கொள்ளுங்க, விடை கெடச்சா அதான் இதுக்கும் விடை – ஜாஃபர்)

கெய்ரோ(‘Al-Qahirah-the Victorious’)

’பல நகரங்களைக் கடந்து டெமீட்டா என்ற ஊரை அடைந்தேன். யாரும் அங்கு அனுமதி இல்லாமல் நுழைய முடியாது ஊரின் வெளியே நுழைவாயில் உண்டு அங்கே அனுமதிப் பெற்றே செல்லவேண்டும் அதுபோல் அனுமதிப் பெற்றே வெளியேற முடியும். அவ்வூரை விட்டு கடந்த பின் சில குதிரை வீரர்கள் வழியில் என்னை மடக்கி சில நாணயங்களைத் தந்து டெமீட்டாவின் கவர்னர் பரிசாகக் கொடுத்ததாக சொன்னார்கள். அலக்ஸாந்திரியாவிலிருந்து கெய்ரோ  வரை அதுபோல் கெய்ரோவிலிருந்து அஸ்வான் வரை அனேக கடைத்தெருக்கள் இருந்தன. எனவே உணவுக்கோ தண்ணீருக்கோ தட்டுப்பாடு ஏற்படவில்லை.

அப்போது சுமார் 6,00,000 மக்கள் வாழும் அரபு மொழிப் பேசும் பெரிய பட்டணமாகவும் பெரிய நகரமாகவும் விளங்குகிறது சீனாவின் நகரத்தைத் தவிர. மம்லுக் சுல்தானின் [Mamluk means “Slave” (மங்கோலியர்களை வெற்றி கொண்டவர்கள்)] 10ம் நூற்றாண்டில் ஃபாத்திமியா(Fathimid dynasty) மன்னர்களால் உருவாக்கப்பட்ட சுற்றுச்சுவர் அமைந்த நகரமாக கெய்ரோவில் மக்கள் நெரிசலும் ஆரவாரமும்(frantic) நிறைந்ததாக இருந்தது. குறுகிய தெருக்களில் மக்கள், ஒட்டகம், கோவேறு கழுதைகள் நிறைந்திருந்தன; ஆயிரக்கணக்கான கடைகள் இருந்தன; நடைபாதை மருந்து விற்பனையாளர்களும், வியாபாரிகளும் நெருக்கமாக நிறைந்திருந்தனர் (armies of peddlers and vendors also jammed); அனேக பள்ளிவாசல்களும், கல்லூரிகளும், மருத்துவமனைகளும், மடங்களும்(convents) இருந்தன. அவை அமீர்களினால் தயாள சிந்தையுடன் கட்டியவையாகும்.

நெருங்கிய கட்டிடங்களும், தண்ணீர் மற்றும் பொருள்கள் எடுத்துச் செல்ல 12,000 ஒட்டகங்களும், 30,000 கழுதைகளும் கோவேறு கழுதைகளும் இருந்தன. நைல் நதியில் சுல்தானுக்குச் சொந்தமான 36,000 படகுகள் இருந்தன, அவை கெய்ரோவிலிருந்து அலக்ஸாந்திரியாவுக்கும் அஸ்வானுக்கும் சென்றுவர பயன்படுத்தப்பட்டது.

maristan என்று சொல்லப்படும் மருத்துவமனை மிகவும் பிடித்திருந்தது. மருத்துவ மனையின் அமைப்பு, நோயாளி தங்கும் அறை, ஒய்வறை, நூலகம், மருந்தகம் என எல்லாம் நேர்த்தியாக இருந்தன, பணக்காரர் ஏழை என பாகுபாடு இல்லாமல் இலவசமாக சிகிச்சை அளிக்கப்பட்டது. அதன் தின வருமானம் ஆயிரம் தினாருக்குமேல் இருந்தது.

கெய்ரோவிலிருந்து மக்கா செல்ல மூன்று வழிகள் இருந்தன. அதில் மிகவும் விரைவாக செல்லும் வழியான நைல் பள்ளத்தாக்கு வழியாக செங்கடல் துறைமுக நகரமான அய்தாபை அடைந்து கப்பலில் செல்வது. அங்கு சென்றபோது அல் ஹுத்ருபி என்ற இனத்தவர்கள் எகிப்து சுல்தான் படையுடன் சண்டை இட்டுக்கொண்டிருந்தனர், எனவே கெய்ரோவுக்கே திரும்பும் நிலை ஏற்பட்டது. முதலில் கெய்ரோ வந்தபோது “நீ, சிரியா வழியாக மக்காவுக்கு செல்வாய்” என்று ஷெய்கு அபுல் ஹசன் ஷாதுலி (ரஹ்) அவர்கள் முன்னறிவிப்பு நல்கியிருந்தார்கள்.

சிரியாவை நோக்கி…

கெய்ரோவில் ஒரு இரவு மட்டும் தங்கிவிட்டு வணிகக்கூட்டத்துடன் சிரியாவை நோக்கிப் பயணமானேன். இது 1326 ஜூலை இரண்டாம் வாரம் நடந்தது.  மம்லுக் அரசு வணிகக்கூட்டத்திற்கும் புனித பயணாளிகளுக்கும் பாதுகாப்பான பாதை அமைத்திருந்தது. ஆனால் பல சுங்கச் சாவடிகளைக் கடக்க நேரிட்டது. ஒவ்வொரு சுங்கச்சாவடியிலும் கடவுச் சீட்டு இல்லாமல் வணிகர்கள் சுங்கவரி செலுத்தாமல் யாரும் உள்ளே போகவோ வெளியே வரவோ முடியாது. ஒவ்வொரு சுங்கச் சாவடி அருகேயும் பயணிகள் தங்கி ஓய்வெடுத்து செல்வதற்கான அனைத்து வசதிகளும் இருந்தன.

1258 ல் மங்கோலியர்கள் பாக்தாதை சூறையாடிய பிறகு டெமாஸ்கஸையும் கைப்பற்றினர். அவர்களை 1260 முதல் 1300 வரை சிரியாவிலிருந்து விரட்டியடித்த மம்லுக் சுல்தான் மீண்டும் மங்கோலியர்கள் ஊடுருவாதிருக்கவே எல்லைப் பாதுகாப்பில் மிக கவனமாக இருந்ததால் சுங்கச் சாவடிகளை நிறுவியிருந்தனர். மேலும் எகிப்திலிருந்து பாலஸ்தீனம் வரை தங்கள் கைவசம் வைத்திருந்தனர்.

டெமாஸ்கஸ், மம்லுக் சுல்தான்களின் இரண்டாவது தலைநகர், டெமாஸ்கஸை அடையும்முன்பு ஹஜ் பயணிகள் கூட்டம்(Caravan) டெமாஸ்கஸிலிருந்து வருவதைக் கண்டேன், அவர்களுடன் சென்றிருந்தால் பாதுகாப்பாக சென்றிருக்க முடியும், ஆனால் நான் செல்லவில்லை. அருகே இன்னும் சில புனிதமான இடங்கள் இருந்தன, அவற்றை காணவேண்டும் என்ற ஆவலால் உந்தப்பட்டேன். அல்-கலீல்(Hebron), அல்-குத்ஸ்(Jerusalem), பெத்தலஹம். இவை மூன்றுமே இஸ்லாமியர், கிருஸ்துவர், யூதர்களுக்கு புனித தலமாக இருந்ததால் மூன்று சமயத்தவரும் கூட்டம் கூட்டமாக வந்துபோய்க் கொண்டிருந்தனர்.

ஹெப்ரானில் சதுரவடிவ கல்லினால் கட்டப்பட்ட பெரிய பள்ளிவாசல் ஒன்றிருந்தது. அங்கு புனிதக் குகை ஒன்று உள்ளது அதில் மூன்று கல்லறைகள் இருக்கின்றன, அவை இப்றாஹிம் நபி, இஸ்ஹாக் நபி, யாக்கூப் நபியுடைதாகும். அவற்றின் எதிரே வேறு மூன்று கல்லறைகள் இருந்தன. அவை அவர்களின் மனைவிகளுடையதாகும். சற்று தூரத்தில்(2km) லூத் நபி, யூசுஃப் நபியுடைய கல்லறைகளும் இருந்தன. ஹெப்ரானிலிருந்து ஜெருஸலம் போகும் வழியில் இன்னும் சில புனித இடங்களிருந்தன. ஈசா நபி பிறந்த ஊரான பெத்துலஹம் சென்றுவிட்டு ஜெருஸலத்தை அடைந்தேன். இஸ்லாத்தின் மூன்றாவது புனித இடமான (third sacred mosque after Mecca and Madina) ஜெருஸலம் சுமார் 10,000 மக்கள் வசிக்கும் சிறிய நகரமாக இருந்தது. அதன் பாதுகாப்பு சுவர் இடிந்த நிலையில் காணப்பட்டது. பள்ளிவாசல் முழுவதும் மேற்கூரை இல்லாமலிருந்தது, ஆனால் அல்-அக்சா என்று சொல்லப்படும் நடுப் பகுதி மட்டும் கூறை மிகவும் கலைநயத்துடன் நேர்த்தியாக கட்டப்பட்டிருந்தது. அதன் வெளிப்புறமும் உறுதியான கற்களினால் கட்டப்பட்டு அதன் மேல் தங்கத் தகடுகள் வேயப்பட்டு கம்பீராமாக காட்சியளித்தது, பகலிலும் இரவிலும் மின்னியது. உள்ளும் புறமும் அதன் கலைவேலைபாடுகள் பிரமிக்கவைத்தது.

ஒருவாரம் வரை ஜெருஸலத்தில் இருந்துவிட்டு டெமாஸ்கஸில் நுழையும்போது ரமலான் பிறை 9 (9th Aug 1326) அல்-ஷரபிஷிய என்றழைக்கப்படும் மாலிக்கிய கல்லூரியில் தங்கினேன். டெமாஸ்கஸ் நான் பார்த்த நகரங்களில் மிக அழகானதாக இருந்தது. 24 நாட்கள் நான் தங்கியிருந்த காலத்தில் நான்காம் கலிஃபா உமையா கட்டிய 8ம் நூற்றாண்டு பள்ளிவாசலைக் கண்டேன். மிக அற்புதமான கட்டிடக் கலையுடன் அமைந்த அழகிய பள்ளிவாசலின் சலவைக் கல் தூணின் கீழே அமர்ந்து பலருடைய பிரசங்கங்கள் கேட்கும் வாய்ப்பு கிட்டியது. பல்வேறு அறிஞர்களையும் நீதிபதிகளையும் சந்தித்து அளவளாவும் வாய்ப்பு கிட்டியது.  

பேராசிரியரின் பரிவு

நான் டெமாஸ்கஸை அடைந்தபின் மாலிக்கிய கல்லூரி பேராசிரியர் நூருதீன் ஷகாவி என்பவருடன் நெருங்கிய நட்பு ஏற்பட்டது. நோன்பு திறப்பதற்கு என்னை அவர் வீட்டுக்கு அழைத்துச் செல்வார். நான்கு நாள் சென்றிருப்பேன் சுகவீனமாகி செல்லவில்லை, இதை உணர்ந்த அவர் எவ்வளவோ மறுத்தும் கேளாமல் தன் வீட்டிற்கு அழைத்துச் சென்று சகல வசதிகளும் செய்து தந்து மருத்துவரையும் ஏற்பாடு செய்தார். என்னுடைய சங்கடத்தை உணர்ந்து அவர், “இதை உன் வீடுபோல் நினைத்துக்கொள், உன் சகோதரனாக என்னை பாவித்துக்கொள்” என அன்புகட்டளை இட்டார். நோய் குணமாகும் வரை வைத்திய செலவு உட்பட அனைத்தையும் அவரே ஏற்றார். இறைவன் அருளால் பெருநாள் தொழுகைக்குச் செல்லும்போது நான் குணமாகியிருந்தேன். இதற்கிடையில் என்னிடமுள்ள பணம் அனைத்தும் செலவாகிவிட்டது. பேராசிரியர் நூருதீன் என் பயணத்திற்காக ஒட்டகம் ஒன்றை வாடகைக்கு அமர்த்தி வழிச் செலவுக்குத் தேவையான பணமும் உணவும் கொடுத்துதவினார்.

   

மதினாவை நோக்கி….

ஷவ்வால் மாதம் முதல் நாள்(1-9-1326) அன்று ஹஜ்ஜு காரவான் டெமாஸ்கஸிலிருந்து புறப்பட்டது, அதில் நானும் இணைந்தேன். போஸ்ரா (Buṣrāஅடைந்தவுடன் வழக்கமாக எல்லா காரவான்கள்போல் எங்கள் காரவானும் நான்கு நாட்கள் தங்கி வணிகம் செய்துவிட்டு புறப்பட்டோம். மீண்டும் அல்-கரக்கிற்கு வெளியே நான்கு நாட்கள் நிறுத்தப்பட்டு மீண்டும் பயணத்தை தொடர்ந்தோம். சிரியாவின் கடைசி நகரான ‘மஆன்’ ஐக் கடந்து தபூக்கை அடையும்போது எங்களிடமுள்ள தண்ணீர் அனைத்தும் தீர்ந்துவிட்டது.  நான்கு நாட்கள் தங்கியிருந்து தண்ணீர் முதல் உணவு வரை சேகரித்துக்கொண்டு கொடும் பாலையில் இரவு பகல் பாராது அதிவேகமாகப் பயணத்தைத் தொடர்ந்தோம், காரணம் ‘சமூன்’ என்கிற மணற்புயலிலிருந்து தப்பிப்பதற்காக.

ஐந்து நாள் பயணத்திற்குப் பிறகு அல்-ஹிஜ்ரை அடைந்தோம். எங்களிடமிருந்த தண்ணீர் தீர்ந்துவிட்டது, பெருமானார் அவர்கள் தபூக் செல்லும்போது அவர்களுக்கும் இந்நிலை ஏற்பட்டு இங்கு யாரும் தண்ணீர் அருந்தவேண்டாம் என உத்திரவிட்டு தாகத்துடன் கடந்த வரலாறு நினைவுக்கு வந்தது. இங்கு ‘சமூது’ கூட்டத்தார் வாழ்ந்த குகை வீடுகள் செம்பாறையில் இருந்தன.’
[In the 14th century, the celebrated traveller Ibn Battuta admiringly described the Nabataean tombs of Al-Hijr, cut into the red stone. He did not mention any human activity at the time. – UNESCO] Note: Anyone seeing them would take them to be of recent construction. [The] decayed bones [of the former inhabitants] are to be seen inside these houses]

’ஹிஜ்ரிலிருந்து அரை நாள் பயணத்தில் ‘அல் உலா’ வை அடைந்தோம். பேரீட்சை மரங்களும், சுனைகளும் நிறைந்த பெரிய கிராமம், அதன் மக்கள் நம்பிக்கைக்குரியவர்களாக இருந்தனர். அங்கு தங்கி ஆடைகள் முதல் அனைத்தையும் சுத்தம் செய்துக்கொண்டு மூன்றாம் நாள் பயணமாகி புனித நகரமான மதினாவை அடைந்தோம். சமாதானத்தின் வாயிலில் எங்கள் சலாத்தினை சமர்ப்பித்தோம். சங்கைமிக்க பெருமானார் அவர்களின் புனித ரவ்லா ஷரீஃபுக்கும்(Tomb) அவர்கள் நின்று பிரசங்கம் செய்த மேடைக்கும் இடையே அமைந்துள்ள சிறப்புமிகுந்த தோட்டத்தில் தொழுதோம். அவர்கள் நின்று பிரசங்கம் செய்த பேரீச்சை மரத்தின் சிதைந்த பாகங்களை முத்தமிட்டோம். இறைவனின் திருத்தூதர், மக்காவின் மாமன்னர், எங்கள் தலைவர் மாநபி ரசூல்(சல்) அவர்களின் ரவ்லா ஷரீஃபையும் அதனருகே இருக்கும் தோழர்கள் அபு பக்கர்(ரலி), உமர்(ரலி) ஆகியோரின் ரவ்லா ஷரீஃபினையும் கண் குளிரக் கண்டுகளித்தோம். நான்கு நாட்கள் தங்கியிருந்தபோது ஒவ்வொரு இரவிலும் இறைவணக்கம் புரிவதிலும், வட்டமாக அமர்ந்து குர்ஆன் ஷரீஃபை ஒருவர் மாற்றி ஒருவர் ராகமாக ஒதுவதிலும், புனித ரவ்லா ஷரீஃபை தரிசிப்பதுமாகவே இருந்தோம்.

ஹஜ்ஜு நிறைவேறியது…

’மதினாவிலிருந்து புறப்பட்டு ஐந்து மைல் தூரத்திலுள்ள ‘துஅல் ஹுலைஃபா’ என்ற இடத்தில் பெருமானார் அவர்கள் செய்தபடி எங்கள் ஆடைகளைக் கலைந்து ‘இஹ்ராம்’ (ஹஜ்ஜுக்கான தைக்கப்படாத ஆடை) அணிந்தோம். பின்பு பதரை( بدر-Badrநோக்கிப் பயணமானோம், பின்பு பஜ்வா, ரபிக்(இது எகிப்து வடமேற்கு ஆப்ரிக்காவிலிருந்து வருபவர்கள் இஹ்ராம் அணியுமிடம்) ஐ கடந்து குலயிஸ் வந்தடைந்தோம், இங்கு Bedouinகளின் கடைத்தெரு இருந்தது. இங்கே ஆடு, பழங்கள், உணவுப் பொருட்கள் கிடைத்தன. உஸ்ஃபான் வழியாக காலைப் பொழுது புனிதமிகு மக்காவை அடைந்தோம். தாமதிக்காமல் உடனே ஹஜ்ஜுக்கான கிரியை அனைத்தையும் தொடங்கி இனிதே முடித்தோம். எந்த நோக்கத்தோடு புறப்பட்டேனோ அந்த நோக்கம் பதினெட்டு மாதங்கள் கழித்து நிறைவேறியாது, இது ஒருபுறம் இருந்தாலும் மறுபுறம் நான் நிறைய அனுபவங்களைப் பெற்றதற்கு இறைவனுக்கு நன்றி செலுத்தினேன்.

அன்புமிகுந்த மக்காவாசிகள்

அங்குள்ள மக்கள் அன்பும், தயாள சிந்தையும், இரக்க குணம் உடையவர்களாகவும் இருந்தனர். வெளியூர் பயணிகளிடம் காட்டும் பரிவும், அரவணைப்பும் பாராட்டுக்குரியதாக இருந்தது. அவர்கள் விருந்தளிப்பதாக இருந்தால் முதலில் வறுமையில் வாடும் தொழுகையாளர்களையும் ஆதரவில்லாத ஏழைகளையும் அழைத்து விருந்தளிப்பர். வறுமையில் வாடும் ஏழைகள் ரொட்டிக்கடை (public bakehouses) முன்பாக காத்திருப்பர், ரொட்டி வாங்க வருபவர்கள் அவர்களுக்கும் கொடுத்துவிட்டு தங்களுக்கு வேண்டியதை வாங்கிச் சென்றனர். 

மக்காவாசிகள் தூய்மையான ஆடை அணிந்து நாகரீகமாக இருந்தனர்; பெரும்பாலும் வெண்மையான(snow white) ஆடையையே அணிந்திருந்தனர்; நல்ல அத்தரும், சுருமா(kohl) உபயோகித்தனர்; மிஸ்வாக்(toothpicks of green arak-wood) சாதாரணமாக உபயோகித்தனர். பெண்கள் மிகவும் அழகாகவும், இரக்க சிந்தையும், நாகரீகமுள்ளவர்களாகவும் இருந்தனர்; அவர்கள் பூசியிருக்கும் வாசனை திரவியம் அவர்கள் சென்றபிறகும் நறுமணம் இருந்துக்கொண்டே இருக்கும் அத்தகைய உயர்வான அத்தர்களை உபயோகித்தனர். உணவுக்காக செலவிடுவதைவிட நறுமணப் பொருளுக்காக அதிகமாகவே செலவழிப்பார்கள். ஒவ்வொரு வியாழன் இரவும் உயர்வான மேலங்கி அணிந்து இறை இல்லத்துக்கு கூட்டமாக வருவார்கள். அவர்கள் வந்தபின் அந்த இடம் முழுவதுமே நறுமணத்தால்  கமழ்ந்துக்கொண்டிருக்கும்.

**

(இப்னு பதூதா தன்னுடைய 21ம் வயதில் எந்த எண்ணத்துடன் புறப்பட்டாரோ அதை 18 மாதங்கள் கழித்து நிறைவேற்றினார். தான்னுடைய குறிக்கோள் பூர்த்தியானவுடன் தாய் நாடு திரும்பியிருக்கலாம், அப்படி திரும்பியிருந்தால் அவர் வாழ்ந்த காலத்துக்கு முன்பும் பின்பும் ஹஜ்ஜு செய்த மக்களில் அவரும் ஒருவராகத்தான் இருந்திருப்பார். சரித்திரத்தில் இடம் பெற்றிருக்கமுடியாது. நிறைவேறிய தனது குறிக்கோளுடன் திருப்தியடைந்துவிடவில்லை. மேலும் பல நாடுகளைப் பார்க்கவேண்டும் என்ற எண்ணம் எப்போது உதித்ததோ அல்லது எது அவரை தூண்டியதோ தெரியவில்லை, தன் பயணத்தைத் தொடர்ந்தார். ஒரு மாத காலம் மக்காவில் இருந்துவிட்டு  தன் பயணத்தை மீண்டும் தொடருகிறார்.)

***

’17 நவம்பர் 1326 அன்று ஈராக்கை நோக்கி காரவான் ஒன்று புறப்பட்டது அதில் நானும் புறப்பட்டேன், அப்பயணக்கூட்டத்தின் தலைவர் எனக்காக ஒரு ஒட்டகத்தை தன் செலவில் வாடகைக்கு அமர்த்தித் தந்தார். கஃபாவை வலம் வந்துவிட்டு அத்தலைவரின் பாதுகாப்பில் நானும் பயணமானேன். முதலில் எங்கள் பயணக்கூட்டம் மதினாவை அடைந்தது. அங்கு ஆறு நாட்கள் தங்கினோம். தண்ணீர், உணவுப்பொருட்கள் சேகரித்துக்கொண்டு வடகிழக்கு திசையில் பயணமானோம். நஜத்(Najd) பீடபூமியைக் கடந்ததும் அரேபிய தீபகற்பம் எங்களுக்கு விடையளித்தது. இரண்டு வார கால பயணத்துக்குப் பின் நஜஃபை அடைந்தோம். (கலிஃபா ஹாரூன் ரஷீதின் மனைவி, பாக்தாத் மற்றும் நஜஃபிலிருந்து மதினா செல்லும் பயணிகளுக்காக வழி நெடுகிலும் பல நீர் தடாகங்களை தன் சொந்த செலவில் கட்டியிருந்தார்).

நஜஃப் மிக அழகிய நகரம், மிகவும் சுத்தமாக இருந்தது. நாங்கள் கடைத்தெரு வாயில் வழியாக உள்ளே நுழையும் போது முதலில் இருந்தது காய்கறி கடைகள், மளிகைக் கடைகள், பின் உணவகங்கள், பின் இறைச்சிக் கடைகள், பின் பழக் கடைகள், அதற்கடுத்ததாக தையற்கடைகள் இருந்தன. அதன்பின் கய்சரியா என்ற இடத்தைக் கடந்ததும் நறுமணப் பொருட்களின் கடைத்தெரு வந்தது. அவற்றை எல்லாம் கடந்து வந்தபின் ஹஜ்ரத் அலி(ரலி) அவர்கள் அடங்கியுள்ள இடம் வந்தது. அங்கே மூன்று கல்லறைகள் இருந்தன, ஒன்று ஆதம் நபி, இன்னொன்று நூஹு நபி, மூன்றாவது அலி அவர்களுடையது என்கிறார்கள். இம்மூன்று கல்லறைகளுக்கிடையில் மூன்று வெள்ளி தங்கத் தட்டுகளில் பண்ணீர், கஸ்தூரி(musk), அத்தர் வைக்கப்பட்டிருந்தன. தரிசனத்துக்கு வருபவர்கள் பூசிக்கொள்கிறார்கள். நஜஃபில் ஷியாக்கள் மட்டுமே வாழ்கிறார்கள். ரஜப் பிறை 27 க்கு முன் தினம் விமரிசையாக் கொண்டாடுகிறார்கள்.

பஸராவை நோக்கி…

இங்கிருந்து எங்கள் காரவான் பாக்தாதுக்குப் புறப்பட்டது, ஆனால் வஸித் வழியாக பஸராவுக்கு புறப்பட்டேன். மூன்று நாள் பயணத்தில் வாஸித் என்ற ஊரை அடைந்தேன். அங்குள்ள மக்கள் போதிய கல்வியறிவு அற்றவர்களாக இருந்தனர். குர்ஆன் ஓதும் முறையைக் கற்றுக்கொள்வதற்காக எங்களிடம் வந்தனர். எங்கள் காரவான் மூன்று நாள் அங்கே தங்கிருந்தபோது ‘அஹமது கபீர் ரிஃபாயி’ அவர்களின் அடக்கத்தலத்தை தரிசிக்கும் வாய்ப்புக் கிட்டியது. பின் டைக்ரீஸ் நதி ஓரமாக பஸராவை அடைந்தோம். பஸரா பரந்த நோக்கமுள்ளவர்கள் வாழும் மிக அழகான நகரம், எங்கு பார்த்தாலும் அடர்த்தியான போரீச்சைத் தோட்டம், ஒரு கூடை பேரீட்சைப் பழம் ஒரு ஈராக்கி தினாருக்கு விற்றனர். அங்குள்ள மக்களிடம் தனி குணம் ஒன்றிருந்தது, அங்கு வருகைதரும் அன்னியர்களிடம் அன்பாகப் பேசி பழகும் விதம்; இது அவர்களுக்கு தாங்கள் அன்னியர்கள் என்ற எண்ணம் வருவதே இல்லை. இங்கிருந்து உபல்லா என்ற சிறிய கிராமத்துக்குப் படகின் மூலம் சென்றேன். இது ஒரு காலத்தில் இந்திய பாரசீக வணிகர்களின் நகராக இருந்தது.

எனது நோக்கம் பாக்தாதை அடையவேண்டும் என்று எனவே மலைகளைக் கடந்து இஸ்ஃபஹான்  நகரை அடைந்தேன். இஸ்ஃபஹான் ஒரு அழகிய பட்டணம், ஆனால் மங்கோலியர்களின் ஊடுருவலால் நகரம் அழிந்திருந்தது; ஷியா ஸுன்னிகளுக்கிடையேயான விரோதம் நகரம் நகரை முன்னேற்ற பாதையை நோக்கிப் போகவில்லை. இங்கு ஆப்ரிகோட், திராட்சை, மெலன் முதலிய கனிவர்கங்களும், வேறெங்கும் பார்த்திராத சுவை நிறைந்த பதாம்களும் கிடைத்தன. இளம் சிகப்பு கலந்த வெள்ளை நிறத்தில் மக்கள் இருந்தனர். பின் ஜக்ரோஸ் மலைகளைக் கடந்து ஷிராஜ், [http://en.wikipedia.org/wiki/Shiraz] அங்கிருந்து கூஃபா வழியாக கர்பலாவை அடைந்தேன். கர்பலாவில் இமாம் ஹுசைன் அவர்களின் அடக்கத்தலம் நஜஃபில் அலி அவர்களின் அடக்கத்தலத்திலுள்ளது போன்ற அமைப்பு இருந்தது. இங்கேயும் ஷியா ஸுன்னிகளுக்கிடையான விரோதம் இருந்தது. (இது யுக முடிவு வரை மாறாது). பின் அங்கிருந்து புகழ் வாய்ந்த பட்டணமான பாக்தாதை அடைந்தேன்.

பாக்தாதில்…

நான் பாக்தாதை அடையும்போது ஜூன் 1327. பாக்தாது நகரமும் சரி, நான் பயணித்த இஸ்ஃபஹான், ஷிராஜ் நகரங்களும் சரி 1258ல் மங்கோலிய ஆக்ரமிப்பாளன் செங்கிஸ்கானின் பேரன் Hulago Khan  என்பவனால் சின்னாபின்னமாக்கப்பட்டிருந்தது. பாக்தாதில் பதினோரு பிரதானப் பள்ளிவாசல்கள் இருந்தன. அவற்றில் எட்டு நதியின் வலது கரையிலும் மூன்று இடது கரையிலும் இருந்தன, இவையல்லாமல் நிறைய வேறு பள்ளிவாசல்களும் மதரஸாக்களும் இருந்தன. அவை பெரும்பாலும் அழியக்கூடிய நிலையில் இருந்தன. இருந்தன. மருத்துவமனைகளும் இந்நிலையிலேயே இருந்தன. கிழக்கே அனேக கடைத்தெருக்கள் இருந்தன, அவற்றுள் மிகப் பெரியது செவ்வாய் சந்தை என்று சொல்லக்கூடியது.

நான் சென்ற நேரம், மங்கோல் கடைசி அரசர் அபு சயித், தன் பரிவாரங்களுடன் வடக்கு நோக்கிப் புறப்படத் தயார் நிலையில் இருந்தது அதனுடன் நானும் சேர்ந்துக்கொண்டு தப்ரிஜ் வரை சென்றேன். தப்ரிஜ் மங்கோலியர்களின் வணிக மையமாக இருந்தது. நான் இதுவரைப் பார்த்திராத காஜான் பஜார் என்ற மிகப் பெரிய கடைத்தெரு அங்கிருந்தது; அங்கு ஒவ்வொரு வணிகமும் தனித்தனியே இருந்தன. ஆபரணக் கடைகளின் வழியேப் போகும்போது என் கண்கள் கூசின, அத்தனை விலை உயர்ந்த இரத்தினக் கற்களும் ஆபரணங்களும் ஜொலித்துக்கொண்டிருந்தன. ஒரு இரவே தப்ரிஜில் தங்கியிருந்தேன். மறு நாள் காலை நான் சுல்தானை சந்தித்ததால் வேறு எதையும் பார்க்கமுடியவில்லை, என்னை நலம் விசாரித்துவிட்டு ஹஜ்ஜு செய்யவேண்டும் என்ற என் நோக்கத்தைக் கேட்டறிந்து பாக்தாதிலிருந்து புறப்படும் ஹஜ்ஜு காரவானுக்கு ஓலை ஒன்று தந்தார், அதை பெற்றுக்கொண்டு பாக்தாத் திரும்பினேன்.

இரண்டாம் ஹஜ்ஜு…

காரவான் புறப்பட இரண்டு மாதங்களுக்குமேல் இருந்ததால் டைக்ரீஸ் நதியோரப் பட்டணங்களான மசூல், சிஜர், மர்தின், டைக்ரிஸ் நதியின் அரங்கப்பட்டணமான ஜஜிரத் இப்னு உமர் (Jazirat means island city of River), நூஹ் நபியின் கப்பல் ஒதுங்கிய இடமான ஜூதி மலையையும் கண்டுவிட்டு பாக்தாத் திரும்பினேன். புறப்படவிருந்த காரவானுடன் ஹஜ்ஜு செய்ய நானும் சேர்ந்துக்கொண்டேன். தப்ரிஜில் சுல்தான் கொடுத்த ஓலையால் என் பயணத்துக்கான அனைத்து வசதிகளும் கிடைத்தன. எங்கள் காரவான் கூஃபா நகரை அடைந்ததும் எனக்கு வயிற்றுப் போக்கு(diarrhoe’a) ஆரம்பித்தது. போகும் வழியெல்லாம் பல இடங்களில் என் ஒட்டகையைவிட்டு இறங்க நேரிட்டது. நாளுக்கு நாள் தளர்ந்துக்கொண்டே வந்தேன். காரவானின் தலைவர் அவ்வப்போது கவனித்துக்கொண்டாலும் பேதி நிற்பதாக இல்லை. மக்கா வந்தடையும் வரை பேதி நிற்கவில்லை. மினாவில் தங்கியபோதுதான் இறைவன் அருளால் நான் சுகமானேன்.’ (இங்கு வந்தபின் மூன்றாண்டுகள் (1327 to 1330) மக்காவிலேயே தங்கிவிவிட்டதாக தன்னுடைய ‘ரிஹ்லா’ வில் குறிப்பிடுகிறார்.)

ஏமன், ஆப்ரிக்கா, ஓமன் பயணம்

’1330 கடைசியில் ஹஜ்ஜை முடித்துவிட்டு ஏமனை நோக்கிப் பயணம் செய்ய முடிவு செய்து ஜுத்தா(ஜித்தா)வை அடைந்தேன். இது கடற்கரை ஓரமாக உள்ள புராதாண நகரம் பாரசீகர்களால் கட்டப்பட்டது என சொல்லப்படுகிறது. அங்கு அதிசயம் ஒன்று நிகழ்ந்தது.

“யா பின் பதூதா..”

குரல் கேட்டுத் திரும்பினேன், யாரும் தெரியவில்லை.

மீண்டும், “யா பின் பதூதா, இங்கே வா…”

சற்று தூரத்தில் பார்வையற்ற ஒருவர் அழைத்ததைப் பார்த்து அவரிடம் நெருங்கினேன். “என்னை நீங்களா அழைத்தீர்கள்..?”

“ஆம்”, என்று என் கையைப் பிடித்து ஒவ்வொரு விரலாகத் தொட்டுத் தடவிவிட்டு, “எங்கே அந்த மோதிரம்..?” என்றார்.

அதிகாரக் குரல் தொனித்தது, நான் அசந்துவிட்டேன், இவர் யார் என்று தெரியாது, எங்கேயும் பார்த்ததில்லை, எப்படி இவருக்கு என்னைத் தெரியும்? கண்ணும் குருடு நான் மோதிரம் அணிந்திருந்தது இவருக்கெப்படி தெரிந்திருக்கிறது? என்ற கேள்விகள் என்னைத் துளைத்துக்கொண்டிருந்தது. ஆம், நான் ஒரு மோதிரம் அணிந்திருந்தேன், மக்காவை விட்டு புறப்படும்போது ஒரு ஃபக்கீர்(religious mendicant) என்னிடம் கையேந்தினார், அப்போது என்னிடம்  கொடுப்பதற்கு ஒன்றுமில்லை மோதிரத்தைத் தவிர, அதை கழற்றி கொடுத்துவிட்டு வந்தேன். இதை அக்குருடரிடம் சொன்னேன்.

“வேறு பொருள் இல்லையென்றால் மோதிரத்தைக் கொடுப்பதா? திரும்பச் சென்று வாங்கிக்கொள் அதில் பெயர்கள் பொறிக்கப்பட்டுள்ளன, அவற்றில் ரகசியங்கள் இருக்கின்றன” என்றார். நான் அதிசயத்துப் போனேன். இறைவன் அறிவான் என்ற எண்ணம் மட்டுமே ஓடியது.’

(நம்ம ஆள்கள் உடனே, இதுலெ என்ன அதிசயம் இருக்கு? அவர் கேள்விப்பட்டிருப்பார், யாராவது சொல்லிருப்பாங்க, இது பதூதாவுக்குத் தெரிஞ்சிருக்காது! இதுக்கெல்லாம் அல்லாவை கூப்பிட்டா…? அப்படி இப்படீன்னு காரணம் கற்பிப்பாங்க.- ஜாஃபர்)

’ஜித்தாவிலிருந்து கப்பலில் ஏமனை நோக்கிப் புறப்பட்டேன் என் கப்பலில் நிறைய ஒட்டகங்கள் ஏற்றப்பட்டிருந்தன. அதுதான் எனக்கு முதல் கப்பல் பயணம்; இரண்டு நாள் வரை சாதகமாக வீசிக்கொண்டிருந்த காற்று சுழல் காற்றாக மாறியது, கப்பல் ஆட்டம் காணத் தொடங்கியது, கப்பல் மேல்தளத்தில் கடல் நீர் புகுந்தது, பலர் மயக்கம்(Sea sick) அடைந்தனர். காற்றினால் திசைமாறியதால் குறிப்பிட்ட இலக்கை நேராக அடையமுடியவில்லை. காற்று ஒய்ந்தும் கப்பலை நேராக செலுத்த முடியாமல் மாலுமி திணறினார். சில இடங்களில் கடல் மட்டம் குறைவாகவும், அடியில் பாறைகளும் இருந்ததால் அவற்றின் மீது மோதாமல் மிக ஜாக்கிரதையாகப் பாய்கள்(Sails) கட்டாமல் கப்பலை செலுத்தினார். ஒரு வழியாக அல்-அஹ்வாபில் கரை இறங்கி சனா(San’a) சென்றேன். அங்கிருந்து ஏமனின் தலைநகரமான தஅஜ் சென்றேன், ஏமன் சுல்தான் நூருதீன் அலியை சந்தித்தேன், சிறிது நாட்கள் அரசு விருந்தினராக தங்கியிருந்தேன், மீண்டும் சனா சென்றுவிட்டு அங்கிருந்து துறைமுக நகரமான ஏடனுக்குச் சென்றேன்.

ஏடனில், இந்தியாவிலிருந்து வந்த பெரிய கப்பல்கள் நின்றுகொண்டிருந்தன. சில கப்பல்களின் உரிமையாளர்களும், வணிகர்களும் இருந்தனர். எகிப்திய வணிகர்களும் இருந்தனர். ஏடனிலிருந்து சோமாலியா, மொகதீசு, ஜன்ஜிபார், தன்ஜானியா, கென்யா, மொம்பாஸா முதலான இடங்களுக்கு சென்றுவிட்டு மீண்டும் ஏடன் வந்து ஒரு மாதம் பயணம் செய்து ஏமனின் கடைசி மூலையிலிருக்கு தாஃபாரி(Dhofar) வந்தேன். இங்கிருந்துதான் இந்தியாவுக்கு விலை உயர்ந்த அரேபிய குதிரைகள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. காற்று சாதகமாக இருந்தால் ஒரு மாதத்தில் அவை இந்தியா சென்றடைந்துவிடுமாம். இங்குள்ள மக்களின் முக்கிய உணவு அரிசி, அது இந்தியாவிலிருந்து இறக்குமதியாகிறது. இதனருகிலுள்ள ஊர்களில் பல்வகை கனிகளும் வாழையும் விளைகின்றன. பாக்கும் வெற்றிலையும் வளர்க்கின்றனர். இவை இங்கும் இந்தியாவிலும்  மட்டுமே கிடைக்கின்றன.

பின் இங்கிருந்து ஓமன், ஹர்மூஸ்(Homuz) வந்தேன், இங்கிருந்து இந்தியா சிந்துவிலிருந்து வரும் பொருட்களை ஈராக், பாரசீகம், கொரஸான் நகரங்களுக்கு அனுப்பிவைக்கப்படுகின்றன. இங்குள்ளவர்களுக்கு பேரீச்சையும் மீனும் ராஜ உணவு. மன்னர் குத்துபுதீன் தாஹாம்தானை சந்தித்துவிட்டு கிஷ் (Kish-ஈரான்), பஹ்ரைன், ஹஜர்(ரியாத்), யமாமா வழியாக மீண்டும் ஹஜ்ஜு செய்வதற்காக (1332) மக்கா வந்தடைந்தேன்.’

பயணம் தொடரும்….

***

Sources:

http://en.wikipedia.org/wiki/Ibn_Battuta

http://www.islamfortoday.com/ibnbattuta01.htm

http://www.answers.com/topic/ibn-battuta 

http://www.fordham.edu/halsall/source/1354-ibnbattuta.asp

http://www.absoluteastronomy.com/topics/Ibn_Battuta 

http://www.saudiaramcoworld.com/issue/200004/the.longest.hajj.the.journeys.of.ibn.battuta.part.1-from.pilgrim.to.traveler.tangier.to.makkah.htm

Encyclopeadia  Britannica

The Travels of Ibn Battuta by H.A.R.GIBB

***

also Refer Places visited by Ibn Battuta (svg files):

Ibn Battuta Itinerary 1325–1332 (North Africa, Iraq, Persia, the Arabian Peninsula, Somalia, Swahili Coast)
 
 
 

நன்றி : ஹமீது ஜாஃபர் ( http://hameedjaffer.blogspot.com/ ) | E-Mail : manjaijaffer@gmail.com

அல்-பத்தானியின் ஆய்வுகளும் பங்களிப்பும் – ஹமீது ஜாஃபர்

எனக்கு பட்டான்தான் தெரியும்! –  ஆபிதீன் 

*** 

அல்-பத்தானி – அருட்கொடையாளர்  9

ஹமீது ஜாஃபர்

நவீன உலகம், உயர்நிலை தொழில்நுட்பம் என்றெல்லாம் சொல்லிக் கொண்டிருக்கிறோமே உண்மையிலேயே நாம் அவற்றுடன் / அதில் வாழ்கிறோமா என்ற சந்தேகம் என்னுள் லேசாக இருக்கிறது. விரல் சொடுக்கும் நொடியில் உலகை வலம் வருகிறோம் இணையத்தின் வழியாக. இங்கே இருந்துக்கொண்டு எங்கோ இருக்கும் ஒருவருடன்/ ஒருத்தியுடன் பார்த்துக்கொண்டே பேசுகிறோம் கைபேசி, கணினி வாயிலாக. மனிதன் செய்யும் வேலையெல்லாம் ஒரு இயந்திரத்தைச் செய்ய வைத்துவிட்டோம். இவையெல்லாம் உயர் தொழில்நுட்பத்தின் அடையாளமா? “Whenever the company grows more and more our products become smaller and smaller” என்று ‘SONY’ கம்பெனி 50-60 ஆண்டுகளுக்கு முன்பு சொன்னதுபோலத்தான் எல்லாம் சிறிதாகிக்கொண்டு வருகிறது. என்றாலும் என் சந்தேகம் தீரவில்லை.

எவ்வளவுதான் hi-tech ல் இருந்தாலும் ஒரு சுனாமி வருவதை முன்கூட்டியே அறியமுடியவில்லை; ஒரு பூகம்பம் வருவதை அறியமுடியவில்லை. வந்தபின் இத்தனை ரிக்டர் ஸ்கேலில் இருந்தது என பீய்த்துக்கொள்கிறோம். இது ஒரு பக்கம் இருந்தாலும் நம்மிடையே (முஸ்லிம்) பிறை பார்ப்பதில் குடுமிப்பிடி சண்டை இருந்துக்கொண்டுதானே இருக்கிறது…!

இப்படி எல்லாக் கருவிகளையும் கையில் வைத்துக்கொண்டு குழப்பத்துடன் வாழ்வது நவீனமா? இல்லை எந்த கருவியுமில்லாது, நீயா நானா இல்லாது மிகத் துல்லியமான கண்டுபிடிப்புகள் உலகுக்கு வந்ததே அது நவீனமா? மூவாயிரம், நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன் எந்த வசதியும் இல்லாது பல டன் எடையுள்ள பெரும் பாறைகளை அடுக்கி பாலைவனத்தில் உண்டாக்கிய பிரமிடின் ரகசியத்தைப் புரிந்துக்கொள்ள முடியவில்லை. இன்ஜினியர் கட்டும் வீடு இருபது வருஷத்தில் பல்லை இளிக்கிறது. கொத்தனார் கட்டிய வீடு ஐம்பது வருஷமானாலும் அப்படியே இருப்பதின் ரகசியம் தெரியவில்லை..! என்ன நவீன தொழில்நுட்பம்?

பூமியை மையமாக வைத்து மற்ற எல்லா கோளங்களும் அதனை சுற்றிவருகிறது என்ற  பண்டைய வானவியலாளர்கள், சூரிய வருடத்தையும் கணக்கிட்டனர். மத்திய காலத்தில் தோன்றிய வானவியலாளார்கள் சற்றே முன்னேறி சூரிய வருடம் இத்தனை நாள் இத்தனை மணி என வினாடி உட்பட துல்லியமாகக் கணக்கிட்டனர். பண்டைய கிரேக்க எகிப்திய அறிஞர்களின் ஆய்வுகளுடன் நின்றுவிடாமல் அவர்களின் ஆய்வுகளை ஆதாரமாக வைத்து அவற்றில் திரிகோணவியல் கணிதமுறையைப் புகுத்தி நவீனத்துவம் கண்டனர். அவர்கள் வகுத்த வழி இன்றும் தொடர்ந்துகொண்டிருக்கிறது என்றால் மிகையாகாது. இப்படி முன் நவீனத்துவம் கண்டவர்களில் ஒன்பதாம் நூற்றாண்டுக் கால பெரியாரும் ஒருவர். ஆட்சியாளர்களைக் கண்டு அஞ்சாமல், அதிகாரத்துக்கும் பதவிக்கும் ஆசை கொள்ளாமல் தன் அறிவை நம்பி இடைவிடா ஆய்வுகள் செய்து தனது கண்டுபிடிப்புகளை உலகுக்கு சமர்ப்பித்த அப் பெரியவர் இதோ….

 

 

AL-BATTANI (850-929)
أبو عبد الله محمد بن جابر بن سنان البتان

Albategnius, Albategni or Albatenius என லத்தின் மொழியில் பல வகையில் அழைக்கப்படும் அல்-பத்தானி புகழ் மிக்க வானவியாலாளரும், கணிதமேதையுமாவார். இவரது முழுப் பெயர் ‘அபு அப்துல்லா முஹம்மது இப்னு ஜாபிர் இப்னு சினான் அல்-ரக்கி அல்- ஹர்ரானி அல்-சாபி அல்-பத்தானி’  என்பதாகும். அரேபிய முறையில் வம்சம், தந்தை, ஊர் எல்லாம் தன் பெயரில் இணைத்துக்கொண்ட இவர் கி.பி 850/858 ல் தற்போதைய துருக்கி, வடமேற்கு மெஸபடோமியாவுக்கும் உர்ஃபா நகரத்துக்கு தென்கிழக்கே பாலிக் நதி அருகே ஹர்ரான் (பழைய ரோமானியப் பெயர் Carrhae) அருகிலுள்ள பத்தானில் பிறந்தார். இப்னு அல்-நதீமின் கூற்றுபடி இவரது தந்தையும், புகழ்பெற்ற விஞ்ஞானியும் கருவிகள் (instruments) செய்பவருமான ஜாபிர் இப்னு சினான் அல்-பத்தானியிடம் ஆரம்ப கல்வி கற்றார். பின் மேற்கல்வி கற்பதற்காக தற்போது சிரியாவிலிருக்கும் யூப்ரடிஸ் நதிக்கரையோரம் இருக்கும் ’அல்-ரக்கா’ வுக்குப் பயணமானார். அங்கு  கல்வி கற்றதோடு நின்றுவிடாமல் தன் வாழ்நாளின் பெரும்பகுதியை அங்கேயே கழித்து பெரும்பாலான ஆய்வுகளை நடத்தினார். கி.பி. 900த்துக்குப் பின் ‘சமாரா’ வுக்குப் புலம் பெயர்ந்து எஞ்சிய வாழ்நாளை  கழித்து கிபி. 929. மரணம் அடைந்தார்.

இவரது முன்னோர்கள் சபயீன் அல்லது செபியன் இனத்தவர்கள் என்றாலும் இவர் முஸ்லிமாக வாழ்ந்தார். செபியன் இனத்தவர்கள் நட்சத்திரங்களை கடவுளாக ஏற்றுக்கொண்டவர்கள். எனவே இவர்கள் நட்சத்திரங்களின் குறிப்புகளும் கதைகளும், வானவியல் பற்றிய ஆராய்ச்சிகளும் பல நூற்றாண்டுகளுக்கு முன்பிலிருந்தே செய்து வந்தவர்கள். எனவே அக்காலகட்டத்தில் வானவியல் பற்றியும் கணிதவியல் பற்றியும் முக்கிய குறிப்புகள் மலிந்து கிடந்தன. இன்னும் பல வானவியலார்களும் கணிதவியலார்களும் அப்பகுதியில் வாழ்ந்தனர், மேலும் பத்தானியைவிட சற்றே மூத்தவரான ‘தாபித் இப்னு குர்ரா’  என்ற புகழ் பெற்ற கணிதவியலாரும் பத்தானியின் இளமைக் காலத்தில் ஹெர்ரானில் வாழ்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அல்-பத்தானின் ஆய்வுகளும், பங்களிப்பும்

அல்-ரக்காவுக்கு வந்தபின் சுமார் 42 வருட காலம் தொடர் ஆய்வுகள் செய்து வானவியல் அட்டவணை வெளியிட்டார். இப்னு அல்-நதீம் தனது ‘ஃபிஹ்ரிஸ்த்(Fihrist)லும் இப்னு அலிகுத்துபியின் ‘தாரிக் அல்-ஹுக்கமா’ விலும் அல்-பத்தானியைப் பற்றி குறிப்பிடும்போது, அவர் ஜியோமிதி, வானவியல்,  மற்றும் சோதிடவியலிலும் கொள்கைவழி விளக்கத்திலும் செய்முறை விளக்கத்திலும் மற்ற எல்லோரையும்விட முதன்மை பெற்ற சிறப்பு வாய்ந்த ஆய்வாளாரக இருந்தார் என குறிப்பிட்டிருக்கிறார்கள். மேலும் இவரின் புகழ்வாய்ந்த நூலான ‘கித்தாப் அல்-ஜிஜ்'(Persian: زيج Zij-work with astronomy and tables) ல் சூரியன், சந்திரனின் சொந்த ஆய்வினையும் அவைகளின் சுழற்சி பற்றி  தாலமியின்  புகழ் பெற்ற நூலான Almagest  ல் உள்ள தவறுகளையும் சுட்டிக்காட்டியுள்ளார்.

கித்தாப் அல்-ஜிஜ், 57 அத்தியாயங்களைக் கொண்ட இந்நூலில் விரிவாகவே ஒவ்வொன்றையும் விளக்கியுள்ளார். கோளங்கள்/celestial sphere [1] முதல் இராசிமண்டலக்(signs of the zodiacs) கோணங்கள் வரையிலான விளக்கங்கள் முதல் அத்தியாயத்திலிருந்து தொடங்குகிறது; கணித மூலங்கள், செய்முறைகள் sexagesimal [2] மற்றும் திரிகோண(trigonometric) செயல்பாடுகள் பற்றி விளக்கப்பட்டுள்ளது. நான்காம் அத்தியாயத்தில் தனது சொந்த ஆய்வுகள் குறித்து விவரிக்கிறார். 5 முதல் 26 வரையிலான அத்தியாயங்களில் பல்வேறு வானவியல் ஆய்வுகளில் வரும் இடர்பாடுகள் குறித்தும் Almagest லுள்ளவைகளையும் விரிவாக்கம் செய்கிறார்; இதில் 13-16 வரையிலான அத்தியாயங்களில் spherical astronomy யில் ஏற்படும் அனேக குழப்பங்களையும் தெளிவாக்குவதுடன் அவைகளுக்கு தீர்வு காணும் வழியையும் தொகுத்திருக்கிறார் 27 முதல் 31 ம் அத்தியாயம் வரை சூரியன், சந்திரன், மற்றும் ஐந்து கிரகங்களின் (Mercury, Venus, Mars, Jupiter, and Saturn) அசைவு (motion in longitude) பற்றி விவாதிக்கிறார்.

அத்தியாயம் 28ல் தாலமியின் Almagest IIIல் விளக்கப்பட்ட  Hipparchus [http://en.wikipedia.org/wiki/Hipparchus] முறையை பின்பற்றி நான்கு பருவகாலங்களைப் பற்றி விவாதிக்கும் அல்-பத்தானி சூரியனின் மையப் பிழற்சியும்(eccentricity), apogee [3] யும் மாறுபடுவதைக் கண்டறிந்தார். சூரியனின் Apogee  65° 30′ என்கிறார் Hipparchus. ஆனால் அதில் 16° 47′ குறைவு இருப்பதை அறிந்து 82° 17′ எனவும் சூரிய மையப்பிழற்சியில் 2° 29′ 30″ லிருந்து 2° 4′ 45″ இருப்பதாக அல்-பத்தானி அறிவித்தார்.

இருந்தபோதிலும் இங்கே ஒரு முரணான செய்தி கிடைக்கிறது. அல்-பத்தானி முதன்முதலில் அவ்வாறு கண்டறியவில்லை என அபு ஜாஃபர் அல்-காஜினி (900-971),  தன்னுடைய ‘commentry on the Almagest’ ல் குறிப்பிட்டிருப்பதாக அல்-பைரூனி(973 – 1048) கூறுகிறார்.  கி.பி 830 ம் ஆண்டு பாக்தாதில் apogee ஐ புதிய ஆய்வுகள் நடத்தப்பட்டன, அப்புதிய ஆய்வுகள் மிகவும் பிழையுள்ளதாகவே இருந்தன, அது 20° கும் குறைவானதாக இல்லை. ஓராண்டுக்குப் பின் தாபித் பின் குரா அல்லது பனு மூசா சகோதரர்கள் தாலமியின் பழைய முறையைப் பயன்படுத்தி அது(apogee) 82° 45′ ஆகும்.  இது ஹிப்பார்கஸ் (65° 30′), தாலமியின் மதிப்பும் தவறானது, the motion the apogee 66 வருடங்களுக்கு 1° என காணப்பட்டது என்று மேலும் அதில் விவரித்துள்ளார்.

அவர் உருவாக்கிய அட்டவணைகளை புரிதல் பற்றிய விளக்கமும் மாறுபட்டக் காலவரையரைகளில் ஒன்றிலிருந்து மற்றொன்றுக்கு மாற்றி கணக்கிடும் நுணுக்கங்களும்(data)16 அத்தியாயங்களில் கொடுத்துள்ளார். இதில் 39-40 ம் அத்தியாயம் பூமியிலிருந்து சந்திரனின் தூரத்தையும் தோற்றத்தில் நேரிடும் இடமாறு தோற்றத்தையும்(parallax) பற்றி விரிவாக்கம் செய்கிறார். 49 முதல் 55 வரையிலான அத்தியாயங்களில் சோதிடவியலில் எழும் பிரச்சனைகளுக்குத் தெளிவு காணுகிறார். 56 ம் அத்தியாயத்தில் சூரிய மாணி (sundial) அமைப்பது பற்றி விளக்கம் அளிக்கிறார். இறுதியாக 57 ம் அத்தியாயத்தில் பல்வேறு வானவியல் கருவிகள்(astronomical instruments) தயாரிப்பது எப்படி என சொல்லிக்கொடுக்கிறார், இதில் அல் பைதா(Al-baidha – the egg) என்று பெயரிட்ட armillary sphere ம் அடங்கும்.

சந்திரன், இன்னும் ஒரு சில கிரகங்களின் சுற்றுப் பாதைகளில் தாலமியின் தவறான கணிப்புகளையும், சூரியனின் annular ecalips (கங்கண கிரகணம்) சாத்தியக்கூறுகளையும், பருவகால ஓரயம் பற்றி மிகநுணுக்கமான கணிப்பும், அயனமண்டலத்தின் சரியான மற்றும் தோராய சுற்றுப் பாதையையும்(true and mean orbit of ecliptic), வெப்ப மண்டல பருவகால(tropical) சுற்றுப் பாதையின் சரியான மற்றும் தோராய அளவையும், சூரியனின் இரு சுற்றுப் பாதைகளையும்(true and mean orbit of sun) மிகவும் நுணுக்கத்துடன் கணித்துள்ளார் என ஆய்வாளர் Prof. Phillip Hitti கூறுகிறார். மேலும் சூரிய வருடம் 365 நாள், 5 மணித்துளி, 46 நிமிடம்,  24 வினாடி என துள்ளியமாக கணித்துள்ளார், இது இன்றைய கணிப்பில் மிக அருகாமையிலுள்ளது என்கிறார். (சரியானது: 365 நாள், 5 மணி, 48 நிமிடம், 45.25 வினாடி; வித்தியாசம் 2நி, 21.25வி குறைவு.  தாலமியின் கணிப்பு: //tropical year as 1/300 of a day less than 365 1/4 days // ie: 365நா, 5ம, 55நி 12வி; வித்தியாசம் 6நி 26.75வி அதிகம்).

கித்தாப் அல்-ஜிஜ்ஜில் வரையப்பட்ட சாதனைகளில், 489 நட்சத்திரங்களின் நிலைகளை கணித்துள்ளதும் அடங்கும். மேலும் சூரியன் நிலநடுக்கோட்டினை கடந்து செல்லும் இரு இடங்களின் சரியான நிலை-precession of the equinoxes[4]  ஒரு வருடத்துக்கு 54.5″ என்று கணிப்பும் பூமியின் சரிவு-inclination of the ecliptic[5]  23° 35′ ஆகும், தாலமி குறிப்பிடுவது 23° 51′ 20″ (actual figure of 23 degrees, 27 minutes, and 8.26 seconds). [equinox :  The equinox is the time of the year when the noon sun is overhead at the equator making day and night equal in length. Equinoxes occur about 21st March and 23rd September.]

அல்-பத்தானி, தான் சுயமாக உருவாக்கிய கருவிகள் துல்லிய அமைப்பாக இருந்தது. வளையங்கள் கோர்க்கப்பட்ட இன்றைய மாதிரி உலக உருண்டை இருப்பதுபோல் armillary sphere கருவியை உருவாக்கினார். இதில் அமைக்கப்பட்ட பல வளையங்கள் கிரகங்களின் அசைவுகளை குறிப்பதாக இருந்தது. இதை இவர் கண்டுபிடிக்காவிட்டாலும் பண்டைய வானவியலாளர்கள் கண்டுபிடித்ததை மேன்படுத்தினார். இது ஏற்கனவே இருந்த கருவிகளைவிட மிகத் துல்லியமாக இருந்தது. இதனுதவியால் பல வானவியல் ஆய்வுகளை கணக்கிடமுடிந்தது, மேலும் சூரியனுக்கும் பூமிக்கும் இடையே உள்ள தூரம் நிரந்தரமானதல்ல,  மாறக்கூடியது, இத்தூரம் எப்போது உச்ச உயர்வாக இருக்கும் என்பதையும் கணக்கிட்டார். இவ்வாறு ஏற்படும் மாறுபட்ட தூர வித்தியாசம் சூரிய கிரகணம் தோன்றுவதற்கு காரணமாக அமைந்துள்ளது என்பதையும் கணக்கிட்டார்.   அபூர்வமாக நிகழும் முழு சூரியக் கிரகணத்தின்போது (annular ecalips) பிரகாசமான ஒளிவட்டம் தெரிவது சூரியன் பூமியிலிருந்து அதிக பட்ச தூரத்திலிருக்கும்(the sun was at its greatest distanance from the earth) காரணத்தால் என்பதையும் அறிவித்தார்.

வான் ஆய்வுகளுக்கு தாலமியைப் போல் ஜியோமிதி முறையைப் பின்பற்றாமல் திரிகோண(trignometry) முறையைக் கையாண்டது குறிப்பிடத் தக்கதாகும். உதாரணமாக அல்-பத்தானி திரிகோணமுறையில் செங்கோண முக்கோணத்தை b sin(A) = a sin(90° – A) என கணக்கிடுகிறார். இம்முறை இடைக்கால (midle age) விஞ்ஞான வளர்ச்சிக்கு பெரிதும் துணைபுரிந்தது என Nicolaus Copernicus (d 1543) என்ற இத்தாலிய வானவியலார் தன்னுடைய  ‘De Revolutionbus Orbium Clestium’ என்ற நூலில் குறிப்பிடுகிறார்.

திரிகோணவியலில்(trignometry) கிரேக்க அறிஞர்களின் உபயோகத்தில்ருந்த இரட்டைக் கோண(chord) முறையை மாற்றி முதன்முதலில் sine ஐ அல்-பத்தானி கொண்டுவந்து cosine, tangent, cotangent முறையையும் மேன்படுத்தி பயன்பாட்டில் ஆக்கினார். இது இன்றைய கணிதவியலுக்கு பெரும் துணையாயிருப்பதாக ஜோசஃப் ஹெல் கூறுகிறார்.

இவரது கித்தாப் அல் ஜிஜ், 12ம் நூற்றாண்டை சேர்ந்த இத்தாலிய அறிஞர் Plato Tiburtinus (Plato of Tivoli) என்பவரால் De motu stellarum (On the motion of the stars) என்ற பெயரில் 1116 ல் லத்தினில் மொழிபெயர்ப்பு செய்தார். அது 1537 லும் பின் 1645 லும் பதிவாகியது. இதன் பழைய பிரதி வாடிக்கனில் காண கிடைக்கிறது 1899 ல் இத்தாலிய மொழியில் பிரசுரமாகியது.

அல்-பத்தானி தன் வான்வெளி ஆய்வுகள் பெரும்பாலனவற்றை அல்-ரக்காவில்(now in Syria) செய்திருக்கிறார். அல்-ரக்கா  பாலிக் நதி யூப்ரடிஸ் நதியுடன் சங்கமிக்கும் இடமாக இருக்கிறது; அனேக குடும்பங்கள் ஹர்ரானிலிருந்து  இங்கு குடிபெயர்ந்தனர், தவிர அவருடைய ஆய்வுக்கு ஏதுவான நகரமாக அமைந்திருந்ததோடல்லாமல் 5ம் அப்பாஸிய கலிஃபா ஹாரூன் ரஷீத்(786 – 809) பதவி ஏற்றபின் அங்கு கட்டிய அரண்மனை இவரின் ஆய்வுக்கு உதவியாயிருந்தது.

கி பி 900 ல் கித்தாப் அல் ஜிஜ் எழுதிய பிறகு 901 ல் சிரியாவிலுள்ள அண்டியோச்(Antioch) நகரில் இருக்கும்போது ஒரு சூரிய கிரகணமும் ஒரு சந்திரக் கிரகணமும் முறையே 23 ஜனவரியிலும், 2 அக்டோபரிலும் நிகழ்ந்தபின் அதன் ஆய்வை ஜிஜ்ஜில் மீண்டும் குறிப்பிட்டார்.

கி பி 877 க்கும் 918 க்கும் இடைப்பட்ட காலத்தில் தன் ஆய்வுகள் அனைத்தையும் மேற்கொண்டார், கி பி 888 ல் நட்சத்திரங்களின் அட்டவனையை உருவாக்கினார். தன்னுடைய அந்திம காலத்தில் , அதிக வரி விதிக்கப்பட்டதைக் கண்டு வெகுண்டெழுந்து அல்-ரக்காவிலிருந்து சிலரை அழைத்துக்கொண்டு பாக்தாத் சென்று  தனது எதிர்ப்பை தெரிவித்துவிட்டு அல்-ரக்கா திரும்பினார் என்கிறார் இப்னு அல் நதீம் தனது ஃபிஹ்ரிஸ்த்தில். ஆனால் திரும்பும் வழியில் கஸர் அல்-ஜிஸ்( ஈராக்) என்னும் இடத்தில் இயற்கை எய்தினார் என்கின்றனர் JJ O’Connor and EF Roberson.

இஸ்லாமிய வானவியலாளர்கள் மற்றும் சரித்திர ஆசிரியர்களிடையே அல்-பத்தானி தனி இடத்தை வகிக்கிறார், அவரின் பங்களிப்பு உன்னதமானது என்று அல்-பைரூனி  தனது நூலான ‘ஜலா அல்-அத்ஹான் ஃபி ஜிஜ் அல்-பத்தானி'(Elucidation of Genius in al-Battānī’s zīj) லும் இஸ்லாமிய வானவியலில் இவரது பணி மகத்தான சாதனை என்று இப்னு கல்தூன்(1332 -1406) ம் புகழ்கின்றனர். அல்-பத்தானின் கண்டுபிடிப்புகள், ஆய்வுகள், சாதனைகள் பின்னால் வந்த அறிஞர்களான டைக்கோ ப்ரஹெ, கெப்லர், கலிலியோ  மற்றும் கொப்பெர்னிகஸ் போன்றோர்களின் ஆய்வுகளுக்கு பெருமளவில் பின்துணையாக இருந்தது.

கொப்பெர்னிக்ஸைக் காட்டிலும் அல்-பத்தானின் கண்டுபிடிப்புகள் மிகத்துல்லியமாக இருப்பது வானவியல் அறிஞர்களிடையே இன்றும் பெரும் வியப்பை அளித்துவருகிறது.
 
[1] celestial sphere: 
 The celestial sphere is the sphere on which the stars appear to move in the sky.

[2] sexagesimal:
 In the sexagesimal system calculations are done in the base 60 as used by the Ancient Babylonians.   The remnants of sexagesimal notation remain in our method of telling time and measuring angles.

[3] apogee: 
 The apogee is the point where a heavenly body is farthest away from the centre of its orbit.    The nearest point is called the perigee.

[4] precession of the equinoxes:
 The precession of the equinoxes is a slow westward motion of the equinoctal points along the ecliptic caused  by the greater attraction of the Sun and Moon on the excess of matter at the equator, so that the times at   which the Sun crosses the equator come at shorter intervals than they would otherwise do.

[5] obliquity of the ecliptic:
 The obliquity of the ecliptic is the “tilt” of the Earth’s axis of rotation relative to the ecliptic plane. It is currently about 23.4 and slowly   decreasing

***

Download SunDial and Spherical Triangle Files ( interactive flash animation in html)

**

Sources:

http://www.muslimtents.com/almarja/battani.html

http://www.gap-system.org/~history/Biographies/Al-Battani.html

http://wzzz.tripod.com/BATTANI.html

http://www.britannica.com/EBchecked/topic/56092/al-Battani

http://www.martinfrost.ws/htmlfiles/oct2009/al-battani-iran.html

http://www.answers.com/topic/al-battani

http://ayyampetaifriends.blogspot.com/2011/01/blog-post.html   

http://en.wikipedia.org/wiki/Mu%E1%B8%A5ammad_ibn_J%C4%81bir_al-%E1%B8%A4arr%C4%81n%C4%AB_al-Batt%C4%81n%C4%AB

http://www.encyclopedia.com/doc/1G2-2830900300.html

Encyclopaedia  Britannica Article Battānī-Al

***

 

நன்றி : ஹமீது ஜாஃபர் ( http://hameedjaffer.blogspot.com/ ) | E-Mail : manjaijaffer@gmail.com

« Older entries